பள்ளிக்கல்வி- முட்டாள்கள் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள், புத்திசாலிகள் புத்தகங்களுக்காக காத்திருக்கிறார்கள்.


(சற்றே நீளமான பதிவு.)

முதலில் இது சமச்சீர் கல்வி குறித்தான பதிவு மட்டுமல்ல என தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமச்சீர் கல்வி பற்றி ஏராளமான கட்டுரைகள் இதற்குள் எழுதப்பட்டிருக்கும். சமச்சீர் கல்வி நிறுத்திவைக்கப்படும் முன்பே அதுகுறித்த அபிப்ராயங்கள் மக்களிடம் எப்படி இருந்ததோ அதில் கொஞ்சமும் மாற்றமில்லாமல்தான் இப்போதும் இருக்கிறது என்று கருதுகிறேன். இந்த முடிவுகள் பெரும்பாலும் நமது பொருளாதார நிலை, அரசியல் அறிவு மற்றும் மனோபாவம் சார்ந்ததாகவே இருக்கிறதேயன்றி எது சரியானது என ஆராய்ந்து பார்த்து வந்ததாக தெரியவில்லை.

ஆகவே நாம் முதலில் அச்சமடைய வேண்டியது ஜெயலலிதாவின் எதேச்சதிகாரமான திமிரான  நடவடிக்கை குறித்தல்ல. தங்களது பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலம் அவர்களது சம்பாத்தியம் மட்டுமே  என நம்பிக்கொண்டு, அதனடிப்படையிலேயே கல்வி முறையை தீர்மானிக்கச் சொல்லும் பெற்றோர்களின் மனோபாவம்தான் இன்றைய சூழலில் பேராபத்தானது. ஒரு ஜெயாவின் அடாவடித்தனத்தைக் காட்டிலும் லட்சக்கணக்கான பெற்றோர்களின் அடிமுட்டாள்தனம்தான் எதிர்கொள்ள சவாலானது.

ஊருக்கு முன்னால் தன் பிள்ளை ஏபிசிடி சொல்ல வேண்டுமென்பதற்காக இரண்டரை வயதில் குழந்தையை பள்ளிக்கு அனுப்புகிறோம், ஒன்பதாம் வகுப்பு பாடத்தை தவிர்த்துவிட்டு பத்தாம் வகுப்பு பாடம் நடத்தப்படுவதை மௌனமாக அங்கீகரிக்கிறோம், பனிரெண்டாம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தை சுலபமாக எதிர்கொள்ள பத்தாம் வகுப்புவரைக்கும்  கடினமான பாடத்திட்டங்களை படிக்க வைக்கிறோம், திருச்செங்கோட்டு உறைவிடப்பள்ளிகளில் படிக்க வைத்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என கேள்விப்பட்டால் பிள்ளைகளை அங்கு இழுத்துக்கொண்டு ஓடுகிறோம். சுருங்கச்சொல்வதானால் ஒரு சூதாடியையொத்த சிந்தனையுடன்தான் நம் சமூகத்து நடுத்தர வர்கம் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறது. நம்மைவிட ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்கள் எவ்வளவோ மேலானவர்கள். ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக காளைக்கு சாராயம் கொடுத்து களத்துக்கு அனுப்பினாலும் அவர்கள் மாட்டின் நலன் கருதியே அப்படி செய்கிறோம் என்று சொல்வதில்லை.

