ஒரு நாடோடியின் குறிப்புகளில் இருந்து. 1


இந்த பதிவை எழுத ஆரம்பிக்கு இந்த வினாடிவரை இதன் வடிவம் பற்றிய எந்த திட்டமும் என்னிடம் இல்லை. எழுத நேரம் சற்று அதிகமாகவும் விசயம் மிகக்குறைவாகவும் இருக்கும் வினோதமான சூழலில் இந்தப் பதிவு ஆரம்பமாகியிருக்கிறது. எனது அனுபவங்களில் ஊடாக கற்றுக்கொண்ட விடயங்களையும் எழுப்ப விரும்பும் கேள்விகளையும் கட்டுரையாக்கலாம் என நினைக்கிறேன். இரண்டு அல்லது மூன்று தனித்தனி பதிவாக எழுதலாமா என்றொரு யோசனையும் இருக்கிறது. இந்தப் பதிவை படித்துவிட்டு இதைத் தொடரலாமா எனும் ஆலோசனையை நீங்கள் சொன்னால் நல்லது.

நான் கால்வைத்த பள்ளிகள் எண்ணிக்கை மட்டும் ஆறு (படித்தது பத்தாங்கிளாஸ் மட்டுந்தாங்க). அதன் பிறகு படிப்பிற்கும் வேலைக்கும் மாறிய ஊர்கள் ஐந்து. மாறிய வேலைகளின் எண்ணிக்கையை சரியாக பட்டியலிடுவது சிரமம். ஆகவே நாடோடி எனும் பெயருக்கு நான் ஓரளவு பொருத்தமானவனே.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவின்போது என் வசம் இரண்டு யோசனைகள் இருந்தது. ஒன்று, தேர்வில் தேறினால் கையிலிருக்கும் எழுபது ரூபாய்க்கு ஏதேனும் சினிமாவுக்கு போய்விட்டு வீட்டுக்கு போவது. இரண்டு, பேப்பரில் என் தேர்வு எண் வராவிட்டால் அதே பணத்தில் அருகிலிருக்கும் எங்கள் சித்தி வீட்டுக்கு போய்விடுவது.. அதாவது ஓடிப்போவது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மாணவர்களால் நிறைந்திருந்த அந்த நாளில் (அப்போது காலை பேப்பர்தான் தேர்வு முடிவினை விரைவாக தெரிந்துகொள்ள ஒரேவழி) நான் தேர்வு பெற்றதாக முடிவு வந்தது. அப்போதும் ஏதேனும் அச்சுப்பிழையாக இருக்குமோ எனும் சந்தேகமே எனக்கு அதிகமாக இருந்தது.

அப்போது நான் இருந்த சூழலில் பாசாவதெல்லாம் ஒரு விஷயமேயில்லை. தஞ்சாவூரின் நடுத்தரவர்கம் இரண்டு கேள்விகளைத்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிற்குப் பின்னால் வைக்கும், நானூறுக்கு மேலா, கீழா? உங்கள் சரியான மதிப்பெண்ணை தெரிந்துகொள்ள அடுத்தவர்கள் ஆர்வம் காட்டவேண்டுமாயின் நீங்கள் நாநூற்றுக்குமேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த எதிர்பார்ப்பையெல்லாம் நான் என் குடும்பத்துக்கு உருவாக்கியிருக்கவில்லை. தேர்ச்சி பெற்றால் அருகாமையிலுள்ள பாலிடெக்னிக் இல்லாவிட்டால் ஏதேனும் ITI என எங்கள் வீட்டில் எல்லோருமே முடிவுசெய்து வைத்திருந்தோம் (தனித்தனியே).

இப்படி உருப்படியாக இருந்திருக்க வேண்டிய திட்டங்களை சர்வ நாசம் செய்தது எனது மதிப்பெண் பட்டியல். எழுபத்துஎட்டு சதவிகித மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று நாங்கள் குழம்பிப்போனோம் (அப்போது அது சற்று அதிக மதிப்பெண்தான் என நினைக்கிறேன்). தஞ்சாவூரில் அதிக டிமாண்ட் உள்ள (நான் படித்துக்கொண்டிருந்த) பள்ளியில் சற்று மெனக்கெட்டால் முதல் குரூப் கிடைத்துவிடும் எனும் நிலை. ஆனாலும் அந்த யோசனையை நான் பரிசீலிக்கக்கூட இல்லை. அதற்கு பெரிய காரணம் ஏதும் இல்லை, அங்கு பணியில் இருந்த அதிபயங்கரமான கணித ஆசிரியர்கள் மட்டுமே போதுமான காரணமாக இருந்தார்கள். டியூஷன் சேராததால் அங்கு என் அண்ணன் வாங்கிய அடிகளும் மற்ற தண்டனைகளும் எனக்கு உண்டாக்கிய பயம் அப்படி.

