2016 தேர்தல் – பி (B) டீம்களின் தர்ம யுத்தம்.


அதிமுக கட்சி பாஜகவின் பி டீம் என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்த செய்தி (இதனை அதிமுக ஒத்துக்கொண்டாலும் மார்க்சிஸ்ட் ஒத்துக்கொள்ளாது). மக்கள் நல கூட்டியக்கத்தை அதிமுகவின் பி டீம் என்கிறது திமுக வட்டாரம். இந்த பட்டியலில் அடுத்த பி டீம் ஒன்றைப் பற்றிய தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் சிந்தன் (இரா) தன் நிலைத்தகவல் ஒன்றில் வெளியிட்டிருக்கிறார். அதாவது திமுகவை அதிமுகவின் பி டீம் என குறிப்பிட்டிருக்கிறார். ஆக தமிழக தேர்தல் களம் மூன்று முக்கிய பி டீம்களால் சூடுபிடிக்கவிருக்கிறது. இவையில்லாமல் தமிழகத்தில் அதிமுகவின் பி டீமான பாஜக, பாஜகவின் இன்னொரு பி டீம் பாமக, அதிமுகவின் Z டீமான நாம் தமிழரும் களமாடவிருக்கின்றன. இப்படி ஒரு பி டீம் பாலிடிக்ஸ் இதற்கு முன்னால் தமிழகத்தில் இருந்ததில்லை.

முதல் பி டீமான அதிமுக எப்போதும் அதிருஷ்டத்தால் வாழும் கட்சி. தமிழகத்தில் கட்சிகள் வழிபாட்டு மன்றமான வரலாறுகள் பல உண்டு, ஆனால் ஒரு வழிபாட்டு மன்றம் கட்சியான வரலாற்றை துவக்கியது அதிமுகதான். ஒரு ரசிகர் மன்றம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ எல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்தன. கட்சி சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொள்ள சொன்ன காட்டுமிராண்டித்தனம், போலீசை ரவுடிகள் போல பயன்படுத்தி நக்சல்பாரிகளை வேட்டையாடியது (தர்மபுரி) அதே கும்பலை வைத்து உண்மை அறியும் குழுக்களைக்கூட அடித்து விரட்டியது, ஒரிஜினல் ரவுடிகளை முதலாளிகளாக்கியது என எண்ணிலடங்காத கருப்பு பக்கங்களை உள்ளடக்கியது எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி. ஆனால் அவை எம்ஜிஆர் செத்த அன்றே புதைக்கப்பட்டுவிட்டன. எதிர் கட்சிகளே அவர் குறித்த எதிர்மறை கருத்துக்களை சொல்ல தயங்கும் நிலைதான் இன்றைக்கும் நிலவுகிறது.

வெள்ளைத்தோல் ஆண்டைகளிடம் இருநூற்று சொச்சம் ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பழக்கமோ என்னவோ அதிமுகவின் இரண்டு (பிரதான) வெள்ளை நிற முதல்வர்களிடமும் எல்லா தரப்பினரும் அதீத விசுவாசம் காட்டினார்கள். பாமர மக்கள். அதிகார வர்கம், ஊடகம் என எல்லோரும் கண்மூடித்தனமான இவர்களது சர்வாதிகார மனோபாவத்துக்கு அடிபணிந்தார்கள். (அந்த அடிமைத்தனத்தை உடைக்கவும் ஜெயாவால்தான் முடிந்தது. அவரது மிதமிஞ்சிய அடாவடித்தனம் இல்லாவிட்டால் வெள்ளைத்தோல் வழிபாடு 1996லும் தொடர்ந்திருக்கும்). இன்றைய நிலையிலும் அதிமுக கலையாமல் இருப்பது பேராச்சர்யம்தான். தலைவரால் அதிகபட்சம் ஒருமணிநேரமே பணியாற்ற முடிகிறது, யார் இருப்பார் யார் துரத்தப்படுவார் என்று தெரியாது. தாலிபான் தலைமையை அணுகமுடியாததைப்போல இருக்கிறது அதிமுக தலைமை. ஆனாலும் கட்சி செயல்படுகிறது.