முதல் மதிப்பெண்னுக்கு குழந்தைகளை விரட்டும் முட்டாள்தனத்தின் மோசமான விளைவுகள் இந்த ஆண்டு பூதாகரமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது. டெல்லியில் உள்ள பல பிரபல உயர் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டு  கட் ஆஃப் நூறு விழுக்காடு. இதற்கு மேல் எந்த இலக்கை நோக்கி மாணவர்களை விரட்ட இயலும்? தமிழ் நாட்டில் இந்த ஆண்டு அரசுத்தேர்வுகளில் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் எண்ணிக்கை நூறைத்தொடும் போலிருக்கிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் இது ஆயிரத்தைத் தொட்டால் அரசு என்ன செய்யும் என்பது பற்றிய சிந்தனை யாருக்கும் வருவதில்லை. மதிப்பெண் வாங்க ஆயிரம் வழியுண்டு ஆனால் அறிவுடைய குழந்தைகளை வளர்ப்பதற்கு குறுக்குவழி எதுவும் இல்லை. இதை நம் நடுத்தர வர்கம் உணர்வதற்குள் ஒரு தலைமுறை மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்களின் அறுப்புக்கு அனுப்பும் பிராய்லர் கோழிகளாக்கியிருப்போம். ஆனால் இந்த மடத்தனமான சுயநல சிந்தனை மட்டுமே இவர்கள் சமச்சீர் கல்வியை எதிர்கக் காரணமல்ல.

சமச்சீர் கல்வியை ஜெ. அரசு கைவிட்டபோது, சன் டிவியில் பெற்றோர் ஒருவர் பேசுகிறார் “கான்வென்ட்ல படிக்கிறவங்களுக்கும் கார்பரேசன் ஸ்கூல்ல படிக்கிறவங்களுக்கும் ஒரே புத்தகம்கிறதை எப்படி ஏத்துக்க முடியும்?”. இதைக் கேட்டபோது எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவேயில்லை. ஆனால் அதன் பிறகு நான் சந்தித்த பல மத்யமர்கள் இதே கருத்தைக் கொண்டிருந்ததைக் கண்டு திகைத்துப் போனேன். பார்பனீயத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் பிறந்த ஒரு நவீன தீண்டாமை வடிவம் இந்த கோஷ்டியினரை பற்றிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் இவர்கள் சோ வுக்குப் பிறந்தவர்கள்  மாதிரியே  சிந்திக்கிறார்கள். காசில்லாதவன் பிள்ளையும் என் பிள்ளையும் ஒன்னா? என்ற கேள்விதான் சமச்சீர் கல்வியை எதிர்க்கும் பலரை செலுத்துகிறது. கல்வித்தரம், எதிர்காலம் ஆகிய வாதங்கள் இந்த கேள்வியை மறைக்க பூசப்படும் முலாம்களே.

இதை இவர்கள் எங்கிருந்து கற்றிருப்பார்கள் என நாம் குழப்பிக்கொள்ள அவசியமில்லை. நம் அரசே இந்த தீண்டாமையை வளர்த்துக்கொண்டிருக்கிறது. பல பத்தாண்டுகளாக அரசுப்பள்ளிகள் மிக மோசமாக நடத்தப்படுவது இந்த வர்க வேறுபாட்டைப் பராமரிக்கத்தான். இது மிகையான கற்பனையாக உங்க்ளுக்குத் தோன்றலாம்.

தமிழகத்தில் ஏராளமான தொழிற் பயிற்சி பள்ளிகள் (ITI) இருக்கின்றன.  இவை குறித்து ஏதேனும் செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவற்றின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அங்கு செய்முறை பாடத்தில் உள்ள கருவிகளில் பல தற்போது வழக்கொழிந்தவை. ITI படித்து வெளியே வருபவர்கள் பலர் பணியாற்றத் தகுதியற்றவர்களாக வருகிறர்கள். பட்டம் வாங்கும் முன்பே வெளிநாட்டு வேலையை வாங்கித்தரும் IITக்கு காட்டும் அக்கறையில் ஐந்து சதவிகிதத்தைக் கூட ITIக்கு அரசுகள் காட்டுவதில்லை. பெரும்பாலும் பொருளாதாரத்திலும் சாதியிலும் கடைசி படிநிலையில் இருப்பவர்கள்தான் தொழிற்பயிற்சிப் பள்ளிகளில் சேர்கிறார்கள், சாதித்திமிரும் பணமும் ஆட்சி செய்யும் நாட்டில் ITIகளும் அரசுப்பள்ளிகளும் புறக்கணிக்கப்பட இந்த ஒரு காரணம் போதாதா?

