பத்ரி – நூலின்றி அமையாது உலகு. (2)


முதல் பாகம் : https://villavan.wordpress.com/2014/12/18/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/

எங்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற ஒரு வழி வேண்டும் என்று கேட்கிறார் பத்ரி. பிராமணன் கடல் தாண்டக்கூடாது என்கிறது வேதம். அந்த கலாச்சாரத்தை ஒழித்தது எந்த திராவிடன்? அய்யர் ஆத்து கல்யாணங்கள் மூன்று நாள் நடக்கும். அதனை ஒரு நாளுக்கு சுருக்கியது எந்த வடுகன்? இதற்கெல்லாம் பதில்கூட அவசியமில்லை, அவர்கள் பாதுகாக்க விரும்பும் அந்த கலாச்சாரமும் பண்பாடும் என்னவென்றாவது அறிவிக்க இவர்கள் தயாரா? ஏன் சுஜாதா மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை பொதுவெளியில் சொல்ல வெட்கப்பட்டதுபோல நீங்களும் தயங்கவேண்டும்? பிராமணனே உயர்ந்தவன் மற்ற எல்லோரும் எனக்கு கீழானவர்களே என்பதும் அதிகாரம் என்பது எங்களுக்கே உரியது என்பதும்தான் அவர்கள் கட்டிக்காப்பாற்ற விரும்பும் கலாச்சாரம். அதனை வெளிப்படையாக சொல்ல முடியாத சூழல் இங்கு நிலவுகிறது. அதைத்தான் அச்சுறுத்தல் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அடுத்த மோசடிவாதம் கலப்பு மணத்தை ஏற்றுக்கொள்ளும் சாதி எங்களுடையதுதான் என்பது. அதிகம் கலப்பு மணம் செய்துகொண்டது பிராமணர்களே என்கிறார் பத்ரி. இது உண்மையென்பதற்கான தரவுகளை அவரும் தரவில்லை. பொய்யென்று நிரூபிக்க நம்மிடமும் தரவுகள் இல்லை. ஆகவே இதுகுறித்து நாம் இப்போது விவாதிக்க இயலாது. ஆனால் இந்த மாற்றம் காஞ்சிப்”பீ”டாதிபதி அருளியதா என்ன? இது பொதுவாக எல்லா சாதி நகர்புற மக்களிடமும் உருவாகியுள்ள மாற்றம். அப்படி கல்யாணம் செய்துகொண்டு வரும் அடுத்த சாதி மருமகளையும், மருமகனையும் பார்ப்பன குடும்பங்கள் நுட்பமான தீண்டாமை வடிவங்களோடே ஏற்கின்றன. அவர்கள் காலமெல்லாம் தமது உணவு மற்றும் ஏனைய பழக்கங்கள் பற்றிய தாழ்வு மனப்பான்மையோடே காலம் கழிக்க வேண்டும். அரவிந்தன் நீலகண்டன் காதல் திருமணம் பற்றிய வினவு கட்டுரையில் இது ஓரளவு விவரிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் வீட்டுக்கு வரும் மாற்றுசாதி மருமகன்/மகள் விரும்பினால் அவரை பிராமணனாகவே ஏற்கத்தயார் என பத்ரியின் சாதியினர் அறிவித்தால் இந்த மாற்றத்துக்கான அங்கீகாரத்தை இவர்களுக்கு வழங்கலாம். மற்றபடி இதனை ஒரு பெருமையாக அறிவிக்க பார்ப்பனர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

மற்ற சாதிக்காரர்களைப்போல அருவா தூக்கிக்கொண்டெல்லாம் நாங்கள்  திரிவதில்லை என்கிறார். இது வேறுவகையான திரிப்பு. காதலுக்கெதிராக அரிவாள் தூக்கும் இடைச்சாதிகள் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இந்த ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்றன. அதற்கு முன்னால் வன்னியர் மற்றும் தலித் திருமணங்கள் தர்மபுரி வட்டாரத்திலும், கள்ளர் மற்றும் பள்ளர் திருமணங்கள் தஞ்சை பகுதியிலும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருந்தன. அவை ஊர் பிரச்சினையாகவோ சாதிப்பிரச்சினையாகவோ மாறியதில்லை. இந்த இடைநிலை சாதிகள் நில உடமையாளர்களான பிறகு இவர்கள் முன்னால் நில உரிமையாளர்களின் சாதித்திமிரை சுவீகரித்துக்கொள்கிறார்கள். அது காதலிக்கும் மகளை வெட்டிவிடுவதில் இருந்து வெட்டிக்கொல்லும் பழக்கத்துக்கு மாற்றுகிறது. இங்கே பிராமணர்கள் அத்தனை செறிவாக இல்லை, அதனால் அரிவாள் தூக்குவது அவர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. வடஇந்தியாவில் பார்ப்பனர்கள் வன்முறையில் ஈடுபடுவது இப்போதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

பார்ப்பனர்களால் நேரடியாக செய்யப்பட்ட மிகமுக்கியமான வன்முறைகள் ஆஷ் துரை கொலையும், காந்தி கொலையும்தான். இவை இரண்டும் தங்கள் சாதி ஆதிக்கத்துக்கு ஆபத்து வருமோ எனும் ஆத்திரத்தில் செய்யப்பட்டவை. அதிலும் கோட்சே ஒரு பெரும் வன்முறையை தூண்டுவதற்கான அச்சாரமாகவே இதை செய்தான். ஆர்.எஸ்.எஸ்சில் உள்ள தலைவர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் எப்போதும் கலவரத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால் அவர்கள் அதனை தூண்டிவிடுவதில் சிறப்பாக செயல்படுவார்கள். அடியாட்களாக சூலாயுதம் தூக்கிக்கொண்டு ரத்தம் பார்க்க கிளம்புவது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்களாக இருப்பார்கள். ஆக, இவர்கள் தங்களை வன்முறையற்றவர்களாக காட்டிக்கொள்வது என்பது அப்பட்டமான மோசடி.

பெண்கள் அதிகம் படித்தது பிராமண சாதியில்தான் என்றொரு பெருமையும் அவர்களால் பேசப்படுவதுண்டு. பெண்களை ஒரு பண்டமாக நடத்தும் ஹிந்துத்துவாவின் மாடலே பிராமண குடும்ப அமைப்புதான். வெள்ளையர்களுக்கு சேவை செய்தபோது அவர்களது நாகரீகத்தை காப்பியடிக்க முயற்சித்து சில மாற்றங்கள் நிகழ்ந்தன (அதில் கிராப் வெட்டிக்கொள்வதும் ஒன்று, தன் தாத்தா கிராப் வெட்டிக்கொண்டு ஊருக்கு வர பயந்துபோய் திருச்சியிலேயே சிலகாலம் தங்கிவிட்டதாக குறிப்பிடுகிறார் கார்டூனிஸ்ட் மதன்). அதன் விளைவாக வீட்டு பெண்களுக்கு பிரிட்டிஷ்காரனைப்போல சில உரிமைகளைக் கொடுத்தார்கள்.

பிறகு பெரியாரின் சிந்தனைகள் செலுத்திய ஆதிக்கம் தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவித்தது. ஆனால் இது அவர்களது விருப்பமின்றி நடந்த மாற்றம் என்பதை ஜெயேந்திரன் வார்த்தைகளில் இருந்து அறியலாம். வேலைக்கு செல்லும் 90 சதம் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றார் அவர். வீட்டிலேயே அமர்ந்து செய்யும் வேலைகளான ஊறுகாய், வடாம் போடுவதுதான் அவர்களுக்கு ஏற்ற தொழில் என்றார். அதற்கு எதற்கு படிப்பு எனும் கேள்வியும் உள்ளீடாக இதில் இருக்கிறது. அப்போது பணிக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் பார்ப்பனர்களே, இருந்தாலும் இதனை எந்த பார்ப்பன பிரபலமும் எதிர்க்கவில்லை (எழுத்தாளர் வாசந்தி மட்டும் மெலிதாக கண்டித்தார்). மூன்றாண்டுகளுக்கு முன்னால் வந்த தாம்ப்ராஸ் அமைப்பின் வெளியீடு இதுபற்றி தீவிரமாக புலம்பியிருக்கிறது. பிராமண ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை, கலப்புமணம் நம் இனத்தை அழித்துக்கொண்டிருக்கிறது என்ற கதறல் அதில் கேட்டது. (தாம்ப்ராஸ் – ஒரு பிராமண அமைப்பு).

சரி, பத்ரியும் ஜெயமோகனும் திடீரென பிராமண காவல் தெய்வ அவதாரமெடுப்பதன் தேவை இப்போது ஏன் வந்தது?

