கண்ணாடி.


கண் கண்ணாடியுடனான என் பந்தம் ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஆகிறது. சென்னையில் வேலைக்கு சேர்ந்தபோதுதான் பார்வையை சோதிக்க வேண்டும் எனும் எண்ணமே உருவானது. முதல் மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு பாரிமுனையில் இருக்கும் விஜயா ஆப்டிக்கல்ஸ் போகையில் ஒரு கண் கண்ணாடி உத்தேசமாக என்ன விலையிருக்கும் என்பது பற்றிய அறிவே எனக்கு கிடையாது. லென்ஸ்சுக்கு தனியே விலை சொல்வார்கள் என்பதும் தெரியாது. அங்கே ஓரளவுக்கு பொருத்தமான கண்ணாடியை தெரிவு செய்தபோது அதன் விலை 1200 என்றார்கள். அப்போது என் சம்பளம் 1500தான்.

எதிர்காலம் பற்றிய பெரிய அச்சத்தை எனக்குள் விதைத்தது அந்த கண்ணாடிதான். ஒரு கண்ணாடிக்கே 80% மாத வருமானம் தேவைப்படும் எனும் நிலைமையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அடுத்த ஆறாண்டுகளுக்கு நான் கண் பரிசோதனையும் செய்யவில்லை கண்ணாடியும் அணியவில்லை. அதன் பிறகும் இருப்பதிலேயே விலை மலிவான கண்ணாடிகளையே தெரிவு செய்துவந்திருக்கிறேன். உறவினர்களும் நண்பர்களும் பத்தாயிரத்துக்கும் பதினைந்தாயிரத்துக்கும் கண் கண்ணாடி வாங்குகையில் ஆச்சர்யத்தைவிட அச்சமே மேலோங்கும். ஒரு கண்ணாடிக்கு எப்படி அத்தனை செலவாகியிருக்க முடியும் என்பதை எப்படி யோசித்தாலும் விளங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வளவு செலவு செய்தவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் அல்ல, சாதாரண மத்தியதர வர்கத்தினர்தான்.

இலகு எடைகொண்ட அதிகம் கீறல் விழாத  கண்ணாடி என்பது ஒரு சாதாரண சம்பளக்காரனுக்கு பேராசையாக இருப்பதன் மீதான வெறுப்பினால் பெரிய ஆப்டிக்கல்ஸ் கடைகளை நான் தெரிவு செய்ததே இல்லை (கசப்பான முதல் அனுபவம் காரணமாக இருக்கலாம்). சாதாரண கடைகளில்கூட கண்ணாடிக்கு சராசரியாக 2000 செலவிட வேண்டியிருக்கிறது. எங்கள் மகன் பிறந்த பிறகு கண்ணாடிக்கான செலவு இன்னும் அதிகமானது. அவன் பிடுங்கி வீசியதால் மட்டும் இதுவரை என் மனைவியின் 8 கண்ணாடிகள் உடைந்திருக்கிறது (ஒரு கண்ணாடி கூடுதலா வச்சுக்கோங்க என்கிறார் மருத்துவர்). மலிவுவிலை கண் கண்ணாடிகளும்கூட எங்களுக்கு பெரும் செலவு வைக்கும் விசயமானது.

இது என்னுடைய பிரச்சினை மட்டுமல்ல. முதியவர்கள் சுலபத்தில் கண்ணாடியை தவறவிடுவார்கள். தட்டுத்தடுமாறி அதனை தேடி எடுப்பதால் பல வயதானவர்களது கண்ணாடி கீறல் விழுந்து நெளிந்து இருப்பதை நீங்கள் பார்க்கலாம். வசதியான வீட்டு பெரியவர்களே கண்ணாடியை தொலைத்தால் மீண்டும் வாங்க நீண்டநாட்கள் ஆகிறது. கண்ணை இடுக்கிக்கொண்டு படிக்கிற நடமாடுகிற பெரியவர்களை நீங்கள் பல இடங்களிலும் பார்க்கலாம். ஆண்டுக்கணக்கில் கண்ணாடியை மாற்றாமல் பயன்படுத்தும் நடுத்தர வயதுக்காரர்கள் பலரை நான் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன்.

