இந்த பெருமழைப் படுகொலைகளை உங்களுக்கு வழங்கியோர் “உங்கள் தமிழ் ஊடகங்கள்”


தமிழகத்தில் நீண்ட காலமாக உயிரோடு வைக்கப்பட்ட பொய்களில் ஒன்றை சென்னையில் பெய்த பெருமழை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஓய்வெடுப்பதையும் பழிவாங்குவதையும் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத ஜெயலலிதா நிர்வாகத்திறன் மிக்கவர் எனும் பொய் ஊடகங்களால் பல்லாண்டுகாலம் வலிந்து திணிக்கப்பட்டு வந்தது. அடிமுட்டாள்தனமான திட்டங்கள், எதேச்சதிகாரமாக கைவிடப்படும் திட்டங்கள், அடிமுட்டாள்தனமான நிர்வாக மாற்றங்கள், எதற்கும் பதிலளிக்க விரும்பாத திமிர்த்தனம் ஆகியவை ஒரு மிக மோசமான தலைவனிடம்கூட காணக்கிடைக்காத தகுதிகள், அவை ஜெயலலிதாவிடம் நிரம்பவும் உண்டு… அவை மட்டுமே அவரிடம் உண்டு. ஆனால் இந்த இந்த விடயங்கள் மக்களிடம் விவாதிக்கப்படாமல் தடுத்த பெருமை தமிழ் ஊடகங்களையே சேரும்.

1991 – 96 வரையிலானது ஒரு சகித்துக்கொள்ள முடியாத காட்டாட்சி என்பது தமிழக அக்ரஹாரங்களே ஒத்துக்கொண்ட உண்மை. ராஜகுரு சோ ராமஸ்வாமி அவர்களாலே சகித்துக்கொள்ள இயலாத ஆட்சியாகவே அது இருந்தது. அதன் பிறகு எந்த தருணத்திலும் ஜெயா தான் திருந்தியதற்கான அறிகுறிகளை காட்டியதில்லை. ஆனால் 96க்கு பிறகு தமிழக ஊடகங்களின் ஜெய விசுவாசம் கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டே இருந்திருக்கிறது. அவரது முந்தையை பாவங்களைக் கழுவி, வழக்குகளில் இருந்து தப்பிய வழிகளை விவாதிக்காமல் அதனை வெற்றிகரமான மீட்சியாக சிலாகித்து, அவரது சலிப்பூட்டும் ஒப்புவித்தல்களில் இருந்து வார்த்தைகளை தேடிப்பிடித்து அவர் திருந்திவிட்டதாக பிராடு வேலை பார்த்தவரை தமிழக ஊடகங்கள் ஜெயாவுக்கு செய்த தரகுவேலைகள் கணக்கில் அடங்காதவை.

இவை ஜெயா வீசும் காசுக்காக மட்டும் அல்ல. அவர் சொந்தக்காசை தூக்கி வீசுபவரும் அல்ல. விளம்பரம் மூலம் தரப்படும் அரசுப்பணம் மட்டும்தான் அவர் பத்திரிக்கைகளுக்கு போடும் பிச்சை. அது கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் நடக்கும். ஆனாலும் இந்த ஊடகங்கள் ஜெயாவின் மீது கட்டுக்கடங்காத விசுவாசத்தை காட்டுவதன் காரணம் என்ன?

