விவசாயி பாலன் விவகாரம் – கொடையாளிகள் ஜாக்கிரதை.


பட்டுக்கோட்டையை சேர்ந்த பாலன் எனும் விவசாயி கடன் நிலுவைக்காக போலீசால் தாக்கப்பட்டார். அவரது நல்ல நேரம் அந்த காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியானது. இல்லாவிட்டால் போலீசை தாக்கியதாக பாலன் கைது செய்யப்பட்டிருப்பார். நான் கொன்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை காரணம் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றாராம் அந்த கொலைகளை செய்த தேவாரம் (இவர் மூஞ்சிக்கு வால்டர் ஒரு கேடா). ஒவ்வொரு போலீஸ்காரனுக்கும் இதே மனோபாவம் உண்டு “ நான் தாக்கியவர்கள் எல்லோரும் தாக்கப்பட வேண்டியவர்கள்”. நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னால் முதுகு வளைக்கவும் சாதாரண மனிதன் என்றால் லத்திக்கம்புகளை உயர்த்தவுமே அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

போலீஸ்காரர்கள் மிருகத்தனமாக நடந்துகொண்டதோ அல்லது ஒரு சாதாரன விவசாயி அரசு ஊழியர்களால் அவமானப்படுத்தப்படுவதோ தமிழகத்தில் அசாதாரண நிகழ்வல்ல. காவல்துறை கிடக்கட்டும், எனக்கு தெரிந்த கிராமங்கள் எதிலும் விவசாயத்துறை அதிகாரிகள் வந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. விவசாயிகளிடையே பணியாற்ற வேண்டிய அதிகாரிகளுக்கு விவசாயிகளின் மீதிருக்கும் அக்கறை இந்த அழகில் இருந்தால், ஒரு கிராமத்தையே வன்புணர்ச்சி செய்து நிர்மூலமாக்கிய வரலாறு கொண்ட காவல்துறை ஒரு விவசாயி மீது எத்தகைய அக்கறை கொண்டிருக்கும் என்பது விளக்க வேண்டியதில்லை.

அரசின் ஒவ்வொரு துறையும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் இத்தகையை மக்கள் விரோத செயல்பாடுகளை செய்கின்றன. வங்கிகளில் பணம் செலுத்தப்போகும் சாதாரண மக்கள் நடத்தப்படுவதை பார்த்தால் இந்த மனோபாவம் எப்படி அதிகாரிகளிடம் ஒரு சுபாவமாக நிலை பெற்றிருக்கிறது என்பது புரியும். ஒரு கக்கூஸ் கட்ட ஒன்றரை கோடி செலவு செய்த எளிய மனிதர்தான் 80% ஏழைகள் வாழும் நாட்டின் நிதியமைச்சர். இவர்தான் இந்த ஏழைகளுக்கு என்ன செய்வது என தீர்மானிக்க வேண்டியவர். தன் முன்னால் போலீசார் நிறுத்தும் மனிதனை நிமிர்ந்துகூட பார்க்காமல் ரிமாண்ட் செய்யும் நீதிபதிதான் போலீஸின் அத்துமீறலை தண்டிக்க வேண்டியவர். இந்தியாவின் எந்த ஒரு துறையும் பாமர மக்களை மதிக்காமல் நடக்கையில் வன்முறையையே வேலையாக வைத்திருக்கும் போலீஸ் அவர்களை தன் பாணியில்தான் எதிர்கொள்ளும்.

இந்த முறை மக்கள் கவனம் அதில் திரும்பக் காரணம், இப்போதுதான் மல்லையா 9000 கோடி வங்கிக்கடனுக்கு மங்கலம் பாடி “ கடனை திருப்பிக் கேட்கும் நாட்டை விட்டுப் போவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை” என நினைத்து லண்டனுக்கு ஓடிய செய்தி மக்களுக்கு தெரிந்திருக்கி்றது. மக்களில் பலருக்கும் கடன் இருக்கிறது, தவணை தவறும் நிலை வரலாம் எனும் பயமும் இருக்கிறது. அதனால்தான் பாலனோடு தம்மை பொருத்திக்கொள்ளும் மக்கள் ”எங்கே தனக்கும் இந்த நிலை வருமோ ”எனும் அச்சத்தின் காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். உற்று கவனித்தால் மிகப் பாமர மக்கள் போலீசால் துன்புறுத்தப்படும்போதும் கொல்லப்படும்போதும் இந்த திரளான அதிர்ச்சி வெளிப்படுவதில்லை. போலீசால் கொடூரமாக தாக்கப்பட்ட சென்னை தலித் சிறுவன் ஒரே நாளில் செய்திகளில் இருந்து விலக்கம் செய்யப்பட்டுவிட்டார் (பாலிமர் தவிர).

