2017 ல் மொங்கராஜ் மாண்டே – ஒரு கால எந்திரப் பயணம்


(2017 ஆம் ஆண்டு, குருவியார் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் உலகின் அதிசிறந்த தலைமைச் செய்தியாளர் மொங்கராஜ் மாண்டேவின் ஆயி தா எழுத்து நிகழ்ச்சி – ஒரு கால எந்திரப் பயணம். கற்பனைதான் ஆனால் நிஜமாகாது என்பதற்கு உத்திரவாதமில்லை)

மொங்கராஜ் மாண்டே :வணக்கம் அன்பு நண்பர்களே, நான் உங்கள் மொங்கராஜ் மாண்டே. மத்திய மூடி அரசு விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த “ விவசாயிகள் தங்கள் உயிர்வாழ்வதை தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் உரிமைச் சட்டத்தை” கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்டத்தை அரசு விவசாயிகள் நலனுக்காக கொண்டு வந்திருக்கிறதா அல்லது இந்த சட்டத்தை எதிர்கட்சிகள் தங்கள் அரசியலுக்காக எதிர்க்கிறதா என்பதே இன்றைய விவாதம்.

இன்றைய விவாதத்தில் பவர்ஸ்டார் ஜனதா கட்சியின் நாற.நாராயணன், போங்குரஸ் கட்சியின் மெக்சிகை நாராயணன், பதிப்பாளர் பதினைந்து திரி சேசாத்திரி, கு(மாரசாமி) திமுகவைச் சேர்ந்த மிளகுரசம் மற்றும் ஃபிரீ லெஃப்ட்டிஸ்ட் கட்சியின் வருணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். விவாதத்தை துவங்கும் முன்னால் இந்த சட்டம் குறித்த செய்திகளை விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் நசீர்.

நசீர் : மத்தியில பவர்ஸ்டார் மூடி அரசு பதவியேற்ற பிறகு நாட்டை வல்லரசாக்க முழுவீச்சில் முயற்சி செய்கிறார்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். அதுக்கு பெரிய இடையூறா இருக்கிறது நம்ம நாட்டோட மக்கள் தொகைதான். கிட்டத்தட்ட 60 விழுக்காடு மக்கள் கிராமங்கள்ல வசிக்கிறாங்க. உலகவங்கி என்ன சொல்லுதுன்னா ஒரு நாட்டில் விவசாயிகள் எண்ணிக்கை 5%தான் இருக்க வேண்டும். அப்படீன்ன இந்தியா வல்லரசாக கிட்டத்தட்ட 90 விழுக்காடு விவசாயிகள் கிராமங்களை விட்டு வெளியேறனும். ஆனா அவங்க அப்படி செய்ய தயாரில்லை.

அரசாங்கம் தண்ணீர் கிடைக்க விடாமல் செய்தது அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறவில்லை, விளைபொருளுக்கு சரியான விலை கிடைக்கவிடாமல் செய்தது அவர்கள் வெளியேறவில்லை, உரமானியத்தை குறைத்து உரவிலையை உயர்த்தியது அப்படியும் அவர்கள் வெளியேறவில்லை, இன்றுவரை பூச்சி மருந்து வயலுக்கு தெளிக்க மட்டும்தான் என நம்பும் பாமரத்தனமான விவசாயிகள்தான் பெரும்பான்மையானவர்கள். கடந்த பத்தாண்டுகளில் வெறும் இரண்டரை லட்சம் விவசாயிகள் மட்டும்தான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் உலக அரங்கில் இந்தியா பின்தங்கிய நாடாகத்தான் இருக்கும்.

இதை மாற்றத்தான் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டுவருகிறது. அதாவது சட்டத்தோட சாராம்சம் என்னன்னா தற்கொலை செய்துகொள்வதற்கான காரணமும் சூழலும் எல்லா விவசாயிக்கும் இருக்கிறது ஆனால் அதனை ஊக்குவிக்கும்படியா நமது சட்ட நடைமுறை இல்லை. அதனை மாற்றி அவர்கள் உயிர்வாழ்வதற்கான முடிவை அவர்களே தீர்மானிக்க வழி செய்யும் சட்டம்தான் இந்த ”விவசாயிகள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானிக்கும் உரிமைச்சட்டம்”

மாண்டே : நன்றி நசீர்.. திரு.நாற.நாராயணன் இப்போ விவாதத்துக்கு போகலாம். இந்தியா வல்லரசாகனும்குற பவர்ஸ்டார் ஜனதாவோட நோக்கத்தை யாராலும் சந்தேகிக்க முடியாது, ஆனால் என்னோட கேள்வி என்னன்னா இதை அவசர சட்டமாக கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன வந்தது? சூரிய மண்டலம் முழுக்க சென்றடைந்த பவர்ஸ்டாரின் புகழுக்கு இது ஒரு சிறு கறையை உருவாக்கும் என்று நீங்கள் கருதவில்லையா?

