மோடி தர்பார் – மாமன்னர் வாழ்கவென்பீர், மாண்போடு மரணிப்பீர்.


நரேந்திர மோடி பணத்தாள் மதிப்பிழப்பை அறிவித்த சில நாட்களில் எனது தொடர்பு வட்டத்தில் இருந்த நடுத்தரவர்க இளைஞர்கள் பலரும் நான் மிகையாக எதிர்வினையாற்றுவதாகவும், கற்பனையான பின்விளைவுகளை அனுமானிப்பதாகவும் சொன்னார்கள். நல்ல நோக்கத்தோடு எடுக்கப்படும் நடவடிக்கையை தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக துவக்கத்திலேயே எதிர்ப்பதாக கூறி தினமலர், தினமணி மட்டும் வாசிக்கும் அறிவுஜீவிகள் தம் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தினார்கள். ஒரு மாதம் கடந்த பிறகு மெல்லிய முனகல் ஒலி அந்த வட்டாரத்தில் இருந்து கேட்க துவங்கியது. இப்போது அவர்கள் பரிதாபமாக கேட்பது ”இதனால பிரயோஜனமே இல்லைன்னு சொல்றீங்களா, ஜனவரில இப்போ உள்ள பிரச்சினையெல்லாம் சரியாயிடும்ல?” என்பதுதான்.

அவர்களில் யாரும் இப்போதுகூட மோடியை குற்றம்சாட்ட தயாராய் இல்லை. மோடியை வைத்து பெரிய கனவுகளை கண்டுவிட்ட அவர்கள் அந்த ஏமாற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். மோடியை விட்டுக்கொடுப்பதால் தாம் கருத்துரீதியாக அம்மணமாக்கப்படுவதாக உணர்கிறார்கள் என அவதானிக்கிறேன். இடதுசாரிகள் ஆரம்பத்தில் எழுப்பிய பல கேள்விகளை அவர்கள் இப்போது எழுப்புகிறார்கள். ஆனாலும் அவர்களால் இதனை மோடியின் தோல்வியாக ஏற்க இயலவில்லை. தன் பெயரைக் கெடுக்கும் ஒரு நடவடிக்கையை ஏன் மோடி எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கடைசி தற்காப்பு வாதமாக இருக்கிறது.

பக்தர்களின் கேள்வி இதுவென்றால் மோடி பற்றிய சரியான புரிதல் கொண்டவர்களின் கேள்வி வேறொன்றாக இருக்கிறது. மோடியின் சித்திரவதைகளை அனுபவிக்கும் இந்த மக்கள் எப்படி அவரை இன்னமும் எதிர்க்காமல் இருக்கிறார்கள் என்று வினவுகிறார்கள் அவர்கள். இந்த கேள்வியை நாம் எளிதாக புறந்தள்ள இயலாது. பொதுக்கருத்து உருவாக்கத்தின் மிக முக்கிய ஆதாரம் இந்த வர்கம்தான். இவர்களையோ இவர்களது கருத்துக்களையோ அலட்சியம் செய்துவிட்டு நம்மால் மோடியின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள இயலாது. ஆகவே இந்த இரண்டு கேள்விகளுக்கும் நாம் பதில் தேடியாகவேண்டும்.

Disclaimer : மனிதர்களின் நடத்தை மற்றும் அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் நான் விற்பன்னன் அல்ல. இந்த இரண்டிலும் நாம் அனுமானத்தின் அடிப்படையில்தான் முடிவுக்கு வர இயலும். அதனை பாமரர்களும் செய்ய இயலும் என்பதும் அது சரியாகவும் இருக்கலாம் எனும் சாத்தியத்தின் அடிப்படையில் மட்டும் இந்த பதிவை வாசிக்கவும்.

