விஜயலட்சுமியுடனான பெரும் சமரில் சீமான் வெற்றி பெறவில்லை, அம்பலப்பட்டுப் போயிருக்கிறார். எப்படி?

சீமான் விவகாரத்தில் பெரியண்ணி வழக்கை வாபஸ் பெற்றாலும் அவர் செய்தது சிறப்பான சம்பவம் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. விஜயலட்சுமி ஊசலாட்ட மனநிலை கொண்டவர். யார் மீதும் அவரால் முழுமையாக நம்பிக்கை வைக்க முடியாது யாருக்கும் நம்பகமானவராக இருக்க அவரால் முடியாது என்பதை அவரது காணொளிகளை பார்க்கும் யாராலும் சொல்லிவிட முடியும். அப்படிப்பட்ட ஒருவரை யாராலும் சுலபமாக எதிர்கொண்டு இருக்க முடியும். ஆனால் சீமானால் ஏன் அது முடியவில்லை? காரணம் சீமானின் பர்சனாலிட்டி அதைவிட கேவலமானது. ஆகவே இங்கே விஜயலட்சுமி சுபாவம் நம் பிரச்சனை அல்ல, மேலும் அதனால் நமக்கு எந்த நட்டமும் இல்லை.

ஆனால் அவர் அம்பலப்படுத்தி இருக்கும் செய்திகள் தமிழகத்திற்கு மிக முக்கியமானவை. சீமான் ஒரு கோழை என்பதையும் சுலபத்தில் நிதானம் இழக்க கூடியவர் என்பதையும் குறைந்தபட்ச அவை நாகரீகம் இன்றி பேசுபவர், பெண்களின் மீது எவ்விதமான மதிப்பும் மரியாதையும் கொண்டிராதவர் என்பதையும் தன் ஒற்றை குற்றச்சாட்டின் மூலம் நிரூபித்திருக்கிறார் விஜயலட்சுமி. மேலும் இந்த தகவல்கள் எதனையும் விஜயலட்சுமி தன் வார்த்தைகளால் விவரிக்கவில்லை. சீமான் தன் வாயால் அவற்றை உலகத்திற்கு காட்டும்படி செய்திருக்கிறார்.

நேற்றைய சீமானது நேர்காணல் இயல்பில் சீமானின் ஆளுமை எத்தனை மட்டமானது என்பதை பட்டவர்த்தனமாக காட்டியது. ஒரு ஊடகவியலாளரை குறிப்பிட்டு அவர் வீட்டுப் பெண்கள் இப்படி பாலியல் குற்றச்சாட்டு வைத்தால் அதை வேண்டுமானால் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பதில் சொல்கிறார். அதற்கு அவர் கட்சியினர் கைதட்டுகிறார்கள். குடித்துவிட்டு கும்மாளமிடும் இடத்தில் கேட்க வாய்ப்புள்ள பேச்சை எல்லாம் ஒரு தலைவன் என்று தன்னை நம்பிக் கொண்டிருக்கிற நபரின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்க முடிகிற அவலம் தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

போகிற போக்கில் பிரபாகரனை துப்பவும் அண்ணன் மறக்கவில்லை. பிரபாகரன் தலைமையில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெரிய அண்ணியை ஏமாற்றிய சம்பவத்தை மட்டும் குறிப்பிடவில்லை. தனது பிரஸ்மீட்டில் கூட பிரபாகரன் பிள்ளை நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று அவரையும் சந்திக்கு இழுத்தார் சீமான்.

தன் கட்சி உறுப்பினர்களை அடியாள்படை போல பயன்படுத்தி இருக்கிறார். விஜயலட்சுமி மீது புகார் கொடுக்க தன் மகளிர் அணியை அனுப்பினார். அவர்களும் சீமானை போலவே பேசி அம்பலப்பட்டார்கள். இன்னொரு கும்பல் வீரலட்சுமி காவல் நிலையம் வந்தபோது அசிங்கமாக பேசி வீரம் காட்டியது. முத்தாய்ப்பாக என் தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா என்று சீமானே வெளிப்படையாக உசுப்பி விட்டார். அதன் பலன் இன்று (16.09.2023) திருவள்ளூரில் வீரலட்சுமி மீது தாக்குதல் தொடுக்க சீமான் பக்த பார்ட்டி முயற்சி செய்த செய்தி வந்திருக்கிறது. 

சீமான் அறிவித்த வேட்பாளர் குறித்து அதிருப்தி தெரிவித்து தனது கட்சிக்காரன் உணர்ச்சிவசப்பட்டால் அதனை கேவலமாக பேசி எதிர்கொள்ளும் சீமான், விஜயலட்சுமி விவகாரத்தில் தன் கட்சிக்காரன் உணர்ச்சிவசப்படுவதற்காக சிக்னல் கொடுக்கிறார். ஆக அவருக்கு கட்சி என்பதும் தொண்டர்கள் என்பதும் தனக்கு பயன்படும் ஒரு மெட்டீரியல் மட்டுமே என்பது இந்த விவகாரத்தில் ஊர்ஜிதமானது.

ஒரு வழக்கை நேர்மையாக எதிர்கொள்ளும் பண்பு சீமானுக்கு இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வினோதத்தையும் தமிழ் சமூகம் இன்றுதான் பார்க்கிறது. விஜயலட்சுமி, வீரலட்சுமி இருவரும் என் முன்னால் இருந்தால்தான் விசாரணைக்கு ஆஜராக முடியும் எனும் கோரிக்கையை உடன் இருக்கும் வழக்கறிஞர் தம்பிகளே எழுதுகிறார்கள் என்றால் இந்த மொத்த கும்பலின் அறிவுத்திறன் மீது நமக்கு சந்தேகம் எழுகிறது. கைது பண்ணிடுவியா என்று போலீசுக்கும் அரசுக்கும் சவால் விடுகிறார். ஒரு வழக்கிற்கு தொடைநடுங்கிப்  போய் ஓடி ஒளியும் ஒரு மனிதர் அரசுக்கு சவால் விடுவதும் பத்திரிகையாளர்களை படு கேவலமான முறையில் (அதாவது தனக்கே உரிய முறையில்) இழிவு படுத்துவதும் சீமானின் ஆளுமை எத்தனை தரம் தாழ்ந்தது என்பதை வெளிப்படுத்துகின்றது.

போலீஸ் எப்படி வேலை செய்ய வேண்டும், குற்றம் சாட்டுபவருக்கு துணைக்கு வருபவருக்கான தகுதிகள் என்னென்ன, ஊடகங்கள் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பது பற்றி விலாவாரியாக கிளாஸ் எடுக்கும் சீமான் விஜயலட்சுமிக்கு பணம் கொடுத்த செய்தி குறித்து பேச மறுக்கிறார். இவர் தம்பிகள் அவரை இழிவாக நடத்தியது குறித்து பதில் சொல்ல மறுக்கிறார். இந்த ஒழுக்கசீலர் எதற்காக ஒரு அதிமுககாரனை வைத்து விஜயலட்சுமியிடம் சமரசம் பேசினார் என்பது குறித்து பதில் சொல்ல மறுக்கிறார். ஆனால் இவர் உலகில் உள்ள எல்லோரையும் கேள்வி கேட்பார். அடிப்படை ஜனநாயக பண்பு இல்லாத இந்த நடிகர் கையில் ஒரு நகராட்சி தலைமை கிடைத்தால் கூட அது விளங்காது. 

ஒரு சராசரி அரசியல் அறிவுள்ள நபருக்கு சுலபத்தில் சீமானின் ஆளுமையும் தற்குறித்தனமும் புரிந்துவிடும். ஆனாலும் அவர் பின்னால் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கூட்டம் இருக்கிறது. இது சற்றே புரிந்து கொள்ள கடினமான செய்திதான். ஆனால் அது இயலாத காரியம் அல்ல. அடையாள சிக்கல் இருக்கிற, வெறும் உணர்ச்சியின் வழியே மட்டும் அரசியலை புரிந்து கொள்ள முயல்கிற இளைஞர் கூட்டத்தை சீமான் ஈர்ப்பது என்பது தவிர்க்க இயலாத நிகழ்வு. எப்படி இன்றைய சிறார்கள் டிடிஎஃப் வாசன் பின்னால் போகிறார்களோ அதற்கு ஒப்பான அரசியல் ரசிகர் மன்றம்தான் சீமான் கட்சி. சீமான் வாயால் வண்டி ஓட்டும் அரசியல் டிடிஎப். 

அதனை அம்பலப்படுத்த கிடைத்திருக்கிற ஒரு வாய்ப்புதான் விஜயலட்சுமியே தவிர இங்கு அவரது நிலையற்ற மனோநிலை என்பது நமக்கு அவசியமானதல்ல.  பின்னணியில் அவரது பொருளாதார தேவைகள் இருக்கலாம். அல்லது அவரே குறிப்பிடும்படி சீமான் கொடுத்த போலியான வாக்குறுதிகள் இருக்கலாம். அடிப்படையான செய்தி, சீமான் ஒரு பாலியல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். அந்த குற்றத்தின் எதிர்வினைகளை சந்திக்க பயந்து கோழைத்தனமாக சமரசம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். அந்த சமாதான நடவடிக்கையில்கூட ஊழல் செய்திருக்கிறார் (அதாவது கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை). அதில் கடுப்பாகி சீனியர் அண்ணியார் மீண்டும் புகார் கொடுக்க அண்ணன் நிதானம் இழந்து, இழிவாகப்பேசி, மிரட்டி தன் நிஜ முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக தன் கட்சியை சிந்திக்கும் திறன் இல்லாத ஜோம்பி படையாக மாற்றியிருக்கிறார் என்பதும் அம்பலமாகி இருக்கிறது. 

பெரிய அண்ணி இல்லாவிட்டால் இவற்றை எல்லாம் நாம் இளைய தலைமுறைக்கு புரிய வைத்திருக்க முடியாது. காரணம் சீமான் வசனத்துக்கு மறுப்பு சொல்லியே நாம் ஆயுளை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஆக, சீமானுக்கு எதிரான வலுவான ஆயுதங்களை விட்டுச் சென்றிருக்கிறார் விஜயலட்சுமி. 

அடுத்த ஜெயலலிதா ஆகும் எடப்பாடியின் முயற்சி பலிக்குமா?



அடுத்த ஜெயலலிதா அல்லது எம்.ஜி.ஆர் ஆவதற்கான பெரியதொரு நகர்வை பெரும் பொருட்செலவில் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. புரட்சி தமிழன் பட்டம், ஹெலிகாப்டர் பூ தூவல், கார் டயரை விழுந்து வணங்கிய தொண்டர் என பில்டப் எல்லாம் பக்காவாக அரங்கேறி இருக்கிறது. ஆனால் அது நடக்க வாய்ப்புள்ள விசயமா??


அதிமுகவின் முழு அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமி கைக்கு வந்துவிட்டது என்பதில் சந்தேகிக்க எதுவுமில்லை. பாஜகவுக்கு அதிமுகவை நிர்வாகிக்க கிடைத்திருக்கும் இருப்பதிலேயே சிறந்த மேலாளர் எடப்பாடிதான். மேலாளர் தன்னை முதலாளி போலவே எண்ணிக் கொள்வதற்கான சுதந்திரத்தை பாஜக வழங்கும் அளவுக்கு பொருத்தமான மேலாளராக பழனிச்சாமி இருக்கிறார். ஜாதியப் பின்புலம், பணத்தை இறைக்கும் திறன், குறைந்தபட்சம் கட்சியை கட்டுப்படுத்த முடியும் அளவுக்கான நிர்வாக வலைபின்னல் எல்லாமே இன்றைய தேதியில் அதிமுகவில் வேறு யாரிடமும் கிடையாது. அரசியல் பார்வையாளர்கள் தொலைக்காட்சிகளில் குறிப்பிடுவதைப் போல 2024 பாராளுமன்ற தேர்தல் வரை எடப்பாடியின் தலைமை பொறுப்புக்கு சிக்கல் வருவதற்கான வாய்ப்பு சற்றேறக்குறைய பூஜ்யம்.

எதிர் தரப்பில் சண்டையிடுவதாக காட்டிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ், தினகரன் தரப்புக்கும் இது தெரியும். அவர்கள் அதிமுகவை கைப்பற்றுவோம் என பேசுவதன் ஒரே நோக்கம் அடுத்த தேர்தலில் தங்களுக்கான குறைந்தபட்ச பங்கை பாஜகவிடம் பெறுவது மட்டுமே. ஒருவேளை எடப்பாடி தலைமையை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதுவே அவர்களது அரசியல் வாழ்வுக்கு முடிவுரையாக இருக்கும் என்பதால் அந்த சண்டையை தொடர்வதை தவிர ஓபிஎஸ் தரப்புக்கு வேறு வாய்ப்பு கிடையாது.

முன்பு அதிகாரத்தை கையில் வைத்திருந்த ஒரு ஜாதி, தனக்கு இணையான வேறொரு சாதியிடம் அந்த அதிகாரத்தை பறி கொடுத்து இருக்கிறது. அதனால் இயல்பாக அவர்களிடையே எழும் கோபத்தை ஓபிஎஸ் தினகரன் சசிகலா தரப்பால் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனும் ஒற்றை அரசியல் கருவி மட்டுமே அவர்கள் வசம் இருக்கிறது.
இந்த காரணங்கள் எடப்பாடி பழனிச்சாமியை எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதாவிற்கு இணையான ஒரு தலைவராக மாற்றி விட முடியுமா?


அதற்கு ஜெயலலிதா மீதான கட்சியினரின் பயம், விசுவாசம் இவற்றுக்கான காரணம் குறித்து நாம் பரிசீலனை செய்தாக வேண்டும். ஜெயலலிதாவின் மீதான அச்சத்தை தக்க வைத்ததன் மிக அடிப்படையான காரணம் அவர் தன்னை அணுக முடியாத தொலைவில் நிறுத்தியதும், கட்சியில் எந்த நேரமும் யாருக்கும் எதுவும் நடக்கலாம் எனும் நம்பிக்கையை உயிர்ப்போடு வைத்திருந்ததும்தான். அலிபாபா குகை போன்ற பிரம்மிப்பை போயஸ்கார்டன் வீடு ஜெயலலிதா உயிரிழக்கும் நாள் வரை தக்க வைத்திருந்தது. யார் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை ஜெயா செய்திகளின் அறிவிப்பின் வழியே மட்டுமே ஒருவர் அறிய முடியும். இத்தகைய மர்மங்கள் ஒரு கட்சியின் எல்லா அணிகளிடமும் ஒரு திகிலை பராமரிக்கும். இந்த சஸ்பென்சை பயமாக மாற்றியதில் அதிமுகவில் உலவும் கதைகளுக்கு பெரும் பங்கு உண்டு. ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் கூப்பிட்டு வைத்து அடிப்பார் எனும் கதைகளும் ஜெயலலிதா போயஸ் கார்டனிலோ அல்லது வேறு இடங்களிலோ கட்சி ஆட்களை அடைத்து வைத்து எழுதி வாங்குவார் எனும் கதைகளும் தொடர்ந்து ஊடகங்களில் உலவிக்கொண்டிருந்தன. அதற்கு அதிமுக தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வெளிவந்ததாக இதுவரை தகவல் இல்லை.


நல்லது, இப்படி பயந்து நடுங்கி ஏன் கட்சிக்குள் இருக்க வேண்டும் எனும் கேள்வி பார்வையாளர் ஒருவருக்கு எழுவதை தவிர்க்க முடியாது. இதற்கான பதில் மிக எளிமையானது. ஜெயலலிதா அல்லது எம்ஜிஆர் இருவரும் கட்சியை நடத்திய காலம் முழுக்கவே யாருக்கு எப்போது எந்த பதவி கிடைக்கும் என்பதை அனுமானிக்கவே முடியாது. ஒரு லாட்டரி சீட்டு குலுக்கலைப் போல யார் ஒருவருக்கும் ஜாக்பாட் அடிக்கலாம் எனும் நிலையை அவர் கட்சிக்குள் பராமரித்தார். எதிர்க்கட்சித் தலைவரை தள்ளுவண்டி என கிண்டலடித்த ஒற்றை சம்பவத்தில் விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.

