ஆயத்த ஆடைகள்- இழப்பவர் யார்? பெறுபவர் யார்?


சில நாட்களுக்கு முன்னால் எங்கள் தொழிற்சாலையில் நடந்த மூன்றாம் தரப்பு ஆய்வொன்றில் ஃபினிஷிங் பணியாளர்களுக்கு இடம் போதுமானதாக இல்லை என எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பு: அன்றைக்கு அத்துறைப் பணியாளர்களில் 40 சதவிகிதம் பேர் சற்றே தொலைவிலிருக்கும் எங்களது துணி கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்கள்.

சென்ற வாரத்தில் எனது சக பணியாளர் ஒருவர் தனது மகளுக்கு அடிக்கடி உடல் நலமில்லாது போவதால் மந்திரிப்பதற்காக பொம்மனஹள்ளியில் இருக்கும் தர்காவுக்கு தனது மனைவி மகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

குறிப்பு: அவர் சம்பளம் 8500. அவர் குடியிருக்கும் பகுதிக்கும் செல்லும் தர்கா இருக்கும் பகுதிக்கும் அடிக்கொரு பேருந்திருக்கிறது.

இரு நாட்களுக்கு முன்னால் தலா 500 விலையில் மூன்று ஜீன்ஸ் கால்சட்டைகள் வாங்கினேன். அவை ஒப்பந்தத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டதால் ஸ்டாக் லாட் விற்பனைக்கு அனுப்பப்பட்டவை.

குறிப்பு: இந்தியாவின் உயர்தர பிராண்டாக கருதப்படும் அந்த கால்சட்டை ஒன்றின் விற்பனை விலை 3499. விற்ற நிறுவனம் தவிர்த்து கூடுதலாக இரண்டு நபர்களுக்கு லாபமளித்த பிறகு அவை 500 ரூபாய்க்கு என்னிடம் விற்கப்பட்டிருக்கின்றன.

மேற்சொன்ன தகவல்கள் தொடரவிருக்கும் கட்டுரையை புரிந்துகொள்ள உதவியாக இருக்கலாம் என்பதால் முதலில் குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் விலையுயர்ந்த ஆடைகளை மட்டுமே வாங்குபவர் எனில் அவை தரமானவைதான் என நம்புகிறீர்களா? அல்லது அவை நியாயமான கூலியை கொடுத்து உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என கருதுகிறீர்களா?

நான் 13 ஆண்டுகளுக்கு முன்னால் ஆயத்த ஆடைத்துறைக்கு வந்தபோது, முதலில் வேலை செய்தது ஆண்களுக்கான ஏற்றுமதி சட்டைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில். முழுமையாக குளிரூட்டப்பட்ட அந்த ஆலையில் எல்லா ஊழியருக்கும் ESI, PF பிடித்தம் செய்யப்பட்டது. பாதுகாப்பு விதிகள் கறாராக பின்பற்றப்பட்டன. எந்திரங்களுக்கிடையே போதுமான இடைவெளி இருந்தது. சரியாக 11 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் ஆண்கள் சட்டைகளுக்கான ஒப்பந்தங்களை கையாளத் துவங்கியிருக்கிறேன். ஆனால் இப்போது நிலைமை முற்றாக மாறியிருக்கிறது. எங்கள் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் ஒப்பந்தப் பணியார்கள், அவர்களுக்கு ESI PF கிடையாது. தையல் எந்திரங்கள் மிக நெருக்கமாக பொருத்தப்பட்டிருக்கின்றன, வெடிக்கும் சாத்தியமுள்ள நீராவி பாய்லர்கள் அவற்றினிடையே இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவசரகால வழி மட்டுமல்ல சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் ஏதேனும் ஒரு பொருள் அடைத்துக்கொண்டிருக்கிறது.

//தையற்கூடத்தில், தொழிலாளர்கள் கைகள் அதிகமாக துணியில் படும். ஆகவே ஆடையில் வியர்வை ஒட்டுவதை தவிர்க்க முதலில் குறிப்பிட்ட ஆலை குளிரூட்டப்பட்டிருந்தது. அங்கே வரும் இறக்குமதி நிறுவன ஆய்வாளர்கள் ஹாங்காங் கிளையை சேர்ந்தவர்கள். ஒப்பீட்டளவில் நேர்மையானவர்கள், குறைந்தபட்ச பாதுகாப்பான பணிச்சூழலையேனும் எதிர்பார்ப்பவர்கள். ஒருமுறை வந்த ஆய்வாளர் தீயணைக்கும் கருவியை தூக்கிப்பார்த்து, இவை தூக்க கடினமானவையாக இருக்கிறது ஆகவே இங்கே அதிக எண்ணிக்கையில் பணியிலுள்ள பெண்களும் சுலபமாக கையாளுமளவு எடை குறைவான கருவிகளை வையுங்கள் என குறிப்பு எழுதினார். ஆனால் தீயணைப்பானின் எடையை பார்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு கிடையாது. அப்படிப்பட்ட நபர்களுக்கு பயந்தே அந்த ஆலையில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக கடைபிடிக்கப்பட்டன. //