பிறகு திருச்சி அரசு பாலிடெக்னிக்கிற்கு விண்ணப்பித்துவிட்டு வேறு என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தோம். அரசு பாலிடெக்னிக்க்கில் இடம் கிடைப்பது  சந்தேகமே என்பதால் வேறொரு மாற்று ஏற்பாடு தேவையாயிருந்தது. அருகிலுள்ள பள்ளியொன்றில் இரண்டாம் குரூப்பில் சேர்ந்தேன். நம்புங்கள்.. அங்கு நான்தான் அதிக மதிப்பெண்ணோடு சேர்ந்தவன். அங்கு படித்த ஒரு வாரத்துக்குள் தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் என்னை முதல் குரூப்பிற்கு மாறச்சொல்லி ஆலோசனை சொன்னார்கள். இத்தனை மார்க் எடுத்துவிட்டு ஏன் பியூர் சயின்ஸ் படிக்கனும் எனும் கேள்விதான் அவர்களால் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

கணிதமும் ஆங்கிலமும் படிக்க சிரமப்படுபவன் எனும் ஒற்றை அடையாளம்தான் எனக்கு அப்போது இருந்தது. மற்ற மூன்று பாடங்களை மிக அலட்சியமாக படித்துவிடும் திறமை இருந்தது, பல சமயங்களில் அவற்றை இரண்டாவது முறை படிக்கவேண்டிய அவசியம்கூட எனக்கு இருந்ததில்லை. ஆனால் அந்த தகுதி பள்ளியிறுதிவரை பரிசீலிக்கப்படவேயில்லை. ஒருமுறை எனது ஏழாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் நான் தமிழில் 88 மார்க் வாங்கியதற்காக இரண்டு அடி அடித்தார்- இங்கிலீஷ் படிக்க மட்டும் சாருக்கு வலிக்குதோ? (தொடர்புடைய தகவல்1:அப்போது தமிழ் ஆசிரியை விடுப்பில் இருந்ததால் வகுப்பாசிரியரே தேர்வுத்தாளை வினியோகித்தார். தகவல் 2: அந்த தேர்வில் எனது ஆங்கில மதிப்பெண் 18)

 மேற்சொன்ன என் வாழ்வின் மிகச்சிறிய பகுதி சில கேள்விகளை எழுப்ப தகுதியுடையது. ஒன்றிரண்டு பாடங்களை படிக்க சிரமப்படுபவர்கள் ஏன் ஒட்டுமொத்தமாக படிப்பு வராதவன் என முடிவு செய்யப்படுகிறார்கள்? அது ஏன் ஒரு மாணவனின் குறைபாடாகவே கணக்கிடப்படுகிறது? ஏன் ஒரு குறிப்பிட்ட பாடம் பல மாணவர்களை சிரமப்படுத்துகிறது எனும் ஆய்வு கல்வித்துறையால் மேற்கொள்ளப்படுவதே இல்லை? (ஆங்கிலப் பாடத்துக்கு பயந்து படிப்பைவிட்டு ஓடிய பல மாணவர்களை எனக்குத் தெரியும்). எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பித்தல் முறை பலனளிக்காது எனும் அடிப்படை அறிவு ஏன் ஆகப்பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை அல்லது அது ஏன் அவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை? அதிக மார்க் எடுத்தவனுக்கே முதல் குரூப் என பாத்தியப்படுத்துவது ஏன்? (இது மற்ற பிரிவு மாணவர்களை படிப்பு ஏறாதவர்கள் என மறைமுகமாக முத்திரை குத்துகிறது, பல பள்ளிகள் முதல் குரூப்பில் மட்டும் கவனம் செலுத்துகின்றன).

பதினொன்றாம் வகுப்பை ஒருவாரத்தில் முடித்துக்கொண்டதோடு என பள்ளி வாழ்வு முடிவுக்கு வந்தது. பிறகு ஜவுளித்தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பை முடித்துவிட்டு, சிலபல நூற்பாலைகளில் வேலைக்கு முட்டிமோதி அதுவும் கைகூடாமல் அடுத்த கட்டமாக ஆயத்தஆடை தொழில்நுட்பம் படிக்க சென்னைக்கு பயணமானேன். அப்போது சித்தி சீரியலில் ராதிகா ஒரு ஆடைத் தொழிற்ச்சாலை வைத்து பெருங்கோடீஸ்வரி ஆன கதையை பார்த்து பலதரப்பட்டவர்கள் அங்கு சேர்ந்தார்கள் (தகுதி +2 அல்லது டிப்ளமோ). எதிர்காலத்தில் சித்தி அல்லது சித்தப்பாவாக வேண்டுமானால் ஆகலாம், நிச்சயம் கார்மெண்ட் தொழிலதிபர் ஆக முடியாது என எல்லோரும் சில காலங்களில் தெரிந்துகொண்டார்கள்.

