பிணங்களால் வாழும் தேசம்.


சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இத்தாலி நாட்டவரிடம் தரக்கட்டுப்பாட்டு ஆய்வளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது ஆப்ரிக்க அகதிகள் சுமார் 200 பேர் வளைகுடா நாடுகளுக்கு (சட்டவிரோதமாக ) பயணிக்கும்போது படகு விபத்தில் இறந்துபோனார்கள். ஒரு வேலையாக என் மேசைக்கு வந்த அந்த இத்தாலிய முதலாளி (ஒரு பங்குதாரர்) என் கணினியில் திறக்கப்பட்டிருந்த அந்த செய்தியை வாசித்தார். அகதியாக வந்தவர்களின் நாட்டை தெரிந்துகொண்டவர் உதிர்த்தது இந்த வாசகங்களைதான் “ முஸ்லீம்கள்… சாகட்டும்”.  அதே முதலாளிக்கு இன்னொரு முகம் உண்டு. ஒரு மழை நாளில் சாலையோரம் நடுங்கிக்கொண்டிருந்த நாய்க்குட்டியொன்றை தூக்கிக்கொண்டு அலுவலகம் வந்தார்.

அதற்கு அவர் காட்டிய அன்பு கற்பனைக்கு அப்பாற்ப்பட்டது. அவர் அலுவலகத்தில் இருக்கையில் அந்த நாய்க்குட்டி அவரது ஹோண்டா சிட்டி காருக்குள்ளேதான் படுத்திருக்கும். அவர் தங்கியிருந்த வீட்டில் அதற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்யும் பொறுப்பு எங்கள் அக்கவுண்டண்ட் தலையில் விடிந்தது. ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு நாட்கள் அவர் திருப்பூரில் இருக்க மாட்டார் ஆகையால் அவர் ஊரில் இல்லாத ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த நாயை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அவர் திருப்பூர் வரும் நாளில் அந்த நாய்க்கு சர்வ அலங்காரங்களும் நடக்கும். இப்போது என முன்னாள் முதலாளி குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன ? ஒருவேளை அவரது நாயாபிமானம் பற்றிய தரவுகள் மட்டும் உங்கள் பார்வைக்கு வந்திருந்தால் உங்கள் அபிப்ராயம் என்னவாக இருந்திருக்கும்? ஒருவேளை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை மட்டுமே கேட்டு வளர்ந்தவனது அபிப்ராயம் என்னவாக இருந்திருக்கும்?

கிட்டத்தட்ட இதே பாணியிலான அஹிம்சாவாத நாடுதான் இந்தியா. இங்குதான் கூட்டு மனசாட்சிக்காக கொல்லப்பட்ட அஃப்சல்குருவின் மரணத்தை பட்டசு வெடித்து கொண்டாடுவோர் வயதாகி இறந்த கலாமுக்காக கண்ணீர் வடிப்பார்கள். பார்டரில் சாகும் ராணுவவீரன் பெயர் சாலைகளுக்கு சூட்டப்படும், ஆனால் உள்ளூர் பாதாள சாக்கடையில் சுகாதாரப் பணியாளர்கள் சிக்கி இறக்கும் செய்தி தலைப்புச்செய்திக்குகூட அருகதையற்றதாக பார்க்கப்படும். ஷில்பா ஷெட்டியை ஒரு பிரிட்டன் பெண்மணி நாயே என திட்டினால் இங்கே தேசபக்தி பீறிட்டெழும். வடகிழக்கிலும் காஷ்மீரிலும் பெண்கள் கற்பழிக்கப்பட்டால் அது கண்டுகொள்ளப்படாது.

