தாமரை -தியாகு… நீங்கள் எந்தப்பக்கம்?


(எழுத ஆரம்பித்து இடையே நின்றுபோன பதிவு. காலம் கடந்து வெளியிடப்படுகிறது)

கவிஞர் தாமரையின் தியாகு மீட்பு மற்றும் தியாகு ஒழிப்பு ஆபரேஷன் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழ்தேசியத்தின் மீதான கோபம், சீரியல்களில் தாக்கம், தாமரையின் பாடல்களுக்கு ரசிகனாக இருப்பது, காலாச்சாரம்+ பண்பாடு போன்ற எண்ணற்ற காரணங்களில் ஏதோ ஒன்றின் காரணமாக சமூக வலைதளங்களில் இயங்குவோர் பலர் தாமரைக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள். நம் பொதுபுத்தியில் சில டெம்ப்ளேட் நம்பிக்கைகள் உண்டு, கிராமத்தவர்கள் எல்லோரும் நல்லவர்கள், அப்பாவிகள்… நகரத்தவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்பதைப்போல. அப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒன்றுதான் சேர்ந்துவாழ விரும்புபவர்கள் நல்லவர்கள், பிரிந்துபோக விரும்புபவர்கள் எல்லோரும் கெட்டவர்கள். அந்த நம்பிக்கை வேலை செய்துவிட்டதோ என்னவோ பெரும்பாலானவர்கள் தன்னிச்சையாக தியாகுவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார்கள்.

தாமரை தன் துயரத்தின் கேடயமாக தமிழை ஆக்கிவிட்டபடியால் (தமிழை நேசித்தேன், தெருவுக்கு வந்துவிட்டேன்) இது தமிழ் தேசிய வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியிருக்கும் எனும் நினைப்பில் அவர்களது பக்கங்களுக்கு சென்று பார்த்தால் ஒரு கனத்த மௌனம் மட்டுமே அங்கு நிலவிற்று. இது அவர்களுக்கு ஒரு பெரும் தர்மசங்கடமளிக்கும் சூழல் என்பதில் சந்தேகமில்லை. இருக்கும் ஒரே தமிழ்தேசிய சினிமாக்கார பெண்ணை விட்டுக்கொடுப்பதா அல்லது கருத்துரீதியாக தமிழ்தேசியத்தை தாங்கிப்பிடிக்கவல்ல ஒரே த.தே தலைவரான தியாகுவை விட்டுக்கொடுப்பதா என்பது அத்தனை இலகுவான குழப்பமல்ல.

தமிழ்தேசியவாதிகள் அத்தனைபேரையும் ஒரண்டை இழுப்பதற்காகவே தன் அறிக்கை முதல் நிலைத்தகவல்கள் வரை எல்லாவற்றையும் வடிவமைத்திருந்தார் தாமரை. ஆனால் அவர்களைத்தவிர எல்லோரும் கருத்து சொல்லியிருந்ததுதான் இந்த கதையின் எதிர்பாராத திருப்பம். போகட்டும், கருத்து சொன்னவர்கள் எல்லோரும் இப்பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்களா?

தாமரையின் முதல் அறிக்கையே கடும் குழப்பம் நிறைந்ததாகத்தான் இருந்தது. அதில் அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறார்.  தியாகு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ”வீடு திரும்பவேண்டும்” என்பது முதல் கோரிக்கை, அவரது கடந்த இருபதாண்டுகால வாழ்வை நடுநிலையான அமைப்பொன்று விசாரித்து பகிரங்கமாக அறிக்கை அளிக்க வேண்டும் என்பது இரண்டாம் கோரிக்கை. இந்த இரண்டு முரண்பாடான கோரிக்கைகளையும் கொண்டு அவரது நோக்கம் என்னவென்று உங்களால் அனுமானிக்க முடிகிறதா?