இந்த பணத்திமிரும் பார்ப்பனத் திமிரும் ஜெயாவுக்கு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அது அவர் அடையாளம்,  அறுபது வயதை தாண்டிய பிறகு அது மாறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை. ஆனால் ஒரு தலைமுறைக்கு முன்னால் மிடில் கிளாசுக்கு முன்னேறிய மக்களில் குறிப்பிட்ட சதவிகித்தினருக்கு இந்த எண்ணம் இருப்பது அருவறுப்பானது. இதுவரை பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டபோதெல்லாம்  அதுகுறித்த விமர்சனம் ஏதுமில்லாமல் அமைதியாக இருந்தவர்கள் இப்போது கோபப்படுகிறார்கள் என்றால் அவர்களை சமச்சீர் எனும் வார்த்தைதான் அவர்களை வெறுப்படைய வைக்கிறது என்பது தெளிவு.

முரண்நகையாக, மெட்ரிக் பள்ளிகளுக்கும் அரசுப்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் இருப்பதை விரும்பாதவர்கள்தான், அவர்கள் பிள்ளைகளை அரசு நடத்தும் மருத்துவ மற்றும் பொறியியற் கல்லூரியில் இடம் பிடிக்க வெறித்தனமாக தயாரிக்கிறார்கள்.

அதிகமான பாடங்கள் படிப்பதால் குழந்தைகள் அறிவாளிகளாகிவிடுவாகள் எனும் மூடநம்பிக்கைதான் மெட்ரிக் பள்ளிகளை தமிழகத்தில் காலூன்ற வைத்தது. பதினெட்டு வயதுக்குள் மாணவர்கள் மூளைக்குள் எல்லா திறமைகளையும் திணித்துவிடுவது எனும் வெறித்தனமான சிந்தனை இப்போது சிறு நகரங்கள் வரை நீண்டுவிட்டது. எப்போதாவது பயன்படலாம் என்ற எண்ணத்தில் மகனுக்கு பிரென்சு மொழியை இரண்டாம் பாடமாக தெரிவுசெய்யும் பெற்றோர்கள் எப்போதும் அருகிலிருக்கும் சக மனிதர்களோடு பழகக் கற்றுத்தருவதில்லை. ஒருவரியில் சொல்வதானால், பாமரர்கள் வீட்டு பிள்ளைகளைவிட உயர்ந்த கல்வியை தங்கள் குழந்தைகளுக்கு தருவதாக எண்ணிக்கொண்டு நாம் மாணவர்களை தண்டித்துக்கொண்டிருக்கிறோம்.

லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் அறுபத்தைந்து சதவிகித மக்கள் சமச்சீர் கல்விக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அப்படியானால் மீதமிருக்கும் முப்பத்தைந்து சதவிகித மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் சமச்சீர் கல்வி பற்றிய தவறான பரப்புரைகளால் அதை எதிர்க்கிறார்கள் என்பது நிச்சயம் (அரசுப் பள்ளிகளை மேலே கொண்டுவா, மெட்ரிக் பள்ளியை கீழிறக்காதே –துக்ளக்).  அவர்களுக்கு நாம் சில தகவல்களை சொல்லியாகவேண்டியிருக்கிறது.

கூடுதலான பாடங்கள் அறிவை எந்த காலத்திலும் வளர்க்கப்போவதில்லை. எளிதான மற்றும் வயதுக்குத் தகுந்த பாடங்கள்தான் அவர்களுக்கு தங்கள் தனிப்பட்ட திறமையை கண்டடைவதற்கான அவகாசத்தைத் தரும். கண்மூடித்தனமான நம்பிக்கை மற்றும் கார்பரேட் கூலிகளின் பிரச்சாரத்தின் காரணமாக இப்போது நாம் பெருமளவு எஞ்சினியர்களை உற்பத்தி செய்யும் பள்ளிகளை நாடுகிறோம்.  இது பொறியியலுக்கு தொடர்பில்லாத பாடங்களை தேவையற்றது என கருதும் மனோபாவத்தை வளர்க்கிறது. இப்போதே பல பல்கலைக் கழகங்களில் ஏராளமான துறைகள் (பாடங்கள்) சேர ஆளில்லாமல் காலியாக இருக்கிறது.