அப்படியானால் நம் அடையாளம்தான் என்ன? நாம் மனிதாபிமானிகளோ பிணத்தை ரசிக்கும் குரூரமானவர்களோ அல்ல.. உண்மையில் நாம் ஊடகங்களின் கைப்பாவைகள். நீங்கள் யாருக்காக அழ வேண்டும் யார் மரணத்தைக் கொண்டாடவேண்டும் என்பதை ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. அரசாங்கம் பெரு முதலாளிகளின் கையில் இருக்கிறது. அந்த அரசு காரியங்களை தீர்மானிக்கின்றது, அதற்கான் ஆதரவை மக்களிடம் திரட்டவும், எதிர்ப்பு பரவலான கவனத்தைப் பெறாமல் சிதைக்கவும் ஊடகங்கள் செயலாற்றுகின்றன. அப்படி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வேலையை நீதிமன்றங்கள் செய்கின்றன. இந்தியாவின் அதிமுக்கியமான எல்லா பிரச்சினைகளிலும் இந்த நால்வரணிக்கிடையே உள்ள ஒத்திசைவு கண்கூடாக தெரியும்.

இந்தியாவில் தனியார்மயம் மற்றும் தாராளமயம் ஆகியவற்றின் மீதான கவர்ச்சி மங்கத்துவங்கிய காலத்தில் அதற்கு ஒரு பிராண்ட் அம்பாசிடர் தேவைப்பட்டார். அப்போது ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு குஜராத்துக்கு வெளியே தங்கள் ரத்தம் தோய்ந்த கைகள் தெரியாதிருக்க ஒரு விளம்பர மாடல் தேவைப்பட்டார். ஆயுத வழிபாடு, வளர்ச்சி கோஷம், கலாம் அய்யர் என அழைக்கப்படும் அளவுக்கு இந்துத்துவ பாசம் ஆகியவை எல்லாம் கலந்த ஒரு முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அதிலும் முஸ்லீம்… எளிதில் அமையாத இந்த காம்பினேஷன்தான் காலாமை ஜனாதிபதியாக்கியது (உண்மையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்திருந்தால் பைரோன்சிங் ஷெகாவத் அந்த இடத்துக்கு வந்திருப்பார்). அப்போது தரப்பட்ட அதீத வெளிச்சம் வீணாகிவிடாமல் இருக்க அவர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டார். கூடங்குளம், நியூட்ரினோ, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகிய பிரச்சனைகளின்போது நடுத்தரவர்கத்தை மூளைச்சலவை செய்ய கலாமின் வளர்ச்சி வல்லரசு எனும் குத்துப்பாட்டுதான் பயன்படுத்தப்பட்டது. கலாமே சொல்லிட்டாரு, அவரைவிட கூடங்குளம் மக்கள் என்ன பெரிய விஞ்ஞானிகளா என மைக் கிடைக்கும் இடமெல்லாம் காங்கிரஸ்காரர்களும் பாஜகவினரும் பேசுவதற்கான சூழல் கலாம் மூலம்தான் உருவாக்கப்பட்டது. அதற்காகவே அவர் தொடர்ந்து புகழ் வெளிச்சத்தில் வைக்கப்பட்டார்.

இப்படி உருவாக்கப்பட்ட அன்னா ஹாசாரே எனும் அலை இன்னதென்று அறியப்படாத காரணங்களால் காணாமல் போனது. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட மோடி அலை இப்போது மக்கள் முகத்தில் சாக்கடையை கொட்டி நாறிவிட்டது. அப்படியெல்லாம் இல்லாமல் போதுமான அளவு லாபத்தையும் நற்பெயரையும் கொண்டிருந்த கலாம் அலையின் இறுதி அறுவடைதான் இப்போது ஊடகங்களும், அரசும் செய்துகொண்டிருப்பது. எல்லா செய்தி ஊடகங்களும் சற்றேறக்குறைய 4 நாட்களாக இச்செய்தியை வைத்து கல்லா கட்டின (இரங்கலுக்கு எதற்கு விளம்பர இடைவேளை??). மோடியின் துதிபாடிக்கூட்டம் இந்த இறுதிச்சடங்கு மரியாதையை வைத்து இனி தம்மை மதச்சார்பற்றவர்களாக காட்டிக்கொள்ளும்.

