மக்கள் ஏன் தங்கள் மீதான எல்லா வன்முறைகளையும் சகித்துக்கொள்கிறார்கள்?


தொடர்ந்து போர் நடக்கும் சூழல்களிலும் மக்கள் எப்படி சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களிடம் கைக்குழந்தைகள் இருப்பது எப்படி சாத்தியம்?” அரசியல் ஞானம் கொஞ்சமும் இல்லாத என் தோழி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட கேள்வி இது. வாழ்வில் பெரிய சிரமங்களை சந்தித்திராத அவர் பார்வையில் ஒரு பெரிய நெருக்கடியின்போது இயல்பான சந்தோஷங்களுக்கு வாய்ப்பில்லை. அனேகமாக நமக்கும் இத்தகைய பாமரத்தனங்கள் இருக்கலாம், அது வெளிப்படும் இடம் வேண்டுமானால் வேறாக இருக்கலாம்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் உறவுக்காரர் ஒருவர் வீடு சென்னை வெள்ளத்தின் தீவிரத்தில் இருந்து நூலிழையில் தப்பியது. அவர் கடும் ஆத்திரத்துடன் குறிப்பிட்டார் “ உலைவைக்க வழியில்லாம சோத்துக்கு கையேந்துற காலத்துலயும் இவனுங்க டெய்லி பிக்னிக் போற மாதிரி துரைசாமி சப்வேயை வேடிக்கை பார்க்க வந்துடறானுங்க” (அப்போது அங்கிருந்து ஐம்பதடி தள்ளியிருக்கும் வீடுகள்கூட வெள்ளத்தில் சிக்கியிருந்தன, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் உயிரைப் பணயம் வைத்து உஸ்மான் ரோடு போனார்கள்).

பெரிய விபத்தை படம்பிடிக்க முண்டியடிப்பது முதல் மக்கள் சாவின் விளிம்பில் நிறுத்திய அரசை எதிர்க்காமல் மிக இயல்பாக வழக்கமான வாழ்வுக்கு திரும்புவது வரையான வெகுமக்கள் செயல்பாடுகள் எங்ஙனம் சாதியமாகிறது?

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு கூண்டில் இடதுபக்கம் உலோக தரைபரப்பும் மறு பாதியில் ரப்பர் தளமும் வைக்கப்பட்டது. நாய் ஒன்றை உலோக பரப்பில் அமரவைத்து பின்னர் உலோகப்பரப்பில் மின் அதிர்ச்சி கொடுத்தார்கள். நாய் உடனடியாக ரப்பர் பரப்புக்கு தவியது. இந்த செயல் சில முறை செய்யப்பட்டு பிறகு ரப்பர் மற்றும் உலோகப்பரப்பு ஒரு கதவால் தடுக்கப்பட்டது. இப்போது மின் அதிர்ச்சி தரப்பட்டபோது நாய் ரப்பர் பரப்பிற்கு தாவ முயற்சி செய்கிறது, தொடர்ந்து முயற்சி செய்து முடியாமல் சலித்துப்போய் மின் அதிர்வு தரப்பட்ட நிலையிலும் நாய் அந்த உலோக தளத்தில் அமர்ந்துவிட்டது.

இப்போது சோதனையில் அடுத்த கட்டமாக ஆய்வாளர்கள் அந்த ரப்பர் தளத்தை தடுக்கும் கதவை நீக்கிவிடுகிறார்கள். அப்போதும் நாய் தாவ முயற்சி செய்யவில்லை. அந்த ஆய்வை செய்தவர் வலுக்கட்டாயமாக நாயை இழுக்க முயற்சி செய்கிறார். அப்போதும் அது அங்கிருந்து வர முயற்சி செய்யவில்லை. இதனை learned helplessness  என உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு மோசமான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டு அதில் இருந்து தப்பமுடியாத சூழல்களில் மனம் அந்த சூழலை சகித்துக்கொள்ள பழகிவிடுகிறது. பிறகு அதற்கான வாய்ப்பு வரும்போதும் மூளை அதனை பொருட்படுத்துவது இல்லை.

இது நாய்களுக்கு மட்டும் இல்லை. நாமும் பல சந்தர்பங்களில் இவ்வகை எதிர்வினைக்கு அல்லது எதிர்வினையின்மைக்கு ஆட்படுகிறோம். ரத்தக் காயம் வரும் அளவுக்கு அடித்து துன்புறுத்தும் கணவரோடு மிக சகஜமாக வாழும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த சகித்துக்கொள்ளும் போக்கு நாம் பார்க்கும் வேலையில் தொடங்கி தேர்ந்தெடுக்கும் அரசாங்கம்வரை நீள்கிறது. இதனை மாற்றுவது எப்படி எனும் சிந்தனையே எழாமல் இந்த துயரத்துக்குள் எப்படி மகிழ்ச்சியை தேடிக்கொள்வது எனும் உபாயத்தை நாம் தெரிவு செய்கிறோம்.

