ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம்.


எல்லோரையும் திகைக்க வைத்த தனி ஈழத்துக்கான மாணவர்கள் போராட்டம் தொடங்கி அழகிரியை மட்டும் கலவரப்படுத்திய திமுக ஆதரவு வாபஸ் வரையான சம்பவங்கள் கடந்த மாதத்தில் நிகழ்ந்திருக்கின்றன. ஈழப்பிரச்சினையில் நம்பிக்கை தரும் சம்பவங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன. அந்த வகையில் இப்போதய மாணவர் போராட்டங்களை பெரிதும் நம்பிக்கையளிக்கும் நிகழ்வாக கருதலாம். ஆனால் எல்லா நம்பிக்கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து நாம் பெரிய நம்பிக்கையிழப்பையே சந்தித்து வந்திருக்கிறோம் எனும் வரலாறு கொடுக்கும் அச்சத்துடனேயே இந்த பதிவை தொடங்குகிறேன்.

பெரியார் காலத்தில் நடைபெற்ற பார்ப்பனீய எதிர்ப்பு போராட்டங்களை இப்போது அதேவீரியத்தோடு நம்மால் நடத்த முடியாது. அன்றைக்கு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு வந்த கூட்டத்தில் பத்தில் ஒரு பங்குகூட இப்போது வருவது சந்தேகம். ஆனால் ஈழத்துக்காக நடக்கும் போராட்டங்கள் இப்போதுவரை ஏதேனும் ஒருவகையில் வலுவானதாக நடக்கின்றன. ஆனாலும் எல்லா எழுச்சியும் எந்த வெற்றியுமில்லாமல் கரைந்துபோனது. ஏன்? போராட்டங்களின் நோக்கமும் அதற்கான வெகுமக்களின் ஆதரவும் அபாரமானது. இருந்தும் நாம் தொடர்ச்சியான தோல்விகளையே சந்திக்கிறோமென்றால் நம் செயல்பாடுகளில் எங்கோ பிழையிருக்கிறது என்றுதானே பொருள்?? அந்த கோணத்தில் சிந்திக்கக்கூட மறுத்து ஈழத்துக்காக குரல்கொடுப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு கூட்டுப்பிரார்த்தனை போல ஆகிவிடாதா?

நமது தோல்விகளின் காரணங்கள் என்னவாக இருக்கலாம் எனும் சந்தேகங்களை இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன். இவை என் சிற்றறிவுக்குக்கு எட்டிய கருத்துக்கள் மட்டுமே. சரியாக இருப்பதாக கருதினால் பரிசீலியுங்கள், தவறாக இருந்தால் எனக்கு விளக்குங்கள்.

நமக்கு யார் நண்பன் யார் துரோகி என்பதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. கருணாநிதி துரோகி, எம்ஜியார் நண்பர். எம்ஜியார் புலிகளுக்கு பணம் கொடுத்தார் ஆகவே அவர் நண்பர் கருணாநிதி சோனியாவோடு சேர்ந்துகொண்டு புலிகளை அழித்தார் அதனால் அவர் துரோகி. கருணாநிதி துரோகி எனும் கருத்தில் பிரச்சனையில்லை. எம்ஜியார் நண்பர் என்பதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. எம்ஜியார் புலிகளை ஆதரித்தபோது இந்திய அரசு போராளிகளை ஊக்குவிக்கும் மனோநிலையில் இருந்தது. இந்திய அரசு புலிகளை ஒழிக்க முடிவெடுத்தபோது கருணாநிதி அதிகாரத்தில் இருந்தார். இரண்டு பேருமே இந்திய அரசின் ஏவலாளிகள்தான் ஆனால் ஒருவர் துரோகியாகிவிட்டார் இன்னொருவர் தியாகியாகிவிட்டார். இங்கே கடவுளுக்கும் சாத்தானுக்கும் தகுதி ஒன்றுதான். விளைவுகள்தான் யார் கடவுள் யார் சாத்தான் என தீர்மானிக்கின்றன.

இந்திய அரசு ஆதரவு என்பதைத்தவிர எம்ஜியாருக்கு வேறு சில காரணங்கள் ஈழவிடுதலையை ஆதரிக்க அடிப்படையாக இருந்தன. தன்னை ஒரு தமிழன் என நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது (மலையாளி எனும் முத்திரையை எப்படியாவது துடைப்பதற்கான தேவை அவருக்கு ).  கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்தாக வேண்டிய சூழல் அவருக்கும் இருந்தது. தன்னை மதித்து வந்த புலிகளைதான் அவர் ஆதரித்தார். ஈழ விடுதலையை அவர் விரும்பினார் என்பதற்கு எந்த உருப்படியான ஆதாரமும் இல்லை. 1987ல் சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்தனே பெங்களூர் வந்தபோது, தமிழகத்தில் தங்கியிருந்த எல்லா போராளிகளின் ஆயுதங்களும் ஒரே இரவில் கைப்பற்றப்பட்டது. ஆக ஆதரித்த அரசாங்கம் போராளிகளை ஒரே நாளில் முடக்குவதற்கும் தயார் நிலையில் இருந்திருக்கிறது. ஒருவேளை அது மத்திய அரசின் வேலை என்றால் அதனை எதிர்த்து எம்ஜியாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது.

