மோடித்வா – ஆண்டவன் நம்புறவங்களைத்தாங்க சோதிப்பான்!


பாஜக கருத்து கந்தசாமி – காயத்ரிக்களுக்கு சில டிப்சுகள் !

தந்திடிவி விவாதம்உலகின் மிகமோசமான வேலைகள் பட்டியலில் அரசருக்கு வைத்தியம் பார்ப்பதும் அடக்கம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை அரண்மனை வைத்தியர்கள் அரசருக்கு வந்த வியாதியை அவர் மலத்தை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பார்களாம். கிட்டத்தட்ட அதே போன்றதொரு வேலையை செய்யும்படி ஆலோசனை சொன்னார் தோழர் ஒருவர். அதாவது தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் பாஜக ஆட்களின் உரை”வீச்சத்தை” பார்த்து அதைப்பற்றி பதிவெழுத வேண்டும் என்பதுதான் அந்த ஆலோசனை.

அப்படி தொடர்ந்து பார்க்கையில்தான் காவி கட்சிக்காரர்கள் அனுபவிக்கும் கஷ்டம் தெரிந்தது. சிறுவனாக இருந்தபோது படித்த சிறுவர்மலர் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. திரேதாயுகத்தில் ஊர்மக்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள். கலியுகம் பிறந்த உடனே அவர்கள் எல்லோரும் சுயநலக்காரர்களாகவும் கபடதாரிகளாகவும் மாறுவார்கள். கதையின் முடிவில் ”கலியுகத்தில் மனிதன் எப்படி மாறுகிறான், பார்த்தீர்களா குழந்தைகளே” எனும் அறிவுரையும் இருந்தது. கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலைக்கு பாஜககாரர்கள் வந்து அறுபது நாளாகிறது.

ஜசோதாபென் மணாளன் ஆட்சிக்கு வரும் முன்னால் இவர்கள் பேச்சில் இருந்த ‘வீரம்’ என்ன! ஏழை மக்கள் மீதான ‘அக்கறை’ என்ன!! ஆனால் புதிய ஆட்சி வந்த பத்து நாளுக்குள் அவை பழங்கதையாகிவிட்டன. முன்பெல்லாம் தந்தி டிவி விவாதங்களில் தொகுப்பாளர் உட்பட பாஜகவுக்கு ஆதரவாக குறைந்தபட்சம் இரண்டு பேராவது இருப்பார்கள். ஆனால் தமிழக அரசியல் அநாதைகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்த பாஜக இன்று விவாதங்களில் அநாதையாக நிற்கிறது. ‘மோடி சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம்தான்’ என தேர்தலுக்கு முன்னால் சான்றிதழ் கொடுத்த கும்பலில் ஒருவர்கூட இன்று விவாதத்துக்கு வரும் நிலையில் இல்லை.

இதுகாறும் வாயை வைத்தே வண்டியை ஓட்டிய வைகோவும் தமிழருவியும் பாஜகவை தங்கள் நாவன்மையால் தாங்குவார்கள் என நடுநிலைவாதிகளே எதிர்பார்த்திருந்தார்கள். மோடி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் வைகோவின் ஈழ பிசினசை இருந்த இடம் தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றன. இனி அவர் பாதயாத்திரை போனால் காறித்துப்பக்கூட ஆளிருக்காது. ஆகவே அவரது நேரடியான ஆதரவுக்குரல் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அமையாத சம்மந்தங்களை அமைத்துவைக்கும் தமிழக அரசியலின் தமிழ்மேட்ரிமோனி டாட்காம் தமிழருவி மணியனின் நிலை இன்னும் கேவலம். என்னோடு தேர்தலில் மோதத்தயாரா என விஜயகாந்துக்கு சவால்விட்டு யார் குடிகாரன் என தமிழக மக்கள் குழம்பும் நிலைக்கு இறங்கிவிட்டார் மணியன். இனி அவரை விவாதத்துக்கு இறக்கினால் பாஜக நிலை இன்னும் நாறிவிடும்.

செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் எனும் அபார நம்பிக்கையை கொண்டிருக்கும் தமிழனிடம் மோடிக்காக கேன்வாஸ் செய்ய பத்ரி போன்ற முதலாளிகளும், வெங்கடேசன் போன்ற ஆடிட்டர்களும், பானு கோம்ஸ் போன்ற சமூக ஆர்வலர்களும் (எந்த சமூகத்துக்குன்னு கேக்கப்படாது) களமிறக்கப்பட்டார்கள். இப்போதோ, ‘அவன்தான் ஏட்டையா தாலிகட்டின ஒரிஜினல் புருஷன்’ என பாஜக ஆட்களை கைகாட்டிவிட்டு இந்த அறிவுஜீவிகள் ஒதுங்கிவிட்டார்கள். அமித்ஷாவை கட்சித் தலைவராக்கியதால் தான் ஏமாற்றமடைந்து விட்டதாக ஸ்டேட்டஸ் போட்டு உடைந்து போன நடுநிலை பெஞ்சில் சீட் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டார் பத்ரி.

தற்சமயத்துக்கு பாஜக, டிவி விவாதங்களின்போது ஒரு தனிமரமாய் நிற்கிறது. தேர்தலில் சரித்திரம் காணாத அளவுக்கு தோல்வியடைந்த சிபிஎம்காரர்கள் எல்லா விவாதங்களிலும் அடக்கமாட்டாட்டாத சிரிப்போடு அமர்ந்திருக்கிறார்கள். நாட்டையே விற்குமளவுக்கு பெரும்பான்மை பெற்ற பாஜகவினரோ பிரபல சீட்டிங் சாம்பியன் குரங்கு குப்பன் போல உர்ரென்று இருக்கிறார்கள். தோற்றவர்கள் கூடி ஜெயித்தவனை கலாய்க்கும் கொடுமை கலிகாலத்தில் மட்டும்தானே நடக்கும்? இந்த யுகத்தில் கலவரம் செய்வதைவிட விவாதம் செய்வது கடினமாக இருக்கும் என புருஷஸுக்தம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பிற்கே அன்னிய நாட்டின் பார்ட்னர்ஷிப்பைத் தேடும் பாஜகவை விவாதங்களில் தனித்துவிடுவது மகாபாபம். உட்காரும் இடத்தில் கட்டி வந்தவனைப் போன்ற அவர்களது உடல்மொழி பார்க்க சகிக்கவில்லை. ஆகவே விவாதங்களை எப்படி எதிர்கொள்வது என நம்மாலான ஆலோசனை அவர்களுக்கு சொல்வதுதான் நியாயம்…!!!

வழக்கமாக பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புக்கள் மூன்று வழிகளில் விவாதத்தை சந்திக்கின்றன.

சலவை நிலையங்களில் உள்பாவாடை காணாமல்போன பிரச்சனை என்றாலும் அதனை இந்திய கலாச்சாரம் பாரம்பர்யத்துடன் இணைத்து பேசுவது. (இந்தியாவில் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு அப்போதே இருந்தது, அதற்கான ஆதாரம்தான் காமசூத்ரா நூல்- பாலியல் கல்வி குறித்த விவாதம் ஒன்றில் எஸ்.ஆர்.சேகர்)
பாஜகவை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை என பதிலளிப்பது.
கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது. (சாதிக்கொடுமை பற்றி கேள்வி கேட்டால் தங்க நாற்கார சாலையை கொண்டுவந்த்து வாஜ்பாய் என்று பதிலளிப்பது)
இவையல்லாமல் வேறு சில துணை தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. அடுத்தவன் பேச்சு கேட்காத அளவுக்கு லபலபவென கத்துவது, நிறுத்தாமல் பேசுவது, தொகுப்பாளரை மிரட்டுவது, எல்லா விவாதத்திலும் சிறுபான்மையினரை வம்புக்கு இழுப்பது என்பன அவற்றுள் சில.

இவையெல்லாம் எதிர்கட்சியாக இருந்தவரை போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் ஆளுங்கட்சியானால் இன்னும் கொஞ்சம் திறமையாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனைகளைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். பாஜகவினர் விவாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்.

