ஆசிரியர் தகுதித் தேர்வு- தகுதியை தீர்மானிப்பது எது?


42 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 240டிகிரி மையக்கோணம் கொண்ட, ஒரு வட்ட கோணப்பகுதியை வெட்டியெடுத்து, அதன் ஆரங்களை ஒன்றினைத்து ஒரு கூம்பாக்கினால் கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு?

இதில் எது வெளிநாட்டு தேனீ வகை?

மேலேயுள்ள இரண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளின் மாதிரிகள். அடுத்த கட்டுரையொன்றுக்காக ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாளை (முதலாவது தேர்வு) வாசித்தேன். சத்தியமாக தொன்னூறு மதிப்பெண் வாங்கி தேறுவது என்பது ஆகப்பெரும்பாலானவர்களுக்கு சாத்தியமில்லை. இத்தனை கடினமான கேள்விகள் மூலம் ஆசிரியர்களது தகுதியை எப்படி நிர்ணயிக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. இருந்தாலும் அந்த ஆராய்ச்சி எனது அறிவுத்திறனுக்கு அப்பாற்பட்டது என்பதால் அதுபற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. ஆயினும் ஒரு கேள்வி மட்டும் மனதை அரித்துக்கொண்டேயிருக்கிறது, இந்த தேர்வில் தேறிய இரண்டாயிரத்து சொச்சம் பேர் ஆசிரியர் பணிக்கு தகுதியுடையோராக இருப்பார்களா?

இந்த தேர்வை விட்டுவிட்டு பார்த்தால் மட்டும் வருங்கால ஆசிரியர்களது தகுதி சரியாக இருக்கிறதா என விவாதிப்பது என்னளவில் ஓரளவு சரியாக இருக்கலாம். நீங்கள் பள்ளியில் படிக்கையில் நீ என்னவாகப்போகிறாய் எனும் கேள்விக்கு, ஆசிரியராகப்போகிறேன் என சொன்னவர்கள் எத்தனை பேர்? என் பள்ளி காலத்தில் அந்த பதிலை ஒருவன்கூட சொல்லவில்லை (மாணவிகள் தரப்பு பற்றி தெரியவில்லை). ஆனால் என் பள்ளிப் பருவத்தில்தான் ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் புற்றீசல் போல முளைத்தன. மாணவர்களுக்கு விருப்பமேயில்லாத ஒரு துறைக்கு பயிற்சியளிக்க ஏகப்பட்ட கல்லூரிகள் முளைக்கின்றன என்றால் ஆர்வத்தை பின்தள்ளி மற்ற காரணிகள்தான் ஒருவனது உயர்கல்வியை தீர்மானிக்கிறது என்பது புலனாகிறது.

தமிழகத்தின் சிரிக்கமுடியாத முரண்நகை என்பது, இங்கு குழந்தைகள் கல்வியின் மீதிருக்கும் அதிகப்படியான அக்கறையும் ஆசிரியர் தரத்தின் மீதான அதிகப்படியான அலட்சியமும்தான். ஒருநாள் கவனமாக தொலைக்காட்சியை பாருங்கள், குழந்தைகளை வைத்து நடக்கும் மாபெரும் பிளாக்மெயில் உங்களுக்கு புரியும். காம்ப்ளான் கொடுக்காவிட்டால் குழந்தை வளராது, லைஃப்பாய் சோப்பும் டெட்டாலும் இல்லையா உங்கள் குழந்தை காய்ச்சலில் விழுந்துவிடும். எங்கள் பாட சீ.டியை வாங்காவிட்டால் உங்கள் குழந்தை வீடியோகேம் விளையாடியே நாசமாய்போகும் எனும் மிரட்டல் தொடங்கி எங்களிடம் அப்பார்ட்மென்ட் வாங்கினால் உங்கள் குழந்தைகள் நிம்மதியாக விளையாடும் என்பதுவரை பலவகையான வியாபாரங்கள் நம் குழந்தைகளை மையமாக வைத்தே தங்கள் விளம்பரங்களை வடிவமைக்கின்றன. நம் சமூகம் எப்படி குழந்தைகளை மையப்படுத்தியதாக மாறியிருக்கிறது (நல்லவிதமாக அல்ல) என்பதற்கான சிறிய உதாரணம் இது (புரியாதவர்கள் கவனத்துக்கு: விளம்பரங்கள் ஏனோதானோவென்று வடிவமைக்கப்படுவதில்லை, விலைபோகும் நுட்பங்கள் மட்டுமே அங்கு பயன்படுத்தப்படும்).

