கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?


கர்னாடகாவில் தமிழக வாகனங்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இருவகையான எதிர்வினைகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. அதாவது பெங்களூர் பாதுகாப்பாக இருக்கிறது எனும் feel good பதிவுகள் அல்லது இந்த கன்னடர்களே இப்படித்தான் எனும் பதிவுகள் வெளியாகின்றன. இரண்டும் உண்மை இல்லை எனும் பதிவுகளும் இருக்கின்றன அவையும் தெளிவான கர்நாடக சூழலை காட்டுவதாக இல்லாமல் காவிரியின் வரலாறும் கர்நாடகாவின் வன்முறைகளுக்கான பிண்ணனி பற்றிய புரிதல் அற்றவைகளாக உள்ளன. இதற்கான தீர்வுகள் என வரும் கருத்துக்கள் இன்னும் நகைப்பூட்டுபவையாக இருக்கின்றன. இரண்டு மாநில முதல்வர்களை வைத்து பேசுங்கள் என்கிறார் ஸ்டாலின். நதிகளை இணையுங்கள் என்கிறார் நடிகர் சிவகுமார். இன்னொருபுறம் கன்னடனைப் பார்த்து இன உணர்வை கற்றுக்கொள் என புலம்பும் தமிழ்தேசிய கருத்துக்களும் உலவுகின்றன்.

ஒப்பீட்டளவில் கர்நாடக மக்கள் அதிகம் நட்புணர்வுள்ளவர்கள், சாமானிய கன்னட மக்களிடம் நீங்கள் வெள்ளந்தித்தனமான தோழமையை சுலபத்தில் பெற முடியும். பெங்களூர் பேருந்து நடத்துனர்கள் தமிழக நடத்துனர்களைவிட பயணிகளிடம் அதிகம் இணக்கமாக இருப்பதை பார்க்கலாம். ஆனாலும் எப்போதும் கர்நாடகா சுலபத்தில் கலவரம் நடக்க சாத்தியம் உள்ள இடமாக (எல்லா காவிரி வேலைநிறுத்தங்களும் பெங்களூரில் ஒரு மிகையான அச்சத்தை பராமரிக்கும்) இருக்க காரணம் அந்த மக்களிடம் உள்ள அரசியல் அறிவீனம். பலருக்கும் தங்கள் மாநில அமைச்சர்களைக்கூட தெரிந்திருக்காது, கொள்கை சார்ந்தெல்லாம் அவர்கள் உரையாடி நான் பார்த்ததில்லை. கட்சியை தெரிவு செய்வதே பெருமளவில் சாதி அடிப்படையில்தான் அங்கே நடக்கும்.

//நீங்க எந்த கட்சி என்று நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, நாங்க ஒக்கலிகா சாதிக்காரங்க சார், பீஜேபிக்குதான் ஓட்டுபோடுவோம் என்றார் //

பெருங்கூட்ட உளவியல் மிகவும் பாமரர்களிடம் சுலபமாக வேலைசெய்யும். தமிழகத்தின் மரியாதை தெரிந்த ஊராக கருதப்படும் கோவை கலவரத்தின்போது கடைகளை சூறையாடியது தொழில்முறை ரவுடிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களும்தான். முஸ்லீம் பெண்கள் நடுவீதியில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகையில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து ரசித்தவர்கள் இறைச்சி வெட்டுவதைக்கூட பார்த்திராத குஜாராத் பெண்கள். வன்முறை செய்ய தூண்ட முடியாத மக்கள் கூட்டம் என்றொன்று இல்லை, அதற்கான நியாயத்தை கற்பிப்பதிலும் பரவலாக வன்முறையை ஆரம்பித்து வைக்கும் அளவுக்கு ஆள்பலத்தை வைத்திருப்பதிலும்தான் இருக்கிறது சூட்சுமம்.

கர்நாடகாவின் இந்த சிக்கலான சூழலுக்கு அடிப்படையாக 3 காரணிகளை கருதலாம். முதலில் மத மற்றும் இன அடிப்படைவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் சற்றே பெரிய எண்ணிக்கையிலான ஆள்பலம். வாட்டாள் நாகராஜ் போன்ற தாதாக்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் குரலுக்காக பாதி மாநிலம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாது, ஆனால் அது கர்நாடகாவில் நிகழ்கிறது. இரண்டாவது அரசியல் அறிவற்ற மற்றும் அதற்கு வழியற்ற மக்கள். மூன்றாவது இதற்கு எதிர்குரல் எழுப்ப போதுமான அளவில் ஆட்கள் இல்லாத சூழல். இங்கே தமிழ் தேசியவாதிகளில் சிலர் இனவெறியை தூண்ட முனையும்போதெல்லாம் வினாடி தாமதமில்லாமல் எதிர்க் குரல்கள் எழுகின்றன. கர்நாடகாவில் அது அனேகமாக இருக்காது. ஒருங்கினைப்பும் முன் தயாரிப்பும் இல்லாமல் தற்போதைய பெங்களூர் கலவரம் சாத்தியமே இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்னால்கூட பெரிய அளவிலான எதிர்ப்பை கர்நாடகா சந்தித்தது, கிட்டத்தட்ட மாண்டியா 12 நாட்கள் முடங்கியது. அப்போதுகூட இத்தகைய கலவரம் நிகழவில்லை.