ஜெயமோகன் இதில் பொருட்படுத்தத்தக்க நபரே அல்ல. ஒரு இந்துவெறியர் தன்னை பிராமணனாக தரமுயர்த்திக்கொள்ள விழைவது இயல்பு. அடியாள் தானும் ஒருநாள் தாதாவாகவேண்டும் என ஆசைப்படுவது போல. பெரியாரை அவமானப்படுத்த கிடைக்கும் எந்த சிறிய வாய்ப்பையும் நழுவவிடாத ஜெமோ ஒரு பதிப்பக உரிமையாளருக்கு ஜால்ரா தட்டுவதோடு இணைந்து அந்த வேலையை செய்வதற்கு தயங்குவாரா என்ன? அவரை நம்புபவர்களை மொத்தமாக சேர்த்தால் ஒரு கல்யாண மண்டபம்கூட முழுதாக நிறையாது. ஆகவே ஜெமோ குரைக்கும் ஒலி நம்மை இம்சிக்கும் என்றாலும் அது அத்தனை தூரம் அச்சுறுத்தக்கூடியதில்லை.

ஆனால் பத்ரியின் வார்த்தைகளை நாம் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. சிவப்பு நிறம், பிராமண குலம், அமெரிக்க ரிட்டன், டிவி புகழ் என சாமானிய தமிழன் நம்புவதற்கான எல்லா தகுதிகளும் ஒருங்கே அமையப்பெற்றவர் பத்ரி. இந்த பார்ப்பன குழு ஒரு போலி சமத்துவத்தை பொதுவெளியில் பராமரிக்கும். பேசும் மொழியில் இருந்து பழகும் முறைவரை எதிலும் வெளிப்படையாக பார்ப்பன மேட்டிமைத்தனத்தை இவர்கள் காட்டமாட்டார்கள். ஆனால் வாளை தூக்கிக்கொண்டு கலவரம் செய்யும் காவி ரவுடிகளைவிட இவர்கள் ஆபத்தானவர்கள். கொலைபாதகத்தை கொள்கையாக கொண்டவர்களின் மார்கெட்டிங் பணியில் இந்த மென்குரலோர்களே ஈடுபடுகிறார்கள். குஜராத்தின் வளர்ச்சியை காணும்போது அம்மாநிலத்தின் கலவரத்தை நான் பொருட்படுத்த மாட்டேன் என்று அவர் பொதுவெளியில் சொல்லும்போது, எந்த நிலைப்பாடும் அற்ற படித்த முட்டாள்கள் அதனையே தங்கள் நிலைப்பாடாகவும் ஏற்பார்கள். ரத்தத்தை அவ்வளவாக ரசிக்காத மக்கள்கூட்டத்தையும் இழுக்கவே இப்படிப்பட்ட நபர்கள் பாஜகவால் களமிறக்கப்படுகிறார்கள்.

இப்போது ஒரு முழு பிராமண ஆட்சி மத்தியில் அமைந்தும் ஏன் பத்ரி புலம்புகிறார்? காரணம் தமிழ்நாட்டின் வரலாறு தரும் எரிச்சல். பாபர் மசூதி இடிக்கப்பட்டு பத்ரி வகையறா மகிழ்ந்திருந்த வேளையில் தமிழகம் அவருக்கு சாதகமான மனோநிலையில் இல்லை. பிராமணர்கள் கோலோச்சிய இணையம் இப்போது அவர்கள் எதிரிகளின் களமாகிவிட்டது. முஸ்லீம் கிருஸ்துவர்களைவிட மோடியையும் பாஜகவையும் மூர்கமாக அம்பலப்படுத்த முயலும் இந்துக்கள் அதிகமிருக்கும் மாநிலம் இது. காவி நூல்கள் விற்பனையாகாமல் மோடி எதிர்ப்பு நூல்கள் விற்பனையாகும் கள யதார்த்தம் பத்ரிக்கு தெரிந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேல், பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்ட முதல் முயற்சி எடுக்கப்பட்ட நிலம் இது என்பதால் உருவான ஆத்திரம், அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் வானளாவிய அதிகாரத்தை ருசிக்கும்போது நினைவுக்கு வருகிறது. தங்களது ஆதிக்கம் இங்கே மீண்டும் வருவது அத்தனை சுலபமல்ல எனும் ஆற்றாமையே இப்படிப்பட்ட புலம்பலாக வெளிப்படுகிறது. நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை எனும் அம்பேத்கரின் வாக்கை சொல்லாலும் செயலாலும் அவருக்கு புரியவைப்பதுதான் பத்ரி வகையறாக்களுக்கு வந்திருக்கும் இந்த சமத்துவ ஃபோபியா குணமாவதற்கான ஒரே வழி.