ஒரு தொழிலாளியின் எதிர்கால சேமிப்பு, நிகழ்காலத்துக்கான பணிப்பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் இவற்றை இல்லாமல் செய்வதன் வாயிலாக சேமிக்கப்படும் பணமே நாம் வாங்கும் மலிவான ஆடைகளுக்கான அடிப்படை. தொன்னூறுகளின் இறுதியில் ஒரு ஏற்றுமதி ஆடைக்கு தரப்பட்ட விலை இப்போது கிடையாது. எந்த ஒரு மூலப்பொருளும் விலை குறையாதபோது இந்த விலைக்குறைப்பு தொழிலாளர்களுக்கான நிதியை குறைப்பதன் வாயிலாகவே சாத்தியமாகிறது. சப் காண்ட்ராக்ட் எனும் பெயரில் இந்த உழைப்புச்சுரண்டல் எல்லா தொழிலிலும் வியாப்பித்திருக்கிறது.

ஆடை உற்பத்தியின் சகல படிநிலையிலும் செலவுக்குறைப்புக்கான ஒரே ஆதாரமாக தொழிலாளர்களின் ஊதியமும் அவர்களுக்கான பிற வசதிகளும்தான் இருக்கின்றன. சில பெங்களூர் நிறுவனங்கள் தங்கள் ஆடைகளை வங்காள தேசத்தில் உற்பத்தி செய்கின்றன. காரணம், அங்கே ஒரு தொழிலாளியின் சராசரி ஊதியம் 2100 ரூபாய் (பெங்களூரில் 5500). மும்பை தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தை மூடியதற்கான காரணமாக சொன்னது ஒன்றை மட்டுமே “மும்பையில் ஒரு டெய்லருக்கு 9000 சம்பளம் தரவேண்டியிருக்கிறது”. அங்கே பிளாட்பார்மில் வசிக்கவே அந்த சம்பளம் போதாது என்பதைப் பற்றி அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. (ஆயத்த ஆடைத்துறையின் ஊதியம் தொடர்பாக அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்- முடிந்தால்)

ஒருவேளை நீங்கள் பேண்டலூன் போன்ற விலையுயர்ந்த ஆடைகளை மட்டும் வாங்குபவர் எனில் இந்த பதிவு உங்களுக்கே மிகவும் அவசியமானது. அதிக விலையுடைய பொருட்கள் தரமானவை எனும் நினைப்பு ஆகப்பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஆடை விசயத்தில் அந்த கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். 1500 ரூபாய் விற்பனை விலையுடைய லீ கூப்பர் சட்டை மற்றும் 800 ரூபாய் விலையுடைய ஜான் மில்லர் சட்டை இவ்விரு ஆடைகளுக்குமான விலை வேறுபாடு சற்றேறக்குறைய இரண்டு மடங்கு. ஆனால் இவற்றின் துணி விலையில் இருக்கும் வேறுபாடு அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கலாம். இந்த இரண்டு வகையான சட்டைகளும் ஒரே தளத்தில் ஒரே குழுவினரால் தைக்கப்படுகிறது. இரண்டு ஆடைகளுக்கான தையற்கூலியும் சற்றேறக்குறைய சமம்தான். அப்படியெனில் நீங்கள் கூடுதலாக கொடுக்கும் பணம் எதற்காக? மனதை தேற்றிக்கொள்ளுங்கள்… அது வெறும் லேபிளுக்கான தொகை மட்டுமே. கீழே தரப்பட்டுள்ள ஒரு ஒப்பீட்டை கவனியுங்கள்.

 

 

பிராண்ட்

விற்பனை விலை

உற்பத்திக்கான கூலி

 

லீ கூப்பர்

1499 ரூபாய்

90 முதல் 105 ரூபாய்

20 ரூபாய்க்கான சலவை, 21 ரூபாய்க்கான எம்ராய்டரி மற்றும் சில கூடுதல் ஆடை பாகங்கள் உண்டு.

இண்டிகோ நேஷன்

1299  மற்றும் 1399

56 முதல் 61 ரூபாய்

சட்டைப் பையின் உள்ளே கூடுதலாக ஒரு காஜா மற்றும் இரண்டு தையல், பேக்கிங் பொருட்கள் விலை சற்று அதிகம். சலவை கிடையாது.

ஜான் மில்லர்

799

55 ரூபாய்

குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. சாதாரண சட்டைகள்.