தனது அரசியல் வாழ்வையே சிதைக்கவல்ல ஒரு முடிவை ஏன் மோடி எடுக்கவேண்டும் எனும் கேள்வியை பரிசீலிக்கலாம். மோடியின் பெயரை தக்கவைக்க இதுவரை செய்யப்பட்டவை எல்லாமே எந்த நல்விளைவுகளையும் கொடுக்காத வெறும் ஃபீல் குட் நடவடிக்கைகள்தான். ஆனால் விளைவுகள் எல்லாமே பின்னோக்கித்தான் நாட்டை நகர்த்துகின்றன. இந்த மனஎழுச்சி வைத்தியத்துக்கும் ஒரு கால எல்லை இருக்கும். அது குறித்த பயம் மோடி கும்பலுக்கு இல்லாமல் இருக்காது.

அதனை சமாளிக்க ஏதேனும் புதிதாக செய்யவேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு தொடர்ந்து இருக்கிறது. அறிகுறிகள் தீவிரமாகிக்கொண்டிருக்கும் வேளையில் நோய் தீர்ந்துகொண்டிருக்கிறது எனும் வாக்குறுதி மதிப்பிழந்துபோகும். அதனை நேர் செய்ய மோடிக்கு இரண்டு வாய்ப்புக்கள் உள்ளன. பெரிய அளவில் கலவரங்களை கட்டவிழ்ப்பது அல்லது விணியோகம் செய்யப்பட்ட கனவின் வேலிடிட்டி காலத்தை அதிரடியான காரியங்கள் மூலம் நீட்டிப்பது. கலவரத்தின் சாதகங்களை மோடி அறிந்தவர் என்றாலும் அதன் பின்விளைவுகளையும் அவர் அறிந்திருப்பார். வெளிநாட்டுகளில் தனது பெயர் கெடுவதை ஒரு ஊர்சுற்றி ஊதாரியான மோடியால் ஏற்க இயலாது, மேலும் அவர் பதவிக்காக முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களும் விரும்பாது.

ஆகவே பாதுகாப்பானது இரண்டாவது வாய்ப்பு மட்டும்தான். அதிலும் அனேக துருப்பு சீட்டுக்களை மோடி பயன்படுத்திவிட்டார். இனியும் அதே பாணியை பயன்படுத்தினால் எடுபடாது. அடுத்த நடவடிக்கை திகைக்க வைப்பதாகவும், பெரிய அளவில் கவனம் பெறுவதாகவும் இருந்தால் நல்லது. இந்த அடிப்படையிலான யோசனைகளை கொடுக்க மோடியை சுற்றி இருப்பவர்களும் மோடி மாதிரியே அறிவுபூர்வமாக சிந்திக்கத்தெரியாத மூடர்களாகத்தான் இருப்பார்கள். எந்த சர்வாதிகாரியும் ஒரு அறிவாளியை ஆலோசகராக வைத்துக்கொள்வதில்லை, வேலைக்காரனாகவே பயன்படுத்திக்கொள்வார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடியோ அவரது ஆர்.எஸ்.எஸ் சகாக்களோ பரிந்துரைத்திருந்தால் அதனை எதிர்த்துப்பேச எந்த வேலைக்காரனாலும் முடியாது. மாமன்னர் யோசனையை நிராகரிக்க எந்த அறிவுள்ளவனும் விரும்பமாட்டான். இந்த பரிந்துரை கார்ப்பரேட் உலகில் இருந்து வந்திருப்பதற்கான சாத்தியம் குறைவு (குறைவு மட்டுமே). பொருளாதாரத்தை முற்றாக முடக்கி பொன்முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்க்கும் வேலையை மோடியின் ஸ்பான்சர்கள் செய்வார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் இப்படியான யோசனைகள் கூமுட்டை குரங்களின் கும்பலான ஆர்.எஸ்.எஸ்சுக்கு கட்டாயம் வரும்.

