வாழ்த்துகள் திருமதி யசோதா பென் நரேந்திர மோடி!


ஓராண்டுக்கு முன்னால் எழுதி வெளியிட மறந்த கட்டுரை. அப்போது நரேந்திர மோடியின் மனைவி தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அச்சுறுத்துவதாகவும், அது குறித்து தமக்கு விளக்கமளிக்கும்படியும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரியிருந்தார். இது பற்றிய விவாதங்கள் அப்போது எழுந்தன, வழக்கம்போல அவை அமுக்கப்பட்டன. அப்போது எழுதப்பட்ட கட்டுரை, யோகா தினத்தின் மகிமையை போற்றும் விதமாக இப்போது வலையேற்றப்படுகிறது. செய்தி பழசு என்பதால் கட்டுரை சலிப்பூட்டலாம், குழப்பலாம் என்பதை படிக்கும் முன் கவனத்தில் கொள்ளவும்.

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய பெண்களோடு தொடர்பிலிருந்தாலும் , நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான பெண் கணவனை தெய்வத்தை போல பூஜிக்க வேண்டும். -மனு சாஸ்திரம்.

குஜராத்தைப் போன்ற ஒரு இந்துத்துவ தொழிற்சாலையில் வசிக்கும் யசோதா பென்னுக்கு இருக்கும் இந்த துணிச்சல் அபாரமானது.  அரை நூற்றாண்டுகால புறக்கணிப்பு, பண்னிரண்டாண்டுகால தீவிரமான கண்காணிப்பு என ஒரு மோசமான சித்திரவதையில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது யசோதாவை பேட்டிகாண சென்ற நிருபர்கள் மோடியால் நேரடியாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள். மீடியா இல்லாமல் ஒருநாள்கூட வாழ இயலாத மனிதர் தன் மனைவி மீடியா கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். ஒரு சிறைச்சூழலைவிட அச்சமூட்டும் வாழ்வையே அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் பிண்ணனியில் இருந்துதான் தனது பாதுகாப்புக் குழுவினர்  பற்றிய கேள்விகளை அவர் முன்வைத்திருக்கிறார். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து வரும் என அஞ்சுவதாக அவர் குறிப்பிடுவது ஒரு சரியான தற்காப்பு உத்தியாகவே தோன்றுகிறது.

குஜராத்தில் மோடி ஆட்சியில் இருந்தபோது அவரை கொல்வதற்காக தொடர்ந்து தீவிரவாதிகள் வந்துகொண்டிருந்தார்கள். குஜராத் காவல்துறையும் சரியாக!!! அவர்களை கண்டறிந்து போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தது.  (மோடியும் அவரது சகாக்களும் எதேச்சையாக!!! என்கவுண்டர் நடக்கும் முன்பு அந்த போலீஸ் அதிகாரிகளுடன் நீண்ட விவாதம் நடத்துவார்கள்). நீதிமன்றம் தலையிட்டு அந்த என்கவுண்டர்களை விசாரிக்க சொன்னவுடன் தீவிரவாதிகள் மோடியைத் தேடிவருவது அறவே நின்றுபோனது, காவல்துறைக்கும் போட்டுத்தள்ளும் வேலை மிஞ்சியது. ஆகவே ஒரு விசாரணை வந்தால் தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என யசோதாபென் நம்புவது முற்றிலும் நியாயமானதே.  உங்களை நிராகரிப்பவர் உங்களைச் சுற்றி ஒரு கடும் பாதுகாப்பை ஏற்படுத்தினால் சர்வநிச்சயமாக உங்களுக்கு சந்தேகம் எழும், எழவேண்டும். அந்தவகையில் திருமதி மோடியின் இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது.

மோடி ரசிகர் மன்றத்தவர்கள் கருதுவதுபோல இது மோடிக்கு குடைச்சல் கொடுப்பதற்கான நடவடிக்கை என்பது உண்மை என்றால், அதைவிட ஒரு நியாயமான எதிர்வினை இருக்கவே முடியாது.

மோடி வெற்றி பெற்றபோது கொடுத்த பேட்டியில்கூட யசோதா மோடியை புகழ்ந்துதான் பேசினார். தனது துயரத்தை அவர் அப்போதும்கூட வெளிக்காட்டவில்லை. அந்த பேட்டியில், மோடி என்னை பதவியேற்பு விழாவுக்கு அழைத்தால் செல்வேன் என்றார். பல சமயங்களில் யசோதா, மோடி தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார். இவற்றையெல்லாம் மோடி கண்டுகொள்ளவோ பதிலளிக்கவோ இல்லை. இன்னும் கொடுமையான விடயமாக யசோதாவை தன் மனைவி என்று ஏற்றுக்கொள்ளவே மோடிக்கு ஒரு நீதிமன்றத்தின் தலையீடு தேவைப்பட்டது. அதுவரை அந்த கிராமத்து ஆசிரியை எப்படி தன்னை அறிமுகம் செய்துகொண்டிருப்பார்? கணவன் ஓடிப்போய்விட்டால் அந்த மனைவி இந்திய சூழலில் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் தரும் துயரம் எத்தகையது என்பதை எல்லோராலும் உணர இயலும்.