கணவரை மீட்பதுதான் தேவை என்றால் விசாரணைக்கான அவசியம் எங்கிருந்து வந்தது? அல்லது மூன்றாம் தரப்பால் விசாரணை செய்யப்படவேண்டிய ”குற்றவாளி” தியாகுவை மீட்டெடுத்தே ஆகவேண்டிய அவசியம் முற்போக்காளர் தாமரைக்கு ஏன் வந்தது? விசாரணைக்கு ஒத்துக்கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு (ஊடகங்கள் முன்னால்) கேட்டுவிட்டு ஒரு மனிதன் தன் மனைவியோடு வாழ்வான் என கருதுமளவுக்கு தாமரை அப்பாவியா? அல்லது அத்தகையை நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழுமளவுக்கு தியாகு நல்லவர் என தாமரை கருதுகிறாரா? அப்படியானால் அந்த நல்லவரே வீட்டைவிட்டு போகுமளவுக்கு நடந்துகொண்டது தாமரையின் குற்றம் என்றல்லவா பொருளாகிறது?!

தாமரையின் அந்த அறிக்கையும் மற்ற கருத்துக்களும் அவருக்கு ஒரு தீர்வு தேவை எனும் நோக்கத்தைவிட தியாகுவை அவமானப்படுத்தும் நோக்கத்தையே பிரதானமாக கொண்டிருப்பதாக தெரிகிறது. ஓடிப்போன தியாகு, திருடனைப்போல ஓடிப்போன தியாகு என அவர் பலமுறை குறிப்பிடுகிறார். இது கணவன் வீடுதிரும்ப வேண்டும் என தர்ணா செய்யும் மனைவியின் வார்த்தைகள் என்பதை நினைவில் வையுங்கள். மேலும் தனது குடும்பச்சிக்கலை தமிழகத்தின் பொதுப்பிரச்சனையாக மாற்றும் முனைப்பையும் அவரது நடவடிக்கைகள் காட்டின. அவர் தமது தர்ணா நடக்கும் இடத்தையும் அவ்விடத்தை அடையும் வழியையும் தொடர்ந்து முகநூலில் அறிவிகிறார். மின்னஞ்சலில் வருத்தம் தெரிவித்தது போதாது என்றதால் தியாகு நேரில் வருத்தம் தெரிவிக்க வருகிறார் என்றதும் தனது முகநூல் நிலைத்தகவல் மூலம் ஊடகங்களை அழைக்கிறார் தாமரை. இந்த எல்லா செய்கைகளும் அவரது கணவர் மீட்பு கோரிக்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

அவரது ”தமிழ் நேச” வாதம் சந்தேகத்துக்கு இடமற்ற அல்பத்தனம். அவரது தமிழ்ச் சேவை பற்றிய விவாதங்களை தள்ளிவைத்துவிட்டு பார்த்தாலும்கூட, தமிழை நேசிப்பவர்களுக்கு குடும்பப்பிரச்சனைகளில் இருந்து விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. அப்படி யாரும் இதுவரை கோரியதும் இல்லை. ஒருவேளை தமிழை நேசித்தவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை தரலாம் என கருதினால் அதற்கு தாமரையைவிட அதிகம் தகுதியானவர் தியாகுதான். தமிழுக்கான தியாகுவின் பங்கேற்புடன் ஒப்பிடுகையில் தாமரையின் பங்கேற்பு ஒன்றுமேயில்லை.

தாமரையின் நோக்கம் ஒருபுறம் இருக்கட்டும். அவரது கோரிக்கைகளின் நியாயத்தைப் பார்க்கலாம். ஒட்டுமொத்த தமிழினமும் தன் பின்னால் நிற்கவேண்டும் எனும் மறைமுக நிர்பந்தத்தை அவரது அறிக்கைகள் தருகின்றன. ஆனால் இது எந்தவகையில் ஒரு பொதுப்பிரச்சனை என்பதுபற்றி எந்த விளக்கமும் இல்லை. மேலும் தியாகுவின் கடந்த 20 ஆண்டுகளுகால நடத்தை பற்றி ஒரு நடுநிலையான அமைப்பு விசாரித்து அதன் விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என கோருகிறார் தாமரை. அந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தின் சாட்சி தாமரைதான். அவருக்கு பின்னால் நாமெல்லோரும் நிற்க வேண்டும் என விரும்பும் தாமரைக்கு அவரது கணவர் செய்த குற்றம் என்னவென்று சொல்வதற்கான கடமை இருக்கிறதா இல்லையா? தியாகு மன்னிப்பு கேட்ட பின் வீடு திரும்பிய தாமரை கொடுத்த ஜூ.வி அறிக்கையில்கூட என்ன பிரச்சினை என்று சொல்லவில்லை, மாறாக தியாகு ஒரு பொய்யர், ஏமாற்றுக்காரர் எனும் வசவுகள் மட்டுமே அங்கே நிறைந்திருக்கின்றன.