கேனத்தனம் நம் பிறப்புரிமை: எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேனத்தனமாக பேசுங்கள். அதனால் உடன் பேசுபவர்கள் இது என்ன விவாதம் என குழம்ப வேண்டும். ஆனால் அந்த கேனத்தனம் தொகுப்பாளரை கடுப்பாக்கிவிடக்கூடாது. (25 ஜூலை தந்தி டிவி விவாதத்தில் பேசிய பாஜக நாராயணன் இயல்பான கேனத்தனத்தோடும், கேனத்தனமான இயல்போடும் சிறப்பாகப் பேசினார். ரங்கராஜ் பாண்டேவே நிலைகுலைந்து போய் இது போங்காட்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்)

விதிமுறைக்குட்பட்டு திமிராக பேசுங்கள்: பட்ஜெட் விவாதம் ஒன்றில், ”பாஜக தேர்தல் அறிக்கை வருமானவரி வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என சொல்கிறது. ஆனால் நீங்கள் இரண்டரை லட்சம் வரை மட்டுமே விலக்களித்திருக்கின்றீர்கள்” என கேட்கிறார் தொகுப்பாளர். அதற்கு ராகவன், “ஐந்து லட்சமா உயர்த்துவோம்னுதான் சொன்னோம், என்னைக்குன்னு சொன்னோமா” என பதில் சொன்னார். அடுத்த நாலரை வருசங்களுக்கு எந்தப் பக்கிகளின் தயவும் தேவையில்லை என்பது நிஜம் என்றாலும் இந்த யுக்தியை எல்லா பிரிவு ஆட்களும் பயன்படுத்தக்கூடாது. திமிராக பேசுவதற்கான இரண்டாயிரம் வருட அனுபவப்பாத்தியம் கொண்ட ராகவன் போன்றோர் மட்டும்தான் இதனை செய்ய வேண்டும்.

கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்ல ஆரம்பியுங்கள்: கேள்விகள் என்றாலே பாஜகவுக்கு சிக்கல்தான். ஆகவே கேள்வி ஆரம்பிக்கும்போதே பதிலை சொல்ல ஆரம்பித்தால் தாராளமாக விவாதத்தில் பாதி நேரத்தை காலி செய்துவிடலாம். ஆனால் கேள்வி மோடிக்கு சாதகமாக இருக்கிறதா என கவனமாக பாருங்கள். ஏனென்றால் எல்லா ஊடக முதலாளிகளும் போதிய அளவு கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே சாதகமான கேள்விகள் வர வாய்ப்புக்கள் பலமாக உள்ளது.

தவறிக்கூட புள்ளிவிவரத்தோடு பேசாதீர்கள்: பாஜகவுக்கு காங்கிரசைவிட பெரிய எதிரி புள்ளிவிவரம்தான். அறிவும் நாணயமும் இல்லாதவன்தான் ஒரு வலதுசாரியாக இருக்க முடியும். ஆகவே புள்ளிவிவரத்தோடு பேசுவது பாஜகவின் தகுதிக்கு மீறிய செயல் மட்டுமல்ல. கொள்கை விரோதமும்கூட. தனுஷுக்குகூட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் செட் ஆகலாம், ஆனால் ஒருபோதும் பாஜககாரனுக்கு அறிவாளி வேடம் பொருந்தாது. ஆகவே இவ்விடயத்தில் உங்கள் ஞானகுரு சூனாமானா சாமியின் வழியை பின்பற்றுங்கள்.

நிதானமாக ஒருபோதும் விவாதிக்காதீர்கள்: மயிருக்கு வாசம் உண்டா எனும் மொக்கை கேள்விக்கே மயிர் பிளக்கும் வாதங்களை வைத்த மரபு நம் மரபு. நீங்கள் சீரியசாக விவாதிக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் காமெடியாக முடிகின்றன. ஆகவே வாய்ப்பு கிடைக்கையில் உணர்ச்சிவயப்பட்டு பேசி ஆட்டையை கலைத்துவிடுங்கள். தொகுப்பாளர்கள் நியாயமாக நடந்து கொள்வார்களோ என அஞ்ச வேண்டாம். சாய்நாத், ராஜ்தீப் என நாடறிந்த தலைகளையே ராஜினாமா செய்ய வைக்கும் ஆற்றல் பாஜகவுக்கும் அதன் ஸ்பான்சர்களுக்கும் இருக்கிறது.

