வாக்குப்பதிவு அறசீற்றம்- நிர்வாண விரும்பிகளுக்கு ஆடை அணிந்தோரின் வேண்டுகோள்.


சென்னைக்காரர்களைப் பற்றி ஒரு தர்மபுரிக்காரர் திட்டி போட்ட பதிவு ஒன்று வாட்ஸ்சப் குழுக்களில் உலவுகிறது. இதற்காகவா உங்களுக்கு வெள்ளத்தின்போது அரிசி போர்வையெல்லாம் கொடுத்தோம் எனும் அங்கலாய்ப்பில் தொடங்கி சொரணை கெட்டவர்கள் என சாபம் கொடுப்பதுவரை பல எதிர்வினைகள் அப்பதிவை தொடந்து நீள்கிறது.

சென்னைக்காரர்கள் எல்லா சவுகர்யத்தோடும் இருப்பதால் சோம்பேறியாகிவிட்டார்கள் எனும் கருத்துக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. ஷாப்பிங் மால்கள், பாலங்கள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் ஆகியவை வசதிகள் எனும் வரையறைக்குள் எப்படி வந்தது என்பதும் விளங்கவில்லை.

மற்ற ஊர்காரர்கள் சில வினாடிகள் சகித்துக்கொள்ளாத கூவம் நாற்றத்தில் வாழ சபிக்கப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் அங்கே இருக்கிறார்கள். ஓரிரு கிலோமீட்டரை கடக்க ஒரு மணிநேரம் ஆகும் இடங்கள் அங்கே உண்டு. நகர பேருந்தில் ”உட்கார்ந்து” பயணிக்கும் வாய்ப்பு பலருக்கு அங்கே கனவு. சம்பளத்தில் பெருந்தொகையை வாடகையாக கட்டி சேமிப்பை வீட்டு அட்வான்ஸ்சுக்கும் விடுமுறைகளை வீடு தேடியும் தொலைத்தவர்கள் அனேகம். சும்மா சினிமாவில் பார்ப்பதை வைத்து சென்னைக்காரர்கள் எல்லோரும் வசதியாக இருப்பதாக கருதி நியாயம் பேசுவது முட்டாள்தனம்.

விரலில் மை வைத்ததால் மட்டுமே நீங்கள் எல்லோரும் பகத்சிங் ஆகிவிட்டதாக நினைப்பா? பயிற்சி கொடுத்தால் நாய்கூட பட்டனை அமுக்கி ஓட்டுபோடும்.. இந்த மொன்னை வேலைக்கு இவ்வளவு எகத்தாளமா?

சரி நாங்கள் சோம்பேறிகளாகவும் சொரணை கெட்டவர்களாகவும் இருக்கிறோம். நீங்கள்தான் அவை எல்லாவற்றையும் மானாவரியாக வைத்திருக்கிறீர்களே.. கீழேயுள்ள கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.

80% மக்கள் வறுமையில் வாடும் நாட்டில் மொத்த மருத்துவ செலவீனத்தில் 15% சதவிகிதத்தை மட்டும்தான் அரசு செய்கிறது. அடையாறு புற்றுய்நோய் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் புற்றுநோயோடு ஜீவமரண போராட்டம் நடத்திக்கொண்டு காத்திருப்போர் பட்டியலில் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். சுகாதாரம் அடிப்பட உரிமைதானே, எங்கே விரலைத்தூக்கி காட்டும் நீங்கள் இந்த பிரச்சனைக்காக கையைத்தூக்கிக்கொண்டு ரோட்டுக்கு வாருங்கள் பார்க்கலாம்.

5 வருடம் ஆள்பவனை தெரிவு செய்வதில் அலட்சியம் கூடாதாம், சரிதான். ஆயுளுக்கும் நமக்கு உணவு உற்பத்தி செய்த விவசாயி நகரத்துக்கு கூலியாக போகிறான், லட்சக்கணக்கில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதற்கெல்லாம் பொங்க மறுக்கிறீர்களே ஏன்? தேர்தலுக்கு அறச்சீற்றம் விவசாயிக்கு வெறும் RIPயா?

நல்ல மதிப்பெண் எடுத்தும் கல்லூரியில் சேர வழியில்லை என அழும் மாணவர்கள் ஆண்டுதோறும் நாளிதழ் செய்திகளில் இடம் பெறுகிறார்கள். அவர்களுக்கு படிப்பை உறுதி செய்ய அரசுக்கு வக்கில்லை என்பதால்தான் அவர்கள் புரவலர்களை நாடுகிறார்கள். சற்றேறக்குறைய ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி. நூற்றுக்கணக்கான பள்ளிகள் இணைப்பு எனும் பெயரில் மூடப்பட்டாயிற்று, இன்னும் பல அதற்கான வரிசையில் நிற்கின்றன. போய் விரல் மையை காட்டி நான் கடமையை செய்துவிட்டேன், எங்கள் கல்வி உரிமையைக் கொடுன்னு கேட்டுப் பாருங்களேன்..