இங்கே கையாளப்படுவது ஒரு எளிய உளவியல் நுட்பம். ஒரு எழவுவீட்டில் நீங்களும் சோகமாக இருந்தாக வேண்டும். காரணம் ஒரு குழு சோகத்தில் இருக்கையில் நீங்களும் அச்சோகத்தை நகலெடுப்பீர்கள். அல்லது கும்பலில் ஒத்திருக்கவாவது சோகத்தை வெளிப்படுத்துவீர்கள். எல்லா ஊடகங்களும் சேர்ந்து இந்தியாவையே ஒரு பெரும் எழவுவீடாக மாற்றுகின்றன. தொடர்ந்து சோகப் பிண்ணனி இசையும் தொண்டை கமறலுடனான கலாம் ஆராதனைகளும், பக்கங்கள்தோறும் நிறைந்திருக்கும் கலாம் இழப்பின் சோகமும் நம்மை குற்ற உணர்வுக்கு ஆட்படுத்துகிறது. அதனை எதிர்கொள்ள நம்மில் பெரும்பாலானவர்கள் இன்னும் கூடுதலாக சோகத்தை கொட்டுகிறோம். முதல்நாளைவிட இரண்டாம் நாள் செண்டிமெண்ட் தூக்கலால இருப்பது இதனால்தான்.

குற்ற உணர்வை தூண்டுவதும் பதற்றத்தை தூண்டுவதும் ஒரு சிறப்பான விளம்பர உத்தி. இவ்வளவு நல்லா படிக்கிற என் குழந்தைக்கு நானும் நல்லதைத்தானே தரணும் என ஒரு தாய் சொல்வதாக வரும் ஹார்லிக்ஸ் விளம்பரம் நம் குற்ற உணர்வைத்தான் மூலதனமாக்குகிறது. உங்கள் மனைவியின் மீதான அன்பை தங்கத்தின் மூலம் காட்டுங்கள் என்பதாகத்தான் அனேக விளம்பரங்கள் சொல்கின்றன. அவை மறைமுகமாக உங்களுக்கு தரும் செய்தி- மனைவிக்கு தங்கம் வாங்கித்தராதவன் அன்பில்லாதவன். இந்தவகை பரப்புரைகள் அல்லது விளம்பரங்கள் உங்கள் குற்ற உணர்வை தூண்டுகின்றன. அவை உங்களை பதற்றத்துக்குள்ளாக்குகின்றன. தள்ளுபடி பொருட்களை நீங்கள் வாங்குவது மலிவான விலையில் பொருள் வாங்கும் மகிழ்ச்சிக்காக அல்ல, இந்த வாய்ப்பை இழந்துவிடுவோமோ எனும் பதற்றத்தினால்தான் என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த இத்தனை முண்டியடிப்புக்கள் நடக்க இது மட்டும் காரணமல்ல. நாம் கடந்த இரண்டு பத்தாண்டுகளாக சமூகத்தில் இருந்து துண்டித்துக்கொண்டு வாழ பழகிவிட்டோம். ஆனால் மனிதன் ஒரு சமூக விலங்கு, அவனால் திடீரென அப்படி தனித்து வாழ இயலாது. ஆகவே நமது மனம் சமூகத்தோடு இணைந்து செய்யும் காரியங்களைத் தேடுகிறது. அதன் வெளிப்பாடுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆன்மிக வியாபாரம் சக்கைபோடு போடுகிறது, காரணம் நீங்கள் அங்கே ஒரு குழுவுடன் இருக்கிறீர்கள். உள்ளூரில் உள்ள பல கோயில்களில் பெருமாள் அநாதையாக இருக்கையில் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் கூட்டம் சேர ”அங்கே கூட்டம் இருக்கிறது” எனும் நம்பிக்கைதான் காரணம் (கூட்டம் குறைவாக இருக்கையில் தேவஸ்தானம் தரிசனத்தை தாமதப்படுத்தி அந்த கும்பல் பந்தாவை காப்பாற்றும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன). இந்த காரணத்தால்தான் அடுத்தவர்களோடு குறைவான உரையாடலைக் கொண்டிருக்கும் பணியில் இருப்போர் அதிக அளவுக்கு பார்ட்டி கலாச்சாரத்தை விரும்புகிறார்கள். அதையொத்த நடவடிக்கையாக, அப்துல் கலாமுக்கு அழுவதன் மூலம் நாம் ஒரு சமூக நடவடிக்கையில் இணைந்துவிட்டதாக கருதி நம் பதட்டத்தை தவிர்த்துக்கொள்கிறோம்.

