ஜெயா எதிர்ப்பு – ஐயங்களுக்கான விளக்கம், முன்முடிவுகளுக்கல்ல.


சமீபகாலமாக நான் ஒரு திமுக ஆதரவாளன் எனும் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முகநூல் நட்பு வட்டத்தில் உள்ள திமுகவினரும் என்னை ஒரு திமுக ஆதரவாளனாக அடையாளம் காட்டுகிறார்கள். சமீபத்தில் வெளியான வினவு கட்டுரை குறித்து எழுந்த விமர்சனங்கள் மகஇகவும் அதன் சார்பு அமைப்புக்களும் திமுக சார்பு நிலை எடுத்திருப்பதாக குற்றம்சாட்டுகிறது. சொல்லும் நபர்கள் எல்லோரும் அதிமுக ஆதரவாளர்கள் என வரையறுக்க முடியாது. பல இடதுசாரி ஆதரவாளர்களுக்கும் இந்த ஐயம் எழுந்திருக்கிறது. இது அபத்தமானது என நிராகரிக்கவோ அல்லது உள்நோக்கமுடையது என முத்திரை குத்தவோ விரும்பவில்லை.

வினவு கட்டுரை திமுகவும் அதிமுகவும் ஒன்றில்லை என்கிறது. அதுவே இத்தகைய விமர்சனங்களை உருவாக்குகிறது. 2011 தேர்தலில் ஜெயலலிதா எந்த வகையிலாவது ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டாரா? 2006 – 2011 காலகட்டத்தில் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதிமுக எந்த மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுக்கவில்ல. ஆனாலும் ஊடகங்கள் அவரது வருகைக்காக காத்திருந்தன. அவரது முதல் தேர்தல் பொதுக்கூட்டத்தினை (கோவை என நினைவு) பரவசத்தோடு குறிப்பிடாத ஊடகங்கள் கிட்டத்தட்ட ஏதுமில்லை.

திமுக ஆட்சிகாலத்தில் அதிமுகவை விமர்சிக்காமல் இருக்கும் ஊடகங்கள் அதிமுக ஆட்சியில் திமுகவை விமர்சிப்பதில் முனைப்பு காட்டுகின்றன. எல்லா ஊடகங்களும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செய்தி போடுகையில் அவை ஜெயாவிடம் பணம் வாங்கிவிட்டதாக கருத்து மக்களிடையே பரவுவதில்லை. ஆனால் ஆனந்தவிகடன் ஜெயாவுக்கு எதிராக சில கட்டுரைகள் எழுதிய உடனேயே அதன் உள்ளடக்கம் குறித்த விவாதம் எழாமல் ஆனந்தவிகடன் திமுகவிடம் விலைபோய்விட்டதாக கருத்துக்கள் வெள்ளமென பரவுகிறது.

தேர்தல் கமிஷன், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்தியாவின் எல்லா அதிகார மையங்களும் ஜெயலலிதாவிடம் மிக அதிகபட்ச கரிசனத்தை காட்டுகின்றன. இந்த அமைப்புக்கள் பணத்துக்கு விலைபோகும் என்பது யதார்த்தம் என்றாலும், அதனை கொடுக்கும் அளவுக்கு திரண்ட செல்வம் கருணாநிதிக்கு இருக்கிறது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக அதிகார மையங்களும் அதன் அருகில் இருப்பவர்களும் முற்றாக ஜெயாவின் பக்கமிருக்க சில தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது என்பது வெளிப்படை.

ஜெயலலிதாவுக்கு ஏன் இத்தகைய சிறப்புத் தகுதி கிடைக்கிறது எனும் விவாதம் இந்த சூழலில் வெகுமக்களிடம் கொண்டு செல்லப்படுவது அவசியம். அதில் திமுகவையும் சேர்த்து விமர்சிப்பது என்பது என் அறிவுக்கு எட்டியவரை சாத்தியமற்றது. 2ஜி ஊழல் பற்றிய எந்த விவாதத்திலும் அதிமுகவை விமர்சிக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்ததில்லை. காங்கிரஸ் ஒரு அரை ஆர்.எஸ்.எஸ் கட்சிதான். ஆயினும் பாஜகவின் இந்துத்துவத்தை எதிர்க்கும்போதெல்லாம் நாம் காங்கிரசை வலிய இழுத்து விமர்சனம் செய்தால் நம்மால் சுலபமாக நடுநிலைவாதியாகிவிட முடியும். ஆனால் அது பாஜக எதிர்ப்பின் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்யும். இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடியும் என்றாலும் அதனை நாம் வேறு வழிகளில் எதிர்கொள்ள வேண்டுமேயன்றி இருகட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து எதிர்ப்பது புத்திசாலித்தனமாகாது.

திமுக ஆட்சிகாலத்தில் பு.ஜ, பு.க பத்திரிக்கைகளை அதிமுக ஆட்கள் வாங்குவதும் அதன் தரவுகளை தமக்கு சாதகமாக வைத்து பேசுவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டபோது ம.க.இ.க போலீசின் நடவடிக்கையை ஆதரித்தது. அந்த வழக்கை நடத்திய அதிகாரி பிரேம்குமாருக்கு எதிராக அப்போது மகஇக பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்குமாருக்கு சாதகமாக போகும் என்பதற்காக ஜெயேந்திரனுக்கு எதிரான நகர்வை நாம் மட்டுப்படுத்திக்கொள்ள முடியுமா?.

2 ஜி ஊழலின் ஆதாரப் புள்ளி அந்த அலைவரிசையை சகாய விலைக்கு வாங்கும் முதலாளிகள். இது எல்லா பெரிய ஊழல்களுக்கும் பொருந்தும் நாம் அந்த முதலாளிகளை அம்பலப்படுத்துகையில் ராசா வெறும் அம்புதான் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் எழுகிறது. அது ஓரளவுக்கு ராசாவுக்கு சாதகாகவே முடியும். ஆனாலும் அதனை நாம் செய்யாதிருக்க முடியாது.

அனேகமாக இத்தகைய சவால்களை நாம் எல்லா செயல்பாடுகளிலும் எதிர்கொண்டாக வேண்டும். காதலிப்பவர்கள் மீது ஏவப்படும் சாதீய வன்முறையை எதிர்த்து விவாதிக்கும்போதெல்லாம் நான் எதிர்கொள்ளும் கேள்வி “ முதிர்ச்சியற்ற வகையில் அவசரத்தில் உருவாகும் காதல்களால் ஏற்படும் பிரச்சினைகளை” ஏன் நீ பேசுவதில்லை என்பதுதான். ஒருவகையில் அதுவும் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியதே. ஆனால் இரண்டையும் வேறு வேறு தளங்களில்தான் கையாளவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு திட்டமிட்ட கூட்டு நடவடிக்கை என்பது அதிகார வர்கத்தின் தூண்கள் தொடங்கி அதன் தோழனான ஊடகங்களால் மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. அதன் ஒரு நடவடிக்கையே திமுகவை முதலில் ஒழிப்போம் எனும் நேரடி மற்றும் மறைமுக பரப்புரைகள். அதனால்தான் தங்கள் ஆச்சாரம் கொள்கைகள் என்பதை எல்லாம் தாண்டி பார்ப்பன அறிவுஜீவிகள் ம.ந.கூவை ஆதரிக்கிறார்கள். திமுகவும் பார்ப்பன சக்திகளுக்கு பணிந்து போகும் கட்சிதானே எனும் கேள்வி நியாயமானது. ஆனால் அப்படியிருந்தும் ஏன் பார்ப்பன சக்திகள் திமுகவை ஒழிக்க விரும்புகின்றன எனும் ஆய்வு மிக நியாயமானது மற்றும் அவசியமானது. அதனை நாம் ஆய்வுக்குட்படுத்தும்போது அது திமுகவுக்கு சாதகமானதாக தோற்றமளிப்பதை தவிர்க்க இயலாது.

பார்ப்பனீய அதிகார மையங்கள் தங்களுக்கு இணக்கமான ஒரு கட்சியை ஒழித்துவிட்டு தங்களது சொந்த கட்சியின் அதிகாரத்தை தக்கவைக்க தீவிரமாக செயல்படுகின்றன. ஆகவே இதன் பிண்ணனி ஆட்சியதிகாரம் என்பதைத் தாண்டி பல நீண்டகால திட்டங்களை உள்ளடக்கியது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதேபோல பொதுக்கருத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் எதற்கும் லாயக்கற்ற ஒரு விளம்பர வெறியனை தலைமை பீடத்தில் அமர்த்த முடியும் என்பது நிரூபணமாகி இரண்டாண்டுகள்கூட ஆகவில்லை. 2014 பாராளுமன்ற தேர்தலின்போது ம.க.இ.கவின் பரப்புரைகள் மோடியை இலக்கு வைத்ததாகவே இருந்தது, இது காங்கிரசுக்கு இலவசமாக கிடைத்த அனுகூலம்தான். ஆனால் அது எவ்வளவு சரியான நடவடிக்கை என்பதை இப்போது மோடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ஜெயா எதிர்ப்பையும் இந்த அடிப்படையில் இருந்து விளங்கிக்கொள்ளுங்கள்.

எதிரிகள் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து எதிர்கொள்ள முனைவது அறிவார்ந்த செயல் அல்ல. தினமலரும் இந்துவும் பார்ப்பன ஏடுகள் எனும் அம்சத்தில் ஒன்றுதான். ஆனால் அவற்ரை நாம் பல சந்தர்பங்களில் ஒரே தட்டில் நிறுத்துவதில்லை. மார்க்சிஸ்ட் கட்சியும் பாஜகவும் ஒத்துபோகிற அம்சங்கள் நிறைய இருக்கிறது. ஈழம் தொடர்பான நிலைப்பாட்டில் டி.கே ரங்கராஜனின் குரலும் சுப்ரமணிய சாமியின் குரலும் ஒன்று போலவே பல தருணங்களில் ஒலித்திருக்கின்றன. ஆனாலும் நாம் அவர்களை பொதுமைப்படுத்தி பேசுவதில்லை. மேற்சொன்ன எதற்கும் நாம் பொதுமைப்படுத்தலை கோருவதில்லை. ஆனால் திமுக அதிமுக விவகாரத்தில் மட்டும் இது ஒரு பூதாகரமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. காரணம் அதன் பின்னிருக்கும் வலுவான பிரச்சாரம்.

இதே கண்ணோட்டத்தில் பார்த்தால் நம்மால் கோயில் வழிபாட்டு உரிமையைப் பற்றி பேச முடியாது, காரணம் நாம் நாத்திகர்கள். மதுவிலக்கு கேட்டெல்லாம் போராடுவது கம்யூனிஸ்ட் கட்சியோட வேலையாங்க? என சலித்துக்கொண்ட தோழரை சந்திருக்கிறேன். இப்படி எல்லா விமர்சனங்களுக்கும் பயந்துகொண்டே செயல்பட வேண்டுமானால் நம்மால் விவாதத்தைத் தாண்டி ஓரங்குலம்கூட நகர இயலாது.

இந்த காரணிகளுக்கு அப்பால் நின்று யோசித்தால் வேறு காரணங்களும் கிடைக்கிறது. ஒரு ஃபேஸ்புக் பதிவில் பெரிய கட்டுரைக்கான முழுமையை எதிர்ப்பார்ப்பதும், ஒரு கட்டுரையில் முழு புத்தகத்துக்கான முழுமையை எதிர்ப்பார்ப்பதும் இங்கே தொடர்ந்து நிகழ்கிறது.

நாம் வார்த்தைகளை மட்டும் வைத்து எதையும் புரிந்துகொள்வதில்லை. வாசிப்பவரின் அறிவு மற்றும் அனுபவம், வாசிப்பவர் எழுதியவர் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயம் மற்றும் வாசிப்பவரின் எதிர்பார்ப்பு ஆகியவையும் சேர்த்தேதான் நமது புரிதலை வடிவமைக்கிறது. ஆகவே இது தொடர்பாக இன்னும் ஆயிரம் கட்டுரைகள் எழுதினாலும் அது எல்லோருக்கும் முழுமையான புரிதலை உண்டாக்கும் என சொல்ல முடியாது.

நிறைவாக நான் வேண்டுவதெல்லாம் ஒன்று மட்டும்தான், வெறும் வார்த்தைகளை மட்டும் வைத்து மதிப்பிட ஆரம்பித்தால் உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நல்லவனாக்கவோ அல்லது கெட்டவனாக்கவோ முடியும். முழுமையான செயல்பாட்டையும் கணக்கில் கொண்டுதான் ஒருவரது வார்த்தைகளை நாம் மதிப்பிட்டாக வேண்டும். இந்த கடைசி பத்தி எந்த வகையிலும் திமுகவுக்கு ஆதரவானதாக தோற்றமளிக்கவில்லை என்பதால் இந்த ஒரு பத்தியை மட்டுமாவது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்.

நன்றி.

Advertisements

“ஜெயா எதிர்ப்பு – ஐயங்களுக்கான விளக்கம், முன்முடிவுகளுக்கல்ல.” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. உங்கள் கட்டுரையில் ஏன் தி.மு.கவை ஒழிப்பதில் ஊடகங்கள் அனைத்தும், அறிவுஜீவிகளும் ஒன்று கட்டி நிற்கின்றன என்பதற்கான விளக்கம் தெளிவாக உள்ளது. அது மிகச் சரியானதே. அதிமுக என்னதான் திராவிடக் கட்சி என்று பெயர் இருந்தாலும் அது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என்கிற பிராமணர்களின் தலைமையில் பிராமணக் கட்சியாகவே உருமாறியிருக்கிறது. ஜெயலலிதா எனும் தனி நபர் இருக்கும் வரை அக்கட்சிக்கு பா.ஜ.கவோ இந்துத்துவ அமைப்புகளோ எந்த இடையூறும் செய்யப்போவதில்லை.

  ஆனால் அதற்கு மாற்றாக ஏன் ம.ந.கூ , சீமான் போன்றோர் ஏன் இருக்க முடியாது ? என்கிற வேறு கேள்வி எனக்கு எழுகிறது. மக்கள் நலக் கூட்டணி ஒரு புதிய வகை ஆட்களை, இதில் பாதிப்பேர் தமிழ்த் தேசியம் உணர்வு கொண்ட, குறிப்பிடத்தகுந்த, முற்போக்கு கொள்கைகளை முன்னெடுத்து பேசுபவர்கள். இவர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுப்பதில் மக்களுக்கு பல லாபங்கள் இருக்கிறது.

  இந்தியாவினுள் தமிழ்நாட்டையும் மற்ற மாநிலங்களையும் கரைத்துவிடும், அல்லது இந்தி மயமாக்கும் தேசியமயமாக்கலுக்கு எதிர் அரசியலை ம.ந.கூவில் இருப்பவர்களில் வைகோ, திருமா போன்றோர் எடுத்துப் பேசுகிறார்கள். சீமான் மிக வெளிப்படையாக தமிழின எழுச்சி பற்றிப் பேசுகிறார். அவரை இனவாதி என்று முத்திரை குத்தியாகிவிட்டது.

  கார்ப்பரேட் மயமாகிவிட்ட தி.மு.க தனது லாபங்களுக்காக தனது திராவிடக் கொள்கைகளையும் அடகு வைத்துவிட்டது. அதனால் அதை இன்னும் மாற்றாக முன்னிருத்த வேண்டுமா ? என்பது ஒரு கேள்வி. ஜெயலலிதாவை நீங்கள் எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் தி.மு.கவை ஆதரிக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.

 2. ஆளும் வர்க்க இயக்கங்களுக்குள்வேறுபாடுகள் இருப்பது உண்மையே.

  அது மாதிரி பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் உண்மையே. மக்களுக்கு எதிரான உலகமயமாக்கல்
  தனியார்மயமாக்கல்
  தாராளமயமாக்கலை தீவிரமாக செயல்படுத்துவதில் இருவருமே முன்னணியிலிருக்க ோட்டி ோடக்கூடியவர்களாக உள்ளனர்

  தனியார்மய
  தாராளமய
  உலகமய
  ொள்கைகளை செயல்படுத்தக்கூடியவர்கள் என்ற வகையில் இருவருமே எதிரிகளே என்பதுதான் உண்மை
  இன்றைய குறிப்பான அரசியல்
  ொருளாதார சூழ்நிலையில் இருவருமே மக்களால் விரட்டப்பட வேண்டியவர்களே.

  மேலும்
  தேர்தல் புறக்கணிப்பு செயலுத்தியை கையாளுபவர்களுக்கு இந்த ஒற்றுமையை புறந்தள்ளி வேற்றுமைகளை முன்னிறுத்துவது என்பது தேர்தல் புறக்கணிப்புக்கான செயலுத்திக்கு எந்த வகையிலும் இந்த பகுப்பாய்வு உதவக்கூடியதல்ல. மாறாக அந்த செயலுத்தியை பாதிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை, நம்மை திமுக ஆதரவாளராக சந்தேகித்தாலும் பரவாயில்லை என வேற்றுமைகளை முன்னிலைப்படுத்தி உங்களின் செயலுத்தியை பாதிக்கும் வகையில் இருந்தாலும் பரவாயில்லை என்பது

  தேர்தல் புறக்கணிப்பின் மீதான உங்கள்செயல்பாட்டை சந்தேகிக்கசெய்தாலும் பரவாயில்லை என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்

 3. வில்லவன், உங்களை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருக்கிறார்கள் விமர்சிக்கும் ‘நடுனிலை’ யாளர்கள். உங்கள் கடைசி பத்தி நேர்மைக்கு விடப்பட்ட சவாலுக்கான எதிர்வினையாக இறைஞ்சுதலாக முடிகின்றது.அது கட்டுரையின் அறிவார்ந்த வாதத்திற்கு முரணாக தனியே ஒட்டாமல் நிற்கிறது.ஆனால் கட்டுரையின் முழு வீச்சுக்கு முரணாக இருக்கின்ற இந்த பத்தியை மட்டுமாவது பரிசீலிக்குமாறு வேண்டுகின்ற ’பரிந்துரை’ தேவையற்றது என்பதே எனது கருத்தாக இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s