பசுவதை தடுப்பு, இந்தி திணிப்பு – இந்தியாவை ஒழிக்கக் காத்திருக்கும் இரண்டு பீடைகள். (2/2)


இந்தி பேசாத மாநில மக்கள் மீது பாஜக அரசு பூசியிருக்கும் சாணி சி.பி.எஸ்.சி பள்ளிகளில் கட்டாய இந்தி என்னும் பரிந்துரை. இது ஒரு துவக்கம்தான், கண்டுகொள்ளாமல் விட்டால் அது ஒட்டுமொத்த பள்ளிகளையும் ஆக்கிரமிக்கும். மத்திய அரசு அலுவலகங்களை இந்தி பெரிய அளவில் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. மும்மொழிக் கொள்கையே சிறந்தது எனும் பஜனையை பாஜக பரவலாக செய்கிறது. ஒருவேளை மும்மொழிக்கொள்கை அமுலானால் என்ன ஆகும் என்பதை நாம் நமது நவ நடுத்தர வர்கத்துக்கு சொல்லியாக வேண்டிய தருணம் இது.

நம்ம பிள்ளைகள் இந்தியையும் சேர்த்து படிச்சா நல்லதுதானே எனும் எண்ணமும், இந்தி படிக்காததனால் சில வாய்ப்புக்கள் பறிபோகலாம் எனும் அச்சமுமே அவர்களை செலுத்துகிறது. ஒரு பேட்டியில் அம்பலப்பட்டுப்போகும் சாமியாரையே தெய்வத்தைப்போல தொழ தயாராயிருக்கும் வர்கத்துக்கு சுயமரியாதையை கற்றுக்கொடுப்பது ரொம்பவும் சிரமம். ஆனால் இந்த மும்மொழிக் கொள்கை எனும் உத்தேச திட்டம் இந்தி பேசாத மாநிலங்களில் வசிக்கும் பெருந்தொகையான குழந்தைகளின் கற்றல் திறனை சிதைக்கவல்லது.

முதலில் ஹிந்தி படித்தால் அதிக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் எனும் வாதத்தை பார்க்கலாம். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை என வாயில் தேனொழுக பேசும் பாஜக குண்டர்கள் இந்தி பேசும் மாநில மக்களின் மூன்றாவது மொழி என்னவென்று சொன்னதுண்டா? அந்த மாநிலங்கள் இரண்டு மொழிகளோடு ஆரம்பக்கல்வியை நடத்தி ஓரளவுக்கு கல்வித்தரத்தை கொண்டுவரலாம். உங்கள் குழந்தை மூன்று மொழிகள் எனும் கடும் ஆரம்பக்கல்விச் சுமையோடு வளர்வார்கள். அப்படியானால் வாய்ப்பு எந்த மாநில குழந்தைகளுக்கு அதிகம் இருக்கும் என யோசித்திருக்கிரீர்களா? இப்போதே மத்திய அரசு ஊழியர்களில் பெருமளவு வட இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். நிறைய வாய்ப்பு கிடைக்கும் எனும் ஆசையோடு உங்கள் ஹிந்தி எனும் படுகுழிக்குள் தள்ளி இந்திய அரசுப்பணிகளில் மொத்தமாக மற்றவர்களை ஒழிப்பார்கள்.

எட்டு பாஷைகள் தெரிந்து ஆயுளுக்கும் வரவேற்பாளராகவே வேலைசெய்யும் மனிதர்களையும் ஒரே மொழி மட்டும் தெரிந்து தொழில் திறமையால் லட்சங்களில் சம்பளம் பெறும் மனிதர்களையும் நான் பார்க்கிறேன். வாழ்க்கையை நடத்த நாம் நூற்றுக்கணக்கான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதில் இன்னொரு மொழியும் அடங்கும். ஒருவருக்கு இந்தி கற்றால் வாய்ப்பு கிடைக்கலாம் இன்னொருவருக்கு பன்றி மேய்க்க கற்பதால் வாய்ப்பு கிடைக்கலாம். அதையெல்லாம் காலமும் சூழலும்தான் முடிவு செய்யும். உத்தேசமான வாழ்க்கை திறன்கள் என பட்டியலிட்டு அவற்றை எல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்பினால் அவர்கள் வயதாகி சாகும்வரை பள்ளிக்கூடத்திலேயேதான் கழித்தாக வேண்டும்.