ஆனால் இது அடுத்த ஆண்டும் இருக்கும் என சொல்வதற்கில்லை. ஆட்சி என்று ஒன்று இல்லாவிட்டால் ஜெயாவுக்கு இப்போது உள்ள தெம்புகூட இருக்காது. அ.தி.முகவின் தற்போதைய வலுவான கூட்டணி அமைப்புக்களான ஊடகங்களால் இந்த ஆதரவை தொடர இயலாமல் போகலாம். சோ ராமசாமியால் வழிநடத்த முடியாது, ஷீலா பாலகிருஷ்ணன் வழி நடத்துவாரா என தெரியாது இருப்பது சசிகலா மட்டும்தான். அந்த சூழலில் ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள்தான் போகும். இப்போதே அதுதான் நிலை. ஆகவே இம்முறை அதிமுகவின் வெற்றி என்பது பாஜகவுக்கே அதிகம் தேவைப்படும். கூட நின்றோ அல்லது எதிர்த்து நின்றோ பாஜக அதிமுகவுக்கு சாதகமாகவே செயல்படும். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவின் தற்கொலைப்படையாக செயல்படும் ஸமூஹ ஆர்வலர்கள் தன்னியல்பாக அதிமுகவை ஆதரிப்பதை நீங்கள் கவனித்திருக்கக்கூடும்.

அதிமுகவின் பி டீம் என நம்பப்படும் மக்கள் நல கூட்டணி தன்னை ஒரு மாற்று என நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த கதம்பத்தில் இருக்கும் கட்சிகள் மாற்றாக இருக்க எவ்வித தகுதியும் இல்லாதவையாக இருக்கின்றன.. கிரானைட் ஊழலில் இரண்டு திராவிடக்கட்சிகளும் ஈடுபட்டன. ஆகவே எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது மார்க்சிஸ்ட். ஆனால் இ.கம்யூவின் தளி.ராமச்சந்திரன் என்ன ஊதுவத்தி வியாபாரம் பார்க்கிறாரா எனும் கேள்விக்கு பதில் இல்லை (அவர் நடத்துவது ஒரு மாஃபியா சாம்ராஜ்யம், கொலைக்குற்றத்திற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கிரானைட் தாதா அவர்). 2009 ஈழத்து இனப்படுகொலையை மன்னிக்க முடியாது என கருணாநிதியை இன்றளவும் குற்றம்சாட்டும் வைகோ அன்று காங்கிரஸ் அமைச்சராக இருந்த இன்றும் காங்கிரசை தன் கட்சிப்பெயரில் வைத்திருக்கும் வாசனை கூட்டணிக்கு வருந்தி அழைக்கிறார்.

கம்யூனிஸ்ட் இயக்கங்களின் சித்தாந்த விரோதி பாஜக. செயல்பாட்டு ரீதியில் வைகோ ஒரு ஆர்.எஸ்.எஸ் தாசர். ஜெயாவே செய்ய துணியாத காரியமான- 2002 கலவரத்தை ஆதரிப்பது எனும் நிலையை அப்போது எடுத்தவர் வைகோ. இன்றளவும் அது குறித்து வருத்தம் தெரிவிக்காத வைகோவை பக்கத்தில் வைத்துகொண்டு இந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எந்தப் பொதுக்கருத்தை முன்வைத்து இயங்கப்போகின்றன? அப்படியானால் பாஜகவை எதிர்ப்பதைவிட திராவிட ஆட்சியை ஒழிப்பதுதான் அவர்கள் முதல் இலக்கா?

நீர்நிலை ஆக்கிரமிப்பா, மது விற்பனையா, கட்டப்பஞ்சாயத்தா எந்த விவகாரமானாலும் இவர்கள் எளிதாக 40 வருட திராவிட ஆட்சி என பழி சொல்கிறார்கள். ஆனால் இந்த 40 வருடமும் இவர்கள்தான் அந்த ஆட்சிகளை ஆதரித்திருக்கிறார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்பின் பிதாமகன் எம்ஜிஆரை தன் தோளில் சுமந்தது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இன்றுவரை எம்ஜிஆரின் பேரை சொல்லிக்கூட அவர்கள் விமர்சிப்பது இல்லை. கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களை செய்யும் ஆட்கள் இல்லாத அரசியல் கட்சிகளே இங்கில்லை. இதில் என்ன மாற்றத்தை இவர்கள் கொண்டுவர இயலும்?