மேற்சொன்ன ஆலோசனைகளை எளிதாக புரிந்துகொள்ள சாம்பிள் விவாதம் ஒன்றை பார்ப்போம்.

தொகுப்பாளர் : தேர்தலுக்கு முன்னால் தினத்துக்கு மூன்றுமணி நேரமேனும் மோடி பேசிக்கொண்டிருந்தார்.. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மன்மோகன் சிங்கைப்போல மௌனமாகவே இருக்கிறாரே?

பாஜக : கடந்த பத்தாண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வைத்திருக்கிறது. ஆகவே…

தொகு : நான் மோடியின் மௌனம் பற்றி…

பாஜ : அதத்தாங்க நானும் சொல்றேன். அப்போது சூப்பர் பிரதமாரா சோனியா இருந்தார். இப்போது சுயமாக முடிவெடுக்கும் பிரதமர் வந்திருக்கிறார்.

தொகு : நான் சொல்ல வந்தது என்னன்னா…

பாஜ : வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் தங்க நாற்கார சாலைகள் போடப்பட்டது. அதன் காரணமாகவே…

தொகு :அய்யய்யோ போதுங்க, கொள்கை முடிவுகளில் மன்மோகனுக்கும் மோடிக்கும் ஒரு வேறுபாடும் இருப்பதில்லையே??

பாஜ : என்ன செஞ்சாங்கன்னு பார்க்காதீங்க.. யார் செய்யிறான்னு பாருங்க. பஞ்சபாண்டவர்கள் பொண்டாட்டியை அடமானம் வைத்தார்கள். கௌரவர்கள் அடமானம் வாங்கினார்கள். மனைவியை அடமானம் வைத்ததனால் பாண்டவர்கள் வில்லன்களாகி விடுவார்களா? அப்படியெல்லாம் நம் பாரத தேசத்தின் பாரம்பர்யத்தின் கௌரவத்தை குறைக்கும்படி பேசாதீர்கள். ஹீரோக்கள் தவறு செய்வார்கள் என எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். ஹீரோ செய்வதெல்லாம் சரிதான் என பாசிடிவாக அணுகுங்கள்.

தொகு : அவரு வந்தா வளரும்னு சொன்னீங்க. வந்து அறுபது நாளாகியும் நாடு வளந்த மாதிரி தெரியலையே?

பாஜ : ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில் எதையும் மாற்றிவிட முடியாது.

தொகு : ஆனால் ஆம் ஆத்மியின் டெல்லி ஆட்சியை நீங்கள் நாற்பது நாளுக்குள்ளேயே விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களே?

பாஜ : எல்லா விஷயத்திலும் அகம் புறம் என இரண்டு உண்டு. இலக்கியத்தின் அகநானூறு, புறநானூறு இருக்கிறது. மூலத்தில் உள்மூலம் வெளிமூலம் இருக்கிறது. அதுபோல நாட்டின் வளர்ச்சியும் இப்போது உள் வளர்ச்சியாக இருக்கிறது. அது வெளியே தெரிய சில காலமாகும்.

தொகு : பள்ளிகளில் பாலியல் கல்வி சொல்லித் தருவதற்கு உங்கள் சுகாதார அமைச்சரே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?

பாஜ : தவறு, ஆபாசமான பாலியல் கல்வியைத்தான் அவர் எதிர்த்திருக்கிறார்.

தொகு : ஆபாசமான பாலியல் கல்வி என்றால் என்ன? அப்படியான கல்வி முறை எங்கேயும் இருப்பதாக தெரியவில்லையே.?

பாஜ : தவறான தகவலை மக்களுக்கு தருகிறீர்கள். ஷகீலா போன்ற நடிகைகளது படங்கள் எல்லாமே பாலியல் விழிப்புணர்வு படங்கள்தானே!! அவற்றைப் பார்த்து பலரும் கெட்டுப்போகிறார்கள். அப்படி யாரும் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதாலேயே அவர் அப்படிச் சொன்னார். சென்ற ஆண்டு இந்த உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டசபையில் ஈடுபட்டபோதுதான் பத்திரிக்கைகளின் அவதூறுக்கு ஆளானார்கள். ஆகவே இவ்விசயத்தில் பாஜக பெரிய தியாகங்களை செய்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தொகு : வளர்ச்சி வளர்ச்சி என முழங்கிய பாஜக, சமஸ்கிருதத்தை திணிப்பதில் ஆர்வம் காட்டுவது ஏன்?