இன்றைய குழந்தைகள் சந்திக்கும் நெருக்கடிகள் 20 வருசங்களுக்கு முன்னால் இல்லை. சாலையை பயன்படுத்துவது போன்ற அடிப்படை வசதிகள்கூட பெரிய ஆபத்தை தரவல்லதாக இருப்பதால் அவற்றை எதிர்கொள்ள அவர்கள் கற்றாக வேண்டும். கணிணி போன்ற புதிய சேர்க்கைகளை அவர்கள் கற்றாக வேண்டும் இந்த நெருக்கடியில் ஹிந்தி எனும் முட்டைக்கு மயிர் பிடுங்கும் வேலை எதற்கு கூடுதலாக?

சென்ற வாரம் நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு தன் தங்கை மகளை அழைத்துவந்த ஒருவரை சந்தித்தேன். பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண் வாங்கிய அந்த பெண்குழந்தை இப்போது 17 வயதில் பெருமளவு நினைவாற்றலை இழந்து பேச்சுத்திறனும் அற்றவராக இருக்கிறார். கடுமையான மன அழுத்தம் தவிர வேறு எந்த உடலியல் காரணங்களும் இல்லை என்கிறது மருத்துவமனை அறிக்கைகள். பள்ளிக்கு அனுப்பி அவரை மற்ற குழந்தைகளோடு இருக்கவையுங்கள் என பரிந்துரைக்கிறார் மருத்துவர். 490 வாங்கிய மாணவியை அவர் படித்த பள்ளியே ஏற்க மறுக்கிறது. திடீரென அரசுப்பள்ளியில் சேர்த்ததால் அவரால் அங்கே பொருந்திப்போக முடியாமல் அவரது பிரச்சினைகள் தீவிரமாகிறது. இதே மாதிரியான பிரச்சினைகள் கொண்ட ஏராளமான சிறார்களை தாம் அங்கே பார்ப்பதாக சொல்கிறார் அந்த நண்பர். பள்ளிகளில் இருக்கும் பாடத்திட்ட அழுத்தம் என்பது நம் பிள்ளைகளை நம்மிடம் இருந்து பறித்துக்கொள்ளும் அளவுக்கு வலுவானது. அதோடு சேர்த்து இந்தி எனும் இன்னொரு சுருக்கு கயிறையும் நாம் பிள்ளைகளுக்கு பரிசளிக்க வேண்டுமா?

கட்டாய இந்தி எனும் சாத்தானின் சாத்தியமுள்ள பின்விளைவுகளை பார்த்தோமானால்,

  1. ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கிலத்தை கற்றுத்தரவே பல பள்ளிகள் பெரிய அளவில் சிரமப்படுகின்றன. அங்கே கட்டாய ஹிந்தி திணிக்கப்பட்டால் தமிழும் ஆங்கிகலமும் கற்கும் வேகத்தை அது இன்னும் மட்டுப்படுத்தும். 10% குழந்தைகளுக்கு வேண்டுமானால் 3 மொழிகளை படிப்பது எளிதாக இருக்கலாம். ஏனையோருக்கு அது கொடிய தண்டனை. மோடி கும்பலின் அரிப்புக்காக நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பலியிட்டுத்தான் நாம் சொறிந்துவிட வேண்டுமா?
  2. தேறாத குழந்தைகளை தொழிற்கல்விக்கு அனுப்பும் இன்னொரு மனுசாஸ்த்திர யோசனை செயல்வடிவம் பெற காத்திருக்கிறது. ஆகவே கற்றல் திறன் குறைவாக உள்ள பிள்ளைகள் அல்லது போதுமான ஆசிரியர் இல்லாத பள்ளி பிள்ளைகள் எல்லோரும் தமது கல்வி வாய்ப்புக்களை இழப்பார்கள். இந்த பானிபூரி மொழியை படிக்க முடியாவிட்டாலும் உங்கள் பிள்ளை மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆகமுடியாது எனும் சூழலை உங்களை ஏற்கமுடியுமா?
  3. உ.பி போன்ற இந்தி மொழி மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைக்கு அவசியம் இல்லை. அவர்கள் சிரமப்பட்டு படிக்கும் ஆங்கிலம் இங்கே ஒப்பீட்டளவில் எளிமையாக கற்றுக்கொள்ளப்படுகிறது. ஆகவே அதனை நேர் செய்ய நம் பிள்ளைகளுக்கு இந்தி கூடுதல் சுமையாக திணிக்கப்படுகிறது. இதனால் இரு மொழிகள் கொண்ட எளிய பாடத்திட்டம் மூலம் அவர்கள் கற்றல் திறன் மேம்படும். உயர்கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றை மிக சுலபமாக அவர்கள் கைப்பற்றுவார்கள். ஒரே இந்தியா எனும் கோசத்தை சொல்லிக்கொண்டு நாம் விரல் சப்பிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
  4. சி.பி.எஸ்.சி பாடத்தைப்போலவே மாநில பாடங்களை மேம்படுத்துவதாக சொல்லி எல்லா பள்ளிகளுக்கும் இந்தி கொண்டுவரப்படும். அப்படி நடந்தால் பாடசுமை, ஆசிரியர் எண்ணிக்கை போதாமை போன்ற காரணங்களால் குழந்தைகளால் படிக்க இயலாது. அரசுப்பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும்.
  5. அதன்மூலம் பள்ளிகளை சுலபமாக அரசால் மூட முடியும். தமிழகத்தில் பிழைப்பதற்கான வாய்ப்புக்களில் ஒன்று அரசு ஆசிரியர் பணி, லட்சக்கணக்கிலான அரசுப்பள்ளி ஆசிரியர் பணிவாய்ப்பு பறிபோவது நமக்குத்தான் நட்டம்.
  6. தமிழகம் ஒப்பீடளவில் பொருளாதார ரீதியாக மேம்பட்டிருக்க காரணம் அது கல்வியிலும் அறிவிலும் மேம்பட்ட சமூகமாக இருப்பதுதான். அதற்கு கருமாதி செய்துவிட்டால் அது தொழில் முதலீடுகளையும் வேலைவாய்ப்பை இன்னும் தீவிரமாக பாதிக்கும். இங்கே விவசாயம் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்ட தொழில். ஆக தொழில் முதலீடும் அற்றுப்போனால் பிச்சைதான் எடுக்க வேண்டும்.
  7. மும்மொழிக் கொள்கை என்பது நீண்டகால அடிப்படையில் இருமொழிக்கொள்கையை கொண்டுவர சொல்லப்படும் சாக்கு. அவர்கள் இலக்கு இந்தி ஆங்கிலம் கொண்ட கல்விதான். தாய்மொழியை புறந்தள்ளி நடத்தப்படும் பாடத்திட்டம் குழந்தைகளின் தர்க அறிவை சிதைக்கும். இதன் சேதாரங்களை மதிப்பிடவே முடியாது. நமது முட்டாள்தனமான யோசனைகளால் சமூகத்தை அறிவுரீதியாக பின்தங்க வைக்கிறோம்.
  8. தமிழகம் தான் கட்டும் வரியில் பாதியைக்கூட திரும்ப பெறுவதில்லை. இங்கிருந்து எடுக்கப்படும் பணம்தான் வடக்கே இருக்கும் வறிய மாநிலங்களுக்கு செலவிடப்படுகிறது. இதில் வெட்டி வீராப்புக்கான செலவான இந்திக்கும் சேர்த்து நம் வரிப்பணம் செலவாகும்.  (இந்தி ஆசிரியர்களுக்கான செலவு, இந்தியை வளர்க்க என உத்தேசித்திருக்கும் செலவுகள் ஆகியவற்றை சேர்த்து).
  9. அரசுக்கல்வியின் அழிவு என்பது சமூகத்தின் சமநிலையை குலைக்கும் காரணி. கல்வி மறுக்கப்படும் சூழலை சமூக விரோத குழுக்கள் எளிதில் பயன்படுத்திக்கொள்ளும். மத அடிப்படைவாத இயக்கங்கள் தங்கள் அடியாட்களை கல்வி வாய்ப்பற்ற இளையோர்களிடம் இருந்தே தேர்ந்தெடுக்கின்றன. அரசுப் பள்ளிகளும் இல்லாமல் போனால் நாம் சமூக அமைதியை நிச்சயம் பலியிடுவோம்.
  10. இந்தியை அனுமதிப்பது என்பது மத்திய அரசின் ஆளுகையை கல்வி புலத்துக்குள் அனுமதிப்பதற்கான முதல் படி. கடுமையான மத பிற்போக்குத்தனங்களை பாடப்புத்தகம் மூலமாகவே மத்திய அரசு செய்யும். ஆகவே மிக விரைவில் இந்து ஐ.எஸ் ராஜ்ஜியத்தின் தற்கொலைப் படைக்கு நம் வீட்டில் இருந்தும் ஆள் போகலாம். அல்லது அதற்கு நிதியளிக்கும் கொடையளிகளிகளாக உங்கள் பிள்ளைகள் ஆகலாம். எப்படியோ சிரியா, ஏமன் போன்ற சூழலுக்கு நம் நாட்டையும் மேம்படுத்த இந்தி திணிப்பு ஒரு வாயிலாக அமைய எல்லா வாய்ப்புக்களும் இருக்கிறது.

