என்ன விலை கொடுத்தேனும் நீதியை காக்கும் நீதிதேவதையே போற்றி!


ஜெயா தன்னையறியாமல் செய்த மிகச்சில நன்மைகளில் ஒன்றுதான் “லவலேசான சேதாரம்கூட இல்லாமல் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த இந்திய நீதித்துறையின் கற்பை” காணாமல் போகச் செய்த செயல்.

நேர்மையே வெல்லும் என உறுதியாக நம்பும் சகாயம் வகையறா, சட்டங்கள் மூலம் ஊழலை ஒழிக்கலாம் என நம்பும் மிடில்கிளாஸ் வகையறா, நீதித்துறை இந்தியாவின் சகல பாவங்களையும் கழுவி பரிசுத்தமாக்கிவிடும் என நாள் தவறாது பிரச்சாரம் செய்துவந்த அறிவுஜீவி வகையறா என மூன்று தரப்பையும் மூத்திர சந்துக்குள் வைத்து வெளுத்தது குமாரசாமியின் தீர்ப்பு.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு தீர்ப்பு விமர்சனத்துக்கு உள்ளாவது, வகைதொகை இல்லாமல் ஒரு நீதிபதி கண்டனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதும் ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்போதுதான் நடந்தது. ஆனாலும் இந்த நீதித்துறை பக்தாளின் அகண்ட நித்திய பஜனை கோஷ்டியிலிருந்து ஒரு முனகல் ஒலிகூட எழவில்லை.

ஆயிரம் பிரச்சாரக் கூட்டங்களும், நூறு ஸ்டிங் ஆபரேசன்களும்கூட இந்த அளவுக்கு ஒரு துறையின் மரியாதையை காலி செய்ய முடியாது. ஆனால், ஒற்றையாளாக இதனை செய்து முடித்தார் ஜெயா. அவருக்கு எப்போதும் நீதித்துறையின் மீது மரியாதை இருந்தது இல்லை. ஒரு நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடுவதும், அவர் வீட்டுக்கு குடிநீர் இணைப்பை துண்டிப்பதும் தெலுங்கு படங்களில் கூட நடந்ததில்லை, ஆனால் அவை ஜெயாவின் பொற்கால ஆட்சியில் நடந்திருக்கின்றன. அந்த வரலாற்றையும் மறந்து நீதிபதிகள் மம்மி மீது பரிவு காட்டுவதன் காரணம் மேற்சொன்ன நிர்வாகத் திறமைதான். மற்ற கட்சிகளில் வக்கீல்கள் அணி என்றொன்று இருக்கிறது, அதிமுகவில் மட்டும்தான் நீதிபதிகள் அணி என்றொன்று இருக்கிறது என நீங்கள் புலம்புவதில் எந்த முகாந்திரமும் இல்லை.

சொத்துக்குவிப்பு வழக்கு - குமாரசாமி தீர்ப்பு

கீழமை நீதிமன்றம் ஒரு வழக்கை பரிசீலித்து ஆதாரங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குகிறது. அதில் 20 சதவிகிதத்தைக்கூட உங்களால் ஆதாரபூர்வமாக மறுக்க முடியவில்லை என நீதிபதி குமாரசாமி விசாரணையின்போது பதிவு செய்கிறார். அதன்பிறகுகூட குற்றவாளி தரப்பு எதையும் செய்யவில்லை. ஆயினும் குற்றவாளியின் நியாயம் என ஒரு வண்டி நிறைய ஆதாரத்தை நீதிபதி தருகிறார். இதுவரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பல வழக்குகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்தரப்பும் ஒழுங்காக வாதிடாமல், அரசுத்தரப்பு வாதமும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றமே தானாக முன்வந்து தரப்பட்ட ஒரே தீர்ப்பு ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புதான். சூமோட்டோவாக வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்வது ஒரு புரட்சி என்றால் அதே வழியில் தீர்ப்பு சொல்வதும் ஒரு புரட்சிதானே? இந்தப் புரட்சிக்கு வித்திட்டவர் புரட்சித்தலைவிதானே? அதனால்தான் அவர் புரட்சித்தலைவி என அழைக்கப்படுகிறார்.

