நடராஜ சோழன் அருளிய முள்ளிவாய்க்கால் முற்றம் !


ங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோயிலையும் கட்டித் தொலைத்ததால் தமிழ்தேசிய புரவலர் நடராஜனுக்கு ஒரு கட்டிடம் கட்டி தன் பெயரை நிலை நாட்டியாக வேண்டிய அவசியம் உருவாகிறது. மற்றபடி அவர் தஞ்சைக்கு செய்ய வேண்டிய பணிகளை செவ்வனே ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறார். தஞ்சையின் ரியல் எஸ்டேட் விலையை சகட்டு மேனிக்கு ஏற்றியது முதல் மார்க்கெட் போன நடிகைகளை தஞ்சாவூருக்கு பொங்கல் சமயத்தில் அழைத்து வருவது வரை நடராஜன் செய்த பணிகளை ராஜராஜனே வந்தாலும் செய்ய முடியாது.

தமிழ்தேசிய புரவலர் நடராசன்

தமிழ்தேசிய புரவலர் நடராசன்

அந்த நடராஜன் நடத்தும் விழாவை ஒரு தஞ்சாவூர்காரனான நான் புறந்தள்ளுவது பெரும் வரலாற்றுப் பிழையாகி விடுமாகையால் எப்பாடுபட்டாவது சென்று விடுவது என தீர்மானித்தேன். மேலும் விழாவுக்கு அழைக்கப்படாதவர்கள் துரோகிகள் மட்டுமே என ஆனந்த விகடனில் பழ நெடுமாறன் சொல்லியிருக்கிறார் (ஆனால் கூட்டத்தில் அதை மறுத்தார்). அழைக்கப்படாதவன் துரோகியென்றால் வராதவனும் துரோகியாகி விடுவானே எனும் அச்சமும் சேர்ந்து கொள்ள, செல்ல வேண்டுமெனும் தீர்மானம் வலுப் பெற்றது. இந்த முடிவுக்கு வந்த வேளையிலேயே முற்றத்துக்கு முடிவு கட்ட மம்மி முடிவெடுத்த செய்திகள் வர ஆரம்பித்தபடியால், ஜெயாவுக்கு எதிராக நெடுமாறன் சீற்றம் காட்டும் ஒரு அரிய காட்சியைக் காணும் வாய்ப்பு கிட்டலாம் எனும் சாத்தியங்கள் என மனதில் தோன்றின. வாழ் நாளுக்குள் அப்படியான ஒரு காட்சியை காணும் ஆவலும் இணைந்து கொள்ள, தஞ்சைக்கு போவது ஒரு தற்காலிக லட்சியமாகவே மாறிவிட்டது.

விளார் சாலை தஞ்சையின் மறுகோடியில் இருப்பதால் நகரத்து வீதிகளில் முற்றத்து விளம்பரங்களை பார்த்தபடியே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஆச்சர்யம், எந்த போஸ்டரிலும் பிரபாகரனைக் காணவில்லை. அனேக சுவரொட்டிகளில் நெடுமாறனும் நடராஜனும் மட்டுமே காட்சி தந்தார்கள். மணியரசன் மட்டும் பாலச்சந்திரன் படத்துடன் பேனர் வைத்திருந்தார். அண்ணனுக்கு விமரிசையாக கல்யாணம் செய்து வைத்த களைப்பில் இருப்பதால் நாம் தமிழர் தம்பிகளின் விளம்பரங்கள் பெரிய அளவில் தட்டுப்படவில்லை. இதையெல்லாம் கவனித்தபடியே சென்றதில் முற்றம் வந்து விட்டது.

