பாரத ரத்னா டெண்டுல்கர் – நீ போகயிலே… போகயிலே.


(சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றபோது எழுதப்பட்ட கட்டுரை. பல்வேறு காரணங்களால் வெளியிட இயலவில்லை. காலம் கடந்துவிட்டதென்றாலும் எழுதியவற்றை ஆவணப்படுத்திவைக்கும் நோக்கில் மட்டும் இதனைப் பதிவேற்றுகிறேன்.)

சச்சின், கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். அதற்காக பார்க்கும் இடமெல்லாம் நீ போகையிலே.. போகையிலே எனும் பாடல் ஒலிப்பது போலவே இருக்கிறது. பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் பிரியாவிடை தருகின்றன. அன்றைய சன் செய்தி சேனலில் பின்ணணியில் சோக கீதம் ஒலிக்க பிரபலங்கள் அய்யோ சச்சின் இல்லாத கிரிக்கெட்டை எப்படி பார்ப்பேன் என கண்ணை கசக்குகிறார்கள்.

சச்சின் அழுதபடியே விடைபெறுவது என்பது புரிந்துகொள்ளக்கூடியதே, 24 ஆண்டுகாலமாக தான் இருந்த நாற்காலியை காலி செய்யும் ஒருவருக்கு கண்ணீர் வருவது நியாயம்தான். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து முன்பே விலகி, இப்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விடைபெற்றிருக்கிறார். சமீப வருடங்களில் தீவிர கிரிக்கெட் ஆர்வலர்கள்கூட அவரது பங்களிப்பை எந்த ஆட்டத்திலும் எதிர்பார்த்ததில்லை. ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர் எனும் பெயரை டோனி, கோலி ஆகியோர் தட்டிச்சென்று பல நாளாகிறது (என் கிரிக்கெட் அறிவின்படி அவருக்கு அப்படியொரு பெயர் இருந்ததாகவும் நினைவில்லை).

அவர் இப்போதே கௌரவமாக ஓய்வை அறிவிப்பது நல்லது என அவரது பல சகாக்கள் வெளிப்படையாக விமர்சனம் வைக்க ஆரம்பித்து அனேகமாக இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அவரது ரசிகர்களே எப்பத்தான் ஓய்வு பெறுவார் என ஆவலோடு இருந்தார்கள் என்பதுதான் நிஜம். இந்த சூழ்நிலையில் அவரது ஓய்வை மிக இயல்பாக எடுத்துக்கொள்வதுதான் நியாயம். அதைவிட்டுவிட்டு அய்யோ போறியே என எல்லா மட்டங்களிலும் புலம்புவது காட்சிக்கு ஏற்ற உணர்ச்சி வெளிப்பாடாக இல்லை. ஆயினும் ஏன் சச்சினின் ஓய்வு ஏன் இத்தனை பெரிய செய்தியாக்கப்படுகிறது?

காரணம் டெண்டுல்கர் எனும் உருவத்தை ஒரு விளம்பர சின்னமாக நிறுத்த செய்யப்பட்ட செலவு. அவர் மோசமான ஃபார்மில் பலமுறை இருந்தபோதும் அணியை விட்டு விலக்கப்படாதிருக்க அவர் பங்கேற்ற விளம்பர ஒப்பந்தங்களே காரணம். நூறுகோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். அணியில் இல்லாவிட்டால் ஒரு விளம்பரக்காரனாக அவரால் ஆகக்கூடியது ஏதுமில்லை.

அவர் மீது மிக அதிக விளம்பர முதலீடுகள் செய்யப்பட்டுவிட்டன. அந்த முதலீட்டுக்கு உரிய லாபம் கிடைக்கவே, அவரது விளையாட்டுத்திறனின் குறைந்த சமயத்தில் அவர் ஓய்வு பெறுவாரா மாட்டாரா எனும் விவாதங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டு அவரது பிம்பம் உயிரோடு வைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ ஓராண்டுகாலம் சச்சின் நூறாவது சென்சுரியை அடிப்பாரா எனும் கூடுதல் பரபரப்பு செய்திகளில் வலிந்து திணிக்கப்பட்டது. அவரது நூறாவது சென்சுரிக்காகவே அவர் அணியில் வைக்கப்பட்டிருந்ததாக நாம் கருதியாக வேண்டும்.

எங்குமில்லாத அதிசயமாக சச்சின் ஓய்வை அவரே முடிவு செய்யட்டும் என கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. காரணம் சரத் பவாருக்கும் டெண்டுல்கருக்கும் உள்ள நெருக்கம், மகராஷ்டிர கிரிக்கெட் சங்கத்துக்கு உள்ள செல்வாக்கு மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள செல்வாக்கு ஆகியவையே. மேலும் அணியின் மோசமான ஆட்டம் காரணமாகவோ அல்லது வேறுவகையான ஊழல் புகார்கள் எழும்போதோ சச்சின் போன்றதொரு விமர்சனத்தைத் தாண்டிய கதாநாயகனை வைத்து கிரிக்கெட் ஆட்டத்தின் நற்பெயரை காப்பாற்ற முடியும்.

ரீவைட்டல் மாத்திரை விளம்பரத்துக்கு நீண்ட நாட்களாக வந்தவர் யுவராஜ் சிங். அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானவுடன் ரீவைட்டல் விளம்பரத்தில் இருந்து அவர் காணமல்போய் சல்மான்கான் அவ்விடத்துக்கு வந்துவிட்டார். சாலையோரம் உறங்கியவர்களை கார் ஏற்றிக் கொன்ற சல்மான்கானின் வரலாற்றைக் காட்டிலும் யுவராஜின் புற்றுநோய் ரீவைட்டல் விளம்பரத்துக்கு சிக்கலான இருக்கிறது. அதற்காக புற்றுநோயால் யுவராஜுக்கு நட்டம் என முடிவெடுக்க வேண்டாம், அதே யுவராஜ் அப்போது ஒரு தனியார் காப்பீட்டு நிறுவன விளம்பரத்தில் தோன்றி எதிர்பாராதது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என அறிவுரை சொன்னார்.

குழந்தைகள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என அறிவிக்கும் ஊட்டச்சத்து பான விளம்பரங்கள் தேர்வு சமயங்களில் நினைவாற்றலை அதிகரிக்கும் என ஆசைகாட்டும்.  அதுவரை புஷ்டியாக சிறார்களை நடிக்கவைக்கும் கம்பெனிகள் அப்போது மட்டும் கொஞ்சம் சோனியான மாணவன் பதில்களை சரியாக சொல்வதாக காட்டுவார்கள். பையன் சோப்ளாங்கியாக இருந்தாலும் பரவாயில்லை மார்க் வாங்கினால் போதும் என பெற்றோர் கருதும்போது பானங்கள் தங்கள் இலக்கையும் அருந்துபவனின் வடிவத்தையும் தயக்கமில்லாமல் மாற்றுகின்றன.

ஆக, ஒரு விளம்பரக்காரனின் தனிப்பட்ட வாழ்வு, அவனுக்கு தமது துறையில் இருக்கும் செல்வாக்கு என பல காரணிகள் அவனுக்கு வரும் விளம்பரங்களைத் தீர்மானிக்கின்றன. சில சந்தர்பங்களில் விளம்பரங்களின் நலனுக்காக ஒரு வீரனின் தனிப்பட்ட வாழ்வையும் துறைசார் செல்வாக்கையும் சிறப்பானதாக வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் விளம்பர கம்பெனிகளுக்கு உருவாகிறது. அதுதான் சச்சின் விடயத்தில் நடக்கிறது. யார் வம்புக்கும் போகாமல் தன் விளையாட்டை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பவர்தான் இந்தியாவின் ரோல்மாடலா? ஆனால் சச்சின் டெண்டுல்கரது சிறப்பியல்பாக அதுதான் அனேக விவாதங்களில் வைக்கப்படுகிறது.

இந்த புள்ளியில்தான் சச்சின் பாரத ரத்னாவுக்கு தகுதியுடையவராகிறார்.

பாரத ரத்னா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டாலும் அதனை பரித்துரைப்பது பிரதமர்தான். இந்திரா காந்திக்கும் ராஜீவ் கந்திக்கும் அவர்கள் பிரதமராக காலத்தில்தான் பாரத ரத்னா வழங்கப்பட்டது. ஆக அது அவர்கள் அவர்களுக்கே பரிந்துரைத்துக்கொண்ட விருது. இந்த ஒரு உதாரணமே பாரத ரத்னா விருது வழங்கப்படும் லட்சணத்தை நமக்கு உணர்த்தும். தமிழ்நாட்டிலும் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் தாமே விண்ணப்பிக்க வேண்டும், கலைமாமணிக்கும் இதே விதிதான். ஒருவன் தாமே தமது விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதே ஒரு மட்டமான விதி. அதில் கலைமாமணியை காலனாவுக்குக்கூட மதிக்காத நடிகர்களுக்கு விருதை அறிவித்துவிட்டு பிறகு அவர்களிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிய கொடுமைகளும் நடக்கும். ஆகவே எல்லா விருதுகளும் ஆள்வோரின் ஏதோ ஒரு தேவை கருதியே வழங்கப்படுகின்றன.

என்னுடைய கல்லூரி காலத்தில் வந்த பல்வேறு விளம்பரங்கள் உங்கள் மகன் இன்னொரு சச்சினாக வேண்டுமென்றால் என்பதாக இருந்தன. நம்முடைய அரசும் பாரத ரத்னா மூலம் அதைத்தான் சொல்கிறது “சச்சினாக இரு”. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதி, நாட்டின் எந்த பிரச்சனையையும் கண்டுகொள்ளாமல் உன் வேலையை மட்டும் பார், அதிகார வர்கத்துக்கு அடங்கியவனாக இரு… இதையெல்லாம் செய்ய முடிந்தால் நீங்களும் சச்சின்தான். அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவுக்குப் பின்னால் காங்கிரசின் குறுகிய லாப நோக்கங்கள் இருந்தாலும் அதன் பிரதான நோக்கம் நீங்களும் சச்சினாக இருங்கள் என வலியுறுத்துவதே. (இதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதி எனும் தகுதியை நீக்கினால் நீங்கள் அப்துல் கலாமாகிவிடலாம்).

டெண்டுல்கரது பாரத ரத்னா பற்றி விவாதிக்க இதற்குமேல் எதுவுமில்லை. ஆனால் நமது அரசுகளின் பாரபட்சமான விளையாட்டுப் பாசம் பற்றிய விவாதங்கள் பெரிதாக எழாதது ஆச்சர்யமாக இருக்கிறது. ஸ்னூக்கர் விளையாட்டரங்கம் கட்டவும், சர்வதேச செஸ் போட்டியை நடத்தவும் பணத்தை அள்ளியிறைக்கும் ஜெயாவின் கைகள் தடகளத்திற்கு என்று வரும்போது மட்டும் பிச்சைக்காரத்தனமானதாக மாறிவிடுகிறது. சென்ற ஆண்டு வந்த ஒரு அரசு அறிவிப்பு எட்டாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் மாவட்டந்தோறும் விளையாட்டுப் பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றது. இந்தப் பணம் ஒரு பயிற்சியாளனது சாப்பாட்டுத் தேவைக்குகூட போதுமானதல்ல. ஐரோப்பாவில் வீடு வாங்கிக் குடியேறிவிட்ட விஸ்வநாதன் ஆனந்துக்கு சென்னையில் வீடு கொடுத்து கவுரவிப்பதும் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி செங்கல் சூளையில் வேலைபார்ப்பதை கண்டுகொள்ளாதிருப்பதும் இங்கு மிகச் சாதாரண நிகழ்வு.

சுரேஷ் கல்மாடி கும்பல் தின்று கொழுக்க நடத்தப்பட்ட காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய தடகள வீரர்களுக்கு கெட்டுப்போன பழங்களால் செய்யப்பட்ட பழரசம் வழங்கப்பட்டது. உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி டிராபிக்கு பரிசுத் தொகை நான்கு கோடி, ஆசியக்கோப்பையை வென்ற ஹாக்கி அணிக்கு வழங்கப்பட்டது வெறும் இரண்டு லட்சம் (கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு ஆளுக்கு ஒரு லட்சம் என மாற்றப்பட்டது).

இத்தகைய மோசமான பாரபட்சத்துக்குப் பின்னிருக்கும் காரணி என்ன? இந்தியாவின் நீதித்துறை உள்ளிட்ட சகல துறைகளும் பணக்கார மற்றும் உயர் சாதிக்காரர்களுக்காகவே இயங்குகின்றன அல்லது அவர்களால் இயக்கப்படுகின்றன. கிரிக்கெட், டென்னிஸ், செஸ், ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுக்கள் அனேகமாக பணக்காரர்கள் மற்றும் உயர் சாதிக்காரர்கள் விளையாட்டாகவும் ஏனைய விளையாட்டுக்கள் சாதி மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு உரியதாகவும் இருக்கிறது. ஆகவே இந்திய நிர்வாகத்துறைக்கே உரிய பணக்கார மற்றும் உயர்சாதிப் பாசம்தான் விளையாட்டுத்துறையையும் இயக்குகிறது. அந்த பாசத்தின் ஒரு வெளிப்பாடுதான் சச்சினுக்கு கிடைத்திருக்கும் இந்த கௌரவம். இந்த பாரத ரத்தினத்தின் மினுமினுப்பில் ஆயிரக்கணக்கான சாமானிய விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி வெகுமக்கள் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s