சட்டபூர்வமாக தன் குடும்பச் சிக்கலை தீர்த்துக்கொள்ள வசதிவாய்ப்பற்ற பெண் அல்ல தாமரை. பிறகு ஏன் அவர் இதனை சட்டரீதியாக தீர்த்துக்கொள்வதை தவிர்த்துவிட்டு ஒரு மூன்றாம்தரப்பு (கட்டப்) பஞ்சாயத்தை கோருகிறார்? கடந்த ஐந்தாண்டுகாலமாக தன்னை “கொடுமைப்படுத்திய” தியாகுவிடம் “இரண்டு ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருக்க சம்மதிக்கிறேன்” என எழுதிவாங்கும் அளவுக்கு துணிச்சல் கொண்ட தாமரை, தான் சட்டபூர்வமாக இவ்விவகாரத்தை தீர்த்துக்கொள்ளப்போவதில்லை என்பது ஏன்? (ஜூவி செய்தியாளரிடம் அப்படி தான் எழுதிவாங்கிய பல காகிதங்களை காட்டியிருக்கிறார் தாமரை). அந்தக்கடிதங்கள் தன்னை சமாதானம் செய்ய தியாகுவே முன்வந்து எழுதிக்கொடுத்தது என்கிறார் அவர். ஐந்து ஆண்டுகாலமாக வீட்டை விட்டு ஓட முயற்சிக்கும் ஒரு நபர் இப்படி வீட்டுச்சிறை பத்திரங்கள் எழுதிக்கொடுக்கும் சம்பவம் கவுதம் மேனன் படத்தில்கூட சாத்தியம் இல்லை.

எதிர்தரப்பு கொஞ்சம் அனாதரவாக நிற்கிறது என்றாலும், தியாகுவின் பதில்களும் நேர்மையானதாக இல்லை. இனி இப்பிரச்சினையை சட்டபூர்வமாக மட்டுமே தீர்த்துக்கொள்ள இயலும் என்று சொன்ன (பாலிமர் செய்திகள் தொலைக்காட்சியில்) தியாகு அதற்கான முன்னெடுப்பை தன்னால் செய்ய முடியாதென்கிறார். இது என்ன வகையான நிலைப்பாடு? தாமரையை தன் மனைவியாக நடத்த முடியாது ஆனால் அந்த உறவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வது தாமரையின் பொறுப்பு என மறைமுகமாக சொல்கிறார் தியாகு. பிரிய விரும்புபவர் விவாகரத்து கோரமாட்டாராம், பிரிய முடியாது என தர்ணா செய்பவர் விவாகரத்து கோரினால் ஏற்பாராம்.. இதை யாரோ ஒரு மூன்றாம் நபர் சொல்லியிருந்தா ஒரு விவாத அளவிலாவது தியாகுவால் ஆதரிக்க முடியுமா?

இந்த தமிழ்தேசிய தம்பதியினரின் குற்றங்களை பட்டியலிடுவது அல்ல பதிவின் நோக்கம். இவ்விவகாரத்தில் நாம் அவசரப்பட்டு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே இவர்களின் செயல்பாடுகளில் உள்ள முரண்பாடுகளை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. ஒரு குடும்பப்பிரச்சினை அரசியல் சிக்கலைப்போல எளிதாக முடிவெடுக்கவல்ல விவகாரமல்ல. மூன்று முக்கிய கேள்விகளுக்கு விடை காண்பதில் இருந்தே நாம் ஒரு தம்பதியரின் கருத்துவேறுபாட்டை ஓரளவுக்கேனும் புரிந்துகொள்ள முடியும்.

