உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – ஒரு ஏமாற்றத்தின் கதை( அல்லது) இன்னுமாடா இந்த உலகம் இவங்கள நம்பிகிட்டிருக்கு?

கலைஞரின் பாணியில் சொல்வதானால் பொதுமக்களையும் அறிஞர்களையும் புறந்தள்ளி கருணாநிதியை பொதுவாக்கியே அரசு எந்திரம் வேலை செய்துகொண்டிருக்கிறது.


செம்மொழி மாநாடு நடக்கும் கொடீசியா அரங்கிலிருந்து அனேகமாக எங்கள் வீட்டுக்கு நாற்பது கிலோமீட்டர் தூரமிருக்கலாம். இத்தனை கிட்டத்தில் இருந்தாலும் எங்களுக்கேகூட கோவை மாநகரம் தலைகீழாக மாற்றப்படுவதாகத்தான் நினைப்பு இருந்து வந்தது. சற்றேறக்குறைய ஐந்நூறு கோடிகள் செலவிடப்படுவதாக தகவல், ஒரு அரசியல் தலைவரின் வாரிசுக்கு வேண்டுமானால் இது சாதாரணமானதாக இருக்கலாம். ஒரு நகரத்தின் உள்கட்டமைப்புக்கு இந்தத்தொகை பிரம்மாண்டமானது. அந்த நம்பிக்கையில் இருந்தமையால் கோவையின் உள்கட்டமைப்பு மேம்படப்போகிறது என்ற நம்பிக்கை மட்டும் எல்லோரையும் போலவே எனக்கும் இருந்தது. எனது முதுகலைத் படிப்பில் அரியர் வைக்காதிருந்தால் அந்த நம்பிக்கை இன்னும் சில நாட்கள் நீடித்திருக்கும் (சென்னை பல்கலைக்கழகத் தேர்வு மையம் கோவையில்தான் இருக்கிறது).

செம்மொழி மாநாடு பற்றி எழுதும்படி சில நண்பர்கள் நினைவுபடுத்தினார்கள். ஆயினும் உருப்படாத உள்கட்டமைப்பை பார்த்த பிறகும் பதிவிடும் எண்ணம் எனக்கு உருவாகவேயில்லை, ஜூன் 18 ம் தேதி செய்தித்தாளை பார்க்கும்வரை.  ஒரு செப்பேட்டை பார்த்த கலைஞர் சும்மாயிருக்காமல் மாநாட்டுக்கு எதிராக கருத்து சொல்பவர்களுக்கு சாபம் கொடுத்தமையால் அதை ஏற்றுக்கொள்ளவேனும் இதை எழுதித்தொலைக்க வேண்டியதாகி விட்டது

மாநாட்டைக் எதிர்க்கும் கெடுமதி படைத்தோர் நில்லா நெடுஞ்சுவராவார்கள், அவர்களுக்கு பேதி நிற்காமல் போகும், முதல் மரியாதை வடிவுக்கரசி மாதிரி அவர்தம் மனைவியர் ஒருகையால் மூக்கை சிந்திக்கொண்டே மறுகையால் சாப்பாடு போடுவார்கள் என்கிற அளவுக்கு சாபங்களை வாரி வழங்கியிருக்கிறார் கருணாநிதி. நல்லவேளை அடிமட்ட திமுக தொண்டனைப் போல நாதியற்றுப் போவீர்கள் என்று அவர் சொல்லவில்லை. இந்த இடத்தில்தான் நம் முதல்வரின் மனிதாபிமானத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். முதல்வர் இத்தனைதூரம் அக்கறை காட்டும் இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் எவ்வளவு மட்டமாக இருக்கின்றன என்பதை சொல்லத்தான் இந்தக் கட்டுரை. என்ன செய்வது பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு எனும் பாரதிதாசனின் சாபம் மட்டும் பலித்திருந்தால் இந்த கொடுமைகளையெல்லாம் நாம் பார்க்கவேண்டிய நிலை வந்திருக்காது.

இதை எழுதிக்கொண்டிருக்கும் 20ம் தேதியன்று சன் செய்திகளில் மாநாட்டு வேலைகள் நிறைவடைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கொடீசியா வளாகம் இதற்கு முற்றிலும் மாறான நிலையில் இருக்கிறது. நேற்று மதியம்தான் கழிவு நீரகற்றும் குழாய்களை பதிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். கண்காட்சி அரங்கில் மட்டும் இறுதிகட்ட வர்ணம் பூசும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. மற்ற இடங்களில் வேலை புயல்வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அனேகமாக கொடீசியாவின் எல்லா அரங்குகளும் இருபத்து இரண்டாம் தேதி வரை தயாராகிக்கொண்டிருக்கும் என்பதுதான் இன்றைய சூழ்நிலை.