குடும்ப ஆட்சியில் திமுகவுக்கும், ரசிகர் மன்ற பாணி கட்சியமைப்பில் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டியாளரான தே.மு.தி.கவை கையை பிடித்து இழுக்கின்றன ம.ந.கூ கட்சிகள். இதில் நாங்கள் துண்டு போட்ட சீட்டில் நீ எப்படி உட்காரலாம் என கருணாநிதியிடம் வம்புக்கு போகிறார்கள். தி.மு.க அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளின் மோசமான நகலான விஜயகாந்தை கூட்டணியின் தலைவராக அங்கீகரிக்க காத்திருக்கும் இவர்கள் என்ன மாற்றத்தை கொடுக்க முடியும்?

இப்போதும்கூட இவர்கள் திமுகவைத்தான் அதிகம் எதிர்க்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் பாக்கியம் எங்களால் திமுகவுக்குத்தான் இழப்பு அதிமுகவுக்கு இல்லை என டி.வி விவாதம் ஒன்றில் ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் அவர்களது முதல் இலக்கு ஜெயா எதிர்ப்பாக இல்லை. இன்றைய சூழலிலும் அவர்கள் ஜெயாவையும் கருணாநிதியையும் ஒரே தட்டில் வைக்க முற்படுகிறார்கள். இதுவே ஜெயாவை காப்பாற்றும் முயற்சிதான்.

சாதாரண அரசு நடவடிக்கைகள் இருவரது ஆட்சியிலும் ஒரே மாதிரி மந்த நிலையிலா இருக்கிறது? சாலைப்பணிகளும் மற்ற அத்தியாவசிய அரசுப்பணிகளும் ஜெயா ஆட்சியில் இருப்பதைவிட கேவலமாக யார் ஆட்சியிலாவது இருக்க இயலுமா?

இருவரது தலைமையிலான சட்டமன்றமும் ஒரே மாதிரியா நடக்கின்றன?

அணுக முடியாதவர்கள் எனும் விமர்சனம் இருவருக்கும்  பொருந்துமா?

ஈழப்படுகொலைகள் நடந்தபோது கருணாநிதி சும்மாயிருந்தார் என்பது நிஜம். ஆனால் அப்போது ஜெயா இருந்திருந்தால் அம்மா சும்மாவாவது இருங்கள் (எதிராக எதையும் செய்துவிடாதீர்கள்) என்றுதான் கெஞ்சியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா திமிர்த்தனமாக நிறுத்திய திட்டங்கள் எத்தனை, இது 100 சதம் ஜெயாவால் மட்டுமே முடிகிற காரியம். இத்தகைய பிரத்யோக பிரச்சினைகளை மறந்துவிட்டு அல்லது தவிர்த்துவிட்டு இரண்டு தலைவர்களை சமமாக குற்றம்சாட்டும் பாணியை கையாள்கிறார்க்கள்.

ம.ந.கூ தலைவர்களை 3 வகைகளில் அடக்கிவிடலாம். ஜெயலலிதாவை எதிர்க்க மனமில்லாதவர்கள், எதிர்க்க துணிவில்லாதவர்கள் மற்றும் எதிர்த்து பழக்கமில்லாதவர்கள். இந்த குழுவினர் பங்கேற்கும் எல்லா விவாதங்களையும் கவனியுங்கள். அதில் கருணாநிதியின் மீதான விமர்சனத்தில் இருக்கும் வேகம் ஜெயலலிதா பற்றி பேசுகையில் கணிசமாக குறைந்திருக்கும். ஒரு பேரழிவு ராஜாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் ஜெயாவையும் கருணாநிதியையும் ஒரே தட்டில் நிறுத்துவது என்பது மறைமுகமான ஜெயா ஆதரவு நடவடிக்கை.

பத்திரிக்கையாளர் ஞாநி கருத்துப்படி, இந்த ம.ந.கூவின் இலக்கு 2021 தேர்தல்தான். ஆகவே இப்போது திமுகவை ஒழித்துவிட்டால் பிறகு 2021ல் பெரிய வெற்றியை சுவைக்கலாம் என இந்தக்கூட்டணி கருதுவதாக அவர் கணிக்கிறார். இதுதான் அவர்களது கணிப்பென்றால் அது முட்டாள்தனமான யோசனை. ஜெயலலிதா எனும் பரமார்த்தகுரு இல்லாவிட்டால் அதிமுக சீடர்கள் வேறு மந்தைகளை நோக்கி ஓடிவிடுவார்கள். இந்த தேர்தலில் ஜெயாவின் பிரச்சாரம் சாத்தியமா என சந்தேகம் எழும் சூழலில் அவரால் இனி கட்சியை கட்டுப்பாட்டில் வைப்பது சிரமம். அதிமுக சில ஆண்டுகளில் முற்றாக பாஜக வசம்தான் செல்லும். அது அடிப்படையில் பார்ப்பனர் மற்றும் நாடார்களின் கட்சி. மம்மி திமுக முக்குலத்தோர் கட்சி. அந்த ஜாதிச் சிக்கல் பாதி அதிமுகவை பிற கட்சிகளுக்கு பாகம் பிரித்து தரும். அதில் பெரும் எண்ணிக்கையை திமுகதான் கைப்பற்றும். அப்படிப்பார்த்தால் 2021ல் திமுகதான் மீண்டும் வலுவடையும். ஆக அப்போதும் மநகூவின் பாத்திரம் நிறையப்போவதில்லை.

ஆக இந்த அணி விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவோர் நிறைந்த அணிதான். அம்மாவுக்கு அணிலைப்போல உதவிய ஆத்ம திருப்திதான் அவர்களுக்கு மிஞ்சும். பெரிய அளவில் அவர்களால் ஜெயாவை எதிர்த்து அரசியல் செய்யவே முடியாது, பாஜகவை எதிர்த்தும் அரசியல் செய்யவே முடியாது. காரணம் முதல் காரியத்தை தா.பா எதிர்ப்பார் இரண்டாவதை வைகோ தடுப்பார்.

(சிந்தன் கூற்றுப்படி) அதிமுகவின் பி டீமான திமுக நிலை பரிதாபகரமானது. வழக்கமாக ஒரு முக்கிய எதிர்கட்சி, இத்தனை கெட்டபெயரை சம்பாதித்த ஆளுங்கட்சி இருக்கையில் வரவிருக்கும் தேர்தலை துணிச்சலுடன் சந்திக்க ஆயத்தமாகியிருக்க வேண்டும். ஆனால் மற்ற எதிர்கட்சிகள் திமுகவைத்தான் அதிகம் எதிர்க்கின்றன. பெருமளவிலான ஊடகங்கள் திமுகவின் மீது ஒரு நுட்பமான தீண்டாமையை கடைபிடிக்கின்றன. ஒட்டுமொத்த ஊடகங்கள் 2ஜி வழக்கை கையாண்ட விதமும் ஜெயா வழக்கை கையாண்ட விதமும் அப்பட்டமாக பக்கச்சர்பானவை. எப்படி ஜெயலலிதா பற்றிய எதிர்மறை செய்திகள் (சென்னை பேனர் அராஜகம்) அடக்கிவாசிக்கப்படுகிறதோ அப்படியே திமுக பற்றிய நேர்மறை செய்திகள் (ஸ்டாலின் பிரச்சாரம்) அடக்கிவாசிக்கப்படுகின்றன. ஜெயா வழக்கின்போதும் சென்னை வெள்ளத்தின்போதும் ஜெயலலிதா மிகக்கடுமையாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதன் காரணம் இந்த ஊடக அமைதிதான். ஊடகங்கள் அந்த வேலையை செய்திருந்தால் இப்படியான விமர்சனங்கள் சுனாமிபோல மக்களிடமிருந்து வர வாய்ப்பில்லை.

ஆனால் இந்த நிலைக்கு திமுகவும் ஒரு காரணம். பார்ப்பனீயம் எப்போதும் தன்னை எதிர்த்து நிற்பவனைவிட காலில் விழுபவனைத்தான் முதலில் அழிக்கும். திமுக தன் பார்ப்பன எதிர்ப்பை கைவிட்ட பிறகுதான் அந்த லாபி மிக மூர்க்கமான தாக்குதலை திமுக மீது தொடுக்கிறது. ஜெயேந்திரன் வழக்கு முதல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்குவரை எல்லாவற்றிலும் திமுக தலைமை ஒரு மொன்னையான எதிர்வினையை மட்டுமே காட்டியிருக்கிறது. திமுகவை இன்றளவும் தாங்கிப்பிடிக்கும் திராவிட சிந்தனை கொண்ட நபர்களைவிட கருணாநிதி பார்ப்பன சக்திகளை தாஜா செய்யவே மெனக்கெடுகிறார். பாஜக அரசிற்கு எதிரான எல்லா அறிக்கைகளும் உச்சகட்ட பணிவோடுதான் வெளியாகின்றன. திமுகவின் இந்த தடுப்பாட்ட உத்தி அவர்களுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவையே தருகிறது. இதுவும் கருணாநிதி காலம் வரைதான் ஸ்டாலின் இத்தகைய ஒப்பனையைக்கூட விரும்பாதவர் என்பது கண்கூடு.

