பெரிய அறிமுகமில்லாத எளியவனிடமிருந்து…


எச்சரிக்கை: சுயபுராண சாயல் கொண்ட இடுகை.

சில வாய்ப்புக்கள் அதிகம் சிரமப்படாமலே கிடைத்துவிடுகின்றன. ஏறத்தாழ தமிழ்மண நட்சத்திர வாரமும் அப்படியே. நவம்பர் மாதத்தின் மத்தியில் என் வசம் எந்த திட்டமிடலும் இல்லை, நட்சத்திர வாரத்துக்கான தேதியை உறுதிசெய்த பிறகு ஒரு முடிவுமட்டும் மனதில் இருந்தது. ஏழு சிறப்பான இடுகைகளை தர முடியாவிட்டாலும் அவற்றுக்கான உழைப்பு என்னளவில் சிறப்பாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.

எந்த கட்டுரைக்கும் இரண்டு விதிமுறைகளை பின்பற்றுவது வழக்கம். ஒன்று, கட்டுரை குறைந்தபட்சம் அறுநூறு வார்த்தைகளைக் கொண்டிருக்கவேண்டும். இரண்டு, எழுதியது எனக்கு புரியவேண்டும். தொடர்ச்சியாக ஏழு எழுதவேண்டும் எனும்போது அது வேறுசில விதிகளைக் கொண்டுவருகிறது. ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் இருக்கவேண்டும், எல்லா கட்டுரைகளும் கடினமானதாக இருக்கக்கூடாது ஆகியன அவற்றுள் சில. ஏறத்தாழ பதினைந்து தலைப்புக்கள் நவம்பர் இறுதியில் திரட்டப்பட்டது. ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட தலைப்புக்கள் தவிர்க்கப்பட்டன (டிசம்பர் இருபதில் அவை பழைய செய்தியாகக்கூடும் என்பதால்).

ஒரு தலைப்பு தவிர்க்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டது (கல்வி), ஒரு தலைப்பு எழுதப்பட்டபின் தவிர்க்கப்பட்டது.  டிசம்பர் பதினைந்தாம் தேதி எல்லா கட்டுரைகளும் முழுமையடைந்திருந்தன. இதில் நீண்ட நாள் எடுத்துக்கொண்ட கட்டுரை கருணாநிதி பற்றியது. மிகவும் குறைவான அவகாசத்தில் எழுதப்பட்டது மருத்துவம் பற்றியது. அனேகமாக எல்லா கட்டுரைகளும் நீளமாக இருந்ததால் எதன் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. பணம் பற்றிய கட்டுரையொன்றைத்தவிர வேறெதையும் சுருக்கவும் இயலவில்லை. கட்டுரைகள் மட்டுமில்லை இவை எதுவும் பெரிதான வரவேற்பைப் பெறாது என்ற நம்பிக்கையையும் கையில் வைத்துக்கொண்டே இந்த நட்சத்திர வாரத்தை துவங்கினேன்.

ஆனால் என் நினைப்பை பொய்யாக்கும் விதமாக ஒரு நெகிழ்ச்சியான மற்றும் மறக்கவியலாத வாரமாக இது அமைந்திருக்கிறது. வழக்கமாக இந்த தளத்தில் வருகைப்பதிவு மிகவும் குறைவானதே.  ஒன்றரை வருடத்தில் வந்த மொத்த பின்னூட்டங்கள் இருநூற்று என்பது. ஆனால் இந்த ஒருவாரத்தில் மட்டும் அது நூறைத்தாண்டியிருக்கிறது. பின்னூட்டங்களும் அதனைத்தொடர்ந்து வந்திருக்கும் சில மின்னஞ்சல்களும் இந்த விடைபெறும் தருணத்தை மிகவும் நிறைவானதாக என்னை உணரவைத்திருக்கிறது.

இதற்காக மகிழ்ச்சியடைய முடியுமேதவிர நான் பெருமைப்பட முடியாது. அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த விசயங்கள்தான் என்னால் எழுதப்படுகின்றது. நேரமும் கணினியும் இருக்கும் யாராலும் முடிகிறவை இவை. கூடுதலாக ஏராளமான அரசியல் விவாதங்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன் ( நாங்கள் பேஸ்ட் தீர்ந்துபோனதைப் பற்றி பேசும்போதுகூட அதில் அரசியலை இழுக்கிற ஆட்கள்),  அதுபற்றிய பல புத்தகங்களை தொடர்ந்து வாங்கும் வீட்டுப்பிண்ணனியில் இருந்து வந்ததற்கு நான் இன்னும் அழுத்தமான கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.  இருந்தும் வெறும் அனுபவத்தை வைத்து ஒப்பேற்றுவதை நினைத்து கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

