பாண்டேயாக முடியாதா? அப்போ சமூக ஆர்வலராயிடுங்கோ!!!


அன்புள்ள தயிர்வடை தளத்தின் ஆசிரியருக்கு,

அனேக கோடி ஆசீர்வாதங்களுடன் காஞ்சிபுரம் தெய்வநாதன் எழுதிக்கொள்வது. இந்தக் கலியுகத்தில் நாஸ்திகர்கள் சூழ் தமிழகத்தில் பிறந்தது குறித்து பெரிதும் கவலையுற்றிருந்த வேளையில்தான் அதனைப் போக்க வந்த மாமருந்தாக பாண்டேஜி வந்தார். ஆனாலும் ஹிருதயத்தின் ஓரத்தில் ஒரு கவலை அரித்தவண்ணமிருந்தது, ஒருவேளை ஸ்ரீமான் பாண்டே எம்.பியாகவோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ (மோடிஜி அடுத்த முறையும் பிரதமரானால் இதெல்லாம் கட்டாயம் நடக்கும், நம்புங்கோ) ஆகிவிட்டால் ஊடக சேவைக்கு ஆளில்லாமல் போகுமே எனும் ஸங்கடம்தான் அது. அதனை போக்கும் வகையில்தான் சில ஆத்தங்கவாதிகள் நடத்தும் தளத்தில் பாண்டேயாகும் பயிற்சிக் கையேடு வந்திருக்கிறது, எதிரிகளானாலும் அவர்களுக்கு கொஞ்சம்போல ஷேமம் உண்டாகட்டும்.

நிற்க, பாண்டே கட்டுரையை வாசித்த பிறகு எனக்கொரு யோசனை உதித்தது. அதனை உங்களால்தான் செயல்படுத்த முடியும் என பரிபூரணமாக நம்புகிறேன். எனக்கும் மீடியாவில் பெரிய ஆளாகவேண்டும் என நீண்ட நாளாக ஆசை. ஆனால் மீடியாவில் நுழைந்து வளர வயசு இல்லை. ஆகவே பார்ட் டைம் சேவை செய்யும்படிக்கு ஒரு அறிவுஜீவியாகவோ, சமூக ஆர்வலராகவோ, அரசியல் விமர்சகராகவோ அல்லது கல்வியாளராகவோ ஆகி டிவியில் முகம் காட்ட ஒரு பயிற்சி வகுப்பை நடத்த முடியுமா? இங்கே பெட்ரோல் விலை முதல் சகலமும் கூடிவிட்டது. கண்டவர்களும் நகரத்தில் குடியேறி பொல்யூஷன் ஜாஸ்தியாகிவிட்டது. ஆகவே இங்கே பிரபலமாகும் வாய்ப்பு இல்லாவிட்டால் என் மகனுடன் கலிஃபோர்னியாவில் செட்டில் ஆகிவிடலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

சீக்கிரம் பதில் சொல்லவும்.

ஆசீர்வாதங்களுடன்

தேசபக்தன் தெய்வநாதன்.

அன்பின் தேவா மாமாவுக்கு,

தயிர்வடை தளத்தின் சார்பாக பணிவான நமஸ்காரங்கள். தங்கள் சித்தம் என் பாக்கியம் ஆகையால் உங்களது ஆசையை நிறைவேற்றுவது என் கடமை. பாண்டேயாவது எப்படி என்று நம்மாலும் சிறப்பாக பயிற்சியளிக்க முடியும், ஆனால் மற்ற சமூகத்தவர்களும் தொழிலை கற்றுக்கொள்வார்களே என்றுதான் அதனை நாம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு முதலில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பாண்டேயாவதுதான் சற்று சிரமமே ஒழிய தாங்கள் சொன்ன சமூக ஆர்வலர் கோட்டாவில் இடம் பிடிப்பது ரொம்பவும் சுலபம். இதில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன.

 1. அப்துல் கலாம் பேக்கேஜ்.
 2. அறிவுஜீவி பேக்கேஜ்.
 3. அடியாள் பேக்கேஜ்.