இத்தனை தூரம் குழந்தைகளின்பால் அக்கறை கொள்ளும் ஒரு சமூகத்தில் எப்படி ஆசிரியர்களது தரம் இவ்வளவு கீழிறங்க முடியும்?

கசப்பான பதில் இதுதான். ஆசிரியர்களது தரம் மட்டுமல்ல கற்றல் மற்றும் கற்பித்தலில் தொடர்புடைய எல்லா தளங்களின் தரமுமே கீழிறங்கியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கருவிகளை சிறப்பாக இயக்கத்தெரிந்தவர்கள் அரிதாகிப்போகலாம், இப்போதே அதற்கான தட்டுப்பாடு வரத்துவங்கிவிட்டது. இயற்பியல் பட்டதாரிகளிடம் எதிர்பார்க்க வேண்டிய தகுதிகளை குறைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை (வேறொரு பிறவித்தகுதி இருக்கிறது, அது இந்த பதிவுக்கு அவசியமில்லாதது).. நேர்முகத்தேர்வில், ஆங்கிலப் பட்டதாரிகளால்கூட எளிய வாக்கியங்களை அமைக்க முடியவில்லை என சில ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பியவர் நடுத்தரவர்கத்தின் ரெப்ரசன்டேட்டிவ்களில் ஒருவரான அந்துமணி. தேவையைக் காட்டிலும் மிக அதிகமான பட்டதாரிகள் கிடைக்கிறார்கள் ஆனால் தகுதியுடையோர் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு கிடைப்பதில்லை என தொழில்துறை வட்டாரங்கள் சொல்கின்றன. நாம் முன்னெப்போதையையும்விட அதிகமாக எதிர்காலத்தைப்பற்றி கவலைகொள்ளும்போதுதான், எதிர்காலம் முன்னெப்போதையும்விட அதிக சிக்கலானதாகிக்கொண்டிருக்கிறது.

வெறும் குமாஸ்தாக்களை உருவாக்குவதற்கென்றே அறிமுகப்படுத்தப்பட்ட மெக்காலே கல்வி முறையால் வந்த பிரச்சனை  இது எனும் கருத்து பலரிடத்திலும் இருக்கிறது. ஆனால் அந்த கல்வி முறையில் படித்துத்தான் இந்தியாவின் பல குறிப்பிடத்தக்க அறிவியலாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஒரு தலைமுறையே சுயமரியாதை மிக்கவர்களாக இருந்தபோதும் இந்த கல்விமுறைதான் தமிழகத்தில் இருந்தது. ஆகவே மிக சமீபத்தில் உருவான இந்த பிரச்சனைக்கு சமீபகாலத்தில் உருவான காரணியே அடிப்படையாக இருக்க முடியும். மெக்காலே கல்விமுறை ஆங்கிலேயனின் தனிப்பட்ட தேவைக்காக உருவாக்கப்பட்ட கல்விமுறையாக இருக்கலாம். ஆனால் அந்த ஒரு செயல்பாடுதான் இந்தியாவில் ஓரளவு சமமான கல்விமுறை இருக்க காரணமாக இருந்தது. இல்லாவிட்டால் குறிப்பிட்ட சாதிக்காரர்கள் மட்டும் குருவின் வேட்டியை துவைத்துக் கொடுத்து வேதத்தை கற்றுக்கொள்ளும் கல்விமுறைதான் இங்கே இருந்திருக்கும்.

மெக்காலே கல்வி முறை மாற்றம் செய்யப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்கால கல்வியின் மோசமான விளைவுகளுக்கு இந்த கல்விமுறை மீது பழி போடுவது அநாவசியமானது மட்டுமல்ல நிஜமான காரணத்தில் இருந்து விலகிச்செல்வதுமாகும். வேறு என்னதான் காரணம் என்று கேட்பீர்களேயானால், அதற்கான பதில் எளிமையானது. நம் சமூகத்தில் தற்போதுள்ள மற்ற பெரிய பிரச்சனைகளுக்கு என்ன காரணமோ அதுதான் இதற்கும் காரணம்.