பிழைப்புக்காக சாமியாராகும் நபர்கள் சமயத்தில் பெரிய சாமியாராகிவிடுவார்கள். அப்போது பார்க்கும் பக்தர்களின் பணிவைக்கண்டு தம்மையே ஒரு கடவுளாக கருதிக்கொள்வார்கள். சாய்பாபா, ஷேகோ அஷஹரா (ஜப்பான் சைக்கோ சாமியார், இப்போது ஜப்பான் சிறையில் இருக்கிறார்), கல்கி, நித்யானந்தா என பலரையும் உதாரணமாக கொள்ளலாம். ஒரு நிர்வாகிக்குரிய எந்த தகுதியும் அற்ற மோடி 125கோடி மக்களுக்கு தலைமைப் பொறுப்பை அடையும்போது தன்னை ஒரு கடவுளாக கருதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவர் தன்னை பகவானாக கருதிக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டால் பூசாரிகள் கன்னத்தில் போட்டுக்கொண்டு அரோகரா போடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த யோசனை குறித்த எச்சரிக்கைகள் முதலாளிகளுக்கு சென்றிருக்கலாம். ஆனால் இது மோடியின் அதீத சுயமோகத்தின் விளைவாக இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம். ரிசர்வ் வங்கி செய்திருக்க வேண்டிய இந்த நடவடிக்கை இது. ஆனால் அவர்கள் இந்த நடவடிக்கைக்கான சிறிய முன் தயாரிப்பில்கூட ஈடுபடவில்லை என்பது ஆதரபூர்வமாக அம்பலமாகியிருக்கிறது. சக்தி காந்ததாஸ் வெளியிட்ட ஒரு பத்திரிக்கை செய்தி ஆர்.பி.ஐ தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை ஒரு துலக்கமான உதாரணம். 2016-17 ஆம் ஆண்டு தேவைக்காக அதிக எண்ணிக்கையில் 500, 1000 (பழைய) ரூபாய் நோட்டுக்கள் தயாரிக்க ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்திருக்கிறது, அதுவும் ரகுராம்ராஜன் விலகும் தருவாயில். அமுலாக்கத்தில் இருக்கும் அவசரம், திட்டமிடலுக்கான எந்த சுவடுமற்ற செயலாக்கம் ஆகியவை இதனை உறுதிப்படுத்துகின்றன. ஏனைய சகாக்களின் பொறுப்புத் துறப்பு இன்னுமொரு ஆதாரம்.

இப்போது வரிசையாக பூசாரிகள் ஆண்டவன் மீது பழிபோட்டு ஒதுங்கத்துவங்கிவிட்டார்கள். அருந்ததி பட்டார்ச்சார்யா மொத்த பொறுப்பும் ரிசர்வ் வங்கியுடையதுதான் என்று சொல்லிவிட்டார். 5000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வதற்கு வந்த கட்டுப்பாட்டுக்கு அருன் ஜெயிட்லீயின் எதிர்வினை மோடிக்கு விடுத்த அப்பட்டமான எச்சரிக்கை. பணம் வருவதை தடுக்க அரசு விரும்பியபோது அவர் பயப்படாமல் பணம் கட்டுங்கள் என ஊக்கப்படுத்தினார். மோடியாண்டவரே தோல்விக்கு காரணம் தேட ஆரம்பித்திருப்பதற்கு அறிகுறிகள் வாரணாசி கூட்டத்தில் தெரிந்துவிட்டது. நான் ஏமாந்துவிட்டேன் எனும் வார்த்தையை அவர் இப்போது பயன்படுத்தியிருப்பதை கவனியுங்கள். இவையெல்லாம் மோடி இந்த நகர்வை தன் மீதான அதீத நம்பிக்கையில் மட்டும் துவங்கியிருப்பதை காட்டுகின்றன. ஒரு கார்ப்பரேட் முடிவின் குறைந்தபட்ச முன்தயாரிப்புக்கள்கூட இந்த செயல்படுத்தலில் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

இரண்டாவது கேள்வி பக்தர்களின் பிடிவாதமான பற்றுதல்.

மனித மனதின் உள்ளார்ந்த விருப்பம் தனது தேவைகளை எந்த சிரமமும் இல்லாமல் பெற்று இன்பமடைவதுதான் (seeking pleasure without pain) என்கிறார் நவீன உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட். வேலையை இலகுவாக்கும் பல கண்டுபிடிப்புக்களின் ஆதார உந்துதல் இந்த எண்ணம்தான். இது எதிர்மறையாகவும் வேலை செய்யும்.

அடிப்படைத் தேவைகளைத் தாண்டி வாழ்வதற்கான தேவை ஒன்றை உருவாக்கிக்கொள்வதே உங்களை உயிரோடு வைத்திருக்கும் என்கிறார் உளவியல் அறிஞர் விக்டர் ஃபிராங்க்ளின். எல்லாம் இருந்தும் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்தால் நாம் நீண்டநாட்கள் வாழமுடியாது. ஆகவேதான் பலரும் ஏதோ ஒரு தொடர் செயல்பாட்டிலோ, கருத்தியல் அடையாளத்திலோ அல்லது லட்சியத்திலோ தம்மை பொருத்திக்கொள்கிறார்கள்.

போலச்செய்தல் (இமிடேஷன்), தூண்டல் – துலங்கல் (கிளாசிக்கல் கண்டிஷனிங் – ஐவன் பாவ்லவ்) மற்றும் வெகுமதி – தண்டனை (ஆப்பரண்ட் கண்டிஷனிங்- ஸ்கின்னர்) ஆகிய விதிகள் அடிப்படையிலேயே மனிதர்களின் கற்றல் பெருமளவு நடக்கிறது. நாம் மற்றவர்களது செயலை நகலெடுத்து செயல்படுவதன் மூலமும், ஒரு நிகழ்வு மற்றும் விளைவு ஆகியவற்றை பொருத்திப்பார்த்து செயல்படுவதன் மூலமும் (மணி ஒலித்ததும் சாப்பாட்டுக்கு தயாராகும் இயல்பு), ஒரு செயலை செய்வதால் கிடைக்கும் வெகுமதி மூலம் அதனை மீண்டும் செய்யவும் அதே செயலை செய்தால் கிடைக்கும் தண்டனை மூலம் அச்செயலை மீண்டும் செய்யக்கூடாது எனும் கற்றலையும் நாம் பெறுகிறோம்.

மேற்சொன்ன மூன்று விதிகளையும் ஒரு சங்கிலியாக பொருத்திப்பாருங்கள். நமது தேவைகளை எந்த சிரமமும் இல்லாமல் பெற விரும்புகிறோம். அதற்கான வழியை பொதுக்கருத்தின் அடிப்படையில் தெரிவு செய்கிறோம். எதிர்க்கருத்துக்கள் மீது எழும் விமர்சனங்களையும் தாக்குதல்களையும் பரிசீலித்து தற்பாதுகாப்புக்காக அதனை புறக்கணிக்கிறோம். அந்த பொதுக்கருத்தை புகழ்வதன் மூலமும் பரப்புவதன் மூலமும் நமக்கென ஒரு அடையாளத்தை பெற்றுக்கொள்கிறோம்.

நமக்கு ஒரு பாதுகாப்பான வசதியான வாழ்வு அதிக சிரமமில்லாமல் தேவைப்படுகிறது. எது பாதுகாப்பான வாழ்வு என்பதையும் நாம் சமூகத்தைப் பார்த்தே முடிவு செய்கிறோம். அதற்கான வழியாக ஒரு மீட்பரை எதிர்பார்த்து காத்திருக்கவும் நாம் மதங்கள் கதைகள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறேம். இப்போதைய வாழ்வியல் துயரங்களை துடைத்து நல்வாழ்வளிக்கும் மீட்பராக மோடியை முன்னிருத்தி பிரச்சாரங்கள் துவங்கி அது பொதுக்கருத்தாக காட்டப்படுகிறது. அதனை பொதுக்கருத்து என நம்பிப் போகும் கூட்டத்தால் அது பொதுக்கருத்தாவே மாற்றப்படுகிறது. காரணம் அதற்கு தேவைப்படும் உழைப்பு எளியது, ஓட்டுபோடும் வேலையைவிட வேறெதையும் அது கோரவில்லை. ஒரு குடிகாரன் தான் ஏன் குடிக்கிறேன் என்பதற்கு காரணங்களை கண்டுபிடிப்பதைப்போல இந்த கருத்துக்கும் வல்லரசு, தேசபக்தி, ஊழல் ஒழிப்பு என பல காரணங்களை இந்த கூட்டம் கற்பித்துக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் அதன் பலனைவிட என் நம்பிக்கை பொய்யில்லை என நிரூபிக்க விழையும் தன்முனைப்பு இந்த கூட்டத்தை செலுத்துகிறது – அது இப்போது வெறும் முடிவல்ல அவர்களின் அடையாளம்.

