ம.ந.கூ+ தே.மு.தி.க = மாற்றத்திற்கு மவுனஅஞ்சலி.


சில நாட்கள் தலைப்புச்செய்திகளில் இடம்பெறாமல் ஒதுக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று மீண்டும் தலைப்புச்செய்திக்கு வந்திருக்கிறார். விஜயகாந்த தம் கூட்டணிக்கு வருவார் என கருணாநிதி சொன்ன பிறகு வைகோவிடம் ஒரு திடீர் பதற்றம் வெளிப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேமுதிகவிடன் பேச்சுவார்த்தை துரிதகதியில் துவங்கி இப்போது கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை நால்வராக இருந்தபோதே எங்களுக்குத்தான் வெற்றி என முழங்கிய ம.ந.கூ இந்த கூட்டணிக்காக 60 சதம் இடங்களை விட்டுக்கொடுத்திருக்கிறது.

இதிலிருந்தே ம.ந.கூவின் உண்மையான பலமும் அதன் நால்வரணி தலைவர்களின் தன்னம்பிக்கையும் தெரியவருகிறது. அவர்களுக்கு நிஜ பலம் முன்பே தெரிந்திருக்கலாம், ஆனால் அவர்களை நம்பி ஆட்சியைப் பிடிப்போம் என கனவு கண்டுகொண்டிருந்த ம.ந.கூ ஆதரவாளர்களுக்கு இந்த சமரசம் அதிர்ச்சியளிப்பதை முகநூல் காலக்கோட்டில் காணமுடிகிறது. ஒவ்வொரு கூட்டத்தின்போதும் ஆரவாரமாக பதிவிட்ட பெரும்பான்மை மநகூ ஆதரவாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

மக்கள் நல கூட்டணியின் முதல் தகுதியாக பார்க்கப்பட்டது அல்லது சொல்லப்பட்டது என்ன? அவர்கள் பெரிய கட்சிகளிளோடு சமரசம் செய்துகொள்ளாமல் அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதுதான். அந்த தகுதியையே விட்டுக்கொடுத்துதான் இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. பெரிய கட்சியான தே.மு.தி.கவின் நிபந்தனைகளுக்கு பணிந்துபோய் தங்களது முக்கிய நிலைப்பாடுகளை தளர்த்திக்கொண்டிருக்கிறார்கள். முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் எனும் நிலையில் இருந்து இறங்கி வந்து தேமுதிக கூட்டணியின் தம்மை இணைத்துக்கொண்டிருக்கிறது ம.ந.கூ. தி.மு.க அதிமுகவுக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கிவிட்டு விஜயகாந்திடம் சரணடைந்து அதன் “மாற்று” முழக்கத்துக்கு கொள்ளி வைத்திருக்கிறார் வைகோ.

124 இடங்களை ஒதுக்கியதன் மூலம் மற்ற கட்சிகள் தங்களைவிட தேமுதிக 4 மடங்கு பெரிய கட்சி என ஒத்துக்கொண்டிருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு தங்கள் பலத்தை காட்ட முடியும் என நம்பிக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் நம்பிக்கையிழப்புதான் மநகூவின் முதல் சவாலாக இருக்கும். ஓரளவுக்கு இது மார்க்சிஸ்ட் மற்றும் மதிமுகவுக்கும் பொருந்தும். இன்றுமுதல் இது விஜயகாந்த கூட்டணி என்றிருக்கிறார் வைகோ, இது மநகூவின் கீழ்மட்டத்தில் ரசிக்கப்படப்போவதில்லை என்பது உறுதி.

இந்த நகர்வின் மூலம் திமுகவை கடுப்பேற்றும் தன் நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் வைகோ. ஆனால் அது மட்டுமே அவரது வெற்றியாக இருக்கும். இனி திமுக அதிமுகவால் ம.ந.கூ மற்றும் தே.மு.தி.க நிர்வாகிகளை சுலபமாக வளைக்க முடியும். விஜயகாந்துக்கு முட்டுக்கொடுக்கும் கடமை ம.ந.கூ தலைவர்கள் தலையில் விடியும். விஜயகாந்த வருகை குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கும் ஆகையால் அதற்கான விளக்கங்களை அதிகம் கொடுக்க வேண்டிய தடுப்பாட்ட நிலைக்கு ம.நகூ வந்திருக்கிறது.