நாற.நாராயணன் : ரொம்ப அருமையா கேட்டீங்க, இந்த சட்டத்தை எதிர் கட்சிகள் ”விவசாயிகள் உயிரைக் கையகப்படுத்தும் மசோதா” என சொல்லி மக்களை குழப்பும் வேளையில் நீங்கள் மட்டும்தான் இதனை சரியான வடிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயிகள் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். அவர்கள் நிலத்தால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்களால் நாட்டுக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே இந்த சட்டம் மூலம் அரசாங்கம் அந்த விவசாயிகளிடம் உங்கள் உயிரை விட்டுக்கொடுங்கள் என கேட்டுக்கொள்கிறது அவ்வளவுதான். கிவ் அப் யுவர் லைஃப் என்பதுதான் அந்த சட்டம் சொல்லும் கருத்து. அதுவும் நாளைக்கே செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை.

முதலில் அரசு அதிகாரிகள் உயிர்விடும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை தருவார்கள். அதில் உயிரை நாட்டுக்காக விட்டுத்தரும் உன்னதமான கடமை பற்றி விளக்கமளிப்பார்கள். அடுத்த வருடமும் அந்த விவசாயிகள் உயிரோடு இருந்தால் தன்னார்வ தேச பக்தர்கள் அடங்கிய குழு ஒன்று அவர்கள் வீட்டு வாசலில் நின்று திட்டுவார்கள். இந்த குழுவை ஸ்வாஹா எனப்படும் கிசான் ஒழுங்குமுறை ஆணையம் நியமிக்கும். அந்தக் குழு பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம் எனவும் இச்சிட்டம் சொல்கிறது. அதன் பிறகும் அவர்கள் உயிரோடிருந்தால்தான் அவர்களது குடியுரிமையை பறிக்கும் முடிவை அரசு எடுக்கும். ஆகவே இது விவசாயிகளுக்கு நாட்டுக்கும் பயனளிக்கும் திட்டம்.

மாண்டே : திரு வருணன், அவர் சொல்வது தெளிவா இருக்கு. நாட்டு வளர்ச்சிக்கென்று அரசு ஒரு திட்டம் போடும்போது நீங்கள் ஏன் அதில் குறை காண்கிறீர்கள்? விவசாயிகள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

வருணன் : அதாவதுங்க, நாடு வளரனும் வாஸ்தவம்தான். விவசாயிகள் எண்ணிக்கை குறையனும்கறதையும் ஒரு வகையில ஏத்துக்கலாம். நாங்க பாராளுமன்ற ஜனநாயகத்தையும் தனியார்மயத்தையும்கூட ஏத்துக்கிட்டவங்கதான். ஆனால் இவர்கள் இந்த நடவடிக்கையை பாரளுமன்றத்தோட அனுமதியில்லாம பண்றதுதான் விசித்திரமா இருக்கு. இதெல்லாம் பாராளுமன்றம் கூடிப்பேசி செய்ய வேண்டிய வேலைங்க, அதை இவர்கள் முரட்டுத்தனமா செய்யறதுதான் ரொம்ப வேதனையா இருக்கு.

மாண்டே : திரு பதினைந்துதிரி, ஒரு பதிப்பாளரா இருக்கீங்க, அதோட அமெரிக்காவுல படிச்சிருக்கீங்க. ஆகவே இந்த நாட்டு நலன்ல உங்களுக்கு அதிகம் அக்கறை இருக்கும். நீங்க இந்த சட்டத்தை எப்படி பார்க்கிறீங்க?

சேஷாத்ரி: என்னுடைய முதல் கேள்வி, நிலம் ஏன் விவசாயிகள்ட இருக்கனும்? நம் நாட்டின் பெரிய பிரச்சினையே மக்கள் மாற்றத்துக்கு தயாரா இல்லாததுதான்னு நான் நினைக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால ரசாயன உரம் கிடையாது, இப்போ அது இல்லாம விவசாயமே இல்லை. முப்பது வருசத்துக்கு முன்னால உழவு மாடு இருந்தது இப்போ அது இல்லை. அதுபோல விவசாயிகள் இல்லாத விவசாயமும் சாத்தியம்தான்னு நினைக்கிறேன். இன்னொரு புரிதல் கோளாறும் இதுல இருக்கு, அரசு மக்களை சாகச்சொல்லவில்லை, இந்த நிலையிலும் நீங்க வாழனுமான்னு கேக்குறதாத்தான் நான் புரிஞ்சுக்கறேன். இது வெறும் புரிதல் கோளாறுதான்.

