மோடி ரஜினி சந்திப்பு – பில்டிங் மட்டுமில்ல பேஸ்மெண்டும் வீக்குதான்.


“திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு நடந்துச்சாம் கல்யாணம்”கிறது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம ரஜினிகாந்துங்கிற நடிகருக்கு 100 சதவிகிதம் பொருந்தும் ( வடிவேலு ஹீரோவா நடிச்ச சந்திரமுகி படத்துல நிறைய பவுடர் அப்பிகிட்டு ஒருத்தரு அப்பப்போ வந்துபோவாரே அவரேதான்).. அவர் நம்மைத்தேடி வெளியே வருகிறார் என்றால் அவருடைய படம் வெளியாகப்போகிறது என்று அர்த்தம். அவரைத்தேடி யாரேனும் போகிறார்கள் என்றால் தேர்தல் வரப்போகிறது என்று பொருள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் “நான் பாஜகவுக்கு ஓட்டுபோடுவேன்” என ரஜினி சொல்லப்போக அன்றைக்குப் பிடித்தது அவர்களுக்கு தரித்திரம். அதை விரட்டவே பாஜகவுக்கு ஒரு மாமாங்கம் ஆகியிருக்கிறது, அதுவும் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவில். ரஜினியின் ரசிகர்கள் எனும் பெயரில் சில கோமாளிகள் “தலைவா நீ எப்போதான் ஆணையிடுவாய்” என போஸ்டர் ஒட்டுவார்கள். அதைத் தொடர்ந்து ஜூவி, ரிப்போர்ட்டரில் இரண்டு பக்க செய்தியும் வரும். இந்தமுறை ரஜினிக்கு அந்த பிராப்தமும் இல்லைஅந்த விதிப்படி சமீப காலங்களில் கோச்சடையானுக்காக அவர் வெளியே வரப்போக இருந்தார். ஆனால் எந்தக் கட்சியும் ரஜினி ஆதரவுக்காக மெனக்கெட்டதாக தெரியவில்லை. ஆட்சியில் இருந்திருந்தால் கருணாநிதியாவது ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து ரஜினியை பக்கத்தில் உட்காரவைத்து அழகு பார்த்திருப்பார். ஜெயலலிதாவின் கணக்குப்படி அவர் பக்கத்தில் உட்காரக்கூட ரஜினிக்கு அருகதை கிடையாது.

போஸ்டராலேயே எல்லாவற்றையும் இழந்தவரான அழகிரியின் ஆதரவை தேடி ஓடிய கட்சிகள்கூட, ரஜினியை கண்டு கொள்ளவில்லை. ஆறுதல்தேடி அலைந்த அழகிரியின் சந்திப்புதான் ரஜினிகாந்துக்கு கிடைத்த ஒரே ஆறுதலாக அமைந்தது. கோச்சடையானை ஓடவைக்க வேறுவழியே இல்லாத இந்த சூழலில் வாய்த்த “வரம்”போல ரஜினியை “வான்டனாக” வந்து சந்தித்திருக்கிறார் மோடி. சந்திப்பின்போது நாங்கள் பரஸ்பர நலன்விரும்பிகள் என சொல்லியிருக்கிறார் ரஜினி. அந்த வாசகத்தில் பொய் ஏதுமில்லை. ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை தன் படத்தில் கூடுமானவரை பிரச்சாரம் செய்பவர் ரஜினி. அவருக்கு உடம்புக்கு முடியாமல் போனதும் வாரா வாரம் போன் செய்து விசாரித்தாராம் மோடி (ஈழத்து இனப்படுகொலைகள் நடந்தபோதோ அல்லது தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதோ அவர் எத்தனை போன் செய்தார் என்றெல்லாம் கேட்பது தேசவிரோதம் என்பதை வாசகர்கள் நினைவில் வையுங்கள்).