பாஜ : அதனை சமஸ்கிருத திணிப்பு என ஏன் கருதுகிறீர்கள்? இப்போது பெரிய நகரங்களிலும் ஏன் கிராமங்களிலும் கூட திவசம் கொடுக்க அய்யர் கிடைப்பதில்லை. இப்படியே போனால் கருமாதி திவசம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை வந்துவிடும். லட்சக்கணக்கான வருட பாரம்பர்யம் உள்ள இந்து பண்பாடு அழிந்துவிடும். சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் அதில் ஆர்வம் கொள்ளும் பிராமண மாணவர்கள் வேதம் படிப்பார்கள், பிறகு சிறப்பாக கருமாதி, திவசங்கள் நடக்கும். இன்னும் கோடிக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகும் சூழ்நிலை வந்த பிறகு இந்த செயலின் நியாயம் உங்களுக்கு புரியும். பத்தாண்டு காலம் காத்திருந்தீர்கள் இன்னும் அறுபது மாதங்கள் மட்டும் காத்திருங்கள், அதற்கு பிறகு யாரெல்லாம் மிச்சமிருக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் வளர்ச்சியை அனுபவிப்பார்கள்.

தொகு : தேர்தலுக்கு முன்னால் உங்களை பெரிதும் ஆதரித்தது மிடில் கிளாஸ் மக்கள்தான். ஆனால் ஆட்சியமைத்த பிறகு பெட்ரோல் விலையேற்றம், மானியவிலை சிலிண்டர் குறைப்பதற்கான முயற்சி, இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளை ஒழிப்பது என மிடில்கிளாசை பாதிக்கும் செய்திகள்தானே வருகின்றன.

பாஜ : பாருங்க, ஆண்டவன் நம்புனவங்களைத்தான் சோதிப்பான். இந்திரன், கௌதமன் சம்சாரத்தைத்தானே கையைபிடிச்சு இழுத்தான். சிவபெருமான் ஆல்பர்ட்டுகிட்டயும் அப்துல்லாகிட்டயுமா பிள்ளைக்கறி கேட்டான்? இவ்வளவு ஏன் ஸ்ரீகிருஷ்ணன் ஈவ்டீசிங் பண்ணினது இந்துப் பொண்ணுங்களைத்தானே? ஆகவே பக்தனை சோதிப்பதும் போட்டுத்தள்ளுவதும் பாரத பண்பாட்டிலேயே இருக்கிறது. இது இந்து ஞானமரபின் தொடர்ச்சி, ஆரிய சாம்ராஜ்யத்தின் எழுச்சி.

thanthi-tv-2தொகு : தமிழகத்திற்கு மிகக்குறைவான அளவுக்கே ரயில்வே திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அறுநூறு கோடி திட்டமதிப்பு கொண்ட வேலைக்கு ஒருகோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் கி.பி 2614-ல்தான் பணிகள் முடியுமா?

பாஜ : மக்கள் நாங்கள் நினைப்பதை செயல்படுத்தத்தான் தனி மெஜாரிட்டி கொடுத்திருக்கிறார்கள். ஆகவே திட்டத்தை எப்போது முடிப்பது என்பதை நாங்கள் முடிவெடுத்துக் கொள்வோம். அதை கிபி 2600-ல் முடிப்பதா அல்லது நாப்பி 2614 -ல் முடிப்பதா என்பதை கட்சி தீர்மானிக்கும் (கி.பி – கிருஸ்துவுக்குப் பின் ந.பி = நமோவுக்கு பின்). (குறிப்பு : இது ராகவன் வகையறாக்களுக்கு மட்டும்).

தொகு : எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் கொடுக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு கிராமத்துக்கு எட்டாயிரம் ரூபாய் வருகிறது. இதில் எப்படி தடையற்ற மின்சாரம் கொடுக்க முடியும்?