அங்கு எனது முக்கியமான நண்பர்களில் ஒருவர் அம்பேத்கரை முற்றாக வெறுப்பவர். வார இறுதியில் நடக்கும் குழுவிவாதமொன்றில், இந்திய மக்களை இரண்டு குழுவாக பிரித்த துரோகி என அம்பேத்கரை அவர் வர்ணித்தார். சம்பவத்தின் அதிர்ச்சி இனிதான் இருக்கிறது, அவர் தழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், அவரது பெற்றோர்கள் இருவரும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் (பிறகு தலைமை ஆசிரியர்கள்). இன்னொரு நண்பர் குறவர் வகுப்பை சேர்ந்தவர், ஒருமுறை நாங்கள் சைதாப்பேட்டை சுரங்கப் பாதையை கடக்கையில் எதிரே ஊசி பாசி கூடையோடுவந்த இளம்வயது குறவர் ஒருவரைக்காட்டி என்னிடம் கேட்டார் “இவனும் நானும் ஒரே ஜாதின்னு சொன்னா உன்னால நம்பமுடியுதா?” அப்போது அவரது முகத்தில் இருந்த பெருமிதத்தை இப்போதும் என்னால் நினைவுக்கு கொண்டுவர முடிகிறது.

நகரங்களில் நிலவும் சாதியப் பாகுபாட்டின் மிக நுட்பமான விளைவை அந்த சந்தர்பத்தில்தான் நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். முதலாமவர் பெரிய ஒடுக்குமுறைக்கு முகம்கொடுக்காமல் வளர்க்கப்பட்டவர், அவ்வப்போது நடக்கும் நாசூக்கான சமூகப் புறக்கணிப்பை அவர் அரைகுறையாக விளங்கிக்கொள்ளும்போது அவர் அதற்கான காரணியாக அம்பேத்கரை கருதினார். அவர்தான் இரண்டு சமூகத்தையும் பிரித்துவைத்ததாக இருந்தது நண்பரது புரிதல். நல்வாய்ப்பாக அவர் கிருஸ்துவர் என்பதால் இந்துமுன்ணனிக்கு போகவேண்டிய அடியாள் கூட்டத்தில் ஒன்று குறைந்தது. இரண்டாமவர் ஒரு சினிமா ஒப்பனையாளரின் மகன். மிகையான செல்வத்துடன் வளர்ந்து தனது சொந்த சாதி மக்களையே ஒரு ஆதிக்க சாதிக்காரனுக்குரிய கண்ணோட்டத்தோடு பார்க்கப் பழகியவர். இந்த செயல்பாட்டை சினிமாத் துறையில் இப்போதுள்ள பிரபல கதாநாயகர்கள் சிலரிடமும் காணலாம்

அரசுவேலை கிடைத்தபிறகு தனது சொந்த மக்களை மறந்துவிடுபவர்கள் என தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று (சொல்பவர்களில் சில இடதுசாரி மற்றும் பெரியாரிஸ்டுக்களும் அடக்கம்). ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான இந்த குற்றச்சாட்டு அபாண்டமானது. ஓரளவு வசதிவந்தபோதும் அவர்கள் நகரங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த அவமதிப்பு அவர்கள் தங்களது சாதிய அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ நிர்பந்திக்கிறது. அந்த குடும்ப மற்றும் சமூக அமைப்பில் வளரும் அடுத்த தலைமுறையில் சிலர் தங்கள் சாதி அடையாளத்தை வெறுப்பவர்களாக உருமாறுகிறார்கள். ஆகவே இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பானவர்கள் மற்ற மேல்சாதிக்காரர்கள்தானேயன்றி தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. மேலும் தன்னை ஒரு அரை பிராமணனாக காட்டிக்கொள்வதும் மிகையான சுயநலமும் நமது நடுத்தரவர்கத்தில் பரவலாக உள்ள பழக்கம். இதில் தலித் மக்களை மட்டும் குறைசொல்வதுகூட சாதிவெறியின் ஒரு வெளிப்பாடே. பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு கிடைத்த இந்த புரிதலுக்குப் பின்னால் மேற்சொன்ன இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s