ரஜினி - மோடி சந்திப்பு

ஆகவே இது ஒரு இயற்கையான நட்பு. அதுதான் மோடியை ஒரு தேநீருக்காக சென்னைக்கு தனிவிமானத்தில் வர வைத்திருக்கிறது. ரசிகர்களுக்கு வாக்களித்தபடி மகள் கல்யாண விருந்தைக்கூட ஏற்பாடு செய்யமுடியாத அளவுக்கு ஃப்ரீயாக இருக்கும் ரஜினியை இந்த சந்திப்புக்கு ஒத்துக்கொள்ள வைத்திருப்பதும் அதே நட்புதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரஜினி அரசியல் செய்யும் வாய்ப்பை இழந்துவிட்ட ஒரு நடிகர், மோடியோ நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்ட ஒரு அரசியல்வாதி. அதனால்தான் முன்னவர் நடிகனுக்கு அவசியமான மேக்கப்பை பொதுவெளியில் தவிர்க்கிறார், பின்னவரோ அரசியல்வாதிக்கு அவசியமற்ற அலங்காரத்துக்கு அதீத முக்கியத்துவம் தருகிறார்.

ரஜினியின் அரசியல் ஆர்வம் பல ஆண்டுகளாக பல வழிகளில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. “எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்” எனும் பாடல் வந்ததிலிருந்தே அவரது முதல்வர் முயற்சி ஆரம்பித்து விட்டதாக கருதலாம். ஜெயாவின் காலில் விழுவோர் அவரது (ஜெயா) விருப்பத்துக்கு எதிராகவே அவ்வாறு செய்வதாக நீங்கள் நம்பினால் மேற்சொன்ன வகையறா பாடல்கள் ரஜினியின் விருப்பத்துக்கு மாறாக எழுதப்பட்டிருக்கக்கூடும் என்றும் நம்பலாம். அந்த கோணத்தை விட்டுவிட்டாலும் அவரது சொந்தப்படமான பாபாவில் (கதை: ரஜினியின் கதை இலாகா) ரஜினியை விட்டால் ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் வேறு நாதியேயில்லை எனும் செய்திதான் சொல்லப்பட்டிருக்கிறது. கொஞ்சம் சகித்துக்கொண்டு அந்தப் படத்தை பார்ப்பீர்களேயானால் ரஜினியின் அரசியல் + ஆன்மீகக் கனவை நீங்கள் கண்டுணர முடியும்.

ரஜினிகாந்த்ரஜினியின் அந்த விருப்பம் ஒரு கிறுக்குத்தனமான ஆவலாகவே முடிந்திருக்கும். அதனை ஊதிப் பெருக்கி, ஒருவேளை அவருக்கு ஆதரவு இருக்குமோ என பலரையும் சந்தேகம் கொள்ளவைத்ததில் தமிழ் ஊடகங்களின் பங்கு மகத்தானது. சிரமமில்லாமல் செய்திகளை தொடர்ந்து உற்பத்தி செய்ய ரஜினி போன்ற நபர்களை பெரிய செல்வாக்குடையோராகக் காட்டி உசுப்பிவிடுவது என்பது அவர்களுக்கு அவசியம். ஸ்டைல் எனும் பெயரில் வித்தை காட்டுவதில் அவருக்கு இருந்த திறமை, பத்திரிக்கையாளர்களை கைக்குள் வைத்திருக்கும் லாவகம் என மேலும் சில தகுதிகள், அவரை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நபராக வைத்திருந்தன. அதனை தக்கவைக்க பத்திரிக்கையாளர்களை அவர் சரியாக கவனிக்கவும் செய்திருக்கிறார், ரஜினி பிரஸ் மீட்டுக்களில் கவர் விநியோகம் தாராளமாக இருக்கும் என ஊடக வட்டாரங்கள் வாயிலாக அறியமுடிகிறது. சோ ராமசாமி எனும் அரசியல் தரகனின் நட்பு (பிராமணர்களுக்கு மட்டும்.. அதர்ஸ் பிளீஸ் எக்ஸ்கியூஸ்) அவருக்கு பல பெரிய அரசியல் தலைவர்களின் தொடர்பை உருவாக்கித் தந்தது. இவை எல்லாமுமாக சேர்ந்து ரஜினி தன்னை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக நம்பும் சூழலை உருவாக்கின.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிகாலத்தில் ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு செல்வதற்கு இடையூறு செய்யும் வகையில் இருந்த போலீஸ் கெடுபிடிகளைக் கண்டு கடுப்பாகியிருந்தார். அதன் வெளிப்பாடாக அப்போது இயக்குனர் மணிரத்தினம் வீட்டு பால்கனியில் வெடித்த வெங்காய வெடியைக் கண்டித்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என பேசினார். கவனியுங்கள், இந்தியாவில் நடந்த வேறு எந்த குண்டு வெடிப்பு பற்றியோ கலவரம் பற்றியோ அவருக்கு அறச்சீற்றம் வரவில்லை. அதன் தொடர்ச்சியாக 1996-ல் ஜெயலலிதா தோற்கடிக்கப்படவேண்டும் என வெளிப்படையாக அறிவித்தார். அதிமுக அந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தது.

அவர் அப்படி அறிவிக்காமல் இருந்திருந்தாலும் அப்போது அதிமுக படுதோல்வியடைந்திருக்கும், மக்களுக்கு ஜெயா கும்பலின் மீது இருந்த வெறுப்பு அத்தகையது. அன்று காக்கை உட்காரும் முன்பே பனம்பழம் விழுந்து விட்டது. இப்படி எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோதுதான் லதா ரஜினிக்கு தன் கணவரை ஒரு பெருமுதலீடாக, பிராண்டாக மாற்றும் யோசனை முளைக்கிறது. பாபா படம் தயாராகும்போது ரஜினியின் பெயரையோ உருவத்தையோ இனி யாரும் பயன்படுத்தக்கூடாது என சட்டபூர்வ எச்சரிக்கையை விடுக்கிறார் லதா. ரஜினி பெயரில் பலவகையான பொருட்களை விற்பனை செய்யும் திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது. இந்த வியாபாரம் பாபா படத்தின் வெற்றியை நம்பியே இருந்தது, பாபாவுக்கு தரப்பட்ட அதீத ஊடக வெளிச்சம் ரஜினியின் சுற்றத்துக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும் இதனை வெளிப்படையாக அறிவிக்க முடியாத சூழல் வெளியே இருந்தது. 1996 தேர்தலில் ரஜினி செல்வாக்கு மிக்கவர் எனும் மாயத்தோற்றத்தை அவரது ரசிகர்கள் நம்ப ஆரம்பிக்கிறார்கள். அதே சமயத்தில் ஏனைய பெரிய கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள்கூட பெரும் அளவில் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கட்சியை உருவாக்கும் விருப்பத்தை தோற்றுவிக்கிறது. குறைந்தபட்சம் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் ஓடவேனும் ரசிகர் மன்றங்கள் எனும் மூடர் கூடாரங்கள் தேவை என்பதால் அவரது சுற்றம் திட்டங்களில் சிறு மாறுதல்களைச் செய்கிறது. அதுவரை அரசியலை நோக்கிய நகர்வுக்கு சினிமாவை உபயோகித்த ரஜினி அதன் பிறகு சினிமா வெற்றிக்காக அரசியலை பயன்படுத்தும் திட்டத்தை மேற்கொள்கிறார்.துரதிருஷ்டவசமாக, பாபா கதை ரஜினியின் ”சொந்தக்கதை” என்பதால் படம் படுகேவலமான தோல்வியை சந்திக்கிறது. அதன் தொடர்ச்சியாக மற்ற வியாபார திட்டங்களும் ஊற்றி மூடப்படுகின்றன. போதும் போதாத்தற்கு பாபா படத்தை பார்ப்பதற்காகவே அமெரிக்காவில் இருந்து வந்த ரஜினியின் ஆன்மீக குரு படம் வெளியாவதற்கு முதல்நாள் வைகுண்ட பதவியடைந்து செண்டிமெண்ட் ஷாக் கொடுத்தார். அனேகமாக ரஜினியை நம்பி ஒரு கட்சி தொடங்க முதலீடு செய்வது முட்டாள்தனமானது எனும் முடிவுக்கு லதா அப்போதுதான் வந்திருக்கவேண்டும் என கருதுகிறேன் (ரஜினியின் முகத்தை வைத்து தொப்பி டி சர்ட்கூட விற்க முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த காலமல்லவா அது).

பாபாவுக்குப் பிறகு “ரஜினியே இந்த மண்னின் கதிமோட்சம்” என் சொல்லும் காட்சிகள் அவரது எந்தப் படத்திலும் வரவில்லை. இன்னும் ஒருபடி மேலேபோய் “ஏதோ ஒரு படத்தில் நான் அரசியலுக்கு வருவதாக சொன்னதெல்லாம் யாரோ எழுதித்தந்த வசனம்தானேயன்றி எனது சொந்தக் கருத்தல்ல” என்றார். ஜெயாவை “தைரியலட்சுமி” என புகழ்ந்தார், தன்னை படுகேவலமாக திட்டிய ராமதாஸ் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து சமரசமானார். ஆனாலும் அவரது சினிமா வெளியாகவிருக்கும் தருணங்களில் மட்டும் ரசிகர்களை சந்திப்பது தொடர்ந்தது. அப்போதெல்லாம் ரஜினி தமிழக அரசியல் நிலைமையை “உன்னிப்பாக” கேட்டறிவதாக புலனாய்வு இதழ்களின் பஜனையும் தொடர்ந்தது. உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட பிறகு அவர் கட்டாய விஆர்எஸ் வாங்கிக்கொள்ளும் உத்தேசத்தில் இருப்பது தெரிகிறது. இப்படியாக முடிவுக்கு வரவிருந்த ஒரு சகாப்தத்தை மீட்டு உயிர் கொடுக்கத்தான் மோடி வந்திருக்கிறார்.

மோடி மோசடி

இந்தியாவில் கருத்துக் கணிப்பு நடத்தும் பத்திரிக்கைகள் மோடிக்கு 270 சீட்டுக்களை ஒதுக்கிவைத்துவிட்டு மற்ற இடங்களில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என தெரிந்துகொள்ள மட்டும்தான் கருத்துக் கணிப்பை நடத்துகின்றன. அமெரிக்கா தனது மோடி விரோத அதிகாரிகளை மாற்றுவதாக செய்தி வருகிறது (நான்சி பாவெல் ராஜினாமா).. சீன அரசே மோடியின் கேள்விகளுக்கு பவ்யமாக பதில் சொல்வதாக தமிழிசை சவுந்தர்ராஜன் சொல்கிறார். “மோடி வந்தால் வளர்ச்சி வந்துவிடும்” எனும் எஃப்எம் விளம்பரத்தால் லாட்ஜ் டாக்டர்களும் அமுக்ரா கிழங்கு விவசாயிகளும் தொழில் படுத்துவிடுமோ எனும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். “நீங்கள் இன்னும் பிரதமராகவில்லை” என மோடியை நம்பவைப்பதற்கே அவரது சுற்றத்தார் கடுமையாக சிரமப்படுவதாகத் தகவல். இந்தியாவின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் கார்பரேட் முதலாளிகளும் இந்தியாவின் சிந்தனையை தீர்மானிக்கும் ஊடக அடிமைகளும் அந்த அளவுக்கு மோடிக்காக மெய்வருத்தி வேலை செய்கின்றனர்.

நிலைமை இப்படியிருக்கையில் மோடியும் பாஜகவும் இப்போது நியாயமாக துவங்கியிருக்க வேண்டிய வேலை அமைச்சரவை இலாகா பிரிப்பதுதான். ஆனால் இப்போதுதான் பாஜக (அதாவது தற்சமயத்துக்கு மோடி) அதிகம் பயப்படுவதாகத் தெரிகிறது.

ராஜ்நாத்சிங் “ஒரேயொருமுறை எங்களை மன்னித்து வாய்ப்பு தாருங்கள்” என முஸ்லீம் மக்களிடம் கெஞ்சுகிறார். அடுத்த சில நாட்களில் “முஸ்லீம்களை பழிவாங்க எங்களுக்கு ஓட்டுபோடுங்கள்” என மோடியின் மாமா கம் அடியாள் அமித்ஷா உபியில் பிரச்சாரம் செய்கிறார். மத்திய அரசு சிறுபான்மை சமூக மாணவர்கள் ஐம்பத்தைந்தாயிரம் பேருக்கு ஒதுக்கிய கல்வி உதவித்தொகைகளை இன்னமும் பயன்படுத்த மனமில்லாத மோடியின் குஜராத் முகம், கிருஷ்ணகிரியில் அவரது உரையை ஒரு முஸ்லீம் பெண்ணை வைத்து மொழிபெயர்க்க வைக்கிறது.

மோடி ரஜினியை சந்தித்தது என்பது இதன் நீட்சிதான்.

படுகொலைகளும் பொய்களும்தான் மோடி போன்ற ஃபாசிஸ்டுகளின் ஆயுதம். ஆனால் அவர்களின் வாழ்நாள் சொத்தென்பது அச்சம்தான். இத்தனை ஆண்டுகாலமாக அவர் உருவாக்கிய பொய்களும் மறைத்து வைத்த உண்மைகளும் அவரை நிம்மதியாக இருக்கவிடாது. ஒரு பிரம்மச்சர்ய பொய் அம்பலமானதையே எதிர்கொள்ளத் திராணியற்ற கோழையான மோடிக்கு, ஒட்டுமொத்த உண்மைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் எக்காலத்திலும் வராது. சிறையில் இருக்கும் சகாக்கள் மட்டுமல்ல அவருக்காக பெண்களை வேவுபார்த்த கங்காணி போலீஸ்காரர்கள்கூட மோடிக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்.

கட்சியின் எதிரிகளை ஓரளவுக்கு தட்டிவைத்தாலும் அவர்களை மொத்தமாக ஒழிக்க அவரால் முடியாது. அதனை மோடிக்கு உணர்த்தத்தான் எதிரிகள் அவ்வப்போது மோடியின் தலையில் கொட்டுகிறார்கள். அதன் உட்பொருள் உன் தலை எங்கள் கைக்கெட்டும் தொலைவில்தான் இருக்கிறது எனும் எச்சரிக்கைதான். மோடியும் அதனை புரிந்துகொள்ள இயலாத அடிமுட்டாள் அல்ல. மோடியே கேசுபாய் படேலை ஒழிக்க அத்வானி கும்பலால் ஏவிவிடப்பட்ட குட்டிச்சாத்தான்தான். இப்போது அதுவே ஏவியவர் மீது பாய்ந்துவிட்டது. தனது நலனுக்காக மோடியும் பல குட்டிச்சாத்தான்களை ஏவியவர்தான். ஆகவே அத்வானியின் கதி தனக்கும் வரும் என்பது மோடிக்குத் தெரியும்.

இந்த எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கவல்ல சர்வரோக நிவாரணி பிரதமர் பதவிதான். அதுவும் இது மோடிக்கு கடைசி வாய்ப்பு. முதலாளிகளைப் பொருத்தவரை, அவர்களுக்கு மோடி ஒன்றும் கடைசி வாய்ப்பல்ல, அவர்களுக்கு இன்னொரு ஃபாசிஸ்ட் கிடைப்பதும் கடினமானதல்ல. ஆகவே என்ன செய்தேனும் இம்முறை பிரதமராகிவிடவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் மோடி. அதற்கான சிறிய வாய்ப்பைக்கூட அவர் தவறவிடத் தயாராயில்லை. அந்த நடுக்கத்தைத்தான் ரஜினி வீட்டு வாசலில் நீங்களும் நானும் மோடியின் முகத்தில் பார்த்தோம். மோடி நடிகர் விஜய்யை சந்தித்தபோது நடுக்கத்தோடு லைட்டாக நாற்றமும் வர ஆரம்பித்துவிட்டது.

வைத்தி இவ்வளவு இறங்கியதைப் பார்த்து ஜூவி படுத்தேவிட்டது. “இது மோடிக்கு ரஜினி கொடுத்த மனப்பூர்வமான ஆதரவு, தேர்தல் நெருங்கியதும் அவர் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்” என வூடு கட்டி அடித்திருக்கிறது ஜூனியர் விகடன். ரஜினியை மோடி சந்தித்த காரணத்தினால்தான் பாஜகமீது ஜெயலலிதா விமர்சனம் வைக்க ஆரம்பித்து விட்டார் என்று சொல்லி ரஜினியை சந்தியில் நிறுத்தியிருக்கிறார் கழுகார். “ஜெயா ரஜினியைப் பார்த்து பயப்படுகிறார்” என செய்தி வந்தபிறகு கோச்சடையான் எப்படி ரிலீஸ் ஆகப்போகிறதோ என எனக்கு கவலையாக இருக்கிறது. யாரை பலிகொடுத்தேனும் மோடியை பிரதமராக்கிவிடுவது என திருமாவேலன் சத்தியம் செய்திருக்கிறார் என்பது ஜூவி படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது.நிலவரம் இப்படி கலவரமாகிக் கொண்டிருக்கும்போது நம் ஊடகங்கள் அதனை சமாளிக்க பெரும்பாடுபடுகின்றன. தன்னை சந்தித்த பல கட்சிக்காரர்களுக்கு, ரஜினி சொன்ன பதிலுக்கும் மோடிக்கு சொன்ன பதிலுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதால் இது மோடிக்கு ஆதரவான வாய்ஸ்தான் என கண்டுபிடித்திருக்கிறது தினமணி. வீட்டு வாசலில் ரஜினியின் உடல்மொழி அதனை ஊர்ஜிதம் செய்வதாகவும் சொல்லிவிட்டது தினமணி. ரஜினியின் முகம் தாமரை போல மலர்ந்திருந்தையும் தினமணி ஒரு ஆதாரமாக காட்டியிருக்கும். ஆனால் பக்கத்திலேயே மோடி முகம் கருவாட்டைப்போல வறண்டுபோய் காட்சி தந்ததால் சர்ச்சைக்குரிய அந்த ஆதாரம் மறைக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த எல்லா சூழ்ச்சிகளையும் தனது ஒற்றை அறிவிப்பால் அடித்து வீழ்த்தியிருக்கிறார் நடிகர் விஜய். மோடியை சந்திக்க தான் முயற்சிக்கவில்லையென்றும் மோடிதான் தன்னை சந்திக்க விரும்பியதாகவும் “மிக அடக்கமாக” குறிப்பிட்டிருக்கிறார் அவர். எனக்கென்னவோ இந்த ஸ்டேட்மெண்டைப் பார்த்தபிறகு மோடியைக்காட்டிலும் விஜய்தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என தோன்றுகிறது.

Advertisements

One thought on “மோடி ரஜினி சந்திப்பு – பில்டிங் மட்டுமில்ல பேஸ்மெண்டும் வீக்குதான்.”

  1. உங்கள் எழுத்து நடை சிறப்பாக இருக்கிறது. ஆனால், சிறப்பு அது ஒன்றுதான். மற்றபடி, வெற்றி பெற்றவர்களைப் பார்த்துப் புழுங்கித் தூற்றும் தங்கள் போக்கு கேலிக்குரியது. ரஜனி, மோடி, விஜய் இத்தியாதிகள் வெறும் டம்மிகளாகத்தான் இருந்து விட்டுப் போகட்டுமே? அவர்களது காரண காரியங்களை ஆராய்ந்து தீஸிஸ் எழுதுவானேன்? என்ன ஒரு பொறாமை! சாதிக்க முடிவதை விட, சாதித்தவர்களைத் தூற்றி விடுவது எளிது! தனிமையிலாவது வெட்கப்படுங்கள், ஐயா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s