பத்திரிகை ஆரம்பித்து சந்தா வசூலித்து அதனை சொத்தாக்கலாம், அரசு ஊழியராக இருந்துகொண்டு பரிசுகளை வாங்கிக்கொண்டு அதனையும் சொத்தாக்கலாம், கடன் வாங்கி அதனையும் சொத்தாக்கலாம், திராட்சைத் தோட்டம் போட்டு அதில் ஏக்கருக்கு ஒருகோடிகூட சம்பாதிக்கலாம், வியாபாரமே செய்யாத கம்பெனிகளை மானாவாரியாக ஆரம்பித்து அதிலேயும் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கலாம், விற்பவர் அல்லது வாங்குபவரின் பெயர்கூட இல்லாமல் சொத்தை பதிவு செய்யலாம் என சம்பாதிப்பதற்கான வழிகளையெல்லாம் பட்டியலிட்டு விளக்கி அதற்கு சட்ட அங்கீகாரமும் வாங்கித் தந்திருக்கிறார் ஜெயலலிதா.

நீதிபதி குமாரசாமி

ஓய்வு விரும்பியான ஜெயா தன் வாழ்நாளில் இதற்காக 24 ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார் (டெமான்ஸ்ட்ரேஷன் பீரியட் 5 ஆண்டுகளையும் (91 -96) சேர்த்து). அவரை அம்மா என்றும் தாய் என்றும் தொண்டரடிப் பொடிகளும் கற்றாய்ந்த அறிஞர் பெருமக்களும் அதிகாரிகளும் சொல்வதும் வெறும் வார்த்தையல்ல, தன்னலம் கருதாது தனக்குப் பின்னால் வரும் ஊழல்வாதிகளுக்காகவும் அவர் சிந்திக்கிறார் இல்லையா, அந்தத் தாயுள்ளம் காரணமாகவே அவர் அம்மா என அன்போடு அழைக்கப்படுகிறார்.

தீர்ப்பையே காலாவதியாக்கும் அளவுக்கு கணக்குப்பிழைகள் இருக்கிறது, கீழ் நீதிமன்றத்தின் தரவுகளை அலட்சியமாக புறந்தள்ளி குற்றவாளியின் வாதம் அப்படியே ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து குமாரசாமி எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை, கொடுக்க அவசியமும் இல்லை எனும் நிலைதான் இருக்கிறது. எல்லா துறையிலும் நிகழும் தவறுகளுக்கு அதனை செய்தவர்கள் பொறுப்பேற்றாக வேண்டும்.

ஆனால் எல்லா துறைகளின் தவறுகளையும் தண்டிக்கும் நீதித்துறை தன் தவறுகளை கண்டிக்கவோ தண்டிக்கவோ எந்த வாய்ப்பையும் வைத்திருக்கவில்லை. ஒரு தீர்ப்பில் எத்தகைய வெளிப்படையான தவறுகள் இருந்தாலும் அதற்கு நீதிபதி பொறுப்பில்லை எனும் யதார்த்தத்தையும் நீதிபதிகளின் வானளாவிய அதிகாரத்தையும் தேசம் முழுக்க தெரியவைக்கும் வல்லமை ஜெயாவைத்தவிர வேறு யாருக்கேனும் இருக்கிறதா? அதனால்தான் அவரை தர்ம தேவதை என அழைக்கிறார்கள்.