இந்தியை ஏற்றுக்கொண்ட பல மாநில மொழிகள் மெல்ல அழிவை நோக்கி நகர்கின்றன. நாமும் அந்த பட்டியலில் இருக்கிறோம். மொழியில் அழிவு என்பது ஓரிரு தலைமுறைக்கேனும் அறிவு வளர்ச்சியை தேக்கமடைய வைக்கும். ஒரு மொழியை கற்க 3 மாதங்கள் போதும். இப்போதிருக்கும் தொழில் நுட்பங்களைக் கொண்டு அதனை இன்னும் நேர்த்தியாக செய்யலாம். ஆனால் குழந்தைகளின் நேரத்தையும் கற்றல் சூழலையும் இன்னொரு மொழி்மூலம் சிதைத்தால் அதனை சரிசெய்யவே முடியாமல் போகலாம். எதற்கும் இருக்கட்டும் மோசமானால் பிறகு பார்க்கலாம் எனும் சமாதானம் எல்லாம் இங்கே எடுபடாது. கூடங்குளம் மக்கள் ஏன் 1984லேயே போராடவில்லை எனும் மொன்னை கேள்வியை வைத்தே 6வது அணு உலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். இந்தியை மட்டும் சாவகாசமாக விரட்டிவிட முடியுமா?

இந்தி திணிப்பு ஒரு விஷம். அதனை உங்கள் பிள்ளைகள் வாயில் ஊற்ற அனுமதிக்காதீர்கள். எதிர்த்து நில்லுங்கள்… 1000 பேர் கலந்துகொள்ளும் ஜல்லிக்கட்டே நம் அடையாளம் எனும்போது நம் எல்லோரையும் இணைக்கும் மொழி எத்தனை வலுவான அடையாளம். அதனை இந்த மாட்டு மூத்திர கும்பலின் மொழிவெறிக்காக இழக்கலாமா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s