நிறைவாக,

திராவிட கட்சிகளால்தான் தமிழகம் வீழ்ந்தது எனும் 3ம் அணிகளின் வாதம் அபத்தமானது, நயவஞ்சகமானது. இது முதலாளித்துவ பொருளாதாரமுறையின் தோல்வியை மறைக்கும் செயல். கூடுதலாக அதிமுகவின் சகிக்க முடியாத சர்வாதிகாரத்தை நீர்த்துப்போகவைக்கும் கபடத்தனம். இந்தியாவில் எந்த மாநிலமும் உருப்படியான வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. ஒப்பீட்டளவில் தமிழகமும் கேரளாவும் ஓரளவு முன்னேற காரணம் அங்கு திராவிட இயக்கமும் (தமிழகம் மட்டும்), கம்யூனிச இயக்கமும் உருவாக்கிய உரிமை சார்ந்த விழிப்புணர்வு. அதன் பலனாக உருவான கல்வி மற்றும் அறிவுப் புரட்சி. இல்லாவிட்டால் நாம் இன்னொரு பீகாராக இருந்திருப்போம்.

நமது தேர்தல்கள் இப்போது அறிவியல்பூர்வமான திருட்டுத்தனங்களை நோக்கி முன்னேறியிருக்கின்றன. பணம் வாங்கும் வாக்காளர்களை சரியாக கணிப்பது, அரைமணிநேர எக்ஸ்பிரஸ் பணப்பட்டுவாடா, எதிரணி பூத் ஏஜெண்ட்களை ஓரிரு மணிநேரம் ஒதுங்கவைத்து கள்ள ஓட்டு போடுவது என பல வழிகள் கையாளப்படுகின்றன. தேர்தல் ஆணைய அதிகாரிகளும் பயமில்லாமல் பித்தலாட்டங்களை அனுமதிக்கிறார்கள். முப்பதாயிரம் கோடி செலவு செய்தால் பச்சைபொய்களையும் நம்பவைத்து ஒரு பிரதமரை உருவாக்கலாம் என்பதும் கடந்த தேர்தலில் நிரூபனமானது.

இன்று நாம் உணரவேண்டியது ஒன்றைத்தான், நம் நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் பெருமுதலாளிகள். இனி ஒவ்வொரு ஆட்சியும் முந்தையதைவிட மோசமாகிக்கொண்டே இருக்கும். மோடி ஜெயலலிதா போன்ற சிலரது ஆட்சிகள் இன்னும் கொடூரமாக இருந்துவிடும். ஆனால் இந்த விதி மாறாது. மூன்றாவது அணி மாற்று அணி ஆகிய பசப்பல்கள் முற்றாக தோல்வியடைந்த அமைப்பை இந்த இன்னும் கொஞ்ச காலத்துக்கு காப்பாற்றும் முயற்சி மட்டுமே. ஒரு லாட்டரி வாங்குவதில் இருக்கும் அதிருஷ்ட வாய்ப்புகூட இந்த தேர்தலில் இல்லை. இந்த முதலாளித்துவ பொருளாதார முறையில் இனிவரப்போகும் எல்லா தேர்தல்களும் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே… ஆனால் அவை மக்களின் தூக்குமேடையில் நடந்துகொண்டிருக்கும் பொழுதுபோக்கு. சாமானியரான நீங்கள் உயிரோடிருந்தால் அது உங்களுக்கு தரப்பட்ட உரிமையல்ல, இன்னும் உங்கள் முறை வரவில்லை என்பதுதான் அதன் அர்த்தம்.

Advertisements

“2016 தேர்தல் – பி (B) டீம்களின் தர்ம யுத்தம்.” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. நீங்கள் கூறும் பி டீம் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்தவர் செய்து கொண்டிருப்பவர் உண்மையாய் கூறுவதெனில் செய்யும் வழியை கண்டுபித்தவர் சாட்சாத் தள்ளுவண்டி கருணாநிதி என்பதை நீங்கள் வசதியாய் (தள்ளுவண்டி கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் நிராசைக்காக) மறைப்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் அல்ல காற்றில் மறைக்கும் செயல் ! ஜெயலலிதா,கருணாநிதி தமிழகம் புறக்கணிக்க வேண்டியவர்கள் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s