அருனித், சிம்பு –சொறியை மற, சொறிநாயை கவனி.


1980, 90 களில் வந்த படங்களில் பணக்காரர்களின் வாரிசுகள் பொறுக்கிகளாகவும் விளங்கா வெட்டிகளாகவும் இருப்பார்கள். அந்த காலத்தில் படம் எடுத்தவர்களின் வாரிசுகள் தங்கள் அப்பாக்களின் சிந்தனையை நிஜமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஊரிலுள்ள பொறுக்கிகள் யாவரையும் ஒரு இடத்தில் சேர்த்தால் அதிலும் ஒருவர் மட்டுமே முதலிடத்திற்கு வர முடியுமல்லவா? அப்படி வாரிசு பொறுக்கிகளில் முதலாமானவராக சிம்பு தன்னை எப்போதும் நிறுத்திக்கொள்பவர். பொறுக்கிகளே திகைக்கும் பொறுக்கித்தனத்துக்கு சொந்தக்காரர் அவர். அவருக்கான சரியான இணை ரஜினியின் மருமகன் அனிருத், இரண்டும் இணைந்தால் என்ன நடந்திருக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. பீயையும் ஈயையும் பிரிக்க முடியாது எனும் பழமொழி இங்கே பொருத்தமானது என்றாலும் பீயும் ஈயும் இந்த இரட்டையர்கள் அளவுக்கு இழிவானவை அல்ல என்பதால் அப்பழமொழியை பயன்படுத்த மனம் வரவில்லை.

இங்கே சிம்பு, அநிருத்தை மட்டும் விமர்சிப்பதாக இருந்தால் வெறுமனே, அவனை செருப்பால் அடி என சொல்லிவிட்டு முடித்துக்கொள்ளலாம். ஆனால் இந்த இரண்டும் தமிழ் சினிமாவின் இயல்பினை கொஞ்சமும் குறைவின்றி கொண்டிருக்கும் வாரிசுகள். இவர்கள் வரலாறே இப்படி திருட்டுத்தனமாக ஆடியோ வீடியோ வெளியிடும் சம்பவங்களைக் கொண்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் சிம்பு ஒரு பெண்ணை மிரட்டும் ஆடியோ வெளியாகி அது ரஜினி மகளுடனாக உரையாடல் என பரபரப்பாக பகிரப்பட்டது (திருடி வெளியிட்டவர் நோக்கமும் அதுதானா என்பதும் திருடி வெளியிட்டவர் பெயரும் சிம்புதானா என்பதும் ரகசியமாகவே இருக்கிறது). பிறகு தன் காதலியை முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் சிம்பு. அவரது சிஷ்யரும் அப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறகு அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். தெய்வக்குழந்தையான அநிருத்தின் தோப்பனார் போலீசிடம் தன் மகனது தெய்வீகத்தன்மைக்காக மன்னிப்பு கோரியிருக்கிறார். ஆகவே இந்த தறுதலைகள் தாங்கள் தறுதலைகள்தான் என இதற்கு முன்பே நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் குடும்பமும் கண்டிக்கவில்லை சார்ந்திருக்கும் துறையும் கண்டிக்கவில்லை. அந்த குடும்பத்தின் ஆதரவை போற்றும் வகையில்தான் ங்கொம்மாள எனும் வார்த்தையை பீப் இல்லாமல் அப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் சிம்பு.

நாம் அப்பாடலைக் காட்டிலும் அதன் பிறகு அவர்கள் கொடுத்த விளக்கத்தைப் பற்றியே பேசுவது முதல் கடமையாகிறது. சிம்பு தன் வார்த்தைகள் பற்றிய மிகக்குறைந்தபட்ச குற்ற உணர்வைக்கூட வெளிப்படுத்தாமல் பேசுகிறார். சம்பளம் வாங்கிக்கொண்டு டான்ஸ் ஆடியதை மக்களுக்கு செய்த சேவை என சொல்லமுடிகிறதென்றால் இவர்கள் மக்களைப் பற்றி எத்தகைய அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்று யோசியுங்கள். அவரது அப்பா டி.ஆர், அப்பாடல் பெண்களை உயர்வாக பேசுவதாக சொல்கிறார். அவர் அம்மா உஷா, என் மகன் என்ன ரேப்பா பண்ணிட்டான் எனும் தொனியில் பேசுகிறார். இருவரும் சிலம்பரசனின் விளையாட்டுத்தனமான நடவடிக்கை இது என்றே வர்ணிக்கிறார்கள். தன் மகன் பயன்படுத்திய வார்த்தைகளும் அந்த படலின் உள்ளடக்கமும் அநாகரீகமானவை எனும் சிந்தனையே இவர்களுக்கு எழவில்லை. குறைந்தபட்ச அற உணர்வுகூட இல்லாத இந்த குடும்ப அமைப்பே சிம்பு அனிருத் போன்ற கொழுப்பெடுத்த பிள்ளைகளை உருவாக்குகிறது.

இன்னொரு காரணி அவர்கள் வளர்ந்த சினிமா சூழல். இந்த இரண்டு பேருக்கும் சினிமா மட்டுமே அடையாளம். அந்த சினிமாவின் அடையாளம் என்ன? சாதிவெறியும் பெண் அடிமைத்தனமும்தான். திரையில் பெண்களை கூடுமானவரை இழிவுபடுத்தும் சினிமாத்துறை திரைக்குப் பின்னாலும் பெண்களை கீழ்த்தரமாகத்தான் நடத்துகிறது. பிறந்த காலம் முதல் இந்த சூழலில் வளரும் அனிருத்தும் சிம்புவும் அந்த மதிப்பீடுகளின்படிதானே வளர முடியும்?

ஈவ் டீசிங்கை கதாநாயகனின் இயல்பாக அது பெண்களை கவரும் செயலாக மாற்றியவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு அவரது அடியொற்றி வந்த எல்லா கதாநாயகனும் அந்த காரியத்தை தொடர்ந்து செய்தார்கள்.

பெண் என்பவள் அவள் உடல் மட்டுமே என்பதை தமிழக இளைஞர்கள் மனதில் பதிய வைத்தது தமிழ் சினிமாதான். கதாநாயகன் வாழ்வில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்வான்.., பேப்பர் போடுவான், ரவுடித்தனம் செய்வான், சாராயம் காய்ச்சுவான். ஆனால் பெண் மட்டும் தன் லட்சியத்தை அடைய தன் உடலை வைத்து மட்டுமே காரியம் சாதிப்பாள். வனஜா கிரிஜா, கல்கி போன்ற ”குடும்பப்” படங்களிலும் பெண் தன் லட்சியத்தை அடைய கதாநாயகர்களை வசியம் செய்வது மட்டுமே வழி. இந்த பாலபாடம்தான் ஆசிட் வீசுபவர்களின் செயலில் வெளிப்படுகிறது – அவர்கள் பெண்ணின் ஒரே பலமாக அவள் முகத்தை கருதுகிறார்கள் ஆகவே அதனை சிதைத்து பழிவாங்க முயல்கிறார்கள்.

ஆண் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு ஒரு காதலி வேண்டும். எதற்கும் லாயக்கற்ற சைக்கோகளான செல்வராகவன் பட நாயகர்களாகட்டும், சித்த சுவாதீனமற்ற தெய்வத்திருமகள் டைப் நாயகனாகட்டும் எல்லோருக்கும் ஒரு அழகான காதலி கட்டாயம். அந்த நாயகனின் காதலை ஒத்துக்கொண்டு அவனை நல்வழிப்படுத்தும் கடமையும் அவளுக்கு உண்டு. யதார்த்தத்தில் ஒரு பெண் பல தகுதிகளை பரிசீலித்தே தன் காதலனை தெரிவு செய்ய முடியும். ஆனால் தமிழ் சினிமா விதிகளின்படி அப்படிப்பட்ட பெண்கள் வில்லிகள், சுயநலக்காரிகள். வெட்டி முண்டங்களையே கதநாயகனாகக் காட்டும் ராஜேஷ்.எம் (ஒரு கல் ஒரு கண்ணாடி) படங்களின் ஹீரோவும் இந்த விதிகளை வலியுறுத்துவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

இதற்கு நேரெதிராக அழகில்லாத பெண்கள் காதலிப்பது என்பது தமிழ் சினிமாவில் நகைப்புக்குரியது. குண்டான பெண்களும் கறுப்பான பெண்களும் காதலிப்பதை கேலியாகவும் அவமானத்துக்குரியதாகவும் காட்டும் படங்கள்தான் அனேகம். ஆணுக்கு ஆணாயிருப்பது மட்டுமேகூட ஒரு பெரும் தகுதி, பெண்ணுக்கோ அவள் அழகு மட்டுமே தகுதி. இவை ஏற்படுத்தியிருக்கும் சேதாரங்களை கண்கூடாக கண்டிருக்கிறேன். இவ பெரிய ரதியா எனும் வாசகம் அனேகமாக எல்லா நிராகரிப்புகளுக்கு பிறகும் ஆண்களால் சொல்லப்படுகின்றன. காரணம் அவனது புரிதலின்படி பேரழகானவள் மட்டுமே நிராகரிக்க தகுதியுடையவள்.

தமிழ் சினிமா உருவாக்கியிருக்கும் இன்னொரு நுட்பமான வக்கிரம் பெண்களின் ஆடை மற்றும் நடத்தை பற்றியது. கெட்டவளாக இருக்கும்வரை அதீத ஒப்பனை மற்றும் நவீன ஆடைகளை அணியும் பெண் திருந்திய உடன் புடவைக்கும் அளவான மேக்கப்புக்கும் மாறுவாள். மன்னன் படத்தில் திருந்திய நாயகி செய்யும் காரியம் ஆஃபீஸ் போவதை நிறுத்திவிட்டு புருசனுக்கு சமையல் செய்வதுதான். சாமானியர்கள் நவீன ஆடை அணியும் பெண்கள் மீது காரணமற்ற வெறுப்பு விதைக்கப்படுவது இத்தகைய தொடர் காட்சியமைப்புக்களால்தான் (இதன் தாக்கம் சீரியல்களிலும் உண்டு).

பெண் காதலை நிராகரிப்பது கொடுங்குற்றம், காத்திருப்பது கடமை. நிஜத்தில் காதலும் தவறுகள் நிறைந்த செயலே. அதில் சூழல் காரணமாக ஒரு காதலை கைவிடுவதும் வேறு காரணங்களால் காதலை முறித்துக்கொள்வது சகஜமானது. ஆனால் சினிமா விதியின்படி அது மரண தண்டனைக்குரிய குற்றம். அப்படி கொல்லச்சொல்லி படம் எடுத்தவர்தான் சிம்பு. நாயகனின் முன்னாள் காதலிகள் நன்றாக வாழும் படம் எதேனும் ஒன்றை காட்ட முடியுமா உங்களால்? நல்ல சினிமா என கருதப்பட்ட ஆட்டோகிராஃப், அழகி ஆகிய படங்களில்கூட நாயகனை கல்யாணம் செய்துகொள்ளாத நாயகிகள் தரித்திரம் பிடித்து தெருவில் நிற்பார்கள். மேலும் நாயகன் ஜெயிலுக்கு போய் திரும்புவரும்வரையும், ஜெயித்துக் காட்டும்வரையிலும் காத்திருப்பவள்தான் நாயகி.

காதல் என்பது நாயகன் கேட்டதும் கிடைக்கவேண்டியது. பாலா படத்து நாயகர்கள் (சைக்கோ, திருடன், கஞ்சா அடிப்பவன்) பாணியில் யாரேனும் இருந்தால் அவனை நண்பனாகவாவது நீங்கள் ஏற்பீர்களா? ஆனால் பாலா படங்களில் அவர்களுக்கு காதல் நிமிடங்களில் கைகூடும். ஊரறிந்த திருடனுக்கு கல்லூரி மாணவி (பிதா மகன், அவன் இவன்) காதலியாவது காபி போடுவதைவிட சாதாரணமாக நடக்கும். காதல் உருவாவதற்கான படிநிலைகள் – பரிச்சயம், நட்பு பிறகு காதல் என அமையும். தமிழ் படங்களிலோ நாயகன் பார்த்த விநாடியிலேயே காதலியை முடிவு செய்வான். பார்த்த உடனே தெரிவது ஒருவரது முகமும் உடலும்தான். ஆனால் இந்த கூமுட்டை நாயகர்கள் நாயகியை விநாடிகளில் தெரிவு செய்துவிட்டு காதலுக்கு மனசுதான் முக்கியம் என வசனம் பேசுவார்கள்.

எனக்கு எங்கப்பா அம்மாதான் முக்கியம் என பெண் சொன்னால் அது துரோகம். அதையே நாயகன் சொன்னால் தியாகம். ஒரு பெண்ணை நாயகன் கோயிலிலோ குளத்திலோ பார்த்த உடன் காதல் வந்தால் அது தவறில்லை, மூன்று பெண்களை காதலித்து அதில் ஒருத்தியை தெரிவு செய்தால் அது தவறில்லை (தீராத விளையாட்டுப் பிள்ளை), தன் காதலையே அடமானம் வைத்து தொழில் செய்ய பணம் வாங்கினால் அதுவும் தவறில்லை (திருவிளையாடல் ஆரம்பம்) ஆனால் ஒரு பெண் நல்ல வேலையில் உள்ள (அமெரிக்க) மாப்பிள்ளையை தெரிவு செய்தால் அது சுயநலம்.

தமிழ் சினிமா வரலாற்றில் பெண்களை கண்ணீயமாக காட்டியவர்கள் யாருமே இல்லை. எம்.ஆர் ராதாவும் என்.எஸ் கிருஷ்ணனும் அவர்கள் காலத்தில் மக்கள் சிந்திக்க முடியாத முற்போக்கு கருத்துக்களை சொன்னவர்கள். என்.எஸ்.கே மதுரம் ஆகியோரது உரையாடல் ஒன்றில் மதுரம் கேட்பார் ’முன்பு உனக்கு ஒரு காதலி இருந்ததாக நீ ஒத்துக்கொண்டால் அது பெருந்தன்மை அதையே நான் சொன்னால் ஒழுக்கக்கேடா” என்று. ரத்தக்ண்ணீரில் எம்.ஆர்.ராதா, நான் உனக்கு கணவனாக இருக்க அருகதையற்றவன் ஆகவே நீ மறுமணம் செய்துகொள் என தன் மனைவி பாத்திரத்திடம் சொல்வார். அவர்களுக்குப்பிறகு அப்படி சிந்தித்தவர்கள் இல்லாமலே போய்விட்டார்கள்.

சிம்பு அனிருத் வகையறாக்கள் இப்படிப்பட்ட காட்சிகளையும் அதனை உருவாக்குபவர்களையும் பார்த்தே வளர்பவர்கள். நீ ஹீரோவானால் உனக்கு எல்லாம் கிடைக்கும் எனவும், கிடைக்கும் எல்லாம் என்பதில் பெண்ணும் அடக்கம் என்பதும்தான் அவர்களுக்கு தமிழ் சினிமா சொல்லிக்கொடுக்கும் பாடம். போதாததற்கு பெருமளவுக்கு உள்ள பணம். இந்த கூட்டணியால் சிம்புவையும் அனிருத்தையும் மட்டுமே உருவாக்க இயலும். இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் நம் வீட்டிலும் இத்தகைய ஆட்களை சினிமா உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. காரணம் நாம் பெண்களிடம் எப்படி கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுப்பதில்லை. அதனை எதிர்மறையாக சினிமா சொல்லித்தருகிறது. அழகாயிருப்பவளே தகுதியான பெண் என பெண்களுக்கு சொல்லித்தரும் சினிமா – மேக்கப் போடுபவள் நல்ல பெண் அல்ல என்றும் சொல்லித்தருகிறது (வழக்கமாக மேக்கப் போட்டுக்கொள்பவர்களுக்கு சாதாரணமாகவும் பார்ப்பவர்களுக்கு அதீதமாகவும் காட்சியளிக்கும்).

இந்த பாடல் பற்றிய சாமானிய இளைஞர்களின் பொதுக்கருத்துக்கள் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது. இது பொருட்படுத்த வேண்டிய அளவுக்கான தவறல்ல எனும் கண்ணோட்டம் இருபாலர்களிடமும் இருப்பதை காண்கிறேன். இது இன்னும் மோசமான கருத்துக்களை கொண்ட பாடல்களும் காட்சிகளும் வருவதற்கு வழிவகுக்கும். ஏற்கனவே சிம்பு தன் முன்னாள் தோழியை இழிவுபடுத்துவதற்காகவே ஒரு படம் எடுத்தவர் (வல்லவன்). பொதுவெளியில் சண்டையிடுபவர்கள் சொல்லாத வார்த்தைகளா என கேள்வி கேட்பது அபத்தமானது. அவை ஒரு பாடலைப்போல எல்லோராலும் இயல்பாக எடுத்துக்கொள்ளும் காட்சியல்ல. வடிவேலு பயன்படுத்தும் வார்த்தைகள் இப்போது குடும்பங்களுக்குள் இயல்பாக பகிரப்படுகின்றன ஆயிரம் சண்டைகளை பார்த்தாலும் நம்மால் மயிறு எனும் வார்த்தையைக்கூட குடும்பத்திற்குள் பயன்படுத்த இயலாது. இதுதான் ஊடக காட்சிகளின் பலம்.

ஆகவே அனிருத் சிம்பு ஆகியோரின் சிந்தனை வாந்தியை நாம் எதிர்ப்பது கட்டாயம். இதுவரைக்கும் வந்த ஆபாச காட்சிகளை ஏன் எதிர்க்கவில்லை எனும் கேள்விதான் இப்பாடலுக்கான ஆதரவுக் குரலாக ஒலிக்கிறது. இப்போது இந்த கழிசடைகளை மன்னித்தால் நாளைக்கு வரப்போகும் இன்னும் இழிவான பாடல்களுக்கு இந்த மன்னிப்பைக் கொண்டு ஆதரவு தேடுவார்கள். இவர்களை எதிர்ப்பதோடு மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமாவின் பெண்கள் விரோதப் போக்கையும் மக்கள்விரோதப் போக்கையும் எதிர்க்க வேண்டிய தருணம் இது. காரணம் சிம்புவும் அனிருத்தும் சினிமா எனும் சொறிநாயின் மீதிருக்கும் சொறி. அது ஒரு அறிகுறி, நாய்க்கு சிகிச்சை தராமல் சொறியைப் பற்றி புலம்பி பிரயோஜனம் இல்லை. மேலும் பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதையும் இந்த சினிமா காட்சியமைப்புக்கள் என்பது அந்த துறை நபர்களின் மனவக்கிரமேயன்றி நிஜமானவை அல்ல என்பதையும் நாம் நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாக வேண்டும். சிம்பு அனிருத் போன்ற அசிங்கங்கள் நம் வீட்டில் உருவாக அனுமதிக்கவேண்டாம்.

Advertisements

“அருனித், சிம்பு –சொறியை மற, சொறிநாயை கவனி.” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. 99 டிகிரியில் நீர் ஏன் ஆவியாவதில்லை? 100 டிகிரியில் தான் கொதித்து ஆவியாகிறது. அது போன்று தான் ஏற்கனவே உள்ள கழிசடைகள் கொதிநிலையை ஏற்படுத்தியிருந்தாலும் இங்குதான் அது முற்றி மக்களை உச்சநிலைக்கு எடுத்து சென்றுள்ளது.

    சிறப்பான கட்டுரை தோழர்.. வாழ்த்துக்கள்?

  2. உங்களின் கருத்து பிரச்சனைகளின் வேர்களை கான்பது இனிமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s