ஆயத்த ஆடைகள் – ஒப்பந்தப் பணிகளும் தொழிலாளர் பற்றாக்குறையும் (2)


மூன்றாண்டுகளுக்கு முன்னால் திருப்பூர் நகருக்கு சென்றிருக்கிறீர்களா? சென்றிருந்தால், குறிப்பிட்டு சொல்லமுடியாத ஒரு பரபரப்பை நகரின் சகல திசைகளிலும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அந்த இயல்புக்கு மாறான வேகம்தான் அந்த நகரின் வளர்ச்சிக்கான ஆதாரம். தினசரி 50 விழுக்காடு கூடுதல் உழைப்பு என்பது அங்கே கட்டாயம். உங்களது சுற்றத்தில் யாரேனும் ஒருவர் அல்லது பலர் திருப்பூருக்கு சென்று வசதியாக வாழ்வதை பார்த்திருக்கக்கூடும் (வசதி என்பதை உள்ளூரில் இருந்ததைக்காட்டிலும் வசதியாக என்று மட்டும் பொருள் கொள்ளவும்). குறைவான ஊதியம் கிடைக்கும் வேலையில் கூடுதலான உழைப்பைக் கொடுப்பதன் மூலம் பெறப்பட்ட வசதி அது.

மும்பையிலும் சென்னையிலும் இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த பெருமளவுக்கான ஆடைத் தொழிற்சாலைகள் இப்போது இல்லை. பெங்களூரின் பெரிய ஆடைநிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மாண்டியா, ஹசன், தொட்பெளாபூர், தும்கூர் போன்ற சிறுநகரங்களுக்கு இடம் மாற்றுகின்றன. மராட்டிய எல்லையில் இருக்கும் நகரத்துக்கு தொழிற்சாலையை மாற்றிய நிறுவனங்களும் உண்டு. உற்பத்தி தொலைவில் இருந்தால் பொருட்களை நகர்த்தும் செலவு கணிசமாக அதிகரிக்கும், ஆனாலும் பெரிய நிறுவனங்கள் தங்கள் புதிய தொழிற்சாலைகளை சிறு நகரங்களுக்கு மாற்றுகின்றன.

வங்கதேசத்தில் 36 லட்சம் மக்கள் ஆயத்த ஆடைத்துறையில் பணியாற்றுகிறார்கள். அந்நாட்டின் ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு மட்டும் 78 சதவிகிதம். இத்தனைக்கும் அந்த நாடு ஆடையுற்பத்திக்கான சகல பொருட்களையும் இறக்குமதி செய்தாகவேண்டும். இந்த அசுர வளர்ச்சி இருபத்தைந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. அப்படியெனில் ஆடையுற்பத்திக்கேற்ற ஏதோ ஒரு சிறப்பியல்பு அங்கே இருந்தாகவேண்டும் இல்லையா? அது என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? மிகக்குறைவான ஊதியம் எனும் தகுதி மட்டுமே அதற்கான அடிப்படை. ஒரு வங்கதேச தொழிலாளி ஒரு மணி நேரத்துக்கு 0.15 அமெரிக்க டாலருக்கு இணையான தொகையை ஊதியமாக பெறுகிறார். இதே வேலையை செய்ய ஒரு துருக்கி நாட்டு ஊழியருக்கு 7.3 டாலர்கள் ஊதியம் தரவேண்டும். (2010 ம் ஆண்டின் தரவுகள், ஊதியம் இதர சலுகைகளையும் உள்ளடக்கியது). பிற நாட்டு ஊதிய விகிதம் கீழே,

ஜெர்மனி – 25 $

தென் கொரியா : 5 $

இந்தியா : 0.35 $

தாய்லாந்து: 1.75 $

ஆயத்த ஆடைத்துறையின் வளர்ச்சியை கவனித்தால் அது ஒரு நாடோடியைப்போல இடம் மாறுவது புரியும். அத்துறைக்கான தேவை மலிவான் ஊழியர்கள் மட்டுமே. அதற்காக எந்த இடத்துக்கும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கின்றன பெரிய நிறுவனங்கள்.

தொழிலாளர்களுக்கான நிதியை குறைப்பதற்கான ஒரு உத்தியாகவே ஒப்பந்தத் தொழிலாளர் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. எல்லா தொழிலாளிக்கும் ESI, PF கொடுக்கும் ஒரு நிறுவனத்தைக்கூட நான் திருப்பூரில் பார்த்ததில்லை. மிகச்சிலரை நிறுவனத்தின் தொழிலாளியாக வைத்துக்கொண்டு மற்ற எல்லோரும் சில கான்ட்ராக்டர்களின் கீழ் பணியாற்ற வைக்கப்படுகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர் முறையில் நிறுவனத்துக்கும் தொழிலாளிக்கும் யாதொரு பந்தமும் இல்லை.