 

இன்னபிற கூடுதல் காரணங்கள்.

ஒரு அபாயத்தின் போது உயிரினங்களின் எதிர்வினை எதிர்தாக்குதல், பின்வாங்கி ஓடுதல் மற்றும் உறைந்துபோய் நிற்பது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக அமையும். எதிரில் இருப்பது எளிய இலக்கு என்றால் சண்டையிடுவது, பெரிய ஆபத்தாக இருந்து தப்பி ஓட வாய்ப்பிருந்தால் பின்வாங்குவது அதற்கும் வாய்ப்பில்லாவிட்டால் உறைந்துபோய் நிற்பது (இதுவும் ஒரு தப்பிக்கும் உத்தியே, அசைவு இல்லாவிட்டால் கண்டுபிடிக்கும் வாய்ப்பு குறைவு). நவீன வாழ்க்கைமுறை நம்மை சமூகத்தில் இருந்து துண்டித்துக்கொண்டு வாழ பயிற்றுவித்திருக்கிறது. சமூக விலங்கான மனிதர்கள் தனித்திருக்கும்போது மிக பலவீனமாக உணர்வார்கள். ஆகவே அவர்கள் எந்த ஒரு அபாயத்தின்போதும் பின்வாங்கவோ உறைந்து நிற்கவோதான் வாய்ப்புகள் அதிகம். (கால் உடைந்த நாய் யாரைப் பார்த்தும் குரைக்காது, கவனித்திருக்கிறீர்களா)

அகமண முறை இந்தியாவில் ஒரு பிரத்தியோக அறிவுத்திறன் தேக்கத்தை உருவாக்கியிருக்கிறது. ஒப்பீட்டளவில் பயந்த சுபாவமுடையோர் இங்கே மிக அதிகம். ஆங்கிலேயர்கள் இங்கே நடத்தி வெற்றி பெற்ற ஒரு போரின் குறிப்பொன்று இப்படி சொல்கிறது “வெற்றிக்குப் பிறகு வீதிகளில் நாங்கள் செல்கையில் வேடிக்கை பார்த்த மக்கள் எண்ணிக்கை எங்களைக் காட்டிலும் மிக மிக அதிகம். அவர்கள் எல்லோரும் கல்லெடுத்து வீசியிருந்தாலே நாங்கள் கொல்லப்பட்டிருப்போம். ஆனால் அப்படி நடக்கவில்லை”. ஒரு பழக்கம் மனித இயல்பை மாற்றுமா என கேட்டால், அதற்கான வாய்ப்பிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று அங்கே அதிகம் பயன்படுத்தப்பட்ட காரீயம் எனும் உலோகம். அது பலரது உடல் மற்றும் மூளைத்திறனை சிதைத்தது.

இந்த சிரமங்களுக்கு ஊடேயும் எப்படி முரட்டு பக்தர்களால் மோடிக்கு முட்டுக்கொடுக்க முடிகிறது? விரக்தியான மனநிலையின் முதல் வெளிப்பாட்டு எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத நிலை, அடுத்தது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது அடுத்தது தற்கொலை. உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத நிலையில் அந்த விரக்தியும் சேர்ந்து காயப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வலி உணர்வையாவது அனுபவிக்கலாம் எனும் அடுத்த நிலைக்கு மனம் நகர்வதன் விளைவு இது. தலைவலி தைலம் அந்த வலிக்கு மாற்றாக இன்னொரு விதமான எரிச்சலை அந்த இடத்தில் உருவாக்குவதால் நாம் பழைய வலியில் இருந்து சற்றே தப்பிக்கிறோம் இல்லையா அப்படித்தான் இதுவும். எதற்கென்றே தெரியாமல் மோடியை ஆதரிப்பவர்களது தற்போதைய எதிர்வினை என்பது அப்பட்டமான விரக்தியின் வெளிப்பாடு.