அப்துல் கலாம் பேக்கேஜ் :

இந்தப் பயிற்சியைப்பெற நீங்கள் அரசுத் துறையில் உயர் பதவி வகிக்க வேண்டும். மக்கள் பிரச்சனையில் கிஞ்சித்தும் அக்கறை இருக்கக்கூடாது. ஆனால் அரசியல்வாதிகளிடம் வெறித்தனமான விசுவாசம் இருக்க வேண்டும். சைவ உணவை போற்றுவது, கீதையை சிலாகிப்பதோடு தாராளமாக விளம்பர மோகமும் இருப்பது, யதேஷ்டம். இந்த தகுதிகள் இருப்பவர்களுக்காக நாம் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தத்தேவையில்லை. ஆண்டவன் அருளால் அரசாங்கமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக அதை செய்துவருகிறது.

அடியாள் பேக்கேஜ் :

சுயசாதிப் பெருமிதம், பிராமணாள் மீது கண்மூடித்தனமான பக்தி, தனக்கு கீழிருப்பதாக கருதும் சாதி மக்கள் மீது வெறுப்பு மற்றும் பூட்டிய வீட்டு வாசலில் சவுண்டு கொடுக்கும் தைரியம் ஆகியவை சம விகிதத்தில் கலந்த பிறசாதி முரட்டு முட்டாள் தொண்டர்கள் இந்த இந்த பேக்கேஜை தெரிவு செய்யலாம். நேரடி ரவுடித்தனத்தில் ஈடுபட விரும்பும் நம்மவாளும் இதனை தெரிவு செய்யலாம். இதற்கும் நாம் தனி பயிற்சி தரவேண்டியதில்லை. அவர்கள் ஏதேனும் ஒரு ஹிந்துத்துவா அமைப்பில் உறுப்பினராகலாம் அங்கே இப்பயிற்சி சிறப்பான முறையில் தரப்படுகிறது.

அறிவுஜீவி பேக்கேஜ் :

இதுதான் நம்மவர்கள் பெரும்பாலானவர்களுக்கு ஏற்றது. பாஜக கட்சியில் உள்ள கருத்து சொல்லிகள் பலரும் மோடுமுட்டித்தனமாக பேசுபவர்கள் என்பதால் நம் கட்சியின் மீது நல்ல அபிப்ராயம் உருவாவதில் சிக்கல் உண்டாகும். ஆனால் முட்டாள்களால் மட்டுமே நம் கட்சியில் இணைய முடியும். ஆகவே இந்த பிரச்சினையை சமாளிக்க நாம் வெளியிலிருந்து ஆதரிப்பதற்கான ஒரு ஏற்பாடகவே இந்த சமூக ஆர்வலர் கோட்டாவை தொலைக்காட்சிகள் உருவாக்கியிருக்கின்றன. இதில் ஒன்பது விதிகள் முக்கியமானவை. அதனை பின்பற்றினாலே பெரிய சமூக ஆர்வலராகிவிடலாம்.

ஆடையும் தோற்றமும் : ஒரு சமூக ஆர்வலராக உங்கள் ஆடையும் தோற்றமும் மிக முக்கியம். ஹார்லிக்ஸ் விளம்பரம் முதல் கக்கூஸ் பினாயில் விளம்பரம் வரை எல்லாவற்றிலும் டாக்டர் கோட் அணிந்த நடிகர்கள் அந்தப் பொருளை பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் நிஜமான மருத்துவர்கள் இல்லை என பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் டாக்டர்கள் இல்லை என உங்கள் மூளை உணரும் முன்னால் அப்பொருள் டாக்டரால் பரிந்துரைக்கப்படும் பொருள் என்பதாக உங்கள் மனம் முடிவு செய்துவிடும். காரணம் டாக்டர்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் எனும் பரவலான நம்பிக்கை மற்றும் டாக்டர் கோட் போட்டவர் டாக்டர் எனும் உங்கள் கற்றல். அதேபோல ஐயர்கள் என்றால் புத்திசாலி எனும் நம்பிக்கையும் இங்கே பரவலாக இருக்கிறது, அப்படி இருக்கும்படிக்கு நம் முன்னோர்கள் டிசைன் செய்து வைத்திருக்கிறார்கள்.

ஆகவே ஒரு பிராமணனாக உங்களை காட்டிக்கொள்வது முதல் தகுதி. சிகப்பாக இருக்க வேண்டும், மனுஷ்ய புத்திரன் மாதிரி வண்டி துடைக்கும் துணியைப்போன்ற கலரில் சட்டை அணியாமல் ஒரு அதிகாரியின் நேர்த்தியுடன் ஆடை அணியவேண்டும், நெற்றியில் திருத்தமான விபூதியோ அல்லது மெல்லிய நாமமோ அவசியம், மீசையிருந்தால் யோசிக்காமல் சிரைத்துவிடுங்கள். ஒருவேளை நீங்கள் பொருளாதார ஆலோசகர் வேடத்தில் விவாதம் செய்தால் குறுந்தாடி வைக்கலாம், ஆனால் அப்போது கோட் அணிவது அவசியம். இவையெல்லாம் உங்களை ஒரு புத்திசாலி என பிறரை நம்பவைத்துவிடும். பிறகென்ன பேசுவதெல்லாம் புத்திசாலித்தனமான பேச்சாகிவிடும்.