மாண்டே : திரு.மிளகுரசம், நீங்கள் சார்ந்திருக்கும் கு.தி,மு.க இந்த சட்டத்தை ஆதரிக்க முடிவு செய்திருக்கு. ஆனால் இதனை தமிழகத்தில் அமுலாக்க மாட்டோம்னு சொல்லியிருக்கு. அப்படியானால் பாராளுமன்றத்தில் ஏன் ஆதரித்தீர்கள்?

மிளகுரசம் : அதாவது, புது அண்டிராயரிலும் மூன்று ஓட்டை இருக்கும் அதற்காக அதனை யாரும் ஓட்டை அண்டிராயர் என்று சொல்ல மாட்டார்கள்… உங்கள் கேள்விக்கு இதுதான் பதில்.

மாண்டே : நீங்க சொல்ல வருவதை நான் முழுமையா புரிஞ்சுகிட்டேன். ஆனா என்ன காரணத்தின் அடிப்படையில நீங்க மத்திய அரசின் சட்டத்தை ஆதரிக்கிறீங்க?

மிளகு : அதாவதுங்க, கோவிந்தன் பொண்டாட்டி கோயிலுக்கு போனாளேன்னு சுப்பையா பொண்டாட்டி சுடுகாட்டுக்கு போனாளாம் அப்படியிருக்கிறது எதிர்கட்சிகளின் கருத்துக்கள். அந்த குறிப்பிட்ட சட்டத்தில் “மைசூர் சாமுண்டீஸ்வரி துணை” எனும் வாசகங்கள் சேர்க்கப்படனும்னு சொன்னோம். அந்த முக்கியமான திருத்தம் சேர்க்கப்பட்டது அதனால் ஆதரித்தோம் அவ்வளவுதான், அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?

மாண்டே : திரு மெக்சிகை நாராயணன், மத்திய அரசு நாட்டை வல்லரசாக்குவதற்காக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் அதனையும் நீங்கள் எதிர்ப்பது ஏன்?

 மெக்.நாராயணன் : மொதல்ல நான் தெளிவா ஒரு விசயம் சொல்லிக்கிறேன், எல்லாருக்கும் வணக்கம். நான் தெளிவா சொல்றேன், இதே மாதிரி ஒரு சட்டத்தை போங்குரஸ் கட்சி கொண்டுவந்தப்போ எதிர்த்த பவர்ஸ்டார் ஜனதா இப்போ இதே சட்டத்தை கொண்டுவருது. இன்னொன்னு சொல்றேன்.. தெளிவா சொல்றேன், இவர்கள்  மூன்றாண்டுகள் அவகாசம் என பேருக்கு சொல்வார்களே தவிர முதல் ஆண்டிலேயே விவசாயிகளை தற்கொலை செய்துகொள்ள வைப்பார்கள்.

மாண்டே : நீங்க இந்த விஷயத்தை அரசியலாக்குறீங்கன்னு நினைக்கிறேன். சென்ற வாரம் பாரதப்பிரதர் ரேடியோவில் பேசிய ”கேசரி கி பாத்” நிகழ்ச்சியில ஒரு சமஸ்கிருத வாக்கியம் சொன்னாரு,

”குஸ்கா காரம் மகா கோரம், நிசப்தம் பிராண சங்கடம்”.

அப்படின்னா விவசாயிகள்தான் இந்த நாட்டின் சொத்து, அவர்கள் கஷ்டத்தைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாய் இருக்க முடியாதுன்னு அர்த்தம். ஒரு பிரதமர் இவ்வளவு உணர்வுபூர்வமா பேசின பிறகும் இந்த சட்டத்தை சந்தேகப்படுவது நியாயமா எனும் சந்தேகம் பலரிடமும் எழுகிறது. திரு சேஷாத்ரி இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.