இல்லையில்லை அவர் ஈழத்தை முழுமனதாக விரும்பினார் என சொல்பவர்கள் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்,. புலிகளுக்கு காசு கொடுத்த எம்ஜியார் ஏன் தன் தொண்டர்களை ஈழவிடுதலையை ஆதரிக்கும்படியாக தயாரிக்கவில்லை? தமிழகத்தின் பெரும்பாலான இயக்கங்கள் ஈழ விடுதலைக்காக போராடியிருக்கின்றன. ஆனால் எம்ஜியார் கொடுத்த காசைத்தவிர வேறெந்த உருப்படியான ஆதரவையும் தராத இயக்கம் அதிமுகதான். இன்னும் தெளிவாக சொல்வதானால் ஈழம் பற்றிய அறிவும் அக்கறையும் அதிமுகவுக்கு மயிரளவுக்குக்கூட கிடையாது. 1991 முதல் 96 வரை ஈழ ஆதரவாளர்களை வேட்டையாடும் வேலையை தனது முதல் கடமையாக தமிழக காவல்துறை கொண்டிருந்தது. அதுகுறித்து கவலைப்பட்ட ஒரு அதிமுககாரரைக்கூட நான் இதுவரை பார்த்ததில்லை. இதற்குமேலும் காசுகொடுத்தவன் கடவுளே என யாரேனும் சாதித்தால் அவர்கள் கடவுள் பட்டியலில் கருணாநிதி மன்மோகனையும் சேர்த்துக்கொண்டாக வேண்டும்.

இது ஏதோ எம்ஜி ராமச்சந்திரன் எனும் தனிநபர் பற்றிய கருத்தாக கருதலாகாது. நமது அரசியல் புரிதலின்மையும் பொறுப்பை அடுத்தவர்கள் தலையில் கட்டும் பழக்கத்தையும் அறிந்துகொள்ள உதவும் அறிகுறி. நாம் என்ன செய்யவேண்டும் எனும் தெளிவு இல்லாதபோது இன்னொருவரை எதிர்பார்க்கவேண்டிய அவசியம் வருகிறது. நான் எதையும் செய்ய விரும்பாதபோது இவரு இருந்திருந்தா ஈழம் கிடைச்சிருக்கும் எனும் சமாதானம் ஒரு திருப்தியை தருகிறது. மற்ற எல்லா பிரச்சனைகளையும்விட மிகவும் ஆபத்தானது இது.

ஒரு போராட்டம் ஒரு புரவலரை நம்பி செயல்பட முடியாது. தமிழ் சான்றோர் பேரவை எனும் இயக்கம் பத்தாண்டுகளுக்கு முன்னால் செயல்பட்டுவந்தது. ஆனாரூனா எனும்  புரவலரை நம்பி நடத்தப்பட்ட இயக்கம் அது. அவர் இந்த இயக்க நடவடிக்கைகளில் இருந்து விலகிய பிறகு பேரவையே காணாமல்போனது. பல தமிழ்தேசிய தலைவர்கள் இப்போதும் சொல்வது இதைத்தான் “எம்ஜியார் இருந்திருந்தா ஈழப்பிரச்சனை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்”. இது கிட்டத்தட்ட ஒரு அவதாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் முட்டாள் பக்தனின் நிலைக்கு ஒப்பானது. என்னால் எதுவும் செய்ய முடியாது எனும் ஒப்புதல் வாக்குமூலம். எட்டு கோடி மக்கள் கூட்டத்தினால் ஆகாதது ஒரு தனிநபரால் மட்டும் சாத்தியமாகியிருக்குமா?

எம்ஜியார் கொண்டாடப்படவேண்டியவராக இருப்பதன் சிக்கல் அதிகாரத்தில் இருக்கும் எல்லோரும் எம்ஜியாராக (மட்டும்) முயற்சி செய்வதே. கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் ஈழமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பியதை சாதனையாக சொல்லிக்கொண்டார். ஜெயா ஆட்சிக்கு வந்தும் ஈழ அகதிகளுக்கு கொஞ்சம் நிதி ஒதுக்கினார். காங்கிரஸ்கூட இலங்கைத் தமிழர்களுக்கு நாலாயிரம் கோடி ஒதுக்கியதாக சொல்லிக்கொள்கிறது. இவர்கள் அத்தனைபேரும் தமது ஆட்சிகாலத்தில் ஈழம் என பேசும் ஆட்களைக்கூட வெறுத்தார்கள். பணம் கொடுத்தால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் எனும் பாடத்தை மறைமுகமாக நாம் இவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறோம்.