ஜெயலலிதாவிற்கு நாய்க்குட்டி பரிசாக கொடுத்து தஞ்சாவூரில் தலை எடுத்தார் கோபால் எனும் நிர்வாகி. இந்த பரவசம் எல்லோரையும் அந்த அடிமைத்தனத்தை மகிழ்ச்சியோடு ஏற்க வைத்தது. இது ஒரு சூதாட்ட அடிமையின் மனோநிலை. ஒரு நாள் தான் ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கையில் வெறித்தனமாக ஆடுகிறான் இல்லையா அப்படியானது.
இந்த இரண்டு வாய்ப்புகளை எடப்பாடியால் பயன்படுத்த முடியாது என்பது அவர் ஜெயலலிதா ஆகும் முயற்சிக்கான முதல் முட்டுக்கட்டை.

அவரால் யாரையும் தடாலடியாக பதவி நீக்கம் செய்ய முடியாது. கட்சிக்குள் இருக்கும் ஒவ்வொரு நிர்வாகியும் இப்போதைக்கு தன்னளவில் ஒரு அதிகார மையங்கள். ஒவ்வொருவருக்கும் தன் சக்திக்கு ஏற்ற பேர வலிமை உள்ளது. திடீர் பதவி கொடுத்து ஜெயலலிதா ஆகிவிட முடியுமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. யாரோ ஒருவருக்கு பதவி கொடுத்தாலும் அதற்காக சண்டையிட கட்சிக்குள் ஆள் இருக்கிறது. நிரப்பப்பட வேண்டிய சில பதவிகளையே எடப்பாடி இந்த பிரச்சனைக்கு பயந்து காலியாக வைத்திருக்கிறார்.


எடப்பாடியின் அடுத்த பெரும் சவால் திமுக எதிர்ப்பு வாக்குகளின் மீது இருந்த ஏகபோக உரிமை. 10 வருடங்கள் முன்பு கூட திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு ஒரே சரணாலயமாக அதிமுக தான் இருந்தது. ஆகவே திமுக எதிர்ப்பை கொண்டு இருக்கிற ஒருவன் அதிமுக பக்கம் நின்றாக வேண்டிய நிலை இருந்தது. இன்று அந்த ஓட்டு வங்கியை பங்கு போட பாஜக இருக்கிறது. திமுக எதிர்ப்பையே மூலதனமாக கொண்டு செயல்படும் சீமான் கட்சி இருக்கிறது. அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என்பது மட்டுமல்ல, இந்த நிலைப்பாட்டுடன் அதிமுகவில் இருக்கிற ஆட்களுக்கும் இனி போவதற்கு இரண்டு மெயின் கம்பெனிகள் இருக்கின்றன. அவர்கள் போனால் போகட்டும் என்றெல்லாம் எடப்பாடியால் இருக்க முடியாது. அந்த அகங்காரத்தின் உச்சியில் இருந்த ஜெயலலிதாவே ஈரோடு முத்துசாமி கட்சியை விட்டு விலகிய போது தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து சமாதானம் செய்யும் சூழல் எல்லாம் வந்தது என்பதையும் எம்ஜிஆர் எஸ்டி சோமசுந்தரம் வீட்டுக்கு போய் தோசை சாப்பிட்டு அவரை கட்சிக்கு அழைத்து வந்த வரலாறு இருக்கிறது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.


இன்றைய சூழ்நிலையில் எடப்பாடியின் மிகப் பெரும் பலம் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசுதான். பயந்து பழக்கப்பட்ட அதிமுகவினருக்கு விசாரணை அமைப்புகள் மீதான அச்சம் வேறு வாய்ப்புகளை சிந்திக்கவே விடாது. ஒருவேளை பாஜக அதிகாரத்தை இழக்கும் பட்சத்தில் எடப்பாடியால் தனது மேலாளர் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த முடியாது. அப்போது வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தமக்கான அதிகபட்ச பங்கை கேட்டு முரண்டு பிடிப்பார்கள். சசிகலா தினகரன் வகையறா இப்போது அமைதியாக இருப்பதற்கு பின்னாலும் பாஜகவின் விசாரணை அதிகாரம் தான் இருக்கிறது. அது இல்லை என்றாகும் பட்சத்தில் அவர்களாலும் அதிமுகவுக்காக பெரும் முதலீடுகளை செய்ய முடியும். இந்த சூழ்நிலையில் அப்சொல்யூட் விசுவாசத்தை எடப்பாடியார் எதிர்பார்க்க முடியாது. அது அதிமுக நிர்வாகிகள் வட்டத்தில் எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பது வேறு.


எடப்பாடி பழனிச்சாமி அதிகாரத்தில் இருந்தவரை கொங்கு வட்டார முதலாளிகளின் ஏகபோக ஆதரவு அவருக்கு இருந்தது. அது அதே வீரியத்தோடு இப்போது இருக்க வாய்ப்பில்லை. முதலாளிகள் அதிகாரத்தோடு இணங்கிப் போக விரும்புவார்களே தவிர சாதி அவர்களுக்கு வெறும் கருவி மட்டுமே. அது மட்டும் இல்லாமல் கொங்கு வட்டார தொழில்கள் வேகமாக சேட்டுமயமாகி கொண்டிருப்பதால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடிக் கொண்டிருப்பார்கள். இந்த அழகில் எடப்பாடி தூக்கி சுமப்பது என்பது அநேகமாக சாத்தியமில்லாதது.
எல்லாவற்றுக்கும் மேல் அதிமுகவின் பொது மனோநிலையின்படி யார் ஒருவரையும் தலைவராக ஒரே நாளில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு உண்டு. நாளையே அமித்ஷா தான் தலைவர் என்றானால் ஒரு மார்வாடி நமக்கு தலைவரா என்றெல்லாம் அவர்கள் யோசிக்க போவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு அமித்ஷா நாமம் வாழ்க என்று கோஷமிட அவர்களால் முடியும். இந்த நிலைத்தன்மையற்ற கூட்டத்தை கையில் வைத்திருக்க எடப்பாடி பழனிச்சாமியிடம் வரம்பற்ற அதிகாரம் இருக்க வேண்டும் அல்லது தொடர்ந்து பணத்தை இறைக்க வேண்டும்.


ஜெயாவுக்கு அன்கண்டிஷனல் ஊடக ஆதரவு கிடைக்க அவரது ஜாதி பெரிய காரணமாக இருந்தது. எம்.ஜி.ஆர் தன்னைப்பற்றிய எதிர்மறை கருத்துக்கள் வெளியே வராமல் பார்த்துக்கொள்வதில் அசாத்திய சாமர்த்தியம் கொண்டவர். இந்த இரண்டு தகுதிகளும் பழனிச்சாமிக்கு இல்லை.
நேர்மை, இரக்கம், நன்றியுணர்வு இவை மூன்றும் பழனிச்சாமிக்கு கிடையாது என்பதுதான் அவருக்கும் ஜெயலலிதாவிற்கும் இருக்கிற ஒற்றுமை. ஆனால் இதனை மட்டும் வைத்து அவரால் ஜெயலலிதா அனுபவித்த எல்லா சொகுசையும் அனுபவிக்க முடியாது என்பதே பழனிச்சாமி எதிர்கொள்ள வேண்டிய துயரம். கூடுதலாக அவர் தன் கட்சிக்குள் எழும் பாஜக எதிர்ப்பு மனநிலையால் விளையும் சேதாரங்களையும் எதிர்கொண்டாக வேண்டும். சமீபத்தில் அண்ணாமலையை எதிர்த்துப் பேச வாய்ப்பு கிடைத்த 48 மணி நேரத்திற்குள் பல அதிமுகவினர் தங்கள் பாஜக வெறுப்பை கொட்டி விட்டு சென்றார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. இது நேரடியாக வெளிப்படாது என்றாலும் இணைந்து பணியாற்றுவதில் தனது வேலையை காட்டவே செய்யும்.




ஒரு இஸ்லாமியனுக்காகவோ கிறிஸ்தவனுக்காகவோ பேசுவது என்பது ஏன் என்னுடைய கடமையாகிறது?


சீமானின் பேட்டி இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்க விரும்பாத சிலரது பொதுவான சமாதானத்தை ஒத்ததாக தெரிகிறது. அதாவது அவர்கள் எதற்காகவும் போராடவில்லை என்று குறிப்பிட்டாரில்லையா? அதனை வேறு சிலரும் வெவ்வேறு தருணங்களில் பேசி இருக்கிறார்கள். அவர்களின் வாதத்தின்படியே இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக போராடவில்லை என்றே வைத்துக் கொண்டாலும் அவர்களுக்காக நாம் நம் குரலை எழுப்பியாக வேண்டும்.


நீங்கள் ஒரு முஸ்லிமோ கிறிஸ்தவனாகவோ இல்லாத பட்சத்தில்,


உங்கள் வழிபாட்டு தலம் பொறுக்கிகளால் தாக்கப்படுமோ எனும் கவலை உங்களுக்கு அநேகமாக இருக்காது. உங்கள் ரயில் பயணத்தில் யாரோ ஒருவன் வந்து உங்கள் பெயரைக் கேட்டு, உங்களை பெயரையே காரணமாக்கி உங்களை சுட்டு தள்ளும் வாய்ப்பு அனேகமாக கிடையாது. நீ உன் தேசப்பற்றை நிருபணம் செய் எனும் அழுத்தம் உங்களுக்கு வரப்போவதில்லை. குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் எனும் அழுத்தமும் அவ்வளவு சுலபத்தில் உங்களுக்கு வந்து விடப் போவதில்லை.

மாட்டுக்கறி தின்றாய் என்றோ மாட்டுக்கறி விற்றாய் என்றோ பொது இடத்தில் அடித்துக் கொல்லப்படும் வாய்ப்பு உங்களுக்கு கிடையாது. ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் போடச்சொல்லி ஒரு கும்பல் உங்களை நடு ரோட்டில் தாக்கும் சாத்தியம் அநேகமாக இருக்காது. அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இந்த அடிப்படை பாதுகாப்பை நீங்கள் மட்டும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? அதற்கான குறைந்தபட்ச பதில் கடமையாக நீங்கள் அவர்களுக்காக பேசியாக வேண்டும்.
மேலே சொன்ன அத்தனை குற்றங்களும் உங்கள் பெயரில்தான் நடக்கின்றன. நம்மைப் போன்ற, நம்மோடு இருக்கின்ற பலரின் எண்ணத்தில் இந்தக் குற்றத்திற்கு அடிப்படையாக இருக்கும் வெறுப்பு ஊறி இருக்கிறது. அவர்களின் பலர் இந்த மரணங்களை, இந்த இழப்புகளை, சிறுபான்மையோரின் இந்த பாதுகாப்பற்ற நிலையை, அவர்களின் அச்சத்தை ரசிக்கிறார்கள். இந்த சாடிஸ்ட்களை சுற்றத்தினராக வைத்துக் கொண்டு கண்டிக்க இயலாத கோழைகளாக இருக்கிறோம் இல்லையா? அந்தப் பாவத்திற்கான குறைந்தபட்ச பரிகாரத்திற்காகவாவது நீங்கள் இஸ்லாமியர்களுக்காக பேசியாக வேண்டும்.


நாட்டு விடுதலைக்காக போரிட்டதில் தொடங்கி இந்த நாள் வரை எங்கோ நடக்கும் பேரழிவுகளுக்கு தோள் கொடுப்பது வரை அவர்கள் கொட்டிய உழைப்பை நுகர்கிறோம் இல்லையா அதற்காக,


எங்கிருந்தோ இறை பணி செய்வதற்காக கிளம்பி வந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் கல்விப் பணியை துவங்கி இன்று வரைக்கும் அதனை தொடர்கிறார்கள் இல்லையா.. அதன் பலனை தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவிக்கிறோம் அல்லவா அதற்காக, நாம் அவர்கள் மீது ஏவப்படும் இந்த கொடிய அடக்குமுறைகளை அச்சுறுத்தலை கேள்வி கேட்டு தான் ஆக வேண்டும்.


அவன் மத அடையாளத்தை வைத்து மிரட்டுவது ஒருவகையான பாசிசம் என்றால் எனக்கு நீதான் ஓட்டு போடவில்லையே என்று சொல்லிக் காட்டுவதும் ஒருவகையான பாசிசம்தான். உன் பிரச்சனைக்கு நீதான் போராட வேண்டும் என்று சொல்வது நன்றி கெட்டத்தனம்.


சக மனிதர் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது, அங்கே சுட்டவன் நெஞ்சை நிமிர்த்தி தன் தலைவனுக்கு ஓட்டு போடு என்று அதே இடத்தில் நின்று பேசும்போது – ஏதோ பந்திக்கு காத்திருப்பவன் போல உட்கார்ந்திருக்க உங்களால் முடியுமா? முடியாது என்றால் நீங்கள் பேசித்தான் ஆக வேண்டும்.


எல்லாவற்றிக்கும் மேல், நான் மனிதனாகத்தான் வாழ்ந்தேன் என்று நமக்கே நம்மை நிருபித்துக் கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகவாவது நாம் அவர்களுக்காக பேசியாக வேண்டும்.

பள்ளி வகுப்பறை சண்டைகள் எனும் பூதம்.

எதிர்மறையாக பேசுவது என் விருப்பத் தெரிவு அல்ல. ஆனால் பள்ளிக்கல்வியில் நாம் பார்க்க விரும்பாத சில பிரச்சனைகள் பூதாகரமாகி கொண்டு வருகிறது. அவை குறித்து பள்ளிகளும் வெளிப்படையாக பேசுவதில்லை. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இத்தகைய பிரச்சனைகளை சரியான வழிகளில் கையாள முயல்வதில்லை.


சில எடுத்துக்காட்டுகள் மூலம் இந்த பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்த முயல்கிறேன்.
வகுப்பறை சண்டைகள் என்பது பன்னெடுங்காலமாக நாம் பார்த்து வரும் விடயம் தான். ஆனால் இன்று அதன் வடிவம் முற்றிலும் மாறி இருக்கிறது. முன் எப்போதையும் விட இன்று அது ஆபத்தானதாகவும் கையாள இயலாததாகவும் மாற்றம் அடைந்திருக்கிறது.


எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையேயான சண்டை முற்றுகிறது அதில் ஒரு மாணவர் கோபத்தோடு உங்க அம்மாவை என்கிட்ட அரை மணி நேரம் அனுப்பு என்கிறார். மறுநாள் இந்த சண்டை பெற்றோர்களுக்கு இடையேயானதாக மாறுகிறது. திட்டு வாங்கிய மாணவனின் தாய் சம்பந்தப்பட்ட இன்னொரு மாணவனை பார்க்க வேண்டும் எனக் கேட்டு பள்ளியில் நிற்கிறார். இந்த சூழலை கையாள்வது என்பது ஆக கடினமான ஒரு விஷயம். எட்டாம் வகுப்பு மாணவன் கெட்ட வார்த்தை பேசுவது என்பது மன்னிக்கக் கூடிய மற்றும் பொறுப்போடு கையாள வேண்டிய பிரச்சனை. ஆனால் இதனை இன்னொரு பெற்றோருக்கு உணர்த்துவது சாத்தியப்படுவதில்லை.