வரலாறு, புள்ளியியல் மற்றும் உளவியல் என பல துறைகள் பெங்களூர் பல்கலைக் கழகத்தில் (போதுமான மாணவர் சேர்க்கை இல்லாமல்) பரிதாபமான நிலையில் இருப்பதாக சென்ற ஆண்டு அறிக்கை ஒன்று வெளியானது. விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு தகுதியான இயற்பியல் பட்டதாரிகள் கிடைப்பதில்லை என இஸ்ரோ புலம்புகிறது. நேரெதிராக, ஒரு சில ஐ.டி பணியிடங்களுக்காக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் குவிகிறார்கள். இப்படி முற்றிலும் சமநிலையற்ற ஒரு சமூகம் உருவாகிவருகிறது. மிகக்குறைவான  சதவிகிதத்தில் இருக்கும் அதிக சம்பளம் தரும் வேலைகள் மீதான ஆசையை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த மத்தியதர மக்களின் கடைசி சேமிப்புகூட சுரண்டப்படுகிறது.

//சென்ற மாதம் என் நண்பர் ஒருவர் தன் குடும்ப பிரச்சனைக்கு ஆலோசனை தரும் கவுன்சிலிங் மையம் பற்றி விசாரிக்க என்னை அழைத்தார். மேலோட்டமாக அவரது பிரச்சனையை விசாரிக்கையிலேயே அது முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது என்பது புரிந்தது. ஏறத்தாழ அவர் தனது மூன்றரை மாத சம்பளத்தை தன் இரு மகள்களின் படிப்புக்காக செலவிடுகிறார் (நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பு). ஏனைய பெரும்பான்மை மத்தியதர மக்களைப்போல அவரும் மெட்ரிக் பள்ளிகளால்தான் சிறப்பான கல்வியைத் தர இயலும் என நம்புகிறார். எதிர்காலத்தில் உயர்கல்விக்கான போட்டியில் பங்கேற்கும் தகுதி அரசுப்பள்ளியில் படித்தால் இருக்காது எனவும் அவர் நம்புகிறார். ஆனால் அவரது குழந்தைகளால் உயர் மத்தியதர வர்கத்து குழந்தைகளுடன் போட்டியிட இயலாது, ஏனெனில் அவர் தெரிவுசெய்திருக்கும் அவரது சம்பாத்தியத்துக்கு சாத்தியமான பள்ளி பெரும்பாலான அடிப்படை வசதிகள் இல்லாதது (தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளைப் போலவே) . //

தொடர்ந்து ஏறிவரும் விலைவாசியும் வேலைவாய்ப்புக்களில் இருக்கும் கடும் நெருக்கடியும் நம் அடுத்த தலைமுறையை ஏதுமற்றவர்களாக வீதியில் நிறுத்திவிடும். இந்தியாவின் பெருநகரங்களில் பள்ளிக் கல்வி உயர்கல்வியைக்காட்டிலும் செலவுமிக்கது என சில தரவுகள் சொல்கின்றன.  சமூக மற்றும் பொருளாதார காரணங்கள் மட்டுமில்லை மிகுந்த சுயநலமாக சிந்தித்தாலும் சமச்சீர் கல்வியும் அரசுப்பள்ளிகளும்தான் நடுத்தரவர்கத்துக்கு நல்லது. நாம் குழந்தைகளில் படிப்புக்காக மல்லுக்கட்டும் நேரத்தில் கொஞ்சத்தை எல்லோருக்கும் வேலை, ஏற்றத்தாழ்வற்ற சம்பள விகிதம் ஆகிய இலக்குகளுக்காக செலவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

அதெல்லாம் முடியாது காசுக்குத் தகுந்த கல்விதான் தரப்படவேண்டும் என உறுதியாக சொல்லும் (உயர்) மத்தியதர வர்கத்தவர் நீங்கள் என்றால், மிகுந்த பரிதாபத்துக்கு உரியவர் நீங்கள்தான். ஒருவேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் பாமரர்களையே சுரண்டி கொழுக்கும் மன்மோகன் கூட்டம் உங்களை மட்டும் விட்டுவிடப்போவதில்லை. அடுத்தடுத்த விலையேற்றங்களும் மானியவெட்டுக்களும் வெறுமனே பாமர மக்களை மட்டுமே இலக்குவைத்து செய்யப்படுபவை அல்ல. உங்களில் பெரும்பாலானவர்களை பாமராக்குவதுதான் புதிய பொருளாதாரக்கொள்கைகளின் இலக்கு. நீங்கள் வழிபடும் கார்பரேட் கடவுளர்கள் எந்த காலத்திலும்  உங்களை காப்பாற்றப்போவதில்லை, அவர்களுக்கு நீங்கள் பிள்ளைக்கறி படைக்கிறபட்சத்திலும்கூட..

எதிர்கால தலைமுறைக்கு நாம் இழைக்கும் தொடர் துரோகங்களில் முக்கியமானது நாம் தரும் கல்வி. அதில் செய்யப்படும் மிகச்சிறிய சீர்திருத்தங்களைக்கூட எதிர்ப்பது சமூக அநீதி. “கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை” என்பது போர்க்களத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. அதை குழந்தை வளர்ப்பில் பொருத்திப்பார்க்கக்கூடாது. இல்லை வாழ்க்கை ஒரு போர்க்களம், ஆகவே ஒரு போர்வீரனாகவே குழந்தைகளை வளர்ப்பேன் என்றால் அது உங்கள் இஷ்டம். ஆனால் சமபலம் உள்ளவர்களோடு மோதும் வீரனாகவாவது அவர்களை  உருவாக்குங்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை. சமச்சீர் கல்வி மற்றும் தன்னிறைவு பெற்ற அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு தாருங்கள். என் பிள்ளைகளுக்காகவே நான் உழைக்கிறேன் எனும் வழக்கமான வாக்கியத்தை கொஞ்சமேனும் அர்த்தமுடையதாக்குங்கள்…

தொடர்புடைய பதிவு:

தமிழக பள்ளிகள்- வர்க வேறுபாடுகளின் புதிய காவலன்

https://villavan.wordpress.com/2010/12/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/

“பள்ளிக்கல்வி- முட்டாள்கள் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள், புத்திசாலிகள் புத்தகங்களுக்காக காத்திருக்கிறார்கள்.” இல் 11 கருத்துகள் உள்ளன

  1. //
    ஒரு சூதாடியையொத்த சிந்தனையுடன்தான் நம் சமூகத்து நடுத்தர வர்கம் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறது. நம்மைவிட ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்கள் எவ்வளவோ மேலானவர்கள். ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக காளைக்கு சாராயம் கொடுத்து களத்துக்கு அனுப்பினாலும் அவர்கள் மாட்டின் நலன் கருதியே அப்படி செய்கிறோம் என்று சொல்வதில்லை.
    //
    அருமையான கட்டுரை வில்லவன்.

  2. தெளிவாக, புரியும்படிக்கு எழுதிய எழுத்தாளருக்கு பாராட்டு…

    நிறையப்பேரிடம் போய் சேரவேண்டிய ஒரு நல்ல சாரம்சம் நிறைந்த கட்டுறை..

    எத்தனைபேர் படிப்பாரகள்….தெரியவில்லை. வேறு வழி இருக்கிறதா பரவலாக சேர்வதர்க்கு…

  3. அற்புதமான கருத்துக்களுடன் உங்கள் பதிவு உண்மையில் சிந்திக்கத் தூண்டுகிறது. இது குழந்தைகளை சம்பாதிக்கும் மிசின்களாக மாற்ற விழையும் ஒரு சமூக அவலத்தை பிரதிபலிக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

  4. அப்பு…. நீ தெளிவா தான் சொல்லுற…உலகம் உன் பேச்சை கேக்க போவதில்லை என்பது தான் உண்மை 😦

  5. இத, இத, இதத்தான்யா நாங்க எதிர்பார்த்தது…!

    சமச்சீர் கல்வி எதிர்ப்பாளனும் சரி, அல்லது, சமச்சீர் கல்வி ஆதரவாளனும் சரி, அட – இன்னும் சரியாகச் சொல்லப்போனால், சோவாகக்கூட இருக்கட்டும்; இந்தக் கட்டுரைக்கு யாருமே மறுப்பு சொல்லவே முடியாது!!

  6. நல்லதொரு கட்டுரை தோழர்.வில்லவன்….எனது அகநூல் பக்கத்தில் இந்த பதிவிற்கான தொடர்பை பதிந்துள்ளேன்.

    பிடித்த சில வரிகள்(கட்டுரையே பிடித்திருந்தாலும், இந்த சில வரிகள் மிகவும் பிடித்து விட்டன)

    //நீங்கள் வழிபடும் கார்பரேட் கடவுளர்கள் எந்த காலத்திலும் உங்களை காப்பாற்றப்போவதில்லை, அவர்களுக்கு நீங்கள் பிள்ளைக்கறி படைக்கிறபட்சத்திலும்கூட..////

    //// எப்போதாவது பயன்படலாம் என்ற எண்ணத்தில் மகனுக்கு பிரென்சு மொழியை இரண்டாம் பாடமாக தெரிவுசெய்யும் பெற்றோர்கள் எப்போதும் அருகிலிருக்கும் சக மனிதர்களோடு பழகக் கற்றுத்தருவதில்லை//////

    //// “கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை” என்பது போர்க்களத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. அதை குழந்தை வளர்ப்பில் பொருத்திப்பார்க்கக்கூடாது. இல்லை வாழ்க்கை ஒரு போர்க்களம், ஆகவே ஒரு போர்வீரனாகவே குழந்தைகளை வளர்ப்பேன் என்றால் அது உங்கள் இஷ்டம். ஆனால் சமபலம் உள்ளவர்களோடு மோதும் வீரனாகவாவது அவர்களை உருவாக்குங்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை. சமச்சீர் கல்வி மற்றும் தன்னிறைவு பெற்ற அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு தாருங்கள். என் பிள்ளைகளுக்காகவே நான் உழைக்கிறேன் எனும் வழக்கமான வாக்கியத்தை கொஞ்சமேனும் அர்த்தமுடையதாக்குங்கள்…///

    நற்றமிழன்.ப‌

  7. //ஒரு ஜெயாவின் அடாவடித்தனத்தைக் காட்டிலும் லட்சக்கணக்கான பெற்றோர்களின் அடிமுட்டாள்தனம்தான் எதிர்கொள்ள சவாலானது.//- உண்மைதான், அதிக இலக்கமுள்ள சம்பளம் என்ற ஒன்றை இலக்ககாக கொண்டு ஆரம்பிக்கப்படும் குழந்தைகளின் கல்வி, கற்றல் எனும் உண்மையான நோக்கத்தை விடுத்து தகவல்களை சேமிக்கும் நினைவகங்களாக மாற்றமடைகிறது. உண்மையான கல்விபுரட்சி பெற்றோரின் மனமாற்றத்தினால்தான் சாத்தியமாகும்.தங்களால் அடைய முடியாத இலட்சியங்களையும், கனவுகளையும் பிள்ளைகளின் மேல் சுமத்தும் கொடுமையும் நடக்கிறது.

    பெற்றோர் அனைவரும் படிக்கவேண்டிய சிறப்பான கட்டுரை.

  8. நல்லதொரு அவசியமான கட்டுரை தோழர்…உங்களின் எழுத்து நடை சோ போன்றவர்களைக் கூட யோசிக்க வைக்கிற அளவிற்கு உள்ளது..கண்ணத்தை நன்றாகத் தடவி விட்டு அடிப்பது போல இருக்கிறது.its a sattaire with consciuosly formed words….சமச்சீர் கல்வி வேண்டும் என்று சொல்கிறவர்கள் கூட அதன் உண்மையான அர்த்தத்தை உணர இயலாத நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்ம…
    மேலும் உங்கள் திருமணத்திற்கு எனது வாழ்த்துக்கள்…..

பின்னூட்டமொன்றை இடுக