ராஜீவ் மரணத்துக்குப் பிறகு நடந்த மிகமோசமான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த பெரும்பாலான தோழர்கள் தமிழ்தேசியவாதிகளின் தியாகிகள் பட்டியலில் வந்ததேயில்லை. ராணுவ வாகனத்தை மறித்து தாக்கும் போராட்டத்துக்கு மக்களைத் திரட்டிய கோவை பெரியார் தி,கவின் நெஞ்சுரம் நினைவுபடுத்தப்படாமல் எம்ஜியார் பணம் கொடுத்ததற்கு முப்பது வருடம் கழித்தும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தால், அது சாமானிய தமிழனுக்கு என்ன பாடத்தை கற்றுத் தரும்? அவன் ஈழத்துக்காக வீதிக்கு வருவானா அல்லது எம்ஜியார் போல இன்னொரு அவதாரத்துக்காக காத்திருப்பானா?

அனேகமாக இந்த எம்ஜியார் வாழ்த்துப்பா கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சொல்லப்படும் மறைமுகமான அறிவுரை என்பது எனக்கு புரியாமலில்லை. ஆனால் இந்த இரண்டுபேரின் மனதைமாற்ற ஏன் நாம் இவ்வளவு மெனக்கெடவேண்டும்? மக்களைத் திரட்டி அரசைப் பணியவைக்காமல் வெறுமனே அதிகார மையத்தை மனம்மாற்ற முயல்வது எப்போதும் பலனளித்துவிடாது. துரதிருஷ்டவசமாக தமிழ்தேசியவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆகப்பெரும்பாலான போராட்டங்கள் யாரேனும் ஒருவரை நம்பச்சொல்லி நடந்த போராட்டங்களாகவே இருந்தன. ஒவ்வொரு நபரை நம்பி ஏமாந்த பிறகும் நமது அடுத்த நடவடிக்கை நம்புவதற்கு இன்னொருவரை தேடுவதாகவே இருந்தது.

விவரம் தெரிந்த நாளில் இருந்தே நான் தமிழ்தேசிய இயக்கங்களின் கூட்டங்களை பார்த்துக்கொண்டு வருகிறேன். அங்கே இரண்டு தவறான நிலைப்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவது, எம்ஜியாரும் இந்திராவும் இருந்திருந்தால் என்றைக்கோ ஈழம் மலர்ந்திருக்கும். இரண்டு, எல்லாவற்றையும் பிரபாகரன் பார்த்துக்கொள்வார். திருப்பூரில் ஒருமுறை சீமான் பேசுகிறார் ‘ஈழத்தை பிரபாகரன் உருவாக்குவார். நாம் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க போராடினால் போதும்’. ஆனால் அப்போது புலிகள் முல்லைத்தீவுக்குள் முடக்கப்பட்டிருந்தார்கள், அந்த குறிப்பிட்ட பொதுக்கூட்டமும் ஈழத்தில் போர்நிறுத்தம் கோரி நடத்தப்பட்டதுதான். புலிகளும் லட்சக்கணக்கிலான ஈழ மக்களும் மீள முடியாத முற்றுகையில் சிக்கிக்கொண்டிருந்தபோதும் இங்கு பிரபாகரனை வெல்ல முடியாது அழிக்க முடியாது எனும் வசனத்தையே உச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.

தனிநபர் வழிபாடு என்பது ஒருவகையான கோழைத்தனம். எம்ஜியார் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும் எனும் புலம்பல் அவருதான் இல்லையே இப்ப நாம என்ன செய்யலாம் எனும் கேள்வியை எழவிடாமல் செய்கிறது. பிரபாகரன் எல்லாத்தையும் பார்த்துக்கொள்வார் எனும் சமாதானம் ஒருவேளை அவர் இல்லாவிட்டால் என்ன செய்வது எனும் சிந்தனையை தடுக்கிறது.

நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் மன்றாடும்போது இந்த சர்வதேசம்தானே இலங்கையோடு கூட்டணிவைத்து ஈழமக்களை கொன்றொழித்தது எனும் உண்மை ஏன் இங்கு பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை? காரணம் மிகவும் எளிமையானது, நாம் நம்புவதற்கு யாரோ ஒரு ஆள் தேவைப்படுகிறார். அந்த நேரத்துக்கான பெரிய எதிரியை சமாளிக்க பழைய எதிரியை தூக்கி சுமக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்படுகிறது. அந்த துணிச்சலில்தான் ஜெயலலிதா தன் பழைய வரலாற்றை சுலபமாக மறைத்துவிட்டு கூச்சமின்றி ஈழத்தாய் வேடத்தை அணிய முடிகிறது. கருணாநிதியால் மூவர் தூக்கு குறித்து மனிதாபிமானம் பொங்க பேச முடிகிறது.

வரலாற்றை தெரிந்துகொள்வதும் சமகால அரசியலை புரிந்துகொள்வதும்தான் ஈழவிடுதலைக்கான முதல் நடவடிக்கையாக இருக்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பயணத்தின்போது தாய், தந்தை மகள் என மூன்றுபேர் கொண்ட ஒரு குடும்பத்தை பார்த்தேன். மனநலம் குன்றிய மகள் செருப்பை தொலைத்துவிட்டார், அதற்காக அந்த தாய் தன் மகளை “சாவுடி சாவுடி” என திட்டிக்கொண்டே அடிக்கிறார். அந்த தந்தையோ தன் மனைவியை ஏதேதோ சொல்லி சமாதானம் செய்தார். பேருந்திலிருந்த மற்றவர்கள் அந்த அம்மாவை கொடுமைக்கரியாகவும் அந்த தந்தையை கையாலாகாதவனாகவும் கருதினார்கள். உடன் வந்த மற்றொரு பயணி அந்த தந்தையிடம் பேசியபோதுதான் அவரது மனைவியும் சற்று மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்தது. இப்போது சக பயணிகளின் அபிப்ராயம் முற்றிலுமாக மாறியிருந்தது.

இங்கே சம்பவத்திலும் பாத்திரங்களிலும் எந்த மாற்றமுல்லை. ஆனால் ஒரு உண்மை உங்கள் மனிதாபிமானத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. ஒரு கொடுமைக்காரியை பரிதாபத்துக்குரியவராக மாற்றுகிறது. ஒரு கையாலாகாதவனை அற்புதமான குடும்பத்தலைவனாக காட்டுகிறது.

ஆகவே உண்மை என்பது வெறும் செய்தியல்ல. அதுதான் உங்களின் நம்பிக்கையையும் செயல்பாட்டையும் தீர்மானிக்கிறது. தமிழ்தேசிய இயக்கங்களில் உள்ள நண்பர்கள் தயவுசெய்து ஈழத்தின் வரலாற்றையும் உலக அரசியலின் போக்கையும் தேடிப்போய் வாசியுங்கள். பாரபட்சமின்றி எல்லா தரப்பின் கருத்தையும் அறிந்துகொள்ளுங்கள். கே.பி ஒரு துரோகியென்று நாம் 2009 மே இருபதாம் தேதி முடிவு செய்தோம் (அதுவும் அவர் துரோகி என்பதற்காக இல்லை, பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொன்னதற்காகவே). ஆனால் அதற்கு ஆறுமாதம் முன்னதாகவே ரணில் விக்ரமசிங்கே இலங்கை அரசு கே.பியுடன் ரகசிய உறவுவைத்திருப்பதாக குற்றம்சாட்டினார், அப்போது நாம் கே.பியின் ஆயுத சப்ளை சாமர்த்தியத்தை புகழ்ந்துகொண்டிருந்தோம்.

பாலச்சந்திரன் மற்றும் துவாரகாவின் படுகொலை பற்றிய ஆதாரங்களை முதலில் உலகிற்கு காட்டியவர் ரயாகரன், புலிகளின் விரோதியாக கருதப்படுபவர். அது பிரபாகரனின் குழந்தைகள் அல்ல என அப்போது சாதித்தவர் நெடுமாறன், பிரபாகனின் நம்பிக்கைக்குரிய நண்பர். சரியான செய்தி எதிர்தரப்பில் இருந்தும் வரலாம், தவறான நம்பிக்கைகள் நம் தரப்பில் இருந்தும் வரலாம்.

முதலில் கண்களையும் காதுகளையும் திறந்துவைப்போம். கால்கள் போகவேண்டிய பாதையை தீர்மானிக்க அதுதான் முதல்படி.

-தொடரும்..

Advertisements

“ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம்.” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. 1. ஈழம் எட்டு கோடி மக்களும் முயற்சி செய்தது இல்லை .
  2 .நீங்கள் எழுதியவை இறந்த காலம் .
  3.அணைத்து தரப்பு தமிழ் மக்கள் முன் வைக்கும் தீர்வு ஒன்றைத் தேர்வு செய்யவேண்டும் .அதுவே இறுதி,உறுதி .
  4.உண்மையிலே ஈழ அக்கறை உள்ள தமிழக அமைப்புகளை (போராடும் மாணவர் அமைப்பு உட்பட )தீர்வுக்கு சகோதர ஆதரவு கோரவேண்டும்
  5.அதற்கு பின் வருகிற அணைத்து மைய அரசு தேர்தலில் 49 (O) தெரிவு செய்து நமது நிலையை அரசுகளுக்கு அழுத்த வேண்டும் .
  6. எட்டு கோடி மிகை மக்கள் ஒருங்கிணைந்த கருத்தும் செயல் ஆக்கமும் தீர்வு கொடுக்கதோ ?
  7.இதற்கான திட்டமும் ,திடமும் நம்மிடம் இருந்து தான் வர வேண்டும்.
  8.இப்படி ஒன்று நடந்தால்??????? எல்லாமே அதிரும்.
  9. இந்த சொரணை எல்லா அரசியல் அறினர்களுக்கு வரவேண்டுமே.
  10. முதலில் இப்படி மாற்று திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வோம்.