// கன்னட டிவி ஒன்றில் பேசிய விவசாய சங்க பிரதிநிதி எங்கள் ஊர் மழையில் அவர்கள் பங்கு கேட்கிறார்கள், தமிழகத்தில் பெய்யும் மழையில் ஒரு சொட்டுகூட நமக்கு வராது… தண்ணீருக்கு ரிவர்ஸ் கியர் கிடையாது என ரொம்ப சீரியசாக பேசுகிறார். அதே விவாதத்தில் அமர்ந்துகொண்டு நதிநீர் பங்கீட்டு சட்டங்களை விளக்காமல் இருந்தார் ஜெயா வழக்கில் அச்சமின்றி வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா//

தமிழகத்திலும் முஸ்லீம்களுக்கு எதிராக வெகுமக்களின் மௌனத்தின் வழியேயான வன்முறை இருந்தது. அதுவே அவர்களுக்கு எதிரான அரச வன்முறையின் ஆதாரமாக இருந்தது. இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் உணவில்லாமல், மருந்தில்லாமல் மடிந்துபோன லட்சக்கணக்கான குழந்தைகளின் மரணத்தின் பின்னால் இருப்பது அமெரிக்கர்களின் மௌனமும்தான். குஜராத் கலவரத்தின்போது இந்தியா முழுவதும் இருந்தது அதுதான். இப்போது காஷ்மீர் பெல்லட் குண்டு தாக்குதல்களை இந்தியா அமைதியாய் கடப்பதும் வன்முறையின் passive வடிவம்தான். இவை எல்லா இடங்களிலும் இருக்கிறது, கர்நாடகாவில் வன்முறையை செயலில் காட்ட ஒரு கூட்டம் வளர்த்துவிடப்பட்டிருக்கிறது. நமக்கு அது இல்லை அல்லது இன்னும் இல்லை அல்லது போதுமான அளவுக்கு இல்லை, அதற்கு எதிராக சிந்திக்கவும் பேசவும் செயல்படவும் நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள், அது அங்கே இல்லை அல்லது போதுமான அளவு இல்லை.

இந்த கலவரத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கப்போவது பாஜக, தண்ணீர் கொடுக்காதே என உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் எதிர்ப்பது எடியூரப்பாவும் அவர் கட்சியும், வினாயகர் சதுர்த்திக்காக பல அடிப்படைவாத இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்னால்தான் ஒன்றுகூடியிருக்கிறார்கள். இப்போது நடந்திருப்பது நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கலவரம். இந்த புள்ளிகளை இணைத்தால் உங்களுக்கு பிரச்சினையின் அடிப்படை புரியும். இதனை எதிர்க்க தெரியாத மற்றும் முடியாத மக்களால் ஒட்டுமொத்த மாநிலமும் ஒரு மோசமான அடையாளத்தை சுமக்கிறது. (பிரச்சினை ஏதும் இல்லை எனும் பிரிவினர் உயர் மத்தியதர வகுப்பினர், நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தவிர வேறெந்த சிக்கலும் இவர்களை குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பதில்லை… குறிப்பாக மனிதர்களால் செய்யப்படும் பாதிப்புக்கள்).

// ஊருக்குள் வரும்போது தமிழில் பேசாதே என தன் தமிழ் நண்பருக்கு எச்சரிக்கை செய்த கன்னட இளைஞர், இருவரும் இணைந்திருக்கும் குழுவில் “ரத்தத்தைக் கொடுப்போம், காவிரியைத் தரமாட்டோம்” எனும் வாசகத்தை பகிர்கிறார்//