அவசரமாக செய்யப்படும் எந்த வேலையிலும் முதலில் பலியிடப்படுவது பாதுகாப்பு. அரங்கங்கள் எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்பதை இந்தக் களேபரத்தில் யாரும் ஆய்வு செய்ய மாட்டார்கள் (சரியில்லாவிட்டால் மாநாட்டையா தள்ளிப்போட முடியும் ? அதனால்தான்). முடியாத வேலையை முடிந்துவிட்டது என்று யாராவது சொல்வார்களா என்று நினைக்காதீர்கள், கட்டிடம் தயாராகிவிட்டது என்று புளுகித்தானே தலைமைச்செயலகமே திறக்கப்பட்டது?

ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே முடிவு செய்யப்பட்ட இடத்தில் தற்காலிக அரங்குகளை அமைக்கும் பணியே இந்த அழகில் இருக்கிறதென்றால் நகரின் மற்ற இடங்களில் நடக்கும் வேலைகள் எப்படியிருக்கும் என்பதை உங்களால் ஓரளவுக்கு யூகிக்க முடியும். சில உதாரணங்களை மட்டும் பார்க்கலாம். மாநாட்டுக்கு வருபவர்கள் பலர் ரயில் மூலம் வருவார்கள். ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள நடைமேடைகள் தோண்டிப் போடப்பட்டிருக்கின்றன. இனி அங்கு வேலை நடப்பதற்கான சாத்தியமே இல்லை, (மாநாட்டுக்கு இன்னும் மூன்று நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இன்று ஒரு பணியாளர்கூட அங்கு வேலை செய்யவில்லை).

சுகாதாரத்தின் நிலை இன்னும் பரிதாபம். கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தின் பிரதான சாலையின் ஓரத்தில் சாக்கடை தேங்கிக்கிடக்கிறது. கடமையுணர்ச்சியோடு அதில் குளோரின் தூளை தூவியிருக்கிறார்கள். நகருக்கு வருபவர்களை இந்த இடம்தான் வரவேற்கப்போகிறது. இது கோவையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளுக்கு ஒரு முன்னோட்டம்தான். காந்திபுரம் பேருந்து நிலையங்களில் கூடுதல் கழிப்பிடங்கள் கட்டப்படவில்லை என்ற குறையே வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசுத் தரப்பில். காரணம் இருக்கும் கழிப்பிடங்களை மராமரத்து செய்தாலே போதும் என்ற அவலநிலையில் இருக்கிறது பேருந்து நிலையங்கள். மாநாட்டு அரங்கைச் சுற்றியும்கூட போதுமான கழிப்பிட வசதிகள் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை. (கன்டெய்னர் வடிவிலான சில கழிப்பிடங்கள் அரங்கிலிருக்கின்றன, அவை பொதுமக்களுக்கானதா என்பது பற்றிய தகவலில்லை) இந்நிலை மக்கள் கூடும் சாத்தியமுள்ள எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.

மற்ற சாலை மற்றும் பாலங்களின் கதி பற்றி சொல்லாவிட்டால் நரகத்தில் எனக்கு சைவ சாப்படுதான் கிடைக்கும். அவினாசியில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியே நான்கைந்து நாட்கள்தான் ஆகிறது. அவினாசி தாண்டி சிட்ரா வரை சாலையோரம் கொஞ்சம்போல செம்மண் கொட்டியிருக்கிறார்கள் அவ்வளவே. ஹோப் காலேஜ் பாலம் மட்டும் அபாரமான வேகத்தில் தயாராகிறது. ஒரு வாரம் முன்னால் பாலத்தின் மையப்பகுதி இருபக்கங்களுடனும் இணைக்கப்படாமல் இருந்தது. ஐந்தே நாட்களில் அது சாலையுடன் இணைக்கப்பட்டு விட்டது. ( கோவை பற்றி அறியாதோருக்கு : ஹோப் காலேஜ் என்பது ஒரு கல்லூரியின் பெயர் அல்ல, அங்கு ஒரு கல்லூரி வரப்போகிறது என்ற நம்பிக்கையினால் (hope) வழங்கப்பட்ட பெயர் என்று கேள்வி). அவினாசி சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாய் ( சில இடங்களில் சாக்கடை) மிகக்குறுகிய காங்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டு அதன்மீது நடை மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. மாநாடெனும் ஒரு வாரக் கூத்திற்குப் பிறகு மழைகாலங்களில் இது மக்கள் உயிரை வாங்கப்போகிறது.

