ஓம் சீமான் ! ஜெய் சீமான் !


ரு வேளை இன்றைக்கு முருகன் தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு மலையேறியிருந்தால் அவரது காஸ்ட்யூம் எப்படியிருந்திருக்கும்? அதிகம் போனால் அவரது கோவணம் ஜாக்கி ஜட்டியாக பரிணமித்திருக்கும், அவ்வளவுதான். ஆனால் முருகப்பெருமானின் கொள்ளுப்பேரன் சீமான் அப்படி சென்சார் விதிகளுக்கு முரணாக நடந்துகொள்பவரல்ல. அவர் தனி ஈழத்துக்காக முழங்குகையில் கருப்பு தேநீர் சட்டையும் தமிழக மக்களின் விடுதலைக்காக முழங்குகையில் வெள்ளை ஆடையும் பச்சை துண்டும் அணிந்தாரேயன்றி தன் முப்பாட்டனைப்போல கலாச்சாரத்தை சிதைக்கும் சிற்றாடையை அணியவில்லை.

சீமான் - முருகன்

ஆடை மட்டுமல்ல அரசியல் இலக்குகளிலும் முருகனைக் காட்டிலும் பெரிய அளவில் சிந்திப்பதே அண்ணனின் சிறப்பு. சிவக்குமார் போன்ற தயிர்சாத கதாநாயகர்கள் மட்டும் முருகனாக நடித்திருப்பதால் முருகனை வீரமான கடவுள்களின் பட்டியலிலேயே தமிழன் வைத்திருக்கவில்லை. தன்னை முருகனின் பேரனாக அறிவித்ததன் மூலம் முருகனை ஒரே இரவில் வீரனாக்கியிருக்கிறார் சீமான்.

பிரணவ மந்திரத்தை மறந்த தன் மாமா பிரம்மனை சிறைவைத்தான் முருகன். ஆனால் அண்ணனோ அதைவிடவும் கறாரானவர், அவர் தன் மாமாவையே (மாமனார்) ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துதான் தெரிவு செய்தார். தன் காதலியைக் கூட தமிழ்தேசிய நிலைப்பாட்டின் வழியே முடிவு செய்த தலைவன் சீமானன்றி வேறொருவர் இருப்பதாக வரலாறும் இல்லை, இன்னொருவர் வருவார் என்று சொல்லும் துணிவுள்ள சோதிடரும் இவ்வுலகில் இல்லை.

அண்ணன் தன் காதல் மனைவியை பாலச்சந்திரனின் படுகொலையை கண்டித்து களமாடியபோதுதான் கண்டடைந்தார் என்று தமிழ் என்சைக்ளோபீடியாக்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன. காதல் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு அந்த துயர நிகழ்வின் தொடர்ச்சியாக சீமான்ஜி தன் மதுப்பழக்கத்தையே விட்டுவிட்டதாக வரலாறு சொல்கிறது.

1அண்ணனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் தமிழ் தேசியத்தின் கூறுகளோடு இணைந்தே வெளிப்படுகின்றன. அவரது ஆனந்தவிகடன் பேட்டி (04/03/2015) நாம் தமிழரின் கொள்கை ஆவணத்தைக் காட்டிலும் அழுத்தமானது. அந்த பேட்டியில் காட்டியிருக்கும் புகைப்படமோ அதைவிட அழுத்தமானது. அண்ணன் வேல் பிடித்த காட்சியையும், அண்டாவில் கறிக்குழம்பு சமைக்க கரண்டி பிடித்த காட்சியையும் கண்டவர்கள், அவர் கையில் ஏ.கே 47 இருந்திருந்தால் 29 நிமிடத்தில் ஈழம் கிடைத்திருக்கும் என்பதை 100 சதம் நம்பியிருப்பார்கள். இத்தனை திறமையிருந்தாலும் ’ஐநா சபையில் 30 நிமிடம் பேச அவகாசம் கிடைத்திருந்தால் ஈழம் வாங்கியிருப்பேன்’ என அவர் சொன்னது எத்தனை தன்னடக்கமான பதில் பாருங்கள்.

சீமான் மதம்

வலது கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம், எம்.ஜி.ஆரின் அதிமுகவிற்காக எழுதிய ‘சோசலிசம்தான்’ அண்ணாயிசம் எனும் புதுத் தியரி. அதேபோல முருகனின் கொள்ளுப்பேரனாகிய சீமான் சமூக வலைத்தளங்கள் எனும் வதைமுகாமில் சிக்கி சின்னாபின்னமான வேளையில் ஒரு புது தியரியை உருவாக்கியிருக்கிறார். தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பி பதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான் ”வீரத்தமிழர் முன்ணணி”. தமிழனுக்கென்று ஒரு மதம் “தமிழம்”, அவன் மறைநூல் திருக்குறள், அவன் கடவுள் முருகன். அதுமட்டுமல்ல மொத்த தமிழினத்துக்கும் இனிஷியலாக ‘ரா’ வை அறிவித்திருக்கிறார் (ராவணனை தமிழ் இனத்தின் அப்பனாக அங்கீகரித்திருக்கிறார் சீமான், உளவுத்துறையான ”ரா” என புரிந்துகொண்டு வாண்டடாக வந்து வடுக வந்தேறி ஜீப்பில் ஏறாதீர்கள்).