  1. பிரச்சினைக்கான (உண்மையான) காரணம் என்ன?
  2. அந்த சண்டையின் மூலம் அவர்களுக்கு கிடைப்பது என்ன? அல்லது அதன்மூலம் அவர்கள் உண்மையில் எதிர்பார்க்கும் தீர்வு என்ன?
  3. சொல்லப்படும் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டுபவருக்கு உள்ள பங்கு என்ன?

பல சமயங்களில் அவர்கள் சொல்லும் காரணம் ஒன்றாகவும் நிஜமான காரணம் வேறாகவும் இருக்கும். திருமணம் செய்துகொள்ளாமல் காதலருடன் ஒன்றாக வசித்து பிறகு பிரிந்த ஒரு பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்தேன். அவர் தன் காதலனை எப்படியும் தன்னுடன் வாழ்வைத்துவிடும் எண்ணத்திலேயே பேசிக்கொண்டிருந்தார். உங்களை கடுமையாக அவமானப்படுத்தி பிரிந்துபோன அந்த மனிதரோடு வாழ ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று கேட்டேன். இத்தனை நாள் ஒன்னா இருந்துட்டு நானும் அவராட்டம் எனக்கென்ன்ன்னுட்டு இருந்தா, விசயம் தெரிஞ்சவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? என்றார் அவர்.

அதன் பிறகான உரையாடல்களில் இந்த கேள்வியை வேறுவழிகளில் எழுப்பியபோது கிடைத்த செய்தி இதுதான் “ ஒரு கட்டத்தில் பிரிந்துவிடுவதே சரி என்றுதான் இந்தப்பெண்ணும் முடிவெடுத்திருக்கிறார். ஆனால் அதை வெளிப்படையாக காட்டிக்கொண்டால் தன் நடத்தை விமர்சனத்துக்குள்ளாகும் என்பதால் தனக்கு விருப்பமில்லாத ஒரு வேடத்தை அவர் அணிந்துகொண்டிருந்தார்”. இந்த சம்பவத்தை மேலோட்டமாக கேட்டிருந்தால், அவர் விரும்பாத தீர்வுக்காக நாம் பேசியிருப்போம். உறவுச்சிக்கல்களில் நாம் எப்போதும் சொல்லப்படும் குற்றச்சாட்டை வைத்து மட்டும் நாம் எந்த முடிவுக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை குறிப்பிடுகின்றேன்.

நம் நடத்தையானது நாம் கற்றுக்கொண்டவற்றை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக நமக்கு என்ன தேவை என்பதையும் சேர்த்துத்தான் அது வடிவம் கொள்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்ட நடத்தையை ஓரளவுக்கு வெளிப்படுத்துகிறோம். நமது உணர்வுபூர்வமான தேவைகள் என்பவை நமக்கு சிறுவயதில் கிடைக்காமல் போனவற்றையோ அல்லது அதீதமாக கிடைத்தவற்றையோ அடிப்படையாக கொண்டிருக்கின்றன. ஆகவே தர்கரீதியிலான அறிவைக்கொண்டு மட்டும் நமது நடத்தை (பிஹேவியர்) அமையாது என்பது நிச்சயம். ( உடலின் உயிர் வேதியியல் மாற்றங்களும் நம் நடத்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றாலும் இந்த கட்டுரையில் அதனை விளக்க அவசியமில்லை..)