மாநாடு பற்றிய தகவல்களைப் பெற ஒரு தொலைபேசி எண் தரப்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் இருபது பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் (ஏர்செல் இச்சேவைக்கான பொறுப்பை ஏற்றிருக்கிறது). எப்படி மாநாட்டுப் பந்தலுக்குப் போவது, நடிகை ரோகிணி நடனம் எங்கு எப்போது நடக்கும் என்பது மாதிரியான அதிமுக்கியமான தகவல்களை மட்டுமே இங்கு பெறமுடியும். கருத்தரங்கில் பங்கேற்பது பற்றி யாரேனும் தகவல் கேட்டால் (அதாவது ஏற்கனவே பதிவு செய்தவர்கள்) அவர்களுக்கு சொல்வதற்கென ஒரு பதில் தரப்பட்டிருக்கிறது, “உங்களுக்கு அது பற்றிய மின்னஞ்சல் விரைவில் வரும்”. பங்கேற்பவர்கள் தங்கள் பயணத்திட்டத்தைப் பற்றி ஏதும் சந்தேகமிருந்தால் தொடர்பு கொள்ள ஒரு தொலைபேசி எண்கூட உதவிமைய ஊழியர்களிடம் கிடையாது ( 19ம் தேதி வரையான நிலவரம்).  ஒரு வெளிநாட்டு அன்பர் (ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க இருப்பவர்) இரண்டு நாட்கள் போராடி அவரது அமர்வு குறித்து உறுதி செய்ய ஒரு தொடர்பு எண்ணை உதவிமையத்திலிருந்து பெற்றிருக்கிறார். (உதவி மைய ஊழியர்களும் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அதைப் பெற்றிருக்கிறார்கள்.) கடைசியில் அது ஒரு கிணற்று மோட்டார் விற்பனை செய்யும் கடையின் தொலைபேசி எண். இன்றுவரை (20 சூன்) பலருக்கு ஆய்வரங்கம் பற்றிய மின்னஞ்சல் அனுப்பப்படவில்லையாம்.

கடைசியாக சாப்பாட்டுக்கு வரலாம். உணவுத்திருவிழாவெல்லாம் நட்த்துவதாக சொல்லியிருக்கிறார்கள். மதிய உணவை முப்பது ரூபாய்க்கு வழங்குகிறார்களாம். அதற்கு அரசின் மானியம் முப்பது ரூபாயாம். மூடிய அறைக்குள் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சாப்பாடு அறுபது ரூபாய் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று கலந்த சாதங்களும் அரை லிட்டர் தண்ணீரும் தொட்டுக்கொள்ள சிப்சும் அடங்கிய சாப்பாடு அறுபது ரூபாய் என்பது பகல் கொள்ளை.  இந்தக் முடிவை எடுத்த குழுவின் பெயர் விருந்தோம்பல் குழுவாம். வெறும் சாப்பாடு மட்டும் போதுமா? டாஸ்மாக் இல்லையில்லை அரசு மதுபானக்கடை ஊழியர்கள் மாநாடு முடியும்வரை விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வரவேண்டுமாம். தமிழின் சீரிளமையை “செயல் மறந்து” வாழ்த்த அரசு செய்திருக்கும் ஏற்பாடு இது.

அரை நாள் சுற்றிப்பார்த்த வரையில் கருணாநிதியை திருப்திப்படுத்த மட்டுமே வேலை நடப்பது கண்கூடாக தெரிகிறது. அவர் பார்வையில் படும் இடங்களில் மட்டும் முழுமையாகப் பணிகள் முடியுமாறு வேலை நடக்கிறது. கலைஞரின் பாணியில் சொல்வதானால் பொதுமக்களையும் அறிஞர்களையும் புறந்தள்ளி கருணாநிதியை பொதுவாக்கியே அரசு எந்திரம் வேலை செய்துகொண்டிருக்கிறது.

சரியான ஒரு விசயம்கூட உன் கண்ணில்படவில்லையா என்று கேட்பீர்கள். இந்தக்கேள்விக்கு பதில் தேட கடுமையாக முயற்சிக்குப் பிறகு ஒரு செய்தி கிடைத்துவிட்டது. மாநாட்டு நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடகவியல் அரங்கில் முழுக்க முழுக்க கருணாநிதியின் நாடகத்திறமை பற்றியே தலைப்புக்கள் இருக்கின்றன. நாள் முழுக்க நாடகம் நடத்தியே காலத்தை ஓட்டும் கலைஞரைவிட வேறு யாரையேனும் இந்தத் தலைப்பின் கீழ் ஆய்வு செய்வது சாத்தியமா என்ன? என்ன ஒரே குறை உண்ணாவிரதம் எனும் சர்வதேசப் புகழ்பெற்ற நாடகம் பற்றி ஒரு தலைப்பும் அந்த அரங்கில் இல்லை.

என்ன தமிழைப்பற்றி எதுவுமே சொல்லக்காணோமே என்று யோசிப்பீரேயானால் உலகின் சிறந்த அய்யோ பாவம் நீங்கள்தான். மாநாட்டு நிகழ்ச்சி நிரலிலேயே ஆங்கிலம்தான் துள்ளி விளையாடுகிறது. வழக்கமாக ராணுவத்தினர் தங்கள் ஆயுதங்கள் எதிரிக்கு கிடைக்காதிருக்க அதை கைவிடும்போது அழித்துவிடுவார்கள். கருணாவின் ஆயுதம் தமிழ். இனி அவரது வாரிசுகளுக்கு அந்த ஆயுதம் தேவையில்லை, அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.

“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – ஒரு ஏமாற்றத்தின் கதை( அல்லது) இன்னுமாடா இந்த உலகம் இவங்கள நம்பிகிட்டிருக்கு?” இல் 9 கருத்துகள் உள்ளன

  1. thank you villavan for writing about classical tamil conference and i really amazed about they spent around 500 crore and if they actully spent that much money means coimbatore will be good untill next generation but sure they did not done. and this article is very good

  2. சீ…ச்சே… செம்மொழி மண்டப உலா

    கோவைப் பந்தலிலே,
    கோடிகளிலே
    தமிழுக்குக் காப்பு.
    முன்வரிசையில் முதல்வர்;
    பாராட்டுகளில் திகட்டிப் போனார்
    அடுத்த தேர்தலில்
    தமிழ்க் குடிகளின்
    ஓட்டுகளில் மூழ்கிப் போவார்
    முதல்வருக்குப் பக்கத்தில்அமைச்சர் பெருமக்கள்;
    ஆடி, ஓடி, ஆய்ந்து, ஓய்ந்து, அலுத்து,
    முதல்வர் சிரித்தால் இவர்களும் சிரித்து,
    அவர் அழுதால், இவர்கள் மூக்குச்சிந்தி,
    அரங்கத்தில் ஓய்வெடுக்கிறார்கள்.
    பாராட்டும் பதவிகளும்
    அவர்களின் வாரிசுகளுக்கும்உண்டென்றரிக.
    பின் வரிசயில்
    பாதம் நக்கிப் பாவலர்கள்.
    எச்சிலால் பாதம் கழுவி
    பரிசில் வாங்க்கிப் போவார்கள்.
    பணமுடிப்பும் உண்டு.
    சிலருக்கு மகாபலிபுரத்தில்
    நிலவொளியில்
    அடிவருட
    வருடாந்திர வாய்ப்புமுண்டு.
    பிற்பாடு பேச்சாளர்கள்.
    ”தமிழே, இலக்கியமே,எங்களை வாழ வைக்கும்எம்குலத்தாயே”
    என்றுசிலேடையில் சிலாகிப்பார்கள்.
    ஆனால், தன்னைப் புகழ வேண்டாமெனக் கையமர்த்தும் முதல்வர்.
    பெருந்தன்மயே, உன் பேர்தான் கருணா நிதியா?
    அதற்கும்பின்னே அதிகாரிகள்,
    அலுவலர்கள்.
    ’அடுத்த பிரமோசனுக்கு?’
    கண்டிப்பாக ஆகட்டும் பார்க்கலாம் –
    கருணா நிதி ஆட்சியிருந்தால்.
    கண்டிப்பாக உங்களுக்கு ‘எஸ்மா’ –
    மண்புமிகு மேடம் வந்தால்.
    அதற்குப் பின்னால்
    கூஊஊஊட்டம்.
    கட்டுக்கடங்கா உடன்பிறப்புக்கள்.
    தமிழ் வெறி தலைக்கேறி,
    டப்பாங்க்குத்து ஆடினால் தேவலைஎன்னும் நிலையிலும்,
    அரங்க நாகரீகமும்,
    அரசியல் நாகரீகமும்,
    தமிழ்ப் பண்பும்,
    வட்டத்தின் முறைத்தலும்,
    அவர்களைத் தடுத்தாள்கிறது.
    அதர்கப்பாலே
    கூர்ந்து பார்த்தால்,
    நூற்றுக்கணக்கில்
    அலைகடலெனத் திரண்டு
    காற்று வாங்கிக்கொண்டிருக்கும்
    பூர்வத் தமிழ்க்குடிகள்.
    ஒரு ரூபாய் அரிசியின்
    செரிமானத்துக்காக
    காலாட நடந்துவந்தவர்கள்.
    – புதிய பாமரன்

பின்னூட்டமொன்றை இடுக