முள்ளிவாய்க்கால் முற்றம் – ஒரு ஷேத்ர புராணம்.


(இந்த கட்டுரையை வெளியிட உத்தேசித்திருந்த தினத்தில்தான் முள்ளிவாய்க்கால் முற்றத்து சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. அப்போது கைவிடப்பட்ட பதிவை இப்போது வெளியிடுகிறேன், இதுவும் ஒரு ஆவணமாக்கும் முயற்சி மட்டுமே)

இருவாரத்துக்கு முன்னால் தஞ்சாவூர் சென்றிருந்தபோது, தஞ்சையின் குறிப்பிடத்தக்க அரசு ஒப்பந்தக்காரராக இருக்கும் ஒரு உறவினரை சந்திக்க நேர்ந்தது. முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு அழைப்பிதழ் வந்திருக்கு நீ போறியா என கேட்டார். அடுத்த அரைகிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் இன்னொருவரிடம் உங்களுக்கு அழைப்பிதழ் வந்திருக்கா என கேட்டேன், நமக்கெல்லாம் அவங்க அனுப்பமாட்டாங்க என்றார் அவர், சொன்னவர் புலிகளை ஆதரித்ததான குற்றச்சாட்டில் 9 மாதம் தே.பா சட்டத்தில் சிறைவைக்கப்பட்டவர். நல்லவர்களுக்கு அழகு சொல்லாமல் போவதுதான் என்பது வெளியே போவதற்கான பழமொழி என இதுவரை கருதியிருந்தேன், அதனை உள்ளே போவதற்கும் பொதுமைப்படுத்தினால் இரண்டாமவருக்கு அழைப்பிதழ் வராதது லாஜிக்கலாக சரியாக இருந்தது. ஆகவே அதுபற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை.

துரோகிகளைத்தவிர எல்லோரையும் அழைத்திருப்பதாக நெடுமாறன் ஆனந்தவிகடனில் சொல்லியிருந்தார், எனவே விழாவின் முன்ணணியில் வெறும் தியாகிகளாகள்தான் நிறைந்திருப்பார்கள் எனும் ஆவலில் அழைப்பிதழை வாசித்தேன். என் எண்ணம் பொய்க்கவில்லை, ஈழத்துக்காக சிறை சென்று செக்கிழுத்த பொன்.ராதாகிருஷ்ணன், வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன், நடராஜனின் அண்ணன் சாமிநாதன், வினாயகா மிஷன் வேந்தர் ஆகிய தியாகிகள்தான் முன்ணணியில் இருக்கிறார்கள். வி.ஐ.டி வேந்தருக்கு மேடை, முத்துக்குமார் தந்தைக்கு பத்தாயிரம் பணம்.. ஆஹா இதுவல்லவோ தியாகத்தை மதிக்கும் அரங்கு.

திறப்புவிழாவுக்கான நாள் நெருங்கிவிட்டதால் வேலைகள் முழுவீச்சில் நடப்பதாகவும் நடராசனும் நெடுமாறனும் அங்கேயே கிடையாய் கிடப்பதாகவும் கட்டுமானத்தில் பணியாற்றியவர்கள் சொன்னார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் அமையும் நிலத்து உரிமையாளர் கொடுத்த (அல்லது கொடுக்கவைத்த) நிலஅபகரிப்புப் புகார்தான் நடராஜனை சிறைக்கு அனுப்பியது. விளாரில் சசிகலா குடும்பமல்லாத ஒருவரிடம் நிலம் இருக்க முடியுமா எனும் ஆச்சர்யம் நீண்ட நாட்களாக இருந்தது. ஆகவே ஒரு பேரார்வத்தோடுதான் அன்று முற்றத்துக்கு சென்றிருந்தேன். பூச்சந்தை வழியே போகும் பழைய விளார்சாலை மிகவும் குறுகலானது. ஆனால் முற்றம் மிக விசாலமான புறவழிச்சாலையை ஒட்டி இருப்பதால் அதனை அடைவது இலகுவானதே.

அக்டோபர் 31ல் நான் அவ்விடத்துக்கு சென்றபோது, அங்கே இறுதிகட்டப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. தமிழ்மங்கை அமர்ந்திருக்கும் பீடத்தை சுற்றிப்பார்க்கும் போது அருகிலிருக்கும் அரங்கத்தில் இருந்து வெளிப்பட்டது சாட்சாத் நடராசனேதான். ஜிப்பா பைஜாமாவில் அப்பழுக்கற்ற வெள்ளையில் பாதுகாவல் ஏதுமின்றி நின்றுகொண்டிருந்தார். தமிழன் ஜிப்பா அணிவதா என அவசரப்பட்டு ஆவேசப்படாதீர்கள். இந்த முற்றத்துக்காக தான் ஓட்டிவந்த கார், போட்டிருக்கும் வாட்ச் மற்றும் மோதிரம் ஆகியவற்றை திடீர் திடீரென எடுத்து ஏலம்விட்டுவிடுவதால், ஒரு பாதுகாப்புக்காக சுலபத்தில் எடுத்துகொடுக்க முடியாத ஆடையை அவர் அணிந்திருக்கிறார் அவ்வளவுதான்.