இதுபோன்ற மாஸ் ஹிஸ்டீரியா இந்தியாவுக்கு புதிதல்ல. அது நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் பல சமயங்களில் வேலை செய்திருக்கிறது. பிள்ளையார் பால் குடித்த பெருங்கேனத்தனம் இந்த மாஸ் ஹிஸ்டீரியாவினால்தான் சாத்தியமானது. அதிலும் இந்தியாவில் இதற்கான சாத்தியங்கள் அதிகம்.

முதல் காரணம் நமது பாரம்பர்யமான நம்பிக்கை. எந்த ஒரு பிரச்சினையைத் தீர்க்கவும் கடவுளின் ஒரு அவதாரம் வரும் என நம்பும்படிக்கு கதைகள் மக்கள் மனதில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.  தன் கஷ்டங்களுக்கு தன் விதிதான் காரணம் எனும் நம்பிக்கையும், தனக்கு கிடைத்த நற்பயன்களுக்கு இறைவனின் அருளே காரணம் என நம்பும் தாழ்வு மனப்பான்மை கொண்ட ஆட்டுமந்தையைத்தான் மதங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. இங்கே ஹீரோவின் வெற்றி எனப்படுவது வில்லனின் மரணம், ஹீரோவின் மரணம் வில்லனின் வெற்றி…  நம் நாட்டின் பெரிய பண்டிகைகூட ஒரு கொலையை கொண்டாடும் பண்டிகைதான்.

நம் எல்லா கடவுள்கள் மீதும் கொலைக்குற்றச்சாட்டு உண்டு, கூட்டுமனசாட்சியின் திருப்திக்காக அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரே சமயத்தில் நம்மால் ஒரு சாவுக்கு ஒப்பாரி வைத்துக்கொண்டே இன்னொரு சாவை கொண்டாடவும் முடிகிறது. இந்தியாவில் உற்பத்தி ஆகும் கார்ட்டுன்களையும் மற்ற நாடுகளின் கார்ட்டூன்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள். நம் ஆட்களின் கைவண்ணத்தில் உருவான சோட்டா பீம் மற்றும் கிருஷ்ணா ஆகிய கார்ட்டூன்களில்தான் உலகின் வேறெங்கும் காண முடியாத அளவுக்கு வன்முறைகளும் தனிமனித வழிபாடும் நிறைந்து வழியும்.

இரண்டாவது காரணம் நமது கல்விமுறை. நாம் இங்கே படிப்பது ஒரு ஜனநாயகபூர்வமற்ற கல்விமுறை. ஒருவர் சொல்லிக்கொடுப்பார், அவர் எல்லாம் தெரிந்தவர். கீழே இருக்கும் மாணவர்கள் எதுவும் தெரியாதவர்கள் அவர்கள் பணி சொல்பவரின் கட்டளைக்கு கீழ்படிவது மட்டுமே. சற்றேறக்குறையை 12 முதல் 15 வருடங்களுக்கு நீளும் இப்பயிற்சி சொல்லப்படுபவை எல்லாவற்றையும் நம்பும் கூட்டமாக நம்மை மாற்றியிருக்கிறது.

மதம் எல்லா பிரச்சினைக்கும் ஒரு ஹீரோவின் வருகையை தீர்வாக வைக்கிறது. அதன் விளைவாக, எந்த ஒரு தீர்வுக்கும் நாம் நம்மை நம்பாமல் ஒரு ஹீரோவை எதிர்பார்க்கிறோம். தெரிந்தவன் யாரை ஹீரோ என்கிறானோ அவனை கதாநாயகனாக கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் பயிற்சியை நம் கல்விமுறை நமக்கு கொடுத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு நமக்கான ஹீரோக்களை ஊடகங்கள் உருவாக்குகின்றன.