பாலன் தாக்கப்பட்டதற்காக நடத்தப்படும் போராட்டங்களில் சில இன்னும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன. ஒரத்தநாட்டில் விவசாய சங்கங்கள் இணைந்து நடத்திய போராட்டம் பாலனுக்கு டிராக்டர் திரும்ப தரப்பட்டதால் வாபஸ் பெறப்பட்டிருகிறது. டிராக்டர் திரும்ப கிடைப்பதா பிரச்சினை? தஞ்சாவூரின் மொத்த மக்கள் தொகையும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு டிராக்டரை எளிதாக வாங்கிவிடலாம், அந்த டிராக்டரை மீட்பதா வெற்றி?. போலீஸ்காரர்கள் நாயினும் கீழாக நம் சக விவசாயியை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு ஒரு தண்டனை கிடைக்காமல் போராட்டத்தை திரும்பப் பெறுவது என்பது போலீஸ்காரன் அடியைவிட நம்மை மோசமாக இழிவுபடுத்தும் செயல் இல்லையா?

திமுக இன்னும் இரண்டு மாதங்களுக்கு டிராக்டர்களை பறிமுதல் செய்யக்கூடாது என போராட்டம் நடத்துகிறது. கருணாநிதிக்கு 234 தொகுதிகள் கிடைத்தாலும் விவசாயிகள் வாழ்வில் ஒரு முன்னேற்றமும் வராது. கடந்த திமுக ஆட்சியிலும் விவசாயிகள் ஜப்தி நடவடிக்கைக்கு ஆளாகிக்கொண்டே இருந்தார்கள். அரியலூர் விவசாயி தற்கொலைக்கு ஜெயலலிதாவை மட்டும் குறை சொல்லி மத்திய அரசை லாவகமாக காப்பாற்றுகிறார் கருணாநிதி. விவசாயிகள் சங்கமே இப்படி சமரச திலகங்களாக இருக்கையில் நாம் கருணாநிதியை விமர்சிப்பதெல்லாம் அநாவசியம். ஜெயலலிதா முழு அதிகாரத்தில் இருந்திருந்தால் அதிகபட்சமாக அரியலூர் விவசாயிக்கு மூன்று லட்சமும் ஒரு ஸ்டிக்கரும் கிடைத்திருக்கும், ஆகவே அவரைப் பற்றி விமர்சிப்பது இன்னும் அநாவசியம்.

பெரும்பான்மை போராட்டங்கள் மற்றும் அறிக்கைகள் போலீசுக்கு உள்ள அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்காமல் டிராக்டரை காப்பதையே முக்கிய இலக்காக வைக்கின்றன. ஆனால் இங்கு முக்கிய சிக்கலே போலீசுக்கு உள்ள வானளாவிய அதிகாரம்தான். அவர்களை விலைக்கு வாங்கிவிடலாம் எனும் நம்பிக்கையில்தான் கோடக் போன்ற வங்கிகளும் ஏனையை கந்துவட்டி நிறுவனங்களும் எளிய மக்களை அச்சுறுத்துகிறார்கள். அரசாங்கம் கெயில் போன்ற எல்ல விவசாய விரோத திட்டங்களையும் போலீசை நம்பியே துவங்குகிறது. இத்தகைய போலீஸ் எனும் அரசு அடியாள்படையையும் அதன் மக்கள் விரோத போக்கையும் பொருட்படுத்தாமல் பாலன் தாக்கப்பட்டதை ஒற்றை நிகழ்வை மட்டும் முன்னிருத்தி பிரச்சாரம் செய்வதும் தீர்வை கோருவதும் நியாயமா? இப்படி பிரச்சினையின் மைய காரணியை விட்டுவிட்டு சம்பவங்களுக்கு செட்டில்மெண்ட் கேட்பதை மட்டும் போராட்டமாக்குவதால்தான் விவசாயிகள் நிலை இத்தனை தூரம் சீரழிந்து போயிருக்கிறது.

வேறொரு தளத்தில் இந்த தாக்குதல் சம்பவம் சில எதிர் வினைகளை உண்டாக்கியிருக்கிறது. நடிகர் விஷால் பாலனின் கடனை தாம் ஏற்பதாக் சொல்லியிருக்கிறார். இன்னொரு நடிகர் கருணாகரன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாயை அனுப்பியிருகிறார். அவர்களது செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்கவில்லை, அது நிஜமான கருணையுணர்வில் இருந்து பிறந்த செயல் என கருதுவதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. சிம்பு அனிருத்தைப் போல கழிசடை பாடலாக இல்லாமல் ஒரு மனிதனின் துயரில் பங்கேற்க விரும்பும் செயலாக இருப்பதில் மகிழ்ச்சியே.