வேறொரு வகுப்பில் ஒரு ஹைப்பர் ஆக்டிவ் மாணவர் தன் இடத்தில் நிற்காமல் வகுப்பறை முழுக்க சுற்றிக் கொண்டிருப்பதும் பிற மாணவர்களுக்கு இடையூறு செய்வதுமாக இருக்கிறார். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஒரு மாணவன்யாவது அடித்து விடுகிறார். சட்டப்பூர்வமாக நீங்கள் அந்த மாணவரை பள்ளியை விட்டு அனுப்ப இயலாது. ஆனால் அந்த மாணவரால் பாதிக்கப்படுகிற பிற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இது குறித்து தொடர்ந்து பள்ளியில் புகார் செய்கிறார்கள்.  முந்தைய பிரச்சினையை போல இதிலும் நாம் செய்வதற்கென்று எந்த தீர்வும் இல்லை.


மோசமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது என்பது பள்ளியில் மிக இயல்பாக நடக்கிற விஷயம். ஆசிரியர் இல்லாத வேளைகளில் அல்லது இடைவேளை நேரத்தில் ஒ*மால எனும் வார்த்தையை கேட்காமல் வராண்டாவை நீங்கள் கடக்க இயலாது. மிக அதிகம் பயன்படுத்தப்படுவது  தாயைக் குறிப்பிடும் இத்தகைய கெட்ட வார்த்தைகள் தான். மிக சாதாரணமாக பயன்படுத்தப்படும் இந்த சொற்கள் தான் மாணவர்களுக்கிடையே நடைபெறும் சண்டைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. அம்மாவை திட்டிட்டான் எனும் குற்றச்சாட்டை எதிர்கொள்ளாமல் நீங்கள் ஒரு பாட வேளையைக் கடப்பதும் கூட சிரமம் நான் குறிப்பிடுவது 12 வயதில் இருக்கும் மாணவர்கள் உள்ள வகுப்பறைகளையும் சேர்த்து தான் (இது சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆனது).


பல்வேறு புற காரணிகளின் காரணமாக வகுப்பறைகளில் சண்டைகள் பெருமளவு அதிகரித்து இருக்கிறது. ஆரம்பப் பள்ளிகளில் மட்டும் அல்ல மழலையர் காப்பகங்களில் கூட இது ஒரு பெரிய சிக்கலாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணங்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் போது சில பொதுவான பிரச்சனைகள் காணக் கிடைக்கின்றன.


அதீத குறும்பு செய்யும் குழந்தைகள் அதாவது ஹைபர் ஆக்டிவ் குழந்தைகள். இவர்கள் சண்டையிடுவதும் மோசமான வசைச் சொற்களைப் பயன்படுத்துவதும் நடக்கிறது.


கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள், இவர்களால் பாடத்தை புரிந்து கொள்வது சிரமம் ஆகவே வகுப்பறையில் சலிப்படைந்து குறும்பு செய்வார்கள்.


வீட்டில் பிரச்சனையை எதிர்கொள்ளும் குழந்தைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  போதுமான அளவு பெற்றோர்களின் கவனிப்பு கிடைக்காத குழந்தைகள் அல்லது அதிகப்படியான செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் அல்லது பெற்றோர் இருவருக்கிடையே தொடர்ந்து சண்டைகள் நடக்கும் வீட்டில் இருந்து வரும் குழந்தைகள் அல்லது அதிகப்படியான நொறுக்கு தீனி சாப்பிடும் குழந்தைகள் மற்றும் போதிய அளவு தூக்கம் இல்லாத குழந்தைகள் இவர்கள் எல்லோருக்கும் பாடங்கள் புரியாமல் போவதற்கும் மற்றும் சுலபத்தில் கோபம் வருவதற்குமான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.


தொடர்ந்து அதிகரிக்கும் இத்தகைய சிக்கல்கள் வகுப்பறையின் செயல் திறனை சிதைக்கின்றன. அடிக்கும் மாணவர் அடி வாங்கும் மாணவர் எனும் வகை மாதிரியை ஒரு ஆசிரியர் கையாள வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். பல வகுப்பறைகளில் இந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது ஒரு தொடர் கடமையாக இருக்கிறது. அது மட்டும் இன்றி இது பல இடங்களில் பெற்றோர்களின் சண்டையாகவும் மாறுகிறது. சில மாணவர்களுக்கு எதிராக பல பெற்றோர்கள் பள்ளியில் புகார் செய்யும் போக்கை உங்களால் அவதானிக்க முடியும்.


பள்ளிகளில் மனநல ஆற்றுப்படுத்துனரை நியமித்தாலும் கூட வகுப்பறைகளில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் 10 சதவிகிதத்தைகூட சரி செய்ய இயலாது. நாம் கவனிக்க மறந்த மற்றும் புதிதாக உருவாக்கிய பல்வேறு தவறுகளின் விளைவே இத்தகைய சிக்கல்கள் எல்லாம். ஆகவே அதனை சரி செய்வது என்பது பள்ளியோடு தொடர்புடைய எல்லா தரப்பு ஆட்களும் வேலை செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.


இதில் சில பிரச்சனைகளை தீர்க்க முடியும். சிலவற்றிற்கு என்ன முயன்றாலும் தீர்வு கிடைக்காமல் போகலாம். ஆனால் இப்படியான ஒரு சூழல் பள்ளிகளில் இருக்கிறது, அது இன்னும் இன்னும் கடினமானதாக மாறிக் கொண்டிருக்கிறது எனும் உண்மையை உரியவர்கள் எல்லோரும் அறிந்து கொள்வது அவசியம். குறைந்தபட்சம் அது குறித்து ஒரு அறிவியல் பூர்வமான கணக்கீட்டை அல்லது ஆய்வை செய்வது முக்கியம். என்ன பிரச்சனை இருக்கிறது, அதன் தீவிரம் எப்படி இருக்கிறது, அது வளர்ந்து வரும் வேகம் என்ன என்பது குறித்த ஒரு தோராயமான கணிப்பு இருந்தால் மட்டுமே நம்மால் தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.


ஆனால் இங்கு பிரச்சனையிலிருந்து தப்பி ஓடும் செயல்தான் எல்லா பக்கமும் நடக்கிறது. யாரும் சிக்கலை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை, காரணம் அது உருவாக்கும் அச்சத்தை எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை. 

காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம்

(நவம்பர் 30, 2018 அன்று வினவில் வெளியான கட்டுரை)

சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் ஒரு தோழரோடு உரையாடுகையில் அவர் குறிப்பிட்டார் “இது செத்துக்கொண்டிருக்கும் நகரம், இங்கு செட்டில் ஆவது குறித்து சிந்திக்காதீர்கள்”. அவை ஏதோ விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகள் அல்ல. பழைய தஞ்சாவூரை வேட்டையாட பல்வேறு பெருந்திட்டங்கள் காத்திருக்கின்றன.

நிலக்கரி, மீத்தேன், பாறை எரிவாயு, பெட்ரோல் என பல அகழ்வுத் தொழில்கள் முற்றுகையிடவிருக்கின்றன. மன்னார்குடி – முத்துப்பேட்டைக்கு இடையே உள்ள எங்கள் கிராமம் எப்போது வேண்டுமானாலும் நிலக்கரி அகழ்வுப் பணிகளுக்கு கைப்பற்றப்படலாம் (பத்திரப்பதிவின் போது அந்த எச்சரிக்கை தரப்படுகிறது). மீத்தேன், ஷேல் கேஸ், பெட்ரோல் வெயிட்டிங் லிஸ்ட் ஊர்கள் தனி.

தஞ்சை டெல்டா பன்னெடுங்காலமாக வளமான பூமிதான். ஆனால் அங்கிருந்த பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வறுமையில்தான் இருந்தார்கள். உழைப்பதைத்தவிர வேறெதையும் அறியாமல் வாழ விதிக்கப்பட்டவர்கள் அவர்கள். முப்போகம் விளையும் காவிரி வடிநிலத்தில்தான் என் அப்பாவும் மற்றவர்களும் மார்கழி மாதத்தின் பசியை வெறும் முருங்கைக்கீரையைத் தின்று சமாளித்திருக்கிறார்கள். என் ஒன்றுவிட்ட சகோதரர்களும் சகோதரிகளும் பாதி இடிந்த வீட்டில் பல வருடகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு சன்ன அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை எந்த உறவுக்காரர்கள் வீட்டிலும் சாப்பிட்டதாக நினைவில்லை. ஐ.ஆர்.20 அரிசியே அப்போது அரசு வேலையில் இருப்போர் வீடுகளில்தான் இருக்கும். அதிகம் தண்ணீர் கலக்காத காபி டீ முதல் அழுது வடியாத குண்டு பல்புகள் வரையான அல்பமான தேவைகள்கூட கடந்த சில ஆண்டுகளில்தான் சாத்தியமானது.

தஞ்சாவூரின் வளமும் அந்த மக்களின் உழைப்பும் எல்லா காலத்திலும் மிக சொற்பமானவர்களை மட்டுமே வசதியோடு வைத்திருந்தது. சமீபகாலத்தில் பரவலாக கிடைத்திருக்கும் மிகச்சொற்ப வசதிகளும்கூட வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆட்களால் கிடைத்ததுதான். இன்னமும் விவசாயத்தை நம்பி வாழும் எங்கள் உறவுக்காரர்கள் வீடுகளில் தரித்திரம் மட்டும்தான் சவுகர்யமாக இருக்கிறது. வளைகுடா வேலைகளும் திருப்பூர் வேலைகளும் இல்லாவிட்டால் தஞ்சையில் பட்டினிச் சாவுகள்கூட தினசரி செய்தியாக இருந்திருக்கும். நேர்மையாக சொன்னால் விவசாயம் தஞ்சை மக்களை காப்பாற்றவில்லை மாறாக மக்கள்தான் வெளியே வேலைக்குப் போய் விவசாயத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கஜா புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் தொலைக்காட்சிகளில் பேசிய விவசாயிகளில் பலரும் ஆயிரக்கணக்கில் செலவிட்டு உரம் போட்டதாக சொல்லித்தான் அழுதார்கள். அவ்வப்போது பசுமை விகடன் வாசிக்கும் மத்தியதர வர்க்கம் விவசாயம் ஒரு இலாபகரமான தொழில் என்பதாக கற்பனை செய்துகொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அடுத்த வெள்ளாமைக்கான கடனை இப்போதே பலர் வாங்கியிருப்பார்கள். தஞ்சாவூரில் இத்தனை குடிசைகள் இருக்கும் செய்தி தஞ்சையில் வசிக்கும் பல நகரவாசிகளுக்கே இப்போதுதான் தெரிந்திருக்கும். உங்கள் கிராமங்களில் இருந்து பாலை கொண்டுவருகிறோம் எனும் பழைய ஆரோக்யா பால் விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும், அதே கிராமங்கள்தான் இப்போது யாரேனும் தன்னார்வலர்கள் பால் கொண்டு வருகிறார்களா என காத்திருக்கிறார்கள்.

புயல் அபாயம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் எதற்கு தென்னை விவசாயம் என அதி புத்திசாலித்தனமான கேள்விகளையும் ஆங்காங்கே கேட்க நேர்கிறது. எதை விதைப்பது என்பதை விவசாயிகள் தெரிவு செய்யும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. பட்டுக்கோட்டையை தாண்டி காவிரித் தண்ணீர் பாய்வதெல்லாம் அதிசயமாக நடக்கும் சம்பவம். அதனை நம்பி நெல்லோ கரும்போ நடுவது தற்கொலை முயற்சி. தண்ணீர் இல்லாவிட்டாலும் பிழைத்துக்கொள்ளும் பயிர்களை நோக்கி மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பெரும்பான்மை மாற்றுப் பயிர்களை அரசுதான் பரிந்துரை செய்கிறது (காவிரி நீரை பெற்றுத்தர முடியாத கையாலாகாத்தனத்தை மறைக்க). பாமாயில் உற்பத்திக்காக எண்ணைப் பனை விளைவிக்கச்சொல்லி அரசு ஊக்குவித்தது. நம்பி பலரும் நட்டார்கள், பிறகு அம்முயற்சி அப்படியே கைவிடப்பட்டது. நட்டவர்கள் நட்டாற்றில் நின்றார்கள் (மரங்களை அப்புறப்படுத்தி பிறகு அதே வயலில் சிறு பயிர்களை நட நீங்கள் மீண்டும் கணிசமாக செலவிட வேண்டியிருக்கும், பிறகு ஓரளவு விளைச்சலைக் காண நீங்கள் இரண்டொரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்).

வெளியே வேலை பார்த்து எதற்கு அவர்கள் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்?

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது (மேலும் சில காரணிகளும் இருக்கலாம்). நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்பு முதல் காரணம். அதுதான் அவர்களை நிலத்தை சும்மா போட்டுவைக்க விடாமல் தடுக்கிறது. திருப்பூரில் குடியேறிய என் நண்பரின் மனைவி, வீட்டில் சில காய்கறிச் செடிகளை விளைவித்தார். கத்திரியில் பூச்சி அடித்துவிட்டது. உடனே பூச்சி மருந்து வாங்கி வரச்சொல்லி நண்பரை நச்சரித்தார். இந்த நாலு கத்திரியில் என்ன கிடைக்குமென்று இப்படி மெனக்கெடுகிறீர்கள் எனக் கேட்டேன். அவருக்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது, அவரால் தன் பயிர்கள் நாசமாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதன் பலன்களுக்கும் செலவுக்கும் ஒத்துப்போகுமா என்பதைக்கூட அவர் கணக்கிட முயலவில்லை. அவருக்கு அவர் செடிகள் வீணாகிவிடக்கூடாது அவ்வளவே. மழை பொய்த்து, ஆறு வறண்ட காலங்களில் லாரியில் தண்ணீர் வாங்கி நெல்லுக்கு பாய்ச்சிய விவசாயிகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வெறுமனே இலாப நட்டக் கணக்குப் பார்த்தால் முக்கால்வாசி விவசாயிகள் பயிர்தொழிலைவிட்டு என்றைக்கோ ஓடியிருக்க வேண்டும்.

இந்த பிணைப்பை ஓரளவுக்கு அர்த்தமுடையதாக்க பல விவசாயிகள் வெளிநாடுகளில் கடுமையாக உழைத்து, அந்தப் பணத்தை தென்னை போன்ற நீண்டகால பணப்பயிர்களில் முதலீடு செய்கிறார்கள். பத்து வருடங்கள் பெரிய வருவாய் இருக்காது என்றாலும்கூட வேலை செய்ய முடியாமல் ஓய்ந்துபோய் ஊருக்கு வரும்போது தம் வயலில் (தோப்பில்) கொஞ்சம் உழைத்து ஓரளவுவேனும் சம்பாதிக்கலாம் எனும் நம்பிக்கையில் அப்படி செய்தவர்கள் ஏராளம். பணப்பயிர்கள் முதலில் பயிரிடுவோருக்கு ஓரளவு இலாபம் கொடுக்கும். அதை நம்பி தென்னை பயிரிட்டவர்கள் ஏராளம். பாதுகாப்பற்ற எதிர்காலம், வங்கி முதலீட்டில் இலாபமின்மை மற்றும் பெரிய முதலீடுகளை செய்ய இயலாமை ஆகிய களச்சூழல் வெளியே வேலைக்குப் போன விவசாயிகளையும் வயலை நோக்கி தள்ளுகிறது.