ஜெயா வழக்கில் குன்ஹா தீர்ப்பு சொன்னபோது தமிழகத்தில் நடந்த களேபரங்களும் அதற்கு தமிழக மக்களின் அமைதியான எதிர்வினைகளையும் கண்டவர்கள் இங்கே மான உணர்வு செத்துவிட்டது என எக்காள தொனி ஆராதனை நடத்தினார்கள். குமாரசாமியின் தீர்ப்பு வந்தபோது காட்சிகள் தலைகீழாக மாறின. இதுவரை தீவிர கம்யூனிஸ்டுகள் மட்டும் நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சித்த நிலை மாறி தீர்ப்பை கேள்விப்பட்டவனெல்லாம் காறித்துப்ப ஆரம்பித்தான்.

நீதி வென்றது என ஸ்டேட்டஸ் போட்டு கொண்டாடத் தயாரான அதிமுக ஆட்களே சிக் லீவ் எடுத்துக்கொண்டு இணைய வெளியில் தலைமறைவானார்கள். தீர்ப்பை விமர்சித்துப் பழக்கமே இல்லாத ஊடக நெறியாளர்கள்கூட மக்களைப் பார்த்து தைரியத்தை கற்றுக்கொண்டு, விமர்சித்தால் என்ன தவறு என தற்காலிக வீரர்களாக உருவெடுத்தார்கள். ஆண்டவன் இருக்கான் கொமாரு பாணியில் மனசாட்சிக்கு ஜெயா பயப்பட்டால் போதும் என சமரசமான கருணாநிதியே மறுநாள் தீர்ப்பில் ஓட்டை என்று சொல்லும் துணிச்சலைப் பெற்றார்.

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு -குமாரசாமி தீர்ப்பு

இலட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட அரசாங்கத்தால்கூட ஒரே நாளில் எல்லா குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போட முடியாத சூழலில், வீட்டில் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டே ஒற்றையாளாக ஒரு இனம் முழுமைக்கும் தைரியத்தை ஊட்டும் வல்லமை வேறு யாருக்கு உண்டு? அதனால்தான் அவரை தைரிய லட்சுமி என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அழைத்தார். வீட்டுக்கு போகும் பாதையில் இடைஞ்சல் உண்டானதால் தமிழகத்தில் வெடிகுண்டு கல்ச்சர் வந்துவிட்டது என ஆவேசம் காட்டியவர் இதே ரஜினிதான். ஆக சூப்பர் சுருளிக்கே தைரியத்தை கற்றுக்கொடுத்தவர்தான் நம் தைரியத்தாய். அம்மாவின் பதவியேற்புக்கு ரஜினி முதல் ஆளாக வந்தது அந்த விசுவாசத்தினால்தான்.

நாடு இருக்கும் நிலையில் நேர்மையானவர்கள் உருவாவது அவர்களுக்கு எத்தனை ஆபத்தானது? தபோல்கர் மாதிரி ஆட்கள் கொல்லப்படுகிறார்கள், முத்துக்குமாரசாமிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள், உமாசங்கர் சித்தம் கலங்கி பரிசுத்த ஆவியானவரிடம் அடைக்கலமாகி அல்லேலூயா பாடுகிறார், இப்போதெல்லாம் நேர்மையான மகனைக் கண்டு பெற்றோர்கள் பதறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டாமா?

ஜெயா - நீதித்துறையின் ஆசான்

நாம் நேர்மையாக தீர்ப்பு சொன்னாலும் அது அப்பீலில் நிராகரிக்கப்படும் எனும் ஞானம் வந்தால்தான் குன்ஹா மாதிரி ஆட்கள் யதார்த்த வாழ்வுக்கு திரும்புவார்கள். அதன்மூலம் பல தற்கொலைகளும் இதர அபாயங்களும் நீங்கும் அல்லவா? மம்மியை தற்கொலைக்கு 3 லட்சம் கொடுப்பவர் என்று மட்டும் நீங்கள் கருதிக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவர் தன் தளராத உழைப்பின் மூலம் இனி நிகழவிருந்த எண்ணற்ற தற்கொலைகளைத் தடுத்தவர். அந்த வகையில் அவர் வெறும் தாயல்ல, தற்கொலை தடுத்த தாயாகிறார்.