நமக்கு இருக்கும் ஹீரோவுக்கான ஏக்கம்தான் மோடியின் வெற்றியும் கலாமின் எழுச்சியும். வளர்ச்சி வேண்டுமா மோடிக்கு ஓட்டுபோடு, வல்லரசாக வேண்டுமா கலாமுக்கு வாழ்க கோஷம் போடு, தீவிரவாதம் ஒழிய வேண்டுமா ஒரு முஸ்லீமை தூக்கில்போடு என்பதான தனிநபர் சார்ந்த முடிவுகள் நமக்கு சுலபமாக இருக்கிறது. இதில் ஒரு குடிமகனின் பங்கு என்பது வாழ்க ஒழிக என்பதோடு முடிந்துவிடுவதால் நாட்டின் பொது சிந்தனையாகவே இம்மனோபாவம் நிலைபெற்றிருக்கிறது. மோடி எனும் தனிநபரால் மட்டும் வளர்ச்சி எப்படி சாத்தியமாகும் எனும் சந்தேகமே எழாத மக்கள் கூட்டமே அவரை பிரதமராக்கியது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பிடிபடாத பிரதான குற்றவாளிகளும், அம்பலமாகாத பாரளுமன்ற தாக்குதலின் உள்ளூர் தொடர்புகளும் நமக்கு பொருட்டாகவே இல்லாமல் யாகூப் மேமன் மற்றும் அஃப்சலின் சட்டபூர்வ படுகொலை மட்டுமே போதுமானதாக இருப்பது இந்த மரபார்ந்த சோம்பேறித்தனத்தின் விளைவுகள்தான்.

இது இயல்பானதென்றால் நாம் ஏன் வேலை மெனக்கெட்டு விவாதிக்க வேண்டும்?

கலாமுக்கான ஒப்பாரி வெறும் ஒப்பாரியாக இருந்து தொலைத்தால் பரவாயில்லை. பொய்யர்களையும் ரவுடிகளையும் உருவாக்குவதுதான் இதன் ஆகப்பெரிய சிக்கல். தான் எடுத்த பேட்டியில் கலாம் கேள்விகளை முன்கூட்டியே வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் என்கிறார் நடிகர் விவேக். ஆனால் அவர் குறிப்பிடும் அந்த பேட்டியில் பல பதில்களை கலாம் ஒரு திரையைப் பார்த்தே வாசித்தார். இதயநாள அடைப்பு சிகிச்சைக்கான ஸ்டண்ட்டை கண்டுபிடித்தது கலாம்தான் என்று கூசாமல் சொல்கிறார் விவேக். அது நூறாண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் உருவான தொடர் கண்டுபிடிப்புக்களின் விளைவு. சீறும் பாம்பை நம்பு எனும் ஆட்டோ பொன்மொழியைத்தவிர மற்ற எல்லா பொன்மொழிகளும் கலாம் சொன்னதாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. கலாம் செத்த அன்னைக்கு நீ எப்படி பிறந்தநாள் கொண்டாடலாம் என தனுஷை திட்டி பதிவுகள் குவிகின்றன. இந்த திமிருக்கு அடிப்படையாக இருப்பது பெரும்பான்மைவாதம். அதுதான் நாம் இதனை எதிர்த்தாகவேண்டிய அவசியத்தையும் உருவாக்குகிறது.

