ஜல்லிக்கட்டு போராட்டங்கள் – பரவசத்துக்கு பின்னிருப்பவை என்னென்ன?


கடந்த 30 வருடங்களில் நாம் பார்த்த மக்கள் திரள் போராட்டங்களில் மிக வித்தியாசமானது இப்போது நடந்துகொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்தான். தினசரி நூற்றுக்கணக்கான மரணங்களும் தாக்குதல்களும் ஈழத்தில் நடைபெற்று தமிழக மக்களின் இதயத்தை அறுத்தபோது இருந்ததைவிட பெரிய எதிர்ப்புணர்வு இப்போது எழுந்திருக்கிறது. அரசின் மீது நம்பிக்கையிழக்க வைக்கும் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்திருப்பதால் மக்களின் கோபம் வெளிப்பட்டிருக்கும் ஒரு புள்ளிதான் இது, வெறுமனே ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் மட்டுமல்ல எனும் வாதம் ஓரளவு ஏற்கத்தக்கதே.

ஆனால் மக்களின் உணர்வு மட்டுமே இந்த ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியிருக்கிறது என நம்புவது உச்சகட்ட பாமரத்தனம். மெரினாவில் 50பேர் கூடும்போதே காவல்துறையால் இதனை கட்டுப்படுத்தியிருக்க முடியும். அவர்கள் கரிசனத்துடன் அதனை அனுமதித்திருக்கிறார்கள். தஞ்சாவூரில் போலீசே மாணவர்கள் சிலருக்கு எங்கே செல்ல வேண்டும் என வழிகாட்டியிருக்கிற்து. மெரினாவில் உதவி ஆணையர் சமாதானம் பேசும்போது அவர்மீது தண்ணீர் பாக்கெட் எறியப்பட்டது. இப்படியெல்லாம் செய்வது தவறு என அவர் அமைதியாக அறிவுரை சொல்கிறார். இதெல்லாம் அமைச்சர் வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கும் மரியாதை. 100 பேர் கூடும் கூட்டத்துக்கு அனுமதி வாங்கவே 100 முறை அலையவிடும் போலீஸ் துறை இது என்பது போராடும் இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

இரண்டாவது ஆளும் கட்சியின் சாதகமான எதிர்வினை. நேற்றைய சசிகலாவின் அறிக்கை போராடும் மாணவர்களை பாராட்டுகிறது, போராட்டத்தை கைவிடுங்கள் என சொல்லாமல் வெற்றியடைய வாழ்த்துகிறார் அவர். இதுவரை எந்த ஆளுங்கட்சி தலைவரும் இப்படி சொன்னதில்லை. சசியின் முழு கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி தன் வாழ்நாளில் தங்கள் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை ஆதரித்து செய்தி வாசித்திருப்பது இப்போதுதான். திருத்துறைப்பூண்டியில் போராடும் மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ததே அதிமுகதான் என களச் செய்திகள் சொல்கின்றன.

அடுத்த கவனிக்கத்தக்க எதிர்வினை ஊடகங்களின் ஒட்டுமொத்த ஆதரவு. இந்த போராட்டங்கள் பற்றிய எதிர்மறையான கருத்து கொஞ்சமும் இல்லாமல் செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக கோஷமெழுந்தால் கும்பி வெடிக்கும் அளவுக்கு கொந்தளிக்கும் தந்தி டிவிகூட இதனை செய்கிறது. மேலும் இப்போராட்டத்தை ஆராதிக்கும் வகையிலும் உற்சாகமூட்டும் வகையிலும்தான் எல்லா காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் செயல்பாடும் இருக்கிறது.