இன்றைய தலைமுறைக்கும் இதற்கு முந்தைய தலைமுறைக்குமான ஒப்பீட்டில் இரண்டு முக்கிய வேறுபாடுகளை நாம் காண முடியும். முதலாவதாக, தனிமனித மதிப்பீடுகள் பணம் சார்ந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது. நீங்கள் வெற்றிபெற்றவரா அல்லது தோற்றவரா என்பது உங்கள் வருமானத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. கிரிக்கெட் மீதுள்ள காதலால் தன்னால் விளையாட முடியும்வரை ஓய்வை அறிவிக்கமாட்டேன் என சச்சின் டெண்டுல்கர் தனது ஓய்வு பற்றிய கேள்விக்கு சில மாதங்களுக்கு முன்னால் பதில் சொன்னார். காதல் கிரிக்கெட் மீதுதான் என்றால் அவரால் ஐம்பத்தெட்டு வயதுவரைகூட ரஞ்சி டிராபி விளையாட முடியும். சர்வதேச கிரிக்கெட்டில்தான் இருப்பேன் என அப்போது அவர் அடம்பிடிக்க காரணம் பணத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?? இந்த தலைமுறையின் ஆதர்ச நாயகனை வைத்தே நாம் இளைஞர்களையும் மதிப்பிட முடியும். இப்போது விருப்பம், ஆர்வம், இலக்கு எல்லாமே பணத்தாசையை நிர்வாணமாக காட்ட கூச்சப்பட்டு அணிவிக்கப்படும் ஆடைகளாக மாறிவிட்டது.

இரண்டாவது பெரிய மாற்றம், சுற்றம் என்பது நான் சார்ந்திருப்பவர்கள் மற்றும் என்னை சார்ந்திருப்பவர்கள் மட்டுமே எனும் புதிய வரையறை. சமூக அக்கறை என்பது நடுத்தரவர்கத்துக்கு தேவையற்றதாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நாளெல்லாம் பேருந்து நிலையத்தில் தொண்டைகாய கத்தி வசூலிக்கும் போராட்ட நிதியை நான்கு விடலைப் பையன்களால்  விநாயகன் பெயரைச்சொல்லி நான்கே தெருக்களில் வசூலித்துவிட முடியும் என்பதுதான் இன்றைய எதார்த்தம்.

நிறைய சம்பாதிப்பதுதான் கௌரவம் என்றான பிறகு படிப்பை தெரிவு செய்யும் முறையே மாறுகிறது. எந்தத் துறையில் பணம் நிறைய கிடைக்குமோ அதுதான் சிறந்த படிப்பு என்றாகிறது. அந்த ‘சிறந்த’ படிப்பை நோக்கிய ஓட்டத்தில் ஒரு மாணவனுக்கு உள்ள தனிப்பட்ட திறமைகள் தேவையற்றதாகின்றன. மென்பொருள் பொறியாளர் அல்லது மருத்துவர் எனும் இரண்டு இலக்குகள்தான் கடந்த பத்தாண்டுகளில் நான் அதிகமாக கேட்கும் விருப்பத்தெரிவாக இருக்கின்றன. எம்.பி.பி.எஸ் கிடைக்காவிட்டால் அண்ணா பல்கலைக் கழகத்தில் எஞ்சினியரிங்க் சேர்ந்துவிடுவேன் என பல முதல்வரிசை மாணவர்கள் சொல்கிறார்கள். மருத்துவமும் பொறியியலும் இரண்டு நேரெதிரான துருவங்கள். ஆனால் விருப்பம் எனும் வரிசையில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு அடுத்ததாக எப்படி பொறியியல் வரமுடியும்? ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது.

அப்போதைக்கு மார்கெட் உள்ள படிப்பு மற்றும் எடுக்க முடிகிற அதிகபட்ச மதிப்பெண் ஆகிய இரண்டும் காரணிகளை வைத்து மாணவர்கள் பல்வேறு துறைசார் படிப்புகளுக்குள் வீசப்படுகிறார்கள். இந்தத் துறை எனக்கு பொருத்தமானதா என யோசிக்க இங்கு யாருக்கும் அவகாசமில்லை. நல்ல கல்லூரி என்றால் என்ன என +2 படிக்கும் மாணவனின் பெற்றோரை கேட்டுப்பாருங்கள், சிறப்பாக கற்றுத்தரும் கல்லூரி என யாரேனும் சொல்லிவிட்டால் காதை அறுத்துக்கொள்கிறேன் என நாம் துணிச்சலாக பந்தயம் வைக்கலாம். ஏனெனில் நல்ல கல்லூரி என்பது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பலருக்கு வேலைவாங்கித்தரும் கல்லூரி என்பதுதான் இன்றை விளக்கம்.

படிப்பு என்பது வேலைக்கு மட்டும், வேலை என்பது சம்பாதிக்க மட்டும், சம்பாத்தியம் என்பது தேவைக்கு மட்டுமல்ல அதுதான் நம் அடையாளம். எதற்காக படிக்கிறோம் என்பதன் சுருக்கமான (உண்மையான) பதில் இதுதான். ஏனைய துறைகளில் இந்த எண்ணப்பாடு பெரிய சிக்கல்களை உண்டாக்குவதில்லை. ஒரு ஆசிரியரின் பணியில் இந்த வரையறை மிக அபாயகரமானது. ஒவ்வொரு மாணவனின் நிலையை பரிசீலித்து, அவர்களது எதிர்காலத்தை மனதில்கொண்டும் வகுப்பை கையாள்வதென்பது எளிதானதல்ல. அதனை வெறும் சம்பளத்துக்கு பணியாற்றும் ஒரு ஆசிரியரால் செய்ய முடியாது, அவர் எத்தனை மதிப்பெண் பெற்று பணிக்கு வந்திருந்தாலும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும் வெறுமனே பாடத்தை ஒப்பித்துவிட்டு போகும் ஆசிரியர்கள் இருந்தார்கள். மாணவர்களை முரட்டுத்தனமாக கையாளும் ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால் கடமையுணர்ச்சியும் பாடம் நடத்துவதில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட ஆசிரியர்கள் அதைக்காட்டிலும் மிக அதிகமாக இருந்தார்கள். இரண்டு காலத்திற்கும் இடையேயான வேறுபாடு இரண்டு விடயங்கள்தான். ஒன்று, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பொதுவாகவே சமூகம் அடுத்தவர்கள் மீது அக்கறைகொள்வதை தன் இயல்பாக கொண்டிருந்தது.. அது ஆசிரியர் சமூகத்திலும் பிரதிபலித்தது. இப்போது சமூகம் சுயநலத்தை தனது இயல்பாக கொண்டிருக்கிறது, அது ஆசிரியர்களிடத்திலும் இருக்கிறது. இரண்டாம் காரணம், அப்போது ஆசிரியர் வேலை பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக இருந்தது. பயிற்றுவித்தலில் ஆர்வமுள்ளோர் ஆசிரியரானதால் கல்வியின் தரம் சிறப்பாக இருந்தது.

அடுத்தவர்கள் மீது அக்கறையற்ற சமூகத்தில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை கொள்வது அனாவசியமாகத்தான் தோன்றும். விருப்பமின்றி செய்யப்படும் பணியும் அவ்வாறே. என் மகன் மற்ற எல்லோரையும் தள்ளிவிட்டு முன்னேறி ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு அவனது வாத்தியார் மட்டும் அர்பணிப்பு உணர்வோடு வேலை செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது அயோக்கியத்தனம் இல்லையா? ஆசிரியர் தகுதித் தேர்வில் மூன்று சதவிகிதம் பேர் தேறினால் இது தேசிய சராசரியைவிட அதிகம் என சொல்கிறது தமிழக அரசு. தொன்னூற்று ஏழு சதம் ஆசிரியர்கள் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவதைப் பற்றி அலட்டிக்கொள்ளாத சமூகத்தில் மாணவர்கள் மீது அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் எப்படி உருவாவார்கள்?

பொறுப்பான ஆசிரியர்கள் இன்றைய சமூகத்தின் மிக முக்கியமான தேவை. அவர்களை ஒரு தேர்வின் மூலம் கண்டறிய முடியாது. சரியான ஒரு சமூகத்தில் இருந்துதான் தகுதியான ஆசிரியர்கள் உருவாகமுடியும். எல்லோருக்கும் நியாயமான வாய்ப்பும் சமமான வசதியும் கிடைக்கும் பொருளாதார சமத்துவம் உள்ள நாட்டில்தான் சரியான ஒரு சமூகம் இருக்கும். சரியான அரசியலை கொண்டிருக்கும் நாடுதான் அந்த தகுதியை எட்டமுடியும். ஆகவே நம் முன்னால் இரண்டு வாய்ப்புக்கள் இருக்கின்றன. சரியான அரசியலை தெரிவு செய்வது அல்லது இப்போதிருக்கும் ஆசிரியர்களின் தகுதியையும் கல்விச்சூழலை சகித்துக்கொள்வது.

“ஆசிரியர் தகுதித் தேர்வு- தகுதியை தீர்மானிப்பது எது?” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. very good article. i am getting good social response everytime while reading your article. and i love ur social responsibility. If i get such good teacher(i got good teacher but few) as you told surely i would have got more responsibility and social care and patriotism. Please write often and if you writing on some other blogs, tell those blog URL also. Salute to your social care. 🙂

  2. வானத்து நட்சத்திரங்களின் அழகைக் கண்டு ரசித்துக் கொண்டே சென்ற ஒருவன், தோவாளம் இல்லாத கிணற்றிற்குள் விழுந்து காலைஉடைத்துக்கொண்டானாம். தமிழ்நாடு அரசும் அப்படியே. ஆனால் கால் உடைந்து போனவர்கள் மாணவர்கள்தாம். தகுதித்தோ்வு தோ்ச்சி பெற்றால்தான் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நியமனம் என்ற நிபந்தனையினை நிறைவு செய்ய முடியாமல் பல அரசு பள்ளிகளிலும் தனியாா் பள்ளிகளிலும் ஆசிரியா்கள் இல்லாமல் வகுப்பறைகள் உள்ளன. கற்பித்தல் பணிசெய்ய ஆசிரியா்கள் இல்லை. பள்ளிகள் துவங்கி 5 மாதம் முடிந்து விட்டது.காலாண்டு தோ்வு முடிந்து அரையாண்டை நோக்கி மாணவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். மந்திரிகளும் ஜ.ஏ.எஸ அதிகாரிகள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நிச்சயம் ஆசிரியா்கள்பற்றாக்குறை இல்லை.ஆனால் கிராமங்களில் பணிமாறுதல் பெற்றுச் சென்ற இடங்களில ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஆசிரியா்கள் இல்லை. இதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தொியவில்லை.
    தகுதித்தோ்வில் – இடைநிலை -பட்டதாாி -ஆசிரியா்கள் போதிய எண்ணிக்கையில் தோ்ச்சி பெறாததற்கு காரணம் – ஆசிரியா்கள் படித்த முதன்மைப்பாடத்திலி இருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஆங்கில மொழிபாடமும் சோ்த்துக் கொள்ளலாம். ஆங்கில ஆசிரியரிடம் சமூகஅறிவியல் குறித்து கேள்வி கேட்க தேவையில்லை. தமிழ இலக்கணம் குறித்து கேள்வி கேட்டு – ஆசிரியா்களை தோல்வி அடையச் செய்து ஆசிரியா்கள் இல்லாத வகுப்பறைகளை உண்டாக்கியிருக்க வேண்டாம்.
    பட்ட படிப்பில் படித்த முதன்மைப்பாடத்தில் மட்டும் தோ்வு வைத்து முதுநிலை ஆசிரியா்கள் தோ்வு செய்யப்படுகிறாா்கள்.
    பட்டதாாி ஆசிரியா்கள் தோ்வு செய்வதற்கும் மேற்படி அளவுகோல்தான் நடைமுறைக்கு உகந்தது. உயா்ந்த தரத்தை இன்னும் படிப்படியாக அரசு கொண்டு வரவேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுக