நிர்பயா வழக்கு – மிடில்கிளாஸ் கபடத்தனத்தின் அறச்சீற்றம்.


களைப்படைய வைக்கும் ஒரு பொதுக்கருத்து மீண்டும் ஊட்டமேற்றி வளர்க்கப்படுகிறது. நிர்பயா வழக்கின் முக்கிய குற்றவாளி விடுவிக்கப்பட்டது குறித்த அறச்சீற்றம் பொங்கத் துவங்கிவிட்டபடியால், இணையவெளியின் ஒரு அணி சிம்புவை தள்ளிவைத்துவிட்டு பெயர் தெரியாத ஒரு கொலைக்குற்றவாளிக்கு எதிராக ஸ்டேட்டஸ் போரை துவங்கிவிட்டார்கள். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கற்பழிக்கும் லைசென்ஸ் தரப்பட்டுவிட்டது எனும் பதாகையை ஒருவர் முகநூலில் பகிர்கிறார். ’அவனை போட்ரு’ எனும் முழக்கம் வழக்கமாக பாஜக கும்பலில் இருந்து மட்டும் ஒலிக்கும் இம்முறை அந்த அணியில் மனநல மருத்துவர்களும் திராவிடர் கழக அருள்மொழி வகையறா ஆட்களும் இணைந்துவிட்டார்கள்.

இது குறித்த விவாதங்களில் மனித உரிமை மற்றும் சிறார் உரிமை பேசும் செயற்பாட்டாளர்கள் கிட்டத்தட்ட கிரிமினல்கள்போல நடத்தப்படுகிறார்கள், கலைஞர் டிவி தொகுப்பாளர் மட்டும் விதிவிலக்கு. இந்த போக்கை இனியும் மென்மையாக கண்டிப்பது ஆபத்தானது. ஒரு தலைவன் வந்தால்தான் நாடு திருந்தும் ஒரு குற்றவாளியை கொன்றால்தான் குற்றம் குறையும் எனும் புராணகால நம்பிக்கை இப்போதுவரை மக்கள் மனங்களை பீடித்திருக்கிறது. இந்த அறச்சீற்றத்தின் நியாயங்களை விவாதிக்கும் முன்னால் வெகுமக்கள் சிந்தனையை வடிவமைக்கும் காரணங்களை பார்ப்பது தேவையாகிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இது மிடில் கிளாஸ் கோபம். இந்தியாவின் மிக மோசமான கோபங்களில் முதன்மையானது மிடில்கிளாஸ் கோபம்தான். நாம் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கு ஒரு நீதியும் ஏரி ஆக்கிரமிப்புக்கு ஒரு நீதியும் வைத்திருப்பவர்கள். காசிருப்பவனும் இல்லாதவனும் ஒரே பாடத்திட்டத்தை படிக்க வேண்டும் எனும் சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்தது நாம்தான். ஆ.ராசா செய்யும் ஊழலுக்கு பொங்கும் நம் நியாய உணர்வு வோடஃபோன் ஊழலென்றால் மயான அமைதிகொள்ளும். இத நீட்சியே நிர்பயா வழக்கு குற்றவாளி மீதான கோபம்.

காரணம் 1. நிர்பயா ஒரு நடுத்தரவர்க இடைச்சாதி பெண், ஒரு மருத்துவ மாணவி, நகரவாசி இவையெல்லாம் ஏதோ ஒருவகையில் நம் மிடில்கிளாஸ் மக்களில் ஒருவரை நினைவுபடுத்துகிறது. அந்த நிர்பயாவை கொன்றது ஒரு ஏழை. ஆக இந்த வர்க வேறுபாடுதான் நம் கோபத்தின் ஆதாரம். ஒரு முன்பதிவு ரயில் பெட்டியில் கோட் சூட் அணிந்தவன் தவறுதலாக ஏறினால் கிடைக்கும் அதே மரியாதை அழுக்கு வேட்டி அணிந்தனுக்கு கிடைக்குமா? கிடைக்காதென்றால் ஏன்? மிக சமீபத்தைய உதாரணம் சல்மான்கான் வழக்கு. அவர் இதே சட்டவிதிகளில் உள்ள ஓட்டைகள் வழியே தப்பிக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட போராட்டங்களோ பொதுச்சீற்றமோ எழவில்லை. ஏன்? அதில் செத்தவர் ஒரு பிளாட்ஃபார்ம்வாசி. அவர் உங்களையோ என்னையோ எவ்வகையிலும் பிரதிபலிக்கவில்லை. நாமும் ஒருபோதும் பிளாட்ஃபார்மில் படுக்கப்போவதில்லை. நிர்பயா வழக்கில் கற்பழிப்பு கொடுரக்கொலை ஆகியவையெல்லாம் துணைக்காரணிகள்தான் அவரது தகுதிகள் அவரை நம்மவர் என உணரவைக்கின்றன. ஆகவே நீங்கள் கொதிக்கிறீர்கள்.