அதற்கு நாம் பார்ப்பனீயத்தை புரிந்துகொள்ள வேண்டும். நாம் தனியார் மயத்தை எதிர்க்கும்போது அதை ஆதரிக்கும் நபர்களின் வாதம் (பொய்யென்றாலும்) தனியார்மயத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியதாக இருக்கும். ஆனால் அதிகாரவர்க பார்ப்பனர்களின் வாதம் அது முதலாளிகளின் உரிமை என்பதாக இருக்கும். இந்த வர்க சார்பு சிந்தனைதான் பார்ப்பனீயம். ஸ்பெக்ட்ரம் உரிமையை அதிகவிலைக்கு விற்பது முதலாளியின் உரிமை என்றுதான் பத்ரி சொன்னார். அதானிக்கு ஆறாயிரம்கோடி கொடுப்பது அரசின் உரிமை என்றுதான் பாஜக ராகவன் சொல்கிறார். எங்கோ ஒரு நாட்டில் பிரச்சனை பற்றிய விவாதத்தில் முஸ்லீம் தீவிரவாதிகள் உருவாகாமல் தடுப்பது முஸ்லீம் மதத் தலைவர்களின் பொறுப்பு என்று சொல்லும் பானு கோம்ஸ் ஜெயா தனிப்பட்ட முறையில் செய்த ஊழலுக்கான தண்டனையை அவரது நற்காரியங்களுக்காக ரத்து செய்யலாம் என்று பேசுகிறார். அடுத்த சாதிக்காரனும் மதத்துக்காரனும் மட்டம், என் சாதிக்காரன் எதை செய்தாலும் அது தவறில்லை என சிந்திக்கிறார் இல்லையா அந்த சாதித்திமிர்தான் பார்ப்பனீயம்.

இதை கலாச்சாரமாக ஏற்றுக்கொண்டதால்தான் பெரும்பான்மை பிராமணர்கள் சங்கரராமன் எனும் பார்ப்பனரின் கொலையின்போதும் ஜெயேந்திரன் எனும் கொலைக்குற்றவாளியின் பக்கம் நிற்க முடிந்தது. எதிர்க்கப்படவேண்டியது பார்ப்பனீயமே எனும் தெளிவு இருந்ததால்தான் கம்யூனிஸ்டுகளும் பெரியார்வாதிகளும் சங்கரராமன் எனும் பார்ப்பனர் பக்கம் நின்றார்கள். வெறும் பார்ப்பன எதிர்ப்பு எனும் நிலைப்பாடு கடைசியில் பார்ப்பனீயத்தின் வெற்றிக்கே வழிகோலும்.

இந்தியாவில் சாதி, மதம், அரசியல், பொருளாதாரம், அதிகாரம் ஆகிய அனைத்துமே ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை. ஒன்றிமீது ஒன்று செல்வாக்கு செலுத்துபவை. இவற்றில் ஏதாவது ஒன்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட பார்ப்பனீயத்தை எதிர்த்தாக வேண்டும். அதனை எதிர்க்க பார்ப்பனீயம் என்றால் என்னவென்று நீங்கள் அறிந்தாக வேண்டும். அதனை அறிய நீங்கள் ஆசிய பாணி பொருளாதாரத்தில் இருந்து அம்பேத்கர் வரை ஏராளமானவற்றை கற்றாகவேண்டும். அடிமைத்தனம் எனும் விலங்கையும் வேசிமகன் எனும் பட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியுமானால் இந்த சிரமத்தை எதிர்கொள்ள அவசியமிருக்காது.

Advertisements

“பத்ரி – நூலின்றி அமையாது உலகு. (2)” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. என்ன பண்றது வில்லவன். இதை கூட ,பாருங்கள் , மருதய்யன் என்னும் பிராமணர் நடத்தும் ம.க.இ,க கட்சியின் தளமான வினவு இல் தான் பதிப்பிக்க முடிகிறது …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s