இந்த மூன்று தரப்பின் ஆதரவுதான் இத்தனை பெரிய போராட்டம் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் நடக்க காரணம். மாணவர்களின் நோக்கம் சந்தேகத்துக்கு உரியதல்ல. அவர்களை ஆர்வமும் கோபமும்தான் செலுத்துகிறது. ஆனால் அதனை பரவலாக கொண்டு சேர்க்கவும் அதனை தடுக்காதிருக்கவும் ஊடகங்கள் மற்றும் அரசின் பங்கு அவசியம். இல்லாவிட்டால் இது ஒரு அடையாள போராட்டமாகவே முடிந்திருக்கும்.இவையெல்லாம் மாணவர் சக்தியின் மீதான அச்சத்தினாலும் நம்பிக்கையினாலும்தான் நடக்கிறது என நம்புபவர்கள் தமிழ்சினிமா மேனியாவால் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த ஒருங்கிணைப்பின் வெற்றி தோல்வியைவிடவும் ஏன் இவர்கள் எல்லோருக்கும் இந்த போராட்டம் தேவைப்படுகிறது என்பதை அறிய முற்படுவது முக்கியம்.

அதிமுக கட்சியை இப்போது நடத்துவது நடராஜன்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். பன்னீர் செல்வத்தை பாஜக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அவரை தன் பிடிக்குள் வைக்கவும் அவர் தனக்கென ஒரு அணியை முன்னெடுக்காமல் இருக்கவும் சில பிரச்சினைகளை உயிரோடு வைத்திருப்பது நடராஜனுக்கு அவசியம். மணல் கொள்ளை, ஊழல் போன்றவை ஆபத்தானவை. அவருக்கு பாதுகாப்பான பிரச்சினை என்பது உணர்வுகளை மட்டும் அடிப்படையாக வைத்த சுலபமாக தீர்க்கவல்ல ஜல்லிக்கட்டுதான். தீபா விவகாரம், அப்பல்லோ மர்மம், சசி மீதான கட்சியின் ஒரு பகுதியினரது அதிருப்தி ஆகிய பிரச்சினைகளை செய்திப் பட்டியலிலிருந்து முற்றாக அகற்ற இந்த போராட்டம் உதவியிருக்கிறது. அதனால்தால் சசிகலா அகமகிழ்ந்து இதனை ஆதரிக்கிறார்.

போலீஸ் ஆதரிக்க பெரிய காரணம் எதுவும் தேவையில்லை. அரசு விரும்பினால் அவர்கள் மாணவர்களை அடித்துக்கூட கடற்கரைக்கு கொண்டுவருவார்கள். இதில் வெளிப்படும் செய்தி, போலீஸ் இப்போதும் அதிமுகவுக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கிறது பாஜக ஆசிபெற்ற முதல்வர் அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான்.

ஊடகங்கள் பாஜகவுக்கும் ஆளும் அதிமுகவுக்கும் விசுவாசமானவை என்றாலும் அவர்கள் கடுமையான செய்திப்பஞ்சத்தில் இருக்கிறார்கள். பாதுகாப்பான மற்றும் உணர்வுபூர்வமான செய்திகள் என்பது அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பம்பர் லாட்டரி. இதன் மூலம் அவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் இருந்து சற்றே தப்பிக்க முடியும். மேலும் பாஜகவை சங்கடப்படுத்தும் செய்திகளில் மிக பலவீனமானது இந்த ஜல்லிக்கட்டு போராட்டம்தான். இந்த செய்திகள் டெல்லி மூலவருக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும்.

ஒருவேளை இந்த போராட்டங்களின் திசைவழி வேறொரு பிரச்சினையையும் முன்வைத்து நகர்ந்தால் ஆதரிக்கும் இதே அமைப்புக்கள் நம் முதுகை ஒடித்துவிடும். உத்தரவு வந்தால் இந்த போராட்டத்தையும் போலீஸ் ஓரிரு மணி நேரத்தில் நசுக்கிவிடும். அது ஏவினால் பாயும் மிருகம், சேதங்களைப் பற்றி கவலைப்படாத மிருகம். இங்கே சுலபமாக ஒரு உரிமை கிடைக்கிறதென்றால் அதனால் அரசுக்கு பெரிய லாபம் இருக்கிறது என்று பொருள். டாஸ்மாக் கடையை இடம் மாற்ற சொல்லி வீதிக்கு வந்தவர்களின் காலை முறித்த அரசு இது. இத்தனை லேசில் ஒரு அரசு பணியும் என்றால் இந்தியா எப்போதோ சுபிட்சமான நாடாகியிருக்கும். இதனை களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு தெரிவிப்பது நம் கடமை.

இந்த ஜல்லிக்கட்டு போராட்டங்களின் சாதகமான அம்சங்கள் சில இருக்கின்றன. 2009ல் நடந்த பல ஈழ ஆதரவு போராட்டங்கள் போதிய அரசியல் ஞானம் இல்லாமல் உணர்வின் உந்துதலால் திரண்டவர்களால் சாதியமானவைதான். ஆனால் அதன் பிறகு அதிலிருந்து அரசியல் பாடம் கற்க வந்தவர்கள் இருக்கிறார்கள். தவறான தலைமைகள் பல அதன் பிறகு அம்பலப்பட்டன. அவ்வாறே இதில் இருந்தும் பல இளைஞர்கள் பொதுத்தளத்துக்கு வரலாம். இத்தகைய சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருக்கும். இப்போது பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பங்கேற்கிறார்கள். பாலின இடைவெளி சற்றே மட்டுப்பட்டிருப்பது தெரிகிறது. ஒன்று திரள்வது எனும் நிகழ்வையே சந்தித்திராத மாணவர் சமூகத்துக்கு இது ஒற்றுமையை கற்றுத்தந்திருக்கிறது. இது முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு.

ஆனால் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இதுவே பாதகமாகவும் முடியலாம். இன அடையாளம் எனும் உணர்வை மத அடையாளம் எனும் தளத்துக்கு திருப்ப பாஜக கும்பலால் முடியும். அதற்கான பலவீனம் இளைஞர்களிடம் இருக்கிறது. அரசியல் புரிதலற்ற உணர்ச்சி போராட்டங்களை வலதுசாரி குழுக்கள் விரைவாக விழுங்கும். இப்போதே மாட்டுக்கறியை புறக்கணிக்கச் சொல்லும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ஊடகங்களில் பேசும் பல இளைஞர்களின் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கருத்துக்கள் பயமுறுத்துகின்றன.

இடதுசாரி இயக்கங்கள் மாணவர்கள் மத்தியில் அதிகமாக பணியாற்ற வேண்டிய முக்கியமான தருனம் இது. பெருமளவு தனியார் பள்ளிகள் காவி பிரச்சார மையங்களாகிவிட்டன. இடதுசாரி சித்தாந்தங்களை தெரிந்துகொள்ளவே இன்றைய பெரும்பான்மை மாணவர்களுக்கு வாய்ப்பில்லை. அரசை எதிர்க்கலாம், எதிர்க்க வேண்டும் எனும் எண்ணம் மாணவர்கள் இளைஞர்கள் இடையே முளைவிட்டிருப்பது ஒரு பெரும் வாய்ப்பு. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அதனை கபளீகரம் செய்ய முரட்டு அரச பலத்தோடு வலதுசாரி பொறுக்கி கும்பல் காத்திருக்கிறது.

மாணவர்களிடம் அரசியலை கொண்டு செல்வோம், விரைவாகவும் பரவலாகவும்.

Advertisements

One thought on “ஜல்லிக்கட்டு போராட்டங்கள் – பரவசத்துக்கு பின்னிருப்பவை என்னென்ன?”

  1. இன அடையாளம் எனும் உணர்வை மத அடையாளம் எனும் தளத்துக்கு திருப்ப பாஜக கும்பலால் முடியும். அதற்கான பலவீனம் இளைஞர்களிடம் இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s