ஒருவர் தமது நிஜமான தேவைகளையும் உணர்வுகளையும் மறைக்க முடியாத இடம் அவரது வீடுதான் (இதனை மோசமான அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டாம்). இங்கே ஒருவரது அறிவும் சமூக கவுரவமும் இரண்டாம்பட்சமே, அவை அங்கே செல்வாக்கு செலுத்த வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. ஒத்த கருத்துடையவர்களுக்கிடையே பிரிவு நேர்வதும், கொஞ்சமும் ஒத்துப்போகாத சிந்தனை கொண்டவர்களிடையே நம்ப இயலாத அளவுக்கு இணக்கம் இருப்பதும் இதனால்தான். ஆகவே குடும்பத்தில் அபாயகரமான சூழல் இருந்தாலன்றி, ஒருதரப்பின் கருத்தைக்கொண்டு நாம் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. கம்யூனிஸ்ட், பிற்போக்குவாதி, தமிழ்தேசியவாதி, மதச்சார்பற்றவர் என எந்தவகையானவரும் இதில் விலக்கு பெற இயலாது.

இதன் இன்னொரு அபாயகரமான விளைவையும் நாம் பரிசீலித்தாக வேண்டும். தாமரை காரணம் எதையும் சொல்லாமல் பஞ்சாயத்தை கூட்டுகிறார். அதற்கு பலரும் ஆதரவு தருகிறார்கள் என்றால் அதற்கு பொருள், அவர்கள் எந்த காரணத்துக்காகவும் தம்பதிகள் பிரிவது தவறு என கருதுபவர்கள் என்பதுதான். இன்றைய இந்திய சூழலில் குடும்ப வன்முறையாலோ அல்லது வேறொரு நியாயமான காரணத்துக்காகவோ பிரிய விரும்பும் பெண்களுக்கு இந்த வழக்கமான இந்திய சிந்தனைதான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கொடுமைக்கார கணவனிடமிருந்து விலக விரும்பும் பெண்கள் தங்களது தங்கைகள் திருமணம் முதல் மகளின் திருமணம் வரை இதனால் பாதிக்கப்படுமோ என அஞ்ச வேண்டியிருக்கிறது.

பிரிய விரும்புபவர்களின் (குறிப்பாக பெண்கள்) ஒழுக்கம் குறித்த சமூகத்தின் சந்தேகம்தான் பெருமளவு உறவுச்சிக்கல்களை உருவாக்குகிறது. தனித்து வாழும் பெண்கள் தங்கள் ஒழுக்கத்தை தினசரி நிரூபித்தாக வேண்டிய அவலத்துக்கு ஆளாகிறார்கள். லிவிங் டுகெதர் ஜோடிகளுக்குகூட வீடு எளிதில் கிடைக்கும் சென்னை போன்ற பெருநகரங்களில் விவாகரத்தாகி தனித்து வாழும் பெண்களுக்கு வீடு கிடைப்பதில்லை. கள்ளக்காதலுக்காக கொலை செய்யும் பெரும்பாலான பெண்களின் கதையை ஆராய்ந்தால் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் விவாகரத்து பெறுவது பற்றி ஆராய்ந்திருப்பது புரியும். விவாகரத்தின் மீதான சமூகத்தின் அருவறுப்புதான் அவர்களை மெல்ல மெல்ல கொலையின் விளிம்புக்கு கொண்டு செல்கிறது.

எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டவர். முதல் கணவர் மூலம் ஒரு மகளும் இரண்டாம் கணவர் மூலம் ஒரு மகனும் அவருக்கு உண்டு. இரண்டாம் கணவர் அந்த மகளுக்கு சாப்பாடு போடுவதையே வேண்டா வெறுப்பாக அனுமதிக்கிறார். அந்தப் பெண் தன் மகளுக்கு எதையும் செய்வதற்கு அனுமதி கிடையாது. அரசு ஊழியரான அவர் தன் மகளது திருமணத்துக்கான நகைகளைக் கூட திருட்டுத்தனமாக தனது தோழியின் மூலம் வாங்கி, தோழியின் வீட்டிலேயே சேமிக்கிறார். இரண்டாம் திருமணமும் முறிந்துபோனால் தனது நற்பெயரை முற்றாக இழந்துவிடுவோம் எனும் அச்சம் மகள் மீதான அன்பைக்கூட திருட்டுத்தனமாக காட்டும் நிலைக்கு அவரை இட்டுச்சென்றிருக்கிறது.