முதல் காரணம், ஊடகங்களின் பிடி இன்னமும் பார்ப்பனர்கள் கையில் இருக்கிறது. பார்ப்பனர்கள் ஜெயாவை தங்களது அரசியல் அதிகாரத்தின் குறியீடாக கருதுகிறார்கள். ஜெயாவால் பார்ப்பன(ர்) நலனுக்கு குந்தகம் வந்தாலன்றி அவர்கள் அவருக்கு எதிராக சிந்திக்கக்கூட மாட்டார்கள். ஜெயேந்திரன் சிறைக்கு அனுப்பப்பட்டபோது மட்டும்தான் அவர்கள் சாலைக்கு வந்து போராடினார்கள். கமலஹாசன் எனும் பார்ப்பனர் படத்துக்கு ஜெயாவால் இடையூறு வந்தபோது மட்டும்தான் பெரும்பான்மை ஊடகங்கள் ஜெயா அரசை நேரடியாக கண்டிக்கும் வகையில் கருத்து தெரிவித்தன. ஒரு நகரமே சின்னாபின்னமான பிறகும் அதற்காக பிரஸ்மீட் வைக்க முடியாது என ஆணவத்தோடு இருக்கும் ஜெயாவை, கமல் எனும் நடிகனின் பட வெளியீட்டு விவகாரத்தில் நிருபர் சந்திப்பை நடத்த வைத்தது ஊடகங்களின் இந்த இன நலன்தான். பாஜகவின் பச்சைப் பொறுக்கிகளையும் விவாத ஞானமற்ற முட்டாள்களையும் இந்த ஊடகங்கள் பிரபலப்படுத்துவது தங்கள் சாதி ஆதிக்கத்தை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ளத்தான்.

பெரும்பான்மை ஊடகங்கள் பார்ப்பனர்களால் கட்டுப்படுத்தப்படும்போது அவர்களது அபிப்ராயம் ஒரு பொதுக்கருத்தாக மாறுகிறது. (தந்தி குழுமத்தை நாம் பரிசீலிக்க அவசியமில்லை. ஒரு கழுதை நாட்டை ஆண்டாலும் அதனை தந்தி குழுமம் ஆதரிக்கும். அடிமைத்தனம் அதன் இயல்பு, எப்படி பாஜகவில் இருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேந்த காலிகள் தங்கள் மீதான அடிமைத்தனத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்களோ அப்படி.) இந்த பொதுக்கருத்து மற்றவர்களுக்கு ஒரு மறைமுக நிர்பந்தத்தை கொடுக்கிறது. ஆத்திகர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஒரு நாத்திகனால் தன் கருத்துக்களை முழுவீரியத்தோடு சொல்ல முடியாது இல்லையா?

இரண்டாவது முக்கிய காரணி, மற்ற சாதிகளிடையே உள்ள பார்ப்பன அடிமைத்தனம். இது நமக்களிக்கப்பட்ட 2000 ஆண்டுகால பயிற்சி. இடையே பெரியாரால் இது முறியடிக்கப்பட்டாலும் ஒழிக்கப்படவில்லை. பெரியாரது சிந்தனைகளுக்கு அண்ணாதுரை காலத்தில் பாலிடால் ஊற்றப்பட்டது என்றால் கருணாநிதி காலத்தில் அவை அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. தொடர் விவாதங்களும் செயல்பாடும் இல்லாமல் போனால் எந்த ஒரு நற்சிந்தனையும் நம் மூளையில் தங்காது. அதுதான் திமுகவில் நடந்தது. பெரியார் காலத்தில் சுயமரியாதையை கற்றுக்கொண்ட ஒரு தலைமுறையின் வாரிசுகள் தீவிர சாதியவாதிகளான கொடுமை பல இடங்களில் காணக்கிடைக்கிறது. இந்த அடிமைத்தனத்தை நாம் கருணாநிதியிடம்கூட காணமுடியும். அவரை அதீதமாக விமர்சிக்கின்ற, வெறுப்பை கக்குகிற பார்ப்பன பத்திரிக்கைகள் அவரை தப்பித்தவறி பாராட்டிவிட்டால் அந்த செய்தியை பரவசத்தோடு குறிப்பிடுவதும், பார்ப்பன சக்திகளை தாஜா செய்ய கடுமையாக மெனக்கெடுவதும் அவரது இயல்பாக இருந்து வருகிறது.