சேஷாத்ரி : விவசாயிகள் மரணத்தை இவ்வளவு சீரியசா பார்க்கனுமான்னு எனக்கு தெரியல. இரண்டாம் உலகப்போரில் பலகோடி மக்களை ஐரோப்பா இழந்தது, அதுக்குப் பிறகுதான் ஐரோப்பா வளர்ச்சியடைந்தது. இந்தியாவில்கூட குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள், அதன் பிறகுதான் அம்மாநிலம் உலகின் முதன்மை மாநிலமாக உருப்பெற்றது. ஆகவே வளர்ச்சி வேண்டும் எனும் சூழலில் விவசாயிகள் எண்ணிக்கை குறைவது என்பது வரவேற்கத்தக்கது, அது தற்கொலையா இயற்கை மரணமா எனும் விவாதத்துக்குள்ள நான் போக விரும்பல..

மாண்டே : ரொம்ப சரியா சொன்னீங்க, திரு.வருணன்! விவசாயிகள் சாவுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இத்தனை நெருக்கமான தொடர்பு இருக்கும்போது நீங்கள் விவசாயிகள் தற்கொலையை மட்டும் பெரிதுபடுத்துவது ஏன்.. இன்னொருபுறம் நாடு வளர்வதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்?

வருணன் : இதப் பாருங்க, நாங்க வளர்ச்சியை எதிர்க்கல. ஆனா இது முழுக்க முழுக்க பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பலனளிக்கும் சட்டம் என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு.

நாற.நாரா : ஃப்ரீ லெஃப்ட் நண்பர் தவறான தகவலை அரங்கத்துல பதிவு பண்றாரு.. இந்த சட்டத்தின்படி தற்கொலை செய்துகொள்ளும் அதாவது தங்கள் வாழ்நாளை தாங்களே தீர்மானிக்கும் விவசாயிக்கு மின்சார சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆகும் செலவை அரசே ஏற்கும். அதுமட்டுமில்லை மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் ஆன்லைன் கருமாதி மற்றும் திவச திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்மூலம் கருமாதியும் அடுத்த இரண்டாண்டுகளுக்கான திவசமும் விவசாயிகளுக்கு இலவசமாக தரப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு முன்னோடி திட்டம் உலகில் வேறெங்காவது அறிவிக்கக்கபட்டிருக்கிறது என நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.

வருணன் : இருங்க, அதுலயும் ஒரு கார்ப்பரேட் நலன் இருக்கு. அதாவது நாடு முழுக்க இருக்குற மின்சார மயானங்களை இனி முகேஷ் குந்தானி கம்பெனிதான் கையாளும்னு அரசு அறிவிச்சிருக்கு. அதுமட்டுமில்லாம டிஜிட்டல் கருமாதி திட்டத்தை செயல்படுத்தப்போவது பவுத்தம் அதானியோட ததாஸ்து நிறுவனம்தான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புறேன். இன்னொன்னும் கேளுங்க இலவச தகனம், கருமாதி இதெல்லாம் இரண்டு ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளுக்குத்தான். கூலி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் அவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்றுதான் அரசு சொல்லியிருக்கிறது.

நாற.நாரா: இந்த கம்யூனிஸ்டுகளின் இயல்பே எல்லாவற்றையும் குறை சொல்வதுதான். குந்தானியின் சுடுகாட்டு நிறுவனம் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்போகிறது. அதானியின் ததாஸ்துவில் சுமார் அறுபதாயிரம் புரோகிதர்கள் பணியமர்த்தப்படப்போகிறார்கள். நான் உங்களிடம் ஒன்றே ஒன்றை கேட்கிறேன், இந்தியாவில் உள்ள 70 கோடி விவசாயிகளிடம் சராசரியா ஒரு ஏக்கருக்கும் குறைவாகத்தான் நிலம் இருக்கிறது. அவர்கள் வருமானத்துக்கு இவர்கள் ஏற்பாடு செய்வார்களா? இன்னும் ஒரு வருடத்தில் அரசு மருத்துவமனைகளே இருக்காது, அரசுப் பள்ளிகளும் இழுத்து மூடப்படும், கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடைக்காது. இந்த நிலையில் ஒரு விவசாயி உயிரோடு இருந்தால் எவ்வளவு துன்பப்படுவான். அதை தடுக்கத்தான் பவர்ஸ்டார் அரசு இந்த மகத்தான் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தை தடுக்க நினைப்பவர்கள் விவசாயிகள் துன்பப்படுவதை பார்த்து ரசிக்கும் வக்கிர புத்திக்காரர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்டே : திரு.மிளகு ரசம், இதுபற்றிய உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

மிளகு : மளிகைக் கடையில் புளியும் இருக்கும் எலியும் இருக்கும். ஆனால் கடைக்காரன் புளியை மட்டும்தான் விற்பான். எலியை விற்க மாட்டான். இதுதான் உங்கள் கேள்விக்கு பதில்.