அவர் மனித ஜென்மங்களுக்கு மட்டும் படியளந்தவர் அல்ல. அம்மா வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டி அதிமுகவினர் வெறித்தனமாக பிரார்த்தனை செய்தார்கள். எல்லா வகையான வேண்டுதல்களும் குறைவின்றி செய்யப்பட்டன. ஒருவேளை தீர்ப்பு அம்மாவுக்கு பாதகமாக வந்தால் பக்திக்கும் வேண்டுதலுக்கு பலனே இல்லையோ எனும் சந்தேகம் எல்லா பக்தனுக்கும் வந்திருக்கும். இப்போது கடவுளுக்கு ஒரு பெரும் நெருக்கடி, நீதி வென்றால் நாத்திகர்கள் பக்திக்கு பலன் இல்லை என எள்ளி நகையாடுவார்கள். கடவுளே கையைப் பிசைந்துகொண்டு நின்ற வேளையில் தன் மேல்முறையீட்டில் வென்று கடவுளையும் காப்பாற்றி நாத்திகர்கள் முகத்தில் கரியைப் பூசினார் ஜெயலலிதா. கடவுள் நீதியை காப்பாற்றவேண்டும் என்பது வாஸ்தவம்தான், அதற்கு கடவுள் உயிரோடு இருக்க வேண்டுமே? அந்தக் கடவுளையே காப்பாற்றியது நம் நீதி தேவதை ஜெயலலிதா இல்லையா?

ஜெயா தார்ப்பு - காவி கூடாரம் வரவேற்பு

பக்தியை பகடி செய்த பெரியார் குழுவினரை எதிர்க்க தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாகவில்லை எனும் உயர்குலத்தோரின் கவலையை போக்க வந்தவர்தான் ஜெயலலிதா. அதனால்தான் மோடி உள்ளிட்ட காவி கூடாரத்தோர் அவரது வெற்றியை பாராட்டுகிறார்கள்.

“2-ஜியில் ஊழல் செய்தால் அந்த ஊழல் பணம் இருக்கவேண்டும் இல்லையா, என்னிடமிருந்து அப்படி பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டதா” எனக் கேட்டு தன் சட்ட ஞானத்தைக் காட்டினார் ஆ.ராசா. எதிர்க்கட்சிகளும் சி.பி.ஐயும் செய்வதறியாது நின்றன.

“என்னிடம் சொத்து மட்டும்தானே இருக்கிறது. ஊழல் செய்தத்ற்கு ஆதாரம் இருக்கிறதா” எனக் கேட்டு அந்தச் சொத்துக்கு சட்ட அங்கீகாரமும் வாங்கிவிட்டார் ஜெயலலிதா. இப்போது சொல்லுங்கள் இந்தியாவின் ஆற்றல்மிக்க தலைவர் ஜெயலலிதாதான் என பிராமணர்கள் சொல்வது உண்மையா இல்லையா?

நீதித்துறையின் மூலம் ஊழலை ஒழித்துவிடலாம் என தப்புக்கணக்கு போட்டவர்களை ஒரு தப்புக் கணக்கின் மூலம் வென்றவர் ஜெயலலிதா..

அவர் ஒரு தர்மத்தாய், ஏராளமான வக்கீல்களுக்கு அவர் அவ்வளவு தர்மம் செய்திருக்கிறார்.

இதுவரை சுப்ரீம் கோர்ட்டில் காப்பாற்றப்பட்டு வந்த மனுதர்மத்தை ஹைக்கோர்ட்டிலேயே காப்பாற்றிய வகையில் அவர் ஒரு நீதித்தாய்.

