தமிழகத்தின் பல வாழ்வியல் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளி கடந்த இரு நாட்களாக முக்கிய பேசுபொருளாகி இருப்பவர் நிர்மலா தேவி. இதனை திசை திருப்பல் என கருத இயலாது அல்லது அப்படி கருத அவசியம் இல்லை. தமிழகத்தின் வாழ்வாதாரங்களில் கல்வியும் உண்டு. அதுவும் சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கவர்னர்களின் ஆதிக்கத்துக்குப் பிறகு அது மரணப்படுக்கைக்கு சென்றுவிட்டது எனலாம். ஒரு கொலைமுயற்சி வழக்கு குற்றவாளி மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராகியிருக்கிறார். ஒரு முன்னாள் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். துணைவேந்தர் பதவியின் விலை 50 கோடியை கடந்திருக்கிறது (நான்காண்டுக்கு முன்னால் அதன் விலை 14 கோடியாக இருந்தது).
மிகை முதலீடு, மிகை அதிகாரம், மிகை வருமானம் இவையெல்லாம் என்ன செய்யும்? அது நிர்மலாதேவி போன்ற புரோக்கர்களை உருவாக்கும், கவர்னர் “லெவல்” அதிகாரிகளின் பாலியல் அரிப்பை கண்டுணர்ந்து ஆள் சப்ளை செய்ய வைக்கும். ரோகித் வெமுலா, அனிதா போன்ற எளியவர்களை எந்த தயக்கமும் இல்லாமல் மரணத்தை நோக்கி துரத்தும். ஒரே இடத்தில் குவியும் பணத்தின் ஆதி குணமும் ஆதார குணமும் அதுதான்.
துணை பேராசிரியர் நிர்மலாதேவியின் அந்த நீண்ட உரையாடலை கேளுங்கள்…
அவர் இதனை புதிதாக செய்யவில்லை. தனது நீண்ட அனுபவத்தையும் அதிகாரத்தையும் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். கவர்னர் மட்டத்து செல்வாக்கை உதாரணம் சொல்கிறார்.
இந்த “ஆப்பர்ச்சூனிட்டி” பற்றி தரகு ஆசிரியர் நிம்மி முன்பே பலமுறை மாணவிகளிடம் பேசியிருக்க வேண்டும். மாணவிகள் தமது பதிலை தயாராக வைத்திருப்பதில் இருந்தே இது புரிகிறது.
மாணவிகள் யாராவது பெற்றோருக்கு தெரிந்து இதனை செய்தாலும் பரவாயில்லை என்கிறார்.
நான் உங்களை மூன்றாம் ஆண்டு வரை பிரச்சினை இல்லாமல் படிப்பை முடித்துவிட்டு போகவைக்கவே விரும்பினேன், இப்போது ஒரு முக்கியமான அவசர தேவை வந்துவிட்டது என்கிறார். இது ஒரு மென்மையான மிரட்டல் அல்லது பழைய மிரட்டலில் தொடர்ச்சி.
பணம், மதிபெண், பாதுகாப்பு, எதிர்கால வசதிகள் என சகல வாக்குறுதிகளையும் அள்ளி இறைக்கிறார். பல்கலைக் கழக வேலைக்கு வந்திருக்கும்போது இதனை அவசரமாக பேசுகிறார். அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தேவைப்பட்டிருக்கிறார்கள். அதுவும் அவசரமாக. அதுவே அவரை தொலைபேசியில் அழைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க வைத்திருக்கிறது. (மாணவிகள் கல்லூரியில் புகார் சொன்னது 16 மார்ச்)
அவர் தொழில் நேர்த்தியில்லாமல் குற்றம் செய்திருக்கிறார் எனவும் அவரும் ஒரு விக்டிம் (பாதிக்கப்பட்டட்டவர்) என்றும் சிலர் சொல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் இது அத்தனை சரியான வாதமல்ல. அவர் தன் தொழில் திறமை மீதான அதீத நம்பிக்கையிலும் இப்படி செய்திருக்கலாம்.
மேலும் தான் மாட்டினாலும் சட்டபூர்வமாக சிக்கிக்கொள்ளாத அளவுக்கு கவனமாக வார்த்தைகளை கையாண்டிருக்கிறார். சில ”விஷ்ஷயங்கள்ள்ள்” “உங்களுக்கே புரியும்” போன்ற பாதுகாப்பான வார்த்தைகளை மட்டுமே அவர் சொல்கிறார். //அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது அவர் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகள் 370 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்) மற்றும் 511 (குற்ற முயற்சி). ஆகவே அவர் தண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை, கொஞ்ச நாளில் வெளியே வந்து சிறந்த கல்வியாளராக பணியை தொடரலாம்.//
மாணவிகள் திரும்பத் திரும்ப மறுத்தும் அவர் அவர் விடாப்பிடியாக பேசுகிறார். தன் சர்வீசில் எதுவும் மிஸ் ஆனதில்லையே எனும் ஆதங்கமும் எப்படியாவது சிலரை அனுப்பியாகவேண்டும் எனும் அலுவலக டார்கெட்டும் அவரை விரட்டியிருக்கக்கூடும்.
அக்கவுண்ட் ஆரம்பித்து தருகிறேன், எதிர்பார்க்காத அளவு பணம் தருகிறோம், பகுதி நேரமாக படித்துக்கொண்டு வேலை பார்ப்பதுபோல ஏற்பாட்டை செய்து சம்பளமாக பணத்தை தருகிறோம் என வாக்களிக்கிறார். பி.எச்.டி வரை சிரமமின்றி முடிக்கலாம் என்கிறார். ஆக அவருக்கு நீண்ட காலத்துக்கு பெண்கள் தேவைப்படுகிறார்கள் அதாவது அவரது உயர்மட்ட அதிகாரிகளுக்கு அது ஒரு தொடர் தேவையாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக நிர்மலாதேவி முந்தாநாள் கொடுத்த பேட்டியில் வெளிப்படும் செய்தி ரொம்ப முக்கியமானது. நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை எனும் பரிபூரண நம்பிக்கை இல்லாமல் அப்படியான உடல்மொழி வெளிப்பட வாய்ப்பேயில்லை.
இவை எல்லாம் உணர்த்துவது இது ஒரு பலம்மிக்க, பயப்பட அவசியமற்ற நெட்வொர்க் மற்றும் பல்கலைக் கழகங்களில் மிக சாதாரணமாக நடக்கும் நிகழ்வு என்பதைத்தான். இந்த பேராசிரியை நிச்சயம் தண்டிக்கப்படப் போவதில்லை. நிர்மலாதேவி என்பவர் பல்கலைக் கழக முறைகேடுகள் எனும் சங்கிலியின் ஒரு கண்ணி. அது அறுந்துபோக அதிகாரவர்கம் அனுமதிக்காது. மேலும் கல்வி மாஃபியாக்கள் செல்வாக்கு இல்லாத மீடியாவோ அரசியல் கட்சியோ இங்கு கிடையாது (ஸ்டாலின் உட்பட எல்லா கட்சி தலைவர்களும் சூரப்பா விவகாரத்தில் அறிக்கை விட்டதோடு அமைதி காப்பதை கவனியுங்கள்).
அதிகப் பணம் = அதிக அதிகாரம். அதிக அதிகாரம் = இன்னும் அதிகப் பணம், இதுதான் இங்கே பார்முலா. குடிகாரனுக்கு சாராயம், பொறுக்கிகளுக்கு பெண் என எதைக்கொடுத்தாவது பணத்தையும் அதிகாரத்தையும் கைப்பற்ற போட்டி நடக்கும் நாட்டில் கல்வித்துறை மட்டும் புனிதப் பசுவாக இருக்க முடியாது. பீயை அகற்றாமல் ஈயை விரட்டி பிரயோஜனம் இல்லை. பணம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நாட்டில், அதிகாரம் மேலிருந்து கீழாக மட்டுமே செலுத்தப்படும் நாட்டில் நிர்மலா தேவி போன்ற தரகர்களும் அவரால் சீரழிக்கப்படும் பெண்களும் உருவாவதை தடுக்க இயலாது.
இப்போதுவரை வெளியான செய்திகளின் வடிவத்தை கவனியுங்கள். பெண்களுக்கு ஆசை வார்த்தை காட்டிய பேராசிரியர் கைது, மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் கைது என்பதாகவே எல்லா ஊடகங்களும் செய்தியை வடிவமைக்கின்றன. இதன் விவாதம் மாணவிகள் – புரோக்கர் பேராசிரியை என்பதோடு முடிந்து போகிறது.
ஆனால் யதார்த்தம் என்ன? கவர்னர் “லெவல்” அதிகாரிகளின் தேவைதான் நிர்மலாவை புரோக்கராக்குகிறது. அந்த மாணவிகளின் தன்மானம் கல்வித்துறையின் பெரும் அநாகரீகத்தை சந்திக்கு இழுத்து வந்திருக்கிறது. இங்கே செய்திகள் வழங்கப்படும் விதம் மாணவிகளின் தீரத்தை புதைப்பதாகவும் நிர்மலாவின் முதலாளிகளுடைய குற்றத்தை வெகுமக்கள் கவனத்தில் இருந்து விலக்கச் செய்வதாகவும் இருக்கிறது வெளியாகும் எல்லா செய்திகளிலும் நம் கோபத்தை கூர்மழுங்கச்செய்யும் ஒரு உளவியல் நுட்பம் இருக்கிறது. அனேகமாக நக்கீரன் தவிர வேறெந்த ஊடகமும் இதில் இருக்கும் பெரிய கைகளை தேடிப்போகாது என உறுதியாக சொல்லலாம்.
இந்த நிர்மலா பாணி ஊடகப் பார்வைக்கு பலியாக வேண்டாம். உயரதிகாரிகளுக்கு புரோக்கர் வேலை பார்த்த நிர்மலா தேவி என்றும் மாணவிகள் துணிச்சலால் சிக்கிய அதிகார-விபச்சார புரோக்கர் நிர்மலா தேவி என்றுமே புரிந்துகொள்ள முயலுவோம். அப்படியே எழுதுவோம். அப்படி எழுதும்படியே மற்றவர்களையும் வலியுறுத்துவோம்.
இறுதியாக,
கல்வித்துறை சீரழிவு என்பது காவிரியை இழப்பதற்கு ஒப்பானது. அதன் காரணங்களும் விளைவுகளும் பிரம்மாண்டமானவை. கவர்னர் – நிம்மி விவகாரத்தை ஒற்றை சம்பவமாக பார்ப்பது நாம் நமது மாநிலத்துக்கு இழைக்கும் அநீதி. இதற்கான பெரும் போராட்டங்களையும் நாம் முன்னெடுத்தாக வேண்டும். ஏன் என்று கேட்பவர்களிடம் சொல்லுங்கள் “நம் குழந்தைகளும் அவர்களிடம்தான் படித்தாக வேண்டும்”.
நாம் கண்டுகொள்ள மறுக்கும் சந்தைப்பொருளாதாரத்தின் கொடுங்கரங்கள் இறுதியாக நம் பிள்ளைகளைத்தான் பலி கேட்கும். கல்வித்துறை உயர்மட்ட புரோக்கர் நிர்மலா விவகாரம் அதற்கான சிறு சாம்பிள்.