பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?


(வினவு தளத்திற்காக எழுதப்பட்டு ஜூலை 26, 2018 அன்று வெளியான கட்டுரை)

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குதான் ஜூலை 18-ம் நாளின் பிரதான செய்தி. சமூக ஊடகங்களில் கோபமும் பயமும் வழிந்தோடுகிறது. வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அடித்து வெளுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வாதாட முடியாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது (இது ஒரு குழந்தைத்தனமான நாடகம்). பாலியல் குற்றங்கள் மீதான இந்த திடீர் உணர்வெழுச்சி பல தருணங்களில் உருப்படியான பலன்களைக் கொடுப்பதில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோமே தவிர ஒரு சிக்கலின் காரணிகள் மற்றும் அதன் தீவிரத்தன்மை பற்றியும் அக்கறையின்றி இருக்கின்றோம்.

  • இந்த பாதகத்தை செய்தவனின் குறியை அறுப்போம், விசாரணை ஏதுமின்றி என்கவுண்டர் செய்யலாம் என்பதாக பலர் கொந்தளிக்கிறார்கள்.
  • பெண் குழந்தைகளுக்கு ’குட் டச், பேட் டச் ‘ கற்றுக்கொடுங்கள் என்கிறார்கள் சிலர்.
  • ஆண் குழந்தைகளை ஒழுங்காக வளருங்கள், பெண் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் என எழுதுகிறார் ஒருவர்.

ஏராளமான உளவியல் கண்ணோட்டங்கள் சுற்றுக்கு விடப்பட்டு, அவை சலிக்க சலிக்க விவாதிக்கப்பட்டாயிற்று (ஆனால், அவை எல்லாம் ஒரு நாள் மட்டுமே நீடித்தன). எனவே இந்த செய்தியை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு இதோடு தொடர்புடைய வேறொரு (கவனிக்கப்படாத) செய்தியை விவாதிக்கலாம்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் 150 பேரிடம் எடுக்கப்பட்ட தரவுகளின் படி அவர்களில் மூவரைத் தவிர ஏனையோர் யூடியூப் செயலியை பாவிக்கிறார்கள். அவர்களில் பலர் எதேச்சையாக பெரியவர்களுக்கான (18+) வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள் என்பதை தனிப்பட்ட உரையாடல்கள் மூலம் அறிய முடிகிறது (பள்ளி ஆற்றுப்படுத்துனர்களின் பணியிட தரவுகள் மூலம் பெறப்பட்ட செய்தி, மேலதிக தகவல்கள் தருவதற்கில்லை).

செல்பேசிகளில் யூடியூப் செயலியை நீக்கிவிட்டு யூடியூப் கிட்ஸ் செயலியை மட்டுமே நிறுவுமாறு நாங்கள் பெற்றோரை இப்போது வலியுறுத்துகிறோம்.

எட்டாம் வகுப்பில் காதல் எனும் வார்த்தை மிக சகஜமாக புழங்குகிறது. வகுப்பறையில் மாணவர்களிடையேயான முக்கியமான பேசுபொருளாக அது இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனக்கென ஒரு காதலரையோ அல்லது காதலியையோ (எதிர் தரப்பு ஏற்றுக்கொள்ளாமல் வெறும் விருப்பமாக கொண்டிருப்போர் உட்பட) கொண்டிருக்கிறார்கள். இதற்கான எச்சரிக்கைகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தரப்படுவது பள்ளிகளில் சகஜமாக இருக்கிறது.

இருபாலரும் பயிலும் பள்ளிகளில் 7 – 10-ம் வகுப்புக்களில் மாணவிகள் விகிதம் ஆரம்பப்பள்ளி எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் எப்போதுமே குறைவாக இருக்கும். பெண் பிள்ளைகளை 5ஆம் வகுப்போடு பெண்கள் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றிவிடுகிறார்கள். அதற்கு பள்ளிகளில் உள்ள காதல் பிரச்சினை மீதான அச்சமும் ஒரு காரணம்

பாலியல் குற்றங்கள்
ஒரு பதின்மூன்று வயது மாணவி, 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருக்கிறாள். அதை விட மோசமான விசயம் என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார்

பதின்மூன்று வயது மாணவி ஒருவரது டைரியை வாசித்தபோது, அதில் 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஒன்று வகுப்பறையில், இன்னொன்று அவரது நெருங்கிய உறவுக்காரரால் நடந்திருக்கிறது. சம்பவங்களைவிட மோசமான செய்தி என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண டிராஃபிக் விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார். (மாணவி வேறொரு பிரச்சினைக்காக ஆற்றுப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். டைரி அவரது ஒப்புதலோடு பெறப்பட்டது – சமயங்களில் கவுன்சிலிங் செயல்பாடுகளுக்கு டைரி உதவிகரமாக இருக்கும்)

இவை இருபாலரும் பயிலும் பள்ளிகளுக்கான பிரச்சினை மட்டும் என்று சமாதானமடைய வேண்டாம். ஆண்கள் பள்ளிகளில் ஹோமோ செக்ஷுவாலிட்டி ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை. பெண்கள் பள்ளியொன்றில் “ஃபிகர்” என்றொரு நடைமுறை இருக்கிறது. கீழ் வகுப்பு (6, 7 & 8) மாணவிகள் மேல் வகுப்பு மாணவிகளில் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து நீ எனது “ஃபிகராக” இருப்பாயா என கேட்பார். அவர் ஒப்புக்கொண்டால் இருவரும் முத்தமிட்டுக்கொண்டு பிரத்தியேக நண்பர்களாக தொடர்வார்கள் (இதில் அச்சமடைய ஒன்றுமில்லை. இது ஒரு வட்டாரத்தில் இருக்கும் கலாச்சார நடைமுறை என கருத எல்லா நியாயமும் இருக்கிறது. சாமியாடுவது, அன்னியபாஷை பேசுவது போன்ற ஆன்மீக கலாச்சாரங்களைப் போல).

ஹோமோ செக்‌ஷுவாலிட்டி ராணுவம் மற்றும் கப்பல் பணிகளில் சகஜம். அவர்களில் பலர் ”இயல்பு” வாழ்க்கைக்கு வந்த பிறகு அப்பழக்கத்தை தொடர்வதில்லை. இது பாலியல் நாட்டத்துக்கான வடிகாலாகவும் ஒருவரால் பயன்படுத்தப்படலாம்

இவை எல்லாம் உங்களை அச்சுறுத்துவதற்காக சொல்லப்படுபவை அல்ல. உங்கள் பார்வை எல்லைக்கு வெளியே உள்ள சிறார்கள் உலகத்தில் பாலுறவு பற்றிய அவர்களது ஆர்வமும், பல வெரைட்டிகளில் கிடைக்கும் போர்ன் வீடியோக்களும் பெருமளவு பாதகங்களை செய்துகொண்டிருக்கின்றன. பதின்பருவத்தின் துவக்கத்தில் பாலியல் ஆர்வம் என்பது மிக இயல்பானது. ஆனால் இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியும் குறைவான விளையாட்டு வாய்ப்புக்களும் அவர்களது இயல்பான பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

விளையாட்டில் ஈடுபடவும் ஏனைய பொது விசயங்களை பேசவும் நேரம் இருக்கையில் அவர்களுடைய பாலியல் நாட்டம் மட்டுப்பட வாய்ப்புண்டு. அவை இல்லாதபோது உள்ளார்ந்த விருப்பமான பாலுறவு ஆர்வமும் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் போர்ன் வீடியோக்களும் மாணவர்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன.

எல்லா மாணவர்களும் போர்ன் வீடியோ அடிமையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஆனால் வகுப்பறைகளில் பாலுறவு என்பது பேசுபொருளாகும்போது போர்ன் வீடியோ ஆர்வம் மற்றவர்களுக்கு பரவுகிறது. சுய இன்பம் மற்றும் ஆபாசப்படம் பார்க்கும் நாட்டம் ஆகியவற்றின் மீதான குற்ற உணர்வு கொண்ட பல மாணவர்களை பள்ளி ஆற்றுப்படுத்துனர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

சமூக வலைதளங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் எந்தவித அச்சமோ தயக்கமோ இல்லாமல் தங்கள் காதலை பகிரங்கப்படுத்துகிறார்கள். நெருக்கமானவர்களுக்கு மட்டுமேயான செய்தி எது எல்லோருக்கும் பகிரங்கப்படுத்த வேண்டிய செய்தி எது என்பதை பிரித்துப் பார்க்க அவர்களுக்கு தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் ஒரு பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆற்றுப்படுத்துனர்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றன.

இவை வெறுமனே நகர்ப்புறப் பள்ளிகளில் மட்டும் இருக்கும் பிரச்சினை என கருதவேண்டாம். கிராமப்பகுதி பள்ளிகளிலும் இதனையொத்த பிரச்சினைகள் இருக்கின்றன (இதில் முழுமையான தரவுகள் தரும் ஆட்கள் என் தொடர்பு வட்டத்தில் இல்லை). பாடம் நடத்தும்போது தமது அவயங்கள் குறித்து அசிங்கமாக மாணவர்கள் கிண்டலடிக்கிறார்கள் என்றார் ஒரு பெண் ஆசிரியர், அவர் குறிப்பிட்டது ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலரைப்பற்றி என்பது அவரது குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை உணர்த்தும்.

பாலியல் குற்றங்கள்
பல்வேறு திரைப்படங்களிலும் பெண் ஆசிரியர்கள் ஆபாசப் பண்டமாகவே காட்டப்படுகிறார்கள்.

சிதறலாக கிடைக்கும் இப்படியான பல்வேறு தரவுகளை ஒருங்கிணைத்து பார்க்கையில் அவை பெரிதும் கவலையுற வைக்கிறது. இவற்றை கையாள்வது என்பது ஆசிரியர் மற்றும் ஆற்றுப்படுத்துனரின் சக்திக்கு அப்பாற்பட்டவை என்றாலும் கவலைக்குரிய விடயம் அதுவல்ல.

பள்ளிகளில் இருக்கும் இத்தகைய பிரச்சினை குறித்த எந்த தரவுகளும் நம்மிடம் இல்லை (ஒருகோடி பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்).

அப்படியான தரவுகளை திரட்டுவதற்கான எந்த அமைப்பும் வழிகாட்டும் நெறிமுறைகளும் நம்மிடம் இல்லை. பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனர்கள் இருக்க வேண்டும் எனும் உயர்நீதிமன்ற உத்தரவு பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறது.

மாணவர்கள் பேசவும் செயல்படவும் மிகக் குறைவான வாய்ப்புக்களே அவர்கள் வசம் இருக்கின்றன. அதிலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் உழல வேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண அரட்டைக்குரிய நேரமும் விசயங்களும் குறைவாக இருப்பதால் கிடைக்கும் அவகாசங்களில் அவர்களுக்கான பேசுபொருளாக சினிமாவும் காதலும் செக்ஸுமே இருக்கின்றது (இருபாலரிலும்).  எண்ணிக்கையிலோ அல்லது சதவிகிதத்திலோ சொல்ல இயலாது. ஆனால் குறிப்பிடத்தக்க அளவிலான மாணவர்களுக்கு இது பொருந்தும். இவர்களில் சிலரை எளிதாக பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ளவும், பாலியல் குற்றங்களுக்கு கூட்டு சேர்த்துக்கொள்ளவும் முடியும்.

பாலியல்சார் நடத்தை சிக்கல்களை கொண்டிருக்கின்ற அல்லது பள்ளியில் காதல்வயப்படுகின்ற மாணவர்களை பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் முரட்டுத்தனமாக கையாள்கிறார்கள் (பள்ளியை மாற்றுவது மற்றும் கடும் தண்டனைகள் கொடுப்பது). இவ்வகையாக சிக்கல்களை கையாள்வது குறித்த தேர்ச்சி, கல்வித்துறையின் அதிகார அடுக்கில் அனேகமாக எங்கேயும் இல்லை.

இத்தகைய விவகாரங்களில், மூடி மறைக்கும் வேலையையே பள்ளிகளும் பெற்றோர்களும் செய்ய முற்படுகிறார்கள்.

பாலியல் குற்றங்கள்
குழந்தைகளை பாதிக்கின்ற விசயங்கள் மிக இயல்பாக நடந்தேறுகின்ற நாட்டில் “குட் டச், பேட் டச்” சொல்லித் தருவது மட்டும் பிரச்சினையை தீர்த்துவிடப் போதுமானதா ?

இன்னும் பத்தாண்டுகளில் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை செலுத்தப்போகிற இன்றைய மாணவர்கள் மீது நாம் கொஞ்சமும் அக்கறையற்று இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு துலக்கமான உதாரணம். இதில் மேற்குறிப்பிட்ட சில தடங்கல்கள் நிலைமையை இன்னும் சிக்கலாக்குகின்றன. இவற்றால் நாம் இத்தகைய சிக்கல்களை முன்கூட்டியே தடுக்கவும் வந்த பின்பு சரிசெய்யவும் உள்ள சாத்தியங்களை இழக்கின்றோம். இதன் பின்விளைவுகளை நம்மால் அனுமானிக்கக்கூட முடியாது என்பதே நிதர்சனம்.

ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்கு அதீதமாக கொந்தளித்து பிறகு களைத்துப்போய் அடுத்த அதிர்ச்சிவரை காத்திருப்பதே நமது செயல்பாடாக இருக்கிறது. இந்த இயல்பினால் பல சிக்கல்களை நம்மால் அடையாளம் காண முடியாமல் போகிறது (குறிப்பாக மாணவர் தொடர்பான விவகாரங்களில்). இதற்கு தீர்வு சொல்வது கட்டுரையின் நோக்கம் அல்ல, அது ஒரு சாமானியனால் ஆகும் காரியமும் அல்ல. ஆனால் இங்கே குறிப்பிட விரும்புகிற செய்தி, ஒரு மாணவியின் துயரத்துக்கு இவ்வளவு தூரம் ஆவேசம் கொள்கிற நம் நாட்டில்தான் பெருந்தொகையான மாணவர்களை பாதிக்கின்ற விசயங்கள் மிக இயல்பாக நடந்தேறுகின்றன. இதற்கான பரிந்துரைகள் தருமளவுக்கு எனக்கு ஞானமில்லை, ஆனால் நாம் இத்தகைய சிக்கல்களை சரிசெய்வதற்கான காலத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என எச்சரிக்கும் அளவுக்கு அனுபவம் இருக்கிறது. பதிவின் நோக்கமும் அதுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: