ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம் -3.


2009, மே 18 க்கு பிறகு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒருவிதமான இறுக்கம் சூழ்ந்திருந்த சமயம், சில நாட்கள் அமைதிக்குக் பிறகு மீண்டும் திருப்பூரில் ஈழத்துக்கான கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. பகல்நேர அரங்கக் கூட்டங்கள்கூட இளைஞர்களால் நிரம்பியிருந்த நாட்கள் அவை. நடத்துவது யார் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது, ஈழம் தொடர்பான கூட்டமென்றால் வேலையைப் பொருட்படுத்தாமல் பலரும் அவ்விடங்களில் திரண்டார்கள்.

அப்படியான ஒரு அரங்க கூட்டத்தில் (அதிகம் அறிமுகம் இல்லாத சிறிய இயக்கம் ஒன்றால் திருப்பூர் நகர்மன்றத்தில் நடத்தப்பட்ட மாநாடு அது.) காலை முதல் மாலை 4 மணிவரை பலரது உரைகள் முள்ளிவாய்க்காலின் துயரமான இறுதி நாட்களைப் பற்றியதாக இருந்தது. அரங்கமெங்கும் துயரத்தில் உறைந்த முகங்களை மட்டுமே கண்டேன். அந்த நேரத்தில் பழ.நெடுமாறன் பேசத் துவங்குகிறார். அவரது வழக்கமான வாசகங்களுக்கு பிறகு பிரபாகரன் மரணம் குறித்தான கருத்து வருகிறது. “பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் அதற்கு சாட்சி, இதனை மகிழ்ச்சியாக அறிவிக்கும் என் முகம்தான். அவரது இருப்பை உறுதி செய்யும் விவரங்களை என்னால் தர முடியாது. அது அவருக்கு ஆபத்தை தரலாம். ஆகவே ஒரேயொரு செய்தியை மட்டும் உங்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அடுத்தகட்ட ஈழப்போராட்டத்துக்கான தயாரிப்பில் இருக்கிறார். சரியான தருணத்தில் அவர் வெளியே வருவார்”.

இந்த வாசகங்களுக்கு பிறகு அங்கே கைதட்டும் ஒலி நிற்க நான்கு நிமிடங்களானது. அதுவரை அங்கிருந்தவர்கள் முகங்களில் இருந்த சொந்த சகோதரர்களை பறிகொடுத்த சோகமும் அவர்களை காப்பாற்ற இயலாமல்போன குற்ற உணர்வும் மறைந்து போய் ஒருவிதமான மகிழ்ச்சியும் மனநிறைவும் தோன்றியது. நெடுமாறன் மீதான நம்பிக்கையை நான் இழந்த தருணமும் அதுதான். அப்போதுவரை பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் எனும் நம்பிக்கை, போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களுக்கான ஆறுதல் என கருதிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்தக் கருத்து, செயல்பட விரும்புபவர்களையும் போராடும் எண்ணத்தில் இருந்து விலக்கி வைக்கும் போதையாக காட்சி தந்தது அங்கே.

//இந்த சந்தர்பத்தில் பிரபாகரன் இருப்பு குறித்து சற்றே விரிவாக பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அவரை தவிர்த்துவிட்டு ஈழவிடுதலையைப் பற்றி சிந்திக்கக்கூட தெரியாதவர்களாகத்தான் பெரும்பாலான தமிழுணர்வாளர்கள் இருக்கிறார்கள். //

எப்போதும் எல்லா மரணங்களும் சிலருக்கு கவலையையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் தரும். பேரன்பு கொண்ட மனிதனின் மரணத்தை கொண்டாடவும் சிலர் இருப்பார்கள். கொடூரமான மனிதனின் மரணத்திற்காக அழவும் சில ஆட்கள் இருப்பார்கள். ஆனால் பிரபாகரன் இறப்பு விடயத்தில், கொண்டாடுபவர்கள் கொண்டாடிக்கொண்டேயிருந்தார்கள். அதுகுறித்து கவலைப்பட வேண்டியவர்கள்தான் அவர் செத்திருக்கவே மாட்டார் என சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். வரலாற்றில் இந்த அவலம் நேர்ந்தது பிரபாகரனுக்கு மட்டுத்தான் என நினைக்கிறேன். தமிழ் சமூகத்தின் தவிர்க்கவியலாத ஆளுமை ஒருவரை இந்த நிலைக்கு தள்ளியது அவரை அளவுக்கு மீறி நேசித்தவர்கள்தான்.

பிரபாகரனது இறப்பு செய்தி தமிழ்செல்வனது மரணத்தைப்போல திடீரென வந்துவிடவில்லை. கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிவிட்டோம் என இந்திய இலங்கை அதிகாரவர்கங்கள் அப்போது அறிவித்துக்கொண்டிருந்தன. பிரபாகரனை கைது செய்தால் ஒரு மன்னனைப்போல நடத்தவேண்டும் என கருணாநிதி ஒரு கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். அவருக்கு ஏதாவது நடந்தால் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என வைகோ கர்ஜித்தார். சரணடைவு எனும் பேச்சுக்கே இடமில்லை, போராளிகள் கடைசிவரை களமாடுவர்கள் என கட்டளைத்தளபதிகளாகவே மாறி சில தலைவர்கள் முழங்கினார்கள். ஆகவே எல்லா மட்டத்திலும் பிரபாகரன் பேராபத்தில் இருக்கிறார் எனும் உண்மை தெரிந்திருக்கிறது.  

முல்லைத்தீவில் சில சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வளைக்கப்பட்ட நிலையில் இருக்கும் போராளிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள். கடல்வழியே தப்பிக்கும் வாய்ப்பை அறவே இல்லாமல் செய்ய இந்தியாவின் முற்றுகை. ஒருவேளை தப்பமுடிந்தாலும் தமிழகத்துக்குத்தான் வந்தாகவேண்டும், ஆனால் இங்கோ சிங்கள ராணுவத்துக்கு இணையான கடமையுணர்வுடன் புலிவேட்டைக்கு காத்திருந்த தமிழக காவல்துறை. இத்தகைய சூழலில் புலிகளுக்கு இருந்தது இரண்டு வாய்ப்புக்கள்தான், ஒன்று போராடி மடிவது அல்லது சரணடைவது. எப்படியாவது போராளிகள் பிழைத்தால் போதும் என ஏன் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தோன்றவில்லை? அல்லது இந்த கள யதார்த்தத்தை மக்கள் அறியவிடாமல் செய்தது யார்? சண்டையிட்டு சாவதா அல்லது சரணடைந்து உயிரை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்வதா என்பதை களத்தில் உள்ள போராளிகள்தான் முடிவு செய்ய வேண்டும். இங்கிருந்துகொண்டு அவர்களுக்கு கட்டளையிடும் தகுதியும் அதிகாரமும் நம் ஆட்களுக்கு எங்கிருந்து வந்தது?

கிளிநொச்சி வீழ்ந்த போது நடேசன் சொன்னார் “ஏழு கோடி தமிழ்மக்கள்தான் எங்கள் பலம்”. அவர் சரணடையும் முன்னால் நடந்த கடைசி செயற்கைகோள் தொலைபேசி உரையாடலில் சொன்னவை “இன்னும் அரை மணிநேரத்தில் நான் மீண்டும் அழைக்காவிட்டால் நான் கொல்லப்பட்டுவிட்டேன் என முடிவு செய்துகொள்ளுங்கள்”. பெரும் சித்திரவதைக்கு பிறகு கொல்லப்பட்ட நடேசனின் உடலின் புகைப்படத்தை பார்த்தபோதும் இப்போது பார்க்கும்போதும் என் நினைவில் தோன்றி தலைகுனியவைக்கும் வாசகங்கள் இவைதான் “ஏழுகோடி தமிழ்மக்கள்தான் எமது பலம்”. நடேசன் மட்டுமல்ல ஈழப்போரின் கடைசி இரண்டு நாட்களில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் ‘நம்மிடம்’ இருந்து நல்ல செய்தி வரும் எனும் நம்பிக்கையில்தான் தங்கள் இறுதிநாள் வரை இருந்திருப்பார்கள்.

ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக நாம் இருந்திருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். உண்மையில் நாம் போரை வெறுக்கவில்லை, தோல்வியைத்தான் வெறுத்தோம். மனசாட்சியோடு சொல்லுங்கள், இதே ஒன்றரை லட்சம் மக்கள் சிங்களர்களால் கொல்லப்பட்ட ஒரு போரில், புலிகள் யாழ்பாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கைப்பற்றும் நிலையில் இருந்திருந்தால் நாம் போர் நிறுத்தம் கோரியிருப்போமா? ஆகப்பெரும்பாலான தமிழ்தேசிய தலைவர்கள் நம்மை பிரபாகரனின் ரசிகனாக இருக்க மட்டுமே தயார்படுத்தினார்கள். இந்த தயாரிப்பால் நமக்கு பொதுமக்கள் இரண்டாம்பட்சமானார்கள்.

போரின் இறுதி நாட்களில் எப்படியாவது பிரபாகரன் பிழைத்தால் போதும் என்பதுதான் அனேகரது எதிர்பார்ப்பாக இருந்தது. இதனை ஈழமக்கள் மீதான அக்கறைக் குறைவு என பொருள் கொள்ளமுடியாது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஈழ ஆதரவு தலைவர்கள் எல்லோரும் பிரபாகரனும் புலிகளும்தான் ஈழம் எனும் அடிப்படையில் மட்டுமே பேசினார்கள். புலிகளின் போர்திறனும் பிரபாகரனின் ஆற்றலும் மட்டுமே ஆகப்பெரும்பாலான தமிழீழ ஆதரவு கூட்டங்களில் பேசப்பட்டன. இந்த பேச்சுக்கள் புலிகள் வெல்லவே முடியாதவர்கள் எனும் இறுமாப்பை பலரின் மனதில் விதைத்திருந்தது. புலிகள் மாதக்கணக்கில் பின்நகர்ந்துகொண்டிருந்த போதும் பிரபாகரனிடம் ஏதோ பெரிய திட்டமிருப்பதாக உறுதியாக நம்பிக்கொண்டிருந்த பலரை எனக்குத் தெரியும். எனவே உலகத்தமிழர்களிடையே விதைக்கப்பட்ட இந்த நம்பிக்கையை காப்பற்றுவதற்காகவேனும் புலிகள் களமாடவேண்டிய நிர்பந்தம் உருவானது. இந்தியாவுக்கான போரை நாங்கள் நடத்தினோம் என கோத்தபயா சொன்னது முழு உண்மையென்றால் நம் (தமிழர்களின்) நம்பிக்கைக்கான போரை புலிகள் நடத்தினார்கள் என்பது பாதி உண்மை.

பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் எனும் வெகுமக்களின் வேண்டுதல் அவருக்கு எள்முனையளவும் உதவவில்லை. இன்னும் வெளிப்படையாக் சொல்வதானால் அவருக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ எனும் சந்தேகத்தைக்கூட அந்த வேண்டுதல் தின்று செரித்துவிட்டு ‘தம்பி வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்’ என சமாதானம் அடையவைத்தது. இந்த வேண்டுதல் தமது விருப்பங்களை சம்பவங்களைபோல கற்பனை செய்து பலரை பேசவைத்தது. இறுதி நாட்களில் பிரபாகரன் எத்தகைய மனோநிலையில் இருந்தார் என்பதைக்கூட நாம் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் நிராதரவாக விடப்பட்டார். அவரது இறுதி விருப்பங்களும் முயற்சிகளும் வரலாற்றின் பார்வையில் இருந்து முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது.

சார்லஸ் ஆண்டனி கொல்லப்பட்டதாக் ஒரு புகைப்படம் வெளியானது, அவர் போரில் வீரச்சாவடைந்தார் என தமிழ்தேசிய தலைவர்கள் சொன்னார்கள். சிங்கள ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு (பல பற்கள் பிடுங்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தி சொன்னது) கொல்லப்பட்டதாக ஒரு பிரபல புலனாய்வு இதழ் செய்தி வெளியிட்டது (ஜூவி என நினைவு). வீரச்சாவடைந்தார் எனும் செய்தி நமக்கு ஓரளவு திருப்தி தருவதாக இருந்தது, ஆகவே அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் எனும் கோணத்தில் இருந்த செய்தி கண்டுகொள்ளப்படவில்லை. துவாரகா கொல்லப்பட்டதாக சொல்லி ஒரு புகைப்படம் வெளியானது, அது துவாரகா இல்லை இசைப்பிரியா என நெடுமாறன் சொன்னார் (அந்த தொனி, நல்லவேளை அது துவாரகா இல்லை என்பதாக இருந்தது). அவ்வளவுதான், துவாரகா என்னவானார் எனும் ஐயமே எழாமல் அந்த செய்தி ஓரம்கட்டப்பட்டது. பாலச்சந்திரன் கொல்லப்பட்ட படம் வெளியாகி மூன்றாண்டுகள் அது கவனிக்கப்படவேயில்லை. அவருக்காக நம்மை கண்ணீர் சிந்த வைத்தது சேனல்4 எனும் இங்கிலாந்து வணிக ஊடகம், அந்த வேலையைக்கூட செய்யவியலாதவர்களாகத்தான் நமது ஈழ ஆதரவு தலைவர்கள் இருக்கிறார்கள்.

இன்றுவரை மதிவதனிக்கு என்னவானது என கவலைப்பட இங்கு யாருமில்லை. பொட்டம்மானுக்கு என்னவானது என யோசிக்க ஆளில்லை. புலிகளின் முக்கியமான தலைவர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சரணடைந்து சிங்கள் ராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டதாக் உறுதியான தகவல் வந்தது. இங்கே எந்த சத்தமும் கேட்டதாக தெரியவில்லை. கைது செய்யப்பட்ட புலித் தலைவர்கள் குறித்து விவரம் சொல்லத் தயார் என சிங்கள அமைச்சர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னால் அறிவித்தார், அதையும் கேட்டுப்பெற நாதியில்லை. தமிழ்செல்வனின் மனைவி இன்றுவரை கருணாவின் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்தி வந்தது, அந்த செய்திக்கும் அதே கதிதான். பணிரெண்டாயிரத்துக்கும் அதிகமான சரணடைந்த போராளிகளின் எதிர்காலத்திற்காக இயங்கவும் ஆளில்லாமல், கனடாவில் ஐந்து நட்சத்திர தரத்தில் படோடாபமாக நடந்த நாடுகடந்த தமிழீழ அரசின் கூட்டத்தை கண்டிக்கவும் ஆளில்லாமல் திக்கற்று நிற்கிறது தமிழினம்.

ஈழத்தை தமது பிரதான கொள்கையாக கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்களைக்கொண்ட தமிழகத்தில்தான் மேற்கூறிய புறக்கணிப்புக்கள் நடக்கின்றன. இந்த லட்சணத்தில் ஈழப்பிரச்சனையில் சர்வதேச சமூகம் தமது விழிகளை மூடிக்கொண்டிருக்கிறது என நாம் குறைபட்டுக்கொள்கிறோம். நாம் நம்ப மறுக்கிற மற்றும் கண்டுகொள்ள விரும்பாத பல பிரச்சனைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரபாகரன் சாகவில்லை எனும் தீர்மானகரமான வேண்டுதல் காரணியாக இருக்கிறது. அவர் சரணடைந்திருக்க முடியாது எனும் நம்பிக்கைதான் சரணடைந்த பிற போராளிகளைப் பற்றிய நமது அலட்சியத்துக்கு அடிப்படை.

பிரபாகரன் மீதான இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையும் ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கு ஒரு முக்கியமான காரணம். ஈழத்தை வென்றெடுக்க எந்த ஆக்கபூர்வமான யோசனையும் இல்லாதவர்கள்தான் பிரபாகரன் மீண்டும் வருவார் என நம்பியாகவேண்டியவர்களாக இருக்கிறார்கள். பிரபாகரன் மீண்டும் வந்து போரிடுவார் என சொல்வது, இதில் நான் செய்ய எதுவுமேயில்லை எனும் சோம்பேறித்தனத்தின் ஒப்புதல் வாக்குமூலம். என்ன நடந்தது எனும் உண்மையை அறிய முயலாமல் அவர் சரணடைந்திருக்க மாட்டார் என சாதிப்பது, தன் விருப்பத்தை சம்பவமாக கற்பனை செய்துகொள்ளும் மனநோய்.

நாம் பேச மறுக்கிற அல்லது சிந்திக்க மறுக்கிற விடயங்கள்:தான் நம் எதிரிகளுக்கு ஆயுதமாக இருக்கிறது. பாலச்சந்திரன் கொல்லப்பட்ட புகைப்படத்தைக்காட்டி நாம் பரிதாபத்தை தேடிக்கொண்டிருந்த சமயத்தில், புலிகளால் கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்ட சிறார்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என ஈ.வெ.கி.ச இளங்கோவன் ஒரு கூட்டத்தில் கேட்டார்.. இளங்கோவனது தகுதியும் யோக்கியதையும் ஒருபக்கம் இருக்கட்டும், அந்த கேள்வி நாம் பதில் சொல்ல வேண்டியதா இல்லையா? தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களைவிட எங்கள் நாட்டு முகாம்கள் சிறப்பாக இருக்கின்றன என இலங்கை அரசு சொன்னது. இதைக் கேட்டபோது, ஒன்று நம் மீது நமக்கு கோபம் வந்திருக்க வேண்டும் இல்லை நம் அரசின்மீது கோபம் வந்திருக்க வேண்டும். வந்ததா? போர்குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை புலிகளையும் குற்றம் சாட்டியது. நாம் அந்த பகுதிகளை மட்டும் மறைத்துகொண்டு அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நடவடிக்கையை கோரினோம். ஆனால் உலகின் பார்வைக்கு புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களும்தான் சென்று சேர்ந்தது.

பதில் சொல்ல மறுக்கும் அல்லது காதால் கேட்கவே மறுக்கும் கேள்விகளால்தான் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். விமர்சனங்களை எதிர்கொள்வதும், கடந்தகாலத்தில் நிகழ்ந்த தவறுகளை ஒத்துக்கொள்வதும்தான் விடுதலையை விரும்பும் மனிதர்களுக்கான முக்கியமான தகுதி. நியாயமான காரணங்கள் சொல்ல முடிகிற ராஜீவ் கொலைக்கான பழியை அமெரிக்கா மீது சுமத்துவதும் நியாயமான காரணத்தைக் கேட்கவேண்டிய (மாத்தையா போன்றோருக்கு விதிக்கப்பட்ட) கொலைகளுக்கு நாமே காரணம் கற்பிப்பதுமான பயந்தாங்கொள்ளித்தனமும் வெட்டிவீராப்பும்தான் நமது பெரிய பலவீனம்.

வெறுமனே ஆராதனை செய்து அந்தத் தலைவனின் குடும்பத்தை அநாதையாக சாகவிடுவதைவிட தவறுகளை சுட்டிக்காட்டுவதும் ஒப்புக்கொள்வதும் எந்தவகையிலும் இழிவானதல்ல. ஒரு காயத்தை மீண்டும் கீறிவிடுவது நிச்சயம் வலி நிறைந்த செயலே.. ஆனால் அது சிலசமயங்களில் மிகவும் அவசியமானதாகிறது. ஆகவே, தமிழீழம் தொடர்பான நம்பிக்கைகளை மீளாய்வு செய்யுங்கள் என தமிழ்தேசிய குழுமங்களில் உள்ள நண்பர்களைக் கோருகிறேன். விமர்சனம் செய்யும் நபராக அல்ல, 2009ஆம் ஆண்டுவரை உங்களையொத்த சிந்தனை கொண்டிருந்த ஒருவனாக..

மேற்சொன்ன கருத்துக்களுடன் ஒரு சதவிகிதம் ஒத்துப்போனாலும் அது குறித்து நீங்கள் கவலைப்பட்டாக வேண்டும். ஏனெனில் நமக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு சதவிகித காரணத்தைக்கூட பரிசீலித்து சரிசெய்தாக வேண்டிய அளவுக்கு மோசமானது.

Advertisements

“ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம் -3.” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. மிக நுணுக்கமாக அவதானித்து எழுதியிருக்கிறீர்கள் . நீங்க சொன்ன கூட்டங்கள் ஒரு சில கூட்டத்திற்கு ஊரிலே நின்றப்போ பலர் திரண்டு போனப்போ நண்பர்களோடு நானும் பார்க்க போயிருக்கிறேன். சரியாக ஒரு மத கூட்டத்தில் வந்து இருப்பது மாதிரியே இருந்தது .பிரபாகரன் கடவுள், ஈழம் அந்த மதத்தின் மத புத்தகம். எல்லோரும் மத கூட்டத்தில் மத போதையில் இருப்பது போலவே இவர்களும் இருந்தார்கள். அங்கேயிருந்தவங்களில் சிலர் ரஜனி சாரே சொல்லிட்டாரே இவ்வளவு காலமாக உன்னாலே புலிகைளை வெல்ல முடியல்ல என்றால் உன்னாலே முடியவே முடியாது.நீ (சிங்கல ராணுவம்) தோல்வியை ஒப்பிகிட்டு திரும்பி போக வேண்டியது தானே என்று ரஜனிகாந் நடிகர் சொன்னதை சொல்லி பெருமைபட்டார்கள்.

    இந்த கட்டுரையில் நீங்க சொன்ன முக்கியமா உண்மை ஒன்றை செல்லியிருங்கிங்க. தமிழகத்திலே உள்ள ஈழ பற்றாளர்கள் அல்லது ஈழ விரும்பிகள் எனப்படுவோர் போரை வெறுக்கவில்லை. புலிகள் நடத்திய போரை நேசித்தார்கள். இலங்கையில் தொடர்ந்து புலிகள் போர் நடக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அந்த போரை கிரிகட் விளையாட்டு போட்டி மாதிரியே மிகவும் இரசித்தார்கள்.அந்த போரில் புலிகள் தான் வெல்ல வேண்டும் .புலிகளின் வெற்றிக்காக எவ்வளவு ஈழ தமிழங்களும் கொல்லபடலாம் ,அதாவது தங்க உயிரை தியாகம் செய்யலாம்.தமிழ் விதவைகள் தமிழ் அனாதைகள் தமிழ் ஊனமுற்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் தாரளமாக உருவாகலாம்.ஆனால் புலிககளுக்கு வெற்றி கிடைக்காம போனபோதே அவங்களுக்கு போர் நிறுத்தம் என்று ஒன்று தேவைபட்டது.

    நிறுத்தம் தேவைபட்டது தமிழகம் தவிர்ந்த உல்லா ஊடகங்களிலும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s