இவற்றின்மூலம் தனிப்பட்ட காரணிகள் மட்டுமே இத்தகைய பின்னடைவுக்கு காரணம் என பொருள்கொள்ள முடியாது. ஆனால் இவையும் அதில் பங்கேற்கின்றன. அகக்காரணிகள் செல்வாக்கு குறித்து நாம் கவனம் செலுத்தலாம் ஆனால் செயல்பாட்டில் இருந்து விலகுவதற்கு இதனை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. தீவிரமான வைதீக நம்பிக்கைகளில் ஊறிப்போன ஒரு பிற்போக்கு சமூகத்தில்தான் பெரியார் வெற்றிகரமாக பணியாற்றினார்.  கம்யூனிச புரட்சி விரைவில் நடக்கும் என்பதை 1917 வரை கம்யூனிஸ்ட்டுக்களே நம்பியிருக்க மாட்டார்கள். நிஜமான புரட்சி என்பது விளைவுகளை குறிப்பதல்ல, அது உழைப்பை மட்டுமே குறிப்பது வெற்றியும் தோல்வியும் அதன் அடையாளங்கள் மட்டுமே.

ஒரு பெரிய மாற்றத்திற்கு 100% மக்கள் பங்கேற்பு அவசியமில்லை, அது சாத்தியமுமில்லை. ஆனால் நேர்மையான ஒரு கொள்கையில் உறுதியாக இருப்பதும் அதற்காக உழைப்பதிலும் கம்பீரமான மகிழ்ச்சி இருக்கிறது. அதுதான் பல தோழர்களை கடுமையான இடையூறுகளுக்கிடையேயும் துடிப்புடன் பணியாற்ற வைக்கிறது. வே.ஆணைமுத்து தனது 90 வயதிலும் சலித்துப்போய் உட்காராமல் பணியாற்ற தூண்டுவது அந்த மகிழ்ச்சிதான். போதிய எண்ணிக்கையில் முன்மாதிரிகள் உருவாகையில் மக்கள் இயல்பாக அவர்களை பின்தொடர்வார்கள். ஹெயின்ஸ் கோஹுட்டின் செல்ஃப் சைக்காலஜி கோட்பாடு மனிதர்களின் நடத்தையை வடிவமைக்கும் 3 காரணிகளை பட்டியலிடுகிறது. தமது செயல்பாட்டுக்குரிய அங்கீகாரம், பின்பற்ற ஒரு முன்மாதிரி மற்றும் தங்களோடு ஒத்திருக்கும் (கொள்கை அல்லது பிறவற்றில்) நபர்கள். ஆகவே சமூகத்தில் சரியான முன்மாதிரிகளும் ஒத்திருக்கும் நபர்களும் அதிகம் இருக்கையில் கொள்கைக்கான பலனும் அங்கீகாரமும் கிடைக்கும். அப்போது வெகுமக்களை வென்றெடுப்பது சாத்தியம். அதுவரைக்கும் செயல்பட உழைப்பின் மகிழ்ச்சி எனும் வெகுமதியை கண்டுணர்ந்தால் போதும்.

Advertisements

One thought on “மோடி தர்பார் – மாமன்னர் வாழ்கவென்பீர், மாண்போடு மரணிப்பீர்.”

  1. எந்த சர்வாதிகாரியும் ஒரு அறிவாளியை ஆலோசகராக வைத்துக்கொள்வதில்லை, வேலைக்காரனாகவே பயன்படுத்திக்கொள்வார்கள்.

    உண்மை உண்மை
    நல்ல அலசல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s