தமிழ் தேசிய இயக்கங்கள் குறிப்பிடும் கன்னட இன உணர்வு என்பது அங்கிருக்கும் முட்டாள்த்தனம் மற்றும் பயத்தின் கூட்டு வெளிப்பாடு. உண்மையில் அதனால் கன்னடர்களுக்கு எந்த பலனும் கிடையாது. பெங்களுர் மைசூரைத் தவிர்த்து வேறெந்த இடத்திலும் வளர்ச்சி ஏற்படாத மாநிலம் அது. விவசாயிகளுக்காக எனும் பெயரில் ஒரு மாநகரம் அடிக்கடி முடக்கப்படும் மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பெங்களூரின் நிலமும் வளமும் ரெட்டிகளாலும் மார்வாடிகளாலும்தான் ஆளப்படுகிறது, கன்னடர்களெல்லாம் அடிமை வேலைக்குத்தான் இங்கு போட்டியிட்டாக வேண்டும். ஓசூரில் கட்டிட வேலை செய்யும் மாண்டியா பகுதி விவசாயக்குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் சிறு நில உடமையாளர்கள் என்பதையும் விவசாயம் பொய்த்ததால் இந்த கூலிப்பணிகளுக்கு வந்தவர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இவையெல்லாம் நாம் எதிர்மறையாக கர்நாடகாவிடம் இருந்து கற்க வேண்டியவை. அரசியல் அறிவீனமும், இன மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கான கிடைத்திருக்கும் எதிர்ப்பு குறைவான பரப்பும்தான் ஒரு மாநிலத்தை வளரவிடாமல் வைத்திருக்கிறது. சிறு எண்ணிக்கையிலான அராஜகவாதிகளின் செயலை கண்டிக்க முடியாத பிற மக்கள் அதற்கான மொத்த அவமானத்தையும் சுமக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகும் பிள்ளையார் பொறுக்கிகளும் அரசியல் பிரக்ஞையற்ற தலைமுறையும் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும் அறிகுறிகள். இவற்றை ஒழிக்காவிட்டால் கர்நாடகாவின் நிலைதான் நமக்கும். (விவசாயம் அழிந்துபோகவிருக்கும் நிலையிலும் தஞ்சாவூரில் வினாயகன் ஊர்வலம் நடக்கிறது எனும் செய்தியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)

நேர்மறையாகவும் அவர்களிடம் கற்க சில விடயங்கள் இருக்கிறது. அங்கே அமைச்சர்களையும், முதல்வரையும்கூட சாதாரண மக்கள் எளிதில் சந்திக்க முடியும். மைசூர் சாலை விரிவாக்கப் பணிகளின்போது நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் “நான் பணம் தருகிறேன், உங்கள் வீட்டை காலி செய்வீர்களா? என அப்போதைய முதல்வர் எடியூரப்பாவிடம் வினவினார் ஒரு விவசாயி (அப்போது விகடனில் இந்த செய்தி வெளியானது). முதல்வருக்காக மணிக்கணக்கில் சாலையை மூடிவைக்கும் அரச ரவுடியிசத்தை நான் பெங்களூரில் கேள்விப்பட்டதில்லை. இப்போதுகூட பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தராமையா நின்றுகொண்டிருக்கும்போது மாநில உள்துறை அமைச்சர் உட்கார்ந்துகொண்டு “சொந்தமாக” பதில் சொல்கிறார். தமிழகத்தில் மதச்சார்பற்றவராக காட்டிக்கொள்வது ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியமோ அத்தனை அவசியமானது அங்கே ஒரு அரசியல்வாதி எளிமையானவனாக இருப்பது.

தமிழகத்தில் சாதிச்சங்கங்கள் வலுவடையவும் கர்நாடகத்தில் இனவாத குழுக்கள் வலுவடையவும் அடிப்படையாக இருப்பது மதவாத இயக்கங்கள். இரு இடங்களிலும் அவை வேறு வேறான வழிகளில் தங்கள் நரவேட்டையை நடத்துகின்றன. மக்களின் அறிவுக்குத்தக்கவாறு அவற்றின் வினைவேகம் மாறுபடுகிறது. இவற்றை எதிர்கொள்ள நாம் இன்னும் தீவிரமான அரசியல் அறிவுள்ள சமூகத்தை அமைக்க உழைக்க வேண்டும். நிறைவாக சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது, லட்சக்கணக்கான மக்களை அச்சமூட்டி எக்காளமிடும் போலித்தனமான கர்நாடக ஒற்றுமையைவிட கருத்து சொல்லவும் பயமின்றி நடமாடவும் எல்லா மக்களையும் எப்போதும் அனுமதிக்கும் தமிழக ஒற்றுமையின்மை மேலானது. இரண்டு தரப்பையும் வெறுக்காமல் இருக்கவும் இரண்டு தரப்பில் இருந்து கற்கவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

(இது காவிரிப் பிரச்சினை பற்றிய பதிவல்ல. கர்நாடகா பற்றிய எனது அறிவுக்கெட்டிய பார்வை மட்டுமே. அவை சரியான விளக்கமாக இல்லாமல்போக எல்லா வாய்ப்பும் உண்டு என்பதை வாசிப்பவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். )