குஜராத் போன்ற இந்துமத பிற்போக்குத்தனங்கள் நிறைந்திருக்கும் ஒரு மாநிலத்தில் மனைவி எனும் அங்கீகாரம்கூட இல்லாமல் 45 ஆண்டுகாலத்துக்கும் மேலாக வாழ்ந்திருக்கிறார் யசோதா. மோடி 2014 ல் பாராளுமன்ற தேர்தலுக்கு மனுதாக்கல் செய்வதற்கு முதல் நாள்வரை அவரை ஒரு மணமாகாத துறவி என்றுதான் பாஜககாரர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த பேட்டிகளைக் கேட்கும் சூழலில் யசோதாவின் மனம் எத்தனைதூரம் காயப்பட்டிருக்கும்?

நண்பரான அதானியை போகும் ஊருக்கெல்லாம் அழைத்துச்செல்லும் மோடி, தனக்கு விசா வழங்காத அமெரிக்காவின் அதிபரைக்கூட குடியரசுதின விழாவுக்கு அன்பொழுக அழைக்கும் மோடி, தன் நண்பர்! கேட்டுக்கொண்டதற்காக அவரது மகளை ஒரு போலீஸ் பட்டளத்தையே வைத்து தனது தனிப்பட்ட மேற்பார்வையில் கண்காணித்த மோடி, அந்த பெண்ணின் சகோதரர்களுக்கு கருணையோடு அரசு காண்ட்ராக்டுக்களை வாரி வழங்கிய மோடி, கட்டிய மனைவியான தன்னை ஒரு கைதியைப்போல காவலர்கள்  மூலம் கண்காணிக்கையிலும் கழிப்பறைகூட இல்லாத வீட்டில் வாழ நேர்கையிலும் கோபம் வராமல் இருந்தால்தானே ஆச்சர்யம்! (அவர் ஆசிரியராக வேலைசெய்கையில் வசித்த வீடு 150 ரூபாய் வாடகை கொண்டது. அதில் கழிப்பறை கிடையாது).

அவரை பாராட்டுக்குரியவராக நாம் கருதுவதற்கு அவரது துயரமான வரலாறு காரணமல்ல. நாட்டின் அதிவல்லமை மிக்க ஒரு நபரை கோபமூட்டுகிற செயலை அச்சமில்லாமல் ஒரு கிராமத்து பெண்மணி செய்கிறார் என்பதுதான் அவரின் மீதான பிரம்மிப்பை கூட்டுகிறது. சினிமா நாயகிகள் போல அவர் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சவில்லை. மோடி அழைக்காதபோது அவரோடு எப்படி வெளிநாட்டுக்கு போகமுடியும் என்றுதான் கேட்கிறார். என்னோடு சேர்ந்துவாழுங்கள் என்று அவர் இறைஞ்சவில்லை, அவர் சம்மதித்தால் அவரோடு சேர்ந்துவாழத்தயார் என்றுதான் சொல்கிறார். இன்றும் அந்த அப்பாவி பட்டிக்காட்டு பெண்மணி கொடுப்பவராகத்தான் இருக்கிறாரேயன்றி யாசிப்பவராக இல்லை.

பல்லாயிரம் கோடி முதலீட்டில் ஹீரோவான ஒருவர், நாட்டில் உள்ள ஊடகங்களில் பெரும்பாலானவற்றை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட ஒருவர் கேள்விகளைக் கண்டு அஞ்சி ஓடுகிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்விகளை தவிர்ப்பதற்காக அங்கே உரையாற்றிய ஒரே பிரதமராக மோடி மட்டுமே இன்றைய வரலாற்றில் பதிவாகியிருக்கிறார். அவரது மனைவியோ பேச அனுமதிக்காத முரட்டு கண்காணிப்பிலும் தைரியமாக பேட்டியளிக்கிறார். ஒரு ஆட்டோ வாடகையைத்தவிர அதற்கு வேறெந்த முதலீட்டையும் அவர் செய்யவில்லை.

நாற்பதாண்டுகால பொறுமை அவருக்கு எவ்விதமான பலனையும் தரவில்லை. மோடியின் செல்வாக்கு கூடிய சம்பவமும் அவருக்கு எந்த அங்கீகாரமும் தரவில்லை. மாறாக அவர் இன்னமும் பேருந்தில் பயணிக்கிறார், அவரது கண்காணிப்பாளர்களின் வசதி கூடி அவர்கள் காரில் அவரை பின்தொடர்கிறார்கள். ஒரு அடிமையைபோல மௌனமாக இருந்தால் தனக்கு குறைந்தபட்ச மரியாதைகூட கிடைக்காது என்பதை தனது நீண்டகால கசப்பான அனுபவங்கள் வாயிலாக யசோதா கற்றுக்கொண்டிருக்கிறார். கோழை பயந்தவனை மட்டும்தான் மிரட்டுவான் தைரியசாலியைக் கண்டால் பயப்படுவான் எனும் யதார்த்தத்தை ஒரு ஆசிரியரான அவர் அறிந்திருக்கக்கூடும். அந்த நம்பிக்கையில் எதிர்குரல் எனும் அடிமைகளின் ஒரே ஆயுதத்தை அவர் கையிலெடுத்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் யசோதா நரேந்திர மோடி. உங்கள் கணவரைப்பற்றி நல்லவிதமாக சொல்வதற்கு அவர் உங்களைப்போன்ற ஒரு துணிச்சலான பெண்ணின் கணவர் என்பதைத்தவிர வேறு எந்த செய்தியும் இல்லை. அந்த வகையில் உங்களை புறக்கணித்தவருக்கும் கருணைகாட்டும் மகத்தான் பெண்மணியாக நீங்கள் காட்சி தருகிறீர்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s