என் வாக்கும் என் உரிமை என பேசும் நீங்கள் எங்கள் ஊர் எங்கள் இயற்கை வளம் என சொல்லி கிரானைட் குவாரி முன்னால் ஆர்பாட்டம் செய்து காட்டுங்களேன்!!! நீங்கள்தான் தேசபக்தியையும் சொரணையையும் சொம்புல் மொண்டு குடித்தவர்கள் ஆயிற்றே?

20 கோடி பேருக்கு வசிக்க வீடில்லை, 70 கோடி பேருக்கு மூன்றாவது வேளை உணவில்லை, சரிபாதி அரசுப்பள்ளிகளுக்கு கழிப்பறை கிடையாது இவை எதையும் 100% சரிசெய்ய அரசிடம் நிதி இல்லை. ஆனால் 100% வாக்குப் பதிவு எனும் லட்சியத்துக்காக அரசு நூற்றுக்கணக்கான கோடிகளை இறைக்கிறது. மக்களின் உணவைவிட வாக்குப்பதிவு விளம்பரம் அத்தியாவசியம் என்பதை நீங்களும் ஏற்கிறீர்களா?

ஓட்டு போடும் அடிப்படை உரிமையை உறுதி செய்ய எல்லா வாய்ப்புக்களையும் அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதே போல மற்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அதனை எப்படி பெறுவது என்பது குறித்த விளம்பரங்களை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா? அல்லது அதனை நீங்கள் சொல்வீர்களா?

வாக்குப்பதிவு சதவிகிதம் உயர்ந்தால் ஜனநாயகம் வலுப்படும் எனும் கருத்துக்களை கமல்ஹாசன் முதல் அனைவரும் அடிபிறழாமல் ஒப்பிக்கிறீர்கள். கடந்த 25 வருடங்களில் வாக்குப் பதிவு சீராக உயர்ந்து வருகிறது. ஆனால் ஜனநாயகம் இன்னும் சீரழிந்துகொண்டிருக்கிறது. வாக்குக்கு பணம், ஊழல், அடக்குமுறைகள், வறுமை என எதெல்லாம் ஒழியும் என்கிறீர்களோ அவையெல்லாம் இந்த காலகட்டத்தில் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. எப்படி?

251 ரூபாய்க்கு ஸ்மார்ஃபோன், ஈமு கோழி வளர்த்தால் பலகோடிகள் லாபம், சென்னை அமிர்தாவில் படித்தால் ஃபாரினில் வேலை என எதற்கு விளம்பரம் அதிகமாக வந்தாலும் நம்பி ஏமாறும் கூட்டம்தான் இந்த 100% வாக்குப்பதிவு போதையில் இருக்கிறது. அவர்கள்தான் நீ ஏன் ஈமுக்கோழி வியாபாரம் செய்யவில்லை என வம்பிழுக்கிறார்கள்.

போகட்டும், நாங்கள் பொறுப்பற்றவர்கள், சோம்பேறிகள் சொரணையற்றவர்கள் என நீங்கள் தீர்ப்பெழுதிவிட்டபடியால் நாட்டு முன்னேற்றத்துக்கான ஒரு கோரிக்கையை உங்களிடம் வைக்கிறோம். குறைந்த வாக்கு பதிவு கொண்ட சென்னையில்தான் பல தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் இருக்கின்றன. அதிக வாக்குப் பதிவைக்கொண்ட தர்மபுரியில் தரித்திரத்தைத் தவிர எதுவுமேயில்லை. ஆகவே வாக்குப்பதிவின் மகிமையை உணர்ந்த தர்மபுரிக்கே இனி கார், சாப்ட்வேர் என சகல கம்பெனிகளும் இடம்பெயர வேண்டும் என நீங்கள் ஜனநாயக கடமையாற்றி தெரிவு செய்த அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துப் பாருங்களேன்…

நிர்வாணம் உங்கள் உரிமை மறுக்கவில்லை. ஆனால் உங்கள் விருப்பத்துக்காக எங்களால் அவிழ்த்துப்போட்டுவிட்டு ஆட முடியாது. எங்களுக்கான ஆடையும் அரசியலும் எங்கள் உரிமை. அதனை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் எங்களுக்கு உரிமை உண்டு. முதலில் அந்த அடிப்படை உரிமையை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஜனநாயக கடமைக்கான மார்க்கெட்டிங்கை அப்புறம் வைத்துக்கொள்ளலாம்.