வெகுமக்களிடம் மீண்டும் வளர்க்கப்பட்ட இந்த அடிமைத்தனம் பார்ப்பனர்கள் மீது இருக்கும் புத்திசாலிகள், திறமைசாலிகள் எனும் பிம்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வைக்கிறது. அதுவே ஜெயா மீதான நம்பிக்கைக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஜெயாவின் தனிப்பட்ட இயல்புகளில் பத்தில் ஒரு பங்கை கொண்டிருந்தாலும் மற்ற இடைச்சாதி தலைவர்கள் முகவரியில்லாமல் போய்விடுவார்கள். நிதானமாக பரிசீலித்துப்பாருங்கள், 2G வழக்கு இன்றுவரை விவாதிக்கப்படும் அளவுக்கு காமன்வெல்த் ஊழல் விவாதிக்கப்படவில்லை. காரணம் 2ஜி ஊழலின் குற்றவாளிகள் இடைசாதிக்காரர்கள் மற்றும் தழ்த்தப்பட்டவர்கள்.

அடிமைத்தனத்தில் சுகம் கண்ட ஒருவனின் எதிரி இன்னொரு அடிமைதானேயன்றி எஜமானனல்ல. அந்த தியரியின்படிதான் ஜெயலலிதாவின் பல்வேறு வழக்குகள் பழங்கதையாகிவிட்ட பிறகும் கோர்ட் வாயிலைக்கூட தொடாத சர்காரியா கமிஷன் விவாதங்களில் உயிரோடிருக்கிறது. கருணாநிதி மஞ்சள் பையோடு சென்னைக்கு வந்தார் என பகடி செய்யும் யாருக்கும் ஜெயாவின் குடும்பம் மட்டும் என்ன திரண்ட சொத்துக்களோடு சென்னைக்கு வந்ததா என கேள்வி எழாது. ஏன்? அவர்கள் பார்வையில் எஜமானனின் ஊழல் ஒரு பொருட்டல்ல, தன்னைப்போன்ற ஒரு இடைச்சாதிக்காரன் சொத்து சேர்ப்பதுதான் ஆத்திரமூட்டக்கூடியது. அந்த இயல்பே சில ஊழல்களை கொன்று புதைத்துவிட்டு சிலவற்றை உயிரோடுவைத்திருக்கிறது.

அதற்காக இந்த ஊடகங்கள் எப்படி ஒரு மழைவெள்ள பேரழிவுக்கு பொறுப்பாக முடியும்?

காரணம் ஒரு பேரழிவின்போதுகூட செயல்பட முடியாத அரசாக அதிமுக அரசு ஆனதற்கான அடித்தளம் இந்த ஊடகங்களால்தான் உருவாக்கப்பட்டது.

ஜெயலலிதா ஏன் தினசரி அலுவலகம் வருவதில்லை? வந்தாலும் ஏன் அரை மணி நேரத்துக்கு மேல் இருப்பதில்லை?

அவர் ஏன் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளைக்கூட சந்திக்காமல் இருக்கிறார்? அவர் அப்படி சந்திப்பதாக காட்டும் போட்டோஷாப் படங்களை ஏன் அரசே வெளியிடுகிறது?

அவர் ஏன் தான்தோன்றித்தனமாக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மாற்றுகிறார்?

ஆண்டின் பெரும்பான்மை நாட்கள் அவர் ஏன் கொடநாட்டிலும் சிறுதாவூரிலும் ஓய்வெடுக்கிறார்?

அவர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை?

ஏன் அரசாங்கத்தின் ஒவ்வொரு சிறிய நகர்வும் ஜெயலலிதாவின் பெயரிலேயே நடைபெற வேண்டும்?

ஏன் அவரது சகாக்கள் யாருக்கும் சுயமாக முடிவெடுக்கும் மற்றும் பேசும் சுதந்திரம் இல்லை? ஏன் ஒரு தலைநகர மேயர் ஊடகங்களை சந்திக்கவோ அல்லது தன் ஆளுமையின்கீழ் உள்ள நகரை பார்வையிடவோ உரிமையற்றவராக இருக்கிறார்?

இவை எல்லமே ஜெயாவின் அலட்சியம், எதேச்சதிகாரம், சோம்பேறித்தனம் ஆகியவை பற்றிய விமர்சனத்தை எழுப்புகின்றன். இந்த கேள்விகள் யாவும் ஏதோ ஒருவகையில் நடந்த பெரும் அழிவுக்கு தொடர்புடையவை. ஆனால் இக்கேள்விகள் எல்லாம் எல்லா விவாதங்களிலும் நெறியாளர்களாலேயே தடுக்கப்பட்டன. அதுதான் அவரது பாணி எனும் சப்பைக்கட்டு அடிமைகள் சொல்லும் முன்னால் ஊடகத்தாரால் சொல்லப்பட்டன. அரசியல் சார்பற்ற பொதுமக்கள் அந்த நெறியாளரின் பார்வையில் இருந்தோ அல்லது பத்திரிக்கையாளரின் பார்வையில் இருந்தோதான் தமது நிலைப்பாட்டை கட்டமைக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு பயப்படும் பொதுஉளவியலின் தோற்றுவாய் இத்தகைய ஊடகங்களின் குரல்தான்.

தன் சக அமைச்சர்களே சந்திக்க முடியாத ஒருவர் எப்படி சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? தன் குழுவுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மனமில்லாத ஒருவர் எப்படி சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? தன் மீதான வழக்கில் எதிராகவும் தீர்ப்பு வரலாம் எனும் அடிப்படை தயாரிப்புகூட இல்லாமல் கோர்ட்டுக்கு போய், தீர்ப்பு எதிராக வந்ததும் தளர்ந்து துவண்டு போனவர் எப்படி தொலைநோக்கு பார்வையுடையவராக இருக்க முடியும்? தண்டனை எனும் தீர்ப்பு வந்த பிறகு கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டிக்கும் பாவனைகூட செய்ய துணிவில்லாதவர் எப்படி தைரியலட்சுமியாக முடியும்? தனது அல்ப பழிவாங்கும் குணத்தால் ஒரு நூலகத்தைக்கூட விட்டுவைக்காமல் நாசமாக்கும் செயலை செய்தவர் எப்படி ஒரு தலைமைப்பண்பு நிறைந்தவராக முடியும்? ஆனால் இந்த அபாண்டமான புகழ்மொழிகள் ஜெயலலிதாவுக்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வழங்கப்பட்டன.

மனநோய்களின் மோசமான அறிகுறி தன்னைப்பற்றிய கற்பனைகளை நிஜமென நம்புவதுதான். ஆனால் யாரோ சிலரது கற்பனைகளை தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக மாற்றி அவர்களை மனநோயாளியாக்கின ஊடகங்கள். ஜெயலலிதாவின் அரசை விமர்சிக்க வேண்டிய தருணங்களில் கருணாநிதியையும் விமர்சிக்கும் பழக்கம் ஒரு அநிச்சை செயலாக கட்சி சார்பற்றவர்களிடமும் உருவானது. இப்பழக்கம் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவர் பற்றிய விமர்சனங்களில் இருந்ததில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு மீதான விமர்சனங்கள் அனேகமாக எதுவும் நேரடியாக வைக்கப்பட்டதில்லை. இப்படி எதிர்கட்சிகள் சொல்கின்றனவே இது சரியா எனும் பாணியிலேயே வடிவமைக்கப்பட்டன. இத்தனை உயிர்கள் பலியாகி லட்சம் கோடி ரூபாய் இழப்புக்குப் பிறகும் தமிழ் தொலைக்காட்சிகள் ஜெயலலிதா பற்றிய விமர்சனங்களுக்கு இடமளிப்பதே இல்லை. நீர்நிலைகள் தூர்வாரப்படாதது பற்றிய விமர்சனங்கள் வெள்ளத்துக்கு முன்னாலும் நிராகரிக்கப்பட்டன இப்போதும் நிராகரிக்கப்படுகின்றன. சொல்லப்படும் காரணங்கள் மட்டும் வேறுபடுகிறது.