Advertisements

“கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?” இல் 8 கருத்துகள் உள்ளன

 1. வில்லவன்,

  எனக்குத் தெரிந்த வரை,
  இருதரப்பினரையும் –
  இயன்ற அளவு சரியாகவே
  எடை போட்டிருக்கிறீர்கள்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. \\\ லட்சக்கணக்கான மக்களை அச்சமூட்டி எக்காளமிடும் போலித்தனமான கர்நாடக ஒற்றுமையைவிட கருத்து சொல்லவும் பயமின்றி நடமாடவும் எல்லா மக்களையும் எப்போதும் அனுமதிக்கும் தமிழக ஒற்றுமையின்மை மேலானது. இரண்டு தரப்பையும் வெறுக்காமல் இருக்கவும் இரண்டு தரப்பில் இருந்து கற்கவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன. \\\

  100 / 100 சதவிகிதம் உண்மை. நன்றி வில்லவன்

  M. செய்யது
  துபாய்

 3. வில்லவன்,
  எனக்கு பைபிள் வசனங்களில் எந்த நம்பிக்கையும் பிடிப்பும் இல்லையென்றாலும் நான் ஒரு கிருஸ்தவ பள்ளியில் பயின்ற பால்ய நினைவில் ”…பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்களாயிருக்கிறார்களே…” என்கிற வசனம் என் மனதில் பல வேளைகளில் மின்னலிடும்.ஏனென்றால் நம்மை இடர் செய்யும் மனிதர்களிடம் பல சமயங்களில் அவர்கள் ’அறியாமல்’ செய்கிறார்களே என்கிற பரிதாபம் தோன்றும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் மக்கள் கடைபிடிக்கிற மவுனம் கூட குற்றமாகும் வாய்ப்பிருக்கிறது தான்.என்றாலும் கூட அறியாமையை கட்டி எழுப்பி அதனை பராமரிப்பதில் தான் எல்லா மக்கள் விரோத அமைப்புகளும் காலம்காலமாக செய்துவருகின்றன.குஜராத்தின் 90% சானல்கள் பக்தி போதையை மட்டுமே விற்று வருகின்றன என்ற யதார்த்தம் அம்மக்களின் அறிவியல் பார்வையற்ற தன்மையை உணர்த்துகின்றதே.அங்கு நிகழ்த்தப்பட்ட மதவெறி தாக்குதல்களின் மவுன சாட்சியாக மக்கள் நின்றதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ? எனவே,
  ”மக்களின் அறிவுக்குத்தக்கவாறு அவற்றின் வினைவேகம் மாறுபடுகிறது. இவற்றை எதிர்கொள்ள நாம் இன்னும் தீவிரமான அரசியல் அறிவுள்ள சமூகத்தை அமைக்க உழைக்க வேண்டும்”
  எனும் உங்களது வார்த்தைகள் பெரியார் பிறந்த மண் என்று பெருமிதம் போதாது என்பதை சரியாகவே உணர்த்துகிறது.என்னுடைய கணிப்பில் மிக துல்லியமான முறையில் இரு சமூகத்தை எடை போட்டிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

  இதை படித்து முடித்த பின் அண்டை நாடான பாகிஸ்தானின் மக்களைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்கிற என் ஏக்கம் அதிகரிக்கிறது.போலி தேசபக்தி எழுத்துக்களும் பேச்சும் அவர்களை ஒரு வெறிபிடித்த கும்பலாக சித்தரிக்கவே முனைந்திருக்கின்றன.அவர்களை ஒரு சக மனித சமூகமாக பலம் பலவீனங்களோடு அறிந்து கொள்ள வாய்ப்பு தரும் எழுத்து எதனையும் படித்திருந்தால் எனக்கு பரிந்துரைக்கலாம்.

 4. நன்றி மானுடன், பாகிஸ்தான் மக்கள் பற்றிய நேர்மையான எழுத்துக்கள் எதையும் நான் வாசித்ததில்லை. ஆனால் அங்கிருந்து இங்கு வருவோரை பார்த்தவர்கள், வெளிநாடுகளில் இணைந்து பணியாற்றுவோர், எல்லையில் வசிப்போர் மற்றும் அங்கு பயணிப்பவர்கள் யாரும் பாகிஸ்தானியர்களை மோசமானவர்களாக பார்ப்பதில்லை. பாகிஸ்தானை விடுங்கள், உள்ளூர் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பார்க்கும் பழக்கமே இங்கு இன்னும் மாறவில்லையே??

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s