போஸ்டர்கள்

தஞ்சை நகரை அலங்கரித்த போஸ்டர்கள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் தோற்றம் பற்றிய பதிவை இரண்டொரு நாளில் எழுதுகிறேன். இன்று திறப்புவிழா என்பதால் இப்போது விழா அரங்க நிகழ்வுகளை மட்டும் பார்க்கலாம். முதலில் தேனிசை செல்லப்பாவின் பாடல் நிகழ்ச்சி, அதில் அவர் மூன்று முறை உலகை சுற்றி வந்த செய்தியை மூன்று முறையும், தன்னை சிறப்பாக வரவேற்ற மலேசிய மற்றும் கனடா நாட்டு தமிழர்கள் பெயரை நான்கு முறையும், தலைவர் நெடுமாறன் எனும் வார்த்தையை குறிப்பெடுக்க இயலாத அளவுக்கு பல முறையும் குறிப்பிட்டார். அதன் பிறகு அவர் சொன்ன விடயம்தான் செல்லப்பாவைப் பற்றி இங்கே பேச வைக்கிறது. அதாவது நெடுமாறன் இன்னமும் பிரபாகரனுடன் பேசி வருவதாகவும் விரைவில் அவர் வெளியே வருவார் எனவும் உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிட்டார். இந்த இரகசியத்தை தேனிசை செல்லப்பாவுக்கு சொன்ன நெடுமாறன், மற்ற யாருக்கும் சொல்லவேயில்லை. என்ன செய்ய, எல்லா தமிழர்களுக்குமான தலைவனின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தமிழனாக தேனிசை செல்லப்பா மட்டும்தான் இருக்கிறார் போல. மற்றவர்களுக்கு அந்த பாக்கியம் இல்லை.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாகிட்டத்தட்ட ஏழு மணிநேரம் நடந்த இந்த நிகழ்வின் சாரத்தை மூன்று வரிகளில் அடக்கிவிடலாம், (சில விதிவிலக்குகள் உண்டு)

 • வள்ளல் நடராஜன் வாழ்க.
 • அய்யகோ இந்த அரசு எங்களை இப்படி துன்புறுத்துகிறதே.
 • ராஜபக்சேவுக்கு துணைபோன காங்கிரசை தண்டிப்போம்.

அதேபோல வழக்கமான தமிழ்தேசிய கூட்டங்களில் காணப்படும் மூன்று சங்கதிகள் இங்கே அத்தனை அதிகமாக இங்கே இல்லை,

 • துரோகி கருணாநிதி எனும் வசைபாடல் கணிசமாக குறைந்திருக்கிறது.
 • பிரபாகரன் மீண்டும் வருவார் எனும் வாக்குறுதி எந்த பேச்சாளரிடம் இருந்தும் வரவில்லை.
 • இந்தியாவே எங்கள் மீது கருணை காட்டும் எனும் மன்றாடல் காசி ஆனந்தனிடம் இருந்து மட்டும்தான் வந்தது. மற்ற பலரும் மகிந்தாவுக்கு இணையான குற்றவாளி இந்தியா என குறிப்பிட்டார்கள்.

ஆகவே தமிழ்தேசிய பாகவதர்கள் தங்கள் பாடல்கள் சலிப்பூட்டாமல் இருக்க சில மாறுதல்களை செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இடம் கொடுத்த மகராசன்,
எங்கள் ம.நடராசன்.
அவன் எல்லாம் வல்ல இளவரசன் – செல்லப்பாவின் பாடல்.

கருத்து முதல் வாதமாக இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை பொருள் முதல் வாதமாக மாற்றியவர் எங்கள் நடராசன் –மருத்துவர் தாயப்பன்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாமேலேயுள்ளவை சில மாதிரிகள். அனேகமாக எல்லா பேச்சாளர்களும் நடராசனை தாஜா செய்தே பேச்சை ஆரம்பித்தார்கள். இந்த முற்றத்தின் தொண்ணுறு விழுக்காடு செலவை நடராசனே ஏற்றார் என்றார் காசி ஆனந்தன். நாங்கள் இந்தியாவை நேற்றும் நம்பினோம், இன்றும் நம்புகிறோம் நாளையும் நம்புவோம் மற்றும் ஈழம் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எப்போதுமே இருக்கும் எனும் செய்தியை 8436-வது முறையாக சொன்னார் காசி.

அடுத்ததாக வந்தார் முனைவர் ம.நடராசன். சூத்திரதாரியாகப்பட்டவர் சிறந்த சொற்பொழிவாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? ஆதலால் அவரது பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. சிலரது நிர்ப்பந்தத்தால் இரண்டு நாட்கள் முன்னதாகவே இந்த முற்றம் திறக்கப்பட்டதாக தெரிவித்தார் நடராசன்.