இப்படியொரு அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்தான். இதுமட்டுமல்ல இன்னும் பல விடயங்களில் அவரே முதலானவராக இருக்கிறார். தான் கலந்துகொள்ளும் எல்லா போராட்டங்களுக்கும் மனைவியை உடன் அழைத்துச்செல்லும் தலைவர் யார்? தன் ஹனிமூன் பயணமாக கூடங்குளத்துக்கும், இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் பயணித்த ஒரு தலைவனை இல்லையில்லை தொண்டனையாவது உங்களால் அடையாளம் காட்ட இயலுமா? அதுகூட தேவையில்லை அண்ணனைவிட வலுவானவர் என “ஆர்ம்ஸை” மடக்கிக் காட்டி நிரூபிக்கும் வல்லமை கொண்ட ஒரே ஒரு தலைவரையாவது உங்களால் காட்ட முடியுமா? இவ்வளவு ஏன், டிவியில் காம்பியரிங் செய்த ஒரே ஒரு உலகத்தலைவரை காட்டுங்கள்… அதை நிரூபித்தால் அடுத்த நொடியே தம்பிகள் அனைவரும் களமாடுவதை விட்டுவிட சித்தமாயிருக்கிரார்கள்.

இவ்வளவு விடயங்களில் அவர் முதல்வராக இருந்தும், அவரை முதல்வர் வேட்பாளர் என்று அவரே அறிவித்துக் கொண்டால் இந்த வடுக வந்தேறிகள் எள்ளி நகையாடுகிறார்கள். ஜதியும் சுதியும் சேர்ந்து நடத்திய சதிராட்டத்தால் அவர் சமீபகாலமாக அமைதி காப்பதாக சில வந்தேறிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மையில் அச்சமல்ல, தமிழ் தேசியத்தின் அடிப்படை விதி. கருவாடு மீனாகி கறந்த பால் மடிபுகுந்தாலும் ஒரு தமிழ்தேசியவாதி ஜெயாவை எதிர்த்து எதையும் பேசமாட்டான். அந்த விதியின் மீதான மரியாதை காரணமாகவே செந்தமிழன் (தற்போது பச்சைத்தமிழன்) சீமான் ஜெயாவை எதிர்த்து எதையும் பேசுவதில்லை. அதனால் அவரை கோழை என்றோ பச்சோந்தி என்றோ யாரும் கருதிவிடவேண்டாம்.

சீமான் வீரம்

இந்தியாவில் காங்கிரஸ் தோற்கவும், தமிழகத்தில் தி.மு.க தோற்கவும், இலங்கையில் ராஜபக்சே தோற்கவும், கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானிடம் ஸ்காட்லாந்து தோற்கவும் அண்ணனின் வீரம்தானே காரணம்!!! அண்ணனின் அந்த அமைதியிலும் ஒரு வீரம் இருக்கிறது… ஈழத்தாயின் எண்ணப்படி தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராகும் தகுதி அவர் ஒருவருக்கு மட்டுமே இருக்கிறது. அந்தச் சூழலிலும் தன்னை ஒரு முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டிருக்கிறார் தமிழ்தேசியவாதியான சீமான். இவ்வளவு துணிச்சலான தமிழ்தேசியவாதியை நீங்கள் முப்பாட்டன் முருகன் காலத்தில்கூட பார்த்திருக்க முடியாது.

தற்சமயம் களத்தில் இருக்கும் நூற்று சொச்சம் முதல்வர் வேட்பாளர்களிடையே சாட் பூட் திரீ போட்டாலோ அல்லது டம்புள்ஸ் எடுக்கும் போட்டி வைத்தாலோ ஜெயிக்கும் வாய்ப்பு அண்ணனுக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் அவர் எந்த நம்பிக்கையில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டிருக்கிறார் என்பதை சொல்ல வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு.

இணையத்தில் சீமான் விமர்சிக்கப்படும்போதெல்லாம் அவரது தொண்டர்கள் நான்கு நாட்களுக்கு தலைமறைவாவார்கள். அதன் பிறகு ஒரு விளக்கத்தோடு வருவார்கள் பாருங்கள், அந்தக் கோணம் சீமானாலேயே சிந்திக்க முடியாததாக இருக்கும். புலி பதுங்குவது பாய்வதற்காகவே, பூனை ஒதுங்குவது பிராண்டுவதற்காகவே எனும் பழமொழிக்கேற்ப ஒளிந்திருந்து திடீரென தாக்கும் கொரில்லாப்படையாக செயல்படும் இத்தகைய தம்பிகள் இருக்கும் நம்பிக்கையில்தான் அண்ணன் தமிழக முதல்வராகும் முடிவை எடுத்திருக்கிறார். தமிழனுக்கென்று ஒரு நாடு என்று சொல்லிவிட்டு இப்போது முதல்வர் பதவியை இலக்கு வைப்பதா என கேட்போருக்கு ஒரேயொரு பதில்தான் சொல்ல முடியும்… ”இது தமிழ் தேசியத்தின் போர்த்தந்திரம், தமிழ்ப்பிள்ளைகளின் சமையல் மந்திரம்”.