தென்னையும் உத்திரவாதமான முதலீடல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னால் விலை வீழ்ச்சி மற்றும் வண்டு தாக்குதல் ஆகியவை அவ்விவசாயிகளை மரணத்தை நோக்கி விரட்டியது (பலர் எண்ணிக்கொண்டிருப்பதைப் போல தென்னையை நட்டுவிட்டு வானத்தைப் பார்த்து காயை எண்ண முடியாது. உரம் போட, மருந்து தெளிக்கவெல்லாம் வருடா வருடம் ஆயிரக்கணக்கில் அழ வேண்டும்). ஆகவே பெரும் பணம் சம்பாதிக்காத டெல்டாவில் வயல் உள்ள ஒரு குடிமகன் தமது ஓய்வுகால முதலீட்டை தம் நிலத்தில்தான் போட்டாகவேண்டும். அதுமட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல். சூனியமாகவிருக்கும் பல இலட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை கொஞ்சம் முன்கூட்டியே வர வைத்திருக்கிறது இப்புயல். வீடு கட்டுவது என்பது சாதாரண மனிதனின் வாழ்நாள் கனவு. இப்போது வீடிழந்த மக்கள் பலருக்கும் அது வாழ்நாள் கனவாகவே இருக்கப்போகிறது. இழந்த தோப்புக்களும் படகுகளும் அவர்களுக்கு கடைசியாக இருந்த மூலதனம். அதனை கஜா நசுக்கி வீசியிருக்கிறது. அவர்கள் எல்லோரும் தம் வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். ஆனால் தினசரி வாழ்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் செலவு மிக்கதாக இருக்கிறது. பத்து நாள் ஆகியும் இன்றுவரை உணவுக்கு கையேந்துகிறது டெல்டா.

இரக்கம் சில காலம் மட்டுமே வாழக்கூடிய உணர்வு. டெல்டாவின் தேவையில் ஓரிரு சதவிகிதத்தைகூட அதனால் பூர்த்தி செய்ய இயலாது. பழைய தஞ்சாவூர் மாவட்டம் ஜீவித்திருக்க தேவையானவற்றின் பட்டியல் மிக பிரம்மாண்டமானது.♦ விளை பொருளுக்கான நியாயமான விலை (அரசு நெல் கொள்முதல் மையங்கள் சாக்குப் பைகள் இல்லை எனும் காரணத்தால் நெல்லை வாங்க மறுக்கும் கதைகள்கூட இங்கே சாதாரணம்)

♦ உத்திரவாதமான தண்ணீர் பாசனம் (காவிரி நீரை பெறுவது மட்டும் பிரச்சினை அல்ல. பெங்களூர் முதல் திருச்சி – தஞ்சை வரையுள்ள பல பெரு நகரங்களின் சாக்கடை சங்கமிக்கும் இடம் காவிரி. திருப்பூர் ஈரோடு சாயக்கழிவுகளின் புகலிடமும் காவிரிதான்),

♦ சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரிக்கின்றன, அவற்றை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் (அனேக கிராமங்களில் மக்களை தங்கவைக்க போதுமான அவசரகால இடங்கள்கூட இல்லை)

♦ இனி அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும் புயல்களை எதிர்கொள்ளத்தக்க கான்கிரீட் வீடுகள், மக்களின் பெருமளவு பணத்தை விழுங்கும் கல்வியை இலவசமாக்குதல் (புயலால் பாதிக்கப்பட்ட பலரும் எப்படிப் பிள்ளையை படிக்க வைப்பேன் என்றே அழுதார்கள். கடந்த கால் நூற்றாண்டில் தஞ்சை பகுதியில் ஓரளவு வசதியான வாழ்வை பெற்றவர்கள் படித்து வேலைக்கு சென்றவர் மட்டும்தான். ஆகவே எப்படியாவது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் எனும் பெருவிருப்பம் மாவட்டமெங்கும் மக்களிடையே வியாபித்திருக்கிறது. கல்வியும் மருத்துவமும்தான் மக்களின் பெருமளவு சேமிப்பைத் தின்கின்றன)

♦ விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்திரவாதம் (அடுத்த சில மாதங்களுக்கு விவசாய வேலை என்பது இங்கே சாத்தியம் இல்லை).

♦ மக்கள் மீதும் சூழல் மீதும் கொஞ்சமும் இரக்கம் காட்டாத பெருந்திட்டங்களை நிராகரிக்கும் உரிமை.

இவையெல்லாம் நம்மில் பலருக்கு நகைப்புக்குரிய கோரிக்கையாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை முழுமையாக செய்யாவிட்டால் இந்த மண் சோமாலியாவைப்போல மாறுவதைத் தடுக்கவே முடியாது. மக்களை ஒருவேளை சோற்றுக்கு சாலையில் ஓடவிட்டதில் மேற்சொன்ன எல்லாவற்றுக்கும் ஓரளவு பங்கிருக்கிறது. அந்த மண்ணின் மீது அக்கறையிருப்பவர்கள் இவை எல்லாவற்றுக்காவும் பேசியாக வேண்டும். இல்லாவிட்டால் நாம் நிரந்தர நிவாரண முகாம்களை அமைத்து கொடையாளர்களை தேடி அலைய வேண்டியிருக்கும்.

நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

(வினவில் நவம்பர் 13 ல் வெளியான கட்டுரை)

டவுள் கையேந்தி நிற்கும் அவலம் கண்டதுண்டா நீங்கள்? அது தமிழ்நாட்டில் தினசரி காணக்கிடைக்கும் காட்சி. கடவுளுக்கும் மேலான எங்களை கடவுளாகவே மக்கள் கருதி வந்தார்கள். கோயில் ராஜாக்கள் வசம் இருந்தது. ராஜாக்களோ எங்கள் வசம் இருந்தார்கள். எங்கள் வீடுகள் வெள்ளம் அண்டாத மேடான நிலத்தில் இருந்தது. வயலில் கால் வைக்காமலேயே எங்கள் வெள்ளாமை வீடு வந்து சேர்ந்தது. ”சாப்பிடுறதுதான் தயிர் சாதம், மோதிப்பார்த்தா உயிர்சேதம்” என ஸ்டேட்டஸ் போடவேண்டிய நிலை எங்களுக்கு அன்று இல்லை. காரணம் ஊரில் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது.

ஹிந்து ராஜாக்கள் காலத்தில் வாழ்ந்தது போலவே முகலாயர்கள் காலத்திலும் சௌபாக்கியத்துக்கு குறைவின்றியே வாழ்ந்துவந்தோம். வெள்ளைக்காரன் காலத்திலும் அசௌகர்யம் என்று ஒன்று இல்லை. சாதி ஒழிப்பு, சூத்திரர்களுக்கு கல்வி போன்ற சில அனாச்சாரங்கள் அப்போது இருந்தன என்றாலும் அதிகாரம் எங்களிடம் இருந்தது. உலகமே பயந்த ஹிட்லருக்கு நாங்கள் பயப்படவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஜெர்மன் மொழி கற்ற வீர சமூகம் எங்களுடையது.

ஆனால் இன்று அவை பழங்கதை ஆகிவிட்டன. முதல்வரைக் காட்டிலும் அதிகாரம் கொண்ட தலைமைச் செயலாளர் எங்களவர். ஆனாலும் மக்களிடம் மரியாதை இல்லை. எல்லா பெரிய நிறுவனங்களின் தலைமைப் பீடங்களும் எங்கள் வசம்தான். ஆனாலும் எங்கள் குலக் கொழுந்துகளுக்கு மீடியா பெண்களை வேசி என அழைக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. மீடியா ஓனர்கள் எங்களை பாதகமலங்களில் வீழ்ந்துகிடக்கும் சூழல் இருந்தாலும் எங்கள் பிள்ளை பாண்டேவால்கூட எங்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை. வியாபாரத்துக்காக பா.ஜ.க.வை நோண்டி நோண்டி கேள்வி கேட்கவேண்டிய தலைவிதியல்லவா அவனுக்கும்?

ஆயிரம்தான் கூமுட்டையாக இருந்தாலும் சுப்ரமணியசாமியை கோமாளிபோல பார்ப்பது நியாயமா? குருமூர்த்தியும் எச்.ராஜாவும் தமது குலவழக்கப்படி ஒரு வதந்தியைக்கூட ட்விட்டர் வாயிலாக பரப்ப முடியாத அளவுக்கு மக்கள் அவர்களை அம்பலப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட கொடியவர்களின் கூடாரமாக இந்த மாநிலம் இருக்கிறது. மோடியையே அதிகாரம் செய்யவல்ல ஜாதி எங்களுடையது. ஆனாலும் ஷர்மா சாஸ்திரிகளால் ”நம்ம ஜாதி பிள்ளைகள் ஸ்கூல்ல மத்த சாதி கொழந்தைகளோட சாப்பாட்டுல கைவச்சு சாப்பிடக்கூடாது” ன்னு நேரடியாக சொல்ல முடியவில்லை.. அது சுகாதாரம் இல்ல, அதனால் பல விளைவுகள் ஏற்படும்னு மையமாக புலம்ப வேண்டியிருக்கு. எங்கள் தர்மத்தைக்கூட குசுவைப்போல நசுக்கி விடவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் சொல்லி புலம்பி ஸ்டேட்டசோ வீடியோவோ போட்டால் 28 லைக் வருவதற்கும் 750 ஹாஹா ஸ்மைலிகள் அசுர பாணங்களாக வந்து எங்கள் நெஞ்சைத் தைக்கிறதே…

கோட்சே.

எங்கள் பிள்ளை கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது. சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா? மஹாராஜாக்களை காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது. இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜாநிர்மலா சீதாராமன்… இந்த பெயர் வரிசையை படிக்கும்போது கெடா குமாரு, டுமீல்குப்பம் வவ்வாலு எனும் சினிமா டயலாக் எனக்கே நினைவு வந்து தொலைக்கிறது. பிறகு ஊர்ஜனம் மட்டும் சிரிக்காமல் இருக்குமா? இந்த எழவெடுத்த இன்டர்நெட் ஒருகாலத்தில் எங்கள் அக்ரஹார திண்ணை போல எத்தனை ரம்மியமாக இருந்தது. இப்போது பீஃப் கடைக்கு போவதுபோல நாங்கள் அங்கு ரகசியமாகத்தான் போக வேண்டியிருக்கிறது.

ஆசிட் அடிப்பது கஞ்சா கேஸ் போடுவது என பல வீர வரலாறு இருந்தாலும் எங்கள் குலமங்கை ஜெயாவை வைத்தே சங்கராச்சாரியை கைது செய்ய வைத்துவிட்டதே இந்த சூத்திர கும்பல். சரி நிம்மியை அடுத்த ஜெ.வாக மாற்றிவிட்டால் எல்லாம் ஷேமமாக நடக்கும் என நாங்கள் ஆறுதல்படும் வேளையில், அந்த தைரிய லட்சுமியை கண்டாலே தமிழக இளைஞர்கள் கூட்டம் ஓணானைக் கண்ட 80-ஸ் கிட்ஸாக மாறி விர்ச்சுவல் கல்லெடுத்து அடிக்கின்றன. போகட்டும் ஜனநாயக மேக்கப் போட்ட பத்ரியை தலைவராக்கலாம் என்றால் அவருக்கும் அதே ஓணான் டிரீட்மெண்ட் கிடைத்துவிடுமோ என அடிவயிறு கலங்குகிறது.

அதுமட்டும் இல்லாமல் இருக்கும் மிச்சம் மீதியெல்லாம் பொறுக்கியாகவும் கூமுட்டையாகவும் இருக்கிறது. இதில் இருக்கும் டெமாக்ரடிக் மூஞ்சியையும் காவு கொடுக்க பயமாயிருக்கிறது. மோடியின் ராஜகுரு குருமூர்த்தி அரும்பாடுபட்டு அறிமுகம் செய்த தீபா விளங்கவில்லை. ஓ.பி.எஸ்.சை வளர்க்கிறேன் என கிளம்பினார் அதனால் சசிகலா மீதிருந்த ஜனங்களின் கோபம் குறைந்து போனதுதான் மிச்சம். ரஜினியை உசுப்பினார், அன்றிலிருந்து அது வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட மெண்டல்போல உளறிவைக்கிறது. இதையெல்லாம் பார்த்த எங்கள் வீட்டு மாமியே, இந்த தரித்திரம் பிடித்தவன் மூஞ்சியில் முழிச்சிட்டு போனா பால் பாக்கெட்கூட கிடைக்கிறது இல்லை என புலம்புகிறாள்.

இத்தனை காலம் நாத்திகம் பேசி மாட்டுக்கறி தின்றவராயிற்றே எனும் நன்றியில்லாமல் பிராமண வீட்டுப் பிள்ளை கமலையும் கழுவி ஊற்றுகிறார்கள், அய்யங்கார் வீட்டு மருமகன் ரஜினியையும் பார்க்குமிடமெல்லாம் துப்புகிறார்கள். இவனுங்களை எப்படி கரெட்க் பண்றதுன்னே தெரியலையே என ஆர்யா போல புலம்பியே எங்கள் மாமாக்கள் பலர் உலக வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டார்கள். ஒரு காலத்தில் எங்கள் வீட்டு நாயாக இருந்த மக்களின் பிள்ளைகள் எதிரியின் வேட்டை நாயாக மாறி எங்களையே கடிக்க வருகின்றன. ஏதோ ஆதிக்க சாதிச்சங்கங்களும் கிருஷ்ணசாமி வகையறாக்களும் (பேரை மாத்தி வச்சுக்கோடாம்பி… அவா அவாளுக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கோல்யோ) எங்களை காலைக் கழுவி சேவகம் செய்வதால் எங்கள் மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஸ்தவ சூத்திரன் விஜய் படத்தை காலி செய்ய எங்கள் பிராமண தளபதி ராஜாவை அனுப்பினால் தமிழக அசுர கும்பல் அந்த மெர்சல் படத்தை வெறித்தனமாக ஓடவைக்கிறது. அதன் பிறகு கோடம்பாக்க டைரக்டர்கள் எல்லோரும் பா.ஜ.க.வை திட்டி காட்சி அமைப்பதற்கென்றே தனி டிஸ்கஷன் வைத்தார்கள் என கேள்விப்பட்டேன். ஏதோ வருமான வரித்துறை எங்கள் வசம் இருப்பதால் தப்பித்தோம். அடுத்த விஜய் படத்தை ஒழிக்க நாங்கள் ஜெயமோகன் எனும் சூத்திரனைத்தான் அனுப்ப வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் எங்கள் காலடியில் கிடந்தது சினிமாத்துறை. மணி சார், பாலச்சந்தர் சார் என பயபக்தியோடு ஒலித்த குரல்களை இன்று கேட்க முடியவில்லை. அரவிந்த் சாமி, மாதவன் என வெண்ணிற சாக்லேட் பாய்களை இன்று சீந்த நாதியில்லை. விஜய் சேதுபதி போன்ற கருப்பர் கூட்டமோ கால்ஷீட் இல்லாமல் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறது.

சினிமா மட்டுமா எங்களை விட்டு தொலைந்தது? கஷ்டப்பட்டு மந்திரம் ஓதி மஹாராஜாக்களுக்கு சோப்பு போட்டு சம்பாதித்த சதுர்வேதி மங்கலங்கள் எம்மிடம் இருந்தன. அவற்றை எல்லாம் நோகாமல் – உழைத்துப் பிழைத்த மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தர்மம் செய்தோம். இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள். ஏற்கனவே காதல் எனும் கருமத்தால் பல பெண்களை எங்கள் சமூகம் இழந்துகொண்டிருக்கிறது.

ஸ்கூல் வாத்தியார், தாசில்தார், பேங்க் மேனேஜர் என நாங்கள் கட்டியாண்ட துறைகள் எல்லாம் கையைவிட்டுப் போய்விட்டது. ஆடிட்டர், நீதிபதி, கவர்னர் என சில டிபார்ட்மெண்ட்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் அங்கேயும் சில கறுப்பு உருவங்கள் வந்து எங்களோடு ஈஷிக்கொண்டு நிற்கின்றன. மயிலாப்பூர் மாம்பலமாவது மிச்சமானதா என்றால் அதுவும் இல்லை. அயோத்தியா மண்டப சொற்பொழிவானாலும் தெற்கு மாடவீதி எஸ்.வி.சேகர் மீட்டிங் ஆனாலும் எங்கள் இனத்தில் இருந்து வெறும் கிழடு கட்டைகள்தான் வருகின்றன. சுகர் பேஷண்ட்டுக்களை வைத்து எங்கிருந்து இன்னொரு குருஷேத்ரப் போரை நடத்துவது? அப்படி போரை நடத்தினாலும் அதை முன்னின்று நடத்த வேண்டிய சின்ன சங்கராச்சாரி மல்லாக்கப் படுத்தால் எழவே மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது.

போகட்டும், இன்றைய தமிழகம் வேண்டுமானால் எங்களை நக்கல் செய்யலாம். ஆனாலும் எங்களை ஆண்டவன் அப்படி அம்போவென விட்டுவிடமாட்டான். இன்னமும் கோயில்கள் எங்கள் வசம்தான் இருக்கின்றன. அங்கேயெல்லாம் ஷாகா நடத்தி வேண்டிய அளவுக்கு முட்டாள்களையும் பொறுக்கிகளையும் ரவுடிகளையும் உருவாக்குவோம். எங்கள் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டன. மேற்கத்திய சாவர்க்கர் ட்ரம்ப் அவர்கள் அதிபராக இருக்கிறார். ஆகவே அங்கிருந்து எங்கள் ராஜாங்கத்தை நடத்துவோம். மோடி என்றில்லை யார் இந்தியாவின் பிரதமரானாலும் அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் காணாமல் போகும் அல்லது தனியாருக்கு கைமாற்றிப்போகும். இலவசக் கல்வி ஒழிக்கப்பட்டு நாடெங்கும் படிப்பறிவற்ற முட்டாள்கள் இருந்தால் வாட்சப் வீடியோ வழியே வந்து நாங்கள் ராமராஜ்யம் அமைப்போம். பக்தியும் முட்டாள்த்தனமும் எங்களைக் காப்பாற்றும். வாட்சப் ஃபார்வேர்டு தகவல்களை நம்பும் மிடில்கிளாஸ் உள்ளவரை பிராமணீயம் எந்த சவாலையும் தாங்கும்.

ஒரு ஏழை பிராமணனின் குரல், உண்மை ஹிந்து எனில் அதிகம் பகிரவும்.

ஜெய்ஹிந்த்.

மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது?

(வினவு தளத்திற்காக எழுதப்பட்டு அக்டோபர் 26, 2018 அன்று வெளியான கட்டுரை)

நேற்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அறையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ தொடர்பாக ஒரு விவாதம் ஓடிற்று.

“அந்தப் பொண்ணு ஒரு ஐட்டமா இருக்கும்” என ஆரூடம் சொல்கிறார் ஒருவர்.

“அது எப்படி குழந்தை பிறக்கும் வரை ஒரு குடும்பம் விட்டு வைக்கும்?” என ஐயமெழுப்புகிறார் இன்னொருவர்.

“இதெல்லாம் பிளான் பண்ணி பிளாக்மெயில் பண்ற குடும்பம் போலருக்கு” என்கிறது இன்னொரு குரல்.

“கூப்பிட்டது அமைச்சர்ங்கறதால போயிருப்பா” என்றொரு கருத்தும் வந்தது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அதில் அவர் தவறு என்ன இருக்கிறது எனும் சிந்தனையே அவர்களிடம் மேலோங்கி நின்றது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

நேற்று  நடிகை அமலா பால் தன்னிடம் இயக்குனர் சுசி.கணேசன் அநாகரீகமாக நடந்துகொண்டார் என குற்றம் சாட்டுகிறார். உடனே முகநூலில் இப்படி ஒரு எதிர்வினை வருகிறது “உன் புருசனோட ஒழுங்கா வாழ வக்கில்லை! நீ பத்தினின்னு நிரூபிச்சுட்டு அடுத்தவன் மேல கம்ப்ளெயிண்ட் பண்ணு.” என்பது பெரும்பான்மை தரப்பின் பொது விதியாக இருக்கிறது.

இதே கண்ணோட்டம்தான் சின்மயி விவகாரத்திலும் காணக்கிடைக்கின்றது. பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை, தாம்ப்ராஸ் நாராயணன் அய்யங்கார் தேவடியாள் என வர்ணித்ததைவிட கேவலமாக இருந்தது பாண்டேவின் கேள்விகள்.

பொதுவாக பாண்டேவை கழுவி ஊற்றுவதற்க்கு பேரார்வத்தோடு காத்திருக்கும் முகநூலில் இது விமர்சிக்கப்படவேயில்லை. சின்மயியின் முந்தைய நடவடிக்கைகள் வாயிலாக அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது எனும் வாதம் அத்தனை நியாயமானது அல்ல. காரணம் வைரமுத்துவின் வரலாறும் மெச்சத்தக்கது இல்லை.

நாம் எல்லா சமயங்களிலும் நம் வெறுப்பை ஒரே அளவில் வெளிப்படுத்துவதில்லை. இந்துத்துவ பொறுக்கிகள் வைரமுத்துவை இலக்கு வைத்து தாக்கியபோது நாம் அவரது வரலாற்றை ஆராயவில்லை. இன்னும் பெரிய உதாரணம் வேண்டுமானால், சசிகலா தினகரன் மீதான தமிழக மக்களின் வெறுப்பு எத்தகையது? ஆனாலும் அவர்களை பாஜக ஒழிக்க முனைந்த போது இந்த கும்பல் (சசிகலா) இப்படியாவது நாசமாகட்டும் என அனேகர் கருதவில்லை. மாறாக அதிலும் பாஜகவின் மீதான எதிர் நிலைப்பாடே வலுவாக இருந்தது. ஆக இங்கே நம்மை (அதாவது பெரும்பான்மை சமூக ஊடக கருத்தாளர்கள்) சின்மயிக்கு எதிராக நிறுத்தி வைரமுத்துவுக்கு மவுன ஆதரவை வழங்க வைக்கும் காரணி எது?

ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நமது பெரும்பாலான நடத்தைகளும் நடவடிக்கைகளும் தானியங்கி செயல்பாடுகள் (ஆட்டோமேட்டிக்). அதில் நமது சமூக கற்றல் பெருமளவு தாக்கம் செலுத்தும். கம்யூனிசம் மற்றும் பெரியாரிசத்தை ஏற்றுக்கொண்டவர்களிடத்திலும் பகுதியளவுக்கான ஆணாதிக்க மனோபாவம் இருக்கும். அதனை ஒப்புக்கொள்ளவும் பிறகு சீர்திருத்திக்கொள்ளவும் தயாராய் இருக்கிறோமா என்பதை வைத்தே ஒரு கம்யூனிஸ்ட்டையும் பெரியாரிஸ்ட்டையும் மதிப்பிட வேண்டும்.

சின்மயி விவகாரத்தில் பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை.

ஆகவே மீ டூ விவகாரத்தில், குறிப்பாக சின்மயி தொடர்பான நமது (சமூக வலைதளங்களில் இயங்கும் இடதுசாரி மற்றும் திராவிட சார்புடையவர்கள்) எதிர்வினைகளை இந்த கோணத்தில் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சின்மயி, கவிஞர் வைரமுத்துவோடு பணியாற்றிய தருணங்களில் நிகழ்ந்த பாலியல் தாக்குதல் குறித்து ஒரு ட்வீட் போடுகிறார். வழக்கமாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அது நிகழ்ந்திருக்க சாத்தியம் இருக்கிறதா என ஆராய்வோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை குழு நடனப் பெண் ஒருவர் அபிஷேக் பச்சன் தன்னை மணந்துகொண்டதாக குற்றம் சாட்டினார். அவர் விவரித்த சம்பவம் யதார்த்தத்துக்கு முற்றிலும் பொருந்தாததாக இருந்தது (பார்ட்டியில் சந்தித்தார், எனக்கு பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார் என சொன்னதாக நினைவு). அப்படியான ஒரு பிறழ் நடவடிக்கையாக சின்மயியின் குற்றச்சாட்டு இல்லை.

இது நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது. மேலும் சினிமாத்துறை மீதான பொதுவான அபிப்ராயம், இதெல்லாம் அங்கு சாதாரண நிகழ்வு என்பதுதான்.

ஏ.ஆர்.ரஹமானின் சகோதரி ரைஹானா வைரமுத்துவின் பாலியல் சீண்டல்கள் சினிமாத்துறையின் வெளிப்படையான ரகசியம் என்கிறார். வைரமுத்துவிடம் இதே வடிவத்திலான பாலியல் தாக்குதல்களை எதிர்கொண்டதாக ஒரு பெண் வெளிப்படையாக தன் பெயரைக் குறிப்பிட்டே குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த தொடர் கருத்துக்களை வைத்துப் பார்க்கையில் வைரமுத்து இதனை செய்திருக்க முகாந்திரம் இருக்கிறது என நாம் சந்தேகித்திருக்க வேண்டும். ஆனாலும் நாம் சின்மயி எனும் பாடகியிடம் குற்றம் கண்டுபிடிப்பது எனும் புள்ளியில் இருந்து நகரவில்லை.

எலைட் ஃபெமினிசம், பார்ப்பன பெண் ஆகிய காரணங்கள் மட்டுமே வைரமுத்துவை நிரபராதி என நம்ப போதுமானவையா? அல்லது நாம் வெறுக்கத்தக்க ஒரு வரலாற்றைக்கொண்ட பெண்மணிக்கு இப்படி ஒரு பாலியல் சீண்டல் நடந்திருந்தால்தான் என்ன எனும் பழியுணர்ச்சியா?

இதன் பலனாக நாம் இரண்டு வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம். ஒரு போலியான தெய்வீக இமேஜை உருவாக்கி வைத்துக்கொண்டு இந்த கர்னாடக சங்கீத கும்பல் ஆடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. பார்ப்பனீயத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் முக்கியமானது இந்த இந்த கர்னாடக சங்கீதம்.

பார்ப்பனரல்லாத சாதிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு பார்ப்பன குரு கிடைத்துவிட்டால் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது. பார்ப்பனர்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளமாக கருதுவதும் கர்னாடக சங்கீதத்தைத்தான். ஆகவே இந்த “குரு”க்கள் தொடும் எல்லைக்குள் சிறார்களும் இளையோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.

மீ டூ நகர்வுகளில் சின்மயியின் பாத்திரம் இந்த தெய்வீக இமேஜை உடைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம். சின்மயி மீதான வெறுப்பிலும் “நீ என்ன பத்தினியா” எனும் இந்தியாவின் பிரத்தியோக சிந்தனையின் விளைவாக நாம் அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். ஒரு குறைந்தபட்ச விளக்கம்கூட கொடுக்க அவசியமில்லாமல் அந்த பார்ப்பன கும்பல் தப்பித்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் அம்பலமான கதைகளை பேசுபொருளாக்கியிருந்தால் இன்னும் அதிகமான பெண்கள் அம்பலத்துக்கு வராத பல “குரு”க்களின் உண்மை முகத்தை தோலுரித்திருக்கக்கூடும். அவர்களிடம் சிக்குண்டிருப்பது பெரும்பாலும் பார்ப்பன குழந்தைகள்தான், அவர்களைக் காக்க வேண்டியதும் நம் பொறுப்பு இல்லையா?

பெரியாரது பெண்ணுரிமை செயல்பாடுகளின் முதல் பலனாளிகள் பார்ப்பன பெண்கள்தான். அதற்காக அவர் அச்செயலை நிறுத்திக்கொண்டாரா என்ன!

சின்மயியை மட்டும் இலக்கு வைக்கும் நமது பொது எதிர்வினையின் இன்னொரு கோணம்தான் என்னை பெரிதும் அச்சமூட்டுகிறது. சிறார்களுடன் பணியாற்றும் எந்த ஒரு ஆற்றுப்படுத்துனரிடமும் கேளுங்கள். அவர்களிடம் சில பாலியல் வன்முறை கதைகள் கிடைக்கும்.

மகளிடம் வல்லுறவு கொள்ளும் அப்பா அதனைக் கண்டும் கண்டிக்க முடியாத அம்மா, அப்பாவோடு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனும் மாணவி தினசரி அதே அப்பாவோடு பள்ளிக்கு வருகிறார், பாலுறவு என்றால் என்னவென்று அறிய இயலாத வயதில் அதற்கு அறிமுகமாகி பிறகு அதனை இயல்பானதாக கருதி ரசிக்கும் சிறுமிகள், பாலியல் வன்முறையை தமது தவறாக கருதி குற்ற உணர்வில் தன்னைத்தானே சபித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் என பட்டியலில் அடங்காத கேஸ் ஹிஸ்டரிகள் எங்கள் வட்டாரத்தில் கிடைக்கின்றன. பொது வெளியில் புழங்கும் முன்முடிவுகளும் எள்ளலும் இப்படியான குழந்தைகளிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிப்பதே இல்லை.

சின்மயிக்கும் நமக்கும் (சமூக ஊடக நண்பர்கள்) இருக்கும் தகராறு வெளியில் இருக்கும் பலருக்கும் தெரியாது. அப்படியான சூழலில் இத்தகைய விமர்சனங்களைக் படிக்கின்ற மற்றும் பாண்டே வகையறா (அந்த பிரஸ் மீட் நிருபர்களும்) ஆட்களின் வல்லுறவுக்கு நிகரான கேள்விகளும் இளையோர் மற்றும் மாணவர்களிடையே என்ன செய்தியை கொண்டுசெல்லும்?

இப்படி பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள் / மாணவர்கள் எண்ணிக்கை நாம் நினைத்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக அதிகம். இப்படியான சமூக எதிர்வினைகள் அவர்களை மேலும் மேலும் மனரீதியாக முடமாக்கலாம். அது பாலியல் குற்றவாளிகளை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கருவுற்றிருப்பதை பிரசவம் வரை அறியாத பெற்றோர்கள் இருப்பதை சமீபத்தில் வந்த செய்தியொன்று சுட்டிக்காட்டுகின்றது. ஆசிரியர்கள் பேஸ்புக் பொதுக்கருத்தினையே வெளிப்படுத்துகிறார்கள். இதன் அபாயகரமான பின்விளைவுகளை யார் எதிர்கொள்வது?

வயாக்ரா புழக்கத்துக்குப் பிறகு வசதியான/ செல்வாக்கான கிழவர்கள் இப்படியான சீண்டல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்கிறார் உளவியலாளரான நண்பர் ஒருவர் (ஆளை மடக்கினால் போதும் எழுச்சிக்கு வயாக்ரா இருக்கிறது எனும் நம்பிக்கையில்).

ஊடகவியலாளர் சுகிதா தனக்கு தரப்பட வேண்டிய நீதிமன்ற ஆணையொன்றைப் பெற ஓராண்டு காத்திருந்ததாக சொல்கிறார். தொலைந்துபோன தமது ஆவணங்களைப் பற்றி புகார் கொடுத்து சி.எஸ்.ஆர் பெற ஒரு வாரம் அலைவதாக பதிவிடுகிறார். பிரபலமான ஒரு ஊடவியலாளரின் கதியே இப்படி இருக்கிறது. காதல் ஜோடிகளை அடாவடியாக பிரித்து பெண்ணை அப்பாவோடு கட்டாயப்படுத்தி அனுப்புகின்ற நீதிமன்றங்கள் இங்கிருக்கின்றன. இப்படி மிகக்கொடூரமான அமைப்புக்களை வைத்திருக்கும் நாம் சமூக ஊடகங்களையும் வழமையான போலீஸ் ஸ்டேஷன் போல மாற்றி எதை சாதிக்கப்போகிறோம்?

மீ டூ தவறாக பயன்படுத்தப்படலாமா என கேட்டால் அதற்கு வாய்ப்பு இருக்கின்றதுதான். அப்படியான வாய்ப்புக்கள் எல்லா குற்றங்களிலும் இருக்கின்றன. அதற்காக புகார் கொடுக்கும் எல்லோரையும் குற்றவாளிகள் போல நடத்த முடியாது.