 

மேலேயுள்ள தரவுகள் ஒரு உதாரணம். இதில் எல்லா ஆடைகளுக்குமான தையற்கூலி கிட்ட்த்தட்ட ஒன்றாக இருப்பதை உணரலாம். ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஒரு சட்டை உருவாக குறைந்தபட்சம் அறுபதுபேர் வேலை செய்தாகவேண்டும். வாங்கப்படும் பொருட்கள் தவிர்த்து ஒரு சட்டைக்கு 45 முதல் 60 ரூபாய்வரை கூலி பெறப்படுகிறது. ஆக நீங்கள் வாங்கும் 1500 ரூபாய் சட்டையின் உற்பத்திக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகையை கொடுக்கிறீர்கள் (நூல்கண்டு வாங்குவது முதல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சரியான முகவரிக்கு சென்று சேர்ப்பதுவரையான வேலையை செய்யும் என்னையும் சேர்த்து). கருணைக்கு நன்றி. ஆனால் அந்த சட்டையின் ஒட்டுமொத்த உற்பத்தி விலையான 300 ரூபாயை 60 நாளுக்கு முதலீடாக போட்ட கடமையை மட்டும் செய்த எனது முதலாளிக்கு நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் லாபமாக தருகிறீர்கள். அதனை விற்பனை செய்யும் ஆதித்ய பிர்லா மற்றும் ஃபியூச்சர் குழுமத்தின் லாபம் குறிப்பிட்டு சொல்ல இயலாதது.

// அலுவலக நிர்வாகம் மற்றும் உற்பத்தியில் உண்டாகும் இழப்பு ஆகியவற்றுக்கும் தனியே தொகை நிர்ணயிக்கப்பட்டு அது விலையில் சேர்க்கப்படும். ஆகவே இவை லாபத்தில் இருந்து செய்யவேண்டிய செலவல்ல//

வேலையில்லாத தருணங்களில் சில உள்ளூர் தயாரிப்பு ஆடைகளை உற்பத்தி செய்வோம். ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் சராசரியாக 325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அந்த சட்டைகளுக்கும் இதே உற்பத்திக் கூலிதான் தரப்படுகிறது (உணவகங்களில் தேசையை பார்சர் செய்வது மாதிரி அவை சுருட்டிய வடிவில்பேக்கிங் செய்யப்படும்.. ஒரே வேறுபாடு அது மட்டும்தான்). ஆகவே பிளாட்பார்மில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் பகட்டான ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் ஒரு உற்பத்தி தொழிற்சாலை ஊழியனாக எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு சாலையோர விற்பனை சட்டைக்கு உண்டான அலட்சியத்துடனோ அல்லது உயர்தர !! ஆடையுற்பத்திக்கான அக்கறையோடோ வேலைசெய்வது ஊழியரின் விருப்பத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. இப்போதிருக்கும் வேலை அழுத்தத்தில் அக்கறையோடு வேலை செய்வதற்கான சாத்தியம் பூஜ்ஜியமே.

ஆடைகளை கொள்முதல் செய்கிற நிறுவனங்களுக்கு தெரியாமல் இவை நடப்பதாக நீங்கள் எண்ணிவிட வேண்டாம். அவர்களுக்கு தெரிந்தேதான் இவையெல்லாம் நடக்கின்றன. படு குப்பையான ஆடைகளை, உலகின் அதிசிறந்த மூன்றாம் தரப்பு ஆய்வக ஊழியர்களின் ஆய்வுக்குப் பிறகு எவ்வித சிக்கலுமின்றி ஏற்றுமதி செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஆடைகளை ஆய்வு செய்து ஒப்புதல் தரும் பணியிலுள்ள என் கல்லூரி நண்பர், முறையான விதிகளின்படி ஆய்வு செய்தால் ஒரு பெட்டியைக்கூட ஏற்றுமதி செய்ய இயலாது என்கிறார்.  ஐரோப்பிய இறக்குமதி நிறுவனங்களுக்காக எட்டாண்டுகாலம் பணியாற்றிய (என்னுடைய) அனுபவத்தில் பார்த்தால் அக்கருத்து 90% சதவிகிதம் உண்மையே. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆய்வக சோதனையில் தேறாத மூன்று ஆடை ஒப்பந்தங்களுக்கு ஒற்றை மின்னஞ்சல் வேண்டுகோளில் ஏற்றுமதி ஒப்புதல் பெற்றிருக்கிறோம். ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பாலியஸ்டர் ஆடைகளில் பெருபாலானவை எலக்ட்ரோ ஸ்டாடிக் பிஹேவியர் சோதனையில் தேறுவதில்லை, ஆனால் ஏற்றுமதி எக்காலத்திலும் தடைபட்டதில்லை. தரமான ஆடை உற்பத்திக்கான கட்டமைப்பு, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யும் ஏராளமான சான்றிதழ்கள் இப்போது ஏற்றுமதிக்கு கட்டாயமாகியிருக்கிறது (FWF, OKOTEX, SA8000 -அவற்றுள் சில). ஆனால் அந்த சான்றிதழ்கள் வெறும் சம்பிரதாயமே, அவற்றை நோகாமல் பெற்றுத்தர பல முகவர்கள் இருக்கிறார்கள்.

வாடிக்கையாளர் மத்தியில் ஆடைகளை வாங்கிக்குவிக்கும் மனோபாவத்தை வளர்க்க மட்டுமே ஆடை விற்பனை நிறுவனங்கள் மெனக்கெடுகின்றன. சரியான நேரத்துக்கு ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்படுவதுதான் இன்றைக்கு அவர்களது இலக்கு. குறைவான ஊதியம், நெருக்கடியான மற்றும் பாதுகாப்பற்ற பணியிடம், அதீத பணிச்சுமை ஆகியவை ஆடைகளின் தரத்தை குறைத்துவிடும் என்பது எல்லா இறக்குமதியாளர்களுக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் தரமில்லாத ஆடை விற்றதற்காக கோபம்கொள்ளாமல் அடுத்த ஆடை வாங்கி ஸ்டைல் அப்டேட் செய்துகொள்ளும் நமது புத்திசாலித்தனத்தையும் காசாக்கிக்கொள்ளவே அவர்கள் தரக்குறைவை மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள்.

Advertisements

“ஆயத்த ஆடைகள்- இழப்பவர் யார்? பெறுபவர் யார்?” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. ஒரு ஆடையை சந்தைப்படுத்துவதற்கு அதன் உற்பத்தி செலவை காட்டிலும் அதிகமான தொகையை இன்றய நாட்களில் செலவழிக்க வேண்டியுள்ளது …! உங்களுக்கு தெரியுமென்றே நினைக்கின்றேன் … சில நிறுவனங்கள் அறுபது முதல் எழுபது சதவீதம் வரைகூட செலவு செய்கின்றார்கள் …!

  இந்தியா இப்பொழுது நுகர்வோர் சந்தையாக மாறி உள்ளது . தலை முதல் பாதம் வரை பிராண்டோடு தான் வாழ்கை …!

  விளம்பரங்களை பார்த்து பொருட்கள் வாங்குபவர்கள் இருக்கும் வரை இது தொடரும் ….!

 2. திரு சுப்பு,
  ஆடையின் உற்பத்தி செலவைக்காட்டிலும் கூடுதலாக அதனை சந்தைப்படுத்த செலவாகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதனை விளக்கமாக சொல்லுமளவுக்கு வியாபார நுணுக்கம் அறிந்தவனல்ல.

  இந்த பதிவின் நோக்கம் ஒரு ஆடையின் விலையில் அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு கிடைக்கும் பங்கைப் பற்றி விளக்குவதும் அந்த ஆடை உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் எவ்வாறு தொழிலாளியை சுரண்டுகின்றன என்பதை விளக்குவதும்தான். கூடுதலாக அதன் தரம் பற்றிய மாயைகளை சுட்டிக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன், அவ்வளவுதான்.

 3. நன்றி வில்லவன் ஜி …!
  ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனித்தீர்களா …? பெரும்பாலான தொழிலாளர்கள் அவர்களுக்கான சுகாதார வசதியையோ .,தொழில் சார்ந்த பாதுகாப்பை பற்றியோ அக்கறைப்படுவதில்லை … எங்கு எந்த சூழலில் வேண்டுமென்றாலும் வேலை செய்ய தயார் …ஆனால் இவ்வளவு சம்பளம் வேண்டும் . அதில்தான் அவர்களின் அக்கறை குவிந்துள்ளது …..! இதை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன .பணமே பிரதானமாக போய்விட்டது இருவருக்குமே …!

  //அதனை விளக்கமாக சொல்லுமளவுக்கு வியாபார நுணுக்கம் அறிந்தவனல்ல.//

  எனக்கும் துல்லியமாக தெரியவில்லை . ஆனால் நிச்சயமாக ஒரு பொருளின் உற்பத்தி விலைக்கு நிகரான தொகையை (குறைந்தபட்சம் ) பெரும்பாலான நிறுவனங்கள் செலவழித்துக்கொண்டிருக்கின்றன .இன்றைய நிலையில் உற்பத்தியை காட்டிலும் , சந்தைப்படுத்துதல் மிகவும் சிரமமான , காஸ்ட்லியான ஒரு விசயமாகிவிட்டது .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s