டெல்லி பாலியல் வன்முறை- ஜாக்கிரதை, பேருந்தும் நண்பர்களும் கிடைக்காத ராம்சிங்குகள் நம் அருகிலும் இருக்கக்கூடும்.


சற்றேறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னால் என்னுடன் சென்னையில் பணியாற்றிய மூன்று பெண்கள் பற்றி குறிப்பிடுவதில் இருந்து இந்த பதிவை ஆரம்பிக்கலாம் என் நினைக்கிறேன்.

அம்மூவரில் ஒருவர் தமது முப்பதுகளின் இறுதியில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண் (முதல் கணவர் இறந்து சில ஆண்டுகளாகிறது). இரண்டாமவரது கணவர் ஊரைவிட்டு ஓடிவிட்டார், (ஓடியவர் சீதனமாக சில ஆயிரம் கடனை விட்டுவிட்டு போயிருந்தார்) மூன்றாமவர் கணவனை இழந்தவர் அவரும் அவரது உறவினர் ஒருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள் (தகவல் வதந்தியல்ல, அவரே என்னிடம் ஒரு சந்தர்பத்தில் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.)

மேற்குறிப்பிட்ட மூவரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர் யாராய் இருக்க முடியும் என கருதுகிறீர்கள்? நம்புங்கள் நண்பர்களே.. முறையாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண்மணிதான் கிட்டத்தட்ட தினந்தோறும் அவ்வலுவலகத்தில் யாரேனும் ஒருவரால் வசைபாடப்பட்டார் (முகத்துக்கு நேராக அல்ல), அவரை திட்டுவதற்கு அவரது திருமணமே பயன்படுத்தப்பட்டது. தனியே இருந்த பெண்மணி அதிகபட்ச புறம் பேசுதலுக்கு ஆளானார். அவர் யாருடன் இருக்கிறார் எனும் ஆராய்ச்சியே அவரைப் பற்றிய பேச்சுக்களின் மையமாக இருந்தது. ஆனால் மூன்றாவது பெண்மணி பெரிதாக விமர்சிக்கப்பட்டதை நான் பார்த்ததேயில்லை. ‘’—– ஒரு ஆளை வச்சிருக்கிறதா கேள்வி’’ எனும் ஒற்றைவரி கருத்து மட்டுமே அதிகபட்சமாக சொல்லப்பட்டது.

இந்த ஒரு ஒப்பீட்டின் வாயிலாகவும் அதன் பிறகு நான் கண்ட சில உதாரணங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டது ஒரு உண்மையைத்தான் “ஆணாதிக்கத்தின் நோக்கம் பெண்கள் தவறிழைக்கக்கூடாது என்பதல்ல. அவர்கள் தைரியமாக இருக்கக்கூடாது என்பதுதான்”. பெண்கள் மீதான பெரும்பாலான தாக்குதல்களை பரிசீலிக்கும்போது இதனை உறுதிசெய்ய இயலும். மகளின் காதல் தெரியவரும்போது எடுக்கப்படும் அதிகபட்ச நடவடிக்கை உடனடியாக இன்னொரு மாப்பிள்ளையை தேடி கல்யாணம் செய்து வைப்பதாகத்தான் இருக்கும். அவள் தைரியமாக காதலித்தவனை மணந்துகொள்ளும்போதுதான் கொலைகூட அங்கு பரிசீலிக்கப்படுகிறது.

இப்போதாவது கட்டுரையின் பிரதான கருதான டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்துக்கு வரலாம். இதுகுறித்து என்னிடம் சில சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரேயொரு கொடூரமான பாலியல் வன்முறைக்காக இத்தனை வீரியமான போராட்டம் டெல்லியில் வெடிக்குமெனில், நாட்டில் மிக மோசமான சம்பவங்கள் ஏராளமாக நடக்கையில் எல்லாம் இப்போதுள்ள அறச்சீற்றத்தில் ஒரு விழுக்காடுகூட வெளிப்படாதது ஏன்? எல்லோரும் எல்லா சம்பவத்துக்கும் வீதிக்கு வரமுடியாதுதான். ஆனால் திடீரென எல்லா பெரிய ஊடகங்களும் ஒரு சம்பவத்தினை பெரிய அளவில் செய்தியாக்குவதும், பாராளுமன்றத்தில் பென்ச் தேய்க்கும் மனிதர்கள்கூட ஆவேசமடைவதும் அடுத்த இரண்டொரு நாளில் தலைநகரம் ஏராளமான பெண்களால் முற்றுகையிடப்படுவதும் தற்செயலானதாக இருக்க வாய்ப்பில்லை.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் சில சமயங்களில் வெளியே சுதந்திரமாக உலவ விடப்படும். ஆனால் எப்போது அதன் சங்கிலியை அவிழ்த்துவிடுவது என்பதும் எப்போது மீண்டும் கட்டிவைப்பது என்பதும் நாயின் உரிமையாளரது முடிவுக்குட்பட்டது. டெல்லியில் நடப்பதும் அதுதான். பாரதீய ஜனதா ஆட்சியில் பெரிய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழலில் எல்லாம் ஒரு தீவிரவாத அச்சுறுத்தல் செய்தி உலவவிடப்படும். காங்கிரஸ் ஆட்சியில் அது சற்று மேம்பட்டு ஒரு பொதுப்பிரச்சினை அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தரப்பட்டு ஏனைய விசயங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. இந்த சோதனை முயற்சி அன்னா ஹசாரேவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி மூலம் நடைமுறைக்கு தக்கதாக மாற்றப்பட்டுவிட்டிருக்கிறது. ஊடகங்கள் இந்த நாடகத்துக்கு துணை போகுமா என கேள்வி எழுப்பும் அப்பாவிகள் பர்கா தத் அவர்களின் அரசியல் தரகு வேலையைப் பற்றி படித்தறியும்படி பரிந்துரைக்கிறேன்.

ஒருவேளை இந்த டெல்லி போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றது என யாரேனும் கருதினால் அந்த தன்னெழுச்சி அரசால் ஆசீர்வதிக்கப்பட்ட எழுச்சியைவிட அக்கிரமமானது. ஒரு தனிப்பட்ட சம்பவத்துக்காக மக்கள் ஒன்றுகூடினாலும் அதன் கோரிக்கைகள் குறைந்தபட்ச பொதுத்தன்மையை கொண்டிருக்க வேண்டும். அந்த ஆறு குற்றவாளிகளை தண்டிக்கவும் விரைவு நீதிமன்றம் அமைக்கவும் வைக்கப்படும் கோரிக்கையில் எந்த பொதுத்தன்மையும் இல்லை.

இந்த டெல்லி போராட்டம் மத்திய அரசு தன்னை மற்ற பிரச்சனைகளில் இருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு என்பதைத்தவிர வேறொன்றும் குறிப்பிடுவதற்கில்லை. ஆகவே மெழுகுவர்த்தி வாங்கும் முன்னால் நாம் யோசிக்கவேண்டிய செய்திகள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளலாம். பாலியல் வன்புணர்ச்சி என்பது பெண்கள் மீதான வன்முறையின் அதிகபட்ச வெளிப்பாடு. அதனை முற்றிலுமாக தடுத்துவிட்டாலும்கூட நம் நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்றதுதான்.

இப்போதுவரை பெண்கள் ஒரு நுகரும் பண்டமாகவே இந்தியாவெங்கும் நடத்தப்படுகிறார்கள். பெண்களை இந்த துயரத்தில் இருந்து விடுவிக்கும் என கருதப்பட்ட கல்விகூட இன்று அவர்களது மதிப்பை கூட்டும் தகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. பெண் என்பது அவள் உடல் மட்டுமே எனும் கருத்து இன்னும் தீவிரமாக இளைய தலைமுறையில் அறிவில் திணிக்கப்படுகிறது. பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ள (மட்டும்) தரப்படும் சுதந்திரமும், அவர்கள் அதில் காட்டும் ஆர்வமும் அதற்கான சாதாரண உதாரணங்கள். நிறைய பணம் சம்பாதித்தால் அழகான பெண்னை அடையலாம் என இளைஞர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் சிந்தனை ஒரு அநாகரீகமான உதாரணம்.

பெண்ணை அடக்கிவைப்பதுதான் கலாச்சாரம் என மதங்கள் சொல்லிக்கொடுத்தன. பெண்ணை அடைவதுதான் ஒரு ஆணின் வெற்றி என சினிமா சொல்லிக்கொடுக்கிறது. அபினும் ஆல்கஹாலும் வேறுவேறென்றாலும் செய்யும் காரியம் கிட்டத்தட்ட ஒன்றுதான். பெண்களின் ஒரே தகுதி அழகென்றால் அதனை அடைவது பெரிய சாதனை என்றாகிறது. இன்னொருபுறம் அதனை சிதைப்பது பெரிய தண்டனை என்றாகிறது. ஆகவே சமூகத்தில் வேர்விட்டிருக்கும் இந்த சிந்தனை மாறாதவரை பெண்கள் மீதான எந்த வகையிலான துன்புறுத்தலும் கட்டுப்பட வாய்ப்பில்லை.

பெண்கள் தங்கள் அழகால் மட்டுமே வேலைவாய்ப்பை பெறுகிறார்கள் எனும் எண்ணமுடையோர் ஏராளமாக இருக்கிறார்கள். ஈவ் டீசிங்கை தூண்டுவது பெண்களது ஆடைதான் என நம்பும் ஆண்கள் எண்ணிக்கை தொன்னூறு விழுக்காட்டுக்கு குறையாது. அதே கருத்தை பல காவல்துறை உயர் அதிகாரிகளும் தங்கள் பேட்டியில் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெண்களை இழிவுபடுத்தும் நூறு படங்களை நம்மால் சிரமப்படாமல் பட்டியலிட முடியும் ஆனால் கௌரவமாக காட்டிய ஒரு திரைப்படத்தை சொல்வதுகூட சிரமம். வேலைக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என வெளிப்படையாக சொல்பவர் இந்தியாவின் பெரிய ஆன்மீகத் தலைவராக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு பேருந்து, துணைக்கு நான்குபேர், மற்றும் பதினோரு மணிக்கு சாலையில் காத்திருக்கும் இளம்பெண் என மூன்றும் அமைந்தால் நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்துகூட ஏராளமான ராம்சிங்குகள் உருவாகக்கூடும்.

உளவியலில் ஒரு விதி உண்டு, சுபாவம் (பிஹேவியர்) என்பது ஏதோ ஒரு நம்பிக்கையில் இருந்து உருவாவது. நீங்கள் நம்பிக்கையை மாற்றாதவரை சுபாவத்தை மாற்ற முடியாது. ஆகவே சமூகத்தின் பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் மாறாதவரை அவர்கள் மீதான தாக்குதல்கள் என்பது தடுக்கவியலாத்தாகவே இருக்கும்.

இதற்கான தீர்வும் உளவியலின் வேறொரு விதியில் இருக்கிறது. நீங்கள் எதையும் கற்க முடியும், கற்றதை மறக்க முடியும், மறந்ததை மீளக் கற்க முடியும். ஆகவே அறிவை உபயோகிக்க முடியுமானால் இதுவரை பெண்களை சமமாக நடத்தாதவர்கள் அதனை மறக்க முடியும். சமமாக நடத்துவது எப்படி என்பதை கற்க முடியும். அப்படி கற்றவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் ராம்சிங்குகளுக்கு இத்தனை திமிரும் துணிச்சலும் நிச்சயம் வராது.

பின் குறிப்பு:

1. இது முழுமையான கட்டுரையல்ல. நேரமின்மையால் நான்கில் ஒருபங்காக சுருக்கி எழுதப்பட்டிருக்கிறது (அதுவும் ஒழுங்குபடுத்தப்படாமல்).

2.இத்தகைய சிக்கலுடைய சமூகத்தில் எங்கள் மகனை எப்படி ஒரு சரியான மனிதனாக வளர்ப்பது எனும் சிந்தனையில் வந்த பதிவு இது. டெல்லி சம்பவம் பற்றிய பதிவாக இதை கருத வேண்டாம்.

3.சாத்தியம் இருந்தால் விரிவான வேறு சில பதிவுகள் இதன் தொடர்ச்சியாக எழுதப்படலாம்.

“டெல்லி பாலியல் வன்முறை- ஜாக்கிரதை, பேருந்தும் நண்பர்களும் கிடைக்காத ராம்சிங்குகள் நம் அருகிலும் இருக்கக்கூடும்.” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. மக்கள் கொதித்தெழ காரணம் பலாத்காரம் மட்டுமல்ல.. அது மட்டும் நடந்திருப்பின் இது பெட்டிச் செய்தி… அதன் பின்னரான உடலை, குறிப்பாக அடிவயிறு சார்ந்த பகுதிகளை கடுமையாக தாக்கி சேதம் விளைவித்தது ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது.,

    அனுபவித்துவிட்டு அதன் பின்னரும் வெறியாட்டம் போட்டிருக்கானுங்க.. இந்தக் கொடுமையானவர்களை எதிர்க்க ஒன்று சேர்ந்த கூட்டம் அது..

    இங்கே பலாத்காரத்தைவிட அதன்பின்னரான தாக்குதலையே நான் முக்கியமாகப் பார்க்கிறேன்.

  2. //இங்கே பலாத்காரத்தைவிட அதன்பின்னரான தாக்குதலையே நான் முக்கியமாகப் பார்க்கிறேன்//

    இந்த ஒரு கோணத்தைக்கண்டுதான் நான் பெரிதும் அச்சமடைகிறேன். ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்கள், வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொன்று வீசப்படும் மழலைகள் இதெல்லாம் இந்தியாவில் தொடர் செய்திகள்.

    கொடூரமான தாக்குதல்தான் டெல்லியில் இந்த பெருங்கூட்டத்தை கூட்டியதெனில், டெல்லியில் தினசரி போராட்டங்கள் நடந்தாக வேண்டும்.

    நான் உங்களிடம் கேட்பது இந்த போராட்டத்துக்கான நியாயத்தை அல்ல..

    இந்த போராட்டத்தில் இருக்கும் பாரபட்சமான சமூக கோபத்தையும் அதில் அடங்கியிருக்கும் அரசுக்கான லாபத்தையும், அரசு மற்றும் ஊடகங்களிடையே வெளிப்படும் ஒத்திசைவையும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் எனும் கோரிக்கையை மட்டுமே வைக்க விரும்புகிறேன்.

  3. உங்களின் சிந்தனை வித்தியாசமாக உள்ளது…….அதை முழுமையாக புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்…21 வயதில் நான் இதை கற்பது அவசியமான ஒன்று…

பின்னூட்டமொன்றை இடுக