 2. நேர்மையான பதிவு: தமிழ்நாட்டிலிருக்கும் ஈழ அகதிகளுக்கு தமிழக அரசிடமிருந்து விடுதலைகிடைப்பதே நமது முதன்மைத் தேவை

  தற்போதைய நிலையில் கருணாநிதியைக் குமுறி எடுப்பது மட்டுமே ஈழ ஆதரவாக இருக்கிறது. அடுத்ததாக இனப்படுகொலையை நடத்திய இந்தியாவை சீனாவிடமிருந்தும் காக்க வேண்டியிருக்கிறது. ஈழப் பிரச்சனையில் தெளிவான அரசியல் நிலைப்பாடு ஈழத்து இடதுசாரிகள் மட்டுமே வைத்திருக்கிறார்கள். சிறு சிறு குழு முரண்பாடுகள் தவிர்த்து இவர்கள் மட்டுமே சற்று எதார்த்தமாக சிந்திக்கிறார்கள். மிகவும் தவறான ஆபத்தான தன்னலமான நிலைப்பாடு கொண்டிருப்பவர்கள் புலி ஆதரவாளர்கள், தமிழ்நாட்டு, புலத்துத் தமிழர்கள் ஆகியோர்.

  ஈழம் புலிகள், பிரபாகரன் என்று வந்து விட்டால் கொளத்தூர் மணி, தியாகு போன்ற பெரியாரிய தமிழ்தேசியவாதிகளே கூட ஆறு அறிவையும் கழட்டி வைத்து விட்டுத்தான் பேசுகிறார்கள். இது இவர்களது களப்பணிகள், போராட்டங்களைக் கொச்சைப் படுத்திச் சொல்லப்பட்டதல்ல. இவர்கள் இருவரும் கூட இன்னும் பிரபாகரன் இறந்ததையே நம்பாமல் இருக்கிறவர்கள். புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல என்பவர்கள். விமர்சித்தால் விமர்சிப்பவரை துரோகி, எதிரி, அவதூறு என்றே கொள்வார்கள். திருமா, வைகோ, நெடுமாறன் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. எவ்வளவு கசப்பாக இருந்த போதிலும் தனி ஈழம் என்பது சாத்தியமில்லாதது. 2013 இல் இருக்கும் உலக அரசியலைக் கணக்கில் கொள்ளாமல் 1913 போல தனி ஈழம் தனித் தமிழ்நாடு என்று பேசி வருகிற சிலரும் இருக்கிறார்கள்.

  ஈழ ஆதரவாளர்கள் எல்லோரும் மரண தண்டனைக்கு எதிரானவரே. ஆனால் புலிகள் நடத்திய படுகொலைகள் அனைத்தையும் துரோகிகள் என்று சொல்லி வருகிறார்கள். ஈழ ஆதரவாளர்கள் பெரும்பான்மையினர் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். இங்கிருக்கும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற சிறு சிறு கட்சிகளையும் கூட தீவிரமாக எதிர்க்கிறார்கள் எதற்காக அவர்களது இஸ்லாமியர் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக. ஆனால் பல ஆயிரம் முஸ்லிம்களை வெளியேற்றி, அவர்கள் சொத்தைக் கொள்ளையடித்தும், நூற்றுக் கணக்கானோரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்ட புலிகளைப் பற்றி மூச்சு விடமாட்டாரகள். சிங்களன் சதி, கருணா சதி என்று அடித்து விடுவார்கள். ராஜீவின் குற்றங்களையும் பேசிக் கொள்வார்கள், ராஜீவைக் கொன்றது புலிகள் அல்ல என்றும் சொல்லிக் கொள்வார்கள்.

  இவர்கள் மகோராமச்சந்திரனை ஏன் ஆதரிக்கிறார்கள், புலிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தார் என்பதாலாம். அவரென்ன தமிழ் உணர்வு பொங்கியா பணம் கொடுத்தார். எல்லாம் உள்நோக்கம்தான். எம்ஜிஆர் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று ரயாகரன் ஒரு பதிவில் எழுதியிருந்தார். 1991 இல் கருணாவுக்குப் பதில் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்திருந்தால் பிரபாகரன் ராஜீவைப் போட்டுத் தள்ளியிருப்பாரா ? இளிச்சவாயன் கருணாநிதிதானே எல்லார்க்கும் ? இத்தனைக்கும் கருணாநிதி புலி ஆதரவாளராக இல்லாத போதும் திமுகவினர் பெரும்பான்மையானவர்கள் புலி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

  அதிமுக இருப்பவர்களுக்கெல்லாம் என்ன சிந்தனை வரும், அம்மா என்ன சொன்னாலும் தலையாட்டுவார்கள் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கருணாநிதி எதிர்ப்புப் புலி ஆதரவாளர்களெல்லாம் அம்மாவிற்க்கு ஆதரவாக இருக்கின்றனர். 18 வருடமாக அம்மா மு.க.வை புலி ஆதரவாளர் என்று முத்திரை குத்தி அவதூறு அரசியல் செய்து வந்தார். இப்போது புலி ஆதரவாளர் எல்லாம் அம்மாவுடன் இணைந்து முகவை துரோகி என்று தூற்றி வருகின்றனர்.