காரணம் 2 : ஊடகங்கள் மற்றும் அவர்களுக்கு சோறுபோடும் விளம்பரதாரர்கள் இவர்களது வருவாய் ஆதாரம் மிடில்கிளாஸ் மக்கள்தான். ஆகவே அவர்களை எளிதில் உணர்ச்சிவயப்பட வைக்கும் செய்திகளை அவர்கள் சரியாக பயன்படுத்துகிறார்கள். சென்னை வெள்ளம் இந்த அளவுக்கு கவனம் பெற அதில் பெருந்தொகையான மத்தியதர வர்கம் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணம். இதைவிட கொடுமையான முந்தைய கடலூர் புயல் தமிழக அளவில் கவனம் பெறவில்லை. காரணம் அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அனேகமாக குடிசைவாசிகள் இப்படி அதிசயமாக உருவாகும் மத்தியதர வர்க உணர்வு ஊடகங்களால் மேலும் தூண்டப்படுகிறது.

காரணம் 3 : சுவாரஸ்யம் – குற்றஉணர்வு எனும் சுழல் – பள்ளிகளில் சுவர் இடிந்துவிழும் சம்பவங்கள் எப்போதும் நிகழ்பவை, நீர்நிலைகளில் குழந்தைகள் விழுந்து மரணிப்பது தமிழகத்தில் தினசரி செய்தி. ஆனால் நாம் பெருமளவில் எதிர்வினையாற்றியது கும்பகோணம் விபத்து மட்டும். காரணம் அதன் எண்ணிக்கை தரும் திரில் (ஆமாம் திரில்). அதன் பிறகு அந்த சுவாரஸ்யத்துக்கான குற்றஉணர்வுக்கு ஆட்படுகிறோம், ஆகவே நிவாரன நிதியோ அல்லது தண்டணைக்கான ஸ்டேட்டசோ போட்டு சமாளிக்கிறோம். நிர்பயா வழக்கும் பெரும் சுவாரஸ்யங்களை மக்களுக்கு தந்த வழக்கு. பிழைப்பாரா மாட்டாரா எனும் சஸ்பென்ஸ், சிங்கப்பூர் சிகிச்சை எனும் திருப்பம், குற்றவாளிகளது தண்டனை பற்றிய விவாதம், ஒரு குற்றவாளியின் தற்கொலை என ஒரு செய்தி சீரியலுக்கான எல்லா அம்சங்களும் தேசிய ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டன. சுவாரஸ்யமான செய்தியை எதிர்நோக்கும் நமது பலவீனம் ஊடகங்களாலும் அரசியல் கட்சிகளாலும் பயன்படுத்தப்பட்டன.

பொதுவில் நமது பல பலவீனங்கள் பல வகைகளில் வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் பதற்றம், குற்றஉணர்வு, காம உணர்வு, ஈகை குணம் என எல்லாமே வியாபாரமாக்கப்படுகின்றன. ஆனால் நிர்பயா வழக்கில் நமது உணர்வுகள் பயன்படுத்திக் கொள்ளப்படுவது என்பது இவற்றில் இருந்து மாறுபட்டது. இவ்வழக்கின் சிறார் குற்றவாளி தூக்கில் போடப்பட்டாலும் நீங்கள் அமைதியடையப் போவதில்லை. காரணம் நாம் இந்த சுவாரஸ்ய செய்தி வடிவத்துக்கு கண்டிஷன் செய்யப்பட்டிருக்கிறோம் (ஆக்க நிலையிருருத்தம் என்றால் உங்களுக்கு புரியவா போகிறது?!). ஆகவே நாம் நீதியைக் காட்டிலும் நம்மையறியாமல் இன்னொரு நிர்பயா செய்திக்காகவே காத்திருப்போம். இதில் மிகைப்படுத்தம் ஏதுமில்லை, நமக்கு செய்திகள் தரப்படும் விதத்தை நிதானமாக பரிசீலித்தாலே இந்த உண்மையை விளங்கிக்கொள்ளலாம்.