கோவை பயனீயர் மில்லில் நான் பயிற்சியில் இருந்தபோது அங்கே பணியாற்றிய பலர் தினக்கூலிகள், அவர்களில் பெரும்பாலானவர்கள் அருகேயிருக்கும் ராதாகிருஷ்ணா மில்லில் நிரந்தரத் தொழிலாளியாக இருந்தவர்கள். ராதாகிருஷ்ணா மில் மூடப்பட்டதால் வேறுவழியில்லாமல் அவர்கள் தினக்கூலியானார்கள். திருப்பூரில் கதை கொஞ்சம் வித்தியாசமானது. அங்கே கூடுதல் ஊதியத்துக்கான ஒரு வழியாக இந்த ஒப்பந்தத் தொழில்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய சூழலில் திருப்பூர் உற்பத்தி மலிவானதாக இருந்ததால் பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைத்தன. அதே நேரத்தில் தஞ்சை மதுரை வட்டாரங்களில் விவசாயம் லாபமற்ற தொழிலானதால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வேலைக்காக அங்கே இடம் பெயர்ந்தார்கள்.

எதேச்சையான இந்த இரட்டை வாய்ப்பு திருப்பூரில் ஒப்பந்த தொழில் முறையை கேள்விகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள வைத்தது. நம்மால் கற்பனைகூட செய்யவியலாத கடுமுழைப்பைக் கோரும் திருப்பூரின் பணிச்சூழலுக்கு காரணங்கள் மூன்று. அங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பை பறிகொடுத்தவர்கள், ஆகவே திருப்பூர் வாழ்வு அவர்களுக்கு ஒரு நிர்பந்தம். இரண்டாம் காரணி, மற்ற ஊர்களைக் காட்டிலும் திருப்பூரில் வாழ்கைக்கான செலவினங்கள் அதிகம். ஒரு சராசரி வாழ்கைக்கே நாம் அங்கே அதிகம் செலவிட்டாக வேண்டும். ஆகவே கூடுதல் உழைப்பைத் தருவதன் வாயிலாக மட்டுமே நீங்கள் அங்கே வாழ்வதற்கான ஊதியத்தைப்பெற இயலும். மூன்றாம் காரணி, முதலிரண்டு காரணிகளால் அதீத உழைப்பு இங்கே ஒரு வாழ்க்கைமுறையாகிவிட்டிருக்கிறது. உங்களுக்கு அதிக பணம் அவசியமில்லாவிட்டாலும் இங்கே பணியாற்ற வேண்டுமென்றால் இந்த வாழ்க்கை முறைக்கு உங்களை பொருத்திக்கொண்டாக வேண்டும்.

ஒப்பந்த தொழிலின் மூலம் ஒரு முதலாளி தனது தொழிலாளிகளின் எதிர்காலம் மற்றும் உடல்நலனுக்காக நிறுவனத்தின் சார்பாக செய்யவேண்டிய செலவில் இருந்து தப்பிக்கிறார். ஒரு வேலைக்கான கூலியை பேரம் பேசி கொடுக்கும் வாய்ப்பை பெறுகிறார். தொழிலாளிகள் தங்கள் உரிமையை கேட்பதற்கான அனேக வழிகளை அடைக்கிறார். ஆகவே முதலாளிகளை இது பெரிதும் வசீகரிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், கேரளாவில் இருந்து ஆட்களை (பெருமளவில் பெண்கள்) கூட்டிவரும் தரகர்கள் திருப்பூரெங்கும் இருந்தார்கள். தமிழக தொழிலாளர்களுக்கும் கேரள தொழிலாளர்களுக்கும் பெரிய சம்பள வேறுபாடு இல்லை. ஆனால் கேரள பெண்களை கடுமையாக வேலை வாங்க இயலும் (தொடர்ந்து 48 மணிநேரம்கூட வேலை இருக்கும். பண்டிகை விடுமுறையிலும் வேலை வைக்க முடியும். குடும்பத்தோடு வசிக்காதவர்கள் என்பதால் கேட்க ஆளிருக்காது) ஆகவே அப்போது கேரள பெண்களுக்கு பெரிய வரவேற்பு அங்கே இருந்தது.

இப்போது அந்த மவுசு வடமாநில தொழிலாளர்களுக்கு திரும்பியிருக்கிறது. பாதி சம்பளத்துக்கு வேலைக்கு வரத் தயாராயிருக்கும் அவர்களை கொண்டுவரும் புரோக்கர்களின் காலம் இது. அடுத்து, இரண்டு வேளை சோற்றுக்கு எந்த நாட்டிலாவது ஆட்கள் கிடைத்தால் வடமாநில தொழிலாளர்கள் வீதியில் வீசியெறியப்படுவார்கள் (சென்னை சில்க்ஸ் குழுமம் நேபாளத்தில் இருந்து தொழிலாளர்களை கொண்டுவந்திருக்கிறது).