ஆனால் ஓரிரு லட்சங்கள் கொடுப்பது என்பது சாமானிய மனிதனுக்கு பெரிதாக தெரியலாம். நடிகர்களின் வார இறுதி பார்ட்டிக்கு ஆகும் செலவில் இது நான்கில் ஒரு பங்கு இருக்குமா? சில நடிகர்கள் நட்சத்திர விடுதிகளில் நிரந்தரமாக அறையை வாடகைக்கு எடுத்திருப்பதாக கேள்விப்படுகிறேன், அதோடு இதனை ஒப்பிட்டால் எவ்வளவு காணும்? பாடலையும் இசையையும் உருவாக்கும் மூடை கொண்டுவரக்கூட வெளிநாட்டுக்கு செல்லும் உங்களுக்கு ஒரிரு லட்சம் என்பது எந்த மூலைக்கு? உங்களுக்கு பணம் என்பது மிக மலிவான பொருள். உங்கள் பொதுநல சிந்தனையை ஏன் அதன் வாயிலாக காட்ட முனைகிறீர்கள்..

ஊழல் செய்ததால் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறைக்கு போனதற்காக உண்ணாவிரதம்தானே நடத்துகிறீர்கள், அவருக்கு ஓரிரு லட்சம் கொடுத்து கருணையை காட்டவில்லையே… இதே விஷால் மாடுகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க போராடினாரே, அப்போது மட்டும் கருணை செயலாகவும் விவசாயி உதைபட்டால் கருணை காசாகவும் வெளிப்படுவதன் மர்மம் என்ன? மிகையாக காசிருப்பவன் காசு கொடுப்பதில் என்னய்யா பெருமை இருக்கிறது..

நந்திதாதாஸ் தன் எதிர்ப்பை கருத்தாக பதிவு செய்தார், படமாக பதிவு செய்தார். மார்லன் பிராண்டோ, எம்.ஆர்.ராதா ஆகியோர் நன்கொடை மூலம் தம் சமூக அக்கறையை காட்டிக்கொள்ளவில்லை. சில பாலிவுட் நடிகர்கள்கூட மாட்டுக்கறி தடைக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். பாடகர் டி.எம்.கிருஷ்ணா தன் ஆதரவையும் எதிர்ப்பையும் பதிவு செய்வதன் வாயிலாகவே தன் சமுக அக்கறையை காட்டுகிறார்.

தமிழ் சினிமாவின் வடிவம் ஏழைகள் கையேந்தி காசு வாங்கிக்கொண்டு காலில் விழுவோராகவும், நல்ல பணக்காரர்கள் ஏழைகளுக்கு வேட்டி சேலை தருவோராகவும், சோறு போட்டு காசு கொடுப்போராகவுமே இருப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்துதான் எல்லா பிரச்சினைகளையும் காசினால் எதிர்கொள்ளும் சினிமா புரவலர்கள் உருவாகிறார்கள் போலிருக்கிறது. காக்கா முட்டையில் நடித்த சிறார்களை விமானத்தில் அழைத்துச் சென்று தோனியை சந்திக்க வைத்தால், அவர்களது படிப்பு செலவை ஏற்பதாக சொன்னால் இந்திய சேரிகளின் மேம்பாட்டிற்கு சேவை செய்ததாக இவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இதே போன்ற லட்சக்கணக்கான சிறார்கள் நகர சேரிகளை நோக்கி வயிற்றுப்பாட்டுக்காக வருடந்தோறும் நகர்கிறார்கள். இது குறித்த நியாயமான அக்கறையை காக்கா முட்டை நடிகர்களுக்கு காசு கொடுப்பதன் வாயிலாக மட்டுப்படுத்துகிறார்கள். ஒரு சேரி சிறுவன் அடிப்படை வசதிகளுடன் கூடிய வாழிடமும், கல்வியும் என் உரிமை என சிந்திக்காமல் ஒரு புரவலர் கிடைத்தால் எனக்கு கல்வி கிடைக்கும் என சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான். இந்த சினிமா தர்மவான்களுக்கு கிடைக்கும் அதீத விளம்பர வெளிச்சம் உரிமைப்போராட்டங்களை தன் பங்குக்கு காயடிக்கிறது.

அரசாங்கம் விவசாயிகளுக்கு விரோதமானது என்பது அவ்வப்போது விவாதிக்கப்படுகிறது. விவசாய இயக்கங்களால் பலனேதும் இல்லை என்பதும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த திடீர் புரவலர்கள் எந்த சூழலிலும் விமர்சனத்துக்கு உள்ளாவதில்லை. அதற்காத்தான் இங்கே அதனை சற்றே தீவிரமாக விமர்சிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் ஆழமாக பார்த்தால் எல்லா பிரச்சினைகளையும் பணத்தால் சமாளிக்க முனையும் இத்தகைய சினிமா நன்கொடையாளர்கள் பிரச்சினைக்கு காரணமான அமைப்பை காப்பாற்றுகிறார்கள். மறந்துவிடாதீர்கள் இங்கே கருணையும் சந்தேகத்துக்குரியது, கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s