ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம். (பாகம் 2)


வெறுப்பின் வழியே நாம் அடையவிரும்புவது என்ன?

பெங்களூரில் வசிக்கும் இந்த இரண்டு ஆண்டுகளில் இங்கே கர்நாடக மக்களிடம் இருக்கும் தமிழ் வெறுப்பை என்னால் ஓரளவு அவதானிக்க முடிகிறது (எல்லோரிடத்திலும் இல்லை, ஆனால் பெரும்பாலானவர்களிடம்). அவர்களிடம் அந்த வெறுப்புக்கான காரணம் என்று எதுவும் இருக்காது. பெங்களூரின் வளர்ச்சியில் பாதிக்கும் மேலான பங்கு தமிழர்களுடையது. கர்நாடகாவிடமிருந்து தமிழர்கள் பறித்துக்கொண்டதென்று எதுமில்லை, தொன்னூறு விழுக்காடு தமிழர்கள் வெறும் உழைப்பாளிகள். மாறாக பெங்களூரின் பெரும் நில உடமையாளர்கள் ரெட்டி வகுப்பினர் (ஆந்திரா), தொழிலதிபர்கள் பெரும்பாலானவர்கள் வட இந்தியர்கள். கர்நாடகாவின் சொத்துக்களை ஆள்வது இவர்கள்தான். ஆனால் இவர்கள் மீதான வெறுப்பை இங்கே எங்கேயும் காணமுடியாது, கன்னட மக்கள், ஒப்பீட்டளவில் வலுவில்லாத தமிழர்களை வெறுக்க மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மராட்டியத்தில் உள்ள பிகார் வெறுப்பாகட்டும், பெரும்பான்மை இந்துக்களிடம் உள்ள முஸ்லீம் வெறுப்பாகட்டும் எல்லாமே திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதையொத்த ஒரு சிங்கள இனவிரோதம் ஈழ ஆதரவு நடவடிக்கையாக இப்போது அரங்கேறுகிறது. சிங்களர்கள் மீதான தாக்குதலை ஒரு அரசியல் நடவடிக்கையாக பலர் ஃபேஸ்புக்கில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்து முண்ணனி போன்ற இயக்கங்களால் கையாளப்பட்ட இந்த தந்திரம் இப்போது ராமதாசால் தலித் விரோத பிரச்சாரமாக செயல்படுத்தப்படுகிறது. அந்த பட்டியலில் நம் தமிழ்தேசிய நண்பர்களும் இணைக்கப்பட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால் சிங்கள பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் பலரும் பிரபாகரனை ஆராதிப்பவர்கள்தான். ஒரு சிங்களப் பெண்ணிற்கு வந்த களங்கத்தைப் போக்க அவரது கணவனை விடுதலை செய்தவர் பிரபாகரன், சிங்கள ராணுவம் ஏராளமான தமிழ் மக்களை கொன்றபோதும் அப்பாவி சிங்கள மக்கள் மீது எந்த தாக்குதலையும் தொடுக்காதவர் பிரபாகரன் என வருடக்கணக்கில் பெருமை பேசிவிட்டு கோயிலுக்கு வந்த சிங்களர்கள் மீது கல்லெடுத்து அடிப்பதன் பின்னிருக்கும் புரிதல் என்னை குழப்புகிறது. பிரபாகரன் பின்பற்றிய பாதை சரியென்றால் நீங்கள் மட்டும் ஏன் வழிமாறுகிறீர்கள்?