இது முழுமையாக அதிமுகவுக்கு சாதகமான அணி என முடிவு செய்ய முடியாது. அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை கேப்டன் நல கூட்டணி பிரிக்கும் என்பது அறிஞர்களின்? கணிப்பு. அது உண்மையென்றாலும் ஊடகங்கள் கருணாநிதிக்கு எதிரான வாக்குகளையும் உருவாக்கியிருக்கின்றன. அவையும் இப்போது பிரியும். இப்போது இருப்பதைப்போல மநாகூவை விமர்சிக்காமல் அதிமுகவால் இருக்க முடியாது. விஜயகாந்தை கண்டாலே பிடிக்காத ஜெயலலிதாவின் கட்சியினருக்கு இப்போது மநகூவை விமர்சிப்பது தவிர்க்க இயலாத காரியம். அது விஜயகந்தின் மீதான தனிப்பட்ட விமர்சனமாக இருக்கும், அதனை விஜயகாந்தும் எதிர்கொண்டாக வேண்டும். விஜயகாந்த் ரசிகர் மன்றமாகவே மாறிவிட்ட ம.ந.கூவும் அதனை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும். அண்ணா நூலகம் எனும் சாதாரண கட்டிடத்தின் மீதே தன் வெறுப்பை காட்டியவர் ஜெயலலிதா, விஜயகாந்தை விட்டுவைப்பார் என எண்ணுவது அபத்தம். ஆகவே மநகூவின் 60% பங்குகளை இப்போது வைத்திருக்கும் விஜயகாந்தை மோசமாக தோற்கடிக்க ஜெயா எல்லா உள்ளடி வேலைகளையும் பார்ப்பார்.

ஜோதிட ரத்னா பொன்.ராதாகிருஷ்ணன், பிரேமலதாவின் இந்த முடிவு இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்றை ஆட்சியில் அமர்த்தவே உதவும் என ஆரூடம் சொல்லியிருக்கிறார். திராவிட கட்சிகளுக்கு அழிவு துவங்கிவிட்டது என சொன்ன வாய்தான் அது. ஆனால் கிரக நிலைகள் அந்த வார்த்தைகளுக்கு வாய்தா வாங்கிவிட்டது. விஜயகாந்தும் வராததால் பாஜகவின் ஒரே கூட்டணி கட்சியான ச.ம.க ஜெயாவின் பொற்பாதங்களில் சரணடைந்திருக்கிறது. இனி தன் கேவலமான தோல்விக்கு காரணம் என எந்த கட்சியையும் பாஜகவால் கைகாட்ட முடியாது. திமுக அல்லது அதிமுக யார் ஜெயித்தாலும் பாஜகவுக்கு சாதகமான ஆட்கள் மாநிலங்கள் அவையில் பாஜகவுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 50 லட்சம் உறுப்பினர்கள், 20 சதம் வாக்கு வங்கி என வாய்ப்பந்தல் போட்ட பாஜக இப்போது சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு உள்ளது இரண்டு வாய்ப்புக்கள்தான், கலவர நாயகனை பிரச்சாரத்துக்கு அழைத்துவந்து அசிங்கப்படுவதா அல்லது அவரை அழைத்துவராமலே தனித்து நின்று அசிங்கப்படுவதா என்பதுதான்.

இது புது கணக்கு, மாற்றத்துக்கான அடித்தளம் என பல புதிய ஜிகினாக்களை காட்டி அலம்பல் செய்துகொண்டிருந்த மநகூ இப்போது முற்றாக அம்பலப்பட்டிருக்கிறது. வெற்றிதான் முக்கியம் என்று பேசினாலும் சிக்கல், கொள்கைதான் முக்கியம் என பேசினாலும் சிக்கல். சீமான் எனும் மொக்கை இயக்குனரிடமே அருணனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இனி வருவோர் போவோரெல்லாம் கேள்வி கேட்பார்கள் (இன்று (23/03/16) கனகராஜின் சுருதி மங்கிவிட்டது). விஜயகாந்த் ஃபேக்டர் காரணமாக அதிமுகவின் நிரந்த கூட்டணியினரான ஊடகங்களால் ம.ந.கூவை பெரிய அளவில் ஆதரிக்க முடியாது. வளர்த்துவிட்ட ஊடகங்கள் கைவிட்டால் கைக்குழந்தையான ம.நகூ எப்படி சமாளிக்கும்? அதனை ஆதரித்த ஞானி, தமிழருவி மணியன் ஆகியோர் இப்போதே மண்ணை அள்ளி தூற்றிவிட்டார்கள். கருத்தியல் ரீதியாக மநகூவை ஆதரிப்போருக்கான தளத்தை விஜயகாந்த் ஆக்கிரமித்திருக்கிறார். ஒருவேளை இந்த அணி அமைந்திருக்காவிட்டால் மநகூவை முழுமையாக அம்பலப்படுத்த இன்னும் சில மாதங்கள் ஆகியிருக்கும். இந்த தேர்தல் அமைப்பில் மாற்றம் என்பதும் இன்னொரு வடிவிலான ஏமாற்று வேலை என்பதை வைகோவும் குழுவினரும் மிக விரைவாக உலகிற்கு காட்டிவிட்டார்கள்.

வரவிருக்கும் தேர்தலுக்கும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதனால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை. இரண்டிலும் மக்கள்தான் வெற்றியாளர்களை தீர்மானிப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் இவை மக்களை சில காலம் பிசியாக வைத்திருக்கின்ற போட்டிகள் அவ்வளவே. இவற்றால் மக்களின் வாழ்க்கை நிலையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் செய்ய முடியாது. ஏற்றுமதி சரிவு, தொழில் உற்பத்தியில் வீழ்ச்சி, வறட்சி, பண மதிப்பு வீழ்ச்சி என இந்த நாட்டை அதல பாதாளத்திற்குள் தள்ளும் எல்லாமே உச்சத்தில் இருக்கின்றது. கச்ச எண்ணை விலை உயர்ந்தால் நாம் கற்பனை செய்ய முடியாத அழிவை சந்திப்பது உறுதி. வேலை இழப்பு, வருவாய் இழப்பு ஆகியவைதான் இந்தியாவின் அடுத்த முன்னேற்றமாக இருக்கும். இதில் எதையும் சரிசெய்யும் அதிகாரமற்ற ஒரு நிர்வாக அமைப்பைத்தான் வரும் சட்டமன்ற தேர்தல் தெரிவு செய்யப்போகிறது.

வரப்போவது சசிகலா ஆட்சியாக இருந்தாலும் ஸ்டாலின் ஆட்சியாக இருந்தாலும் இந்தப் பேரழிவுக்கு ஒத்தாசையாக இருக்கப்போவது நிச்சயம். இரண்டு கட்சிகளின் எதிர்கால முழு அதிகார மையங்களும் இந்த சிக்கல் குறித்த அறிவும் அக்கறையும் இல்லாதவை என்பதுதான் யதார்த்தம். நம் சக மக்களில் பலகோடிபேரை மரணத்தின் விளிம்பில் தள்ளும் நிலையில் நாடு இருக்கின்றது, நாம் அதற்கெதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய தருணம் இது. இந்த தேர்தலால் அந்த விஷச்சுழலில் நம்மை ஒரு நாள்கூட கூடுதலாக காப்பாற்ற இயலாது. வட்டி குறைப்பு, அத்தியாவசிய மருந்துகள் விலையுயர்வு, உயர்கல்வி சட்டபூர்வமாக வணிகமயமாகவிருப்பது ஆகியவை அதற்கான சமிங்ஞைகள்தான். கனவு காண்பது காத்திருப்பது ஆகியவற்றுக்கான வேலிடிட்டி முடிந்துவிட்டது.