இந்த ஸ்டிக்கர் ராஜ் அரசின் நிர்வாக சீர்கேட்டு நாற்றம் தாங்க முடியாமல் தேசிய ஊடகங்கள் வேறு வழியற்ற சூழலில் அரசை விமர்சிக்க துவங்கியிருக்கின்றன. இந்த தருனத்திலும் தமிழ் ஊடகங்கள் (தற்சமயத்துக்கு ஆனந்த விகடன் விதிவிலக்கு) அந்த நிர்வாக சீர்கேட்டு நாற்றத்தை புனுகு பூசி மறைக்கும் வேலையை பார்க்கின்றன. சென்னை பேரழிவு பற்றிய வட்டமேசை மாநாடு என படோடாபமாக ஆரம்பிக்கும் நிகழ்சியில் யாரையும் விமர்சிக்காமல் ஆக்கபூர்வமாக பேசலாம் என கண்டிஷன் போடுகிறார் புதிய தலைமுறை கார்த்திகை செல்வன். இந்த விவாதத்தில் ஒரு இடத்தில்கூட நாங்கள் ஜெயலலிதாவை குற்றம் சொல்லவில்லை உத்திரவாதம் தந்து விவாதிக்கிறார் தந்தி டிவி ஹரிஹரன். என்ன பேசுகிறோம் என தெரியாமல் பினாத்தும் பெருமாள் மணிகண்டன் போன்ற நபர்கள் பெரும்பான்மை விவாதங்களில் வலிந்து திணிக்கப்படுகிறார்கள். பரலோக ராஜ்ஜியத்தை சில அங்குல இடைவெளியில் தவறவிட்ட மக்கள் மத்தியில்கூட இவர்களால் இந்த சேவை செய்ய முடிவது உலகின் பேராச்சர்யங்களில் ஒன்று.

சமூக ஊடகங்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் இந்த நேரத்தில் அம்மா ஸ்டிக்கர்கள் நம் நெற்றியிலேயே ஒட்டப்பட்டிருக்கும். அது நம் நெற்றியில் ஒரு ரூபாய் ஒட்டுவதற்கு முந்தைய படிநிலையாக கொள்ளலாம். அரசு நிகழ்த்திய ஒரு பேரழிவிற்குப் பிறகும் சி.ஆர்.சரஸ்வதி, செ.கு.தமிழரசன் போன்ற அல்லக்கைகளின் திமிரைக்கூட குறைக்க முடியாத தரத்தில் இருக்கின்றன ஊடக விமர்சனங்கள். உண்மையில் இதுதான் வெள்ளைத்தைவிட பெரும் அழிவை தரவல்லது. ஆகவேதான் சொல்கிறோம், இந்தப் பேரழிவையும் படுகொலைகளையும் இணைந்து வழங்கியோர் “நம் தமிழ் ஊடகங்கள்”.

Advertisements

“இந்த பெருமழைப் படுகொலைகளை உங்களுக்கு வழங்கியோர் “உங்கள் தமிழ் ஊடகங்கள்”” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. இங்கு காவிரிமைந்தன் ஒரு பதிவர் இருக்கிறார் .அவருடைய பார்வைக்கு இந்த பதிவை கொண்டு போங்களேன் .வில்லவனுடைய பின்புலத்தை அலசி ஆராய .

 2. ஜெயலலிதாவின் அரசை விமர்சிக்க வேண்டிய தருணங்களில் கருணாநிதியையும் விமர்சிக்கும் பழக்கம் ஒரு அநிச்சை செயலாக கட்சி சார்பற்றவர்களிடமும் உருவானது. மிகவும் சரியான கருத்து.