பெங்களூர் சிறீராம்புரத்தில் ஒரு அம்மா ஒன்னரை ரூபாய்க்கு இட்லி விற்கிறார், எத்தனை நாளைக்கு இப்படி விப்பீங்க என்று கேட்டால் எனக்கு கட்டுப்படியாகும்வரை என்று சுருக்கமாக பதில் சொல்கிறார்  அவர். அதை கேட்டுவிட்டு திருப்பூர் திரும்பிய ஒருவாரத்தில் எங்கள் அலுவலக உயரதிகாரி பொருளாதார நெருக்கடி காரணமாக உங்கள் யாருக்கும் இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடையாது என அறிவிக்கிறார். அதற்கான பரிசாக  இருபதாயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொள்கிறார் (சம்பளமல்லாத, இதர படிகள் என்ற பெயரில்).  இப்படி தனிமனித மதிப்பீடுகளில் தொடங்கி சமூகத்தின் சகல அம்சங்களிலும் முற்றிலும் நேரெதிரான மனிதர்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறேன், அவ்ர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் செய்திகளை வார்த்தைகளாக்குகிறேன், அவ்வளவுதான். ஆகவே இந்த வலைப்பூவிலுள்ள எல்லா பதிவுகளுக்கும் உன்மையான உரிமையாளர்கள் என்னைச் சுற்றியிருப்பவர்களே. முன்பொருமுறை குறிப்பிட்டதைப்போல இந்த தளத்துக்கு நான் ஒரு D.T.P ஆப்பரேட்டர் மட்டுமே.

பதிவுகள் எழுத ஆரம்பித்த இரண்டாவது மாதத்தில் இருந்து நான் எதிகொள்ளும் கேள்வி ஏன் எப்போதும் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் என்பதுதான். சமூகத்தின் மீது விரக்திகொண்டவனாகக்கூட சிலர் மதிப்பிடுகிறார்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கேட்டால்கூட இவர்கள் நெகட்டிவை கொடுப்பவர்களோ என்று சந்தேகிக்கிறார்கள்.  உண்மையில் என்னை சுற்றியிருப்போரில் பலர் அநியாயத்துக்கு நல்லவர்கள். எல்லோருக்கும் டெரரானவர்களாகவே அமையும் வீட்டு உரிமையாளர்கூட எங்களுக்கு அதீத அக்கறையுடையவர்களாகவே அமைந்திருக்கிறார். எங்கள் மின் கட்டணம் கட்டுவது முதல் தண்ணீர் தொட்டியை நிரப்புவதுவரை அவரே செய்கிறார். திடீரென கேஸ் தீர்ந்துபோனால் என்வீட்டு சிலிண்டரை எடுத்துக்கொள்ளூங்கள் என்கிறார்,  கல்யாணம் ஆகவில்லை என்று கவலைப்பட்டால் அவரே பெண்பார்த்துத் தந்து விடுவார் போலிருக்கிறது.

இப்படி நல்லோர்சூழ் உலகில் இருப்பதால் மோசமான நபர்களும் செய்திகளும் கோபப்படுத்தும் காரணிகளாகிவிடுகின்றன.  அதனால் வரும் பதிவுகள் பல யாரையாவது அல்லது எதையாவது விமர்சனம் செய்வது தவிர்க்க இயலாததாகிறது. இந்தநிலையில் பாசிடிவாக எழுது என்று சொன்னால்  எதை எழுதுவது? தேங்காய் சட்னி சீக்கிரம் கெடாமல் இருக்க என்ன செய்யலாம் என்றுதான் பதிவெழுத வேண்டும். ஆனால் அதற்கு தேங்காயோடு கொஞ்சம் புளியை வைத்து அரைக்க வேண்டும் என்கிற தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டுமே??? ஆகவே பாசிடிவாக எழுதுவது எனக்கு இந்த ஜென்மத்தில்  சாத்தியப்படாது போலிருக்கிறது. இதுவரை எப்படி கட்டுரைகள் வந்தனவோ அப்படித்தான் இனியும் வில்லவன்.வேர்டுபிரஸ்.காம் தளம் தொடரும் என்று நினைக்கிறேன்.

வலையுலகத்துக்கும் பதிவர்களுக்கும் நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு  தமிழை உபயோகமில்லாத ஒன்று என சொல்லும் ஒரு அலுவலகத்தில் இருந்தபோது அறிமுகமானவைதான் தமிழ் வலைப்பூக்கள். தமிழை வாசிக்க கூடுதலாக கிடைத்த ஒரு ஊடகம் எனும் நிலையிலிருந்து ஒரு பங்கேற்பாளனாகவும் மாற்றியது மற்ற பதிவர்களது எழுத்துக்கள்தான். இப்போதும் என் பதிவுகளை பலருக்கும் கொண்டுசேர்ப்பது மற்றவர்களே. ட்விட்டர் முகவரிகூட இல்லாத எனக்கு டிவிட்டரிலிருந்து பல வருகைப்பதிவுகள் வருவது வேறெப்படி சாத்தியமாகும்? பதிவுகள் படிக்க ஆரம்பித்த பிறகு சொந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களை தமிழுக்கு மாற்றிவிட்டேன் என்றால் பதிவு எழுத ஆரம்பித்தபிறகு சினிமா பார்ப்பதை கணிசமாக குறைத்துவிட்டேன். இதற்கே நான் வலையுலகிற்கு ஏகப்பட்ட நன்றி சொல்லவேண்டும்.

அடுத்து தமிழ்மணம். ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேலாக எனக்கு பதிவை தமிழ்மணத்தில் இணைக்கத்தெரிந்திருக்கவில்லை. அதை கற்றுக்கொண்டு சில இடுகைகளை இணைத்தபோதே இந்த நட்சத்திர வாரத்துக்கான வாய்ப்பு வந்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் ஏழெட்டு இடுகைகளை எழுதிவிடமுடியும் எனும் நம்பிக்கை தமிழ்மணத்தால்தான் கிடைத்திருக்கிறது. மிகவும் சிறிய வட்டத்தால் வாசிக்கப்பட்ட வலைப்பூ என்னுடையது. சரியாக சொல்வதானால், நட்சத்திர வாரத்துக்கு முன்னால் இரட்டை இலக்க பின்னூட்டங்களையே நான் ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். அதிக அளவிலான வாசகர் எண்ணிக்கை,  ஒழுங்காக எழுதவேண்டும் எனும் பொறுப்புணர்வையும் நிறைய எழுதவேண்டும் எனும் ஆர்வத்தையும் ஒருசேர தருகிறது. அந்த வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த தமிழ்மணத்துக்கு நன்றி.

நிறைவாக, வாசிப்பின் வாயிலாகவும் பின்னூட்டங்கள் வாயிலாகவும் இந்த எளியவனை அங்கீகரித்த எல்லோருக்கும் நன்றி. அவகாசமிருக்கையில் இனி வரும் இடுகைகளையும் வாசியுங்கள். மாற்றுக்கருத்தோ அல்லது விமர்சனமோ இருப்பின் தவறாது எழுதுங்கள். உங்கள் பங்கேற்பு இருக்கும்பட்சத்தில் என் பதிவுகளின் தரத்தை இன்னும் மேம்படுத்த இயலும்.

ஏற்கனவே சொன்னவைதான். மீண்டும் சொல்கிறேன்,

//முழுமையான மற்றும் நேர்த்தியான ஒரேயொரு பதிவையேனும் எழுதிவிடுவேன் என்ற உறுதியை என்னால் இப்போது தரமுடியாது. ஆனால் பொறுப்பற்ற வகையிலோ வெறும் அரட்டையாகவோ ஒரேயோரு பதிவுகூட என்னிடமிருந்து வராது எனும் உறுதியை நிச்சயமாக தரமுடியும்.//

நன்றி,
வில்லவன்.

“பெரிய அறிமுகமில்லாத எளியவனிடமிருந்து…” இல் 8 கருத்துகள் உள்ளன

  1. வணக்கம் தோழர் வில்லவன்!

    முதல் நன்றி உங்களுக்கல்ல…. தமிழ்மணத்துக்கு.
    வில்லவனை சங்கிலிப் பிணைப்பில் (நகைத் தமிழ்) அறிமுகப்படுத்தியதற்காக.

    அடுத்து உங்களுக்கு.

    சில சமயங்களில் அதிர்ஷ்ட்டத்தை நம்பவேண்டியிருக்கிறது – திடுமெனக் கிடைத்த உமது வலைப்பூ!
    மிகையில்லை நண்பரே, பசித்த்த கழுகின் பார்வையிலேயே உன் வலைப்பூவை வட்டமடித்துக் கொண்டிருந்தேன். கட்டுரைகள் அகோரப் பசியுடன் விழுங்கப்பட்டன.

    நானொரு கம்ப்யூட்டர் மக்கு. எனக்குத் தெரிந்ததெல்லாம், வினவு, வினவு லிங்கிய தமிழ்மணம் முதலியன. பத்து வார்த்தைகளை அச்சுக் கோர்ப்பதற்கே அந்தர்-பல்டி அடிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் உனது முயற்சிகளும் எழுத்துக்களும் என்னை உற்சாகப் படுத்துகின்றன. நன்றி!

    தேர்வுகளுக்கு வாழ்த்துக்கள்.

    – புதிய பாமரன்

  2. பொறுப்புணர்வுடன் அனைத்தையும் எழுதியிருந்தீர்கள்.தொடர்ந்து அதிகமாக எழுத முயலுங்கள். பதிவிடாமல் விடுபட்டவைகளை மறக்காமல் மீண்டும் இடுங்கள். வாழ்த்துக்கள்

  3. அந்த ஸ்ரீராம்புரம் சரோஜா தேவி பாட்டி எங்களோட வர்புருதலாலா இட்லிய 1 .50 லேருந்து 2 ரூபாயாக்கி CUSTOMERS கொறைரன்கன்னு மறுபடியும் இட்லிய 1 .50 ( இந்த விலைவசிளையும்) ஆக்கிடுச்சுகிறது மற்றும் ஒரு வேதனையான விஷயம் நண்பா

  4. வில்லவன் இன்று தான் உங்களின் சில பதிவுகளை படிக்க வாய்ப்பு கிடைத்தது.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

    பொறுப்பாக எழுதப்படும் இடுகைகள் இன்று இல்லை எனினும் என்றாவது ஒரு நாள் கவனிக்கப்படும்.. மிகுந்த காலம் எடுக்காமல்.

    வாழ்த்துக்கள்.

பின்னூட்டமொன்றை இடுக