Advertisements

One thought on “ம.ந.கூ+ தே.மு.தி.க = மாற்றத்திற்கு மவுனஅஞ்சலி.”

  1. வில்லவன் உங்கள் பதிவின் கடைசி பத்திகள் இந்த ஆட்டங்களின் பின்னே ஒளிந்திருக்கிற உண்மை.ஆனால் அந்த உண்மை இன்னமும் மக்களிடம் எடுபடவில்லை என்பதும் உண்மை.அதற்கான களம் இல்லாத போது, யதார்தத்தில் தேர்தல் அரசியலில் ஒரு மோடியும், ஜெயலலிதாவும் வெல்வதனால் பாரதூரமான விளைவுகளை மக்கள் வாழ்வில் ஏற்படுத்துகின்ற போது அதனை அப்படியே விட்டு விடுவதும் சரியானதாக இருக்க முடியுமா என்பதனையும் சேர்த்து யோசிக்க வேண்டும்.இன்றைய தமிழக தேர்தல் நிலவரத்தில் ஆளுகின்ற அதிமுக திரும்ப வந்தாலும் பரவாயில்லை திமுக வந்து விடக்கூடாது என எல்லோருமே வரிந்து கட்டி வேலை பார்ப்பதில் ஏதாவது நேர்மையான காரணம் இருக்கிறதா?கட்சியில் தனது எதிர்காலத்தை முடக்கியது ஸ்டாலினை வளர்ப்பதற்கே என்கிற ஒரே காரணத்தில் அந்த ஸ்டாலின் முதல்வராகி விடக்கூடாது என்று வைகோ செய்கிற தரகர் வேலை,ஜெயலலிதா எம் ஜி ஆர் கருணாநிதி என்று தனிமனித ஆளுமைகளை போற்றி பாடி பரிசில் பெற்று சலிப்படைந்த ம ந கூ, கு ப செயல்திட்டம் என்றெல்லாம் மாற்று அரசியல் பேசிய இரண்டு ஓட்டுபொறுக்கி கம்யுனிஸ்டுகள் திரும்பவும் விஜயகாந்த் பிரேமலதா குடும்ப கட்சிக்கு காவடி தூக்க முடிவெடுத்தது, சன் குழுமம் தொழிலில் பிறர் வராமல் ஆதிக்கம் செலுத்தியதை மறவாத புதிதாக அனுமதி பெற்ற தொ கா ஊடகங்கள் ஆட்சி மாறாமல் இருந்து விட வேண்டுமென்பதற்காக மெனக்கெடுவது இது எதிலுமே மக்கள் நலன் இல்லையே?அவரவர் சொந்த நலன்களை மனதில் கொண்டு இந்த அதிமுகவை நீடிக்க செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைத்தால் மீண்டுமொருமுறை அதிமுக வந்தால் அராஜகமும் அடிமைத்தனமும் தங்குதடையின்றி கோலோச்சுமே என்று அஞ்சி, அதை தடுப்பதற்காவது திமுக வந்து விட்டு போகட்டுமே என்று கருதாமல் இருக்க முடியவில்லை.ஆக திமுக வருவதற்கு நாம் ஆதரவளிக்கிறோமா என்பதைக்காட்டிலும் அதிமுகவோ, (முழுமை பெரும்பான்மை குழப்ப நிலை ஏற்படின் மறைமுக) பிஜேபியோ ஆளும் நிலை தமிழகத்திற்கு ஏற்படாமலிருக்க ஆனதை செய்வோம்.”ஓட்டுபோடாதே” என்று சொல்வதை கேட்காமல் அதை செய்கிறவர்கள் மத்தியில் இருக்கிற அறியாமையை அப்படியே விட்டு தொலைப்பதும் தவறென்றே கருதுகிறேன்.நோயாளியின் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த சொல்லி பலனில்லை என்கிற போது அதனை நாளுக்கு 2 என குறைக்க சொல்கிற மருத்துவர் சமரசம் செய்து கொள்கிறார் என்றால் அது நோயாளியின் நிலையுணர்ந்து மருத்துவர் செய்து கொள்கிற சமரசம் .அது தவறாகாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s