தங்கம்… ஒரு கொடூரமான முதலீடு. (மீள்பதிவு)


(புதிதாக எழுத அவகாசமில்லை.. ஆகவே இரண்டாண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய பதிவை மீளப் பதிந்திருக்கிறேன்).

அது 2002 ஆம் ஆண்டு, இரண்டு பெண்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்தபோது திருடர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்கையில் ரயிலிருந்து விழுந்து இறந்துபோனார்கள். சென்னையில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் நான் பணியில் இருந்தபோது நாளிதழில் வந்த செய்தி இது. வழக்கமான ரயில் விபத்து என்று செய்தியை கடந்து செல்பவன்தான் என்றாலும் “எக்ஸ்போர்ட் நிறுவன ஊழியர்கள் சாவு” என்று செய்தி வந்ததால் சற்று கவனமாக படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அவர்கள் வெறும் கால் பவுன் தங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் தங்கள் உயிரை விட்டார்கள்.

மேலே உள்ள செய்தி ஒரு உதாரணம்தான். வரலாறு நெடுக தங்கமானது கணக்கிட முடியாத எண்ணிக்கையிலான உயிர்களை பறித்திருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட காலம்தொட்டே தங்கம் ஒரு ஆபத்தான உலோகமாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். சில விதிவிலக்குகளை தவிர உலகின் பெரும்பாலான போர்கள் தங்கத்தை கைப்பற்றுவதற்காகவே நடந்திருக்கிறது.கடற்கொள்ளையர்கள் முதல் நாடுகளை ஆக்கிரமிப்பவர்கள் வரை சரித்திரத்தின் எல்லா வில்லன்களும் கதாநாயகர்களும் இந்த நரகத்தின் தேவதை மீது மோகம் கொண்டு அலைந்தவர்கள்தாம்.

உலகில் உள்ள தொன்னூறு சதம் தங்கம் எந்த நவீன கருவிகளும் இல்லாமல் வெறும் மண்வெட்டியும் இருப்புசட்டியும் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கான உழைப்பு எத்தகையதாக இருக்கும் என உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா ? பிரமிடுகளை கட்டியவர்களைப் பற்றிக்கூட நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது. வரலாற்றில் தங்கச்சுரங்க பணியாளர்களை  பற்றிய குறிப்புகள் எங்கே கிடைக்கிறது? ரசவாதத்தின் மூலம் தங்கத்தை உருவாக்க முயலும்போதுதான் வேதியியல் எனும் துறை வளர்ச்சியடைந்தது என்பதுதான் தங்கம் பற்றி நம்மால் சொல்ல முடிகிற ஒரே நல்ல செய்தி. ஆலிவ் எண்ணை, மீன் எண்ணை, தானியங்கள், யானைத்தந்தம் என ஏராளமான பொருட்கள் நாணயத்திற்கு மாற்றாக பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் செல்லத்தக்கது என்பதுதான் தங்கத்திற்கு இருந்த & இருக்கிற சாபம்.

ஐரோப்பிய நாடுகள், செல்வத்தை கைப்பற்றத்தான் புதிய நாடுகளை தேடிப்போயின. அமெரிக்காவை முதலில் சென்றடைந்த மாலுமிகள்  இங்கு ஏராளமான தங்கமிருப்பதாகத்தான் தங்கள் நாடுகளுக்கு முதல் செய்தியை அனுப்பினார்கள் ( கவனம், கொலம்பஸும் அமெரிக்கோ வெஸ்புகியும் அமெரிக்காவை ‘கண்டுபிடிக்கும்’ முன்பே அங்கு நாகரீகமடைந்த மக்கள் வாழ்ந்தார்கள். அமெரிக்காவை கண்டுபிடித்ததாக இன்றளவும் சொல்லப்படும் வாக்கியம் வழக்கமான ஐரோப்பிய கொழுப்பு ). அமெரிக்க பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை கூட்டம்கூட்டமாக கொல்வதற்கு தங்கம் என்ற ஒற்றைச்சொல் போதுமானதாக இருந்தது ஐரோப்பிய நாடுகளுக்கு. இந்த செயலை பாரபட்சமின்றி தாங்கள் ஆக்கிரமித்த எல்லா நாடுகளிலும் தொடர்ந்தார்கள்.

அமெரிக்காவின் கலிபோர்னியா வளமான பிரதேசமென கண்டறியப்பட்ட பிறகு, பண்ணைவேலைக்கு மக்களை குடியமர்த்த அங்கே ஏராளமான தங்கம் இருப்பதாக புரளி பரப்பப்பட்டது. மந்தையைபோல மக்கள் தங்கவேட்டைக்கு கிளம்பினார்கள், தேடிச்சலித்தவர்கள் பிறகு கிடைத்த வேலையை செய்தார்கள். தங்கம் கிடைத்தவர்களும் வாழ்வாங்கு வாழவில்லை.அங்கே யானைவிலைக்கு விற்பனைசெய்யப்பட்ட சாதாரண உணவுக்கும், சாராயத்திற்கும் கிடைத்த தங்கத்தை விற்று, இன்று புதிதாய் பிறந்தோமென ஒவ்வொரு நாள் காலையிலும் ஓட்டாண்டியாகவே தங்கத்தை தேடிப்போனார்கள். அலிபாபாவின் கழுதையைப்போல புதையலை சுமந்து செல்லும் வாகனமாக மட்டுமே வாழமுடிந்தது அவர்களால். உள்ளூர் நகைக்கடைகளில் வியாபாரம் கொழிக்கும்போது பொற்கொல்லர்கள் எதற்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா ?

முறையான “தொழில் நிறுவனமாக” தங்க சுரங்கங்கள் தென்னாப்பிரிகாவில் ஏற்படுத்தபட்ட பிறகு, அங்கு வேலைசெய்ய மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வேலையாட்கள் கொண்டுவரப்பட்டார்கள். விக்ரமன் பட கதாநாயகனைப்போல ஒரு பாடலில் முதலாளியாகும் கனவு அவர்களுக்கு இருந்திருக்காது. குடும்பத்திற்கான குறைந்தபட்ச உணவுத்தேவையை பூர்த்தி செய்யலாம் என்ற கனவில் அவர்கள் சுரங்கத்திற்கு போனார்கள். தொழுவத்தைவிட மோசமான தங்குமிடம் வரைமுறையற்ற பணிச்சுமைக்கு மத்தியில் அவர்களுக்கு புகையிலை மட்டும் தடையின்றி கிடைக்கும்படி வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஒப்பந்த காலம் முடிந்து உயிருடன் இருந்தவர்கள் நிரந்தர நோயாளிகளாக வீட்டுக்குப்போனார்கள். இதன் காலத்திற்கேற்ற மாற்றத்துடனான ரீமேக்தான்  கோலார் தங்க வயலின் கதையும்.

இப்போது நாகரீகம் வளர்ந்துவிட்டதால், தங்கம் புதியமுறையில் மக்கள் வாழ்வைச்சுரண்டும் பணியை செய்கிறது. பாதுகாப்பான முதலீடு என பிரச்சாரம் செய்யப்படுகிறது. விலை ஏறிகொண்டேதான் இருக்கும் என்ற கருத்து மக்கள் மனதில் தினசரி பதியவைக்கப்படுகிறது. பாரபட்சம் இல்லாமல் எல்லா ஊடகங்களும் தங்கத்தை லாபகரமான முதலீடு எனக் கூறி மக்களை மூளைச்சலவை செய்கின்றன. காரணம் கேட்டால் உற்பத்தி குறைவு என்று ‘பொருளாதார வல்லுனர்கள்’ கூறுகிறார்கள். தங்கம் ஒன்றும் பல்பொடி அல்ல, உற்பத்தி குறைந்தால் தீர்ந்து போவதற்கு. அது காலம்காலமாக சேமிக்கப்பட்டே வந்திருக்கிறது. அலுமினியம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் விலையுயர்ந்ததாக இருந்தது. பிற்பாடுதான் அது சாதாரண உலோகமாக மாறியது. ஆனால் தங்கம் ஒரு சொத்து அல்லது முதலீடு எனும் கருத்து வழி வழியாக நம் மனதில் திணிக்கப்பட்டதுதான் அதன் மீதான கவர்ச்சியை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது.

இதுவரை உலகில் உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தின் பெரும்பகுதி இன்று அமெரிக்கா மற்றும் சில பணக்கார நாடுகளின் சேமிப்பில் இருக்கிறது. அப்பாவி மக்கள் மிச்சமிருக்கும் தங்கத்தை தங்களுக்குள் வாங்கி விற்பதன் மூலம் அதன் விலையை தங்களை அறியாமல் உயர்த்துகிறார்கள். மக்களின் பாமரத்தனத்தின் மூலமே தங்களுடைய தங்கத்தின் மதிப்பை பன்மடங்காக்கியிருக்கின்றன இந்த நாடுகள்.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்திலும் ஏராளமான மக்களிடம் நயவஞ்சகமான முறையில் சுரண்டப்பட்ட உழைப்பு இருக்கிறது. கணக்கிலடங்காத எளிய மக்களின் உயிரைக்குடித்த பிறகுதான் அது உங்களை வந்தடைந்திருக்கிறது. ஆகவே நீங்கள் அடுத்தமுறை தங்கம் வாங்கும் போது கூலி சேதாரக்கணக்கில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவு.

தேவைக்கு மேலிருப்பவை திருடப்பட்டவையே.
https://villavan.wordpress.com/2010/12/20/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/

“தங்கம்… ஒரு கொடூரமான முதலீடு. (மீள்பதிவு)” இல் 2 கருத்துகள் உள்ளன

பின்னூட்டமொன்றை இடுக