 3. வில்லவன்,
  பார்ப்பனர்களின் ‘அறம்’ எவ்வாறெல்லாம் தன் சாதி அபிமானத்தில் கட்டியமைக்கப் பட்டிருக்கிறது என்பதையே நானும் சமீப காலமாக உணர்ந்து வருகிறேன்.முறைகேட்டு புகாரில் சிக்கிய நீதிபதி ராமசாமியை வீரமணியின் திராவிடர் கழகம் காப்பாற்ற முனைந்ததை அருவருப்புடன் கண்டித்திருக்கிறோம். 2 ஜி வழக்கில் ராஜாவை, இன்னும் எத்தனையோ எத்தர்களை சாதியை பார்க்காமல் கண்டித்து வருகிறோம் .ஆனால் சங்கராச்சாரி வழக்கில் கூடவும் ஜெயலலிதாவை எதிர்க்காமல் அவரது கோபத்தை ஆற்று படுத்தி, வழக்கில் ஓட்டைகள் வலிந்து உருவாக்கப் பட்ட போதெல்லாம் அதனை அமைதியாக கவனித்து, நீதிபதிக்கு லஞ்சம் தர பேசிய பேச்சு வெளிவந்தும் அதனை புறக்கணித்து, இப்படியெல்லாம் ஒரு வழியாக “லோக குருவை” கிட்டத்தட்ட சேதாரமில்லாமல் அதே இடத்தில் மறுபடி அமர வைத்ததில் பார்ப்பனர்கள் சத்தமின்றி நிகழ்த்திய முறையிருக்கிறதே அது ஒப்பிட முடியாத அராஜகம்.இறுதியில் ஒரு கவர்னரைக் கூட ஓசையின்றி பலிகொடுத்த சாகசம் அடடா!! ஆனால் நாமெல்லாம் எல்லோரையும் நேர்மையான முறையில் பொது வெளியில் கண்டிப்பது என்பது உண்மையிலேயே அறம் தானா? நாமும் அவர்களை போன்று தெரிவு செய்தே ‘நியாயம்’ பேச வேண்டுமோ?

  4 1/2 ஆண்டுகளில் அதிமுக அரசை தனித்து பிரச்சினை அடிப்படையில் எதிர்த்தவர் யாருமில்லை.விவாதத்தில் உட்காருகின்ற அய்யநாதன் போன்ற பார்ப்பன அடிமைகள் கருணாநிதியை, ஸ்டாலினை பெயர் சொல்லி குதறிவிட்டே இந்த அரசை அஃறிணையில் அதுவும் தலைமை செயலாளர் அறிவிப்பிற்கு எதிரான மறுப்பை பதிவு செய்கிறார்கள்.அவ்வளவு விசுவாசமா,பயமா இரண்டுமேயா? இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் இந்த அவலத்தை நிகழ்த்தினார்கள் என்பது மிக சரியான புரிதல்

 4. ஊடகங்களின் நிலைப்பாட்டையும் அவை அம்மாவுக்கு சொம்பு தூக்குவதையும் மிக அருமையான கட்டுரையாகத் தந்திருக்கிறீர்கள்… கடைசி வரியில் சொன்னது அப்பட்டமான உண்மை….
  அருமை..

 5. … சம்புக ராஜ்ஜியத்தின் தோல்வியும் இராவண ராஜ்ஜியத்தின் தோல்வியும் புராதனக்கால நிகழ்ச்சி என்றால் தமிழகத்தில் திராவிடக்கட்சியின் அரசியலதிகாரம் ஒரு பார்ப்பனப்பெண்ணின் கைக்கு மாறியது அண்மைக்காலச்சான்றகும். தமிழகத்தின் ஆட்சியைப் பார்ப்பன ஆண்கள் கைப்பற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை….// பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா எழுதிய “நான் ஏன் இந்துவல்ல” என்ற புத்தகத்திலிருந்து…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s