கள்ளக்காதலனாக மட்டும் இரு, கணவனாக முயற்சி செய்யாதே: நமக்கு சங் பரிவாரங்கள் மீது கட்டுக்கடங்காத காதல் இருக்கலாம். ஆனால் அதனை வெளிப்படையாக காட்டிக்கொள்ளக்கூடாது. பெரிய சம்பவங்களை நிகழ்த்தும்போது பாஜகவே அவர்களிடமிருந்து விலகியிருப்பதுபோல காட்டிக்கொள்ளும். அப்படியே நாமும் நடந்துகொள்ள வேண்டும். சாதாரண மக்களில் ஒரு பிரிவினர் இன்னமும் சங்கப்பரிவாரங்களின் வன்முறைகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய மரமண்டைகளை தொடர்ந்து நம் பக்கம் வைத்திருக்க இந்த தியாகத்தை நாம் செய்துதான் ஆகவேண்டும்.

தன் வாலிப வயதில் பாபர் மசூதி இடிப்பை கொண்டாடிய பத்ரியார் இப்போது வாய் தவறியாவது ஆர்.எஸ்.எஸ்சை பாராட்டி பார்த்திருக்கிறீர்களா? நம் ஹெட்மாஸ்டரே அமைதியாக இருக்கிறார் என்றால் அதற்கு அர்த்தம் இல்லாமல் இருக்குமா? ஆகவே சங்கப்பரிவாரம் பற்றிய விவாதம் எழுந்தால் ஒரு கள்ளக்காதலனுக்குரிய அமைதியோடு ஒதுங்கியிருங்கள். உங்கள் காதலுக்கான ரகசிய நேரத்தை ஆண்டவன் நிச்சயம் கொடுப்பான்.

தேவை நியாயவாதியல்ல, சமரசவாதி : எடுத்த எடுப்பில் பாஜக செய்வதெல்லாம் சரி என்று சொல்லிவிடாதீர்கள். அது நம்மை நடுநிலைவாதிகள் என நம்பும் கொஞ்சநஞ்சம் ஆட்களையும் இல்லாமல் ஆக்கிவிடும். எடுத்த எடுப்பில் குற்றத்தை கண்டிப்பதுபோல பேசினால் பார்ப்பவர்கள் கோபம் அடங்கிவிடும், அப்படியே வெண்ணை தடவியதுபோல பேசி குற்றம் நடந்ததா இல்லையா என சந்தேகத்தை எழுப்பி குழப்பி விட்டால் பாதி பேராவது நம்புவார்கள். ஆகவே பாஜகவை சிக்க வைக்கும் எல்லா பிரச்சனைகளிலும் கீழ்காணும் மூன்று ஸ்லோகங்களை பயன்படுத்துங்கள்,

 1. அப்படி நடந்திருந்தா அது தவறுதான்.
 2. ஆனா அப்படி நடந்ததான்னு உறுதியா தெரியல,
 3. உறுதியா தெரியாமல் கண்டிக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன்.

குஜராத் படுகொலைகளாகட்டும், முசாஃபர் நகர் கலவரமாகட்டும் இல்லை வியாபம் ஊழலாகட்டும், இதுபோன்ற சகல பிரச்சினைகளையும் இந்த மந்திரங்களைக் கொண்டு சமாளித்துவிடலாம்.

எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு எதிர் தரப்பிலேயே இரு: ஒரு விவாதத்தில் எந்தப்பக்கம் இருப்பது எனும் குழப்பம் நம்மிடையே அடிக்கடி வரக்கூடும். அப்படிப்பட்ட தருணங்களில் பாதிக்கப்பட்டவனுக்கு எதிர் தரப்பில் அமருங்கள். நாம் இரண்டாயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் பிழைக்கிறோம். குடிமக்கள் கஞ்சிக்கு வழியின்றி செத்த காலங்களில் நாம் குடியும் கும்மாளமுமாக இருந்த அரசர்கள் பக்கம் இருந்தோம். உலகமே ஹிட்லரின் அராஜகத்தைக் கண்டு நடுங்கி நின்ற வேளையில் நாம் ஜெர்மன் படித்தோம், இவ்வளவு ஏன், கேஸ் சிலிண்டர் விலை ஏறினால் நம்மாத்து மாமிகள் மட்டும்தானே அதை ஆதரித்து பேசுவார்கள்! (இது தூர்தர்ஷன் காலத்தில், இப்போதான் கண்டவனும் நம்மைப்போலவே நடந்துக்கறானே). பாதிக்கப்படுபவனால் நமக்கு யாதொரு சகாயமும் இல்லை. ஆகவே பாதிப்பை உருவாக்குபவன் பக்கம் இருந்தான் அதன் மூலம் பலன் வர சாத்தியமுண்டு.

மாமாங்கத்துக்கு ஒருமுறை நமக்கும் சிக்கல் உண்டாகும், அப்போது மட்டும் நாம் இந்த விதியில் இருந்து விலக்கு பெறலாம். அதாவது காஞ்சி ஊத்தவாய் ஸ்வாமிகள் கைது, தில்லை கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் எனும் தீர்ப்பு ஆகிய பிரச்சினைகளில் நாம் பாதிக்கப்பட்ட அப்பாவிகள்!! பக்கம் இருக்கலாம்.

நீதிமன்றத்தை நம்பு : மேலேயுள்ள உத்தியின் நீட்சி இது. ஏதேனும் குற்றம் வெளிப்படையாக நிகழ்ந்திருந்தால் அதனை இப்படி எதிர் கொள்ளலாம்,

 1. தவறு இருந்தால் நீதிமன்றத்துக்கு போகலாமே (பிரச்சினையின் ஆரம்பகட்டத்தில்)
 2. வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுபற்றி இங்கே பேசுவது சரியாக இருக்காது.
 3. ஒருவேளை தீர்ப்பு நாம் விரும்பாத வகையில் வந்தால் – அப்பீல் இருக்கிறது அங்கேதான் இறுதியான முடிவு கிடைக்கும் என சொல்லிவிடலாம். அப்பீல் தீர்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் (எப்படியும் நமக்கு சாதகமாகத்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும், இல்லாவிட்டால் நூறு வருஷத்துக்கு தீர்ப்பே வராது)

முதலாளிகளின் நியாயத்தைப் பேசாதே, முதலாளி செய்வதெல்லாம் நியாயம் என்று பேசு : இது ஒரு வாழ்வியல் உத்தி. இந்தியாவின் பெரு நிறுவனங்களில் 96 சதவிகிதம் உயர்பதவிகளை நம்மைப்போன்ற உயர் சாதிக்காரர்களே வகிக்கிறார்கள். ஒரு பெருமுதலாளி லட்சம்பேர் நிலத்தை பிடுங்கிக்கொண்டு கம்பெனி ஆரம்பித்தால் அதில் நம்மவர்கள் ஐம்பது பேருக்காவது மேல்மட்ட வேலைகள் கிடைக்கும். சாமியார்கள் செய்யும் எல்லா சேட்டைகளும் மன்னர்களுக்கு தெரியும், ஆனாலும் அவர்கள் ஏன் சாமியார்கள் காலில் விழுந்தார்கள்? காரணம் மன்னனே காலில் விழுந்த மகான் என மக்கள் சாமியாரை நம்புவார்கள். சாமியாரை நம்புபவன் மன்னனுக்கு எதிராக எதையும் செய்யமாட்டான். அவ்வாறே பெரும் எண்ணிக்கையில் பக்தர்களைக் கொண்ட சாமியார்களும் அரசனை அனுசரித்துப் போவார்கள். காரணம் ஸ்வாமியின் லீலைகள் அம்பலத்துக்கு வராமல் பார்த்துக்கொள்ள அரசனின் ஆதரவு அவசியம். இதற்குப் பெயர்தான் மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங் எனும் தொழில் நேக்கு.

ஆகவே அணுவுலை, போபால் விசவாயு, பாஸ்கோ சுரங்க விவகாரம் என எல்லா பிரச்சினையிலும் நாம் கண்ணை மூடிக்கொண்டு கம்பெனி பக்கம்தான் இருக்கவேண்டும்.