ஒரு பேரழிவு நேரும் தருணத்திலும் இது சாத்தியமா என்றால், சாத்தியம்தான். காரணம் இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு ஒவ்வொரு நாளுமே மரணத்துடனான போராட்டம்தான். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தினசரி சாலைப்பயணம் ஒரு மரணத்துடனான போராட்டமாகவே இருக்கும். தினசரி நச்சுக்கழிவுகள் உங்களை சுற்றி சேகரமாகிக்கொண்டே இருக்கும், யாரோ ஒருவர் உங்கள் அருகாமையில் பிளாஸ்டிக்கை எரித்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு போலி மருந்தோ அல்லது கலப்பட உணவோ உங்களை கொல்லாமல் காப்பது அரசாங்கமல்ல உங்கள் அதிருஷ்டமே. ஒரு தீவிபத்தில் இருந்து தப்பும் வழி உங்கள் அலுவலகத்தில் இல்லாதிருக்கலாம், ஒரு நிலநடுக்கதை தாங்கும் சக்தி உங்கள் வீட்டுக்கு இருக்கிறதா என்பதே உங்களுக்கு தெரியாது… காரணம் அதைக்காட்டிலும் பெரிய அபாயங்களுக்கு நீங்கள் தினசரி முகம் கொடுக்கிறீர்கள். முக்கால்வாசி இந்தியர்களின் நாளைய உணவு இன்றைக்கு கிடைக்கும் வேலையைப் பொறுத்தே தீர்மானமாகிறது.

இப்படிப்பட்ட அபாயங்கள் தினசரி எதிர்கொள்ளப்படுவதால் உயிர் பிழைத்து இருந்தால் எல்லாவற்றையும் சுலபமாக கடந்து செல்லும் மனோநிலை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாய்க்கிறது. இதில் இருந்து மீள வழியே இல்லை எனும் உறுதியான நம்பிக்கையை உங்கள் மூளை வளர்த்துக்கொள்கிறது. அதற்கான வழியை யாரேனும் பரிந்துரைத்தாலும் முதலில் நாம் நம் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறோம். பிறகு அவர்கள் அப்பாதையை நோக்கி பயணிக்கையில் நாம் பதற்றமடைந்து அவர்களை பகடி செய்யவும் ஆரம்பிக்கிறோம். காரணம் நம்மில் பெரும்பான்மையானவர்களால் நமது நம்பிக்கைகள் பொய் என்பதை ஒத்துக்கொள்பவர்கள் அல்ல. இந்த உளவியல்தான் எல்லா கடவுள்களையும் இன்றுவரை உயிரோடு வைத்திருக்கிறது.

அப்படியானால் சமூக அநீதிகளுக்கு எதிரான நமது முயற்சிகள் எல்லாம் வீண் வேலையா எனும் அச்சம் உங்களுக்கு எழுந்தால், பதறவேண்டாம்.

எப்படி நம்பிக்கையில் இருந்து மக்கள் தங்கள் செயல்பாட்டை வடிவமைக்கிறார்களோ அப்படியே முன்மாதிரிகளைக் கொண்டு தங்கள் இயல்பை மறுபரிசீலனை செய்யவும் மாற்றிக்கொள்ளவும் மக்களால் முடியும். அப்படித்தான் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழக சமுக அமைப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்திய கடவுள் நம்பிக்கையோடு மோதி அதற்கெதிரான பெரும் மக்கள் திரளை பெரியார் அப்படித்தான் உருவாக்கினார். சிந்தனையும் உழைப்பும்தான் புரட்சிகரமானது என்கிறது கம்யூனிசம். உங்களால் கற்றுக்கொள்ளவும் அதனை மறக்கவும் மறந்ததை மீளக்கற்கவும் முடியும் என்கிறது உளவியல். ஆகவே மக்கள் கற்றுக்கொள்ளாததை நம்மால் கற்றுத்தர இயலும். தவறாக கற்றுக்கொண்டதை மறக்க வைக்க இயலும். அவர்கள் மறந்துபோனதை மீளக்கற்கவைக்க இயலும்.

தேவைப்படுவதெல்லாம் சிந்தனையும் உழைப்பும்தான்.

Advertisements

“மக்கள் ஏன் தங்கள் மீதான எல்லா வன்முறைகளையும் சகித்துக்கொள்கிறார்கள்?” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s