  இந்திராவும், எம்ஜியாரும் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்குமாம். நல்ல கற்பனை வளம். முள்ளிவாய்க்கால் 25 வருடங்களுக்கு முன்பே நடந்து முடிந்திருக்கும் பஞ்சாப் பொற்கோயில் போல.

  ரயாகரன் வெளியிட்ட படத்தில் இருந்தது இசைப்பிரியா என்பது பின்புதான் தெரிந்தது. ஆனால் மற்ற புகைப்படங்கள் எல்லாம் உண்மைதானே ? அதற்கெல்லாம் என்ன மறுப்புத் தெரிவித்தார்கள். சப்பைக் கட்டுக்கள்தான். 2 கிமி சுற்றளவுக்குள் முற்றுகையில் சிக்கியவர்கள் எப்படித் தப்பியிருப்பார்கள் என்று கூடத் தெரியாதா ? இலங்கை மசியவில்லை என்றால் இனி அடுத்த ஐநா அமர்வு வரும்போது துவாரகாவின் புகைப்படம் வெளியில் வரலாம் அதற்குப் பிறகு மதிவதனியின் புகைப்படம் வரலாம். யார் கண்டார் ?

  உண்மையான ஈழ ஆதரவு இந்திய கிரிக்கெட்டை எதிர்ப்பதே, சிங்கள வீரர்களை எதிர்ப்பதல்ல. இங்கு எல்லாமே தலைகீழாகவே நடக்கிறது. ::((((

 3. ஏறத்தாழ ஒரு கட்டுரையே எழுதிவிட்டீர்கள் தமிழ். நான் எழுதத் தவறிய விடயங்கள் உங்கள் பின்னூட்டத்தி;ல் இருக்கின்றன.

  //ரயாகரன் வெளியிட்ட படத்தில் இருந்தது இசைப்பிரியா என்பது பின்புதான் தெரிந்தது. ஆனால் மற்ற புகைப்படங்கள் எல்லாம் உண்மைதானே ? அதற்கெல்லாம் என்ன மறுப்புத் தெரிவித்தார்கள்.//

  இன்னுமொருமுறை சரிபாருங்கள்… இசைப்பிரியா புகைப்படம் வேறு. துவாரகா என அடையாளம் காட்டப்பட்ட புகைப்படம் வேறு என்றுதான் நான் நினைத்துகொண்டிருக்கிறேன்.

 4. கடந்த இரு வருடமாக எந்தப் போர்க்குற்ற, போர்க்கள புகைப்படத்தையும் பார்ப்பதைத் தவிர்த்து வருகிறேன்.

  அந்தப் பெண்ணின் உடல் இசைப்பிரியா என்பது பின்னர் வெளியான புகைப்படங்கள், கில்லிங் ஃபீல்ட்ஸ் ஆவணப்படத்திலும் தெரிந்தது. சில புகைப்படங்களையும், சானல் 4 – இன் இரண்டாவது போர்க்குற்ற ஆவணப்படத்தையும் நான் பார்க்கவில்லை. துவாரகா புகைப்படம் இன்னும் வெளிவரவில்லை என்றுதான் நினைகிறேன்.

 5. ஐயா தமிழனாவன் ,
  ராஜீவ் காந்தி மரணித்தபோது கருணாநிதி ஆட்சி இல்லை.GOVERNOR ஆட்சி இருந்தது .இதுவே உங்களுக்கு தெரியல. கருத்து என்று எதையோ COPY AND PASTE செய்து ,எதுக்கு இந்த டகால்டி வேலை.அ ஆ இ ஈ சரியான பேர் தான் .

 6. நன்றி வில்லவன்.

  நண்பர் தமிழானவனின் உண்மைகளை விளக்கிய பின்னோட்டம் அருமை.
  //ஈழம் புலிகள்,பிரபாகரன் என்று வந்து விட்டால் கொளத்தூர் மணி தியாகு போன்ற பெரியாரிய தமிழ்தேசியவாதிகளே கூட ஆறு அறிவையும் கழட்டி வைத்து விட்டுத்தான் பேசுகிறார்கள்.
  இவர்கள் இருவரும் கூட இன்னும் பிரபாகரன் இறந்ததையே நம்பாமல் இருக்கிறவர்கள்.//
  தமிழக பகுத்தறிவு சிந்தனைகள் 🙂

 7. //கருணாநிதி ஆட்சி இல்லை.GOVERNOR ஆட்சி இருந்தது /// தகவலுக்கு நன்றி. எனக்கு இன்னும் பல வரலாற்றுத் தகவல்கள் தெரியாது. புலிகள் EPRLF பத்மநாபாவைக் கொலை செய்ததால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெடுவதாகக் கூறி சுப்ரமணியன் சுவாமி முகவின் ஆட்சியைக் கலைத்தார். பின்புதான் ராஜீவின் கொலை நடந்திருக்கிறது. ஈழத்தமிழர்(புலிகள்) ஆதரவுக்காக ஆட்சி கலைக்கப்பட்டது. (http://www.frontline.in/static/html/fl2703/stories/20100212270311800.htm)

  அதன் பிறகு ஆட்சியில் இருந்தபோதும் இல்லாத போதும் ஜெ வைக்கும் குற்றச்சாட்டு, தீவிரவாதப் புலிகளை கருணாநிதி ஆதரிக்கிறார் என்று சொல்வது, தமிழகத்தில் ஈழம் ஆதரவு என்றாலே புலி ஆதரவு என்று முத்திரை குத்தித் தடை செய்வது நிகழந்தது. 15 வருடங்களுக்கும் மேலாக. இன்றோ முக துரோகியாகி ஜெயா தாயாகிவிட்டார்.

  போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் தலைவர்கள் வைகோ, சீமான், நெடுமாறன், ராமதாஸ், திருமா போன்றவர்கள் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையே என்பதையே கூட தெளிவாகச் சொல்லாமல் மழுப்பியவர்கள், அல்லது இருக்கிறார் வருவார் என்கிறவர்கள். இதிலேயே நேர்மையாக இல்லாதவர்கள் என்னத்தைப் போராடிப் பெற்றுத் தரப் போகிறார்கள். ஜாதி வெறி, இனவெறியைக் கக்கும் இவர்கள் ஒன்று படுவது திமுக எதிர்ப்பில் மட்டுமே. அதிமுக ஆதரவிலும்.

  எம்ஜிஆர் யோக்கியதையை இங்கு காண்க
  http://www.vinavu.com/2013/04/25/indian-politicians-traitors-of-eelam/

  தற்போது நடப்பவைகளை நோக்கினால் அதனால் யாதொரு பயனும் இல்லை என்று தோன்றுகிறது. தற்போது தமிழகத்தின் நடப்பவை 1980 களில் ஈழத்தில் போர் தொடங்கும் முன்பு நடந்தவைகளை நினைவூட்டுகிறது.

  30 வருடப் போராட்டம் இன்னும் ஒரு அங்குலம் கூட முன்னேறாமல் இருப்பதையும் இழந்தும், இத்தனை பேர் இறந்தும் ஒன்றும் கிடைக்க வில்லை என்பதையும் சிந்திக்க மறுப்பது

  ஒருவனை தூக்கி வைத்துப் போற்றுவது, இன்னொருவனை துரோகியாக்கி தூற்றுவது – தனிநபர் வழிபாடு

  தமிழகத்தில் சிங்களப் பயணிகள் தாக்கப்படுவது அதையும் சிலர் ஆதரிப்பது

  சிங்கள விளையாட்டு வீரர்கள் மீது தடை விதிக்கப்படுவது

  சிவசேனா பாணியில் தமிழ் இனவெறியை வளர்ப்பது

  தனி ஈழம் மட்டுமே தீர்வு மாற்றுக் கருத்து வைப்பவன் துரோகி

  புலிகள் தவறே செய்யாதவர்.

  இதையெல்லாம் ஏற்க முடியாது. இதிலெல்லாம் என்ன பயன் விளையப் போகிறது என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிலிருக்கும் ஈழ அகதிகள், இலங்கையில் இருக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கோரிக்கைகளுக்கும் ஈழத் தமிழர்களுக்காக போராடுகிறவர்களின் கோரிக்கைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. வில்லவனின் அடுத்தடுத்த கட்டுரைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

 8. அவ்வளவு மோசமான புலிகள் அழிக்கப்பட்டதை ஈழத்தமிழ் மக்கள் கொண்டாடியிருக்க வேண்டுமே …..ராஜபக்சேயை கடவுளாக அல்லவா வழிபடவேண்டும் ?அதுதானா நடக்கிறது இப்போது அங்கே ?
  உச்சக்கட்ட போரின்போது ஆட்சியில் இருந்தவர் கருணாநிதி ….ஆட்சி என்பது தோளிலிருக்கும் துண்டு …என்றெல்லாம் அள்ளி விட்டவர் ….ஆறுமுறை ஆட்சி செய்தவருக்கு இந்திய அரசு ராணுவ உதவி செய்தது தெரியாதா ?இலங்கைப்ரச்னையில் மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கை அறிவித்து மத்திய அரசை ஊக்கப்படுத்தியவரை விமர்சிக்காமல் என்ன செய்ய?தன்னைகொன்று வைகோவை தி முக தலைராக்க புலிகள் முயற்சிக்கிறார்கள் எனக்கூறி வை கோவை வெளியேற்றி கட்சியினரை இலங்கைப்ரச்னையில் இருந்து அன்னியபடுத்தி,வாரிசு அரசியலுக்கு இருந்த ஒரே தடைக்கல்லையும் தந்திரமாக நீக்கியவர் கருணாநிதி!
  எல்லாவற்றையும் விட ஒருவன் அரசியல் மூலம் எவ்வளவு பொருளீட்டியிருக்கிறான் என்பதை வைத்தே அவன் நேர்மையை மதிப்பிட முடியும் ……இன்று இந்திய அரசியல் வாதிகளில் கருணாநிதியைவிட அதிகம் சம்பாதித்து தனது குடும்பத்தை பணக்காரர் பட்டியலில் இடம்பெற செய்தவர் யார் ?இவர் எப்படி மக்கள் நலம் சார்ந்து சிந்திப்பார் என நம்புகிறீர்கள்?கருணாநிதி நல்லவர் என்றால் அம்பானிகள் மகாத்மாக்களாகத்தான் இருக்க முடியும் !!!

 9. //30 வருடப் போராட்டம் இன்னும் ஒரு அங்குலம் கூட முன்னேறாமல் இருப்பதையும் இழந்தும் இத்தனை பேர் இறந்தும் ஒன்றும் கிடைக்க வில்லை என்பதையும் சிந்திக்க மறுப்பது//
  30 வருடம் இவ்வளவு பெரிய காலம்?உண்மை என்னன்னா தமிழக மக்களின் சராசரி வாழ்கை தரம், கல்வி எல்லாவற்றையும்விட இலங்கை தமிழர்கள் நல்ல நிலையிருந்தவர்கள். புலிகளின் போராட்டம் இலங்கை தமிழர்களை பரதேசிகள் ஆக்கியதே உண்மை. ஆனால் எப்படிபட்ட ஒரு பிரசாரம் தமிழகத்தில் நடக்கிறது.

 10. வேகநரி எல்லாத் தமிழர்களும் நன்றாக இருக்கவில்லை. பல பாகுபாடுகள் இருந்தன. சில சுயநலத் தமிழர்கள் தமது நலன்களுக்காக தவறுகள் செய்தனர். சிங்களக் குடியேற்றம் கலவரம் போன்றவை ஏறக்குறைய புலிகளுக்கு முன்பாக பல ஆண்டுகள் நடந்தன. புலிகள் போன்ற இயக்கங்கள் தோன்ற ஏதுவான சூழல் இருந்தது.

  @தினகரன் – முக உத்தமர் என்று சொல்ல வரவில்லை. மற்றவர்கள் யாரும் முக விட யோக்கியர்கள் இல்லை என்று சொல்கிறேன்.

  நான் புலிகள் செய்தது எல்லாமே தவறு என்று சொல்லவில்லை. அவர்கள் திசை மாறி விட்டவர்கள் என்று அங்கலாய்ப்புதான். அவர்கள் மீது பல கசப்புகள் உண்டு. அவர்கள் குறித்த பல உண்மைகளை ஆதரவாளர்கள் மறைக்கிறார்கள். அதுவே மொத்தத் தவறுகளுக்கும் காரணமாகிறது.

 11. //எல்லாத் தமிழர்களும் நன்றாக இருக்கவில்லை//
  தமிழகம் ஒரு பொருட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ளாத இலங்கையில் வாழும் இந்திய தமிழர்கள் பற்றி நான் சொல்லவில்லை. அவங்க தொன்நூறு சதவீதமும் ஏழைகள் தான். நான் சொன்னது இலங்கையில் மக்கள் தொகையில் 11சதவீதமான இலங்கை தமிழர்கள் பற்றி.
  கலவரம் பற்றி நான் அறிந்தது 1980 அல்லது 85 ஒரு பெரிய இன கலவரம் தமிழர்களுக்கெதிராக சிங்கலவர்களல் நடத்தபட்டது. அதற்கு பின்பு இன கலவரம் நடக்கவில்லை. புலிகள் சிங்கலவரை வெட்டி கொலை செய்த போதும் நடக்கவில்லை. குடியேற்றம்- தமிழர்களும் நிறைய சிங்கல பிரதேசங்களில் வசிக்கிறார்கள் கேட்டால் தமிழர்கள் தாங்களே விரும்பி சிங்கல பிரதேசங்களில் குடியேறினார்கள் ஆனா இலங்கை அரசு சிங்கலவங்களை திட்டமிட்டு தமிழ் பிரசேங்களில் குடியேற்றுகிறது என்கிறார்கள் புலிசார்புகாரர்கள். ஒரு இடதுசாரி கொள்கை கொண்ட இலங்க தமிழர் எனக்கு சொன்னது பல ஆண்டுகள் முன்பாக இலங்கையில் தமிழ் பகுதி ஒன்றில் ஆனா யாரும் வசிக்காத பிரதேசத்தில் இலவச நிலம் தருவதாக குடியேற்ற திட்டத்திற்கு தமிழ் சிங்கள மக்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விட்டிருந்தது தமிழர்கள் எவரும் போகவில்லை வசதியிருந்தபடியா அங்கே போய் இலவச காணி பெற்று குடியேறவிரும்பல்ல. ஆனா சிங்கலவர்களில் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள் அவர்கள் விண்ணபித்து அங்கே போய் குடியேறினார்கள் பின்பு வந்த தேர்தலில் தமிழ் கட்சி இதை சிங்கல குடியேற்றம் தமிழினம் காக்க எமக்கு வாக்களியுங்கள் என்று அமோக வெற்றி பெற்றது.

  வெற்றி பெற்றதாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s