அவர் காவிரித்தாய், நமக்கில்லாவிட்டாலும் கர்நாடகாவுக்கு அவர் காவிரித்தாய்தான். 12 டி.எம்.சி கர்நாடக சாக்கடை நீர் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டும் அமைதியாக இருக்கிறார் இல்லையா?

ஒரே நேரத்தில் இந்துத்துவா பேசும் ஆர்.எஸ்.எஸ்காரர்களாலும், ‘இசுலாமியர்கள் எப்படி இசுலாமிய முறைப்படி கைகழுவவேண்டும்’ எனுமளவுக்கு பாடம் எடுக்கும் தவ்ஹீத் ஜமாத்காரர்களாலும் போற்றப்படும் ஒரே தலைவர் அவர்தான்.

தமிழை வெறுக்கும் பிராமண சாதியினரும், தமிழ் தேசியம் அமைப்போம் என சொல்லும் தமிழ் சாதியினரும் ஆதரிக்கும் ஒரே தலைவரும் அவர்தான். ஆகவே அவர் ஒரு நிர்வாகத்திறனின் தாய்.

மனம்விட்டு சிரிக்க வைக்கும் கதையை சொன்ன மறுநாளே விஜயபாஸ்கருக்கு மந்திரி பதவி கொடுத்த காரணத்தால் அவர் ஒரு கலைத்தாய்.

எல்.ஐ.சியே தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு காப்பீடு கொடுப்பதில்லை, ஆனால் அம்மாவோ தற்கொலை செய்துகொள்வோருக்கென்றே மூன்று லட்சம் காப்பீட்டை செயல்படுத்தியிருக்கிறார்.

அவரிடம் தேர்தல் கமிஷன் தலைவணங்குகிறது, அவருக்காக ஐ.பி.சி வளைகிறது, தேசிய கீதம் சுருங்குகிறது. அவர் சந்தேகத்துகிடமற்ற ஒப்பற்ற தலைவர் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் தேவையில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கு - ஜெயா விடுதலை

ஆகவே ஒரு தப்புக்கணக்கால் அவர் விடுதலையானதை குறை சொல்லாமல் அவர் விடுதலையான உடனே பல்லாயிரம் மாணவர்கள் கணக்குப் பாடத்தில் செண்டம் வாங்கிய ராசியைப் பாருங்கள்.

காவிரி போச்சே என கலங்காதீர்கள் அவர் பதவியேற்றதும் காவிரியே மழையாய் பொழிந்த அதிருஷ்டத்தைப் பாருங்கள்.

நீதி செத்துவிட்டதே என வருந்தாதீர்கள், கன்னட வக்கீல்களுடனான வாதமெனும் போரில் கன்னட நீதிபதியின் முன்னால் தமிழ் வக்கீல்கள் வென்றார்கள் என தமிழனாக இறுமாப்பு கொள்ளுங்கள்.

தற்போது உச்சநீதிமன்றத்தில்  கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருந்தாலும், அது பேரம் படியாததால் வெளியான ஒரு குறை. சித்தராமையா அரசு கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் தலைநகரில் தத்து அவர்கள் சுளுக்கெடுத்து விடுவார்.

ஆனால் காந்தி கணக்கு போய் குமராசாமி கணக்கு என பழகு தமிழில் நாட்டார் வழக்காக நிலைபெற்றாலும் தத்து கணக்கு அதையும் விஞ்சலாம். ஆம். இது அம்மா அவர்களுக்காக பக்தியுடன் போடப்படும் கணக்கு. பக்தனின் பக்தியை மதிப்பிடுவது அபச்சாரம். ஊழலுக்கு கணக்கு பார்ப்பது தெய்வ குற்றம்.

அம்மா நாமம் வாழ்க..

புரட்சித்தலைவி நாமம் வாழ்க..

தங்கத்தாரகை நாமம் வாழ்க…

Advertisements

“என்ன விலை கொடுத்தேனும் நீதியை காக்கும் நீதிதேவதையே போற்றி!” இல் 5 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s