“என்னை இனி தூக்கில் போட்டாலும் கவலையில்லை” என்ற அளவுக்கு வீராவேசமாகப் பேசிய நடராசன், மேற்படி நிர்ப்பந்தம் யாரால் தரப்பட்டது, என்ன வகையான நிர்ப்பந்தம் என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்.

அவரை தொடர்ந்து பேசிய நெடுமாறனது பேச்சு வழக்கத்தை விட கொஞ்சம் கடுமையானதாக இருந்தது. அவரது வழக்கமான வாசகங்களான “புலிகள் இந்தியாவின் எதிரியில்லை. நாம் புலிகளை ஒடுக்கியதால் தமிழக கடல் பரப்புக்கு சீனாவின் அச்சுறுத்தல் வரும்” ஆகியவை இப்போது இல்லை. இரண்டு பேரும் தாங்கள் நான்கு நாளாக பெரும் துயரப்பட்டதாகவும், அப்படி நாங்கள் செய்த பாவம்தான் என்ன எனும் புலம்பல்தான் வந்ததே தவிர யார் அப்படி செய்தது எனும் பேச்சு கடைசி வரை இருவரிடமிருந்தும் வரவேயில்லை. ஜெயலலிதா எவ்வளவுதான் ஊமைக்குத்தாக குத்தினாலும் அதனை நேரடியாக சுட்டிக் காட்டாமல் இருக்கும் பெருந்தன்மைதான் இருவரையும் இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அந்தச் சூழலிலும் ஜெயாவின் மனம் காயப்படக் கூடாதென்று மத்திய அரசின் உளவுத் துறை கொடுத்த தவறான தகவலுக்கு தமிழ்நாடு அரசு தேவையற்ற முக்கியத்துவம் கொடுப்பதாக மட்டும் சொன்னார் ம.நடராசன்.

மணியரசன்

மணியரசன்

பிற்பாடு வந்த மணியரசனுக்கு, அவர் மார்க்சையும் பெரியாரையும் கசடறக் கற்று தனக்கேயுரித்தான ஒரு தனி பாதையில் போகும் தலைவர் என அறிமுகம் தரப்பட்டது. அவர்தான் விழாவின் திருப்பு முனையான “இந்தியா எங்கள் பேச்சை மதிக்கா விட்டால் தமிழகம் தனியாகப் போக நேரும்” எனும் எச்சரிக்கை வாக்கியத்தை உதிர்த்தார். அவருக்குப் பிறகு வந்த தஞ்சை.இராமமூர்த்தி, வெள்ளையன் மற்றும் மகேந்திரன் ஆகியோரது உரைகளில் குறிப்பிடும்படி ஏதுமில்லை என்பதால், விரைவில் ஈழம் பெற்றுத் தரவிருக்கும் பாஜகவின் பொன்னார் அவர்களுடைய பேச்சுக்கு வரலாம்.

மொத்த நிகழ்விலும் ஒரு ஆராய்ச்சியாளனுக்கு உரிய நேர்த்தியுடன் பேசியது பொன்.ராதா மட்டுமே. மணியரசனின் பேச்சைப் பற்றி குறிப்பிட்ட அவர் “காங்கிரசின் தவறுக்கு இந்தியாவில் இருந்து பிரிவோம் என சொல்வதா? தமிழ்நாடு இந்தியாவின் நெடிய கலாச்சாரத்தின் ஒரு அங்கம்’’ என்று உணர்ச்சி பொங்க சொல்லி விட்டு கூட்டத்தைப் பார்த்தார் பொன்னார், மொத்த கும்பலிலும் இரண்டு பேர் மட்டும் கைதட்டல் மட்டும் கேட்டது. அது அனேகமாக அவரது ஓட்டுனராகவும் தனி உதவியாளராகவும் இருக்கக் கூடும்.