வீரனுக்கும் ரவுடிக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு, ரவுடி தன்னைவிட வலியோரிடம் வீரத்தை காட்ட மாட்டான் என்பதுதான். கொல்லப்பட்ட ஒவ்வொரு தமிழனின் மரணத்திலும் இந்தியாவுக்கு பங்கிருக்கிறது. அந்த அரசில் நேரடியாக பங்கேற்ற தமிழர்கள் தமிழ்நாட்டில் மகாராஜாவைப்போல வலம்வருகிறார்கள். அவர்களை முடக்கிவைக்க நம்மால் முடியவில்லை. காங்கிரஸ் ரவுடிகள் மாணவர்களை “ஆதாரத்துடன்” போலீஸ் முன்னிலையில் தாக்குகிறார்கள், அதை சட்டபூர்வமாக மட்டுமே நம்மால் அணுக முடிகிறது. சுப்பிரமணியசாமி எனும் தரகனைக்கூட நம்மால் அடக்கிவைக்க முடியாது. இந்தக்கள யதார்த்தத்திலிருந்து இலங்கை சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலையும் சங்ககராவுக்கு எதிரான போராட்டங்களையும் அணுகுங்கள்.

“ஏர்டெல்லை புறக்கணிப்போம்”  “சங்ககராவை வெளியேற்றுவோம்” இரண்டு வெவ்வேறு கோஷங்களுக்கிடையே உள்ள பெரும் வேறுபாடு உங்களுக்கு புரிகிறதா? அரசாங்கத்தின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் ஏர்டெல்லை புறக்கணிக்க கோருவதும் வெறும் கூலிக்கு விளையாடவரும் இலங்கைக்காரர்களை வெளியேற்றுவோம் என முண்டா தட்டுவதும் நம் போராட்டத்துக்கு எந்த வகையிலும் மரியாதை சேர்க்காது.

ஒரு பவுத்த பிக்கு தாக்கப்பட்டதற்கான காரணமாக அவர்கள் சிங்கள ராணுவ நடவடிக்கையை ஆதரித்தார்கள் எனும் கருத்து சொல்லப்பட்டது. இந்த இடத்தில் நாம் ஒரு சிறிய உண்மையை பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முன்புவரை ஈழத்தைவிட அதிகமான பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதி காஷ்மீர். இப்போதுவரை தொடரும் ராணுவ ஆக்கிரமிப்பிலும் காணாமல்போவோர் எண்ணிக்கையிலும் ஈழத்திற்க்கு கொஞ்சமும் குறைவில்லாத பகுதி காஷ்மீர். இந்திய இராணுவத்துக்கு நிதிசேகரிக்க நடத்தப்படும் கொடிநாள் வசூலில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு. ஆகவே இந்திய அரசின் ராணுவ அத்துமீறலுக்கான பொறுப்பு நமக்கும் இருக்கிறது. அதற்காக காஷ்மீரிகளிடம் உதைவாங்க வேண்டியவர்களாகிறோம் நாம். ஏற்றுக்கொள்ளலாமா? இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிராக எந்த எதிர்ப்பையும் காட்டாதவர்கள் சிங்கள மக்கள் எனும் கருத்தையும் நான் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு பதிலளிக்கும் முன் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன், ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் என்ன எதிர்ப்பு போராட்டம் நடந்தது? அவர்களையும் தண்டிக்க வேண்டியவர்கள் பட்டியலில் சேர்ப்பீர்களா? அல்லது அவர்கள் அரசின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள் எனும் நிஜத்தை நினைப்பீர்களா?

