அஃப்சல் குரு- கொலை நம்மை மகிழ்விக்குமெனில், நமக்கும் அஜ்மல் கசாபுக்கும் என்ன வேறுபாடு?


இந்திய வரலாற்றின் மிகக் கேவலமான மற்றும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்தேறிவிட்டது. கேவலமானவையும் கொடூரமானவையும் அரசாங்கத்தால் அன்றாடம் செய்யப்படுபவைதான் என்றாலும் அஃப்சல் குருவின் படுகொலை நீதியின் பெயரால் செய்யப்பட்டிருப்பதுதான் இந்த சம்பவத்தில் இருக்கும் வித்தியாசம்.

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டபோதே தேசிய ஊடகங்கள் அஃப்சல் குருவின் மரண தேதியைக் கேட்டு நச்சரிக்கத் துவங்கிவிட்டன. தற்சமயத்துக்கு கலவரம் நடத்தும் வாய்ப்பு இல்லாத்தால் ஒரு கொலையை செய்துபார்க்கும் பேரவா சங்கப் பரிவாரங்களிடம் இருந்தது. அந்த கும்பலின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படும் அரசாங்கத்துக்கோ மக்களது கவனத்தை திருப்பியாக வேண்டிய கட்டாயம். எல்லோருடைய தற்காலிக திருப்திக்காக இந்த முறை அஃப்சல் குரு பலியிடப்பட்டிருக்கிறார்.

தேர்தல்களை மரணத்தின் வாயிலாக எதிர்கொள்வது அல்லது பிரச்சனைகளை திசைதிருப்புவது எனும் புதிய பழக்கம் இப்போது மத்திய அரசால் பின்பற்றப்படுகிறது. பாஜக, கருணாநிதி மற்றும் ஜெயா ஆகியோர் இதுவரை செய்துவந்த கள்ளத்தனமான என்கவுண்டர் எனும் வழக்கத்துக்கு  சோனியா அரசு ஒரு சட்ட முலாம் பூசியிருக்கிறது.

மரணதண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் எந்த விதமான நியாயமான சந்தேகங்களுக்கும் இடமிருக்கக்கூடாது என்பது விதி. அஃப்சல் குரு வழக்கில் நியாயமான சந்தேகங்களைத்தவிர வேறெதுவும் உயிரோடு இல்லை. அரசுத் தரப்பின் சாட்சியங்களும் ஆதாரங்களும் அதனுள்ளேயுள்ள முரண்பாடுகளால் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுகிறன. அதற்குப்பிறகும் அஃப்சல் தூக்கிலிடப்படுகிறார். இது சட்டவிரோதமான தீர்ப்பு என்பது அந்த தீர்ப்பின் வாசகங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது (சமூகத்தின் கூட்டுமனசாட்சியை திருப்தி செய்ய).

ஆதாரமில்லாத்தால் பேராசிரியர் கிலானி இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். சட்டத்தின் ஆட்சியை பறைசாற்ற கிலானி விடுதலை,கூட்டுமனசாட்சிக்கு அஃப்சலின் கொலை. எந்த தரப்பையும் ஏமாற்றாமல் கணக்கு நேர்செய்யப்பட்டாயிற்று.

ஏழண்டுகளில் வல்லரசாகப்போகும் நாடு, ஒரு சாமானிய காஷ்மீர் பெண்ணுக்கு உரிய நேரத்தில் தகவல் சொல்ல அஞ்சுகிறது, ஒரு தீவிரவாதியின் உடலைக் கண்டு நடுங்கி அவரை திருட்டுத்தனமாக புதைக்கிறது. ஒளிந்திருந்து கொன்றவன் தேசிய நாயகனாக இருக்கையில் திருட்டுத்தனமாக தூக்கிலிடும் நாடு வல்லரசாக இருக்கக்கூடாதா என்ன? ரகசியமாக போட்டுத்தள்ளுவது அட்டாக் பாண்டிகளின் வேலை இதை அரசாங்கம் செய்யலாமா என கேட்பவர்கள் ஒரு வல்லரசின் குடிமகனாக இருக்க தகுதியற்றவர்கள்.

அஃப்சல் குரு ஒரு முஸ்லீம் அதிலும் காஷ்மீரி வேறு, அவர் தீவிரவாதி என்பதற்கு வேறு எந்த ஆதரமும் சமூகத்தின் கூட்டுமனசாட்சிக்கு தேவையில்லை. இருபதாண்டுகால பயிற்சியில் பெரும்பாலான இந்திய மக்கள் அத்தகைய மனோநிலைக்கு தயாராகிவிட்டார்கள். விஸ்வரூபம் பட பிரச்சனையில் சில முற்போக்கு ‘சக்திகளின்” ஆழ்மனதில் இருக்கும் இசுலாமிய வெறுப்பு வெளிப்பட்டதை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். வேறு வழியில்லை, எது தீவிரவாதம் என்றுதான் மக்களிடம் விளக்கியாகவேண்டும். மாறாக இசுலாமையும் தீவிரவாதத்தையும் பிரித்துப் பார்க்க சொன்னால் தோற்றுத்தான் போவோம்.