மாண்டே : திரு சேஷாத்ரி, ஒரு சாதாரண விவசாயி எடுக்கும் முடிவு பற்றிய இந்த சட்டத்துக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சரி என நீங்கள் நினைக்கிறீர்கள்.

சேஷு : இதில் எதிர்கட்சிகளின் கருத்தை நாம் பொருட்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா எல்லா விவகாரங்களிலும் பொலிட்டிக்கல் மைலேஜுக்காக கட்சிகள் செய்யும் காரியம்தான் இது. ஆனால் கோடிக்கணக்கான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளப்போகும் இந்த சூழலில் இலவச தகனம் என்பது அநாவசியம். இந்திய விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரைக்கொடுத்து போராடினார்கள். அவர்கள் யாரும் தங்களுக்கு இலவச தகனம் வேணும்னு கேட்கவில்லை. அதேபோல நாடு வல்லரசாகனும்னு தியாகம் செய்யும் மக்களை இலவசங்களைக் காட்டி மயக்குவது சரியல்ல என்பதுதான் என் வாதம். அதுமட்டும் இல்லாம கோமாதா என வணங்கப்படும் பசுக்களை அடக்கம் செய்யவே திட்டம் இந்தியாவில் இல்லாதபோது சாதாரண விவசாயிகளுக்கு இலவச தகனம் என்பது நியாயமல்ல.

ஆனால் ஆன்லைன் கருமாதி ஒரு சிறப்பான திட்டம் என்பதால் அதை வரவேற்கிறேன். இது நமது பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஐ.டி மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்.

மாண்டே : இந்தியா வல்லரசாக தங்கள் உயிரைக் கொடுக்கும் விவசாயிகளை இலவச தகனத்தைக் கொடுப்பது அவர்கள் தியாகத்தை இழிவுபடுத்தும் செயல் எனும் வித்தியாசமான பார்வையை முன்வைத்திருக்கிறார் சேஷாத்ரி, இது குறித்து தொடர்ந்து விவாதிக்கலாம்..

திரு மெக்சிகை நாராயணன், உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். அரபு நாடுகளில் இப்படிப்பட்ட விவாதங்களே இல்லாமல் சட்டங்கள் நிறைவேறுகின்றன. கிருஸ்தவ தேவாலயங்களில் அன்னிய மொழியான ஆங்கிலத்தில்தான் பிரார்த்தனை நடக்குது. அதையெல்லாம் கண்டிக்காத நீங்கள் ஏன் பவர்ஸ்டார் ஜனதா கொண்டுவரும் சட்டத்தைம் மட்டும் எதிர்க்கிறீர்கள்.

மெக்.நாரா : நான் உங்க கேள்விக்கு முழுமையா பதில் சொல்றேன். தெளிவா சொல்றேன், நாங்கள் இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை. அதன் சில அம்சங்களைத்தான் எதிர்க்கிறோம். விவசாயிகளை காறித்துப்பும் ஸ்வாஹா அமைப்பின் தலைவராக குசுவ இந்து பரிசத்தின் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், அது முதல் தவறு. மின்மயானங்களை வெளிப்படையான டெண்டர் இல்லாமல் குந்தானியின் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார்கள், இது இரண்டாவது. விவசாயிகளுக்கு வெறும் மூன்று வருடம் மட்டும் அவகாசம் கொடுப்பது மிகவும் குறைவான காலக்கெடு, இது மூன்றாவது தவறு. இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் மூன்றாவது முறையாக உலக பயணம் போகிறார் பவர்ஸ்டார். அவருக்கு பலகோடி செலவு செய்து பேன்சி டிரஸ் அணியவே நேரம் சரியாக இருக்கிறது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.

மாண்டே : இந்த கருத்தை என்னால் அனுமதிக்க முடியாது. எல்லா இந்துக்கடவுள்களும் பலகோடி பெறுமதி கொண்ட ஆபரணங்களோடு காட்சி தருபவர்கள்தான். பவர்ஸ்டாரின் அலங்காரத்தை கிண்டலடிப்பவர்கள் பெரும்பான்மை இந்து காலாச்சாரத்தை கிண்டலடிப்பதாகத்தான் கருதமுடியும்.