போராட்டங்களின் ஊடே சில சாகசங்கள் நிகழலாம், சாகசங்களின் வாயிலாக மட்டுமே போராட்டத்தை கொண்டுசெல்ல முடியும் என நினைப்பது முட்டாள்தனம். சிங்கள பயணிகளை விரட்டியடிப்பதையும் சங்ககராவுக்கு எதிராக போராடுவதையும்விட ஒரு நற்செய்தி மகிந்தவுக்கும் சோனியாவுக்கும் இருக்க முடியாது. அவர்கள இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக இன்னும் பாதுகாப்பாக இருப்பார்கள். இனவெறுப்பு பாரபட்சமில்லாமல் ஒரு இனத்தின் சகல மக்களையும் ஒரே தட்டில் நிறுத்துகிறது. சுலபமான இலக்கை விட்டுக்கொடுத்து நிஜமான குற்றவாளிகளை தப்பவிடும் வேலையைத்தான் நம்மிடம் உருவாக்கப்படும் சிங்கள மக்கள் மீதான வெறுப்பு செய்யப்போகிறது. ஈழத்தமிழர்கள் மீதான அக்கறை தமிழக மாணவர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் இவ்வேளையில், சிங்கள மக்களுக்கு எதிரான சிந்தனை அவர்களிடையே உருவாக்கப்படும் சாத்தியம் அதிகமிருக்கிறது. அதனை வளரவிடாமல் செய்யும் அவசியமும் நமக்கு அதிகமிருக்கிறது. எதிர்படும் எல்லாவற்றையும் வீழ்த்திவிட்டு மகிழ்ச்சியடைய இது ஒன்றும் வீடியோகேம் அல்ல. துரதிருஷ்டவசமாக வீடியோகேமை அதிகம் விரும்பும் நாகரீக உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

வெறுப்பினால் இழப்பைத் தவிர வேறெதுவும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. கர்நாடகாவில் வளர்த்துவிடப்பட்ட தமிழ் வெறுப்பு எந்த பலனையும் ஒரு சாமான்ய கன்னட குடிமகனுக்கு தரவில்லை. காவிரி பாசனப் பகுதியான மாண்டியாவில் வானம் பார்த்த பூமியும் ஏராளமாக இருக்கிறது. அங்குள்ள சிறுவிவசாயிகள் பலர் கூலிவேலைக்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நலனுக்காக மாண்டியாவில் எந்த போராட்டமும் நடந்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கும் தருணங்களில் மட்டும் மாண்டியா நாள்கணக்கில் முடங்கிப்போகும். வெறுப்பினால் தூண்டப்படும் போராட்ட உணர்வில் சொந்த மக்களின் நலன் பின்தள்ளப்படுவது நிகழ்ந்தே தீரும். மும்பை மராட்டியர்களிடம் உருவாக்கப்பட்ட பிகார் வெறுப்பு மகாராஷ்டிராவை சுரண்டுபவர்களை பாதுகாக்கிறது. குஜராத் இந்துக்களிடம் வளர்த்துவிடப்பட்ட முஸ்லீம் விரோதத்தின் பரிசு ஊட்டச்சத்தற்ற குழந்தைகள் சதவிகிதம்தான். அப்பாவி முஸ்லீம்களிடம் வீரத்தைக் காட்டிய சமூகம்தான் அங்கே தொழிற்சங்கம்கூட வைக்க முடியாத கோழைகளாக வைக்கப்பட்டிருக்கிறது.

இனவெறுப்பு தற்காலிகமாக கிளர்ச்சியூட்டும் ஒரு போதை. அது நாம் வென்றுவிட்டதாக ஒரு தோற்றத்தை தந்துகொண்டே நமது இறுதி லட்சியத்தை நோக்கிய பயணத்தை முடக்கும். கருணாநிதி மீதான வெறுப்புதான் அவருக்கு சற்றும் குறைவில்லாத ஈழ விரோதி ஜெயலலிதாவை புகழும்படியான இழிநிலைக்கு நம்மை தள்ளுகிறது. சரியான புரிதலில்லாத மொட்டையான சிங்கள விரோதம்தான் ஈழப்படுகொலையின் பிரதான குற்றவாளியான இந்திய அரசிடமே மகிந்தவை தண்டிக்கும்படி கோரிக்கை வைக்கும் கேவலத்தை நாம் செய்யும்படி நிர்பந்திக்கிறது.

நான் பரிந்துரைப்பது எதிரியையும் மன்னிக்கும் அகிம்சாவாதத்தையல்ல.. எதிரி யார் என்பதை தீர்மானித்து அவனை தண்டிக்க வழிதேடும் சாதாரண பகுத்தறிவைத்தான்.

Advertisements

One thought on “ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம். (பாகம் 2)”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s