இந்தியா சார்பாக ஒரு பியூன்கூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றார் பொன்.ராதா. ஆனால் அது தமிழக பாஜக தலைவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடு என தெரிவித்து விட்டது பாஜக மேலிடம். அனேகமாக பாஜக ஆட்சிக்கு வரும் வரை அல்லது மகிந்தவிடம் போய் ஒரு மைனர் செயின் வாங்கி வரும்வரை பொன்னார் இந்த நிலைப்பாட்டில் இருப்பார் என நம்பலாம் (நெக்லசெல்லாம் அகில இந்திய தலைவருக்கு மட்டுமே).

பொன். இராதாகிருஷ்ணன்

பொன். இராதாகிருஷ்ணன்

இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சம்மான உரிமைகள் கிடைக்க இந்தியா பாடுபட வேண்டும். அதற்குப் பிறகும் அவர்களுக்கு கொடுமைகள் நடந்தால் வங்காள தேசத்தை இந்தியா உருவாக்கியது போல ஈழத்தை பிரிக்க வேண்டுமென்று குரலை உயர்த்தி உறுமினார். ம்ஹூம். இதற்கும் கூட்டத்தில் எந்த சலசலப்பும் இல்லை.

கடைசியாக, “நான் அரசியல் பேச விரும்பவில்லை” என்று சொல்லிக் கொண்டே, “ஒரு வலுவான பிரதமர் இல்லாத்துதான் ஈழத் தமிழர் பிரச்சனைக்குக் காரணம்” என்று மறைமுகமாக மோடிக்கு மார்க்கெட்டிங் செய்து, அந்த குறையும் விரைவில் தீரும் என அருள்வாக்கு சொல்லி விட்டு விடைபெற்றார் பொன்னார்.

நட்சத்திரப் பேச்சாளர் வைகோ பேச ஆரம்பிக்கையில் மணி பதினொன்று. அந்த அர்த்த ராத்திரியிலும் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா வழியாக உலகம் சுற்ற அவர் தயங்கவில்லை. அதுகூட பரவாயில்லை, ஜெயா எக்ஸ்பிரஸ்சில் இனி ஆர்.ஏ.சி கூட கிடைக்காது என்பது தெரிந்து போனதால் அவர் அதிகம் விமர்சனம் செய்தது ஜெயலலிதாவைத்தான். கிட்டத்தட்ட ஜெயாவை ராஜபக்சேவுடன் ஒப்பிட்டு நடராஜன் கண்களுக்கு மரண பயத்தைக் காட்டினார் வைகோ. அந்த ஒளி வெள்ளத்திலும் நடராசனின் முகம் இருண்டு கிடந்தது.

வைகோ

வைகோ

முன்னதாக வைகோவை பிறவிப் போராளி என வர்ணித்திருந்தார் பொன்னார். வாஜ்பாய் அரசுக்கு வைகோ நற்சான்றிதழ் கொடுத்ததற்கான நன்றிக் கடன் அது. பதிலுக்கு வைகோ தனக்கு ஏதாவது மொய் செய்வார் என்று எதிர்பார்த்து வைகோவின் வாயைப் பார்த்துக்கொண்டிருந்த பொன்.ராதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழர்களை மதிக்காமல் இனி எந்த ஆளும்கட்சி செயல்பட்டாலும் அதனால் இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என சொல்லி வைகோ உரையை முடித்தார். சமீபகாலமாக அவர் இணையத்தை அதிகம் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பது அவரது உரையின் வாயிலாக தெரிந்தது.

விழாவின் பிரதான நோக்கமான நடராஜனை வாழ்த்திப் பாடுவது என்பது ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்றாலும் அதனை மதுரை ஆதீனம் அளவுக்கான நேர்த்தியுடன் யாரும் செய்யவில்லை. இன்னுமொரு பிரதான நோக்கமான தமிழ் தேசிய வாக்கு வங்கியை பாஜக பக்கம் கொண்டுசெல்வது என்பது பரிதாபமான தோல்வியை சந்தித்திருக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. நெடுமாறன் தனது இந்துத்துவ பாசத்தை வெளிப்படையாக 6-ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டினார். (பாஜகவை அழைத்தது பற்றிய கேள்வியை கோபமாக தவிர்த்தார்). ஆனால் அதற்கான ஆதரவு அவருக்கு மற்றவர்களிடமிருந்து கிடைத்த மாதிரி தெரியவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா

ஈழப்பிரச்சினையில் இதுவரை வெளிப்படையாக வாஜ்பாயை பாராட்டி வந்த வைகோ, அந்தக் கதையை இங்கே கடை விரிக்கவில்லை. இந்த அரங்கில் பாஜகவையும் சேர்த்து எச்சரிக்கும் நிலையைத்தான் அவர் எடுக்க வேண்டியிருந்தது.

சில செய்தித்துளிகள் :

 • ஒரு குழந்தையைப் பெற்ற தாயைப்போன்ற பரவசத்தில் இருக்கிறோம் என்றார் நடராஜன்.
 • போரின் கடைசி இரண்டு நாட்களில் மட்டும் ஒன்னரை லட்சம்பேர் கொல்லப்பட்டதாகக் கூறிய நெடுமாறன், இது ஒரு விழா அல்ல, துயரத்தை காட்டும் நிகழ்வு என்றார். ஆனால் பந்தலின் பகட்டு அப்படி எந்த துயரத்தையும் காட்டவில்லை. அரங்க ஏற்பாட்டை கவனிக்கையில் விழாவுக்கான செலவு மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு குறையாமல் இருக்கும் என தெரிந்தது.
 • முற்றம் அமைப்பதற்கான செலவில் 90 சதவிகித பணத்தை நடராசன் கொடுத்ததாகச் சொன்னால் காசி ஆனந்தன். உலகில் உள்ள எல்லா தமிழர்களிடமும் நிதி பெற்று இந்த முற்றம் கட்டப்படுவதாக சொன்னார் மணியரசன். “அம்மையப்பன்தான் உலகம்” என்ற பொருளில் உலகம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும்.
 • ஒரு முதியவருக்கு இப்படி நாலு நாளாக மன உளைச்சல் தருகிறீர்களே என புலம்பினார் பெ.மணியரசன். மண்ணை வாரி தூற்றாத்துதான் பாக்கி.
 • நெடுமாறனின் தந்தையார் இதே சூரசம்ஹாரத்தன்று பழமுதிர்சோலை முருகன் கோயிலை திறந்ததாகவும் இப்போது நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றம் திறந்திருப்பதாகவும் வைகோ குறிப்பிட்டார்.
 • நடராஜன் எதிர்பார்த்த இரண்டாம் ராஜராஜன் எனும் பட்டத்தை தஞ்சை ராமமூர்த்தி அவருக்கு வழங்கினார், ஆனால் இறுதி நேர திருப்பமாக அப்பட்டம் நெடுமாறனுக்கும் தரப்பட்டு விட்டது.
 • திடலுக்கு வெளியே வைக்கப்பட்ட பெரும்பாலான பேனர்கள் நடராசனை வாழ்த்தி மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று கள்ளர் குல முன்னேற்றக் கழகத்தால் வைக்கப்பட்டிருந்தது. புதிய பார்வை வாசகர் வட்டம் எனும் அடையாளத்தோடு ஒரு வேன் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது

“யாயும் யாயும் யாராகியரோ” எனும் குறுந்தொகைப் பாடலைக் குறிப்பிட்டு அதற்கான ஒரு புது விளக்கத்தோடு பொன்.ராதாகிருஷ்ணனை வரவேற்றார் தாயப்பன். அந்த வரிகள் கீழே,

“நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..
உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு,
உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி
இருந்தாலும் நாம் இருவரும் தமிழன் எனும் வகையில் ஒன்று கலந்தோமே”.

ஒரே நேரத்தில் தமிழையும் பெரியாரையும் கொச்சைப்படுத்த தாயப்பன் பயன்படுத்திய அந்தப் பாடலின் பொருளை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ளுதல் நல்லது.

உன் தாய் யாரோ என் தாய் யாரோ, உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் எந்த வகையிலும் உறவில்லை, நீ வந்த வழியும் நான் வந்த வழியும் நமக்கு தெரியாது (வழி –குலம்). ஆயினும் செம்புலப்பெயநீர் போல நம் இரு அன்புடைய நெஞ்சங்களும் கலந்தனவே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s