வார்த்தைகளை மாற்று, பொருளை அப்படியே வை : மெட்ரோ ரயிலில் 10 கிலோமீட்டருக்கு 40 ரூபாய் கட்டணம் அதிகமா என விவாதம் வந்தால், நாப்பது ரூபாய்க்கு வக்கில்லாதவனுக்கு எதுக்கு மெட்ரோ என்றுதான் நம் உள்ளம் பதில் சொல்லும். ஆனால் அதனை அப்படியே சொல்லிவிடக்கூடாது. மக்கள் கூடுதல் கட்டணத்தை கட்டுமளவுக்கு தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

நாம்தான் புத்திசாலிகள் என்பதை நம்புங்கள் : சில இடதுசாரி சார்பு பேச்சாளர்களும், திராவிட பேச்சாளர்களும் தரவுகளோடும் மறுக்க முடியாத வகையிலும் பேசுகையில் நம்மால் அப்படி பேச முடியவில்லையே என ஆற்றாமை வருவது இயல்புதான். ஆனால் நாம் ஒரு விஷயத்தை மனதில் வைக்க வேண்டும், அவர்கள் கல்லூரி மாணவர்களிடம் கம்யூனிசம் பேசியபோது நாம் பள்ளிகளில் கமுக்கமாக ஷாகா நடத்தினோம். அவர்கள் கிராமங்களில் படிப்பகம் துவங்கியபோது நாம் கோயில்களில் காவிக்கொடியை பறக்க விட்டோம். அவர்கள் உருவாக்கிய மாணவர்கள் வாத்தியாராகவும் வக்கீலாகவும் போனபோது நம் பிள்ளைகள் உச்ச நீதிமன்றத்தையும் செகரட்ரியேட்களையும் கைப்பற்றினார்கள். இப்போ சொல்லுங்கள், யார் புத்திசாலி?

நாம் சொல்வதுதான் சரியான கருத்து எனும் ஞானச்செருக்கானது நாம்தான் புத்திசாலி எனும் நம்பிக்கையில் இருந்துதான் பிறக்கிறது. ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தபோது வீரமங்கை பானுகோம்ஸ் இப்படி சொன்னார் “ ஒருவர் எப்போதோ செய்த தவறை மட்டும் பார்க்காமல் அவருக்கு உள்ள மக்கள் ஆதரவையும் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும்”. இரண்டு நாளுக்குப் பிறகு “ ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் செய்யும் வன்முறைக்கான பொறுப்பை எல்லா இசுலாமிய மதத்தலைவர்களும் ஏற்கவேண்டும் “ என்றார். இப்படி மரண பல்டி அடிக்கும்போதும் அவரது முகத்தில் கொஞ்சமும் கூச்சம் இல்லை, மாறாக ஒரு ஞானிக்குரிய தேஜஸ்தான் ஒளிர்ந்தது. மற்றவர்கள் பேசுகையில் வெளிப்படும் ஒரு ஏளனப்பார்வையும் இந்த ஞானச்செருக்கில் இருந்துதான் பிறக்கும்.

பிரச்சினையை பொதுமைப்படுத்து : அதிமுக மீதோ அல்லது பாஜக மீதோ குறிப்பிட்டு ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை எல்லா கட்சிக்குமான பொதுப்பிரச்சினையாக மாற்றுங்கள். அதிமுகவின் அடிமைத்தனம் பற்றிய விவாதமா அது திராவிட இயக்கங்களால் உருவான சீரழிவு என திருத்துங்கள். வியாபம் ஊழலா, நாடெங்கும் நடக்கும் இந்த மாதிரி ஊழலால்தான் இந்தியா இன்னும் வளராமலே இருக்கு என புலம்பி அம்பி அவதாரம் எடுங்கள். நினைவிருக்கட்டும், கும்பல் பெரிதானல் குற்றம் சின்னதாகிவிடும்.

இவையெல்லாம் அடிப்படைப் பாடங்கள் மட்டுமே. இதுதவிர நீங்கள் ஒரு மண்டலத்துக்கு நம்மவர்கள் பங்கேற்கும் விவாதங்கள் தொடர்ந்து பார்த்து வந்தால் சிறந்த முறையில் பாண்டித்யம் பெறலாம்.

பின்குறிப்பு : உங்கள் கோரிக்கையை ஓரளவுக்கு நிறைவேற்றிவிட்டதாக நம்புகிறேன் தெய்வநாதன் மாமா. உங்களுக்கு மேலும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் என்னை மறக்காமல் தொடர்புகொள்ளவும்.

