மூன்று லட்சம் மக்களின் போராட்டமும் நான்கு ஜெனரேட்டர்களும்…


பெரும்பாலான வலைதள தமிழர்கள் விஞ்ஞானிகளாகி ஒரு நான்கு மாதங்கள் ஆகியிருக்கலாம், தமிழ் இணைய உலகில் இவ்வளவு அறிவியல்பூர்வமான கருத்துக்கள் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஏராளமான தொழில்நுட்ப விளக்கங்கள், மின்சாரத்தின் தேவை பற்றிய அறிவுரைகள் என நீண்ட அதிகாரவர்கத்தின் குரல் அப்துல் கலாமின் தியாகம் செய்வது எப்படி எனும் விளக்க உரை வெளியாகும்வரைக்கும் மென்மையாகவே இருந்தது. அவர்களது கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்ட கலாம் எனும் பொம்மை ஒப்பித்த ரைம்சும் நிராகரிக்கப்பட்ட பிறகு தேசவிரோதம், தேசிய பாதுகாப்பு சட்டம் என அதிகாரவர்கத்தின் குரல் கடுமைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. பாமர மக்கள் ஒன்றும் கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் அல்ல என கலாமும் அவரது ஸ்பான்சர்களும் உணர்ந்ததால் வந்த விளைவு இது.

தமிழகம் பல சந்தர்பங்களில் இந்தியாவுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. சமூகநீதிக்காக, மரணதண்டனை ஒழிப்புக்காக நடக்கும் மக்கள்திரள் போராட்டங்களாகட்டும் அல்லது ரயிலில் டிக்கட் எடுத்து பயணிக்கும் தனிமனித ஒழுக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நம் மாநிலம் ஒரு முன்னோடியாகவே இருந்திருக்கிறது.. இருக்கிறது. அந்த பட்டியலில் இணைக்க வேண்டிய இன்னொரு விடயம் அணுஉலை எதிர்ப்பு.

ஜெய்தாபூர் மக்களின் போராட்டம் பற்றிய தொலைக்காட்சி விவாதங்களில் இருந்து நான் தொடர்ச்சியாக கவனித்தவரை விஞ்ஞானிகள் (அப்படியான பொறுப்பில் இருப்பவர்கள் என பொருள் கொள்ளவும்) திமிர்தனமாகவும் எதிரே இருப்பவனுக்கு எதுவுமே தெரியாது எனும் மமதையிலுமே பேசுகிறார்கள். பெரும்பாலான ஊடகங்கள் இரண்டு தரப்புக்கும் பொதுவாக விவாதம் செய்வதாக காட்சியை உருவாக்கி அதன் முடிவை அணு உலைக்கு சாதகமானதாக ஆக்குகின்றன. இப்போது அணுவுலை ஆதரவு என்பது திட்டமிட்ட முறைப்படுத்தலோடு இயங்க ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது. ஆகவே அணுவுலை எதிர்ப்பும் எல்லா கோணங்களிலும் கொண்டு செல்லப்பட்டாகவேண்டும். ஆகவே தொழில்நுட்பம் தவிர்த்த மற்ற விடயங்களை விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

வளர்ச்சிக்காக அணுவுலை எனும் கோஷம் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கும் வேளையில் வளர்ச்சி என்பது என்ன என்பதை நாம் முடிவு செய்தாகவேண்டும். கடந்த இருபதாண்டுகளில் இந்தியா வளர்கிறது என பல கணக்குகளை அரசு சொல்கிறது. டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளின் சொத்துக்கள் கணக்கிட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கருப்பு பணம் பெருமளவு விளையாடும் ரியல் எஸ்டேட் துறை வளர்ந்து இந்தியாவின் பெரு மற்றும் சிறு நகரங்களின் நில மதிப்பு கற்பனைக் கெட்டாத அளவுக்கு கூடியிருக்கிறது. பெரும்பாலான சாமானிய மக்களுக்கு டி.வியும் செல்போனும் கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு பொருட்களும் பயன்படுத்துபவனைவிட சேவை வழங்குபவனுக்கே லாபம் தருபவை.