பாஜ : கர்நாடகாவில் சென்ற ஆண்டு மழையில்லாதபோது பாஜக அரசு எல்லா ஊரிலும் மழை வேண்டி யாகங்கள் செய்தது. அதன் விளைவுதான் இன்றைக்கு மேட்டூர் அணை நிரம்புகிறது. ஆகவே தடையற்ற மின்சாரம் வேண்டி கிராமங்கள்தோறும் யாகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் தாராளமாக போதும்.

தொகு : ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் இன்னும் 5 ஆண்டுகளில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என செய்திகள் வருகின்றன. இது மக்களை பாதிக்கும் முடிவில்லையா?

பாஜ : ஏன் ஏழைகள் ஏசி ரயிலில் போகக்கூடாதா? சாதாரண மக்களும் ஏசி கோச்சில் பயணிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தொகு : ஈழத்தமிழர் பிரச்சனையில் உங்கள் அரசும் கங்கிரஸ் நிலைப்பாட்டைத்தானே தொடருகிறது, ஐநா விசாரணையை எதிர்ப்பதாக அரசு தெளிவாக அறிவித்திருக்கிறதே?

பாஜ : இவ்வளவு பேசும் நீங்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? அவர்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்??

தொகு : இது என்ன கேள்வி சார்? ஒரு தொகுப்பாளர் என்ன செய்துவிட முடியும்? செய்யும் காரியங்களை விமர்சனம்தானே செய்ய முடியும்?

பாஜ : எதையும் செய்ய முடியாத உங்களுக்கு பாஜகவைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. ஈழத்தமிழருக்காக தன் வாழ்வையே அர்பணித்த நெடுமாறனே எங்களை விமர்சனம் செய்யவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்து பேசுங்கள். குறைந்தபட்சம் சன் டிவி வீரபாண்டியனுக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்தாவது பேசுங்கள்.

தொகு : உரமானியம் குறைக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் இந்த பட்ஜெட்டில் வந்திருக்கிறதே?

பாஜ : பூச்சி மருந்து விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. உரம் விவசாயிகளுக்கு மட்டும் பயனளிப்பது. ஆனால் பூச்சி மருந்து குடித்தால் எல்லா தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக பயனளிக்கும். மேலும் உரவிலை உயர்ந்தால்தான் விவசாயிகள் நம் பாரம்பர்ய இயற்கை விவசாயத்துக்கு திரும்புவார்கள்.

தொகு : மரபணு மாற்ற பயிர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்..

பாஜ : பழைய முறையில் விவசாயம் செய்தால் நாடு என்றைக்கு வல்லரசாவது?? அதனால் நவீன முறை விவசாயத்தை வளர்க்கும் பொருட்டு இம்முடிவை மோடி அரசு எடுத்திருக்கிறது.

தொகு : இப்போதுதான் நீங்கள் பாரம்பர்ய முறை விவசாயத்தை வளர்க்க உரமானியத்தை வெட்டப்படப்போவதாக சொன்னீர்கள். அடுத்த நிமிடமே நவீன விவசாயத்தை ஊக்குவிப்போம் என்கிறீர்கள், எதுதான் உங்கள் நிலைப்பாடு?

பாஜ : ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய மக்களையே கொலை செய்கிறார்கள். அதனை இங்குள்ள முஸ்லீம்கள் கண்டிப்பதில்லை. மேலும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கார சாலைகளால்தான்..

தொகு : அய்யய்யோ.. சார் நிகழ்சியை முடிச்சுக்கலாம். உங்க இறுதி கருத்தை சொல்லுங்கள்.

பாஜ : இறுதி கருத்தை பிரபல சமஸ்கிருத கவிஞர் நபும்சகன் கவிதையோடு முடிக்கிறேன்.

“ மோடியின் கால்கள்
பின்னால் உதைத்துவிட்டதே
என வருந்தாதே.
விழுந்த உன்னை
தொட்டுத்தூக்க
மோடியின் கைகள்
நிச்சயம் வரும்.
நம்பு, நம்பிக்கைதான் வாழ்க்கை”

– வில்லவன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s