வடிவேலு பேக்கரி VS தா.பா. பேக்கரி


“மகிழ்ச்சியாக இணைந்தோம். மகிழ்ச்சியாக பிரிவோம்” என்று சொன்னாராம் ஓ.பன்னீர் செல்வம். ”சேர்ந்திருப்பதாக அவர்கள்தான் சொன்னார்கள், அதுபோல பிரிவையும் அவர்களே அறிவிக்கட்டும். அதுவரை நாங்கள் அவர்களுடன்தான் இருப்போம்” என்கிறார் தா.பா (தா.பாண்டியன்). இதில் சம்மந்தப்பட்ட பெயர்களை நீக்கினால் இது ஏதோ கைவிடப்பட்ட காதலிக்கும் ஏமாற்றிய காதலனுக்கும் இடையேயான உரையாடலைப் போல இருக்கும். போதும் போதாததற்கு ”அவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயார்” என வாழ்வு கொடுக்கும் பாத்திரத்தை ஏற்றிருந்தார் கருணாநிதி. நாம் பன்னெடுங்காலமாக புராணத்திலும், நாடகத்திலும், சினிமாவிலும் பார்த்து வந்த கற்புநெறி தவறா காதலிகளின் கதையை நினைவுபடுத்துகிறது இன்றைய ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளின் நிலை.

துரோகம் வென்றதாக வரலாறில்லை என மொட்டையாக முகநூலில் சாபம் விடுகிறார் எம்.எல்.ஏ பாலபாரதி. ஆளுக்கு ஒன்பது சீட் போட்டியிடுவது (அம்மாவின் தற்போதைய ராசி எண் ஒன்பதா, ஆறா?) என்ற முடிவை அறிவித்த டி.ராஜா, கால சூழ்நிலைகளால் இப்படி ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக, மரண அறிவிப்புக்குரிய வாய்ஸ் மாடுலேசனுடன் அறிவிக்கிறார்.அதனை இன்னும் உறுதி செய்யும் விதமாக, ஏமாற்றப்பட்டாலும் தனித்து வாழ்வோமேயன்றி இன்னொருவனை ஏற்கமாட்டோம் எனும் பதிவிரதா தர்மத்தை கடைபிடித்திருக்கின்றன இரண்டு ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளும். இவர்களது இந்த விரக்தியைக் கண்டு கட்சியைக் கலைத்து விடும் தற்கொலை முடிவை எடுத்து விடுவார்களோ என அஞ்சினேன். நல்வாய்ப்பாக அந்த ‘துன்பியல்’ சம்பவம் நிகழவில்லை. இந்த தேர்தலில்அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று மட்டும் கவனமாக கருத்து சொல்லியிருக்கிறார் தா.பா. துணைவர் மனம் திருந்தி என்னை ஏற்றுக் கொள்வார் எனும் நம்பிக்கை அவ்வாசகங்களில் தென்படுகிறது.

ஹிட்லரின் இந்திய வெர்ஷன் மோடியையே பயப்படாமல் விமர்சனம் செய்யும் இடதுசாரி பேச்சாளர்களில் யாராவது ஒருவர், ஒரு ஆளில்லா சுடுகாட்டில் தனித்து நின்று, ஜெயலலிதாவை எதிர்த்து முழங்க மாட்டாரா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்தேன். ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் முகாரி தான் முழங்கியது.

வாஜ்பாய் ஆட்சிக்கு பதின்மூன்றாவது மாதத்தில் மங்களம் பாடிய பிறகு நடந்த தேர்தலில் சீட் கொடுக்காமல் சுப்பிரமணிய சாமியை பபுள்கம்மைப் போல துப்பி விட்டுப் போனார் ஜெயா. இத்தனைக்கும் அவர் வசம் பூணூல் எனும் கவச குண்டலம் இருந்தது. அப்போது சூனா சாமி காட்டிய எதிர்வினையைக்கூட இன்றைக்கு இடதுசாரிகள் காட்டவில்லை. அட, அவர்களின் பிராமணர் பிரிவு தலைவர் டி.கே.ரங்கராஜன் (பாராளுமன்ற மேலவை உறுப்பினர், சிபிஎம்) ஏதாவது சொல்வார் என பார்த்தால் அவரோ அரசியலில் தர்மசங்கடம் என்பதெல்லாம் கிடையாது என சுருக்கமாக துடைத்துக் கொண்டு போகிறார.

கிரி - வடிவேலு

அதுசரி கணபதி அய்யர் அக்காவை கேட்பதெல்லாம் ஒரு பிரச்சனையா… பேக்கரியைத் தருகிறாரா என்பதுதானே முக்கியம்.  ”எவன் இருந்தாலும் செத்தாலும் உனக்கு ராஜ்யசபா சீட் கிடைச்சுடுது, அப்புறம் நீ எதுக்கு சங்கடப்படப் போற” எனும் டி.கே.ஆர் பற்றிய தா.பாவின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்டால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல.

இந்த சூழல் இடதுசாரிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே கூட்டணிப் பங்கீட்டுக்கு முன்னால் தன்னிச்சையாக தமது வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயா. அப்போது அடைக்கலம் தேட இவர்களுக்கு ஒரு கருத்த, கண்கள் சிவந்த எம்ஜியார் இருந்தார். ஆனால் இன்றைய நிலைமையில் அவரை அணுகுவது என்பது ஒரிஜினல் கம்யூனிஸ்டாக மாறுவதைக் காட்டிலும் சிரமமான காரியம்.

ஆகவே அவர்கள் வசமுள்ள ஒரே வாய்ப்பு, ஒரு நாய்க்குட்டியைப்போல கண்மூடித்தனமான விசுவாசத்தை அம்மாவிடம் காட்டுவது மட்டுமே. அதற்கும் இல்லையில்லை, அதற்கு மேலேயும் தா.பா தயாராகத்தான் இருந்தார். துரதிருஷ்டவசமாக அம்மா இப்போது நாயைக் கொஞ்சும் மூடில் இல்லை என்பதால் அவர் கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் விடைபெற வேண்டியதாயிற்று. அதற்காக நீங்கள் ஜெயாவைக் கோபிக்க முடியாது. தோழர்கள் இன்றைக்கு சுயமரியாதையோடு தேர்தல் களத்தில் நிற்பதென்பது சுயமாய் விளைந்த முடிவல்ல. மம்மி கழுத்தைப் பிடித்து தள்ளியிருக்காவிட்டால் இந்த காட்சியை நீங்களும் நானும் எந்த நாளும் பார்த்திருக்க முடியாது.

ஏகாதிபத்திய நாடுகளும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளும் கம்யூனிசம் எனும் வார்த்தையையே இல்லாதொழிக்க விரும்புகிறார்கள். அது போலியாக இருந்தாலும்கூட அவர்கள் சகித்துக் கொள்வதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் பல்லவன் போக்குவரத்துக் கழகத்துக்கு உலக வங்கி கடன்கொடுக்க முன்வந்தபோது சொன்ன நிபந்தனைகளில் ஒன்று, பேருந்துகளில் உள்ள சிகப்பு நிறத்தை அகற்ற வேண்டும் என்பது. கார்பரேட்டுக்களின் கனவை நிறைவேற்றும் கடமையை ஜெயா ஏற்றிருக்கிறார் (தகரத்தைக் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டு பிடித்தவர்கள் என கம்யூனிஸ்ட்டுக்களை கலாய்த்த  தலைவர் அம்மா). அந்த அவதாரத்துக்கு உதவ வந்த வீடணர்களாக தாபாவும் ஜிராவும் இருக்கிறார்கள்.

அன்பே சிவம்

அப்படியானால் இது ‘கம்யூனிஸ்’டுகளின் இன்றைய தலைமையின் குற்றம் என நீங்கள் கருதினால் அதைவிட பஞ்சமா பாதகம் வேறொன்றில்லை. நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும் புறந்தள்ளிவிட்டு நீங்கள் இயற்பியல் படித்துவிட முடியுமா? ஆனால் இன்றைய ‘கம்யூனிஸ்ட்’ தலைவர்களது (தொண்டர்களும்தான்) தலைவிதியானது மார்க்சியத்தை நிராகரித்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சி நடத்துவதாக அல்லவா இருக்கிறது? திருட்டை ஒரு வேலையாக செய்யும் குழுவில் நியாயம் என்பது திருடர்களுக்கிடையேயான நேர்மை மட்டுமே. முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு பொதுஉடைமை சிந்தனையையும் செயல்படுத்துவதென்பது சாத்தியமில்லாத செயல். இரண்டு எதிரெதிர் துருவமான சிந்தனைகளை ஏற்று செயல்படுத்த வேண்டுமானால் அது இருவருக்கும் பைபோலார் டிஸ்ஆர்டர் வந்த பிறகுதான் சாத்தியம்.

இடதுசாரிகளால் வியந்து போற்றப்பட்ட அன்பே சிவம் படத்து கிளைமாக்சில் சகலகலா வல்லவன் கமல், மக்களைத் திரட்டியா தொழிலாளர் உரிமையை பெற்றுத்தந்தார்? காதலை விட்டுக்கொடுத்துதான் அய்யா கம்யூனிசத்தைக் காப்பாற்றினார். பிரகாஷ் காரத், டி.ராஜா, ஜி.ரா என எல்லா தலைகளுக்கும் ஏகத்துக்கும் வயதாகிவிட்டது. இனிமேல் இவர்கள் கமல்ஹாசனின் வழியில் போயா கம்யூனிசத்தைக் காப்பாற்ற முடியும்? கம்யூனிசத்தை கைவிட்டாயிற்று, கமலஹாசன் காட்டிய வழியிலும் போக முடியாது… பிறகு சரணாகதியடைவதுதானே கடைசி வாய்ப்பு??

நான் ஏதோ ‘கம்யூ’ தலைவர்களை கிண்டலடிப்பதாக புரிந்து கொண்ட ரங்கராஜ தாசர்கள் யாரேனும் எனக்கு கருடபுரணத்தின்படி கும்பிபாக தண்டனை கொடுத்து குப்புற படுக்க வைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே  சில பத்திகளாவது அவர்களது செயல்பாடுகளில் உள்ள கம்யூனிச ‘நெறி’களைப் பற்றி பேசிவிடுகிறேன்.

சோசலிச ரஷ்யாவில் ஒரு தொழிலாளிக்கும் அறுநூறு ரூபிள்தான் சம்பளம், அதிகாரிக்கும் அறுநூறு ரூபிள்தான் சம்பளம். இவ்வளவு ஏன் தேசத்தின் தலைவர் லெனினுக்கும் அதே அறுநூறு ரூபிள்தான் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது. சோசலிசத்தின் அடிநாதமே எல்லோரும் சமம் எனும் கோட்பாடுதான். சோசலிச ரசியா அளவுக்கு இல்லாவிட்டாலும் அதனை தமிழக இடதுசாரிக் கட்சிகள் முடிந்தவரை பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இடது,வலது கட்சிகள்

சில காலம் திமுகவை ஆதரித்தார்கள். எம்ஜியார் தனிக் கட்சி அமைத்தவுடன் அவரை ஆதரித்தார்கள், பிறகு வைகோ கட்சி ஆரம்பித்தபோது அவரையும் ஆதரித்தார்கள். விஜயகாந்த் கட்சியையும் வலியப்போய் ஆதரித்தார்கள். ஆகவே அவர்களுக்கு எந்த பாரபட்சமும் இல்லை. அப்படியானால் சமக சரத்குமாரை அவர்கள் ஏன் ஆதரிக்கவில்லை எனும் குதர்க்கமான கேள்வி உங்களுக்கு எழக்கூடும். அம்மாவையே நேரடியாக ஆதரிப்பவர்கள், அம்மாவின் அடிப்பொடியான சரத்குமாரை தனியாக ஒரு முறை எப்படி ஆதரிக்க முடியும்? ஆனால் ஒன்று, இனாதானா விஜய் கட்சி ஆரம்பித்தாலோ அல்லது நடிகர் சூரி கட்சி ஆரம்பித்தாலோ இடதுசாரிகளின் ஆதரவு அவர்களுக்கு கட்டாயம் உண்டு என்பதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.

கம்யூனிஸ்ட்களின் இன்னொரு பண்பு தியாகம். இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலினின் மகன் ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்படுகிறார். செய்தியறிந்த ஜெர்மானிய அரசு, ரஷ்யா வசம் கைதியாக உள்ள சில ஜெர்மன் ராணுவத் தளபதிகளை விடுவித்தால் ஸ்டாலின் மகன் விடுவிக்கப்படுவார் என பேரம் பேசுகிறது. பல வீரர்களை போரில் இழந்து கைது செய்த தளபதிகளை ஒரு வீரனுக்காக விடுவிக்க முடியாது என்றார் ஸ்டாலின். அதன் பிறகு அவர் மகன் ஜெர்மன் அரசால் கொல்லப்பட்டார்.

சொந்த மகனை நாட்டுக்காக இழந்த ஸ்டாலின் செய்தது தியாகம் என்றால் இரண்டு எம்பி சீட்டுக்காக தங்கள் தன்மானத்தையே இழந்து ஜெயா விரட்டியடிக்கும்வரை போயஸ் தோட்டத்து வாயிலில் காத்திருந்த இடதுசாரி தலைவர்கள் செய்திருப்பது அந்த தியாகத்தைக் காட்டிலும் மேம்பட்டதில்லையா? தன்மானத்துக்காக சொந்த உறவைக்கூட இழக்கத் தயாராக இருப்பவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட். அந்த தன்மானத்தையே கட்சிக்காக தியாகம் செய்பவன் கம்யூனிஸ்டைக் காட்டிலும் உயர்ந்தவனாகத்தானே இருக்க முடியும்? இந்த கோணத்தில் யோசியுங்கள் லாஜிக் கொஞ்சம்கூட இடிக்காது.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் கைமேல் பலனை எதிர்பார்த்து வேலை செய்பவன் அல்ல. 1848-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்படுகிறது. அதன் பலனை உலகம் கண்டது 1917-ல்தான். இடைப்பட்ட அந்த 70 ஆண்டு காலத்தில் கம்யூனிசப் புரட்சிக்காக உழைத்தவர்களில் பலர் அந்த உழைப்பிற்கான எந்த விளைவையும் தம் வாழ்நாளில் கண்டதில்லை, மார்க்ஸ் ஏங்கல்ஸ் உட்பட. தன் வாழ்நாளில் சாத்தியமில்லை என தெரிந்துதான் அவர்கள் தங்களது லட்சியத்துக்காக உழைத்தார்கள். ஒரு விதத்தில் நமது இடதுசாரி தலைவர்களும் அப்படியே.

மம்மியை இந்துமதவெறி எதிர்ப்பாளராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது இந்த இடதுசாரிகளின் வாழ்நாள் இலட்சியம். ஆனால் மம்மியோ பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் காங்கிரசை மட்டுமே பொளக்கிறார். தமிழக காங்கிரஸ்காரர்களே தேர்தல் வேலையை விட்டுவிட்டு சொந்த வேலை பார்க்க கிளம்பி விட்டார்கள். சத்தியமூர்த்திபவன் காத்து வாங்குவதால் அங்கே டீ விற்பவர் கூட இரண்டு மாத விடுப்பில் சென்றுவிட்டதாக தகவல். இந்த தேர்தலில் தமிழக காங். ஒரு செத்த பாம்பு, அதையே இந்த அடி அடிக்கும் ஜெயா, பாஜக பற்றி மூச்சுகூட விடவில்லை. மதவாதத்துக்கு எதிராக ஜெயா செயல்படுவதை பார்க்கும் வாய்ப்பு நம் யாருடைய வாழ்நாளிலும் சாத்தியமில்லை. ஆயினும் ஜெயலலிதாவை மதவாதத்துக்கு எதிரான சக்தியாக்கிப் பார்க்கும் லட்சிய வேட்கை இவர்களிடம் குறையவில்லை. பலமுறை நாய்க்கடி பட்ட பிறகும், அதன் வாலை நிமிர்த்தியே தீருவோம் என்று விடாமல் பின்தொடர்கிறார்களே, அந்த இடத்தில்தான் நிற்கிறார்கள் நம்ம வலது இடதுகள்.

ஜெயா - சோ

ஒரு காலத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சியிலும் சேரவேண்டுமானால் சில விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிடவேண்டும். இப்போது அங்கே உறுப்பினராவது சிம்கார்டு வாங்குவதைவிட சுலபம். தொழிற்சங்கத்துக்காக உயிரைக்கூட கொடுத்த தியாகிகள் அங்கே இருந்தார்கள். இப்போது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காலம் முடிந்துவிட்டது என ஒரு டி.வி பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் டி.கே ரங்கராஜன். கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினர்கள் கூலி வேலை பார்த்து சாப்பிட்ட காலம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்புகூட தமிழகத்தில் இருந்தது  ஆனால் இப்போது தளி ராமச்சந்திரனைப் போன்ற ரவுடிகளும் பெருமுதலாளிகளும் கட்சியில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கட்சியின் செல்வாக்கு மட்டுமல்ல, அதன் மீதிருந்த நன்மதிப்பும் மிகவேகமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

ஆகப்பெரும்பாலான அரசு நிறுவனத் தொழிற்சங்கங்கள் ஊழியர்களது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி வைக்கும் தரகுவேலையைத்தான் செய்கின்றன (“எனக்கு கும்பகோணத்துக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொடுத்த சங்கத் தலைவர்களுக்கு நன்றி” என ஒரு பெரிய பேனரை தஞ்சை ரயிலடியில் பார்த்தேன்). தனியார் நிறுவனங்களிலோ முதலாளிகளுக்கு விசுவாசமாக வேலைபார்க்கும் ஒரு நிறுவனப் பிரிவாகவே பல தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.

தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளைக் காட்டிலும் நாங்கள் மேம்பட்டவர்கள் என நிரூபிக்கும் ஆதாரமாக இடதுசாரிகள் வசம் அவர்கள் வரலாறு மட்டுமே இன்றைக்கு இருக்கிறது. எந்த ஒரு போலிப் பொருளும் தோற்றத்தில் அசலைப் போல இருக்கவேண்டும் என்பது எல்லா சந்தையிலும் இருக்கிற விதி. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நல்இயல்புகள், கம்யூனிஸ்டுகளின் ஒழுக்கம் என்பவையெல்லாம் அசலைப்போன்ற ஒரு தோற்றத்தை இதுநாள்வரை நமக்கு காட்டி வந்தன. அப்படியான ஒரு தோற்றமும் இனி அவசியமில்லை எனும் முடிவிற்கு இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இன்றைய காட்சிகள் நமக்கு காட்டுகின்றன.

பொதுவுடமை சித்தாந்தங்களை இவர்கள் எப்போதோ கைகழுவிவிட்டார்கள், கம்யூனிஸ்ட் போல தோன்றுவதையும்கூட இவர்கள் இப்போது விரும்புவதில்லை. கம்யூனிஸ்ட் எனும் பெயரைத் துறக்கும் பட்சத்தில் ஒரு சீட் கூடுதலாக கிடைக்குமென்றால் அதையும் இவர்கள் துறந்துவிடுவார்கள். அந்த நன்னாளுக்காகவே நான் காத்திருக்கிறேன். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கும் நல்லது கம்யூனிசத்துக்கும் நல்லது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s