நமக்கு என கிடைத்த வளர்ச்சி என்ன? இருபதாண்டுகளில் நாம் நமக்கான வாழிடங்களை சுருக்கிக்கொண்டிருக்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன்னால் கிடைத்த அளவு இடத்திலா இப்போது நீங்கள் வசிக்கிறீர்கள்? சொந்த ஊரில் இருந்து பிழைக்கும் சாத்தியம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? இலவசமாக கிடைத்த தண்ணீருக்கு பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். தனிநபர்கள் நுகரும் கலோரியின் அளவு இந்தியாவில் குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நான்கில் மூன்று இந்தியர்கள் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான பணத்தைக்கொண்டு வாழவேண்டியவர்களாக இருப்பதாக அரசே ஒப்புக்கொள்கிறது. இதுவரை நாம் சாதித்த வளர்ச்சி இதுதான். இந்திய அரசு நாம் இழக்கப்போவதாக அச்சுறுத்தும் வளர்ச்சியும் இதுதான். நாம் முதலில் முடிவு செய்யவேண்டியது நமக்கு செல்போனையும் டிவியையும் கொடுத்துவிட்டு மிச்ச சொச்சத்தை பறித்துக்கொள்ளும் வளர்ச்சி தேவையா என்பதைத்தான்.

இந்தியாவில் மருத்துவத்துக்கு செலவாகும் மொத்த தொகையில் பதினேழு சதவிகிதத்தைத்தான் அரசுகள் செலவிடுகின்றன. கல்வியின் லட்சணம் இன்னும் மோசம். இந்தியாவில் 13 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் பட்டினியாலும் சத்துக்குறைபாட்டினாலும் இறக்கின்றன, (இந்த எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு பூடான் நாடுகளுக்கு சமம்). எழுபது சதம் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நாட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தியில் பாதிக்கும் மேலானவற்றை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் எதை சரிசெய்யவும் முயலாத அரசுகள் அணுமின்சார நிலையங்களை காப்பாற்றவும் இன்னும் மிகையாக கொண்டுவரவும் ஏன் இந்த முக்கு முக்க வேண்டும் எனும் கேள்வி நம்மிடம் எழுந்தாலே கூடங்குளம் விவகாரத்தில் நாம் எடுக்கவேண்டிய முடிவு என்ன என்பதில் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் நாம் கவனிக்க தவறும் செய்தி ஒன்றுண்டு. பெரிய முதலாளிகளை சந்தித்து ஆலோசனை செய்துவிட்டுத்தான் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பார். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டு சிறைகளில் யாதொரு குற்றமும் செய்யாமல் வாடுவதைப் பற்றி கவலைகொள்ளாத அரசுகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் போலாரீஸ் நிர்வாகிகள் இந்தோனேசியாவில் சிறைவைக்கப்பட்டபோது துடித்த துடிப்பு எந்த கல்நெஞ்சுடையோரையும் கரையவைப்பது. மருத்துவமனைகளில் குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு வரிவித்தார் பிரணாப் முகர்ஜி (கடந்த பட்ஜெட்டில்). ஒரே சந்திப்பில் அந்த வரியை விலக்க வைத்தார் தேவி ஷெட்டி, பெங்களூரில் உள்ள ஒரு கார்பரேட் மருத்துவமனையின் முதலாளி.

ஆக, இங்கு இருப்பது முழுமையானதொரு முதலாளிகள் ராஜ்ஜியம். இதில் நடுத்தர வர்கத்துக்கோ அல்லது பாமர மக்களுக்கோ ஏதேனும் நன்மை நடந்தாலும் அது தவிர்க்கவியலாமல் நடப்பதேயன்றி அரசின் விருப்பமல்ல. ஆகவே நம் அரசு எடுத்த முடிவு என்பதற்காக நாம் அதனை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. எந்த முடிவெடுத்தாலும் ஆதரிக்க வேண்டிய அளவுக்கு இவர்கள் நியாயமான மனிதர்களும் அல்ல எதையும் ஆதரித்தேயாக வேண்டிய அளவுக்கு நாம் அவர்களுக்கு கடன்பட்டவர்களும் அல்ல. அணுவுலை விவகாரத்தில் நம் பரிசீலனைக்கு உரியவை நம் எதிர்காலமும் நம் மனசாட்சியும்தான் (இதற்கான விளக்கம் பின்னால்..).

ஒருவேளை நம் அரசுகள் மின்சார வசதியில் முழுமையான தன்னிறைவை பெற்றுவிட்டு பிறகு பட்டினியால் சாகும் குழந்தைகளைப் பற்றியோ அல்லது தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பற்றியோ கவலைப்படலாம் எனும் லட்சியத்தில் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அணுவுலையால் இவர்களால் 10 சதம் மின்தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதற்காக இவர்கள் பல்லாயிரம் கோடிகளை செலவிடுகிறார்கள். யுரேனிய உற்பத்தியில் 8ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். இந்த ஒப்பந்தம் நிறைவேற வாஜ்பாயை பீஷ்ம பிதாமகன் என வர்ணித்து ஆதரவு பிச்சை கேட்டார் மன்மோகன். அமர்சிங்கை அமெரிக்காவுக்கு அனுப்பி (அல்லது அழைத்து) எல்லா “சேவைகளும்” செய்து அனுப்பிவைத்தார்கள். 10 சதவிகித மின்சாரத்துக்கு இவ்வளவு பாடு படுகிறவர்கள் மீதி 90 சதவிகித மின்சாரத்துக்கு என்ன செய்தார்கள்? எதுவுமில்லை. இங்கே மின் தேவை பற்றிய பீதி அணுசக்தியை ஏற்றுக்கொள்ள வைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு அணுமின் நிலையம் கணக்கு கேட்கவியலாத பெரும்பணத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொண்டுசேர்க்க உதவுகிறது. உலகெங்கும் 8 கோடிபேர் வேலைபார்க்கும் அணுசக்தி வியாபாரம் ஒருசில முதலாளிகளுக்கு மட்டும் உரியது. அவர்களால் சம்பாதிக்காமல் இருக்க முடியாது. இனியும் அவர்களுக்காக தங்கள் நாட்டுக்கு ஆபத்தை தேடிக்கொள்ள வளர்ந்த நாட்டு மக்கள் தயாரில்லை. ஆகவேதான் அதிகபட்சமாக 1500 கோடிக்குமேல் நட்டஈடு தரதேவையில்லாத இந்தியாவை அவர்கள் குறிவைக்கிறார்கள். மகள் நன்றாக வாழவேண்டுமாயின் அவளை விற்றுவிடு எனும் அதிசிறந்த கொள்கையுடைய நமது பிரதமரும் அவர்களை வரவைப்பதே நாட்டுக்கு ஒளியேற்ற ஒரேவழி என கூவிக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அணுமின்சாரத்தில் 100 சதவிகிதம் பாதுகாப்பான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் (அது சாத்தியமல்ல என்றாலும்) அது இந்தியாவில் அபாயகரமானதாகவே இருக்கும். இங்கு எந்த ஒப்பந்தக்காரர் சரியான தரத்தில் தங்கள் கட்டுமானத்தை செய்கிறார்கள், அணுவுலை கட்டும்போது மட்டும் இவர்கள் பரிசுத்தமாகிவிடுவார்களா? நமது அணுவுலை கட்டுமான பொறியாளர்களுக்கு மட்டும் கைநீட்டாதிருக்க சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டிருக்கிறதா? காமன்வெல்த் போட்டிக்காக தலைநகரில் கட்டிய பாலம் திறக்கும் முன்னரே இடிந்துபோனது. போபால் மரணங்களுக்கே நீதி வழங்க வக்கற்ற இந்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம் என சொல்லவே அருகதை கிடையாது.

ஃபுகுஷிமாவுக்கு முன்னால் ஜப்பானை பார், பிரான்சை பார் என்றார்கள். அவர்களால் முடியும்போது நம்மால் முடியாதா என முழங்கினார்கள். ஜப்பானிலும் ஜெர்மனியிலும் விபத்து நடந்த பிறகு அவர்களைவிட நமது தொழில்நுட்பம் உசத்தி என்கிறார்கள். ஒருவேளை ஊழல் செய்வது பற்றி சொன்னார்களா என்று தெரியவில்லை. பஸ்ஸ்டாண்டில் ஒழுங்காக கக்கூஸ் கட்டமுடியாத அரசுகள் அணுசக்தியில் கரைகண்ட மாதிரி பேசுவதை என்னவென்று சொல்வது? கனவு நாயகனோ செர்னோபில் விபத்தில் 37 பேர்தான் செத்தார்கள் என புதிய வரலாறு சொல்கிறார். அணுக்கழிவு விவகாரத்திலோ அதை உருண்டையாக்கி உள்ள வச்சு பூட்டிரலாம் என்று புதிய கண்டுபிடிப்பை அவிழ்த்துவிடுகிறார். இன்னொருவரோ அதை பாதுகாப்பாக ரயிலில் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் வைத்துவிடுவோம் என்கிறார் மற்றொருவர் கழிவில் முக்கால்வாசியை மீளவும் பயன்படுத்திவிடுவோம் என்கிறார். நல்லவேளையாக அதை எடைக்கு போட்டுவிடலாம் என சொல்லவில்லை.. அந்த அளவுக்கு நமது அறிவுத்திறனை அவர்கள் மதித்திருக்கிறார்கள் என்று நாம் பெருமைப்படவேண்டியதுதான்.

காலக்கொடுமையாக இன்னொரு அணுசக்தி விஞ்ஞானி நாராயணசாமி, உதயகுமாரை அன்னிய கைக்கூலி என்கிறார். அன்னியரால் ஆளப்படும், அன்னியர் வந்தால்தான் நாடு செழிக்கும் என்று சொல்லும், கொள்ளையிட்ட பணத்தை அன்னிய நாட்டில் வைத்திருக்கும் நபர்களின் பெயரைக்கூட சொல்ல மறுக்கும் ஒரு கட்சியின் பிரதிநிதி இன்னொருவரை அன்னிய கைக்கூலி என்றால்.. என்ன செய்ய, சோனியா காந்தி ஊழலை ஒழிப்போம்னு சொன்னபோதுகூட அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர்கள்தானே நாம்.

நிறைவுப் பகுதி நாளை அல்லது அதற்கு மறுநாள் வெளியாகும்.

“மூன்று லட்சம் மக்களின் போராட்டமும் நான்கு ஜெனரேட்டர்களும்…” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. //பெரும்பாலான வலைதள தமிழர்கள் விஞ்ஞானிகளாகி ஒரு நான்கு மாதங்கள் ஆகியிருக்கலாம், தமிழ் இணைய உலகில் இவ்வளவு அறிவியல்பூர்வமான கருத்துக்கள் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக எனக்கு நினைவில்லை.//

    “100 ரூபாய்க்கு தெர்மாகோல், ஒரு ஃபெவிகுயிக், கத்திரி, கட்டர் இத்தியாதி வாங்கிக் குடுங்க சார்… அப்படியே அணுவுலைக்கூடம் எப்படி இருக்கும்னு ஒரு டம்மி செய்ஞ்சி காட்றேன். அப்பத்தான் புரியும்… அதுல எவ்வளவு ஆபத்திருக்குன்னு,” அப்படீங்கறான் ஒரு +2 பையன். ஆனா, கலாம் கண்ண மூடிக்கிட்டு எல்லாரையும் முட்டாளா நெனைக்கிறார். இவுரு இன்னும் கட்டை வண்டி காலத்துலயே இருந்தா அதுக்கு யார் பொறுப்பு?!

  2. மன்மோகன் சிங்-கையும் கலாமையும் புரிதலோடு தான் வேலை செய்கிறார்கள் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்த்துவிட்டால் உங்களுக்கெல்லாம் வேலை வெட்டி இல்லாமல் பொய் விடுமோ என்று அஞ்சுகிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

    போய் புள்ள குட்டி கள படிக்க வைங்கப்பு!

  3. Sir
    Your reference to Dr. Devi Shetty of Bangalore . He runs Hridulaya Hospital specialising i Heart care. If all doctors were like him we can solve health problems to a certain extent . His hospital operates on day to day to day basis i.e the accounting is completed for the day and the profit is calculated and utilised for the free cardiac surgeries that would be carried out the next day. His operating model has been appreciated world wide. Medical lab tests are done by companies who are in the field . They operate on sheer volume basis and definitely charage much much cheaper than our notorious chain hospital group( Chennai Based) where a simple meal to a patient costs Rs,1000/-and the fancy bills that would bring you a heart attack.This Bangalore doctor approached the finance ministry for cost cutting exercise. I can give you more info should you require them to help the needy heart patient.

    Best Wishes to you

  4. //பஸ்ஸ்டாண்டில் ஒழுங்காக கக்கூஸ் கட்டமுடியாத அரசுகள் அணுசக்தியில் கரைகண்ட மாதிரி பேசுவதை என்னவென்று சொல்வது? //
    அருமை!
    நேர்த்தியான நல்ல பதிவு..!

பின்னூட்டமொன்றை இடுக