பாதிரியார் ஸ்டெயின்ஸ் தமது குழந்தைகளோடு எரித்து கொல்லப்பட்டார். அந்த செய்தி சொல்லப்பட்ட எந்த பெரிய ஊடகத்திலும் தீவிரவாதம் எனும் பதம் பயன்படுத்தப்படவில்லை. நாடு விடுதலை பெற்ற பிறகு எண்ணற்ற தாக்குதல்கள் இசுலாமியர்கள் மீது நடைபெற்றிருக்கிறது. அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் பம்பாய் கலவரமும் குஜராத் படுகொலைகளும் நடந்தன. எந்த ஒரு சம்பவமும் தீவிரவாதம் என குறிப்பிடப்படவில்லை. அதெப்படி முஸ்லீம்கள் தொடர்புடைய அல்லது தொடர்புடையதாக கருதப்படுகிற தாக்குதல்கள் மட்டும் நமக்கு தீவிரவாதமாகப்படுகிறது?

தீவிரவாதத்துக்கு என்ன வரையறை? அதிக எண்ணிகையிலான மரணத்தை விளைவிப்பதா? அப்படியெனில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கும் ஊட்டச்சத்தற்று மரணிக்கும் குழந்தைகள் சாவுகளுக்கும் இந்த அரசின் கொள்கைகள்தான் காரணம். அந்த வகையில் சொன்னால் அரசு செய்வதுதான் மிகப்பெரிய தீவிரவாதம். ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதலா? அப்படியெனில் குஜராத் கலவரம்தான் மிகப்பெரிய தீவிரவாதம். வெளிநாட்டிலிருந்து பணம் பெற்று நடத்தப்படும் வன்முறையா? அப்படியெனில் சங்கபரிவாரங்கள்தான் நாட்டில் அதிக அளவு வெளிநாட்டு பணம் பெறும் அமைப்புக்கள்.

ரொம்ப மெனக்கெட வேண்டாம், இங்கே இசுலாமியர்கள் ஈடுபடும் வன்செயல்கள் மட்டும்தான் தீவிரவாதம் என கருதப்படும். அதனால்தான் எல்லா முஸ்லீமும் தீவிரவாதியல்ல ஆனால் எல்லா தீவிரவாதியும் முஸ்லீம்தான் எனும் வாசகம் பொதுவில் கூச்சமின்றி உச்சரிக்கப்படுகிறது. தீவிரவாதத்தை எதிர்க்கும் இந்துக்கள்,தங்களிடம் மனசாட்சி என்ற ஒன்று இருப்பதாக கருதினால் எது தீவிரவாதம் என தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். முஸ்லீம் “தீவிரவாதிகளது”வன்முறைகளுக்கான பொறுப்பை எல்லா முஸ்லீம்களும் ஏற்கத்தான் வேண்டும் என உங்கள் மனசாட்சி தீர்ப்பளிதால், இந்துக்களால் செய்யப்பட்ட வன்செயல்களுக்காக நாம் தற்கொலையே செய்துகொண்டாக வேண்டும். ஏனென்றால் குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட “இந்துக்கள்” எண்ணிக்கை மட்டும் 5 லட்சம்.

எது தீவிரவதம் எனும் வரையறையில் நம் கபடத்தனம் வெளிப்படுகிறதென்றால் அதை எப்படி தடுப்பது என்பதில் நம் “கூட்டுமுட்டாள்தனம்’ வெளிப்படுகிறது. அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுகிறார், உடனே நாடெங்கும் வெற்றி வெற்றி எனும் கூக்குரல் கேட்கிறது. அஃப்சல் குரு திருட்டுத்தனமாக கொல்லப்படுகிறார் மீண்டும் அதே உற்சாகம் நாடெங்கும் கொப்பளிக்கிறது. பாராளுமன்ற தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு நீதி கிடைத்ததாக வியாக்கின்ங்கள் வேறு. தாக்குதல் நடத்த பாராளுமன்றத்திற்கு வந்த 5 பேர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை,  முற்றாக அரசின் கண்கானிப்பிலும் கட்டுப்பாட்டிலும் உள்ள ஒரு இடத்திற்கு வர உதவிய நபர்கள் யார் என்பது தெரியவில்லை. வந்தவர்கள் ஐவரும் பாகிஸ்தானியர் போலிருந்தார்கள் எனும் தகவலும் அஃப்சல் எனும் முஸ்லீமின் கொலையும்      மட்டுமே தேசத்தின் மனசாட்சியை திருப்தி செய்ய போதுமானதாக இருக்கிறது. ஆக நாட்டில் நடக்கும் எந்த ஒரு குண்டுவெடிப்புக்கும் நீதி கிடைக்கவேண்டுமானால் செய்தது பாகிஸ்தான் என்று சொல்லி ஒரு முஸ்லீமை தூக்கிலிட்டால் போதும் செத்தவர்களின் ஆன்மாவும் நாட்டின் மனசாட்சியும் அமைதியாகிவிடும். போலீசுக்கும் அரசுக்கும் இதைவிட நல்ல சூழல் வேறெங்கும் கிடைக்காது.

உண்மையில் இந்தியாவின் பொதுபுத்திக்கு தேவைப்படுவது தீவிரவாதத்திற்கான தீர்வல்ல, தாக்குதல் கதைக்கு ஒரு சுவாரசியமான கிளைமாக்ஸ் மட்டுமே. செய்தியையும் அர்ஜுன் சினிமவையும் ஒரே மாதிரி பார்க்க நாம் பழகிவிட்டிருக்கிறோம். அதனால்தான் காரணம் எதுவும் தேவையில்லாமல் ஒரு வில்லனை உருவாக்கி பிறகு அவனை காலி செய்வதன்வாயிலாக பிரச்சனைகள் முடித்துவைக்கப்படுகின்றன.

மதவாதம் முதலாளித்துவத்தின் கள்ள மனைவி. உறவு எப்போதும் வெளிப்படையாக இருக்காது ஆனால் அக்கறையில் யாதொரு குறையும் இருக்காது. ரகசியம் வெளிப்பட்டாலோ கட்டுப்பாட்டை மீறிப்போனாலோ அதன் வீரியத்தைப் பொறுத்து அந்த உறவு தட்டிவைக்கப்படும் அல்லது வெட்டிவிடப்படும். முதலாளித்துவத்துக்கு மக்கள் முட்டாளாயிருப்பது அவசியம். மக்களை முட்டாளாக வைத்திருக்க மதவாதம் தேவைப்படுகிறது. மதவாதத்தை உயிரோடு வைத்திருக்க வன்முறைகள் தேவைப்படுகிறது.

இந்து அடிப்படைவாதத்துக்கு தீனி போடுவதன் வாயிலாக இங்கு இசுலாமிய வெறுப்பு பரப்பப்படுகிறது. பரப்பப்படும் வெறுப்பு இசுலாமியர்களை தனிமைப்படுத்துகிறது. தனிமைப்படுத்தப்படும் சமூகத்தில் இருந்து சிலர் வன்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த வன்முறைகளைக் கொண்டு இந்து அடிப்படைவாதம் தன்னை மேலும் வளர்த்துக்கொள்கிறது. முஸ்லீம்கள் மேலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த சுழற்சிதான் இந்தியாவை ஆட்டிவைக்கிறது. சொந்த மதத்தின் வன்முறையை எதிர்ப்பதன் வாயிலாகவே இந்த சுழற்சியை நிறுத்த முடியும். அடுத்த மதத்தின் மீதான வெறுப்பு இந்த சுழற்சியை வலுவாக்கவே உதவும்.

அஃப்சல் குருவின் தூக்கு இந்தியாவின் இந்துத்வ சிந்தனைக்கு தரப்பட்ட பலி. இதன் வாயிலாக நாம் பெறப்போகும் பலன் இசுலாமிய இளைஞர்களின் நம்பிக்கையின்மையும் சங்கப்பரிவாரங்களின் கூடுதல் திமிரும்தான். அஃப்சல் குரு தீவிரவாத பயிற்சியை விட்டு விலகிவந்து ராணுவத்தின் ஆளாக செயல்பட்டிருக்கிறார். இப்போது அவர் இந்திய அரசாலேயே கொல்லப்பட்டிருக்கும் நிலையில் ஒரு சராசரி காஷ்மீர் இளைஞனின் மனம் யாரை நம்பும்? நம் கொண்டாத்தினூடே நாம் வெறுக்கும் தீவிரவாதத்துக்கு வலு சேர்க்கிறோம் என்பதை உணர்கிறீர்களா?

அரசோ, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அடிப்படைவாதிகளோ அல்லது தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய கடும் பிற்போக்குவாதிகளோ இந்த சிக்கல் தொடர்வதையே விரும்புவார்கள். ஏனெனில் அவர்களது தனிப்பட்ட நலன்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இத்தகைய சூழலை சார்ந்திருக்கிறது. ஆனால் நம் நிலைமை அப்படியல்ல. நாம் நாள்தோறும் தீவிரவாதத்தின் பெயரைச் சொல்லி மிரட்டப்படுகிறோம், பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி சுரண்டப்படுகிறோம். ஆகவே இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டிய அவசியம் நமக்கு மட்டும்தான் இருக்கிறது.

“அஃப்சல் குரு- கொலை நம்மை மகிழ்விக்குமெனில், நமக்கும் அஜ்மல் கசாபுக்கும் என்ன வேறுபாடு?” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. >>பாதிரியார் ஸ்டெயின்ஸ் தமது குழந்தைகளோடு எரித்து கொல்லப்பட்டார். அந்த செய்தி சொல்லப்பட்ட எந்த பெரிய ஊடகத்திலும் தீவிரவாதம் எனும் பதம் பயன்படுத்தப்படவில்லை. நாடு விடுதலை பெற்ற பிறகு எண்ணற்ற தாக்குதல்கள் இசுலாமியர்கள் மீது நடைபெற்றிருக்கிறது. அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் பம்பாய் கலவரமும் குஜராத் படுகொலைகளும் நடந்தன. எந்த ஒரு சம்பவமும் தீவிரவாதம் என குறிப்பிடப்படவில்லை. அதெப்படி முஸ்லீம்கள் தொடர்புடைய அல்லது தொடர்புடையதாக கருதப்படுகிற தாக்குதல்கள் மட்டும் நமக்கு தீவிரவாதமாகப்படுகிறது?

    தீவிரவாதத்துக்கு என்ன வரையறை? அதிக எண்ணிகையிலான மரணத்தை விளைவிப்பதா? அப்படியெனில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கும் ஊட்டச்சத்தற்று மரணிக்கும் குழந்தைகள் சாவுகளுக்கும் இந்த அரசின் கொள்கைகள்தான் காரணம். அந்த வகையில் சொன்னால் அரசு செய்வதுதான் மிகப்பெரிய தீவிரவாதம். ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதலா? அப்படியெனில் குஜராத் கலவரம்தான் மிகப்பெரிய தீவிரவாதம். வெளிநாட்டிலிருந்து பணம் பெற்று நடத்தப்படும் வன்முறையா? அப்படியெனில் சங்கபரிவாரங்கள்தான் நாட்டில் அதிக அளவு வெளிநாட்டு பணம் பெறும் அமைப்புக்கள்.
    >>>>>
    தீவிரவாதத்துக்கு என்ன வரையறை? எல்லோரும் யோசிக்க வேண்டிய கேள்வி இது.

  2. நமக்கு இதுவா முக்கியம். விஸ்வரும் படம் போல அடுத்து வரும் படங்களை துவைத்து காயப் போடவே நேரம் போதவில்லை. அய்புறம் எங்கே இது போன்ற விசயங்களை விவாத பொருளாக எடுத்துக் கொள்வது?

    சில தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

    காரணம் மாறுதல் என்பது ஒரு நிலையின் உச்சத்தை தொட்ட பிறகே மாற்றம் உருவாகின்றது.

    அது போன்ற காலம் என் வாழ்நாளுக்குள் நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

  3. //அஃப்சல் குரு தீவிரவாத பயிற்சியை விட்டு விலகிவந்து ராணுவத்தின் ஆளாக செயல்பட்டிருக்கிறார். இப்போது அவர் இந்திய அரசாலேயே கொல்லப்பட்டிருக்கும் நிலையில் ஒரு சராசரி காஷ்மீர் இளைஞனின் மனம் யாரை நம்பும்? நம் கொண்டாத்தினூடே நாம் வெறுக்கும் தீவிரவாதத்துக்கு வலு சேர்க்கிறோம் என்பதை உணர்கிறீர்களா?///

    இந்த‌ வ‌ரிக‌ளில் ம‌ட்டும் உங்கள் க‌ருத்துட‌ன் முர‌ண்ப‌டுகின்றேன் தோழர்.வில்லவன். அஃப்esan.palai@gmail.comச‌ல் குரு போராளியாக‌ இருந்தாரே அன்றி தீவிர‌வாதியாக‌ அல்ல‌, மேலும் அவ‌ர் இராணுவ‌த்தில் ஆளாக‌ செய‌ல்ப‌ட‌வில்லை, போராட்ட‌த்தை விட்டு வெளியேறி ச‌ர‌ண‌டைந்தார், மேலும் இது தீவிர‌வாத‌த்திற்கு வ‌லுசேர்க்காது, இந்தியாவின் கூட்டு மனசாட்சியில் காசுமீரிகள் இல்லை, இது மேலும் காசுமீரிகளை இந்தியாவில் இருந்து பிரிக்கின்றது, அதனால் இது காசுமீரின் விடுத‌லைப் போராட்ட‌த்திற்கே வ‌லுசேர்க்கும்.
    நற்றமிழன்.ப‌

பின்னூட்டமொன்றை இடுக