நான்காயிரம் ஊசிகளுக்கு நூல் கோக்கும் வேலையை உங்களால் யோசிக்க மட்டுமாவது இயலுமா? இதையொத்த ஒரு வேலை நெசவாலைகளில் வழக்கமான பணி. இரண்டு கிலோ எடையுடைய கத்திரியால் உங்களால் எவ்வளவு நேரம் துணி வெட்ட முடியும்? இது ஆடைத்துறையில் நாள் முழுக்க செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று. முகத்துக்கு கீழும் முதுகுக்கு பின்னும் நீராவியை கக்கும் அயர்ன் பாக்ஸ்கள் இடையே நின்றுகொண்டு உங்களால் எத்தனை சட்டைகளுக்கு இஸ்திரி போட இயலும்? இங்கே ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு சட்டைக்கு இஸ்திரி போட்டாக வேண்டும். ஒரு நூற்பாலையின் பேரிரைச்சலிலோ அல்லது சாயப்பட்டறையின் ரசாயன நெடியிலோ நம்மால் வேலைசெய்யமட்டுமல்ல வெறுமனே ஒரு மணிநேரம் நிற்கக்கூட முடியாது.

இத்தகைய கடுமையான மனித உழைப்பைக் கொண்டுதான் நாம் அணியும் ஆடைகள் உற்பத்தியாகின்றன. இந்த மனித உழைப்பை எப்படி இன்னும் மலிவாக பெற முடியும் என்பதில் மட்டும்தான் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. மற்றபடி எந்த நவீன மாற்றமும் கடந்த பதினைந்தாண்டுகளில் இங்கே வந்துவிடவில்லை. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதோ ஒரு இடத்தில் பெருந்தொகையான மக்களை இந்த தொழில் சக்கையைப்போல தூர எறிந்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்கிறது. 

ஜவுளித்துறை என்றில்லை, நாம் வாழ்வின் தவிர்க்கவியலாத எல்லா பொருட்களும் அயல் பணிகள் வாயிலாகவோ அல்லது உப ஒப்பந்தங்கள் மூலமோதான் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றன. அரசாங்கத்தால் நடத்தப்படும் பல நிறுவனங்களிலும் ஒப்பந்தப் பணியாளர் முறை நடைமுறைக்கு வந்தாயிற்று. முன்பணம் கொடுத்தால் மாத்திரை மருந்தை தயாரித்து கொடுக்கும் தொழிற்சாலைகள்கூட பாண்டிச்சேரியில் இருக்கின்றன. மனிதாபிமானமற்ற இந்த வியாபார உலகம் வெறுமனே தொழிலாளிக்கு மட்டும் எதிரானதில்லை.

புற்றுநோயை உண்டாக்கவல்ல குழந்தைகள் பவுடரை தயாரித்த ஜான்சன் &ஜான்சன், சுற்றுச்சூழலுக்கு பாதகமான ஒரு லட்சம் தவேரா வாகனங்களை தயாரித்த ஜெனரல் மோட்டார்ஸ், ஆறு குழந்தைகளைக் கொன்று, 80000 சிறார்களின் உடல்நலனை பாதிப்படைய வைத்த சீனாவின் பால் பவுடர் நிறுவனம் போன்ற என்னற்ற உதாரணங்கள் சொல்வது யாதெனில், முதலாளித்துவத்துக்கு தொழிலாளி மட்டுமல்ல வாடிக்கையாளனும் மயிருக்கு சமானமே. ஆகவே இன்றைய உற்பத்தி முறையை எதிர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும் இருக்கிறது. சுரண்டலுக்கு எதிரான தொழிலாளியின் குரல் எங்கேனும் கேட்டால் நினைவில் வையுங்கள்  “அவனது வெற்றியில்தான் நமது நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது”.

Advertisements

“ஆயத்த ஆடைகள் – ஒப்பந்தப் பணிகளும் தொழிலாளர் பற்றாக்குறையும் (2)” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. திருப்பூரில் வேலை பார்ப்பவன் என்ற முறையில் சொல்கின்றேன் . உங்களது கருத்து அப்பட்டமான உண்மை …!

    இப்டித்தான் ஒரு வேலையை செய்யவேண்டும் என்ற வரைமுறை ஏதுமில்லாமல் எப்படியாவது வேலையை செய்துமுடிக்க வேண்டும் என்பதே இங்கு நடைமுறை .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s