எல்லோரும் அழுகையில் நீ அதற்கு எதிராக பேசாதே எனும் மிரட்டல்தான் இவ்விவகாரத்தின் மிக மோசமான விளைவு. இந்த வகை பெரும்பான்மைவாதம்தான் குஜராத்தின் பல்லாயிரம் முஸ்லீம்களை பலிவாங்கியது. இது நியாயமல்ல என கருதிய மக்கள் அமைதியாக இருந்ததன் விளைவுதான் நாம் 2002ல் பார்த்த அந்த அவமானத்துக்குரிய இனப்படுகொலை. அப்படிப்பட்ட ஒரு பெருங்கலவரம் தமிழகத்தில் நடக்காமல் இருப்பதற்கான காரணம் அதற்கான எதிர் கருத்துக்கள் வெளிப்படுவதுதான். மந்தை மனோபாவத்துக்கு எதிராக பேசும் திராவிட மற்றும் கம்யூனிச சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட்டதன் விளைவுதான் இன்றைக்கு நாம் தமிழகத்தில் அனுபவிக்கும் அமைதி. இல்லாவிட்டால் கோவை கலவரத்தின்போதே தமிழகம் எங்கும் சங்கப்பரிவாரங்கள் தங்கள் ரத்தவேட்டையை நடத்தியிருக்கும்.

ஆகவே பெரும்பான்மைவாதம் எனும் மந்தை மனோபாவத்துக்கு ஆட்படாமல் தொடர்ந்து நாம் நியாயத்தின் பக்கம் நிற்போம். கலாம் கறி சாப்பிடாததும், கல்யாணம் கட்டிக்கொள்ளாதும்கூட ஆராதனைக்குரிய செய்தியாகும் நாட்டில் அவரது அரசியல் நிலைப்பாட்டையும் ஆயுத வழிப்பாட்டையும் விமர்சனம் செய்வது ஆயிரம் மடங்கு அவசியமானது. டார்வின் தன் பரிணாமக்கோட்பாட்டை உலகத்துக்கு சொன்னபோது அது பெரும்பான்மை நம்பிக்கைக்கு எதிரானது. ஆனால் இன்று அந்த கருத்துக்கு முன்னால் வாடிகன் மண்டியிடுகிறது. மந்தை மனோபாவம் அடிமைத்தனத்தை கற்றுத்தருகிறது, பகுத்தறிவு நாகரீகத்தைக் கற்றுத்தருகிறது. ஆகவே அடிமைகளின் திருப்திக்காக நாம் நாகரீகத்தை கைவிட வேண்டாம். சிந்தனையை உண்மைகள் தீர்மானிக்கட்டும், செண்டிமெண்ட்கள் சிந்தனையை தீர்மானிக்க இது டிவி சீரியல் அல்ல…

“பிணங்களால் வாழும் தேசம்.” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. இந்த பதிவு மிக நல்ல முறையில் வந்திருக்கிறது.ஆனால் இன்னமும் செறிவூட்ட முடியும் என நம்புகிறேன்.கலாமை ஏற்க செய்ய நம் குற்ற உணர்வு பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்கிற கோணம் புதியது.ஏறக்குறைய சரியானது தான்.வேட்டைத் துப்பாக்கிகளை வாங்கி குவிப்பவர் ஜீவகாருண்ய சங்கத்தின் பிரச்சாரகராக ஒரே சமயத்தில் முறண்பாடின்றி புகழ் பெருவதற்கான சூட்சுமம் எப்படி உருவாகியது?பிரதேச ராணுவ மேலாதிக்க நோக்கங்களுக்கான ஆராய்ச்சியில் விசுவாசமாக உழைக்கிற ஒரு நபர் கையில் வீணையேந்தி இந்துத்வ ஆதரவாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், கவனமாக சிறார்களை பார்வையாளர்களாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கான உபதேசியாகவும் பன்முகம் கொண்ட வசீகரத்தை கட்டியமைத்துக் கொண்டது தற்செயலாக அமைந்தது என்றால் எப்படி என்பது எனக்கு பிடிபடவில்லை.இதற்கு முந்தைய சில பதிவுகள் போல வினவில் வந்தால் அதிக கவனம் பெறும்.விவாதங்களுக்கும் வழிவகுக்கும்….பாராட்டுக்கள் !!

பின்னூட்டமொன்றை இடுக