குழந்தைகள் நிலையோ இன்னும் பரிதாபம். கண்ணாடி அணியவேண்டிய சிறு பிள்ளைகள் அதனை உடைக்காமல் வைத்திருப்பதும் தொலைக்காமல் வைத்திருப்பதும் எத்தனை சிரமம் என்பதை விளக்க வேண்டியதில்லை. இளம் சிறார்களால் தங்கள் பார்வைக் குறைபாட்டை கண்டுபிடித்து சொல்ல முடியாது. மேலும் வளரும் பருவம் அவர்களது பார்வை குறைபாட்டின் அளவு (பவர்) மாறிக்கொண்டிருக்கும். ஆகவே சீரான இடைவெளியில் கண்களை சோதித்து அவர்களது கண்ணாடிகளை மாற்ற வேண்டியிருக்கும். கிளாக்கோமாவால் பாதிக்கப்பட்ட என் நண்பர் தனது 18ஆம் வயதில் பார்வையை இழந்தார். அவரது பிரச்சினையை 16 வயதில்தான் கண்டறிந்தார்கள் ஆனாலும் பார்வையிழப்பை தடுக்க முடியவில்லை.

10 கோடிக்கும் மேலான முதியவர்கள் இருக்கும் நாடு இந்தியா. சரிபாதி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. வீடற்ற மக்களின் எண்ணிக்கை 17 லட்சம் என அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கிறது. இது மிகக்குறைவான மதிப்பீடு. வீடற்றவர்களுக்காக செயல்படும் நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி இந்தியா மக்கள்தொகையில் 1 சதமேனும் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் பார்வையற்றவர்கள் எண்ணிக்கை ஒன்றரைகோடி (நான்கில் மூவருக்கு சரிசெய்யக்கூடிய பார்வையிழப்புதான்). அதாவது நூறில் ஒரு இந்தியர் பார்வையற்றவர். கண்பார்வை குறைபாடு காரணமாக இந்தியாவுக்கு ஏற்படும் மொத்த இழப்பு இரண்டு லட்சத்து மூவாயிரத்து ஐந்நூறு கோடிகள் என மதிப்பிட்டிருக்கிறது எசிலார் நிறுவனம். பார்வைக்குறைபாடு பற்றி பெரிதும் கவலைப்படவேண்டிய இந்தியாதான் சிவாஜி சிலைக்கும், வல்லபாய் படேல் சிலைக்கும் 7000 கோடியை இறைக்கிறது.

இந்த வருடத்தின் இறுதியில் ரேஷன் கடைகள் இருக்குமா என பயப்படவேண்டிய சூழலில் வயசாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் கண்ணாடி வேண்டும் என கேட்பது தேசபக்தியற்ற செயல்தான். ஆனால் எனக்கிருக்கும் சந்தேகம் என்னவென்றால் ஏன் கண் கண்ணாடிகள் விலை இவ்வளவு அதிகமாக இருக்கிறது? எந்த அடிப்படையில் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது? உலகில் கண் கண்ணாடி உபயோகிப்போர் எண்ணிக்கை 400 கோடி. ஆக இரண்டில் ஒருவர் கண்ணாடி அணிகிறார், அதற்கு அதீதமான தேவைப்பாடு இருக்கிறது. அப்படியானால் அதன்விலை சகாயமாகத்தானே இருக்க வேண்டும்.

சமீபத்தில் குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு கண்ணாடி வாங்க வேண்டிய நேரம் ஒருங்கே வந்தது. அதற்கான செலவு மலைக்க வைக்கும் ஆகையால் ஒரு இணையதள கண்ணாடிக் கடையில் வாங்கிப்பார்க்கலாம் என முடிவு செய்தோம். எடை குறைவான, எளிதில் உடையாத, கீறல் விழாத பிரீமியம் வகை கண்ணாடி ஒன்றுக்கு 900 ரூபாய் ஆனது. நடுத்தரமான கடைகளிலேயே இந்த வகை கண்ணாடிகள் 5000 ஆகும். இப்படி 80% அளவுக்கான பாரிய விலை இடைவெளி எப்படி சாத்தியம்?  மக்களின் கண்ணாடிகளின் வழியே செலவாகும் பணத்தில் பெரும்பகுதியை விழுங்குவது யார்? தனியார் கண் மருத்துவமனைகளில் டாக்டர்கள் தரும் பரிசோதனை சீட்டையே நீங்கள் அவர்களது கண்ணாடிக்கடையில்தான் பெறமுடியும். இந்தியாவில் கண்ணாடி அணிய வேண்டியவர்களில் 75% மக்கள் அதனை அணிவதில்லை என்கிறது புள்ளிவிவரங்கள். இத்தனை மோசமான நிலையில் இருக்கும் நாட்டில் கண் கண்ணாடிகளை ஏழை மக்களுக்கு மலிவு விலையில் கொடுக்க எந்த ஏற்பாடும் இல்லை. தனியார் மருத்துவமனைகள் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த அரசு கொடுக்கும் தொகையில் மாவட்டத்துக்கு ஒரு கண் மருத்துவமனையை வருடம்தோறும் ஆரம்பிக்கலாம் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

சரியான தரத்தில் விரும்பிய தகுதிகளோடுகூடிய ஒரு கண் கண்ணாடியை பெற 16 ஆகியிருக்கிறது எனக்கு (வெறும் வீம்பினால் அல்ல, எந்த நியாயமும் இல்லாமல் ஏன் ஒரு பொருளுக்கு மிகையான தொகையை செலுத்த வேண்டும் எனும் முடிவினால்). தெளிவான பார்வையும் அணிய வசதியான ஒரு கண்கண்ணாடியும் ஆடம்பர செலவாக இருக்கிறது இந்தியாவில். எனக்கு வாய்த்த மிக சாதாரண தரத்திலான கண்ணாடிக்குகூட வழியில்லாமல்தான் 40 கோடிக்கும் மேலான மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். அவர்களை ”பார்த்துக்கொண்டே” அமைதியாக நாமும் வாழ்கிறோம்.

Advertisements

“கண்ணாடி.” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. Entire medicine is under mafia only. 3 business giving incomparable profits . Arms, drugs and medical. Medical is legal.

    For Commons have no way other than rely on this. Or try alternative like acupuncture etc. But in that also many r money minded

  2. சானிட்டரி நாப்கின் எக்ஸ்ட்ரா டேக்ஸ் கட்டி மாசம் ஒரு பேக் வாங்க வேண்டி இருக்கு. (கண்ணாடி வாங்குறத கூட ஒரு வாரம் பத்து நாள் தள்ளி போடலாம்.. இதை என்ன பண்ண?) வருஷம் ஒருக்கா வாங்குற கண்ணாடிக்கு புலம்பிட்டு.. பேசாம நீங்க பாகிஸ்தானுக்கு போயிருங்க.

  3. கண்ணாடி மட்டுமல்ல நாம் வாங்கும் பொருள் ஒவ்வொன்றையுமே அதிக விலை கொடுத்துதான் வாங்குகிறோம். வணிகம் என்பது இன்று லாபத்திற்கு மட்டுமல்ல, அதீத லாபத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது.அது மட்டுமல்ல நம் மக்களிடமும் ஒரு உணர்வு திட்டமிட்டே விதைக்கப் பட்டுவிட்டது, விலை குறைவாக இருந்தால் அது தரமானதாக இருக்காது என்றும், தங்களின் கௌரவத்திற்கு இழுக்கு என்னும் மாயை மக்கள் மனதில் தொடர்கிறது.

  4. \\எடை குறைவான, எளிதில் உடையாத, கீறல் விழாத பிரீமியம் வகை கண்ணாடி ஒன்றுக்கு 900 ரூபாய் ஆனது. நடுத்தரமான கடைகளிலேயே இந்த வகை கண்ணாடிகள் 5000 ஆகும்.// 6000 ருபாய் செலவுக்கு பயந்தே கடந்த மூன்று வருடங்களாக கண் டெஸ்ட் செய்யாமல் இருக்கிறேன்.அந்த 900 ரூபாய்க்கு கிடைக்கும் வெப் சைட் லிங்க் கொடுத்தால் எங்களை போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s