கொஞ்சம் அருகே சென்று பார்க்கிறேன், பத்திரிக்கைப் புகைப்படங்களிலும் வீதிகளில் இருக்கும் பேனர்களிலும் பிரகாசமாக காட்சிதரும் அந்த முகம் கறுத்து களைத்திருந்தது. உடனே ஃபேஸ்புக் பாமரர்கள் அதெல்லாம் ஃபோட்டோஷாப் மாயாஜாலம் என்று எள்ளி நகையாடாதீர்கள். முற்றத்துக்காக மூன்றாண்டுகாலம் உழைத்த களைப்பு அது (ஜெயலலிதா கொடுத்த ஒரு மாத கட்டாய ஓய்வு நீங்கலாக).  நடராஜனை பார்த்தால் அறுபது வயதான மாதிரியா இருக்கிறது, புதுமாப்பிள்ளை மாதிரியல்லவா இருக்கிறது என்று சிவனுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் மதுரை ஆதீனமே ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். அந்த களைப்பிலும் அங்கே வந்திருந்த ஒரு புலம்பெயர் குடும்பத்துக்கு முற்றத்தை சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தார் நடராசன்.

முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சை புறவழிச்சாலையில் விளார் சாலை மேம்பாலத்தை ஒட்டியே அமைந்திருக்கிறது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் விசாலமான இரண்டு மண்டபங்கள், ஒரு நினைவு மேடை, ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள், ஒரு பூங்கா என எந்த வகையிலும் குறைவைக்காத நினைவிடம் அது என்பதில் சந்தேகமில்லை. ஒரு பாமரத்தனமான மதிப்பீட்டின்படியே அதற்கு ஆகியிருக்கும் செலவு ஐந்திலிருந்து ஆறு கோடி இருக்கலாம். மூன்று நாள் விழாவுக்கான செலவு குறித்த போலீஸ் மதிப்பீடு இரண்டு கோடி. மொத்தத்தில் ஏழு அல்லது எட்டுகோடி (அல்லது அதில் 90 விழுக்காடு) என்பது நடராசனின் திரண்ட சொத்துக்கு முன்னால் காக்கைக்கு சோறு வைப்பது போல மிக்ச் சாதாரணமானது. ஆனாலும் அந்த சாதாரண வேலையைகூட மிகவும் சிரத்தையோடு செய்திருக்கிறார் என்பதுதான் சிறப்பு. அவர் ஏனோதானோவென்று இருந்திருந்தால் இந்தநேரம் முற்றம் தெருமுக்கு பிள்ளையார் கோயிலைப்போல அல்லவா உருவாகியிருக்கும்.

இலங்கை அரசின் வதைமுகாம்களில் உள்ள முன்னாள் போராளிகளுக்கோ, தமிழக கியூ பிரான்ச் வதைமுகாம்களில் உள்ள ஈழ அகதிகளுக்கோ எதுவுமே செய்யாத, ஈழத்துக்கான எந்த போராட்டத்திலும் பங்கேற்காத நடராசன் எப்படி முற்றம் மட்டும் திறக்கலாம் எனும் கேள்வி உங்களுக்கு எழக்கூடும். ஆனால் அந்த குற்றம் நடராசனுடையதில்லை. ஒரு கட்டிடத்தின் வாயிலாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் இயல்பு தென்னிந்தியா முழுக்க இருக்கிறது. கடன்வாங்கும் தகுதி வந்ததும் தமிழன் வீட்டைக் கட்டிவிடுகிறான். நிறைய பணம் வந்தால் சொந்தக்காரனுக்கு சல்லிக்காசு தருகிறானோ இல்லையோ சொந்த ஊரில் ஒரு கோயில் கட்ட காசு கொடுக்கிறான். நாடுதிரும்பும் எண்ணமில்லாத வெளிநாட்டு மலையாளிகள்கூட சொந்த ஊரில் பெரிய வீடுகளைக் கட்டி பூட்டிவைக்கிறார்கள். கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுவதைத்தவிர வேறுதொழிலே தெரியாத பல தெலுங்கர்களை நான் பெங்களூரில் பார்த்திருக்கிறேன். ஆகவே இதுஒரு மரபியல் வேட்கை, அதில் இருந்து நடராசனும் தப்ப முடியாது.