பாலியல் சீண்டல் செய்யும் ஆட்கள் அடிப்படையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் தம்மிலும் மிக பலவீனமான ஆட்களை தெரிவு செய்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை நேர்மையோடும் கரிசனத்தோடும் அனுகுவதன் வாயிலாக நாம் எதிர்காலத்தில் பல பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். ஒப்பீட்டளவில் அதன் எதிர்மறை விளைவுகள் குறைவாகவே இருக்கும்.

எனக்கும் சின்மயியை ஆதரிக்க வேண்டும் எனும் விருப்பம் இல்லை. ஆனால் சின்மயியை எதிர்க்கவேண்டும் எனும் அல்ப நோக்கத்திற்காக ஒரு பெரும் சமூக விரோத செயலை இலகுவாக கடந்துபோக இயலாது. மீ டூ போன்ற இயக்கங்களை இன்னும் செம்மைப்படுத்தவும் இன்னும் பரவலாக கொண்டு செல்லவும் நாம் முயற்சிக்கலாம்.

அதனை பகடி செய்யவோ அல்லது அவளுக்கு நல்லா வேணும் என சாபமிடவோ நான் தயாரில்லை. இவ்விவகாரத்தில் எப்படி எதிர்வினையாற்றுவது என குழப்பத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் நான் இதையே பரிந்துரைக்கிறேன்.

இணைய வணிகம் – மெய்நிகர் போதை

மெய்நிகர் உலகம் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களில் சமூக ஊடகங்களுக்கு

வில்லவன்
வில்லவன்

அடுத்து முக்கியமானது இணைய வணிகம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்ட பேரங்காடிகள் பல இப்போது கலையிழந்து நிற்கின்றன. அப்படியான புதிய பேரங்காடிகள் இப்போது அதே வேகத்தில் திறக்கப்படுவதில்லை. ஆன்லைன் மருந்துக்கடைகள் தங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பதாக மருந்துக்கடை உரிமையாளர்கள் புலம்புகிறார்கள். பிரதான வீதிகளில் மட்டுமல்ல உள்ளடங்கிய தெருக்களிலும் இடுப்புயர பைகளை சுமந்தபடி கொரியர் ஊழியர்கள் பயணிப்பதை அடிக்கடி காண முடிகிறது.

நான் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள இளைஞர்கள் திடீரென ஒரு மாலையில் பரபரப்பானார்கள். “”ஏய் ஃபலூடா 9 ரூபாய், சீக்கிரம் ஆர்டர் பண்ணு” என தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அப்போது உத்தேசமாக 10 பேரேனும் அலைபேசியை எடுக்க ஓடியிருப்பார்கள். பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அமேசான் டெலிவரி ஊழியர் அரைமணி நேரம் நின்று வரிசையாக பொருட்களை டெலிவரி கொடுத்தவண்ணமிருக்கிறார் (மருத்துவமனை ஊழியர்கள் அந்த முகவரியில் வாங்கிக்கொள்கிறார்கள்). அவர் பையில் இருப்பதில் பாதி அங்கேயே காலியாகிறது. அமேசான்-இந்தியாவின் பாதி வருவாய் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. கண்களால் நேரடியாக பார்த்தோ அல்லது அணிந்து பார்த்தோ வாங்க வேண்டிய ஆடைகளும் மூக்குக்கண்ணாடியும்கூட இணையத்தின் வழியே பெருமளவு விற்பனையாகின்றன. அழுகும் பொருட்களான காய்கறி, இறைச்சி வகைகளை விற்க பிக் பேஸ்கெட் நிறுவனம் இயங்குகிறது. சீன இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே கியர்பெஸ்ட் எனும் தளம் இருக்கிறது.

ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை.

சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் ஒரு ரூபாய்க்கு செருப்பு, ஸ்பூன் போன்ற பொருட்களை விற்பனை செய்தது (ஷிப்பிங் செலவு உட்பட). அதற்கு சில நாட்களுக்கு முன்னால் ஃபிலிப்கார்ட் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு கோல்டு மெம்பர்ஷிப்பை இலவசமாக கொடுத்தது (இதில் பொருள் அனுப்பும் செலவு இலவசம் மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். இதையொத்த சலுகையை நீங்கள் அமேசானில் பெற ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்). சில வட இந்திய நகரங்களில் இப்போது மளிகைப் பொருட்களை பாதி விலைக்கு விற்கிறது அமேசான் (பேண்ட்ரி எனும் பெயரில் மளிகைப் பொருட்களை விற்கிறது அமேசான், இது பெருநகரங்களில் மட்டும்). எல்லா நிறுவனங்களும் இப்படியான திடீர் சலுகைகளை கொடுக்கின்றன. ஏன்?

சில வகையான மொபைல் போன்கள் எப்போதும் கிடைக்காது. அவை ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் (ஃபிளாஷ் சேல்). அப்போதும் சில நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்துவிடும். ஜியாமி போன்கள் பெரும்பாலும் இப்படித்தான் விற்பனையாகின்றன. அந்த நிறுவனங்களால் இந்த ஃபோன்களை பெருமளவில் உற்பத்தி செய்து குவித்துவிட முடியும். எவ்வளவு விற்பனை ஆகும் என்பதையும் கணிப்பதும் சுலபம். இருப்பினும் ஏன் ஓரிரு நிமிடங்களில் விற்பனை முடிந்துபோகுமாறு திட்டமிடுகிறார்கள்?

இது வியாபாரம் மட்டும் இல்லை. அந்த நிறுவனங்கள் மக்களை தயார்ப்படுத்துகின்றன. பொருள் வாங்குவது என்பதாக இல்லாமல் அந்த செயலியில் மக்கள் எப்போதும் மேய்ந்துகொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தத் திடீர் சலுகைகள் தரப்படுகின்றன. திடீரென ஒரு சலுகை வரக்கூடும் எனும் எச்சரிக்கை உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் தொடர்ந்து அந்தத் தளங்களை பார்வையிட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஃபிளாஷ் சேல் என்பது அந்த பொருள் மீதான எதிர்பார்ப்பை உங்களிடம் உருவாக்குகிறது. அதில் பொருளை வாங்கிவிட்டால் லட்சம் பேரோடு போட்டியிட்டு வென்ற பரவசம் கிடைக்கிறது. அதில் பொருள் கிடைக்காவிட்டாலோ நீங்கள் தோற்றவராகிறீர்கள். ஆகவே அடுத்த முறை வென்றாக வேண்டும் எனும் முனைப்பை அந்தப் பொருள் உருவாக்குகிறது. மிகைப்படுத்தவில்லை, பல சமயங்களில் ஃபிளாஷ் சேல்களில் கிடைக்கும் பொருள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அந்தப் போட்டியில் கிடைக்கும் பரவசம் உங்களை தற்காலிகமாக மகிழ்வூட்டுகிறது. அதனால்தான் அந்த பரவசத்தை நுகர அடுத்த மாடல் ஃபோனின் ஃபிளாஷ் சேல் நடக்கையில் போனை மாற்றும் முடிவுக்கு பலர் செல்கிறார்கள். கிட்டத்தட்ட குடிகாரனுக்கு ஒப்பான நிலை இது.

ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர் ரெட்மி 5 ப்ரோ ஃபோன் ஒன்றை விளையாடுத்தனமாக ஆர்டர் செய்ய முற்பட்டார் (இது முதல் முறை). பிறகு வரிசையாக நான்கு ஃபிளாஷ் விற்பனைகளில் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில் அந்த போனை வாங்குவது என்பது ஒரு கவுரவப் பிரச்சினையானது. கடைசி முறை நண்பரிடம் ஏர்டெல் சிம்மை கடன் வாங்கி (அதுதான் அங்கே ஒழுங்காக சிக்னல் கிடைக்குமாம்), கிரெடிட் கார்டு தகவல்களை முன்கூட்டியே செயலியில் உள்ளிட்டு காத்திருந்து அந்த போனை வாங்கியிருக்கிறார்.

அவர் போனை அதிகம் பாவிப்பவர் அல்ல. அவரது வாட்சப் பயன்பாடுகூட மிகவும் குறைவானதே. ஆனால் அந்த போனை வாங்கியதன் மூலம் அவர் மனம் ”ஆன்லைனில் பொருள் வாங்குவது பரவசமூட்டக்கூடியது. அதில் நீ ஒரு வீரனைப்போல உணரலாம்” என விளங்கிக்கொண்டிருக்கும். ஆகவே அடுத்த முறை அவருக்கு மனச்சோர்வு உண்டாகும்போதெல்லாம் அவர் ஆன்லைன் வணிக செயலிகளை மேய்வார். காரணம் அது தரும் பரவசம் மனச்சோர்வை விலக்கும் எனும் நம்பிக்கை அவருக்குள் செலுத்தப்பட்டுவிட்டது. சூதாட்டக்காரர்களை செலுத்துவது இத்தகைய அடிமைத்தனம்தான்.

இப்படியான ஒரு வாய்ப்பு இருப்பதால்தான் நிறுவனங்கள் பெரும் மூலதனத்தை ஆன்லைன் வணிகத்தில் கொட்டுகின்றன. அமேசான்தான் இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிக நிறுவனம்; அதன் முதலாளிதான் இன்று உலகின் பெரும் பணக்காரர். இந்த ஒரு நிறுவனம்தான் அமெரிக்காவின் 40% நுகர்பொருட்களை விற்கிறது. அமெரிக்காவில் இதுவரை சந்தையை கட்டுப்படுத்தி வந்த வால்மார்ட் தமது விற்பனை உத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறது (வால்மார்ட் நடத்தியது ஒரு ரவுடி ராஜாங்கம், அவர்கள் கேட்ட விலைக்கு கொடுக்காவிட்டால் அந்த பொருளை சந்தையில் இருந்து ஒழிக்க வால்மார்ட்டால் முடியும். காரணம் சில்லறைவணிகம் பெருமளவு அவர்கள் வசம் இருந்தது).

அமேசான் இந்தியாவின் பெரிய போட்டியாளர் ஃபிலிப்கார்ட்டை இப்போது கையகப்படுத்தியிருப்பது வால்மார்ட் (ஃபிலிப்கார்ட் நிறுவனமானது ஈபே, மிந்த்ரா உள்ளிட்ட மேலும் சில இணையதள கடைகளை ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிறது). இது அனேகமாக அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வால்மார்ட் செய்த நடவடிக்கையாக இருக்கலாம். ஆன்லைன் வணிகத்தின் பெரும் சந்தையான இந்தியாவில் நுழையும் முயற்சியாக இருக்கலாம். அல்லது சந்தையில் நீடித்திருக்க ஆன்லைன் வணிகம் தவிர்க்க முடியாதது எனும் அனுமானமாக இருக்கலாம்.

இ காமர்ஸ் உலகின் இன்னொரு ராட்சசன் அலிபாபா இந்தியாவின் பேடிஎம் நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. இப்போது வாரன் பஃபட் நிறுவனம் அதில் கூடுதலாக முதலீடு செய்திருக்கிறது. ஆக இந்தியாவின் மிகப்பெரிய மூன்று ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகள்தான். டாடா நிறுவனம் டாடா கிளிக் எனும் ஆன்லைன் நிறுவனத்தை நடத்துகிறது. ஸ்னாப்டீல் போன்ற பல கடைகளும் சந்தையில் போராடிக்கொண்டிருக்கின்றன. அவை இந்த மூன்று பகாசுரக் கம்பெனிகளிடம் தோற்கலாம் அல்லது கடையை அவர்களிடமே விற்றுவிட்டு கிளம்பலாம்.

எல்லோரும் இருக்கும்போது இந்தியாவின் ஓனர் அம்பானி மட்டும் சும்மாயிருப்பாரா? அவர் பங்கிற்கு ஏ ஜியோ எனும் செயலி வழி இணைய ஃபேஷன் கடையை நடத்துகிறார். ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் எனும் பெயரில் 400க்கும் மேலான ஆயத்த ஆடைக் கடைகளை முகேஷ் அம்பானி நிறுவனம் நடத்துகிறது. அதே பெயரில் இணைய வழி வியாபாரமும் நடக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு பிரிவு ஜவுளித்துறைதான். அதனை சந்தியில் நிறுத்தும் வேலையை அம்பானி செய்யும் வாய்ப்பு தெளிவாகத் தெரிகிறது. காரணம் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஆடைகள் பெரும்பாலும் மேட் இன் பங்களாதேஷ். ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதி சந்தையை வங்காள தேசம் பெருமளவு கைப்பற்றிவிட்டது. இப்போது திருப்பூரை கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருப்பது உள்ளூர் சந்தைதான். அதையும் வாரி வாயில் போட களமாடுகிறார் அம்பானி.

சந்தையை ஆக்கிரமிக்கும் இந்தப் போட்டி ஒரு போரைப்போல நடந்துகொண்டிருக்கிறது. அமேசான் தமது கிரேட் இண்டியன் சேல் எனும் பெருவிற்பனை விழாவை இந்த மாதம் நடத்துகிறது. அதே நாட்களில் ஃபிலிப்கார்ட் பிக் பில்லியன் டே எனும் விற்பனை விழாவை நடத்துகிறது. பேடிஎம் தன் பங்குக்கு கோல்டுபேக் ஷாப்பிங் ஃபெஸ்டிவலை நடத்தவிருக்கிறது. மற்ற அல்லு சில்லுகளும் தன் பங்கிற்கு ஏதேனும் நடத்தலாம். இதற்காக கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் அடிமைகளின் தீபாவளி இந்த மாதம் பதினைந்தாம் தேதியே முடிந்துவிடும். அந்த அளவுக்கு தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன.

2015, 16 ஆம் ஆண்டுகளில் பிக் பில்லியன் டே விற்பனையின்போது ஃபிலிப்கார்ட்டின் சர்வர்கள் முடங்கின. அந்த அளவுக்கு இணையக்கூட்டம் அந்த தளத்தை மொய்த்தது. அதே ஆண்டுகளில் நடந்த விற்பனைத் திருவிழாக்களில் அமேசானின் டெலிவரி பன்மடங்கானது. இருசக்கர வண்டிகளில் டெலிவரி ஆன தெருக்களில் எல்லாம் டாடா ஏஸ், டெம்போக்களில் டெலிவரி ஆனதை பார்த்திருக்கிறேன் (இரண்டாம் நிலை நகரங்களில்). ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி திறம்பட செய்வது என ஆலோசனை வழங்கும் செயலிகள்கூட வந்தாயிற்று. பேடிஎம் நிறுவனம் இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே வேர்ல்டு ஸ்டோர் எனும் பிரத்தியோக பகுதியை தமது செயலியில் வைத்திருக்கிறது. அதில் தோடு, வளையல், பொம்மை என சகலமும் கிடைக்கின்றது. ஃபேன்சி ஸ்டோர் முதல் பிளாட்பாரக்கடை வரை எங்கும் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே சீன சந்தையில் நீங்கள் பொருள் வாங்க இயலும். பிலிப்கார்ட் தமது கிட்டங்கிகளை முழுமையாக ரோபோக்கள் மூலம் கையாள நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன் மூலம் 2 மணி நேர டெலிவரிகூட சாத்தியப்படலாம். அமேசான் ஏற்கனவே இதனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

இந்தப் போட்டியினால் நமக்கு எல்லாமே சல்லிசாக கிடைக்கிறது என நம்பிவிட வேண்டாம். விலையில் பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன. தி.நகர் தெருக்கடைகளில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் மொபைல் கேஸ் இந்த தளங்களில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சாதாரண மருந்துக் கடைகளில் 170 ரூபாய்க்கு விற்பனையாகும் செரிலாக் (குழந்தைகள் உணவு) அமேசானில் 286 ரூபாய், அதில் அதன் உண்மையான விலை 499 என பொய்யாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அமேசானின் தள்ளுபடி விலையைக் காட்டிலும் உள்ளூர் விலை 100 ரூபாய் குறைவு.

பேடிஎம் ஒரு சீன தயாரிப்பு கைக்கடிகாரத்துக்கு 100% கேஷ்பேக் என அறிவிக்கிறது (கேஷ்பேக் என்பது பொருளுக்கு நீங்கள் கொடுத்த பணம் சில நாளில் உங்கள் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கான பொருட்களை பிறகு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்). ஆனால் அதன் விலையில் இருக்கிறது பித்தலாட்டம். அந்த பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய். ஆக 100 ரூபாய் கடிகாரத்தை 3300 ரூபாய் கொடுத்து வாங்கினால் பேடிஎம் உங்களுக்கு 3300 ரூபாயை திருப்பித்தரும் . அதுவும் பணமாக அல்ல, அவர்களிடமே பொருள் வாங்கி அந்த பணத்தை கழிக்க வேண்டும். (இது அப்பட்டமான ஏமாற்றுவேலை என்பதை சராசரி அறிவுடைய எவரும் கண்டுபிடிக்கலாம். ஆனால் அந்த கடிகாரம் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்கிறது.).

இதன் சேதாரங்கள் மூன்று இடங்களில் வெளிப்படலாம்.

முதலில் இந்த ஷாப்பிங் மனோபாவம் நமது நடத்தையில் பாரிய மாற்றங்களை உருவாக்குகிறது. ஒரு தேவை உருவாகி அதற்காக நாம் ஒரு பொருளை வாங்குவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இப்போது ஷாப்பிங் தளங்கள் பொருளைக் காட்டி, உணர்வுகளைத் தூண்டி தேவையை வலிந்துத் திணிக்கின்றன. முதலில் ஒரு பரவச உணர்வுக்கு ஆட்பட்டு பிறகு அது பதட்டக்குறைப்பு செயலாக சுருங்குகிறது (கிட்டத்தட்ட சாராயத்தைப்போல). அதாவது ஷாப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் எனும் நிலைமாறி ஷாப்பிங் செய்யாவிட்டால் கைநடுக்கும் எனும் நிலைக்கு செல்லலாம். வெறுமையாக உணரும்போது ஷாப்பிங் தளங்களை மேயும் வேலையை பலரும் செய்வதை காணமுடிகிறது. மொபைல் அடிமைத்தனத்தைப்போல ஷாப்பிங் அடிமைகள் (அடிக்ட்) பரவலாக உருவாகிறார்கள்.  குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.

பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய்.

இரண்டாவதாக இது நம் நாட்டில் இருக்கும் சிறுவணிக கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும். இணையத்தில் இல்லாத பொருளே இல்லை எனும்போது, எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போது, பணம் செலுத்தும் வழிகள் எளிமையாக இருக்கும்போது மக்கள் அதன் பக்கம் திரும்புவது நடந்தே தீரும். அவை இறுதியில் சாதாரண சிறு வியாபாரிகளை பாதிக்கும். மேலும் இந்த சப்ளை செயின் அளிக்கும் வேலைவாய்ப்பு முற்றிலும் நிரந்தரமில்லாதது. மூட்டை துக்கி முதுகுவலி வந்த பின்னால் அந்த டெலிவரி ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை. அமேசானிலேயே விஷம் வாங்கிக்குடித்து சாகவேண்டியதுதான். மேலும் தேவையற்ற பொருட்களுக்கு செலவிடும் மக்கள் தேவையானவற்றுக்கு செலவைக் குறைப்பார்கள். அதுவும் மறைமுகமாக இந்தியாவின் வணிக கட்டமைப்பைத்தான் சிதைக்கும்.

இறுதியாக இந்த ஷாப்பிங் கலாச்சாரம் சேர்க்கும் குப்பைகள் ஒரு பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. வரும் ஜனவரி முதல் பாலித்தீன் மற்றும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது (பைகள், டீ கோப்பைகள் போன்றவை). கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இப்போதே தடை வந்தாயிற்று. ரோட்டுக்கடை போடுபவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர் அமேசானுக்கு அது பொருந்தாது. பொருட்களை சேதமாகாமல் அனுப்ப உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் உறைகளும் பபுள் பேக்கிங் தாள்களும் தெர்மாகூல் அட்டைகளும் பெரும் சூழல் அபாயங்கள். மேலும் அளவுக்கு மீறி நுகரப்படும் தரமற்ற (மலிவான) சீன பொருட்கள் இன்னொரு சூழல் அபாயம். அவை வெகுசீக்கிரமே குப்பைக்குப் போகும். இப்போது சிறு நகரங்களில்கூட குப்பை கொட்ட இடமில்லை. இவற்றை கையாளவும் கட்டுப்படுத்தவும் எந்த திட்டமும் நம்மிடம் இல்லை.

நாம் இவை குறித்து கவலைப்பட ஆரம்பிக்கும்போது சிக்கல் கைமீறிப்போயிருக்கும். என்ன செய்யலாம்?

 

குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பது துவங்கி அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் எல்லாமே கிரிமினல் கன்ஸ்பைரசி பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. அவரது ஒப்பனைகளே அவர் தரத்தைக் காட்டுவதாக சொல்கிறார் ஒருவர். ’சும்மா இருந்தவளுக்கு வண்டி வாங்கிக் கொடுத்த ஊட்டுக்காரனை சொல்லணும்’ என்கிறார் இன்னொருவர். பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது. ஒரு தாய் தமது இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் எனும் செய்தி சீரணிக்க இயலாததாக இருந்தாலும் எனக்கு அதில் எந்தக் கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நமது மிகை எதிர்வினையின் மீது கொஞ்சம் சலிப்பும் பயமும் மேலிடுகிறது.

மனிதகுல வரலாற்றில் திருமணத்துக்கு வெளியேயான காதலும் பாலுறவும் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. ”கணவனே கண்கண்ட தெய்வம்” போன்ற அறிவுரைகள் ”விட்டுட்டு போயிடாதடீ” எனும் மன்றாடலாகவும் இருந்திருக்கக்கூடும். சில சமூகங்களில் மாதவிலக்கின்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே தனி குடிசையில் அமர வேண்டும் என்பது கட்டாயம். அது அவர்களது மாதவிலக்கை மற்றவர்கள் கண்காணிக்கும் ஒரு ஏற்பாடு. விதவைக்கு மொட்டையடிப்பதும், வெள்ளை சீலை உடுத்துவதும் அவர்களை தனித்து அடையாளப்படுத்தத்தான். அழகை குலைத்து வீட்டைவிட்டு ஓடாமல் காப்பாற்ற அல்லது ஓடினால் எளிதாக கண்டுபிடிக்கவும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம். அரசர்கள் போருக்கு செல்கையில் ராணிகளுக்கு பூட்டு போட்ட இரும்பு உள்ளாடை அணிவித்த கதைகள் உண்டு. சுரங்கம் தோண்டி இரகசியக் காதலரை சந்தித்த ராணி வடநாட்டில் இருந்திருக்கிறார். கள்ளக்காதல் எனும் பொருள்கொண்ட வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லை, அங்கே அதனை எக்ஸ்ட்ரா மெரைட்டல் அஃபேர் எனும் அதிர்ச்சியூட்டாத வார்த்தையால்தான் குறிப்பிடுகிறார்கள்.

குன்றத்தூர் அபிராமி, அவரது  குழந்தைகள்.

அம்மாவோ அப்பாவோ பிள்ளைகளைக் கொன்றுவிடும் செய்தியும் நமக்கு புதிதல்ல. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைகளுக்குப் பிறகு அவை வாரம் இரு முறையேனும் கேள்விப்படும் செய்தியாகிவிட்டது. வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வோர், மனைவியோடு சண்டைபோட்டு அந்த ஆத்திரத்தில் பிள்ளைகளைக் கொன்ற அப்பாக்கள், காதலுக்கு இடையூறாக உள்ள குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்கள் அல்லது கணவனையோ மனைவியையோ கொன்றவர்கள் என எல்லா வகைமாதிரி குடும்பத்துக்குள்ளேயான கொலைகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் ரியல் எஸ்டேட் கொலைகள்தான் அதிகம் நடக்கும். இப்போது உறவுகளுக்குள் நடக்கும் கொலைகள் அந்த இடத்தை பிடித்துவிட்டன.

பிறகு ஏன் அபிராமி பற்றிய செய்தி பற்றியெரியும் பிரச்சினையானது?

அதன் பின்னிருக்கும் முக்கியமான காரணி, அபிராமியின் செயலில் உள்ள சுவாரஸ்யம். வெகுமக்கள் மனதில் இருக்கும் கலாச்சார நீதிபதியை அச்செய்தி உசுப்புகிறது. வறுமையில் பிள்ளைகளை கொன்றவள் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை. உங்கள் மன நீதிபதியால் அதற்கு ஒரு எளிய தீர்ப்பு சொல்ல முடியாது (அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள முடியாதில்லையா?) சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் தன்னை தேவையின்றி சந்தேகிப்பது பற்றி தோழி ஒருவர் சங்கடப்பட்டுக் கொண்டார். அவர் கணவர் இவரது சம்பளத்தை பெரிதும் நம்பியிருப்பவர்.

”சந்தேகப்பட்டு என்ன செய்கிறார்?” என்று கேட்டேன். ”அடிக்கவோ திட்டவோ மாட்டாரு. ஆனா யாருக்கோ சொல்ற மாதிரி பேஸ்புக்ல எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. மத்த பொம்பளைங்கள திட்டுறமாதிரி என்னை குத்திக்காட்டுவார்” என்றார். (அவரது ஆடைத்தெரிவு ஏனைய ஊழியர்களுடன் சிரித்து பேசுவது மாதிரியான செயல்களை – “தேவடியாளுங்க அடுத்தவங்களை பார்க்க வைக்குற மாதிரி மேக்கப் போடுவாங்க, வேலைக்கு போற பொம்பளைங்க ஏன் அப்படி போகனும்?” இது அவரது வசனங்களின் ஒரு சாம்பிள்).

இந்த வகை வாட்சப்தாசர்கள், சமூகம் சமீபத்தில்தான் கெட்டழிந்துவிட்டது எனத் தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமது கருத்து சரி என நிரூபிக்கும் ஆதாரம் தேவைப்படுகிறது. அபிராமி செய்தி அவர்களது தீர்மானங்களை உரத்து சொல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது.

மேலும் நமக்கு தினசரி வாழ்வில் சுவாரஸ்யம் மிக்க பொழுதுபோக்குகள் குறைவாக இருக்கின்றன. ஒரு காலத்தில் டி.வி. சீரியல்கள் அதனை நிறைவேற்றின. அதில் கள்ளக்காதல், கொலை, கடத்தல் என எல்லாமே வந்தன (சித்தி தொடர் உச்சத்தில் இருந்த போது சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாக குறைந்திருக்கும்). பிறகு நெடுந்தொடர்கள் போரடிக்க ஆரம்பித்த வேளையில் சொல்வதெல்லாம் உண்மை வகையறா நிஜவாழ்வு கள்ளக்காதல், கொலை போன்றவை அவ்விடத்தை ஆக்கிரமித்தன. சும்மா கதை சொல்வது எத்தனை நாள் தாங்கும்? அடுத்து 10 பேரை ஒன்றாக அடைத்து அவர்களது பலவீனங்கள், சண்டைகளை ஒளிபரப்பி வாழ்வை சுவை மிக்கதாக்கினார்கள். ஆனால் அந்த பிக்பாஸும் இப்போது சலிப்புதட்டுவதாக தகவல்.

ஊடகங்களுக்கோ முக்கியமான அரசியல் சமூக பிரச்சினைகள் பொதுவிவாதமாகாமல் தடுக்க வேண்டிய நிர்பந்தம். ரஃபேல் ஊழலையும் பெட்ரோல் விலையேற்றத்தையும் பெரிதாக்கக்கூடாது. ஆனால் தொழில் ஓடியாக வேண்டும். ஆகவே அபிராமியின் செய்தி அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. அதில் பொருந்தாக்காதல் எனும் கிளுகிளுப்பு இருக்கிறது.

நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் நம்மை பாலியல் ரீதியாக கிளர்ச்சியூட்டும்படி வடிவமைக்கப்பட்டவையே. இளைஞர்கள்/ மாணவர்கள் பலர் முதலில் சன்னி லியோனி போன்றோரது ஆபாச வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து அடுத்தகட்டமாக திருட்டுத்தனமான ஸ்கேண்டல் வீடியோக்களையே அதிகம் நாடுகிறார்கள். அது பாலியல் நாட்டத்தில் ஒரு திரில்லை கூடுதலாக சேர்க்கிறது. அதுதான் அபிராமி பற்றிய செய்திகளை பெரிதாக விற்பனையாகவல்ல சரக்காக மாற்றுகிறது. இந்த திரில்தான் திருமணத்துக்கு வெளியேயான காதலின் உடலுறவு நேரத்தை நீட்டிக்கிறது எனவும் அதுவே அந்த உறவின் மீது கூடுதல் போதையேற்படுத்துகிறது என ஒரு உளவியல் பார்வை இருக்கிறது.

காதல் வயப்படுதல் என்பது ஒரு மிதமான கோகைன் அடிமைத்தனத்துக்கு நிகரானது (குறிப்பு : மூளை பாகமான அமிக்டலாவுக்கு நல்ல – மீடியமான – கள்ளக் காதல் என்றெல்லாம் வகைப்படுத்தத் தெரியாது). கிளுகிளுப்பு, திரில், கடைசியில் ஒரு கலாச்சார பாடம் என பெருந்தொகையான மக்களை வசீகரிக்கும் அம்சங்கள் பல இருப்பதால் அபிராமி பாணி செய்திகள் என்பது காட்சி ஊடகங்களுக்கு ஒரு ஜாக்பாட். அதனால்தான் பல கோணங்களில் தக்க பிண்ணனி இசையோடு அச்செய்தியை இறக்குகிறார்கள்.

ஊடகங்களின் ‘எக்ஸ்ரே’ ரிப்போட்டுகள்.

ஆகவே இத்தகைய செய்திகளுக்கு அதிகம் அதிர்ச்சியடைந்து ஆற்றலை வீணாக்காதீர்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். இது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும் என கருதினால், அதற்கான வேறு நியாமான காரணிகள் இருக்கின்றன.

சமூகம் முழுக்க மனிதர்கள் கடுமையான பதற்றத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உணவு, காதல் – காமம் மற்றும் பதட்டம் (ஸ்ட்ரெஸ்) ஆகியவை நமது நடத்தை மற்றும் முடிவுகளின்மீது பெரும் செல்வாக்கு செலுத்தவல்லவை. பெரும்பான்மை குடும்பங்கள் போதுமான அளவு நேர்மறையான சமூகத் தொடர்புகள் அற்றதாக இருக்கின்றன (நமது சமூக ஊடக அடிமைத்தனத்துக்கு அதுவும் ஒரு காரணம்). அரசியல் காரணங்களால் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. நவீனத்தை வலியுறுத்தும் விளம்பரங்கள் பழைய கலாச்சாரமே சிறந்தது எனும் வாட்சப் அறிவுரைகள் என முற்றிலும் வேறான இருதுருவ குழப்பங்கள் நம்மை அலைகழிக்கின்றன. இவை எல்லாமே நம் எல்லோரது இயல்பையும் கடுமையாக சிதைக்கின்றன.

தாங்க இயலாத ஆத்திரத்தில் அல்லது மன அழுத்தத்தில் தமது பிள்ளைகளை கடுமையாக அடித்துவிடுவதாக பல அம்மாக்கள் எங்களிடம் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெல்ட்டால் மகனை / மகளை அடிக்கும் அம்மா, மகனை சுடுதண்ணீரில் தள்ளிவிட முயன்ற அம்மா, நான்கு வயது மகளை சுவற்றில் தள்ளிவிட்டு பிறகு அதற்காக அழுத அம்மா என ஏராளமான உதாரணங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் யாரும் கொடுமைக்காரி அம்மாக்கள் இல்லை. அது அவர்களை நெருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளின் ஒரு விளைவு. அதனை வெறுமனே அப்பெண்களின் நடத்தைப் பிரச்சினை என கருதினால் நம்மால் ஒரு குழந்தையைக்கூட அடி வாங்குவதில் இருந்து காப்பாற்ற முடியாது.

திடீரென எழுச்சி பெறும் பக்தி, அதீத சோதிட நம்பிக்கை, தற்கொலைகள், மனநல பிரச்சினைகள் என எழுதி மாளாத அளவுக்கு பிரச்சினைகள் இதனால் உருவாகின்றன. உறவுச்சிக்கல்கள் அந்தப் பட்டியலில் கடைசியாக வரும். ஆனால் அதன் நியூஸ் வேல்யூ ஏனையவற்றைவிட மிக அதிகம் (மனநலம் சார் தேடல்கள் கூகுளில் அதிகம் இருப்பதாக கேள்வி ஆனால் அதன் செய்தி முக்கியத்துவம் குறைவு). ஆகவே அத்தகைய செய்திகள் விரைவாகவும் முழு வீச்சோடும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வெறும் கலாச்சார மதிப்பீடுகளைக்கொண்டு பார்ப்பதால் எந்த பலனும் வரப்போவதில்லை.

மேற்கத்திய கலாச்சாரம் நம்மை கெடுத்துவிட்டது என்பது பச்சை அயோக்கியத்தனம்.  புதிய தொழில்நுட்பங்கள் பொருந்தாக் காதலுக்கு கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கிறது என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம். ஒருகாலத்தில் இருந்ததாக நம்பிக்கொண்டிருக்கிற ஒழுக்கமான கலாச்சாரம் இங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பெண்களை ஜாக்கெட்கூட அணியவிடாத கலாச்சாரம் இங்கே இருந்தது. லட்சக்கணக்கான விதவைகளை அனாதையாக காசியில் விட்டுவிட்டு வந்து  கூச்சமில்லாமல் வீட்டில் வம்சவிருத்தி செய்த கலாச்சாரம் இங்கிருந்தது. கணவன் செத்தால் மனைவிக்கு கஞ்சா கொடுத்து நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இங்கிருந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் சோ கால்டு கள்ளக்காதல் எல்லாம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவதற்கான செய்தியே அல்ல.

கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு. யார் கண்டது, அந்த செயல்பாடுகள் கலாச்சார காவலர்களின் கடைசி சமரசமான ஸீரோ கேஷுவாலிட்டி எனும் நிலையை கள்ளக்காதல்களிலும் கொண்டுவரக்கூடும்.

சோஃபியா : கொண்டாடத்தக்க சீற்றம் !

(வினவு தளத்திற்கு எழுதப்பட்டு செப்டம்பர் 7, 2018 அன்று வெளியான கட்டுரை)

சென்னையில் தன் குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய அபிராமி செய்திகளால் எல்லா ஊடகங்களும் மக்கள் மனங்களும் நிறைந்திருந்த வேளையில், மாணவி ஒருவர் ஒற்றை கோஷத்தின் மூலம் அவர்கள் கவனத்தை திருப்பியிருக்கிறார். அது வெறுமனே ஒற்றை வாசகமாக இருக்கலாம். மிகை ஆர்வம் காரணமாக வெளிப்பட்ட எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் சோஃபியாவிமானத்தில் ஏறுகையில் எடுத்த ஒரு தீர்மானமும் அதனையடுத்து எடுத்த சிறு முயற்சியும் தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமானவை. அது வெறும் ஒற்றை கோஷம் என்றால் பா.ஜ.க. இத்தனை பதற அவசியமில்லை.

முதலில் சோஃபியாவின் விமான முழக்கத்துக்கு பா.ஜ.க. கூடாரத்தின் எதிர்வினைகளை கவனியுங்கள் (இந்துத்துவாவுக்கு தாலிகட்டினாலும் ஒரிஜினல் கள்ளக் கணவர்களாகவே வாழும் ”நடுநிலை” பார்ப்பனர்கள் உட்பட). விமான நிலைய வளாகத்தில் தாவித் தாவி குதிக்கிறார் தமிழிசை. அவரை தடுக்க அங்கிருந்த பெண் போலீஸ்காரர் ஒரு கபடியாட்டமே நடத்த வேண்டியிருந்தது. “சோஃபியா இடத்தில் என் மகளை வைத்து பார்க்கிறேன் ஆகவே அவரது எதிர்காலம் பாதிக்கப்படுமே என கவலையாக இருக்கிறது” என ரங்காராவ் பிட்டை போடுகிறார் தினமலர் வெங்கடேஷ். அவர் ஏன் மாணவி வளர்மதியை மகளாக நினைக்கவில்லை, சோஃபியாவை ஏன் மகளாக நினைக்க முடிகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம்.

பொன்.ராதா, தமிழிசை உள்ளிட்ட பல பா.ஜ.க. தலைகள் கோஷமிட்ட பெண்ணுக்கு பின்னணியில் ஏதோ ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் அலறுகிறார்கள். பா.ஜ.க. பாதநக்கி கருத்தாளர்களும் அதனை அப்படியே வழிமொழிகிறார்கள். ஆனால் அனைவரும் கோபத்தையும் பதற்றத்தையும் அடக்கிக்கொண்டு தடுப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பது இங்கே பெரிதும் கவனிக்கத்தக்கது. பா.ஜ.க. பேச்சாளர்கள் ”நாங்கள் வெறும் புகார் மட்டும்தான் கொடுத்தோம். அவரை ஜெயிலில் தள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, அந்த உரிமைகூட எங்களுக்கு இல்லையா” என்றுதான் புலம்பினார்கள்.

வழக்கமாக தமிழிசைக்காக தமிழக பா.ஜ.க.வின் பார்ப்பன லாபி எந்த வேலையையும் செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் தமிழிசையை வேலை மெனக்கெட்டு ஆதரிக்கிறார்கள். நேரடி மற்றும் மறைமுக பா.ஜ.க. கருத்தாளர்கள் எல்லோரும் அவர் வெறுமனே மாணவியல்ல அவருக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் சொல்லி சோஃபியா ஒரு சாமனிய பெண் அல்ல என நிரூபிக்க முற்படுகிறார்கள். பிறரை அவமானப்படுத்துவதையே வழக்கமாகக்கொண்ட பா.ஜ.க. இவ்விவகாரத்தில் சோஃபியாவை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருகிறது.

மறுபுறம் செய்தி கேள்விப்பட்ட சமூக வலைதளவாசிகள் பேரார்வத்தோடும் ஒருவிதமான பரவசத்தோடும் அவரை ஆதரித்து பதிவிடுகிறார்கள். இத்தளங்களில் இயங்காத சாமானிய மக்களும் இதே உணர்வோடுதான் இருந்தார்கள். சோஃபியாவை ஆதரிக்கும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக எனும் ஹேஷ்டேக் ஒரு அலையைப்போல பரவிற்று. ஏன் சாதாரண நிகழ்வுவொன்று ஒருபுறம் பெரும் பதற்றத்தையும் மறுபுறம் பரவசத்தையும் உருவாக்குகிறது?

காரணம் அந்தப்பெண் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பொருளாதாரப் பிண்ணனி. பா.ஜ.க.வின் கோர முகம் தெரிந்தும் அதனை அலட்சியப்படுத்தி, பா.ஜ.க.வை ஆதரித்து பார்ப்பனக் கும்பலோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அதனை பயன்படுத்திய மிடில் கிளாசில் இருந்து அவர் வந்திருக்கிறார். அதிகம் படித்தவனுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது. நீ படி, அதிகம் பொருளீட்டு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்பதே அனேக மெத்தப்படித்தோரின் வாழ்நாள் அறிவுரை. அந்த அறிவுரையை சோஃபியா துணிவோடு புறந்தள்ளியிருக்கிறார். போராட்டங்களை இடையூறு என்பதாகவும் உரத்த குரலை அநாகரீகம் என்பதாகவும் கருதும் ஒரு வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஒரு சிறு பெண் எட்டி உதைத்துவிட்டார்.

தங்களது கவசமாக இருந்த ஒரு வர்க்கத்தில் இருந்து வந்த பெண் அவர்களுக்கான விதிகளை எல்லாம் உடைத்துவிட்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதை பார்க்கையில் தமிழிசைக்கு பயம் மேலிடுகிறது. என்ன நடந்தாலும் சாணி மாதிரி கிடக்கும் மிடில்கிளாசிடம் இருந்து வெளிப்படையான எதிர்குரல் எழுவதென்பது பா.ஜ.க. கூடாரத்தை பெரிதும் கலவரப்படுத்தவல்லது. அதனை ஆரம்பத்திலேயே நசுக்கிவிடத் துடித்ததன் விளைவே தமிழிசையின் அந்த விமான நிலைய குறளிவித்தை. எல்லாவற்றையும் பொறுக்கித்தனமாகவே கையாளும் பா.ஜ.க.வின் தலைவர் என்பதால் இதையும் அப்படியே கையாள முற்பட்டார் தமிழிசை. அதனால்தான் அவர் வெறுமனே புகார் சொல்லாமல் தன் ஆட்களை விட்டு சோஃபியாவையும் அவர் குடும்பத்தையும் மிரட்ட வைத்தார் (அவர் மிரட்டு என உத்தரவிடத்தேவையில்லை, என்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என சொன்னாலே போதுமானது).

ஆனால், ஆரம்பத்திலேயே பாடம் கற்பித்துவிடவேண்டும் எனும் அவரது ஆத்திரம் எதிர்மறையாக வேலை செய்துவிட்டது. தலித், பெண், கிருஸ்துவர், வெளிநாட்டில் படிக்கிறார் என்பதாக பா.ஜ.க.வால் மிக இலகுவாக அவமானப்படுத்த முடிகிற எல்லா தகுதியும் சோஃபியாவுக்கு இருந்தது. ஆனால் மக்கள் யாரெல்லாம் களத்துக்கு வரவேண்டும் என விரும்பினார்களோ அங்கிருந்து ஒரு சிறு பெண் துணிந்து வரவும் கொண்டாடித் தீர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பா.ஜ.க.வின் வழக்கமான அஸ்திரங்கள் பயனற்றுப்போயின. மிக அரிதான நிகழ்வாக பா.ஜ.க. தடுப்பாட்டம் ஆடும் நிர்ப்பந்தம் வந்தது.

பா.ஜ.க.வை சங்கடப்படுத்தாமல் ஷோவை ஓட்டிவிடவேண்டும் எனும் ஊடகங்களின் வேண்டுதலை குழந்தைகளை கொன்ற அன்னை அபிராமியால்கூட காக்க இயலவில்லை. ஆனாலும் பாசிச பா.ஜ.க. ஒழிக எனும் கோஷம் முன்னுக்கு வராமல் தடுத்து சோஃபியா செய்தது சரியா என்பதாக விவாதித்து தமது எஜமானர்களை அவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். எந்த டி.வி.யும் தமிழிசை ஏன் புகார் மட்டும் கொடுத்துவிட்டு போகாமல் தன் கட்சி ஆட்களை அழைத்து ரகளை செய்தார் எனும் கோணத்தை விவாதிக்கவே இல்லை.

பா.ஜ.க.வின் டிப்ளமேட்டிக் அணிகள், டிப்ளமேட்டிக் ரவுடி அணிகள் மற்றும் பியூர் ரவுடி-பொறுக்கி அணிகள் எல்லாமே இம்முறை அடக்கி வாசித்தன. பார்ப்பன நற்செய்தியாளர்கள் சேதாரத்தை அனுமானித்து ”ஏர்கிராஃப்ட் ரூல்சை மீறிப் பேஷறது தப்பு” என ஆரம்பித்து ”பொண்ணோட எதிர்காலம்ன்னு ஒன்னு இருக்குல்ல..” என முடித்தார்கள், அதன் பொருள் மற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரும் இப்படி கோஷம் போட்டுவிட வேண்டாம் என்பதே. பொன்ரா வகையறா சோஃபியாவுக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொல்லி  அவர் உங்கள் ஆள் அல்ல என மக்களுக்கு பாடம் எடுத்தார்கள். மக்கள் தமது கோபத்தை அடுத்த வருடம் தேர்தலில் காட்டினால் போதும் என ஆலோசனை சொன்னார் ஒரு நடுநிலை. ”உங்க தலைவருக்கு இது நடந்தா நீங்க சும்மாயிருப்பேளா” என சிலர் முறையிட்டார்கள் (சம்பவத்தில் ஒரு முக்கிய திருப்பமாக தி.க. ஓவியாவும் இதை சொன்னார். வரலாற்றில் முதல் முறையாக பா.ஜ.க. நாராயணன் ஓவியாவின் கருத்துக்களை குறிப்பிட்டு வழிமொழிந்தார்) ஆனால் ஒருவர்கூட பா.ஜ.க. பாசிஸ்ட் கட்சி இல்லை என்றோ பாசிச ஆட்சி இல்லை என்றோ சொல்லவில்லை.

சோஃபியாவின் குரலுக்கான எதிர்வினைகளையும் பரிசீலிக்கையில் அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது விளங்கும். மக்கள் இத்தகைய குரல் ஒன்றுக்காக காத்திருந்திருக்கிறார்கள் என்பதும் பா.ஜ.க. கூடாரம் இத்தகைய குரலைக் கண்டு அஞ்சுகிறது என்பதும் உற்சாகமூட்டக்கூடிய செய்திகள். சோஃபியாவை ஆதரிப்பதன் மூலம் அவரது உணர்வுகளை பரவலாக்குவதன் மூலம் நாம் பெருந்தொகையான மத்தியதர மக்களிடையே உள்ள தயக்கத்தை உடைக்க முடியும். உண்மையில் பா.ஜ.க.வின் பொருளாதார நடவடிக்கைகள் கொடூரமாகச் சிதைத்திருப்பது மிடில்கிளாஸ் மக்களின் எதிர்காலத்தைத்தான் (ஏழைகளுக்கு அப்படி ஒன்று இருந்ததில்லை). நிகழ்காலத்தை செலவு மிக்கதாக்கி சேமிப்பை அர்த்தமற்றதாக்கியதுதான் பா.ஜ.க. மிடில் கிளாஸ் விசுவாசத்துக்கு கொடுத்த பரிசு. இன்று அவர்களை பிடித்து நிறுத்தியிருப்பது அந்த விசுவாசம் அல்ல, பா.ஜ.க.வை செருப்பால் அடிப்பதில் இருக்கும் தயக்கம்.

இதுவரை நடுத்தர வர்க்க மக்களுக்கு போதிக்கப்பட்ட உதாரண மனிதர்களின் இலட்சணமான “நல்லா படி, ஃபாரின் போ, சம்பாதி” என்பதை கிட்டத்தட்ட அடைந்துவிட்டவர் சோஃபியா. அப்படியான உதாரண மிடில் கிளாஸ் மகளை சமூக அக்கறைக்கான மாடலாக நாம் காட்டவேண்டும். அவர் கோஷம் மட்டுமல்ல, மன்னிப்பு கேட்க மறுத்த துணிவு மற்றும் அவரது கருத்தியல் பங்களிப்பு (அவர் எழுத்துக்கள்) ஆகிய எல்லாவற்றையும் நாம் பெருமிதத்தோடு வரவேற்போம். எது எதிரியை அச்சுறுத்துகிறதோ அதனை கொண்டாடுவோம். இன்னும் ஆயிரமாயிரம் சோஃபியாக்களின் தயக்கத்தை அது உடைக்கட்டும்.