இதனை ஏன் இப்போது விவாதிக்க வேண்டும்?

காரணம் இந்த முட்டாள்த்தனத்தை மூலதனமாக்கியே நாம் பெருமளவில் சுரண்டப்படுகிறோம். போலீஸ்காரர்கள் ஈடுபடும் பாலியல் வன்புணர்வு குற்றங்கள் தொடர்ந்து நம் கவனத்துக்கு வருகின்றன. இவர்களை தண்டிக்க ஒரு சட்டத்திருத்தம் வேண்டும் எனும் குரல் பொது சமூகத்தில் இன்றுவரை எழவில்லை. பணக்காரர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் தொடர்ந்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இது மற்ற பணக்காரர்கள் தவறு செய்ய தூண்டுகிறது என போராட ஏன் நமக்கு தோன்றுவதில்லை? அதிகாரவர்கத்தின் மீது பயம் பணக்கார வர்கத்தின் மீது கள்ளக்காதல் என பட்டியலிட ஒருவண்டி அழுக்கு நம் முதுகில் இருக்கிறது.

பிளாட்ஃபார்ம் கடைக்காரர்களும் கூவம் கரையோர மக்களும் தாங்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக போராடினால் அதனை கடும் ஆத்திரத்தோடு எதிர்கொள்ளும் மத்தியதர வர்கம், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தங்கள் வீடுகளை இடிக்க புல்டோசர் வந்தால் கொதித்துப்போவார்கள். காரணம் அந்த ஆக்கிரமிப்புக்கு அவர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். நம் பார்வையில் ஓசியில் சட்டத்தை மீறுவது மட்டும்தான் தவறு. மும்பை கேம்பகோலா குடியிருப்பை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகும் அந்த குடியிருப்புவாசிகள் காலிசெய்ய மறுத்து போராடினார்கள். ஆக்கிரமிச்சா இடிக்கத்தான் செய்வான் என வழக்கமாக நியாயம் பேசுகிற, சுப்ரீம் கோர்ட் சொல்லிட்டா அதை மறுத்து பேசப்டாது என நீட்டி முழக்கும் மிடில்கிளாஸ் மக்கள்தான் இவர்கள். ஆனால் பிரச்சினை தன் வீட்டு வாயிலுக்கு வந்தால் மட்டும் கொள்கைகளுக்கு கண்டிஷன் அப்ளை போட்டுக்கொள்ளும் ஆட்கள் நாம். இந்தியாவில் லஞ்சம், ஊழல், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், விவசாய நிலத்தின் மீது நிகழும் இரக்கம்ற்ற நகரமயமாக்கல் ஆகியவற்றுக்கு பின்னால் இந்த நடுத்தர வர்கத்தின் சுயநலமும் கபடத்தனமும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நிர்பயா வழக்கின் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கச்சொல்லி போராடுவதால் மறைத்துவிட முடியாது.

நிர்பயா வழக்கில் சிறார் என்பதால் விடுவிக்கப்பட்ட அந்த குற்றவாளியை இனி கண்காணித்து குற்றம் செய்யாமல் தடுப்பது எளிது. காரணம் அவர் பிடிபட்ட குற்றவாளி. ஆனால் நம் மிடில் கிளாஸ் மனோபாவம் சமூகத்துக்கு ஏற்படுத்தும் அபாயங்கள் என்னிலடங்காதவை. அவற்றுக்கு பதில் சொல்லும் அவசியம் நமக்கு எப்போதும் வரப்போவதில்லை. ஆகவே நமக்கு அற உணர்வு கொஞ்சமேனும் மீதமிருந்தால் நம் கவனம் திரும்ப வேண்டியது நமது முரண்பாடான நியாய உணர்வின் மீதுதான்.

நிர்பயா வழக்கில் பிடிபட்ட எல்லா குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் வயதின் காரணமாக குறைந்த தண்டனையோடு விடுவிக்கப்பட்டிருக்கிறார் (இன்னும் மூன்றாண்டுகளுக்கு அவர் கண்காணிப்பில் இருப்பார்). இந்தியாவில் நியாயம் விரைவாக கிடைத்த மிகச்சில வழக்குகளில் இவ்வழக்கும் ஒன்று. ஆகவே இதனை மீண்டும் மீண்டும் சொறிய எந்த அவசியமும் இல்லை. சிறார் குற்றங்கள் பெருகுவது ஏன் எனும் ஆய்வு இங்கே துவங்கவில்லை, கூர்நோக்கு இல்லங்கள் ஏன் ஏழைகள் மட்டும் இருக்குமிடமாக இருக்கிறது எனும் கேள்விகூட நம்மிடையே எழவில்லை. மேலை நாடுகளில் குற்றம் செய்த சிறார்கள் கூர்நோக்கு இல்லங்களில் பெறும் பயிற்சிகளால் நடத்தை மாற்றம் ஏற்பட்டு சரியான வாழ்வை தேடிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. நாம் அந்த திசை நோக்கி ஒரு அங்குலம்கூட நகரவில்லை.

ஒரு குற்றவாளியை கொல்வதால் நமக்கு கிடைக்கவிருப்பது ஏதுமில்லை. இந்தியாவில் லட்சக்கணக்கான குழந்தைகள் தன் ஐந்தாவது பிறந்த நாளை காணும் முன்பே இறந்துபோகிறார்கள். அந்தக் கணக்கோடு ஒப்பிட்டால் ஒருவனது சாவு பொருட்படுத்தத்தக்க செய்தியே அல்ல. ஆனால் நாட்டில் இன்னும் ஏராளமான நிர்பயாக்கள் (ஏழை நிர்பயாக்கள், தலித் நிர்பயாக்கள் உட்பட) உருவாகாமால் தடுக்க ஒரு கூடுதல் பிணம் எவ்வகையிலும் உதவாது. அதற்கு நேர்மையான போலீஸ், நேர்மையான நீதித்துறை, சமமான தரத்தில் கட்டாயக்கல்வி, எல்லா மக்களுக்குமான ஒரு கௌரவமான வாழ்க்கை உத்திரவாதம் ஆகிய எல்லாமே அவசியம். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் கவனம் அந்த ஒரு குற்றவாளியின் தண்டனை மீதுதான் என்றால்… மன்னித்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் நீதியல்ல உங்கள் ஓய்வு நேரத்தை சுவாரஸ்யமாக்கும் நிர்பயாக்கள் மட்டுமே.

Advertisements

“நிர்பயா வழக்கு – மிடில்கிளாஸ் கபடத்தனத்தின் அறச்சீற்றம்.” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. சாதாரண மனிதர்களின் குற்றங்களே எப்போதும் கடும் தண்டனைக்குள்ளாகின்றன. குற்றத்தை இழைப்பது அதிகார வர்க்கமெனும் போது அவர்கள் மிக எளிதாக வெளியே வந்துவிடுகின்றனர். சூரியநெல்லியோ அல்லது சிவகங்கை சிறுமியின் வழக்கோ, இப்போது கூச்சலிடுபவர்கள் அப்போது பொங்கி எழுந்து அதிகார வர்க்கத்தை தூக்கிலிடுமாறு கோருவதில்லை. இது போன்று பல நூறு உதாரனங்களை காட்ட முடியும்.இதை கேளாத செவிகள் கூட கேட்ககூடும். ஆனால் இவை காரிய செவிடுகள்.

    சட்டமும், நீதியும் சாமனியருக்கில்லை…. 😦

  2. அருமையான விளக்கம். நடுத்தர வர்க்கத்தின் இரட்டை மனநிலைக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்.

  3. என்ன மாதிரியா எழுதியிருக்கிறீர்கள். நல்லாருக்கு. ‘நீங்கள் எழுதியிருப்பது நியாயம்தான். நம் நாட்டு மக்கள் அடுத்தவர் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விலாவாரியாகப் பேசுவார்கள். ஆனால் தனக்கு ஒரு தனி நியாயம் வைத்துக்கொள்வார்கள். இது எளிய நடுத்தரவர்க்க மனோபாவம்.

    கூர்’நோக்கு இல்லம்-புரியவில்லை. நல்ல தமிழ். அடைப்புக்குள் ஆங்கிலம் கொடுத்தால் புரிந்துகொள்ளலாம், நாமும் உபயோகப்படுத்தலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s