மேலும் வரலாற்றில் இடம்பெற கட்டிடங்களை நம்புவதுதான் பாதுகாப்பானது. அதனால்தான் களப்பிரர்கள் அறியப்படாதவர்களாகவும் ராஜராஜனும் ஷாஜகானும் சரித்திரத்தில் சாகாவரம் பெற்று வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதே தஞ்சையில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பணத்தை இறைத்து இதேபோல ஒரு விழா எடுத்தார் தொழிலதிபர் ஆனாரூனா. ஆனால் இப்போது அந்த செய்தி ஆனாரூனாவையும் சேர்த்து ஐம்பது பேருக்குத்தான் நினைவிருக்கும்.

ஒரு சாதாரண விவசாயியின் மகன், இருபதாண்டுகளுக்கும் மேலாக எந்த வேலைக்கும் செல்லாதவர், எந்த தொழிலும் இல்லாதவர் எப்படி இவ்வளவு பணம் செலவு செய்யமுடியும் என கேட்பவர்களுக்கு புராண ஞானம் கொஞ்சமும் இல்லை என்று பொருள். திருமங்கை ஆழ்வார் கொள்ளையடித்துத்தானே கோயில் கட்டினார். அவரை கொளுத்து வேலைக்கு போய் கோயில் கட்டு என சொல்லும் துணிச்சல் இருக்கிறதா உங்களுக்கு? இறைவனுக்கே அந்த துணிச்சல் இல்லாமல்தான் எப்படியோ கோயில் கட்டினால் சரி என பேசாதிருக்கிறார். முதல் தமிழ்ச்சங்கம் அமைத்த சிவபெருமானே சிவனேயென்று இருக்கும்போது உங்களுக்கும் எனக்கும் என்ன கேடு? இந்த மாதிரி நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் பார்கக்கூடாது என்பதற்காகத்தானே இதனை ஒரு கோயில் என சொல்லியிருக்கிறார் நின்றசீர் நெடுமாறன்!!! இயேசுகூட பாவங்களைத்தான் வெறுக்கிறார், பாவிகளை அவர் நேசிக்கிறார். ஆகவே நடராசனின் பாவங்களை வேண்டுமானால் வெறுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடராசனை வெறுக்காதீர்கள்.

மன்னிக்கவும் ஸ்தல புராணம் தடம் மாறிவிட்டது, அப்போது திறக்கப்பட்டிருந்த ஒரு அரங்கத்தில் வேலை நடந்துகொண்டிருந்தது. செருப்பு அணிந்து செல்ல அனுமதியில்லை (நடராஜனின் வெள்ளை செருப்பே வெளியில்தான் இருந்தது). ஏராளமான தமிழ்ச்சான்றோன் புகைப்படங்கள் அங்கே மாட்டப்பட்டிருந்தன. தமிழ் வளர்த்த சான்றோர்கள் எனும் பிரிவில் எம்.ஜி.யார் படமும் இருந்தது. சத்தியராஜுக்கு கர்லாக் கட்டை கொடுத்தவர், பாண்டியராஜனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி கொடுத்தவர், மஞ்சுளாவுக்கு கல்யாணம் செய்து வைத்தவர் தமிழ் மொழிக்கு மட்டும் ஏதாவது செய்யாமல் போயிருப்பாரா என்ன? ஆகவே அவர் எந்தவகையில் தமிழ் வளர்த்தார் எனும் ஐயத்தை நான் எழவிடவில்லை. எம்ஜிஆர் தமிழுக்கு செய்த குறிப்பிடத்தக்க தொண்டென்றால் அது பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு கொண்டுவந்தது மட்டும்தான். அந்த அடிப்படையில் பார்த்தால் அந்த சீர்திருத்தத்தை அறிமுகம் செய்த பெரியார் படம் அங்கே இருந்தாக வேண்டும்.

நிதானமாக கவனித்தும் அங்கே பெரியார் படத்தைக் காணவில்லை. பிரபாகரனோடு ஒரேயொரு புகைப்படம் எடுத்துக்கொண்ட, தமிழ்தேசியப் பள்ளியில் முந்தாநாள் சேர்ந்த மாணவனான சீமானே தன் மேடைகளில் பெரியார் படத்தை வைக்க அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க பிரபாகரனோடு ஏராளமான புகைப்படம் எடுத்துக்கொண்ட, அப்பள்ளியின் முதல்வர் நெடுமாறன் மட்டும் பெரியார் படத்தை வைத்துவிடுவாரா என்ன? ஜெயமோகன், தமிழை எப்படி எழுதலாம் என ஒரு கட்டுரை எழுதி தமிழர்களின் எதிர்வினையை பரிசோதித்ததைப்போல இது நெடுமாறனின் சோதனை முயற்சியாகக்கூட இருக்கலாம். ஆகவே அதையும் நாம் பெரிதுபடுத்த தேவையில்லை.

செய்யவேண்டிய வேலை ஏராளமாக இருக்க ஒருவருடத்தை நெடுமாறன் இந்த முற்றத்திற்கு செலவிடலாமா எனும் கேள்விகள் ஆங்காங்கே தட்டுப்படுகின்றன. அப்படி சிந்திப்போர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள். எல்லோராலும் எல்லா நேரத்திலும் ஒரு வேலையை செய்துவிட முடியாது. கிருஷ்ணனை வரச்சொல்லி வேண்டும் ஒரு நடனத்தை ஒரு இளம்பெண் ஆடுகிறார் என வையுங்கள், அப்போது அந்த நடனம் கண்டு கிருஷ்ணனே இறங்கி வந்துவிடுவானோ என பரவசப்படுவீர்கள். அதே அபிநயத்தை பத்மா சுப்ரமணியன் பெரும்பாடுபட்டு ஆடுகையில் “பார்த்து மாமி விழுந்துடப்போறேள்” என பதறுவீர்கள். கொஞ்சம் கோபக்காரர் எனில் பெருமாள் வந்து அழைச்சுண்டு போற வயசுல இத்தம்மா ஏன் கிருஷ்ணனை வரச்சொல்லி ஆடனும் என கடுப்படிப்பீர்கள். ஆகவே எந்த ஒரு மனிதனும் தனது வயதும் சுற்றமும் அனுமதிக்கும் வேலையைதான் செய்ய முடியும்.

இந்த எண்ணமெல்லாம் அலைமோதிய மனதோடு அந்த அரங்கத்தை விட்டு வெளியே வருகையில் தளர்ந்த நடையோடு எதிரில் வந்தார் நெடுமாறன். பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா எனும் தமிழர்களின் தலையாய சந்தேகத்தை கேட்டுவிடலாம் என முன்னே சென்று வணக்கம் வைத்தேன், அன்பே உருவான புன்னகையோடு “வணக்கம், நல்லா இருக்கீங்களா” என்றார். அந்த சாந்தத்தின் சொரூபத்தை கண்டவுடன் “இந்த முகம் நம்மோடு இருக்கையில் ஈழம் கிடைக்காமல் போய்விடுமா” எனும் குரல் என் இதயத்தில் ஒலிக்க, கேட்க வந்த கேள்வி தொண்டைக்குழியோடு நின்றுபோனது. இன்னும் இரண்டு நிமிடம் அங்கிருந்தால் கையோடு கூட்டிச்சென்று மதியசாப்பாட்டையும் போட்டு என்னை செஞ்சோற்றுக் கடனாளியாக்கிவிடுவாரோ எனும் தயக்கத்தோடு அங்கிருந்து விடைபெற்றேன்… ஈழம் கன்பார்ம்டு எனும் நம்பிக்கை தந்த பரவசத்தோடு.

போலோ தமிழ் மாதாகீ ஜே…

(மத்திய அரசும் மாநில அரசும் தமிழ் மொழியை இல்லாது ஒழிக்க எல்லா காரியங்களையும் கர்ம சிரத்தையாக செய்துவருகின்றன. நாமோ ஈழம் கிடைக்கும்வரை மறுவேலை பார்க்கப்போவதில்லை. பக்கத்துணையாக பாஜகவும், இந்து மக்கள் கட்சியும் இருக்கின்றன. அதனால் தமிழே இல்லாமல் போனாலும் தமிழ்தேசியத்தை கொண்டுசெல்வதற்கான ஒரு முன்னேற்பாடாகத்தான் இந்த கோஷத்தை சொல்லிவைக்கிறேன்)  

Advertisements

One thought on “முள்ளிவாய்க்கால் முற்றம் – ஒரு ஷேத்ர புராணம்.”

  1. //பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா எனும் தமிழர்களின் தலையாய சந்தேகத்தை கேட்டுவிடலாம் என முன்னே சென்று வணக்கம் வைத்தேன்//
    நீங்க பகுத்தறிவு சிந்தனையை பயன் படுத்தியிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கும்.
    //அங்கிருந்து விடைபெற்றேன்… ஈழம் கன்பார்ம்டு எனும் நம்பிக்கை தந்த பரவசத்தோடு//
    April 14 க்கு முதல் ஈழம் கன்பார்ம்டு தாங்க. அதற்கும் தமிழக தலையாய பிரச்னைகள், இந்திய பிரச்னைகளுக்கும் என்ன தொடர்பு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s