இவ்வளவு விளக்கியபிறகும், சீமானால் எப்படி முதல்வராக முடியும் என கேள்வி எழுப்புபவர்கள் வரலாறு தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். சாதாரண டிவி தொகுப்பாளராக இருந்த அர்ஜுன் ”முதல்வன்” படத்தில் முதல்வராகவில்லையா? சாதாரண சுகாதாரப் பணியாளராக இருந்த கே.ஆர்.விஜயா ”மேயர் மீனாட்சி’ படத்தில் மேயர் ஆகவில்லையா? கல்லூரி மாணவனாக இருந்த அஜ்மல் ”கோ” படத்தில் தமிழக முதல்வராகவில்லையா? என்ன தம்பி பேசுறீங்க நீங்க??

சரி, முதல்வரானால் அவர் என்னதான் செய்வார் என்று கேட்பவர்களுக்கான பதில்… அவர் என்ன செய்தார் என்று பாருங்கள் என்பதுதான். தமிழனுக்கென்று புதிய மதத்தை உருவாக்கினார், சாதியைப்பற்றி ஒரு வார்த்தையேனும் சொல்லியிருப்பாரா?. அதிலிருந்தே அவரது பண்பாட்டுப் பற்று விளங்கவில்லையா?

வீரத்தமிழர் முன்னணி

கிரானைட் மாஃபியா பி.ஆர்.பி.யால் வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தில் உண்டு. அப்படிப்பட்ட பி.ஆர்.பியையே அய்யா என விளித்து, “அவரிடமே வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா” என கேட்கும் கருணையுள்ளம் சீமானைத்தவிர யாருக்கு வரும்? ஜெயா இருக்கும் திசைநோக்கி எழும் அவரது இந்த அறச்சீற்றம் உங்கள் இதயங்களைத் தொடவில்லையா அல்லது அப்படி நடிக்கிறீர்களா?

அவர் வைகுண்டராஜன், பி.ஆர்.பழனிச்சாமி போன்ற தமிழ்தேச முதலாளிகளை மட்டும்தான் ஆதரிக்கிறார். வேதாந்தா, ரிலையன்ஸ் போன்ற கம்பெனி முதலாளிகள் வீட்டு திருமணத்துக்கு போனதாகவோ இல்லை அவர்களை தனது திருமணத்துக்கு அழைத்ததாகவோ ஒரு செய்தியையேனும் உங்களால் காட்ட முடியுமா! இப்படியொரு மறத்தமிழன் தமிழகத்தை ஆள்வதுதானே தமிழனுக்கு நல்லது!!.

முப்பாட்டன் முருகன், பாட்டன் வள்ளுவன், அப்பன் ராவணன் என விகடன் பேட்டியிலேயே தமிழனின் இனிஷியல் உறவுகளை தந்தவர் ஆட்சிக்குவந்தால் சித்தப்பா, மச்சினன், ஓர்ப்படியாள் என எண்ணற்ற உறவுகளை உங்களுக்குத் தரமாட்டாரா?? தமிழனுக்கென்று ஒரு மதம், தமிழனுக்கென்று ஒரு கடவுள், தமிழனுக்கென்று ஒரு சரக்கு, தமிழனுக்கென்று ஒரு சைடு டிஷ் வேண்டுமென உங்கள் உள்ளம் கேட்கவில்லையா? வீரநடை, இனியவளே போன்ற சூப்பர்ஹிட் படங்களை எடுத்து இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூனாக இருந்திருக்க வேண்டியவர் இன மீட்சிக்காக களமாடுகிறார், அவரை முதல்வராக்குவது தமிழனின் கடமையில்லையா? ஆகவே ஒரேயொரு முறை அவரை முதல்வராக்குங்கள். ஆடுமாடு மேய்ப்பது அரசு வேலையாகும். புளிசாதம் தேசிய உணவாகும். இன்னும் தமிழ் மதத்தின் மீட்சிக்கான எல்லா வேலைகளும் செய்யப்படும்.

லெக் பீசுக்காக கட்சி மாறும் வடுகனாக இல்லாமல், பரோட்டாவுக்காக தனித்து களம் காணும் தமிழனாக ஒன்றிணைவோம்.

“2021 ஆம் ஆண்டின் முதல்வர் அண்ணன் வாழ்க!!”

“2021 ஆம் ஆண்டின் மக்கள் முதல்வர் அண்ணி வாழ்க!!”

Advertisements

One thought on “ஓம் சீமான் ! ஜெய் சீமான் !”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s