திரு. மிளகுரசம், உங்களோட இறுதிக் கருத்தை நீங்கள் பதிவு செய்யுங்கள். தயவு செய்து பழமொழியை மட்டும் சொல்லி முடிக்க வேண்டாம். மேலும் உங்கள் தலைவி மேல் இருக்கும் வழக்கு காரணமாகவே நீங்கள் சட்டத்தை ஆதரிக்கிறீர்கள் எனும் குற்றச்சாட்டுக்களுக்கு உங்கள் பதில் என்ன?

மிளகு : படுத்துகிட்டு தூங்குமாம் நாயி, நின்னுகிட்டு தூங்குமாம் பேயி. எதிர்கட்சிகள் தேவையில்லாமல் பிரச்சினையயை பெரிதாக்குகின்றன. தமிழக விவசாயிகள் மான்புமிகு ஆத்தா அவர்களின் ஆட்சியில்தான் சுபிட்சமாக வாழந்தார்கள். வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் தீர்ப்பு பாதகமாக வருமோ எனும் கவலையே எங்களுக்கு இல்லை.

வழக்குக்காக ஆதரிக்கிறோம் என எதிர்கட்சிகள் கருதினால் குருமாநிதியிடம் இந்த வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லவேண்டியதுதானே? அந்த வழக்கு இருப்பதால்தானே இந்த கேள்வி எழுகிறது! எங்கள் ஆத்தாவா இந்த வழக்கை தொடுத்தார்கள்? விவசாயிகள் நலன் பெரிதென்று இந்த திருக்குவளை கழகம் கருதினால் வழக்கை வாபஸ் வாங்கி தங்கள் அக்கறையையை காட்டட்டும்.

வருணன் : மத்திய பவர்ஸ்டார் ஜனதா அரசு பாராளுமன்ற மாண்புகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. இது தொடர்ந்தால் இந்த அரசமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை குலைந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. ஆகவே பவர்ஸ்டார் இவ்விவகாரத்தில் பாராளுமன்ற விவாதத்தின் மூலமே ஒரு முடிவை என்ன வெண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

நாற.நாராயணன் : இது ஒரு மகத்தான சட்டம். விவாசாயிகளை நிஜமான சொர்க்கத்திற்கு அனுப்பும் அருமையான திட்டம். ஆகவே இதனை எந்த வகையியில் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் என்பதுதான் எங்கள் கருத்து.

மெக்சிகை நாராயணன் : இந்த சட்டத்தை போங்குரஸ் நிறைவேற்றினால் மட்டும்தான் அது விவசாயிகளுக்கான சட்டமாக இருக்கும். ஆகவே இதனை பவர்ஸ்டார் ஜனதா அரசு நிறைவேற்ற விட மாட்டோம்.

பதினைந்து திரி சேஷாத்ரி : விவசாயிகள் தற்கொலையை ஒரு தனிப்பட்ட பிரச்சினையா பார்ப்பதினால்தான் இந்த குழப்பம் வருதுன்னு நான் நினைக்கிறேன். நமக்கு தேவைன்னு வரும்போது நாம் ஆடு, கோழி ஆகியவற்றை கொன்று சாப்பிடுறோம். ஆகவே தேவைன்னு வரும்போது சில சங்கடங்களை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதன் உடனடி பிரச்சினையை பார்க்காமல் நீண்டகால விளைவை பார்த்து மக்கள் முடிவு செய்யனும்கறதுதான் என்னோட கருத்து.

மாண்டே : நாடு வல்லரசாகனும்கறதுல யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேபோல தியாகம் செய்வதில் இந்திய விவசாயிகள் யாருக்குமே சளைத்தவர்கள் அல்ல. மேலும் அவர்கள் மானஸ்தர்கள் என்பதால் இந்தியா வல்லரசாவதற்கு அவர்கள் தடையாக இருக்க மாட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இதையேதான் பிரதமரும் தமது சமஸ்கிருத கவிதையில் சொல்லியிருக்கிறார்.

இஸ்டலக்கடி லாலா சுந்தரி

கோலா கொப்பர கொய்யா…

இந்த கவிதையோடு இந்த விவாதத்தை நிறைவு செய்யலாம். வந்திருந்த விருந்தினர்களுக்கு எங்கள் நமஸ்காரம்.

Advertisements

“2017 ல் மொங்கராஜ் மாண்டே – ஒரு கால எந்திரப் பயணம்” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. பாத்திரங்கள் எல்லாம் பளபளா! மொங்கராஜ் பாண்டே,பதினைந்து திரி,வருணன் ….எல்லாமே செம….மிளகுரசம் கூடத்தான்!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s