Advertisements

“வாக்குப்பதிவு அறசீற்றம்- நிர்வாண விரும்பிகளுக்கு ஆடை அணிந்தோரின் வேண்டுகோள்.” இல் 9 கருத்துகள் உள்ளன

  1. இருக்கும் நிலைமை சீரடைய நாம் செய்யக்கூடிய ஒரே பணி வாக்களிப்பது தான். நம்மால் வேறு என்ன செய்ய முடியும் என்று சொல்கிறீர்கள்? வாக்களிக்கும் வேலையைக் கூடசெய்யாமல் அரசாங்கத்தைக் குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? முதலில் உங்கள் வேலையைச் செய்யுங்கள், பிறகு மற்றவரைக் குறை கூறலாம்!! வாக்களிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் சொல்லும் அனைத்து குறைகளும் நீங்கிவிடுமா? முதலில் வாக்களியுங்கள் பிறகு போராடுங்கள். அதுதான் முறை.

  2. வாக்கு செலுத்தாதற்கு வியாக்கீனம் வேற. ஓட்டு போடாம இருந்துட்டா மட்டும் நீங்க சொல்லறது நடந்திடுமா. அப்புறம் ஜனநாயகம்னா என்ன. சப்பக் கட்டு கட்டாதீங்க.
    பேசாம நீங்கள் ‘வினவு’ல சேர்ந்துடுங்க ப்ரோ.
    விஜயன்

  3. Thats y , guy is asking to vote chennai people to bring change.
    Sitting in home and writing/abusing the voter will not bring change.

  4. ஓட்டு போட வராதவர்களுக்கு இலவசம் தரக்கூடாது என்பதில் ஆரம்பித்து அன்றைக்கு ஓட்டு போடாமல் இருந்தவர்களின் விடுமுறைக்கு சம்பளம் பிடிக்கப்பட வேண்டும் என்பதுவரை தேசபக்தி பெருக்கெடுத்து பொங்கி வழிகிற நுரை அடங்கி விட்டது.அடுத்து இப்போது நோட்டாவிற்கு வாக்களித்தவர்களை போட்டு பின்னியெடுக்கிறார்கள்.அதாவது எந்த நோட்டாவை இவர்களெல்லாம் ஜனநாயகத்தின் புதிய ரட்சகனாக காட்டினார்களோ அதே போலி ஜனநாயக வியாதிகள் தான் இப்போது நோட்டாவை கொலைவெறியோடு ‘தூக்குடா’ என குரல் உயர்த்துகிறார்கள்.அந்த ஆத்திரத்திற்கு காரணம் ரொம்ப சின்ன புள்ளைத்தனமாக இருக்கிறது.அதாவது எவ்வளவோ பில்டப் கொடுத்தும், மன்றாடியும் தமக்கு போட்ட ஓட்டை விட நோட்டவிற்கு போட்ட எண்ணிக்கை கூடியிருப்பது தான் காரணமாக இருக்கிறது. நல்லவராக, படித்தவராக பண்பாளராக கல்வியாளர் வசந்திதேவியை வேட்பாளராக நிறுத்தியும் என்ன குறைகண்டு நோட்டாவிற்கு அதிகமாக போடுகிறார்களோ என்று ஆளூர் ஷா நவாஸ் உருக்கமாக கேட்கும் கேள்வியை, திருமா தனது வெற்றிக்கு தேவையாக இருந்த 87 ஓட்டை விட நோட்டவிற்கு அதிகளவில் விழுந்து தர்மத்தை நூலிழையில் காப்பாற்ற முடியாமல் போன துர்பாக்கிய நிலைக்கு காரணமாக நோட்டாவை சபிப்பதும் என ஆளாளுக்கு பத்திரிக்கையாளர் குமரேசன் முதல் தமிழிசை அக்கா வரை எல்லொருமே நோட்டவை தமது புதிய போட்டியாளராக (கொஞ்ச காலத்திற்கு முன் ஜெயலலிதாவோடு மட்டுமே தனக்கு போட்டி என்று இறுமாப்புடன் உரைத்த அதே கட்சியினர்) எண்ணி அலறுகிறார்கள்.ஆக நோட்டா மலருமுன்னே கசக்கி எறியப்பட வேண்டிய நிலையை எய்துகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s