இந்தியாவில் தற்போதுள்ள சமூக அமைப்பு பெருமளவு சாதி மற்றும் மதரீதியிலான பிற்போக்குத்தனங்களில் சீரழிக்கப்பட்டிருக்கிறது. சாதியும் மதமும் எப்போதும் சாதாரண பெண்களுக்கு எதிரானவை. இந்த அடிப்படையில் பார்க்கையில், பிரிந்து போகும் உரிமை மீதான சமூகத்தின் வெறுப்பை கேள்விக்குள்ளாக்குவதுதான் நமது முக்கியமான நகர்வாக இருக்கவேண்டும். அதுதான் பெண்கள் தங்கள் மீதான குடும்ப வன்முறையை சட்டபூர்வமாக எதிர்கொள்ளும் ஆற்றலை கொடுக்கும். அதைவிடுத்து பிரிந்துபோவதென்பது மகா பாவம் எனும் கண்ணோட்டத்தோடு தமரை-தியாகு விவகாரத்தை அணுகுவது அராஜகவாதிகளான சாதி-மத அடிப்படைவாதிகளுக்கு மறைமுக ஆதரவளிப்பதாகவே அமையும்.

தாமரைக்கு ஆதரவளிக்க விரும்பினால், இவ்விவகாரத்தை சட்டப்படி தீர்த்துக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்துங்கள். தியாகு குற்றவாளியெனில் அதற்கான அதிகபட்ச தண்டனை அவருக்கு வழங்கப்படுவதற்காக குரல் கொடுங்கள். தமிழ்தேசியவாதிகளின் பஞ்சாயத்தின் மூலம் தாமரைக்கு ஆகப்போவது எதுவுமில்லை என்பது மட்டுமல்ல, அது மிக மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும். குடும்பச் சண்டைகள் தொடர்பான இத்தகைய கட்டப்பஞ்சாயத்து பாணி விசாரணைகள் உண்மையில் பெண்களுக்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும். இப்பிரச்சனையின் மூலம் தமிழ் தேசியத்தை அம்பலப்படுத்திவிடலாம் என தாமரைக்கு ஆதரவளிப்பது இன்னும் மோசமான காரியம். தமிழ்தேசியத்தை அம்பலப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பரிதாபம் தேடுவது, வாய்ச்சவடால், வரலாற்றுப் பெருமை பேசுவது என தமிழ்தேசியவாதிகள் அற்பத்தனமான வழிகளில்தான் ஜீவிக்கிறார்கள். அவர்களை அவர்கள் வழியிலேயே எதிர்கொள்ள முனைவது நம்மையும் அற்பர்களாக்கிவிடும்.

Advertisements

One thought on “தாமரை -தியாகு… நீங்கள் எந்தப்பக்கம்?”

  1. ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் திருமண பந்தத்திற்கு முதல் காரணி தாம்பத்யம் …. அந்த தேவையில் மாற்றம் ஏற்படும் போது மற்ற சில்லறை காரணிகளும் விஸ்வரூபம் எடுத்து பந்தத்திலிருந்து விடுபட உதவ முயல்கிறது …. தாமரை சினிமாவில் உள்ளதால் அந்த முயற்சி சினிமா பாணியில் உள்ளது ….மற்றபடி எதிர்மறை எண்ணம் கொண்ட இவர்களிடம் உபநிஷத கால தம்பதியினரிடம் இருந்த புரிந்துணர்வு .. பொறுமை … சகிப்புத்தன்மை .. விட்டு கொடுக்கும் மன பான்மையெல்லாம் எதிர் பார்க்க முடியாது … பின் என்ன வழக்கம் போல் தாய் , தந்தையர் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் பாசமில்லா வாழ்க்கை வாழ்ந்து …அனுபவிக்க வேண்டியதுதான் …. ஆனால் அந்த பாவம் இந்த தமிழ் தேசிய போராளிகளை (?) சும்மா விடாது …..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s