எதிர்மறையாக பேசுவது என் விருப்பத் தெரிவு அல்ல. ஆனால் பள்ளிக்கல்வியில் நாம் பார்க்க விரும்பாத சில பிரச்சனைகள் பூதாகரமாகி கொண்டு வருகிறது. அவை குறித்து பள்ளிகளும் வெளிப்படையாக பேசுவதில்லை. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இத்தகைய பிரச்சனைகளை சரியான வழிகளில் கையாள முயல்வதில்லை.
சில எடுத்துக்காட்டுகள் மூலம் இந்த பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்த முயல்கிறேன்.
வகுப்பறை சண்டைகள் என்பது பன்னெடுங்காலமாக நாம் பார்த்து வரும் விடயம் தான். ஆனால் இன்று அதன் வடிவம் முற்றிலும் மாறி இருக்கிறது. முன் எப்போதையும் விட இன்று அது ஆபத்தானதாகவும் கையாள இயலாததாகவும் மாற்றம் அடைந்திருக்கிறது.
எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையேயான சண்டை முற்றுகிறது அதில் ஒரு மாணவர் கோபத்தோடு உங்க அம்மாவை என்கிட்ட அரை மணி நேரம் அனுப்பு என்கிறார். மறுநாள் இந்த சண்டை பெற்றோர்களுக்கு இடையேயானதாக மாறுகிறது. திட்டு வாங்கிய மாணவனின் தாய் சம்பந்தப்பட்ட இன்னொரு மாணவனை பார்க்க வேண்டும் எனக் கேட்டு பள்ளியில் நிற்கிறார். இந்த சூழலை கையாள்வது என்பது ஆக கடினமான ஒரு விஷயம். எட்டாம் வகுப்பு மாணவன் கெட்ட வார்த்தை பேசுவது என்பது மன்னிக்கக் கூடிய மற்றும் பொறுப்போடு கையாள வேண்டிய பிரச்சனை. ஆனால் இதனை இன்னொரு பெற்றோருக்கு உணர்த்துவது சாத்தியப்படுவதில்லை.
வேறொரு வகுப்பில் ஒரு ஹைப்பர் ஆக்டிவ் மாணவர் தன் இடத்தில் நிற்காமல் வகுப்பறை முழுக்க சுற்றிக் கொண்டிருப்பதும் பிற மாணவர்களுக்கு இடையூறு செய்வதுமாக இருக்கிறார். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஒரு மாணவன்யாவது அடித்து விடுகிறார். சட்டப்பூர்வமாக நீங்கள் அந்த மாணவரை பள்ளியை விட்டு அனுப்ப இயலாது. ஆனால் அந்த மாணவரால் பாதிக்கப்படுகிற பிற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இது குறித்து தொடர்ந்து பள்ளியில் புகார் செய்கிறார்கள். முந்தைய பிரச்சினையை போல இதிலும் நாம் செய்வதற்கென்று எந்த தீர்வும் இல்லை.
மோசமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது என்பது பள்ளியில் மிக இயல்பாக நடக்கிற விஷயம். ஆசிரியர் இல்லாத வேளைகளில் அல்லது இடைவேளை நேரத்தில் ஒ*மால எனும் வார்த்தையை கேட்காமல் வராண்டாவை நீங்கள் கடக்க இயலாது. மிக அதிகம் பயன்படுத்தப்படுவது தாயைக் குறிப்பிடும் இத்தகைய கெட்ட வார்த்தைகள் தான். மிக சாதாரணமாக பயன்படுத்தப்படும் இந்த சொற்கள் தான் மாணவர்களுக்கிடையே நடைபெறும் சண்டைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. அம்மாவை திட்டிட்டான் எனும் குற்றச்சாட்டை எதிர்கொள்ளாமல் நீங்கள் ஒரு பாட வேளையைக் கடப்பதும் கூட சிரமம் நான் குறிப்பிடுவது 12 வயதில் இருக்கும் மாணவர்கள் உள்ள வகுப்பறைகளையும் சேர்த்து தான் (இது சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆனது).
பல்வேறு புற காரணிகளின் காரணமாக வகுப்பறைகளில் சண்டைகள் பெருமளவு அதிகரித்து இருக்கிறது. ஆரம்பப் பள்ளிகளில் மட்டும் அல்ல மழலையர் காப்பகங்களில் கூட இது ஒரு பெரிய சிக்கலாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணங்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் போது சில பொதுவான பிரச்சனைகள் காணக் கிடைக்கின்றன.
அதீத குறும்பு செய்யும் குழந்தைகள் அதாவது ஹைபர் ஆக்டிவ் குழந்தைகள். இவர்கள் சண்டையிடுவதும் மோசமான வசைச் சொற்களைப் பயன்படுத்துவதும் நடக்கிறது.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள், இவர்களால் பாடத்தை புரிந்து கொள்வது சிரமம் ஆகவே வகுப்பறையில் சலிப்படைந்து குறும்பு செய்வார்கள்.
வீட்டில் பிரச்சனையை எதிர்கொள்ளும் குழந்தைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். போதுமான அளவு பெற்றோர்களின் கவனிப்பு கிடைக்காத குழந்தைகள் அல்லது அதிகப்படியான செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் அல்லது பெற்றோர் இருவருக்கிடையே தொடர்ந்து சண்டைகள் நடக்கும் வீட்டில் இருந்து வரும் குழந்தைகள் அல்லது அதிகப்படியான நொறுக்கு தீனி சாப்பிடும் குழந்தைகள் மற்றும் போதிய அளவு தூக்கம் இல்லாத குழந்தைகள் இவர்கள் எல்லோருக்கும் பாடங்கள் புரியாமல் போவதற்கும் மற்றும் சுலபத்தில் கோபம் வருவதற்குமான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
தொடர்ந்து அதிகரிக்கும் இத்தகைய சிக்கல்கள் வகுப்பறையின் செயல் திறனை சிதைக்கின்றன. அடிக்கும் மாணவர் அடி வாங்கும் மாணவர் எனும் வகை மாதிரியை ஒரு ஆசிரியர் கையாள வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். பல வகுப்பறைகளில் இந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது ஒரு தொடர் கடமையாக இருக்கிறது. அது மட்டும் இன்றி இது பல இடங்களில் பெற்றோர்களின் சண்டையாகவும் மாறுகிறது. சில மாணவர்களுக்கு எதிராக பல பெற்றோர்கள் பள்ளியில் புகார் செய்யும் போக்கை உங்களால் அவதானிக்க முடியும்.
பள்ளிகளில் மனநல ஆற்றுப்படுத்துனரை நியமித்தாலும் கூட வகுப்பறைகளில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் 10 சதவிகிதத்தைகூட சரி செய்ய இயலாது. நாம் கவனிக்க மறந்த மற்றும் புதிதாக உருவாக்கிய பல்வேறு தவறுகளின் விளைவே இத்தகைய சிக்கல்கள் எல்லாம். ஆகவே அதனை சரி செய்வது என்பது பள்ளியோடு தொடர்புடைய எல்லா தரப்பு ஆட்களும் வேலை செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.
இதில் சில பிரச்சனைகளை தீர்க்க முடியும். சிலவற்றிற்கு என்ன முயன்றாலும் தீர்வு கிடைக்காமல் போகலாம். ஆனால் இப்படியான ஒரு சூழல் பள்ளிகளில் இருக்கிறது, அது இன்னும் இன்னும் கடினமானதாக மாறிக் கொண்டிருக்கிறது எனும் உண்மையை உரியவர்கள் எல்லோரும் அறிந்து கொள்வது அவசியம். குறைந்தபட்சம் அது குறித்து ஒரு அறிவியல் பூர்வமான கணக்கீட்டை அல்லது ஆய்வை செய்வது முக்கியம். என்ன பிரச்சனை இருக்கிறது, அதன் தீவிரம் எப்படி இருக்கிறது, அது வளர்ந்து வரும் வேகம் என்ன என்பது குறித்த ஒரு தோராயமான கணிப்பு இருந்தால் மட்டுமே நம்மால் தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.
ஆனால் இங்கு பிரச்சனையிலிருந்து தப்பி ஓடும் செயல்தான் எல்லா பக்கமும் நடக்கிறது. யாரும் சிக்கலை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை, காரணம் அது உருவாக்கும் அச்சத்தை எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை.