சிறார் குற்றவாளிகள் வயதுவரம்பு : குற்றவாளி யார் ?


மத்திய அமைச்சரவை சிறார் குற்றவாளிகளது குறைந்தபட்ச வயதுவரம்பை 18ல் இருந்து பதினாறாக குறைக்க ஒப்புக்கொண்டிருக்கிறது (தற்சமயத்துக்கு தீவிரமான குற்றங்களுக்கு மட்டும்). இது திடீரென நிகழ்ந்ததல்ல. பாஜகவின் உடன் பங்காளியான காங்கிரஸ் ஆட்சியிலேயே பரிசீலிக்கப்பட்டது. சிறார்களுக்கான வயது குறைப்பு கோரிக்கை பெரிய அளவில் எழுந்தது டெல்லி நிர்பயா படுகொலைக்குப் பிறகுதான். அரசு, மக்களின் எல்லா கோரிக்கைகளுக்கும் செவிமடுப்பதில்லை. மக்களின் எந்த கோரிக்கை அரசின் அதிகாரத்தை இன்னும் அதிகமாக்குகிறதோ, எந்த கோரிக்கை அரசின் பொறுப்பை குறைக்கிறதோ அந்த கோரிக்கைகள் உடனடியாக அமலுக்கு வருவதும், உண்மையான தீர்வுகளை தரவல்ல கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுவதும் இங்கே தொடர் நிகழ்வு.
இதற்கு பல உதாரணங்களை நம்மால் காட்ட முடியும். தனியார்மயத்தின் பல நடவடிக்கைகள் மக்கள் விருப்பம் எனும் பெயரிலேயே அமலுக்கு வந்தன. போலீசின் என்கவுண்டர்களும் இந்த அடிப்படையிலேயே நியாயப்படுத்தப்பட்டன. அப்படியான ஒரு செயல்பாடே சிறார்களுக்கான வயதுவரம்பு குறைப்பு எனும் அமைச்சரவை நடவடிக்கை. இந்த நடவடிக்கையை டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியிருக்கிறது. இதனை பாராட்டுக்குரிய முடிவாக மக்கள் மனதில் பதியவைப்பதில் ஊடகங்களுக்கு பெரிய சிரமம் இருக்கப்போவதில்லை. இது குறித்த விவாதங்கள் போதிய அளவில் எழவில்லை என்பது இன்னும் ஒரு அபாயகரமான சமிஞ்சை. ஆகவே இதனைப்பற்றிய விவாதங்களை முன்னெடுப்பது இன்றைய சூழலில் அவசியமாகிறது.
சிறார்களுக்கு என தனியே நீதிமுறையும் நல்வழிப்படுத்தும் அமைப்பும் ஏன் இருக்கிறது எனும் புரிதல் பெரும்பான்மையானவர்களுக்கு இல்லை. அதனை சிறார்களுக்கான ஒரு சலுகையாக கருதும் போக்குதான் பரவலாக இருக்கிறது. ஆகவே சிறார் குற்றவாளிகளது வயது குறைப்பு நடவடிக்கையை சரியா தவறா என விவாதிக்கும் முன்பு சிறார்கள் எவ்வகையில் வயதுவந்தோரிடமிருந்து மாறுபடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
நீண்டகால விளைவுகள் பற்றிய அறிவும் புரிதலும் வளர்இளம் பருவத்தவர்களுக்கு வயதுவந்தோரைவிட குறைவாகவே இருக்கிறது. 16 வயதுடையவர்களைக் கொண்ட குழுவினரிடையே நடைபெற்ற ஆய்வில் அவர்களில் 25 சதவிகிதத்தவரே எதிர்காலம் பற்றிய புரிதலைக் கொண்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. 18 வயதானவர்களிடையே நடத்தப்பட்ட இதே சோதனையில் 42 சதவிகிதத்தினர் மட்டுமே எதிர்காலம் பற்றிய புரிதலுடையவர்களாக இருந்திருக்கின்றனர். பெரும்பான்மை உளவியலாளர்கள் கூற்றுப்படி சிறார்களது சிந்தனை முறை தற்காலம் எனும் ஒரு வட்டத்தை சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. பொதுவாக சிறார்களது சிந்தனை திறனைக் கொண்டு மதிப்பிடுகையில் அவர்களது பார்வையில் எதிர்காலம் என்பது மிகச்சில நாட்கள் மட்டுமே என்கிறது உளவியல். சிறார்களது மூளை நரம்பியல் ஆய்வுகளும் இதனை உறுதி செய்வதாகவே இருக்கிறது.
மூளையின் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியை செய்கின்றன. அதில் frontal lobe ஆனது மனிதனின் தர்க ரீதியான சிந்தனை, திட்டமிடல், எதிர்கால விளைவுகளை முன்கூட்டியே அவதானித்தல் மற்றும் பரிசீலித்தல், கோபம் போன்ற மன உணர்வுகளை திறம்பட கையாள்தல் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. பல்வேறு வயதுடைய நபர்களின் மூளை MRI சோதனைகளில் வயது வந்தோருக்கும் சிறார்களுக்கும் அவர்களது frontal lobe ல் குறிப்பாக prefrontal cortex ல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. (கூடுதல் விவரங்களுக்கு : http://www.hrw.org/reports/2005/us1005/6.htm#_ftn86). சிறார்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்வதற்கான மூளைத்திறனை பெற்றிருக்கவில்லை என இந்த ஆய்வு நிறுவுகிறது.
// நாம் பெரியவனாகி டாக்டராவேன் எனறெல்லாம் குழந்தைகள் சொல்வது அவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டமிடலால் அல்ல, அப்படி சொல்வதால் கிடைக்கும் உடனடி அங்கீகாரத்தால். யாரும் அதை கண்டுகொள்ளாவிட்டால் எந்த குழந்தையும் அப்படி சொல்லாது //
வளர்ச்சி, மூளைத்திறன் மட்டுமல்ல குழந்தைகளின் பிரதான கற்றல் முறையையும் இங்கே நாம் பரிசீலித்தாக வேண்டும்.
1. போலச்செய்தல் (imitation). பிறர் செய்வதை அப்படியே செய்து பார்ப்பதன் மூலம் குழந்தைகள் கற்கின்றன. மனிதர்களின் மொழி வளர்ச்சியே இந்த திறனால்தான் ஏற்படுகிறது.
2. முயன்று தவறி கற்றல் (trial and error). எந்த ஒரு செயலையும் செய்துபார்த்து அதன் விளைவுகள் வாயிலாக கற்கிறார்கள்.
3. அனுபவங்களை மற்ற செயல்பாடுகளோடு பொருத்திப்பார்ப்பது மற்றும் அதனை பொதுமைப்படுத்துவதன் வாயிலாக கற்கிறார்கள். ஒரு ஆசிரியர் அடித்தால் பள்ளியின்மீதே வெறுப்பு வருவது இப்படித்தான்.

இந்த எல்லா கற்றல் முறைகளிலும் ஒரு ஒற்றுமையை கவனிக்க முடியும். இவை எதிலும் நியாமானது நியாயமற்றது எனும் விதி இருப்பதில்லை. சரி தவறு என்பதுகூட தேவையானது தேவையற்றது எனும் விதியின் அடிப்படையிலேயே அமைகிறது. பெரியவர்களும் இப்படியான வழிமுறைகளில்தான் கற்கிறோம். ஆனால் நாம் ஒரு செயலின் விளைவுகளை மதிப்பிடுகிறோம், ஒரு செயலால் கிடைக்கும் பலன் அதன் எதிர்விளைவுகளைக் காட்டிலும் மதிப்புடையதா அல்லது அதன் எதிர் விளைவுகள் நம்மால் சமாளிக்கக்கூடியதா என்பதையெல்லாம் கணக்கிடும் திறன் நமக்கு இருக்கிறது.

விரும்பிய ஒரு பொருளைப் பெற மாற்று வழிகளை நம்மால் ஆராய முடியும். அதற்காக நம்மால் சில காலம் காத்திருக்க இயலும் அல்லது சரியான காரணங்கள் இருக்கையில் நம்மால் அதனை விட்டுத்தர இயலும். இவை சிறார்களுக்கு இருப்பதில்லை. இதன் காரணமாகவே சிறார்கள் ஈடுபடும் குற்றங்களுக்கு அவர்கள் (மட்டும்) பொறுப்பாளியல்ல எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் சிறார்களது நீதிச்சட்டமும் அவர்களை கையாளவேண்டிய நெறிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன.

சிறார் குற்றவாளிகளது வயது வரம்பு குறைப்புக்கான நியாயமாக முன்வைக்கப்படும் கருத்து இன்றைய சிறார்கள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பது. இது நம்மிடையே உள்ள பல முட்டாள்தனமான கருத்துக்களில் ஒன்று. இந்த தலைமுறை சிறார்களது அறிவில் பிரம்மிக்கத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களுக்குத் தக்கபடி அவர்களது அவர்களது அறிவுத்தளம் மாறியிருக்கிறது. பதினெட்டு வயதில் என் அப்பாவுக்கு இருந்த விவசாயம் சார்ந்த அறிவு எனக்கு கிடையாது, அந்த வயதில் எனக்கு கிடைத்த கணினி பற்றிய அறிவு என் அப்பாவுக்கு இல்லை. இது வெறும் மாறுதலேயன்றி அறிவாற்றலில் நிகழ்ந்த புலிப்பாய்ச்சலல்ல.

மேலும் எது அறிவு என்பதிலும் நம் நாட்டில் பல குழப்பங்கள் இருக்கிறது. தகவல்களை அறிந்திருப்பதே அறிவு என்பதாகவே நம்மில் பலரும் கருதுகிறோம். ஆகவே சிறார்களது மிகவேகமான கற்றல் திறனை நாம் அறிவு முதிர்ச்சி என புரிந்துகொள்கிறோம். ஆனால் அறிவு என்பது தகவல்களைக் பயன்படுத்தும் ஆற்றலையும் தகவல்களைக் கொண்டு உருவாக்கிக்கொள்ளும் தனிப்பட்ட கண்ணோட்டத்திலும் இருக்கிறது. எளிமையாக உதாரணத்தோடு சொல்வதானால், சுயநலம் என்பது மனிதனின் இயல்பான குணம். ஆனால் எது சுயநலம் எனும் புரிதலும் அது தவறு எனும் கண்ணோட்டமும் உங்களுக்கு இருக்கையில், நீங்கள் உங்கள் இயல்பான சுயநலத்தை தவறென தீர்மானித்து பிறருக்கு உதவுபவராக உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்வீர்கள். சுயநலம் மட்டுமல்ல சமூகத்தோடு சேர்ந்து செயல்படுவது, வன்முறை சிந்தனை உட்பட பெரும்பாலான குணங்கள் எல்லா மனிதருக்குள்ளும் இருப்பவைதான். நமது புரிதலும் கண்ணோட்டமும்தான் அவை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ நம் ஆளுமையில் வெளிப்பட காரணாமாக அமைகின்றன.

பெரும்பான்மை நாடுகள் சிறார் வயதுவரம்மை 18 ஆக நிர்ணயித்திருக்கின்றன. நியூசிலாந்தில் இது இருபதாகவும் ஆஸ்திரேலியாவில் பதினேழாகவும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மட்டும் பதினாறாகவும் இருக்கிறது. அறிவியல்பூர்வமாக பதினெட்டு வயது என்பது ஒரு உத்தேச வரம்பு மட்டுமே. உடல்நிலை, வளர்ப்புமுறை, வளரும் சூழல் ஆகயவற்றைப்பொருத்து இது கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

இந்தியாவில் சிறார் வயதுவரம்பை குறைக்கும் சூழல் வந்துவிட்டதா? எனும் கேள்வியோடு இவ்விவகாரத்தை இன்னும் நெருக்கமாக விவாதிக்கலாம். குழந்தை வளர்ப்பில் மிக மோசமான நாடாக இந்தியா இருக்கும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. இங்கே பல குடும்பங்களில் குழந்தை என்பது அவர்களது கவுரவ சின்னம், ஒரு ஃபிக்சட் டெபாசிட், ஒரு பென்ஷன் ஸ்கீம், தங்கள் கனவுகளை சுமக்கும் கூலி என பல்வேறு எதிர்பார்ப்புக்களின் தொகுப்பு. அதனால்தான் இங்கே ஒரு குழந்தை தனி மனிதனாக அல்லாமல் பொக்கிஷத்தைப்போல பராமரிக்கப்படுகிறது.

மனிதனது அற உணர்வானது அவன் சமூகத்தோடு கொள்ளும் தொடர்புகள் மூலம் உருவாகிறது. இங்கோ பெரும்பாலான மேல்தட்டு மற்றும் மத்தியதரவர்க சிறார்கள் சமூகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாக வளர்க்கப்படுக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இயல்பான மனவளர்ச்சி தாமதமகிறது. அறிவுவளர்ச்சிக்கான அளவீடான ஐ.க்யூவைக் காட்டிலும் சமூகத்தோடு இணைந்து வாழ தேவையான எமோஷனல் இண்டலிஜென்ஸ் மதிப்பெண்தான் ஒரு மனிதனின் சிறப்பான எதிர்காலத்துக்கு தேவை என்கிறது அறிவியல். அந்த அடிப்படையில் பார்த்தால் நாம் மிக்க்குறைவான மனமுதிர்ச்சி கொண்ட இளைஞர்களைத்தான் உற்பத்தி செய்கிறோம் என்பது தெளிவு.

ஒவ்வொரு வர்க குழந்தைகளுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் இங்கே குடும்ப மற்றும் சமூக சூழலால் உருவாகின்றன. வறுமையில் உள்ள சிறார்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்த பெற்றோர்களால் முடிவதில்லை. அவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களும் மற்ற அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. ஆனால் எளிதில் அவர்களை சென்றடையும் ஊடகங்களால் வசதியான வாழ்வின் இன்பங்கள் அறிமுகமாகின்றன. இதனால் அவர்களது விருப்பத்துக்கும் யதார்தத்துக்கும் இடையே உண்டாகும் பெரிய இடைவெளி கவனிப்பாரற்ற பள்ளிச்சூழலால் அவர்களது மனமுதிர்ச்சியை பாதிக்கின்றது.

நடுத்தரவர்க குழந்தைகளது சிக்கல் வேறுவகையானது, அவர்களுக்கு எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால் அவர்களது எதை விரும்பவேண்டும் என பெற்றோர்தான் தீர்மானிக்கிறார்கள். ஆர்வம், திறமை ஆகியவை புறந்தள்ளப்பட்டு எல்லா மாணவர்களுக்கும் ஒரேவிதமான கால அட்டவணை திணிக்கப்படுகிறது. பள்ளி இறுதிவகுப்பை தாண்டுவதற்குள் தன் பிள்ளைகளுக்கு எல்லா திறமைகளையும் இன்ஸ்டால் செய்துவிடும் பெற்றோரது முனைப்பு அவர்களது இயற்கையான கற்றல் முறைகளை முற்றாக சிதைக்கின்றன. போதாததற்கு, போட்டியில் முந்தாவிட்டால் உனக்கு மதிப்பில்லை என தொடர்ந்து தரப்படும் எச்சரிக்கை அவர்களை எப்போதும் ஒரு பதட்டத்திலேயே வைத்திருக்கிறது. டிவி பாட்டுப்போட்டியில் தன் குழந்தை தோற்றால்கூட கதறியழும் பெற்றோர்கள் பார்க்கும் குழந்தைகள் மனதிலும் தோல்வி மீதான அச்சத்தை விதைக்கிறார்கள். தொடர் வேலைஅழுத்தமும் அச்ச உணர்வும் பெரியவர்களுக்கே மனச்சிதைவை உருவாக்கும் எனும்போது குழந்தைகள் என்ன ஆவார்கள்?

பணக்கார மாணவர்களும் பிரச்சனைக்குரிய சூழலில்தான் வளர்கிறார்கள். மற்ற மாணவர்களுக்கு பெரும் கனவாக உள்ள வசதிகள்கூட இவர்களுக்கு சாதாரணமாக கிடைக்கிறது. எதையும் முயற்சி செய்து பெறவேண்டும் எனும் மனித இயல்பு இவர்களுக்கு தேவையில்லாது போவதால் அவர்களது முயற்சி செய்யும் இயல்பு வேறு மோசமான வழிகளில் திரும்புகிறது. வெறித்தனமான வேகத்தில் வண்டி ஓட்டுவது என்பது நான் பார்த்த பெரும்பான்மையான செல்வந்தர்களது பிள்ளைகளின் பொழுதுபோக்காக இருந்தது.

இன்றைய இந்திய பொருளாதார சூழல் பெருந்தொகையான சிறார் குற்றவாளிகளை உருவாக்கும் தகுதிகளைக் கொண்டிருக்கிறது. பிறகு ஏன் எல்லா குழந்தைகளும் குற்றவாளிகளாவதில்லை எனும் சந்தேகம் இவ்விடத்தில் இயல்பாக முளைக்கலாம். ஒரு அபாயகரமான சூழல் என்பது நூறுசதவிகித மக்களையும் பாதிக்க வேண்டும் என எந்த விதியும் இல்லை. போபால் விஷவாயு விபத்தில் இருபதாயிரம் பேர் இறந்தார்கள் என யாரேனும் சொன்னால் அங்கிருந்த மற்றவர்கள் ஏன் சாகவில்லை கேள்வி எழுப்புவது எத்தகைய முட்டாள்தனமோ அத்தனை முட்டாள்தனமானது இந்தக்கேள்வி. ஒரு மோசமான சூழலானது பலவீனமானவர்களை எளிதில் பாதிக்கின்றது மற்றும் சூழலோடு மேலும் சில காரணிகள் இணையும்போது அதனை எதிர்கொள்வோரை பாதிக்கின்றது. இந்த அடிப்படையில்தான் நாம் இவ்விவகாரத்தை அணுகவேண்டும்.

இந்தியாவில் மேலும் பல பாதகமான அம்சங்கள் சிறார் பாதுகாப்பு விவகாரத்தில் இருக்கிறது. 5 முதல் 14 வயதுக்கு உட்பட்ட ஒன்றேகால் கோடி சிறார்கள் இந்தியாவில் தொழிலாளியாக இருக்கிறார்கள். இது மொத்த சிறார்களில் 5 சதவிகிதம். 13 மாநிலங்களில் 12,500 சிறார்களிடையே மத்திய அரசால் நடத்தப்பட்ட ஆய்வில் 53 சதவிகித குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டிருக்கிறது (2007 ஏப்ரலில் இவ்வறிக்கை அன்றைய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரேனுகா சவுத்தியால் வெளியிடப்பட்டது). இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பத்தில் நால்வர் வளரிளம் பருவத்தவர்கள். பதிவாகும் ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னால் 8 முதல் 10 வரையான பதிவாகாத தற்கொலை முயற்சிகள் இருக்கின்றன. தேர்வில் தோற்ற காரணத்துகாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2011 ல் மட்டும் 2381. 2012ல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான சிறார்களது எண்ணிக்கை 8541. கல்வி மறுக்கப்படுவது, ஊட்டச்சத்தின்மை, வறுமை போன்ற தரவுகளை பட்டியலிட்டால் அது இன்னும் அவமானகரமான எல்லைக்கு இட்டுச்செல்லும்.

இவ்வளவு தீவிரமான பிரச்சனைகள் பற்றி எந்த விவாதமும் செய்திராத மத்திய அமைச்சரவை சிறார் குற்றவாளிகளின் வயதைக் குறைக்க மட்டும் தீவிரம் காட்டியது. அவர்கள் விவாதித்த செய்தி முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. 2012ல் கைது செய்யப்பட சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கை 35,495. அதில் 16 சதமானவர்கள் கொலை, கடத்தல், பாலியல் வன்முறை, கொலை முயற்சி போன்ற தீவிர குற்றங்களுக்காக கைதானவர்கள். இதில் கொலைவழக்கில் கைதானவர்கள் 1,213 பேர். பாலியல் வன்முறை வழக்கில் கைதானவர்கள் 1,305 பேர், கொலை முயற்சி வழக்கு 1088 பேர். இதனை விவாதித்த அமைச்சரவை சிறார் குற்றவாளிகளின் வயதை குறைத்ததோடு மட்டும் நிறுத்திக்கொண்டிருக்கிறது.

சிறார்கள் மீதான வன்முறையையும் சிறார்கள் ஈடுபடும் குற்றங்களையும் ஒப்பிட்டால் எது உடனடியாக கவனிக்கப்படவேண்டியது என்பது நமக்கு ஓரளவுக்கு புரியலாம். ஆனால் அரசு ஏன் சிறார்கள் மீதான வன்முறைகளை கண்டுகொள்ளாமல் சிறார் குற்றவாளிகளது வயதுவரம்பைக் குறைக்க மட்டும் மெனக்கெடுகிறது?

காரணம், சிறார்கள் மீதான வன்முறையையும் சிறார்கள் ஈடுபடும் வன்முறையையும் ஒழிக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை என்பது அரசை செலுத்து அதிகார மையங்களுக்கும் அவர்கள் கொள்கைகளுக்கும் எதிரானதாகவே இருக்கும். அனைவருக்கும் ஒரே தரத்திலான கல்வியை உறுதி செய்வது, கல்விக்கொள்ளையை ஒழிப்பது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது, நுகர்வு வெறியை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை செயல்படுத்தாமல் சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இவை எல்லாம் முதலாளித்துவத்தின் பார்வையில் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகள். ஆகவே அந்த பாதையில் இந்திய அரசால் ஓரடிகூட பயணிக்க முடியாது. இந்த இயலாமையை மறைக்க சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கையை மட்டும் பூதாகரமாக்கி அதனை தீர்த்துவிட்டதைப்போல ஒரு பாசாங்கை அரசு செய்திருக்கிறது.

இன்னொரு கோணத்தில் பார்க்கையில், இந்தியாவில் இருக்கும் எல்லா அரசுகளும் மக்களில் சிலரை பலியிடுவதன் வாயிலாகத்தான் பல்வேறு சிக்கல்களில் இருந்து தப்பிக்கின்றன. அரசின் மீது அதிருப்தி கூடினால் வங்கிக்கொள்ளையர்களை சுட்டுக்கொன்று அதனை சாதனையாக்குவதும், அஃப்சல் குருவை தூக்கிலிட்டு தேசபக்தி பஜனையை உருவாக்கி அதனால் அரசின் சுரண்டல்களை மறைப்பதும் இங்கே வழக்கமான சம்பவங்கள். பாஜக இந்த தொழில்நுட்பத்தில் கரைகண்ட கட்சி. மனித உயிர்கள் காங்கிரசுக்கு ஒரு சேமிப்பைப்போல, அதை அவர்கள் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் பாஜகவுக்கு மக்கள் உயிர்தான் முதலீடு, அதிலிருந்து அவர்கள் எப்போதும் வருமானத்தை எதிர்பார்த்தபடியே இருப்பார்கள். இந்த அடிப்படை வேறுபாடு காரணமாகவே பாஜக இத்தனை விரைவாக சிறார் குற்றவாளிகள் வயது திருத்தத்தை செய்கிறது.

இந்த திருத்தம் ஏன் எதிர்க்கப்படவேண்டிய விடயமாகிறது?

நம் நாட்டில் ஈவிரக்கமற்ற காவல்துறையும் பாரபட்சங்கள் நிறைந்த நீதித்துறையும்தான் இருக்கிறது. இப்போதும் பெரும்பான்மை கைதிகள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் சிறுபான்மையோராகவும்தான் இருக்கின்றனர். நிராதரவானவர்களை காவல்துறை நடத்தும் முறை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கொடூரமானது. கடும் ரத்தக் காயத்தோடு கைதி ஆஜரானாலும் அவரை நிமிர்ந்துகூட பார்க்காமல் ரிமாண்டு செய்யும் நீதித்துறை நம்முடையது. இந்த அபாயகரமான சூழலில் சமூகத்தின் இன்னொரு ஆதரவற்ற பிரிவான சிறார்கள் போலீஸ் வசம் சிக்கினால் என்னவாகும்?

கடுமையான குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே இந்த வயதுக்குறைப்பு பொருந்தும் என சொல்லப்பட்டாலும், அது பெரிய அளாவில் இங்கே கவனத்தில் கொள்ளப்படாது. ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற போபால் விஷவாயு கசிவு வழக்கில் அதற்கு பொறுப்பானவர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட தண்டனை 2 ஆண்டுகள், சட்டப்படி அவர்கள் சாதாரண குற்றவாளிகள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கொலையாளிக்கு சாப்பாடு போட்டவரும் பேட்டரி வாங்கித்தந்தவரும்!!! மரணதண்டனை தருமளவுக்கு கடும் குற்றம் செய்தவர்களாகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவனையும் பணக்காரனையும் பாதிக்கும் எல்லா குற்றமும் இங்கே கடுங்குற்றமே. ஆகவே இச்சட்டத்திருத்தம் பதினேழு பதினெட்டு வயதானவர்களை முழுமையாக போலீஸ் நடவடிக்கை வரம்புக்கு கொண்டு வந்துவிட்டதாகத்தான் கருதவேண்டும். ஆதரவற்ற மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை பெரிய குற்றங்களுக்கு போலியாக சிக்கவைப்பது போலீசுக்கு ஒப்பீட்டளவில் மிக எளிதான காரியம்.

இந்த நடவடிக்கை பலரும் நினைப்பதுபோல சிறார்கள் ஈடுபடும் குற்றங்களை குறைக்கப்போவதில்லை. பதினாறு வயதான ஒரு சிறுவனை போலீஸ் சிறைக்கு அனுப்பினால், அவர் குற்றவாளியானாலும் நிரபராதியானாலும் வழக்கு முடிவதற்குள் சிறையில் எல்லா கிரிமினல்தனங்களையும் கற்றுக்கொண்டு வெளியே வருவார். காரணம் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான குற்றஉணர்ச்சியானது முழுமையடையும் காலம் அது. இந்த வளர்ச்சி முற்றிலுமாக நமது சந்திக்கும் சமூகத்தை சார்ந்திருக்கிறது. குற்றமிழைத்த அல்லது அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட ஒரு பதின்வயது சிறுவன் வயது வந்தோருக்கான சிறைக்கு செல்கையில் அச்சூழல் அவரது குற்ற உணர்வை முற்றிலுமாக சிதைக்கிறது. இதனால் அவர்கள் தொழில்முறை கிரிமினல்களைவிட ஆபத்தானவர்களாக வெளியேவர வாய்ப்புக்கள் மிக அதிகம்.

// ஆண்டி-சோஷியல் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் எனும் ஆபத்தான உளக்கோளாறு கொண்டவர்களின் மிக முக்கிய அறிகுறி அவர்களுக்கு குற்ற உணர்வு இயல்பாகவே இருக்காது என்பதுதான். அதுதான் அவர்களை பெரும் குற்றங்களை சாதாரணமாக செய்யவைக்கிறது.

பபூன் குரங்குகளுக்குகூட குற்றஉணர்வு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. கூட்டத்தின் தலைவனை ஏமாற்றிவிட்டு காதல் செய்யப்போகும் பெண் குரங்குகள் தலையை தாழ்த்திக்கொண்டு கண்களை வேறுபக்கம் திருப்பிக்கொள்ளும் உடல்மொழியை வெளிப்படுத்துகின்றன.

சிறைகளில் ஹோமோ செக்ஸ் அல்லது லெஸ்பியன் குற்றங்கள் அதிகம். அத்தகைய குற்றங்களுக்கு இலக்காவது உடல்வலுவற்ற கைதிகள்தான். சிறார்கள் சிறைக்கு அனுப்பப்பட்டால் அவர்கள் இத்தகைய பாலியல் வன்முறைக்கு ஆளாவது நிச்சயம். இளம்வயதில் தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாவோர் பிறகு சிறார்கள் மீது பாலியல் வன்முறை செய்வோராக மாறுவதற்கான சாத்தியம் அதிகம் எனபது இதன் இன்னொரு சிக்கல் //

எத்தனை தர்கங்களை நாம் வைத்தாலும் அதனை ஒற்றைக் கேள்வியால் எதிர்கொள்வார்கள் மனிதஉரிமை எதிர்ப்பாளர்கள் “அப்படியானால் குற்றமிழைக்கும் சிறார்களை அப்படியே விட்டுவிடலாமா?” இது ஓரளவுக்கு நியாயமான கேள்வியாக தோன்றலாம். சிறார் குற்றவாளிகளை அப்படியே விட்டுவிடுங்கள் என்பது யாரும் கோரவில்லை. இளம் குற்றவாளிகளை உருவாக்கும் புறச்சூழலை கண்டுகொள்ளாமல் குற்றமிழைக்கும் சிறார்கள் சிறார்களே அல்ல என சட்டமியற்றுவது எப்படி தீர்வாகும் என்றுதான் கேட்கிறோம். நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் சிறுவன் என்பதால் அவர் தப்பிவிட்டார் என கொந்தளித்துப்போய் நியாயம் பேசுவோர் நிறைந்திருக்கும் நாட்டில் எப்படி ஆண்டுக்கு எட்டாயிரம் சிறார்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள்? பாப்கார்னைப் போல செய்திகளும் நமக்கு ஒரு டைம்பாஸ் சமாச்சாரமாக மாறிவிட்டதன் விளைவாகவே இப்படி குதர்கமான கேள்விகள் நம்மிடமிருந்து வருகின்றன. செய்திகளை சரியாக புரிந்துகொள்பவர்கள் ‘போட்டுதள்ளும் தீர்வுகள்’ மட்டும் போதும் என்று சொல்ல மாட்டார்கள்.

சிறார்கள் ஈடுபடும் குற்றச்செயல்களை ஒரு சட்டத்தால் களைய முடியாது. அதன் பின்னால் பல சமூகப் பொருளாதார காரணிகள் இருக்கின்றன. எல்லோருக்கும் ஒரே தரத்திலான கட்டாயக் கல்வி வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு தங்கள் அறிவையும் ஆர்வத்தையும் நேர்மறையான செயல்பாடுகளின்பால் திருப்ப வாய்ப்பளிக்கமுடியும். மேலும் குற்ற நடத்தையுடைய மாணவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நல்வழிப்படுத்த முடியும்.
எல்லா துறை வேலைகளுக்கும் சமச்சீரான ஊதிய விகிதம் இருக்கையில் மரியாதைக் குறைவான வேலை என்றொன்று இருக்கப்போவதில்லை. அதனால் மரியாதைக்குறைவான கல்வி என்றொன்றும் இருக்கப்போவதில்லை. இதனால் மாணவர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தங்களுக்கு விருப்பமான படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட முடியும். மாணவர்களின் தனித்திறமையை கண்டறிகின்ற மற்றும் அதனை அங்கீகரிக்கின்ற கல்விமுறை இருக்கையில் எல்லா மாணவர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும். சிறார்கள் ஈடுபடும் குற்றங்களுக்கான பிரதான காரணியாக இருப்பது அவர்களது ஹீரோயிசத்தை காட்டும் முனைப்புதான் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

வறுமையும் அதன் காரணமாக நிகழும் இடப்பெயர்வும் தடுக்கப்பட்டால் குற்ற நடத்தை கொண்ட சிறுவர்கள் உருவாவதை தடுக்க இயலும். கிரிமினல்கள் தங்களுக்கான கூலிப்படையை இந்தப் பிரிவு இளையோர்களிடமிருந்தே உருவாக்குகிறார்கள்.

ஆதரவற்ற சிறார்களை அரசு பராமரித்து கல்வியளிப்பதன் மூலம் சிறார் குற்றங்களுக்கான வாய்ப்புக்களில் ஒன்றை தடுக்க இயலும். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சில பூட்டப்பட்ட வீடுகளில் உணவுப்பொருட்கள் மட்டும் திருடு போனது. பிற்பாடு அதற்காக சில சாலையோரத்தில் வசிக்கும் சிறுவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கே சமைத்து சாப்பிட்டது விசாரணையில் தெரிய வந்தது. அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டபூர்மாக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றங்கள் படிப்படியாக பெருமளவு குறைந்தது. காரணம் கருக்கலைப்பின் வாயிலாக விருப்பமில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை தவிர்க்கப்பட்டது. அதனால் கைவிடப்பட்ட சிறார்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அதன்விளைவாக குற்றச்செயல்கள் குறைந்தன.
இப்போது நம் நாட்டில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்கள் பெரியவர்கள் சிறைச்சாலையைப் போல தண்டனைக் கூடமாகத்தான் இருக்கின்றன. இவற்றை முறையான சீர்திருத்தப்பள்ளிகளாக ஆக்குவதன் மூலம் தொடர் குற்றமிழைக்கும் சிறார்களை பெருமளவு கட்டுப்படுத்தலாம். இது நிரூபிக்கப்பட்ட வழிமுறை, உத்தேசமான கருத்தல்ல.

மேற்சொன்ன வழிகள் மட்டுமின்றி முறையான குழந்தை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்துவது, பள்ளிகளில் எல்லா விளையாட்டுகளுக்கும் வசதி செய்வது என ஏராளமான சாத்தியமான தீர்வுகள் இருக்கின்றன. பரவலான விவாதத்தின் மூலம் இதைக்காட்டிலும் ஆக்கபூர்வமான தீர்வுகளை நாம் பெறமுடியும்.

கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பதின்மூன்று பேரை உள்ளடக்கிய இந்தியாவின் மத்திய அமைச்சரவைக்கு ஐன்ஸ்டீன் தியரியைக்கூட மாற்றும் அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் அறிவும் அக்கறையும் கிடையாது. நமது அடுத்த தலைமுறைக்கான நல்வாழ்வுக்கான தீர்வுகள் யாவும் சரியான அரசியல் நடவடிக்கை மூலமே சாத்தியமாகும். அதை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நாம் மட்டுமே செய்தாகவேண்டும்.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் கவனத்துக்கு: பகவானே பிள்ளைக்கறி சாப்பிடும் நாட்டில் ஆண்டவன் மீது பாரத்தை போட்டுவிட்டு உட்கார்ந்திருப்பதுகூட பெரிய ரிஸ்க்தான்.

Advertisements

“சிறார் குற்றவாளிகள் வயதுவரம்பு : குற்றவாளி யார் ?” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s