உங்களிடம் ஒரு சின்ன விண்ணப்பம், என் தம்பி எம்.பி.ஏ படித்துவிட்டு சும்மாயிருக்கிறான். கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்கவில்லை. உங்கள் தங்கை கணவர் மத்திய அரசு வக்கீலாக இருப்பதை அறிந்தேன். ஆகவே அவர் சிபாரிசில் ஏதேனும் கார்ப்பரேட் கம்பெனியில் அவனுக்கு உத்தியோகம் வாங்கித்தருமாறு வேண்டிக்கொள்கிறேன். இதனை நேரில் வந்து கேட்கத்தான் உத்தேசித்திருந்தேன். ஆனால் ”இடஒதுக்கீடு எப்படி இந்தியாவின் வளர்ச்சியை சீரழித்தது” எனும் தலைப்பில் புத்தகம் எழுதிக்கொண்டிருப்பதால் நேரில் வர இயலவில்லை. தவறாக கருதவேண்டாம்.

நன்றி,

தயிர்வடை.காம் சார்பாக,

கார்த்திக் ராமச்சந்திரன்.

Advertisements

“பாண்டேயாக முடியாதா? அப்போ சமூக ஆர்வலராயிடுங்கோ!!!” இல் 8 கருத்துகள் உள்ளன

 1. நிலைமையை மிக சிறப்பாக காட்டி உள்ளீர்கள்.
  எப்படி இதெல்லாம் மாறும்?

 2. அருமையான விவரிப்பு. புதிய தலைமுறை- பாஜக இடையே தாலி பற்றிய ஊடலுக்கு பின்னர் பானு கோம்ஸ்,சுமன் சி ராமன் போன்ற அனாமதேயங்கள் எல்லாம் சமூக ஆர்வலர்,அரசியல் விமர்சகர் என வேளைக்கு ஒரு பாத்திரம் ஏற்று காவிகளுக்கும்,பெரு நிறுவனங்களுக்கும் ஒரு புதிய வகையான சேவையை வழங்கி கொண்டிருக்கின்றனர். ராகவன்,தமிழிசை போன்றோர் குரலெடுத்து கத்தும் போது பார்வையாளன் எளிதில் அவர்களை இனம் காண்பது போலன்றி சமூக ஆர்வலர் போர்வையில் வரும் ‘அறிவு ஜீவி’கள் உங்களுடைய நுட்பமான விவரிப்பின்படி ’ நடுசெண்டர்’ அணுகுமுறையில் கோல் மழை பொழிகின்றனர்.பித்தலாட்டம் தான் என்றாலும் ஒரு ஆடிட்டர் வைத்து செய்யும் போது அதில் ஒரு நாகரீகமும் அறிவு ஜீவித்தனமும் வந்து விடுகிறதே.இந்த பதிவை ஜென்ராம்,குணசேகரன் போன்றவர்கள் படிக்க கூடுமென்றால் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்து கொள்ளக் கூடும்.அப்படியும் சொல்லமுடியாது.அவர்கள் முதலாளிக்கு பிரச்சினையில்லாமல் இப்படி ஒரு ‘ஏற்பாட்டை’ வடிவமைத்ததே அவர்களாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.ஒரு 30-40 வருட அனுபவசாலிகளான ஞானி,திமுகவின் அப்பாவு போன்றோர் எல்லாம் பேசுகின்ற போது பானு போன்ற நபர்கள் ஒரு இளக்காரமான புன்னகையை உதிர்த்து காலி பண்ணுவதை பார்த்து பரிதாபம் தான் படவேண்டியுள்ளது.

 3. சிறப்பான கட்டுரை. சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் இவற்றுக்குண்டான அடிப்படை தகுதி என்னவென்றே தெரிவதில்லை. நீங்கள் எழுதியுள்ளது போலவே இவர்களின் தரம் உள்ளது. எந்தவொரு தீர்வையும் அல்லது சரியான பாதையை அடையாளம் காட்டும் விவாதங்கள் எதுவும் தொலைக்காட்சிகளில் வருவதில்லை, அரட்டை அரங்க பாணியில் நேரத்தை விரயமாக்கும் இம்மாதிரி நிகழ்ச்சிகள் பார்ப்பதை அனைவரும் விட்டொழிக்க வேண்டும்.

 4. அருமை இந்த மானக்கெட்ட பானு கோம்ஸ்.ஆட்டம் இன்னமும் அடங்கவில்லையே…கையை முன்னே நீட்டி வலது இடதுபுறமாக ஆட்டி முழ உண்மையை கூறுவது போல பாவனை செய்யுவார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s